Showing posts with label தலைமுறை. Show all posts
Showing posts with label தலைமுறை. Show all posts

Sep 7, 2023

இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!

பொதுவாகவே மனிதர்கள் வாய்ப்புக்கிடைக்கும் தருணங்களில் சக மனிதர்கள் குறித்து மீது ஏதேனும் ஒரு காரணத்தை முன் வைத்து புகார் சொல்பவர்களாவே அறியப்படுகின்றனர். தமக்கு சமமாக இருக்கும் மனிதர்களின்பால் அப்படியான புகார்கள் இருப்பதொன்றும் பெரும் ஆச்சரியம் தருவதில்லை. ஆனால் நாற்பது முதல் அறுபதுகள் வரை வயது கொண்டோர் தற்போது அடுத்தடுத்த தலைமுறைகளாக இருக்கும் பதின் பருவம் மற்றும் இருபதுகளில் இருப்போர் மீது ஏன் கை நிறைய புகார்களை வைத்துகொண்டு போகுமிடமெல்லாம் பரிமாறுவதை பல தருணங்களில் பாத்திருப்போம். என்ன வகையான புகார்கள் என்பவை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்தப் புகார்களைக் கடந்து அவர்களிடம் கற்றுக்கொள்ள நமக்கு எதுவுமே இல்லையா எனும் கேள்விக்கான விடைதேட ஆரம்பித்தால் வேறொரு உலகம் நமக்கு வசப்படும்.

ஒருதலைமுறையினரை குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டவிடாமல் வைத்திருந்த சில வெற்று நம்பிக்கைகளையும், காரணமற்ற கட்டுப்பாடுகளையும், தேவையற்ற திணிப்புகளையும் எளிதில் கேள்விக்குட்படுத்தும் தலைமுறையினராக அவர்கள் இருப்பதுவே பல நேரங்களில் அவர்களிடமிருந்து முரண்பட வைக்கின்றது என்பது அவர்கள் பிழை மட்டுமே அல்ல.

இந்த முரண்பாடுகள் முளைக்கும் தருணங்களில், தம்மோடு இணக்கமாக உரையாடி புரிதலை ஏற்படுத்த முனையும் மூத்த தலைமுறையோடு எளிதில் ஒட்டிக்கொள்கின்றனர். அவர்கள் குரல் இவர்களின் செவிகளில் நுழைகின்றது. அதேசமயம்நாங்கள் சொல்வது மட்டும்தான் சரிஎனும் தலைமுறையோடு அவர்கள் பெரிதாக பிணக்கு எதுவும் கொள்வதில்லை, மிக அமைதியாகப் புறக்கணிக்கின்றனர். சப்தமின்றி அறைக்கதவையும், மனக்கதவையும் மூடி தாழிட்டுக்கொள்கின்றனர். அமைதியான புறக்கணிப்பு என்பதைப் பழக்கப்படாத மூத்த தலைமுறை இயல்பாகவே பதட்டம் கொள்கின்றது.

இப்படியாக பதட்டமடையும் தலைமுறையினரிடம் நான் தன்மையாக எடுத்துச் சொல்வது, முதலில் பதட்டத்தைக் குறையுங்கள் என்பதைத்தான். அப்படிச்சொன்னது, இயல்பாகவே இந்த வயதில் பதட்டம் வருகின்றது என்கின்றனர். புன்னகையோடு அவர்களிடம் வலியுறுத்தலாகச் சொல்வது, இந்த வயதில் பதட்டம் கொள்ளாதீர்கள் என்பதைத்தான்.




இந்த உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டேயிருக்கின்றது. இந்த உலகத்தில் உள்ளவைகளும், அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக்கொண்டே வந்திருக்கின்றன. அப்படி தகவமைக்கும் தன்மை கொண்ட எதுவும் முற்றிலுமாக வீழ்ந்துவிடுவதில்லை. மனித குலத்தின் மிகப் பெரிய சிறப்பம்சமாக நான் உணர்வது அப்படியான தகவமைப்புத் தன்மையை தன்னில் கொண்டிருப்பதுவே.

ஆகவே, தம்மிடம் இருக்கும் அளவுகோல்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ‘இந்தப் பிள்ளைங்க எப்படித்தான் வாழப்போறாங்களோ!’ என ஆரம்பிக்கத் தேவையில்லை. முந்தைய தலைமுறைகளும் இதே சொற்களை வெவ்வேறு வடிவங்களில் ஒருகட்டத்தில் பயன்படுத்தியிருக்கும் சாத்தியமுண்டு.

ஒருதலைமுறையில் மிக மிகக் கடினமாக இருந்தவொன்றை இன்னொரு தலைமுறை நொடிப்பொழுதுகளில் மிக எளிதாக கையாள்கின்றது மறுக்க முடியாத நிதர்சனம். பல தருணங்களில் நான் சொல்லும் உதாரணம் ஒன்றை இங்கு சுட்ட விரும்புகின்றேன். ஒருகாலத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்காக சில மணி நேரம் வரிசையில் நின்றிருந்தது இன்றும் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இன்று மொபைல் ஃபோன் ரீசார்ஜ் என்பது சில நொடிகளில் அந்த மொபைல் வழியாகவே நடந்துவிடுகின்றது. இதுபோல் அன்று-இன்று எனப்பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டேயிருக்கும். இந்த இரண்டு அனுபவங்களையும் தம் முதல் அனுபவமாக உள்வாங்கும் இருவேறு தலைமுறைகளுக்கான மன இடைவெளிதான் முரண்பாடுகளுக்கான முதல் விதையாக இருக்கின்றது.

எதுவும் அதற்கான நிதானத்தோடும், பொறுமையோடும்தான் நிகழ வேண்டும் என்பதை தம் கொள்கையாக வைத்திருப்போருக்கும், உடனே நிகழும் சாத்தியங்களை கைக்கொள்வோருக்கும் இடையே இடைவெளியொன்று இருந்தே தீரும் என்பதை புரிந்துகொள்ளும் பொறுப்பு யாருக்கு அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டால் போதும்.

நான் கண்ட வரையில் இளம் தலைமுறை முன் தீர்மானத்தோடு இருப்பதில்லை. தம் கோபத்தை நீண்ட நேரம் வைத்து வளர்த்துக்கொண்டிருப்பதில்லை. தம் தேவைக்குயாரும் எதும் சொல்லிடுவாங்களோஎனத் தேவையற்ற பயம் கொண்டு தயங்கிக் கொண்டிருப்பதில்லை. கால மாற்றத்தில் கிடைக்கும் அனைத்துப் புதிய மாற்றங்களுக்கும் பொருந்தும் தன்மையுடையவராக இருக்கின்றனர். உறவுகள் பேணுவதில் தேவையற்ற பசப்புத் தன்மையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கும்.

அப்போ அவர்களிடம் குறைகளே இல்லையா எனும் கேள்வி எழுந்தால் தயவுசெய்து முதல் மற்றும் இரண்டாவது பத்திகளை இன்னொரு முறை வாசிக்க  அன்போடு வேண்டுகிறேன்.

இளம் தலைமுறைகள் குறித்த பதட்டங்களிலிருந்து மீள்வதற்கு நான் பாவிக்கும் முறை, அவர்களின் உலகத்தை அறிந்துகொள்ள முற்படுவதே. அதை அத்தனை எளிதில்லை என்றாலும் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பது மிகவும் தேவையான ஒன்று.

இணைந்து இனிதே பயணிப்போம்!

Jun 14, 2010

கடத்த முடியாத நினைவுகள்

வயது கூடக்கூட உறவுகள் மலர்வதும், உதிர்வதும் நிதர்சனம் என்றாலும், சில உறவுகள் மனதில் காலம் முழுதும் அழுத்தமாய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு சில உறவுகளில் என்னுடைய பாட்டியும் ஒன்று.

பாட்டி என்பது எங்கள் பக்கத்தில் பழக்கமில்லாத வார்த்தை. எப்போதும் அழைப்பது ”ஆயா” என்றே, அறியாத பருவத்திலிருந்தே அதிகம் கோபித்துக் கொள்ளப் பழகியது ஆயாவிடம் தான். கோபம் வரும் நேரத்தில் மட்டும் கெழவி. ”கெழவ்வ்வ்வ்வி” என்ற வார்த்தையை பிரயோகிக்கும் போது, அத்தனை வன்மம் இருக்கும், அவமானத்தை அப்படியே அள்ளிக் கொட்டும் வெறியிருக்கும்.

அத்தனைக்கும் மேல் அனவிடமுடியாத ஒரு அன்பு நூல் இன்றுவரை ஆயாவை அந்த பழைய வாசத்தோடு மனதிற்குள் வாழவைத்துக் கொண்டேயிருக்கிறது. ஆயா கை பிடித்து இழுத்துச் சென்று காட்டிய உலகம் இன்றும் கூட அதே பசுமையோடு கொஞ்சம் சிதையாமல் மனதிற்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

எனக்கு விபரம் தெரியத் தொடங்கிய காலத்திற்கு முன்பே தாத்தா இறந்து போனார். அதனாலேயே வண்ணப் புடவையிலோ, நகை நட்டுப் போட்டோ ஒரு போதும் பார்த்ததில்லை. அன்று முதல் இன்று வரை ஆயாவை பார்ப்பது வெள்ளைப் புடவையில் தான்.

தன்னந்தனியாய் வெளியூர்களுக்கு பயணப் பட வீட்டில் அனுமதித்த வயது வரை, ஒவ்வொரு விடுமுறையும் கழிவது ஆயாவின் புண்ணியத்தில்தான்...

பள்ளி விடுமுறைக் காலங்கள் பெரிதும் ஆயாவின் சொந்தக்காரர்கள் வீடுகளில்தான் கழியும். ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு எங்களை அழைத்துச் செல்வது எழுதப்படாத ஒரு சட்டமும் கூட.

அப்படி ஊருக்கு அழைத்துச் செல்லும் போது, பஸ் ஸ்டேண்டில் பத்துப் பைசாவுக்கு பட்டாணி பொட்டலமும், அன்னாசிப் பழ கீற்றும், மாம்பழமும், பன்னும் வாங்கி பையில் வைத்துக் கொள்ளும். கடைக்காரர்களிடம் பேரம் நடத்தும் திறமையை இன்று நினைத்தாலும் பொறாமையாக இருக்கிறது.

அந்தப் பட்டாணியை பஸ்ஸில் செல்லும் வரை பத்திரப் படுத்தி, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் சட்டைப் பையில் நிரப்பி, நடக்க ஆரம்பிக்கும். எங்கள் விடுமுறை சுற்றுலா தளத்திற்கு(!) பவானி-சேலம் மெயின் ரோட்டில் இருக்கும் செங்கமாமுனியப்பன் கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நாலு கி.மி. தூரம் வடக்கே நடக்க வேண்டும். அவ்வளது தூரம் நடப்பது ஒரு கொடுமையென்றால், அதைவிடக் கொடுமை வழி முழுதும், இருக்கும் வீடுகளிலிருந்து “என்ன ஊருக்கு போறாப்ள இருக்கு” என எட்டிப் பார்ப்பவர்களிடம் கதை பேசும் ஆயாவைக் கடத்துவதற்குள் படும் பாடுதான் அந்த காலத்தின் மிகப் பெரிய சோகம்.

இன்றும் கூட எங்காவது பட்டாணிக் கடலை வாசம் அடிக்கும் போது, ஆயா நிரப்பிய சட்டைப் பை நினைவுக்கு வந்து, இடது மார்பை என்னையறியாமலே கைவிரல்கள்  நீவிப்பார்த்து விட்டு வருகிறது.

இன்று அதே ஊர்களுக்கு சரக்கென்று போய், சரக்கென்று வாகனத்தில் திரும்புவதில் இருக்கும் வசதியை விட, கால் கடுக்க நடையாய் நடந்து, எதிர்பட்டவர்களிடமெல்லாம் முட்டி முடங்க அன்று நின்ற வலியே கூடுதல் சுகமாய்த் தோன்றுகிறது.

அடுத்து....

டிவி, போன் எல்லாம் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த காலம் அது. உலகத்தோடு கூடிய தொடர்பு முழுக்க முழுக்க வானொலியோடு மட்டும்தான்.

அதுவும், எங்கள் ரெடியோ மின்சாரத்தில் இயங்காதது. அப்பாவுக்கு சிமெண்ட் பேக்டரியில மாதாமாதம் கொடுக்கும் ரெண்டு பேட்டரி செல்களை வைத்து மட்டுமே கேட்கும் காலம்.

சினிமாவுக்கென்று பக்கத்து ஊரில் இருக்கும் ”கீற்றுக் கொட்டாய்” தியேட்டர்க்கு செல்வது என்பது வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே நடக்கும் மிகப் பெரிய காரியம்.

அதையெல்லாம் நிவர்த்தி செய்ய வைப்பது, பக்கத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களும், அதையொட்டி திரை கட்டிப் போடப்பவும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்தியராஜ் படங்கள், கொடுமுடி சீன்செட்டிங் கம்பெனிக்காரர்கள் மேடை போட்டு அந்த ஊர் இளவட்டங்கள்(!) நடிக்க நடத்தப்படும் நாடகங்கள், இரவு முழுதும் நடக்கும் தெருக்கூத்துகள், காலப்போக்கில் டிவி டெக்கோடு கொண்டாடப்பட்ட திருவிழாக்கள்..

பக்கத்து ஊரில் சினிமா, ட்ராமா அல்லது கூத்து என்ற செய்தி வந்த தினத்திலிருந்து, அதைப் பார்க்க போவதற்கான, ஆயத்தத் திட்டங்கள் தீட்டப்படும். அழைத்துச் செல்ல ஆயாவை விட்டால் நாதியில்லை என்பதால் கூடுதலாய் சில கனஅடிகள் அன்பு வெள்ளம் கரைபுரளும்.

முடிவாய் நிகழ்ச்சியைப் பார்க்க போகும் தினத்தன்று உட்கார சாக்கு, போர்வை, பேட்டரி லைட், குச்சி என பயணம் துவங்கும், முக்கியமான காமடி, சினிமாவோ, ட்ராமாவோ, கூத்தோ ஆரம்பிக்கும் போது ஜாலியாக இருக்கும், ஆனால் எப்போது முடிந்தது, எப்படி வீடு திரும்பினேன் என்று இன்று வரை நினைவில்லை, (தூக்கத்தில் அம்புட்டு ஸ்ட்ராங்க்).

இன்றும் கூட ஏதாவது பயணத்தின் போது வழியில் நடக்கும் திருவிழாக்களில் நாடகமோ, வெகு அரிதாக கூத்தோ நடப்பதைக் காணுகையில் கை பிடித்து அழைத்துப் போன ஆயாவின் கைகளின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது.

இதையெல்லாம் எப்போதாவது நினைவு கூர்ந்து பேசுவதை, வாய்கொள்ளாச் சிரிப்போடு ரசித்து ரசித்து ”அப்புறம் சொல்லுங்கப்பா” ”அப்புறம் என்னனு சொல்லுங்காயா” என என்னிடமும், ஆயாவிடமும் கேட்கும் என் மகளிடம் நினைவில் கெட்டித்துக் கிடக்கும் பசுமையான நினைவுகளை அதன் சுவை மாறாமல் பகிர முடியாததொரு தலைமுறை(!) இடைவெளியில் வாழ்வதை நினைக்கும் போது மனது வெறுமையாவதைத் தவிர்க்க முடிவதில்லை....

_______________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...