தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது
அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.
அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில்
மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும்
தவறுவதில்லை.
கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின்
வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ
ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச்
செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க
வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல்
நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத
அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம்
ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி
பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும்
அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை.
அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித
பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி
ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர்
சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும்,
சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை
எதையோ நோக்கி 'விர்..விர்'ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள்
கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு
நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும்
ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது.
இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/
பாட்டியையோ சந்திக்கையில் "எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு
போடுது தெரியும்ங்ளா!?" எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை
நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச்
சென்றுவிடும்.
வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல
விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப்
பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்... ஒற்றைச் சிறு
கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்...
பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில்,
"விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்.... இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு
எதுக்கு வண்டி" எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா
தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை.
காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள்.
தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது
அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால்
அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின்
மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்!
சிங்கப்பூரில் யாரை எப்போது சந்தித்தாலும் சுற்றிப்பார்த்த இடங்கள்
குறித்த அவர்களின் பட்டியலில், விசாரிப்புகளில் தவறாமல் இடம்பெறுவது நூலகம். முதல்
பயணத்தின் போதே தேசிய நூலகத்திற்கு சென்று, பல பகுதிகளைப் பார்த்து வியந்து போயிருந்தேன்.
இந்த முறை தேசிய நூலகத்திற்கு ஏ.பி.ராமன் அவர்கள் அழைத்துச் சென்றார். தேசிய நூலக அதிகாரி
புஷ்பலதா நாயுடு தம் நேரத்தை ஒதுக்கி முன்பு கண்டிராத பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார்.
அதில் குறிப்பாக மேல் மாடியில் இருக்கும் கூட்ட அரங்கு. அந்த கூட்ட அரங்கில் நின்று
கொண்டிருப்பதே சொல்லமுடியாத குதூகலத்தைத் தருகின்றது. வானில் மிதக்கும் எண்ணத்தையும்
ஏற்படுத்தத் தவறவில்லை. அந்தத் தளத்தில் கழிவறைகளுக்கு வைத்திருக்கும் பெயர்கள்கூட
வித்தியாசமாய், உதாரணத்திற்கு மூன்று ஆண்கள் மட்டும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் அறைக்கு
Three Men in a Boat என்பதாய் புத்தகங்களின் பெயராய் அமைந்துள்ளன.
தேசிய நூலகத்தில் தமிழ் இலக்கியங்களுக்கும், படைப்பாளிகளுக்கும்
அளித்திருக்கும் முக்கியத்துவத்தை, அதற்காக தாம் மேற்கொண்ட பணிகள் குறித்தவற்றை புஷ்பலதா
நாயுடு விளக்குகிறார். அரிதான பல படைப்புகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு
முந்தைய படைப்புகளை பாதுகாக்கும் விதம் குறித்தும், அப்படியான நூல்களைப் குறித்த தகவல்கள்,
அதை பயனாளிகள் பயன்படுத்த அனுமதிக்கும் முறைகள் குறித்த விவரிப்புகள் அனைத்தும் நம்ப
முடியாத வியப்பினை ஏற்படுத்துகின்றன. பல்லாண்டு கால செய்தித்தாள்களை டிஜிட்டல் வடிவில்
பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.
முடிந்தவரை தமிழர்களின் படைப்புகளை நூலகத்தில் இடம் பெறச்செய்வதற்கு
தாம் அளிக்கும் முக்கியவத்துவம் குறித்துச் சொல்லும்போது, மிகத் தட்டையான, மேலோட்டமான
சில புத்தகங்கள் குறித்த வருத்தத்தை கடுமையாக வெளிப்படுத்துகிறார். இரண்டு மணி நேரத்திற்கும்
மேலாக சொர்க்கமாய், அறிவுக் களஞ்சியமாய் விரிந்து கிடக்கும் நூலகத்தின் பல பகுதிகளை
அவர் உதவியோடு கண்டு வியந்து வந்தேன். ஒரு அரசு, நூலகத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும்,
அப்பகுதி மக்கள் நூலகத்தை பயன்படுத்தும் விதத்தையும் வைத்துமே ஒரு நாட்டின் மேம்பாட்டை
நாம் தீர்மானித்துவிடலாம் என்பதற்கு சிங்கப்பூர் அரசும், தேசிய நூலகமும், வாசகர்களும்
மிகச்சிறந்த உதாரணம். அற்புதமான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்த புஷ்பலதா நாயுடு அவர்களுக்கு
எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.
