சிங்கப்பூர் பயணம் - 6


பின் தூங்கி பின் எழுந்த அந்த ஞாயிறு அதனுள் பொதிந்து வைத்திருந்த அதிசயங்களின் அறிகுறிகள் ஏதும் எழுந்தபோது தெரியவில்லை. காலையில் பயிலரங்கம், அதன்பின் என்ன செய்யலாம் என்பது குறித்த திட்டமேதுமின்றி கிளம்பினோம்.

பயிலரங்கம் நடந்துகொண்டிருந்த ஆங் மோ கியோ நூலகத்தை அடைந்தபோது, நாங்கள் தாமதமாக வந்தடைந்திருக்கிறோம் என்பது புரிந்தது. நெய்தல் திணை மக்கள் குறித்தும், தம் எழுத்து குறித்தும் ஜோ.டி.க்ரூஸ் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். 

வாசகர் வட்டம் அமைப்பின் ஏற்பாடுகளும், செயல்பாடுகளும் என்னை பெரு வியப்பில் ஆழ்த்தின. முதல் நாள் ஆண்டு விழா கூட்டத்திற்கான ஏற்பாடுகளாய் இருந்தாலும், அன்று நடைபெற்ற பயிலரங்கத்தின் ஏற்பாடுகளாய் இருந்தாலும் மிகுந்த சிரத்தையெடுத்து நடத்துகிறார்கள். நம் ஊரில் அதுபோன்ற விழாக்களை, நிகழ்வுகளை சமரசங்களின்றி ஏன் நாம் நடத்த முற்படுவதில்லை எனும் கேள்வியெழுந்தது. தொடர்ந்து தொடர்ந்து இலக்கியத்தை முன்னிறுத்தி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இவ்வாறு இயங்கிக் கொண்டிருப்பது போற்றுதலுக்குரிய ஒன்று.

தமது உரையை நிறைவு செய்த ஜோ.டி.குரூஸ் கேள்விகளுக்காக அரங்கை திறந்துவிட்டார். மக்கள் ஆர்வமாகக் கேள்விகளை எழுப்பினர். கேள்விகளுக்கு அவர் வைத்திருக்கும் பதில்கள் கேட்பவரின் ஆர்வத்தை மிக நேர்த்தியாக அங்கீகரிப்பவை. ஆளுமையோடு அவர் மேடையைக் கையாளும் விதம், ஒரு பேச்சாளன் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அழகியல்.

கேள்விகளை நிறைவு செய்யும் தருணத்திற்கு முன்பு, சிலரின் கேள்விகளுக்கான என் பார்வை, புரிதலை க்ரூஸ் அவர்களின் அனுமதியோடு பகிர்ந்துகொண்டேன். குறிப்பாக ஐந்து திணை வாழ்க்கையே தமிழர்களின் வாழ்வு சார்ந்தது, ஆனால் இப்போது ஆறாம் திணையாக பணம் சம்பாதிப்பது மட்டுமே என்று வாழும் வாழ்க்கை குறித்த ஒரு நண்பரின் கேள்விக்கு, ஆறாம் திணை என்று ஒன்றில்லை, அதை ஒருவித திணை மயக்கமாகவே நாம் கருத வேண்டும் எனும் ரீதியில் என் கருத்தை பதிவு செய்தேன். குறிப்பாக இப்படியான திணை மயக்கம் அப்ரூட்டிங் எனப்படும் வேர் அறுத்தலின் ஒரு அங்கம் என்பதையும், முதலில் திணை மயக்கத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதே ஒருவித விழிப்பு நிலை எனப் பகிர்ந்து கொண்டேன். எப்படி எழுதத் துவங்குவது எனக் கேள்விகேட்ட முத்துக்குமாருக்கு “முதல் சொல்லை எப்படியாவது எழுதிவிட முயற்சி செய்யுங்கள், அது அடுத்தடுத்த சொற்களைத் தேடிக்கொள்ளும்” என்பதையும் ஒரு உதாரணத்தோடு பகிர்ந்து கொண்டேன்.

இறுதிக் கேள்வியாக மரியான் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜோ.டி.க்ரூஸ் பகிர்ந்து கொண்டவை அற்புதமான ஒரு அனுபவம். பாலையில் கடல் தேடி துவண்டு அலைபவனின் முதுகை வருடும் கடலின் வெப்ப காற்றும், கடல் திசை நோக்கி ஓடுபவனுக்கு பாறையில் ஒட்டியிருக்கும் கடற்குதிரையின் எச்சமும் குறித்துச் சொல்லும் போது அந்தச் சூழலுக்குள் நம்மை அப்படியே இழுத்துச் சென்றுவிடுகிறார். விரைவில் மரியான் பார்க்கவேண்டும், அவர் சொன்னதை காட்சிகளில் கண்டு நெகிழவேண்டும் எனத் தோன்றியது.

