Dec 31, 2019

கே.ஜி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கோபி - ஆண்டு விழா

இந்த ஆண்டின் நிறைவுக்கூட்டம், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டின் முதல் கூட்டமாகவும் இதை பட்டியலில் இணைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

இதே டிசம்பர்-28ல் முதன்முறையாக பொதுத் தேர்வு மாணவர்களுக்கான பயிற்சியாளராக 2016ல் களம் இறங்கினேன். அதே டிசம்பர்-28ல்தான் 2017ல் இந்தப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராகப் பேசினேன். இந்த ஆண்டு அதே டிசம்பர்-28, அதே பள்ளியில் ஆண்டு விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன்.



கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு அமர்வுகளில் ஏறத்தாழ 50 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சியளித்த நிலையில், ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டபோது தயக்கமும், தடுமாற்றமும் இருந்தது. எனவே ஆண்டு விழாவில் பெற்றோர்களை என் இலக்காக வைத்துக் கொண்டேன்.



உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளி, திருவிழாவிற்கு வந்தது போன்ற மனநிலையில் குவிந்திருந்த கூட்டம் வித்தியாசமான அனுபவமே. மதியம் (Atal Tinkering Lab) ஆய்வகத்தை திறந்து வைத்தது முதல் பின்னிரவு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்வரை முழுவதும் பங்கெடுத்திருந்தேன். மாணவ, மாணவிகள் பலருடன் உரையாடும் வாய்ப்பும் அமைந்தது.

*

கோவையில் உயர்கல்வி பயின்று வரும், பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தாளாளரின் வழியாக என்னிடம் பேச வேண்டும் என வந்தார். #வேட்கையோடு_விளையாடு தொகுப்பின் வாசகி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். தமது ஏழு ஆண்டு கால கல்வி வாழ்க்கை குறித்து ஒரு சொல் தடுமாற்றமின்றி ஏறத்தாழ 40 நிமிடங்கள் பகிர்ந்துகொண்டார். அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் நிறைந்த மிகக் கனமான, சவாலான வாழ்க்கை. காலம் விடுத்த சவால்களை அந்தந்தப் புள்ளியில் வென்றெடுத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் படிக்க வைக்க முடியாது என்று கூறிய தந்தையை எதிர்த்து சண்டையிட்டு தமது கல்வியைத் தொடர்ந்திருக்கிறார். காலம் கடந்திருந்தாலும், அப்படி சண்டையிட்டது தவறோ எனும் குற்ற உணர்வு மட்டும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது.

சமூகத்தில் நல்ல அறிமுகத்தோடு இருக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த மகன், திடீரென விவசாயம் செய்கிறேன் என சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அப்பா மனம் ஒப்பாமல், அந்த முடிவை குறையாகக் கருதி ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கிறார்.

உரையின் மையம், பிள்ளைகள் தாம் உருவாக்கிய சிறகுகளின் துணையோடு அவர்கள் விரும்பிய எல்லை வரை பறக்க அனுமதியுங்கள் என்பதும், பெற்றோர்களிடம் நல்ல கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிடுங்கள் என்பதுவும்தான்.

அந்த மாணவி “பயங்கர குற்றவுணர்ச்சில இருந்தேன். இப்ப புரியவச்சிட்டீங்க தேவையானதுக்குத்தான் சண்ட போட்ருக்கேன். தப்பில்ல!” என்றும், அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் “அது பையனோட வாழ்க்கைங்க, அவன் விரும்பினதைத்தான் செய்துக்கட்டுமே, இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணப்போறேன்” என்றும் கூறியதே இந்த ஆண்டின் நிறைவில் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு என்பேன்.

22 வயதாகும் மகளுக்கு ‘கல்யாணம் பண்ணி வச்சுடுறேன் அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ!’ என வற்புறுத்திக் கொண்டேயிருந்த ஒரு தாய், “இனி கல்யாணம்னு கட்டாயப்படுத்தப் போறதில்லை, மக விரும்பினதை படிச்சுட்டு வரட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்” என்றார்.

*



இந்த மாதிரி அனுபவங்களே என்னை #வேட்கையோடு_விளையாடு தொகுப்பு எழுத வைத்தது. கேஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் இரண்டு பேர் தொகுப்பின் இரண்டு கட்டுரைகளின் நாயகிகள் என்பது, அன்று வரை எனக்கும், நிர்வாகத்திற்கும், அந்த மாணவிகளுக்கும், புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட சிலருக்கும் மட்டுமே தெரியும். ஆண்டு விழா உரையில் அவர்களின் பெயர், அடையாளத்தைத் தெரிவிக்காமல் அவர்களையே உதாரணமாகக் காட்டிப் பேசினேன்.

கலை நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் மலர்ந்த முகத்தோடு “சார்.... நா......” என்று தன் பெயர் சொன்னபோது ஒருகணம் சிலிர்த்துப் போனேன். 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட வகையில் கலங்கடித்தவள். இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கூட்டங்களில் அந்தப் பெண்ணை உதாரணமாக முன்னிறுத்திப் பேசியிருக்கிறேன். குட்டி உருவமும், கூர்மையான கண்கள் மட்டுமே நினைவில் இருந்தன. முகம், நிறம், அடையாளம் என எதுவும் நினைவில் இல்லை. வேறு எங்கேனும் சந்தித்திருந்தாலும் எனக்கு அடையாளம் தெரிந்திருக்க சாத்தியமில்லை. ஆயிரக்கணக்கானோர் இருந்த அந்த கூட்டத்தில் அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரும் இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு கலவையான ஒரு மனநிலையைக் கொடுத்தது.

புதிய தலைமுறையில் தொடராக எழுதியபோது, தொகுப்பாக வெளியான பிறகு என அந்தப் பெண் வாசித்திருந்தாலும், நாங்கள் இப்போதுதான் பேசுகிறோம், சந்திக்கிறோம். இருவருக்கும் இடையே இருந்த பரவசத்திற்கு நிகராக, ஒருவித கனமும் ஒளிந்திருந்தது. என்னை எளிதாக்குவது போல், “எங்க காலேஜ் சிலபஸ்ல உங்க கவிதை இருக்கு சார், அதில் கவிஞர்னு உங்களைப் பத்தி அறிமுகப்படுத்தும்போது, எனக்குத் தெரியும், என்னைப் பத்தியும் எழுதியிருக்கார்னு பெருமையா இருக்கும் சார்” என்றாள். என் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டு, எண் கொடுத்து தொடர்பில் இரு எனச் சொல்லி விடை பெற்றேன்.

*

இந்த ஆண்டு விளையாட்டு விழா சிறப்பு விருந்தினராக, ஈரோடு வாசலில் இருந்து மூன்றாவது கல்வி விளையாட்டு விழா வாய்ப்பாக பாலமுரளி பங்கெடுத்ததுவும் மகிழ்ச்சிக்குரியது.



அருமையான தருணத்தை வழங்கிய பள்ளியின் செயலர் திரு.சிவக்குமார், தாளாளர் திருமதி. உமா சிவக்குமார், என் மனைவியிடம் திருஷ்டி சுத்திப் போடுங்க என வாழ்த்திய நிறுவனத் தலைவர் திரு. வி.கே.சின்னசாமி மற்றும் நட்பிற்குரிய பள்ளியின் அனைத்து ஆசிரியத் தோழமைகளும் மிகுந்த அன்பிற்குரியவர்கள்.

2017ல் அறிமுகப்படுத்தியதோடு, இந்த ஆண்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் வெற்றிவேல், ஈரோடு வாசலில் இருந்து நிகழ்வில் பங்கெடுத்த தாளவாடி கேசிடி பள்ளி தாளாளர் முதல்வர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், சாஹர் மேல் நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ராதா மனோகரன், தம்பி மூர்த்தி மற்றும் முதன்முறையாக பங்கெடுத்த என் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

.

Dec 27, 2019

நானும் ரயிலும் பின்னே தென்காசிப் பேருந்தும்


வழக்கமா தென்காசி செல்வதற்கு ஈரோடு - திருநெல்வேலி, அங்கிருந்து 1-டூ-1 பிடித்தால் போதும். இந்த முறை அரையாண்டு மற்றும் கிருஸ்துமஸ் விடுமுறை ஆகிய காரணங்களால் ஐஆர்சிடிசி இந்தப் பக்கமே எட்டிப்பார்க்காதே எனச் சொல்லிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சேலம் - கரூர் ஆரம்பித்த பிறகு, இரவு நேரத்தில் திருநெல்வேலி ஒரே ஒரு ரயில்தான். கோவை - நாகர்கோவில் ரயில் மட்டுமே. அதை எப்போது பொள்ளாச்சி வழியா போய்க்கோனு திருப்பி விடப்போறாங்கனு தெரியல.

ஈரோடு - மேட்டூர் தனியார் பேருந்து ஏறும்போது மேட்டூர் மட்டும் ஏறுங்க, ராக்கெட் மாதிரி ஈரோட்டிலிருந்து மேட்டூர்க்கு வானத்தில் பறந்து போகும் என்பது போல் கெடுபிடி செய்வார்கள். அதேபோல் கோவை - நாகர்கோவில் ரயிலிலும் இடையில் ஏறி இறங்கவெல்லாம் அனுமதி இருப்பதுபோல் தெரியவில்லை. அப்படியே தப்பித்தவறி இடம் கிடைத்து ஏறினாலும் மதுரைக்குப் பிறகு இறங்க காத்திருப்பவர்களும் சரி, அங்கு ஏறியவர்களும் சரி  தூங்க விடமாட்டார்கள்

ஆகவே... புதன்கிழமை காலை டேராடூன் - மதுரை ரயிலில் ஏறினேன். அதில் சண்டிகர் – மதுரை ரயிலும் இணைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வோர் திணிக்கும் இந்தியில் இருந்து தப்பிக்க நெட்ப்ளிக்ஸ் Sacred Games வசம் தஞ்சம் புகுந்து, மதுரை சென்றாகிவிட்டது. மதுரையிலிருந்து தென்காசி பேருந்து பயணத்தை நினைக்க கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது. இதே வழியில் காரில் ஒருமுறை சென்று வந்திருந்தாலும், பேருந்தில் இதுதான் முதன்முறை. சரி இதுவொரு அனுபவமாக இருக்கட்டுமே போய்தான் பார்ப்போம் என முடிவெடுத்துவிட்டேன்.



மதுரை சந்திப்பில் நண்பர் பழனிகுமார் வந்திருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில் அம்மா மெஸ்ஸில் சுவையான மதிய விருந்தை உபசரித்து, தென்காசி பஸ்ஸில் ஏற்றிவிட்டார். தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் (TNRIDC) சுற்று வட்டச்சாலையெங்கும் சுங்கச்சாவடிகளை மட்டும் கன கச்சிதமாக அமைத்துள்ளது. திருமங்கலத்தைக் கடக்கவே ஏறத்தாழ முக்கால் மணி நேரம் ஆனது. வளைந்து நெளிந்து செல்லும் பாதையான ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் சீறிப்புறப்பட்டது. சீறல் எல்லாம் வெறும் பில்டப் என்பது தே.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோதே புரிந்தது.

அதன்பிறகு ஒரு பேருந்து நிறுத்தம் விடவில்லை. மொத்தமாக இருந்த 170 கி.மீ தொலைவிற்குள் எப்படியும் 10-15 பேருந்து நிலையங்களுக்குள் சுழன்று சுழன்று நுழைந்திருந்திருக்கும். எப்போதாவது கோவை செல்லும்போது பேருந்து விஜயமங்கலம் அல்லது செங்கப்பள்ளியில் உள்ளே நுழைந்துவிட்டால் அடைந்த எரிச்சல்களின் சாபமெல்லாம் ஒன்று திரண்டு கெக்கலித்து சிரித்தது. ஒரு ஊரு விடாம பஸ் ஸ்டாண்ட் கட்டி வைத்து, ஒரு பஸ் விடாம உள்ளே வர வைத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ஒருவழியாக 6.30 மணியளவில் தென்காசியை எட்டியாகிவிட்டது. இந்த அனுபவத்தால் அறியப்படும் நீதி யாதெனின் மதுரையில் இருந்து தென்காசிக்கு என்று நேரடி பஸ் ஏறினால், அப்படியே குற்றாலத்திற்கு ஓடிப்போய் அருவியில் நின்று தான் தணித்துவிடுதல் நலம்.

அடுத்த நாள்...

நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்புவதற்காக தென்காசி - மதுரை பொதிகையில் முன்பதிவில் முன்கூட்டியே இடம் கிடைத்திருந்தது. அறையில் இருந்து நடக்கும் தொலைவில் தென்காசி சந்திப்பு. ஆறு மணி சுமாருக்கு அமைதியானதொரு ரயில் நிலையத்தில் காத்திருப்பது என்பது அழகாய் இருந்தது. செங்கோட்டையில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் பொதிகை விரைவு வண்டி. கூட்டம் அவ்வளவாக இல்லை. இரவு 9.40க்கு மதுரையை சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 1.55க்கு நாகர்கோவில் - கோவை ரயிலில் ஈரோடு வந்துவிடலாம் என முன்கூட்டியே பதிவு செய்திருந்தேன். காத்திருப்பு பட்டியலில்தான் இருந்தது. அந்தப் பட்டியல் சற்றும் இளகுவதாகத் தெரியவில்லை. செயலி 81% உறுதியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது. நாள் முழுக்க டிக்கெட் உறுதியாகிவிடுமா என நான்கைந்து தளங்கள் மற்றும் செயலிகள் வழியாக refresh செய்து களைத்திருந்தேன்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் முப்பது டூ நாற்பதுகளில் இருக்கும் பெண்கள் குழுமம் ஒன்று ஏறியது. ஏழெட்டு பேருக்கு பதிவு செய்திருக்க வேண்டும். மதுரை வரும் வரை தத்தமது படுக்கைக்கான எண்களைக் கண்டுபிடிப்பதில் படு பயங்கரக் குழப்பம் அவர்களுக்குள். டிக்கெட் பரிசோதகராலேயே அவர்கள் குழப்பத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். குழப்பத்திற்கான முக்கியக் காரணம், பக்கவாட்டில் மூன்றடுக்கு படுக்கை இல்லை என்பதும், அதில் மேல் படுக்கை முழுக்க பைகளால் நிரப்பிக்கொண்டதும், அவர்களில் ஒருவருக்கு RAC கிடைத்திருந்ததும்தான் என நான் மதுரையை அடைவதற்குள் புரிந்து கொண்டேன்.

குறித்த நேரத்திற்கும் பத்து நிமிடம் முன்னதாகவே மதுரை வந்தடைந்தது. நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும், இந்த லட்சணத்தில் இன்னும் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில்தான். நம்பிக் காத்திருப்பதா இல்லை வேறு வழி தேடுவதா என்ற யோசனையோடு வெளியில் வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் உள்ளே நுழையும்போது, உங்கள் முன்பதிவு உறுதி செய்யப்படவில்லையெனும் குறுந்தகவல் விழுந்தது. நேரம் இரவு 10.05. அப்ப ஆரப்பாளையம் சென்று ஈரோட்டிற்கு பேருந்துதான் எனும் முடிவெடுத்தேயாக வேண்டும்.

மதுரையில் இருந்து பேருந்தில் பயணித்து ஆறேழு ஆண்டுகள் இருக்கும். இரவுகளில் பயணித்த நினைவில்லை. ஆட்டோ பிடித்து பேரம் எதுவும் பேசாமல் ஆரப்பாளையம் வந்தடைந்தேன். ஈரோடு, சேலம் என பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருந்தன. கூட்டம் எதுவுமில்லை. சேலம் செல்லும் இடைநில்லா அரசு ஏசி பேருந்து புறப்படத் தயாராக இருப்பதாகவும், அது கரூரில் நிற்கும் என்றும் அறிவிப்புக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. சமீபத்தில் துவங்கப்பட்ட சேவை என்று நினைக்கிறேன். பத்து பதினைந்து பேர் கூட இல்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டது. கரூர் பை-பாஸ்ல இறக்கிவிடுங்க என நடத்துனரிடம் தெரிவித்துவிட்டு சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன். திடீரென யாரோ தட்டும் உணர்வு. விழித்துப் பார்த்தால் நடத்துனர் கரூர் பை-பாஸ் என்றார். இறங்க முற்படும்போது சிலர் பஸ் ஸ்டேண்ட் போகும்தானே உள்ளிருந்து பதட்டத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

கோவை-ஈரோடு திருப்பத்தில் ஒருவர் மட்டும் நின்றபடி யாரிடமோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். நேரம் பார்த்தேன் இரவு 1.00 மணி. ஒரு மணிக்கு செல்ஃபோனில் காரசாரமாகப் பேசும் அளவிற்கு மாறிப்போயிருப்பதை ஒட்டியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. திருச்சி பேருந்து ஒன்று வந்தது. கூட்டம் இல்லை. அப்படியே இருந்த சிலரும் இருக்கைகளில் முடிந்தவரை சுருண்டு படுத்திருந்தனர்.

மற்ற மாநிலங்களில் எப்படியெனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்த நேரத்தில் பேருந்து இருக்குமா என்றெல்லாம் பயம் கொள்ளத் தேவையில்லை. மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் வகையில் இந்த மாதிரி போக்குவரத்து வசதிகளில் இரவு முழுக்க அரசுப் பேருந்துகள் தாராளமாக இயங்குவதாகவே நம்புகிறேன்.

நீண்ட இடைவெளிகள் விட்டு பயணிப்பதால் பேருந்துப் பயணம் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், சமகால இடைவெளிகளில் சற்று சிரமம் தரும் இம்மாதிரியான சவாலான அனுபவங்கள் நமக்கு ஒருவகையில் தேவை என்றுதான் தோன்றுகிறது.

Dec 3, 2019

வகைகள்


கையருகே இருக்கும் இந்த சதுரத்துண்டு கடலை மிட்டாய் மழை ஈரத்திற்கு லேசாய் பிசுபிசுக்கிறது. கடலை மிட்டாய் முன்பு போலெல்லாம் இல்லை. முந்தைய காலத்தில் வாழ்ந்து இந்தக் காலத்திற்கு வந்துவிட்டவர்களுக்கென்றே இருக்கும் பிரத்யேகப் புகார் இது. எதைப் பார்த்தாலும் முன்பு போல் இல்லை எனும் இத்துப்போன ஒப்பீடு. இப்போது புகார் கூறுமளவிற்கு முந்தையை தலைமுறைகள் புகார் கூறியதா என்பது தெரியவில்லை.

சரி முன்பு போல் ஒன்று இல்லையென்றால்....!

இப்போதைய கடலை மிட்டாய் தயாரிப்பில் ஏதோ ஒரு இயந்திரத்தனம் தெரிகின்றது. அந்த இனிப்பில் ஈர்க்கும் ருசியில்லை, கடலையில் வறுபட்ட மணமில்லை. அதுவும் ஒரு துண்டினை தனியே பாலித்தின் கவரில் இட்டு சாக்லெட் போல ஏதோ ஒரு நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. புதிதாய் ருசிப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை, காலங்காலமாய் கடலையோடு புழங்கியவர்களுக்கு சகிக்க முடியாதொரு ருசி அது.
பேச விரும்பியது, கடலை மிட்டாயின் ருசி, மணம், தரம் குறித்தல்ல. அதைச் சாப்பிடும் விதம் குறித்தே... பொதுவாக கடலை மிட்டாயை எப்படிச் சாப்பிடுகிறோம்!? அது சாப்பிடுவதா - ருசிப்பதா!?

* வாயில் போட்ட கணத்தில் கடக்முடக்கென கடித்துக் குதப்பி விழுங்கி, அடுத்தடுத்த துண்டுகளை அள்ளிப் போட்டுச் சாப்பிடுவது ஒருவகை. 😂

* மிட்டாயை உள்வாங்கியவுடன் மென்றுவிடாமல் கடைவாயில் அடக்கி, நனைத்து, ஊறவைத்து கடலை பிசிறுகளோடு சொட்டுச் சொட்டாக இனிப்பைக் கவர்ந்து முற்றிலும் ருசித்துவிட்டு சக்கையாய் மிஞ்சும் கடலைக் கூட்டை சவசவ என மென்று விழுங்குதல் அல்லது அதை மட்டும் துப்பிவிடுதல் இன்னொரு வகை. 😇

* வாயில் போட்டதை இரண்டு துண்டுகளாக்கி இடமும் வலமும் அடக்கி, நெல்லிக் கனியை கடைவாயில் அதக்கிக் கொறிப்பது போல், இனிப்பைக் கொஞ்சம் கறந்து, அதற்கு இணையாக ஒரு கடலையை மெல்லத் தகர்த்து உள்ளிழுத்து கடைவாய் பற்களில் மென்று, சரிவிகிதத்தில் ரசித்து ருசிக்கலாம். 😋 இதுவும் ஒரு வகைதான்.

இன்னும்கூட உண்ணும், ருசிக்கும் அனுபவங்கள் இருக்கலாம். எல்லாமே நம் விருப்பம்தான். கடலை மிட்டாய் என்ன சொல்லிவிடப்போகிறது. தன்னை இப்படித்தான் உண்ண வேண்டும், ருசிக்க வேண்டுமென எதுவும் பொட்டலத்தின் மீது விளக்கமுறைகளை அச்சிட்டு வைத்திருப்பதில்லை.

கடலை மிட்டாய் போலத்தான் நிகழ்கால வாழ்க்கையும்!



வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...