*
ஷானவாஸ் அவர்களின் ”க்ரேஸி கிங்ஸ்” உணவகத்தில் புறாக்கள் மிகச்
சுதந்திரமாய் நடமாடுவதைப் பார்க்கவே அழகாக இருக்கின்றது. பசியோடு சென்ற எங்களுக்கு
அவர் அளித்த உணவின் ருசி சொற்களில் அடங்காதது. ஷானவாஸ் எதைப் பகிர்ந்தாலும் அதை நேர்த்தியாக,
உணர்வுப்பூர்வமாகப் பகிர்கிறார். அங்கு பணிபுரியும் மலாய் தொழிலாளர்களின் இயல்பு, குணம்
குறித்துச் சொல்லும்போது, ஒரு சித்திரமாக மனதிற்குள் பதிய வைக்கிறார். வேலையில் மிகத்
தீவிரமாக, தெளிவாக, பொறுப்பாக இருக்கும் மலாய்க்காரர்கள் குறித்து பெருமையாகக் கூறுகிறார்.
என்னுடைய திறமையை நானே உணர்ந்து, நம்பிக்கை கொண்டிட பலவித கதவுகளைத் திறந்துவிட்டு
உதவிய ஷானவாஸ் இல்லையென்றால் இந்தக் கட்டுரைகளுக்கெல்லாம் சாத்தியங்களற்று, வழக்கமான
நாட்களைக் கொண்டதாகவே கடந்திருந்திருப்பேன்.
மீண்டுமொருமுறை ஜோ.டி.குரூஸ் உள்ளிட்ட நண்பர்களோடு அங்கு அரட்டையடிக்கும்
வாய்ப்பு. பேச்சுவாக்கில் யாரோ அவரை எழுத்தாளன் எனச் சொல்லும்போது, தான் எழுத்தாளன்
அல்ல என்கிறார் குரூஸ். மிகத் தெளிவாக தாம் ஒரு போராளி என்கிறார். எழுத்தாளனாகவும்,
பேச்சாளனாவும் தெரிவதும் கூட அந்தப் போராட்டத்தின் ஒரு வகை என்கிறார். ஆழி சூழ் உலகு
ஆங்கில மொழிபெயர்ப்பு கைவிடப்பட்டது குறித்த ஒரு கேள்வியின் போது எவ்வித எதிர்மறை வினையாற்றலுமின்றி
கசப்பானதொரு புன்னகையோடு அந்தக் கேள்வியிலிருந்து ஒதுங்கிச் செல்கிறார்.
*
அந்த முன்னிரவுப் பொழுதில் நானும் அண்ணன் வெட்டிக்காடு
ரவியும் பேசிப்பேசி அத்தனையாயிரம் சொற்களைப் பகிர்ந்துகொள்வோம் என ஒருபோதும் நினைத்ததில்லை.
வெட்டிக்காடு வலைப்பக்கத்தின் மூலம் அவரை ஒரு பதிவராகத்தான் முதலில் அறிவேன். 2012ல்
ஈரோட்டில் உள்ள கல்லூரிக்கு உரையாற்ற வந்தபோது என்னைச் சந்தித்தார். 2013ல் சிங்கப்பூர்
வந்திருந்தபோது சந்திக்க முயன்றும் முடியாமல் போனதில் வருத்தம்தான். இந்தமுறை இரண்டு
நாட்களாக திங்கள் இரவு சந்திப்பதாக உறுதிப்படுத்தி அந்த சந்திப்பை நிகழ்த்தினார்.
அவரின் பால்யகால வாழ்க்கை, அவரின் வெட்டிக்காடு
கிராமம், அவரின் சிங்கப்பூர் வாழ்க்கை, அமெரிக்க வாழ்க்கை, பெங்களூர் வாழ்க்கை, மாதொருபாகன்
நாவல், பிள்ளை இல்லாத கிராமப் பெண்களின் அந்தக் கால வாழ்க்கை, தற்போதை சிங்கப்பூர்
வாழ்க்கை, 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் தமிழர்கள் புதிதாக வந்த தமிழ்ர்களை எதிர்கொண்டவிதம்,
அவர் பணிபுரிந்த இடங்களில் ஏற்பட்ட சுவாரஸ்யங்கள், தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் அவர்
கண்ட வளர்ச்சி, அவருடைய கிராமத்தைச் சார்ந்தவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பை வலையேற்றம்
செய்ததில் அந்தக் கதையாசிரியர் முப்பதாண்டுகளுக்கு முன்பு விலகிப்போய் ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் அவரின் உறவினரோடு மீண்டும் பேசியது, சிங்கப்பூரின்ந் நீர் மேலாண்மை, உலகின்
தலைசிறந்த விமான நிலையமாக இருக்கும் சாங்கி விமானநிலையம் ஆகியவை குறித்து பேசினோம்
பேசினோம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருந்தோம்.
சிங்கப்பூர் ஆற்றங்கரை உணவகம் ஒன்றில்
சுத்தியல் கொரடு துணையோடு பரிமாறப்பட்ட ஒரு பெரிய நண்டினை உடைத்து சாப்பிட்டோம். நான்
சாப்பிட்டதைவிட நாங்கள் அமர்ந்திருந்த ஒரு பெரிய மேசையில் விளையாடிக் கீழே வீழ்ந்து
அழுது கொண்டிருந்த குழந்தையைக் கூட கண்டுகொள்ளாமல் நண்டை பிரித்து மெய்ந்துகொண்டிருந்த
ஒரு சீனனைத்தான் அதிகம் வேடிக்கை பார்த்தேன். உள்ளங்கையில் பாதி அளவிற்கு இருக்கும்
வாய்க்கால் நண்டுகளை ஒரு காலத்தில் பார்த்து வந்த எனக்கு வடைச்சட்டி அளவிற்கு நண்டு
இருக்கும் என்பதை வாழ்க்கையில் அப்போதுதான் பார்க்கிறேன் என்பதால் அதன் ருசியை எதனோடு
ஒப்பிடுவது. பொதுவாக மிகப்பெரிய சாப்பாட்டு விரும்பியாக இல்லாத என்னை, அன்றைக்கும்
அந்த சிங்கப்பூர் சிறப்பு உணவு வயிறு முட்ட சாப்பிட வைத்து சாதித்துக்கொண்டது.
பின் தூங்கி பின் எழுந்த அந்த ஞாயிறு அதனுள்
பொதிந்து வைத்திருந்த அதிசயங்களின் அறிகுறிகள் ஏதும் எழுந்தபோது தெரியவில்லை. காலையில்
பயிலரங்கம், அதன்பின் என்ன செய்யலாம் என்பது குறித்த திட்டமேதுமின்றி கிளம்பினோம்.
பயிலரங்கம் நடந்துகொண்டிருந்த ஆங் மோ கியோ
நூலகத்தை அடைந்தபோது, நாங்கள் தாமதமாக வந்தடைந்திருக்கிறோம் என்பது புரிந்தது. நெய்தல்
திணை மக்கள் குறித்தும், தம் எழுத்து குறித்தும் ஜோ.டி.க்ரூஸ் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
வாசகர் வட்டம் அமைப்பின் ஏற்பாடுகளும், செயல்பாடுகளும்
என்னை பெரு வியப்பில் ஆழ்த்தின. முதல் நாள் ஆண்டு விழா கூட்டத்திற்கான ஏற்பாடுகளாய்
இருந்தாலும், அன்று நடைபெற்ற பயிலரங்கத்தின் ஏற்பாடுகளாய் இருந்தாலும் மிகுந்த சிரத்தையெடுத்து
நடத்துகிறார்கள். நம் ஊரில் அதுபோன்ற விழாக்களை, நிகழ்வுகளை சமரசங்களின்றி ஏன் நாம்
நடத்த முற்படுவதில்லை எனும் கேள்வியெழுந்தது. தொடர்ந்து தொடர்ந்து இலக்கியத்தை முன்னிறுத்தி
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இவ்வாறு இயங்கிக் கொண்டிருப்பது போற்றுதலுக்குரிய ஒன்று.
தமது உரையை நிறைவு செய்த ஜோ.டி.குரூஸ் கேள்விகளுக்காக
அரங்கை திறந்துவிட்டார். மக்கள் ஆர்வமாகக் கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு அவர்
வைத்திருக்கும் பதில்கள் கேட்பவரின் ஆர்வத்தை மிக நேர்த்தியாக அங்கீகரிப்பவை. ஆளுமையோடு
அவர் மேடையைக் கையாளும் விதம், ஒரு பேச்சாளன் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அழகியல்.
கேள்விகளை நிறைவு செய்யும் தருணத்திற்கு முன்பு,
சிலரின் கேள்விகளுக்கான என் பார்வை, புரிதலை க்ரூஸ் அவர்களின் அனுமதியோடு பகிர்ந்துகொண்டேன்.
குறிப்பாக ஐந்து திணை வாழ்க்கையே தமிழர்களின் வாழ்வு சார்ந்தது, ஆனால் இப்போது ஆறாம்
திணையாக பணம் சம்பாதிப்பது மட்டுமே என்று வாழும் வாழ்க்கை குறித்த ஒரு நண்பரின் கேள்விக்கு,
ஆறாம் திணை என்று ஒன்றில்லை, அதை ஒருவித திணை மயக்கமாகவே நாம் கருத வேண்டும் எனும்
ரீதியில் என் கருத்தை பதிவு செய்தேன். குறிப்பாக இப்படியான திணை மயக்கம் அப்ரூட்டிங்
எனப்படும் வேர் அறுத்தலின் ஒரு அங்கம் என்பதையும், முதலில் திணை மயக்கத்தில் இருக்கிறோம்
என்பதைப் புரிந்துகொள்வதே ஒருவித விழிப்பு நிலை எனப் பகிர்ந்து கொண்டேன். எப்படி எழுதத்
துவங்குவது எனக் கேள்விகேட்ட முத்துக்குமாருக்கு “முதல் சொல்லை எப்படியாவது எழுதிவிட
முயற்சி செய்யுங்கள், அது அடுத்தடுத்த சொற்களைத் தேடிக்கொள்ளும்” என்பதையும் ஒரு உதாரணத்தோடு
பகிர்ந்து கொண்டேன்.
இறுதிக் கேள்வியாக மரியான் படம் குறித்து கேட்கப்பட்ட
கேள்விக்கு, ஜோ.டி.க்ரூஸ் பகிர்ந்து கொண்டவை அற்புதமான ஒரு அனுபவம். பாலையில் கடல்
தேடி துவண்டு அலைபவனின் முதுகை வருடும் கடலின் வெப்ப காற்றும், கடல் திசை நோக்கி ஓடுபவனுக்கு
பாறையில் ஒட்டியிருக்கும் கடற்குதிரையின் எச்சமும் குறித்துச் சொல்லும் போது அந்தச்
சூழலுக்குள் நம்மை அப்படியே இழுத்துச் சென்றுவிடுகிறார். விரைவில் மரியான் பார்க்கவேண்டும்,
அவர் சொன்னதை காட்சிகளில் கண்டு நெகிழவேண்டும் எனத் தோன்றியது.
மிக அருமையான மதிய உணவு. உணவுப் பொழுதின் உரையாடல்
இனிதானதொன்று. எழுத்தாளர் கிருத்திகா, முதல் நாள் நான் பேசியதில் இருந்து, அந்த குழந்தை
சம்பவத்தில் இருந்த அப்பா குறித்து தனது கருத்தை கேள்வியாக பகிர்ந்து கொண்டார். தனது சொகுசுக் கப்பல் பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதி
வெளியிட்டிருப்பது குறித்துச் சொன்னதோடு புத்தகத்தையும் அளித்தார். பயணம் குறித்து
விரிவாக படங்களோடு மிகுந்த மெனக்கெடல்களோடு வெளியிட்டிருக்கிறார்.
முதல் நாள் சந்திப்பிலேயே ஏ.பி.ராமன் அவர்கள்
குறித்து நான் எழுதிய பதிவு குறித்து இரண்டு முறை பாராட்டிய ராம் சந்தானம், மீண்டும்
ஒருமுறை பொறுமையாக வாசித்ததாகச் சொல்லி மீண்டும் பாராட்டினார். அதுமாதிரியான பகிர்வுகள்
பொதுவாக மனதிற்குள் ஒரு தெறிப்பாய் சூழ்கொண்டு, தானே வளர்ந்து, சுயமாக அழுத்தமடைந்து,
உடனுக்குடன் வெடித்து எழுத்தாக விழுந்து ஒருவித நிம்மதியை பரவவிடுபவை. அதில் எவ்வித
திட்டமிடலுக்கும் நேரமோ, மனநிலையோ அமைவதில்லை, எழுதிவிட்டவுடன் ஒருவித விடுதலை உணரும்
பாக்கியம் கிட்டிவிடுகிறதென்றேன்.
2013ல் வந்திருந்தபோதே நண்பர் முத்துக்குமார்,
அவர் வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்திருந்தார். அப்போது முடியவில்லை. இப்போது தட்ட
முடியவில்லை. ஆனாலும் உணவுக்கான நேரமில்லையென்பதால், ஒரு தேநீராவது பருக வேண்டுமென
அழைத்தார். அன்பின் அழைப்பை மறுக்க முடியாமல் நான், ஹாஜா, அனிதா, அனிதா அம்மா, அதியன்,
வெற்றிக்கதிரவன் என ஒரு படையாக முற்றுகையிட்டோம்.
முத்துக்குமார் இல்லத்தில் வழங்கப்பட்ட கொத்தமல்லித்தூள்,
சுக்கு கலந்திருந்த அந்த கருப்பட்டிக் காபி பால்ய காலத்திற்குள்ளும், விழுமியங்களுக்குள்ளும்
இழுத்துச் சென்றது. அவர்கள் குடும்பத்தை மனதுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து வைத்தது.
அங்கிருந்து தேசிய அருங்காட்சியகம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் 700 ஆண்டு காலம் குறித்த ஆவணங்களை பார்வைக்கு வைத்திருக்கிறது தேசிய
அருகாட்சியகம். அந்த தேசத்தின் 700 ஆண்டுக்கான ஆவணங்களைப் பத்திரப்படுத்தி போற்றிப்
பாதுகாத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அட நம்ம ஊரு காலிங்கராயன் கால்வாய்க்கு
740 ஆண்டுகால வரலாறு இருக்க வேண்டுமே, அதையெல்லாம் எங்கு, எவ்விதம் தேடுவது என்ற சிந்தனை
மனதுக்குள் குடைந்து கொண்டேயிருந்தது. சென்றிருக்கும் இடத்தில் அங்கிருப்பதை ரசிப்பதைவிடுத்து,
தன்னிடமிருப்பதோடு ஒப்பிட்டு பெருமையோ, பொறாமையோ கொள்ளும் மனதை எப்படி நல்லவிதமாய்
சமன்படுத்துவது என்பது இன்னும் புரிபடவில்லை.
700 ஆண்டுகால வரலாற்றில் ராஜேந்திர சோழன் குறித்து
நாம் அறிந்துகொள்ள முடிகிறது. கலிங்கா என அங்கே குறிப்பிட்டிருப்பதற்கு ஹாஜா கொடுத்த
விளக்கம் மிகச் சுவாரஸ்யமானவை. இந்தியக் குடும்பம் என ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு
நிழற்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணின் காட்சி மனசுக்குள்
ஆழப்பதிந்து விட்டது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாட்டு
செட்டியார்கள் சிங்கப்பூர் சென்றடைந்தது, சிலைகளே இல்லாத தேசத்தில் சிலையாய் நிற்கும்
ராஃபிள்ஸ் வருகையும், ஆளுமையும் ஜப்பானின் அடாவடி போர் மற்றும் ஆக்கிரமிப்பு, ஆங்கிலேயர்கள்
ஆட்சி, வாக்கெடுப்பு நடத்தி தங்களை மலேசியாவோடு இணைத்துக் கொண்ட குடிக்க தண்ணீர்கூட
இல்லாத சிங்கப்பூரின் அவல நிலை, 1965ல் தாங்கள் துளியும் விரும்பாத நிலையில் தங்களுக்கு
திணிக்கப்பட்ட சுதந்திரத்தை சிங்கப்பூர் எதிர்கொண்டது என எல்லாவற்றையும் வரிசையாகக்
கண்டுவர முடிகிறது.
ஜப்பான் போர் காலகட்ட நிகழ்வுகளைக் காணும்போது,
ஒலி ஒளி அமைப்பு மூலம், நாமும் போர்முனைக்குள் இருக்கும் சூழலை உணர வைக்கிறார்கள்.
மலேசியாவுடன் இணைய நடத்திய வாக்கெடுப்பு முறை, மலேசியாவிலிருந்து பிரித்துவிடப்பட்ட
காலத்திற்குப் பின் லீ மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த இராஜரத்தினம் ஆகியோரின்
வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
அதுவரை உடனிருந்த அதியன் விடைபெற விரும்பினார்.
பதின்ம வயதில் தமது எழுத்து மற்றும் கவிதைகளால் கலக்கிக் கொண்டிருக்கும் அதியன் ஒரு
அதிசயம்தான். அதுவரை என் நட்பு வட்டத்தில் இல்லையென்றாலும் உடன் வரும் நட்புகள் அதியன்
குறித்துச் சொன்னவை வியப்பில் ஆழ்த்தியது. அந்த பகல் பொழுதில் அதியன் எடுத்த பரிமாணங்களும்
வியப்பில் ஆழ்த்தியவைதான். அவரை அனுப்பிவைக்க லிட்டில் இந்தியா பகுதிக்கு வந்தோம்.
சாலையோரம் தம் ஊர் நண்பர்களைச் சந்திக்க காத்திருக்கும் தொழிலாளர்களாய் பணியாற்றும்
தமிழர்களின் முகங்களில் பலவிதமான உணர்வுகளைக் காண முடிகிறது. லிட்டில் இந்தியா கலவரத்திற்குப்
பிறகு தமிழர்களுக்கென தளர்த்தப்பட்டிருந்த விதிகள் மீண்டும் இறுக்கப்பட்டிருப்பதை உணர
முடிந்தது. வெஸ்டர்ன் யூனியனில் காசு அனுப்ப காத்திருக்கும் ஒவ்வொருவரின் மனசிலும்
தம் ஊருக்குச் சொல்ல, உறவுகளிடம் சொல்ல, பிள்ளைகளிடம் பெற்றவர்களிடம் மனைவியிடம் தன்னை
உணர்த்த, தான் உணர என எத்தனையோ உணர்வுகள் குவிந்து கனத்திருக்கும் என்பதை உணர முடிகிறது
அங்கிருந்து மெரினா பே பகுதிக்கு நகர்ந்தோம்.
முன்னிரவுப் பொழுதில் அங்கு தண்ணீரில் நிகழும் லேசர் காட்சி அசரடிக்கிறது. பேச்சு மூச்சற்று
முழுக்க முழுக்க அதற்குள் மூழ்கி கவனிக்க உந்துகிறது. இசையும் பாடலும், நீரின் நடனமும்,
கலந்துருகும் ஒளியில் நிறங்களும் என அந்த சில நிமிடங்கள் நம்மை முற்றிலும் உறைய வைக்கும்
வல்லமை அந்தக் காட்சிக்கு இருக்கின்றது.
ஒவ்வொரு இடமாய் தொடர் ஓட்டம், அலைச்சல் என
நாள் முழுக்க இயங்கியிருந்தாலும்கூட, அந்த தினமளித்த மகிழ்ச்சி அவ்வளவு எளிதாய் உறங்கிவிட
அனுமதிக்கவில்லை. அந்நாளின் நிகழ்வுகளை மீட்டி மீட்டி அசைபோடவே மீண்டும் மீண்டும் பணித்துக்
கொண்டிருந்தது.
வாசகர் வட்ட ஆண்டு விழா முடிந்து உணவு உண்டுவிட்டு
கிளம்பும்போது இரவு 10 மணி இருக்கும். எங்கு செல்கிறோம் என எதுவும் சொல்லாமல் நண்பர்கள்
அழைத்துச்சென்றனர். ஹாஜா கார் ஓட்டிக் கொண்டிருந்தார். கோபல் கண்ணன், கருணாகரசு உடன்
இருந்தார்கள். 2013ல் நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது, எனக்கு இவ்வளவு நண்பர்கள் இல்லை.
ஊரிலிருந்து என்னோடு வந்திருந்தவர்கள் இந்தோனேஷியா சென்றுவிட நான் மட்டும் தனித்திருந்த
ஒரு முழுநாளை உடன் இருந்து, சுற்றித்திரிந்து பயனுள்ளதாக்கியவர் கருணாகரசு. அவரோடு
அப்போது தேசிய நூலகமும், மெரினா பே பகுதிக்கும் சென்றது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.
அறச்சீற்றம் பொங்கும் ஒரு கவிஞனாய் மட்டுமே
வலைப்பக்கத்தில் கருணாகரசுவை அறிவேன். உரையாடும்போது பேச்சுவாக்கில் நறுக்குகளாய் விழும்
அவரின் நகைச்சுவை துணுக்குகள் அசரடிப்பவை. ஒரு கட்டத்தில் ”கருணாகரசு இனி கவிதை எழுதுறதை
நிறுத்திட்டு உரைநடை எழுத ஆரம்பியுங்கள்” எனச் சொல்லுமளவுக்கு அவரின் நகைச்சுவைத் துணுக்குகள்
வழியெங்கும் சிதறிக் கொண்டேயிருந்தன.
வண்டி நிற்கும்போதுதான் கடற்கரைக்கு வந்திருக்கிறோம்
என்பதை உணர்ந்தேன். அலைகளற்ற தண்ணீரும், தூரத்தில் நிற்கும் பிரமாண்ட கப்பல்களில் மின்னும்
விளக்குகளுமாய் கடல் எங்களுக்காக தம் கரையில் கொஞ்சம் இடம் வைத்திருந்தது. நண்பர்கள்
குயில்தோப்பு என்ற குழுவாய் இருப்பவர்கள். ஹாஜா, ரமேஷ் ராஜு, தாம் சண்முகம், கண்ணன்,
கருணாகரசு, பனசை நடராஜன் ஆகியோரோடு நானுமாய் அந்த இரவின் நிமிடங்களைத் தின்ன ஆரம்பித்தேன்.
அவர்களில் கண்ணன், கருணாகரசு தவிர்த்து அனைவருக்கும்
நான் மிக மிகப்புதியவன். ஆனாலும் காலம் காலமாய் பழகிய பால்ய நட்புகளின் உரையாடல் போலே,
கிண்டலும் கேலியும், தீவிரமான பகிர்வுகளுமென பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்.
கடற்கரையெங்கும் திட்டுத்திட்டாய் விதவிதமான
மனிதர்களின் கூட்டம். இருளும் ஒளியும் கலந்து காற்றாய் வீசும் அந்தக் கடற்கரையில் எவரும்
எவரைப் பற்றியும் சிந்தனைகொள்ளாது, அவரவர் அவரவர் நிமிடங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக எவரும் எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே அந்த தேசத்தின் அடையாளம்
என்றால் அது மிகையாகாது.
அனுமதி பெற்று, கடற்கரையில் நண்பர்களாக, குடும்பமாக
கூடாரம் அமைத்து இரவு முழுக்க தங்கி பேசி, தூங்கிவிட்டுச் செல்லலாம் என அறிகையில் பெருமையாகவும்,
பொறாமையாகவும் இருந்தது. காலணிகளில் மின்னும் விளக்கோடு இரவிலும் ஸ்கேட்டிங் செல்கிறார்கள்
அல்லது ஓடுகிறார்கள். சக்கரங்களில் மின்னும் விளக்கோடு மிதி வண்டிகள் வளைந்து நெளிந்து
செல்கின்றன. வாழ்தலின் மிக ரசனையான பக்கங்களை அப்போது அங்கிருக்கும் மனிதர்கள் எழுதியும்,
வாசித்தும் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. இருக்கும் கொஞ்சம் கடற்கரையை மிக
நேர்த்தியாகப் பயன்படுத்தும் அவர்களின் பழக்க வழக்கமும் நமக்கு ஒரு பாடம்தான்.
இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய அரசியல்,
புத்தக வெளியீடுகள், கூட்டங்கள், விழாக்கள் என கலந்துகட்டி உரையாடியதில் நான் அறிந்து
கொண்டவை சிங்கப்பூரின் எழுச்சி, சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை
என வித்தியாசமானவை.