மிக அருமையான மதிய உணவு. உணவுப் பொழுதின் உரையாடல் இனிதானதொன்று. எழுத்தாளர் கிருத்திகா, முதல் நாள் நான் பேசியதில் இருந்து, அந்த குழந்தை சம்பவத்தில் இருந்த அப்பா குறித்து தனது கருத்தை கேள்வியாக பகிர்ந்து கொண்டார்.  தனது சொகுசுக் கப்பல் பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருப்பது குறித்துச் சொன்னதோடு புத்தகத்தையும் அளித்தார். பயணம் குறித்து விரிவாக படங்களோடு மிகுந்த மெனக்கெடல்களோடு வெளியிட்டிருக்கிறார்.

முதல் நாள் சந்திப்பிலேயே ஏ.பி.ராமன் அவர்கள் குறித்து நான் எழுதிய பதிவு குறித்து இரண்டு முறை பாராட்டிய ராம் சந்தானம், மீண்டும் ஒருமுறை பொறுமையாக வாசித்ததாகச் சொல்லி மீண்டும் பாராட்டினார். அதுமாதிரியான பகிர்வுகள் பொதுவாக மனதிற்குள் ஒரு தெறிப்பாய் சூழ்கொண்டு, தானே வளர்ந்து, சுயமாக அழுத்தமடைந்து, உடனுக்குடன் வெடித்து எழுத்தாக விழுந்து ஒருவித நிம்மதியை பரவவிடுபவை. அதில் எவ்வித திட்டமிடலுக்கும் நேரமோ, மனநிலையோ அமைவதில்லை, எழுதிவிட்டவுடன் ஒருவித விடுதலை உணரும் பாக்கியம் கிட்டிவிடுகிறதென்றேன்.

2013ல் வந்திருந்தபோதே நண்பர் முத்துக்குமார், அவர் வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைத்திருந்தார். அப்போது முடியவில்லை. இப்போது தட்ட முடியவில்லை. ஆனாலும் உணவுக்கான நேரமில்லையென்பதால், ஒரு தேநீராவது பருக வேண்டுமென அழைத்தார். அன்பின் அழைப்பை மறுக்க முடியாமல் நான், ஹாஜா, அனிதா, அனிதா அம்மா, அதியன், வெற்றிக்கதிரவன் என ஒரு படையாக முற்றுகையிட்டோம்.

முத்துக்குமார் இல்லத்தில் வழங்கப்பட்ட கொத்தமல்லித்தூள், சுக்கு கலந்திருந்த அந்த கருப்பட்டிக் காபி பால்ய காலத்திற்குள்ளும், விழுமியங்களுக்குள்ளும் இழுத்துச் சென்றது. அவர்கள் குடும்பத்தை மனதுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து வைத்தது.
அங்கிருந்து தேசிய அருங்காட்சியகம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. சிங்கப்பூரின் 700 ஆண்டு காலம் குறித்த ஆவணங்களை பார்வைக்கு வைத்திருக்கிறது தேசிய அருகாட்சியகம். அந்த தேசத்தின் 700 ஆண்டுக்கான ஆவணங்களைப் பத்திரப்படுத்தி போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அட நம்ம ஊரு காலிங்கராயன் கால்வாய்க்கு 740 ஆண்டுகால வரலாறு இருக்க வேண்டுமே, அதையெல்லாம் எங்கு, எவ்விதம் தேடுவது என்ற சிந்தனை மனதுக்குள் குடைந்து கொண்டேயிருந்தது. சென்றிருக்கும் இடத்தில் அங்கிருப்பதை ரசிப்பதைவிடுத்து, தன்னிடமிருப்பதோடு ஒப்பிட்டு பெருமையோ, பொறாமையோ கொள்ளும் மனதை எப்படி நல்லவிதமாய் சமன்படுத்துவது என்பது இன்னும் புரிபடவில்லை.
700 ஆண்டுகால வரலாற்றில் ராஜேந்திர சோழன் குறித்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. கலிங்கா என அங்கே குறிப்பிட்டிருப்பதற்கு ஹாஜா கொடுத்த விளக்கம் மிகச் சுவாரஸ்யமானவை. இந்தியக் குடும்பம் என ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு நிழற்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணின் காட்சி மனசுக்குள் ஆழப்பதிந்து விட்டது. 


சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாட்டு செட்டியார்கள் சிங்கப்பூர் சென்றடைந்தது, சிலைகளே இல்லாத தேசத்தில் சிலையாய் நிற்கும் ராஃபிள்ஸ் வருகையும், ஆளுமையும் ஜப்பானின் அடாவடி போர் மற்றும் ஆக்கிரமிப்பு, ஆங்கிலேயர்கள் ஆட்சி, வாக்கெடுப்பு நடத்தி தங்களை மலேசியாவோடு இணைத்துக் கொண்ட குடிக்க தண்ணீர்கூட இல்லாத சிங்கப்பூரின் அவல நிலை, 1965ல் தாங்கள் துளியும் விரும்பாத நிலையில் தங்களுக்கு திணிக்கப்பட்ட சுதந்திரத்தை சிங்கப்பூர் எதிர்கொண்டது என எல்லாவற்றையும் வரிசையாகக் கண்டுவர முடிகிறது.

ஜப்பான் போர் காலகட்ட நிகழ்வுகளைக் காணும்போது, ஒலி ஒளி அமைப்பு மூலம், நாமும் போர்முனைக்குள் இருக்கும் சூழலை உணர வைக்கிறார்கள். மலேசியாவுடன் இணைய நடத்திய வாக்கெடுப்பு முறை, மலேசியாவிலிருந்து பிரித்துவிடப்பட்ட காலத்திற்குப் பின் லீ மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த இராஜரத்தினம் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.அதுவரை உடனிருந்த அதியன் விடைபெற விரும்பினார். பதின்ம வயதில் தமது எழுத்து மற்றும் கவிதைகளால் கலக்கிக் கொண்டிருக்கும் அதியன் ஒரு அதிசயம்தான். அதுவரை என் நட்பு வட்டத்தில் இல்லையென்றாலும் உடன் வரும் நட்புகள் அதியன் குறித்துச் சொன்னவை வியப்பில் ஆழ்த்தியது. அந்த பகல் பொழுதில் அதியன் எடுத்த பரிமாணங்களும் வியப்பில் ஆழ்த்தியவைதான். அவரை அனுப்பிவைக்க லிட்டில் இந்தியா பகுதிக்கு வந்தோம்.

சாலையோரம் தம் ஊர் நண்பர்களைச் சந்திக்க காத்திருக்கும் தொழிலாளர்களாய் பணியாற்றும் தமிழர்களின் முகங்களில் பலவிதமான உணர்வுகளைக் காண முடிகிறது. லிட்டில் இந்தியா கலவரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கென தளர்த்தப்பட்டிருந்த விதிகள் மீண்டும் இறுக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. வெஸ்டர்ன் யூனியனில் காசு அனுப்ப காத்திருக்கும் ஒவ்வொருவரின் மனசிலும் தம் ஊருக்குச் சொல்ல, உறவுகளிடம் சொல்ல, பிள்ளைகளிடம் பெற்றவர்களிடம் மனைவியிடம் தன்னை உணர்த்த, தான் உணர என எத்தனையோ உணர்வுகள் குவிந்து கனத்திருக்கும் என்பதை உணர முடிகிறது

அங்கிருந்து மெரினா பே பகுதிக்கு நகர்ந்தோம். முன்னிரவுப் பொழுதில் அங்கு தண்ணீரில் நிகழும் லேசர் காட்சி அசரடிக்கிறது. பேச்சு மூச்சற்று முழுக்க முழுக்க அதற்குள் மூழ்கி கவனிக்க உந்துகிறது. இசையும் பாடலும், நீரின் நடனமும், கலந்துருகும் ஒளியில் நிறங்களும் என அந்த சில நிமிடங்கள் நம்மை முற்றிலும் உறைய வைக்கும் வல்லமை அந்தக் காட்சிக்கு இருக்கின்றது. 
ஒவ்வொரு இடமாய் தொடர் ஓட்டம், அலைச்சல் என நாள் முழுக்க இயங்கியிருந்தாலும்கூட, அந்த தினமளித்த மகிழ்ச்சி அவ்வளவு எளிதாய் உறங்கிவிட அனுமதிக்கவில்லை. அந்நாளின் நிகழ்வுகளை மீட்டி மீட்டி அசைபோடவே மீண்டும் மீண்டும் பணித்துக் கொண்டிருந்தது.

No comments: