வெறுப்பென்பது வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல

மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஒரே ஒரு வாழ்க்கைதான்’ என்பது பல தருணங்களில் கேட்டுச் சலிப்புற்ற, வெகு எளியதொரு வரிதான். ஆழ்ந்து யோசித்தால் செய்து கொண்டிருக்கும் எத்தனையோ செயல்களை மீளாய்வு செய்யவும், செய்யாமல் இன்னும் விட்டுவைத்திருக்கும் செயல்களை முடுக்கிவிடவும் மிகப் பெரும் ஆற்றல் கொண்ட உண்மை அது.


மனிதர்கள் தம் வாழ்க்கையை மிக அதிகமாக நேசிப்பது வெற்றியடையும் தருணங்களில் மட்டுமேயல்ல. எதன் நிமித்தமாகவோ வாழ்க்கை தன் கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதை உணரும் கொடுங்கணத்தில் வாழ்க்கையை இழக்க மறுக்கும் எண்ணம் வரும்போது, முதலில் பதட்டம் ஏற்படும். அந்தப் பதட்டம் அடங்கி உண்மை புரியும்போது, அதுவரையிலும் இல்லாததொரு நேசிப்பு அதன் மீது கூடும். என்ன செய்தாவது இதனை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் வேட்கை அது. அந்தக் கணத்தில் நெகிழும் மனம் அதுவரையிலும் வாய்க்காத ஒன்று. அந்தத் தருணத்தின் வேட்கை தோய்ந்த நேசிப்புக்கு நிகரேதுமில்லை.

விவாதிப்பதற்கென்று சில நட்புகள் எனக்குண்டு. எங்கள் சந்திப்புகளில் உரையாடல் விவாதமாகச் செல்லும். அப்படியானதொரு விவாத தருணத்தில் நானும் நண்பரும் எதிரெதிர் புள்ளியில் நின்று பலவற்றைக் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தோம். எதிரெதிர் புள்ளியில் நின்று விவாதிப்பதன் மூலம் பல கோணங்களை எட்ட முடியும் என்பதை அறிந்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் இருந்த ஆழமான புரிதலின் விளைவாக மட்டுமே அப்படியாதொரு உரையாடலை முன்னெடுக்க முடிகின்றது. தண்டவாளம் போல் இணையாமல் நீண்டு கொண்டிருந்த விவாதம் ஒருகட்டத்தில் அதன் நிறைவுப்புள்ளியினை எட்ட, தண்டவாளங்கள் இரண்டும் இணைந்தன. எதிரெதிர் வாதங்கள் வைக்க முடியாமல் இருவரும் ‘ஆமாமா... சரிதான்!’ என ஒப்புக்கொண்ட உண்மையின் பெயர் ‘வெறுப்பு’.

மனிதர்கள் எப்போதுமில்லாத அளவுக்கு ‘வெறுப்பினை’ உமிழத் தொடங்கியிருக்கின்றனர் எனும் புள்ளியில் இருவரும் எதிர்க்கருத்துகள் வைக்காமல் ஆழ்ந்த அமைதியில் நின்று ஒப்புதலாய் தலையசைத்துக் கொண்டோம். அந்த அமைதி மௌனம் கிடையாது. அலையலையாய் அவ்வப்போது வீசும் வெறுப்பின் வாசனையில் நனைந்திருந்த மௌனம்.

நட்பு, உறவு, அமைப்பு, அரசியல், சாதி, மதம், பொருளாதார மாறுபாடு என நீளும் பட்டியலில் சிலவற்றில் ஓரளவு, பலவற்றில் பெருமளவு வெறுப்பு, வேர் பாய்ச்சி கிளை பரப்பியிருப்பது எல்லோருக்குமே காணக்கிடைக்கின்றது. இந்த வெறுப்பின் அடிப்படையில் அவரவர் மனப்பாங்கு ஒருபக்கம் என்றால், மற்றவர்கள் மெல்ல நஞ்சாக ஊற்றுவது மறுபக்கம்.
மனப்பாங்கு என்பதுவும்கூட ஒவ்வொருவரும் காலப்போக்கில் கட்டமைப்பதுதான். தனக்குக் கிடைக்காதவொன்று இன்னொருவருக்குக் கிடைக்கும்போது ஏற்படும் போட்டி, இயலாமை, ஆற்றாமை மிகச் சரியாகக் கையாளப்படவில்லையென்றால், அது அந்த இன்னொருவர் மீது அல்லது அது தொடர்பான யாவற்றின் மீதும் வெறுப்பை விதைக்க ஆரம்பித்துவிடும். வெறுப்பின் வேர்களுக்கும், கிளைகளுக்கும் வேகமும் தாகமும் அதிகம்.

இசைக்கு, ஏதோவொன்றின் எழிலுக்கு, வாசனைக்கு, நெகிழ்த்தும் சொல்லுக்கு மயங்காதோர் உண்டா?. எதுவெல்லாம் பிடித்ததாக மனம் ஏற்றுக்கொண்டு மூளையில் பதிவாகின்றதோ, அவற்றையெல்லாம் நிபந்தனைகளின்றி ஏற்றுக்கொண்டு அதன் வசியத்தில் கிறங்கிப் போவதென்பது உயிரிகளுக்கேயுரிய எளியதொரு அம்சம்தான்.

கட்டமைக்கப்படும் பிம்பமாகினினும், அவதூறாகினும் எளிதில் வசப்பட்டுவிடுவார்கள். தனக்கு நேசிக்க ஒன்று கிடைத்தால், அத்தோடு நிற்கவியலாது. தான் நேசிக்கும் ஒன்றின் எதிர்நிலையில் உள்ளதன் மீது வெறுப்புக் கணைகளை வீசுவதையும் தம் நேசிப்பின் அங்கமெனக் கருதுவதுண்டு.

யாரோ அல்லது எதுவோ ஊட்டிய வசியத்தில் சிக்கி இடைவிடாது, இதுஅதுவென எந்த வரைமுறைகளுமற்று தன்னைச் சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பை உமிழ்கின்றவர்களை நீங்களும் கண்டிருக்கலாம். எல்லாவற்றிலும் ‘இதுவென்றால் இப்படித்தான் இருக்கும், அதுவென்றால் அப்படித்தான் இருக்கும்’ என்பதாக முன்முடிவோடு அணுகி, அதன் மீது வெறுப்பினை பாய்ச்சி அதிலொரு அதீத போதை உணர்வதை நிறையக் காணலாம்.

மனப்பாங்கு சரியாக அமையாமல் போவதற்கு தன்னைக் குறித்த ‘தாம் யார் எனும் சுய உணர்தல்’ இல்லாததுவும் மிக முக்கியமான காரணம். தன்னைக்குறித்த சுய உணர்தலற்றவர்கள் இந்த வசியத்தில் எளிதாக தம் வசம் இழப்பார்கள். தம் வசம் இழந்து பிறிதொன்றின் வசம் சென்றால், அது ஆட்டுவிக்கும். இதுதான் நான் என தன்னை வரையறை செய்துகொள்வதன் மூலமாக அந்த வெறுப்புணர்வு சுரக்கத் தொடங்கும்போது, வரையறைக்கு உகந்ததுதானா இதுவெனக் கேள்வியெழுந்தால் வெறுப்பின் வேர்களில் வெந்நீர் பாய்ச்சிவிட முடியும்.

வெறுப்பின் நிழல் பிறரை மட்டுமே தீண்டுவதாகத் திருப்தியடைவோர் புரிந்து கொள்ளாத கசப்பான உண்மை, அதன் வேர்கள் தம் ஆன்மாவில் நீண்டு உயிர் பருகுவதை. வெறுப்பின் தன்மையை தாம் ஒருபோதும் அனுபவிக்காமல் எவரொருவருக்கும் வழங்கிவிட இயலாது. எப்பொழுதெல்லாம் வெறுப்பு வெளியேறித் தீண்டுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அது உள்ளே கசிந்து, பரவத்தான் செய்யும். அந்தப் பரவலில் மடிந்துபோன நேசத்தின் வேர்களை அறியாதது மிகப் பெரிய விந்தையல்ல. நேசத்தின் வேர்கள் மடிந்துபோகும்போதெல்லாம் மனம் என்னவாகும்? சிதைவைத்தான் சந்திக்கும். மெல்ல மெல்ல மனம் சுருங்கும், இறுகும், கருகும். ஒருகட்டத்தில் அது நோய்மையுறும்.

பலரும் என்னிடம் பேசுவதுண்டு, நானும் கேட்பதுண்டு. சிலவற்றை ஏற்றுக்கொள்ளவதில் பெரும் சவால் உண்டு எனக்கு. குறிப்பாக ஒரே கூரையின் கீழ் மிகப் பெரும்பாலான பொழுது வாழும் தம்பதிகள் ’நாங்கள் பேசிக்கொள்வதில்லை’ எனச் சொல்வதை மனச் சமநிலையோடு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

மனிதர்களற்று மனிதர்களால் வாழ்ந்துவிட முடியாது. அதன் நிமித்தமாக எங்கெங்கோ மனிதர்களைத் தேடிக்கொண்டேதான் இருக்கின்றோம். நான்கு சுவற்றுக்குள் உடனிருப்போரிடம் உரையாடலுக்கு இடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்க மறுக்கின்றனர். பேச்சை விடுங்கள், பார்வைப் பரிமாற்றங்கள்கூட இல்லாமல் காலத்தை நகர்த்துவதற்கு அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வெற்றுச் சொற்கள் மட்டுமே.

என் நண்பரின் நண்பரொருவர் தம் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கொடுங்காலத்தில் இருக்கின்றார். ஒருபக்கம் நம்பிக்கையோடு போராடினாலும், மறுபக்கம் மரணம் எனும் உண்மையை தான் தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தம்மை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்.

அந்த நண்பரின் உரையாடல்கள் சில அவ்வப்போது என்னிடம் பகிரப்படுவதுண்டு. அவர் குறித்த பழைய பிம்பங்கள் நிறைய உண்டு. அது அவரின் காலமாக இருந்த அத்தியாயங்களில் நிகழ்ந்தவை. இது அவருடைய காலம் அல்ல. இறுதி அத்தியாயத்தின் கடைசிச் சொல் எதுவென்று கண்ணாமூச்சி ஆடும் மனிதனிடம் பழைய பிம்பங்களின் எச்சம்கூட இல்லை. பகிரப்பட்ட உரையாடல்களில் ஆழ்ந்து ஆழ்ந்து வாசித்ததில் நான் கண்டடைந்தது, அவர் வெறுப்புணர்வின் கூறுகள் அனைத்தையும் முற்றிலுமாகக் கைவிட்டிருப்பதை உணர முடிகின்றது. ஒருவேளை அவர் நலமோடு இயல்பான வாழ்க்கையில் இருந்திருந்தால், இந்த மனநிலை வாய்த்திருக்குமா என்றும் யோசிக்காமல் இல்லை.

கிடைத்திருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையில் எத்தனையோ நிறைவேறாமல்தான் போகின்றன. அதற்கான முக்கியக் காரணம் ஏதோவொரு போதாமை. அது நேரமாகவோ, மனமாகவோ அல்லது அறியாமையாகவோ இருக்கலாம். இத்தனை போதாமைகள் இருக்கும்போது, வெறுப்பிற்காக எப்படி நம்மால் தனித்து நேரமும், மனமும், ஆற்றலும் ஒதுக்க முடிகின்றது. நாம் அப்படியாகவே வழிவழியாகப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோமா?

வெறுப்பு என்பது வேறொன்றுமில்லை. அதுவும் ஓர் உணர்வுதான். இந்த உணர்வு வேண்டுமா, வேண்டாமா எனும் தெளிவு வந்துவிட்டால் போதும். முயற்சித்தால் மெல்ல மெல்ல கட்டுக்குள் வைக்கும் உணர்வுதான். ஆனால் முயற்சிக்கும் முடிவுதான் இதில் மிகப் பெரிய சவால். இதை முன்னெடுக்க ‘தான் யார்!’ எனும் சுய அடையாளம் அறிந்திருப்பது மிகப் பெரிய அளவில் உதவும். ’தாம் வெறுப்பு உணர்வற்றவர்’ எனும் சுய நிலைப்பாடு வெறுப்பின் திசை நோக்கி வேர் நுனி பயணிக்க முற்படும்போதெல்லாம் டேக் டைவர்சன் என மாற்றுப்பாதைக்கு வழி காட்டும்..

எல்லாவற்றையும் அதனதன் இயல்பில் புரிந்துகொள்தல், மனிதர்கள் அப்படியும்தான் இருப்பார்களென ஏற்றுக்கொள்தல், வெறுப்பால் எதையும் எட்ட முடியாது எதும் தெளிவு, தாம் விடுபடும் பொருட்டு இன்னொருவரை மன்னித்தல் என்பதுள்ளிட்டவைகளாலும் வெறுப்பு மனநிலைகளிலிருந்து மெல்ல விடுபட முடியும்

வெறுப்பென்பது ஒருபோதும் வீரமோ, உரிமையோ அல்லது அடையாளமோ அல்ல, அது அவரவரை சுயமாக மாய்க்கும் பெரும் பிணி.

- ஈரோடு கதிர்

No comments: