நானும் ரயிலும் பின்னே தென்காசிப் பேருந்தும்


வழக்கமா தென்காசி செல்வதற்கு ஈரோடு - திருநெல்வேலி, அங்கிருந்து 1-டூ-1 பிடித்தால் போதும். இந்த முறை அரையாண்டு மற்றும் கிருஸ்துமஸ் விடுமுறை ஆகிய காரணங்களால் ஐஆர்சிடிசி இந்தப் பக்கமே எட்டிப்பார்க்காதே எனச் சொல்லிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சேலம் - கரூர் ஆரம்பித்த பிறகு, இரவு நேரத்தில் திருநெல்வேலி ஒரே ஒரு ரயில்தான். கோவை - நாகர்கோவில் ரயில் மட்டுமே. அதை எப்போது பொள்ளாச்சி வழியா போய்க்கோனு திருப்பி விடப்போறாங்கனு தெரியல.

ஈரோடு - மேட்டூர் தனியார் பேருந்து ஏறும்போது மேட்டூர் மட்டும் ஏறுங்க, ராக்கெட் மாதிரி ஈரோட்டிலிருந்து மேட்டூர்க்கு வானத்தில் பறந்து போகும் என்பது போல் கெடுபிடி செய்வார்கள். அதேபோல் கோவை - நாகர்கோவில் ரயிலிலும் இடையில் ஏறி இறங்கவெல்லாம் அனுமதி இருப்பதுபோல் தெரியவில்லை. அப்படியே தப்பித்தவறி இடம் கிடைத்து ஏறினாலும் மதுரைக்குப் பிறகு இறங்க காத்திருப்பவர்களும் சரி, அங்கு ஏறியவர்களும் சரி  தூங்க விடமாட்டார்கள்

ஆகவே... புதன்கிழமை காலை டேராடூன் - மதுரை ரயிலில் ஏறினேன். அதில் சண்டிகர் – மதுரை ரயிலும் இணைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரம் செல்வோர் திணிக்கும் இந்தியில் இருந்து தப்பிக்க நெட்ப்ளிக்ஸ் Sacred Games வசம் தஞ்சம் புகுந்து, மதுரை சென்றாகிவிட்டது. மதுரையிலிருந்து தென்காசி பேருந்து பயணத்தை நினைக்க கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது. இதே வழியில் காரில் ஒருமுறை சென்று வந்திருந்தாலும், பேருந்தில் இதுதான் முதன்முறை. சரி இதுவொரு அனுபவமாக இருக்கட்டுமே போய்தான் பார்ப்போம் என முடிவெடுத்துவிட்டேன்.மதுரை சந்திப்பில் நண்பர் பழனிகுமார் வந்திருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில் அம்மா மெஸ்ஸில் சுவையான மதிய விருந்தை உபசரித்து, தென்காசி பஸ்ஸில் ஏற்றிவிட்டார். தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் (TNRIDC) சுற்று வட்டச்சாலையெங்கும் சுங்கச்சாவடிகளை மட்டும் கன கச்சிதமாக அமைத்துள்ளது. திருமங்கலத்தைக் கடக்கவே ஏறத்தாழ முக்கால் மணி நேரம் ஆனது. வளைந்து நெளிந்து செல்லும் பாதையான ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் சீறிப்புறப்பட்டது. சீறல் எல்லாம் வெறும் பில்டப் என்பது தே.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோதே புரிந்தது.

அதன்பிறகு ஒரு பேருந்து நிறுத்தம் விடவில்லை. மொத்தமாக இருந்த 170 கி.மீ தொலைவிற்குள் எப்படியும் 10-15 பேருந்து நிலையங்களுக்குள் சுழன்று சுழன்று நுழைந்திருந்திருக்கும். எப்போதாவது கோவை செல்லும்போது பேருந்து விஜயமங்கலம் அல்லது செங்கப்பள்ளியில் உள்ளே நுழைந்துவிட்டால் அடைந்த எரிச்சல்களின் சாபமெல்லாம் ஒன்று திரண்டு கெக்கலித்து சிரித்தது. ஒரு ஊரு விடாம பஸ் ஸ்டாண்ட் கட்டி வைத்து, ஒரு பஸ் விடாம உள்ளே வர வைத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ஒருவழியாக 6.30 மணியளவில் தென்காசியை எட்டியாகிவிட்டது. இந்த அனுபவத்தால் அறியப்படும் நீதி யாதெனின் மதுரையில் இருந்து தென்காசிக்கு என்று நேரடி பஸ் ஏறினால், அப்படியே குற்றாலத்திற்கு ஓடிப்போய் அருவியில் நின்று தான் தணித்துவிடுதல் நலம்.

அடுத்த நாள்...

நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்புவதற்காக தென்காசி - மதுரை பொதிகையில் முன்பதிவில் முன்கூட்டியே இடம் கிடைத்திருந்தது. அறையில் இருந்து நடக்கும் தொலைவில் தென்காசி சந்திப்பு. ஆறு மணி சுமாருக்கு அமைதியானதொரு ரயில் நிலையத்தில் காத்திருப்பது என்பது அழகாய் இருந்தது. செங்கோட்டையில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் பொதிகை விரைவு வண்டி. கூட்டம் அவ்வளவாக இல்லை. இரவு 9.40க்கு மதுரையை சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 1.55க்கு நாகர்கோவில் - கோவை ரயிலில் ஈரோடு வந்துவிடலாம் என முன்கூட்டியே பதிவு செய்திருந்தேன். காத்திருப்பு பட்டியலில்தான் இருந்தது. அந்தப் பட்டியல் சற்றும் இளகுவதாகத் தெரியவில்லை. செயலி 81% உறுதியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது. நாள் முழுக்க டிக்கெட் உறுதியாகிவிடுமா என நான்கைந்து தளங்கள் மற்றும் செயலிகள் வழியாக refresh செய்து களைத்திருந்தேன்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் முப்பது டூ நாற்பதுகளில் இருக்கும் பெண்கள் குழுமம் ஒன்று ஏறியது. ஏழெட்டு பேருக்கு பதிவு செய்திருக்க வேண்டும். மதுரை வரும் வரை தத்தமது படுக்கைக்கான எண்களைக் கண்டுபிடிப்பதில் படு பயங்கரக் குழப்பம் அவர்களுக்குள். டிக்கெட் பரிசோதகராலேயே அவர்கள் குழப்பத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். குழப்பத்திற்கான முக்கியக் காரணம், பக்கவாட்டில் மூன்றடுக்கு படுக்கை இல்லை என்பதும், அதில் மேல் படுக்கை முழுக்க பைகளால் நிரப்பிக்கொண்டதும், அவர்களில் ஒருவருக்கு RAC கிடைத்திருந்ததும்தான் என நான் மதுரையை அடைவதற்குள் புரிந்து கொண்டேன்.

குறித்த நேரத்திற்கும் பத்து நிமிடம் முன்னதாகவே மதுரை வந்தடைந்தது. நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும், இந்த லட்சணத்தில் இன்னும் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில்தான். நம்பிக் காத்திருப்பதா இல்லை வேறு வழி தேடுவதா என்ற யோசனையோடு வெளியில் வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் உள்ளே நுழையும்போது, உங்கள் முன்பதிவு உறுதி செய்யப்படவில்லையெனும் குறுந்தகவல் விழுந்தது. நேரம் இரவு 10.05. அப்ப ஆரப்பாளையம் சென்று ஈரோட்டிற்கு பேருந்துதான் எனும் முடிவெடுத்தேயாக வேண்டும்.

மதுரையில் இருந்து பேருந்தில் பயணித்து ஆறேழு ஆண்டுகள் இருக்கும். இரவுகளில் பயணித்த நினைவில்லை. ஆட்டோ பிடித்து பேரம் எதுவும் பேசாமல் ஆரப்பாளையம் வந்தடைந்தேன். ஈரோடு, சேலம் என பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருந்தன. கூட்டம் எதுவுமில்லை. சேலம் செல்லும் இடைநில்லா அரசு ஏசி பேருந்து புறப்படத் தயாராக இருப்பதாகவும், அது கரூரில் நிற்கும் என்றும் அறிவிப்புக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. சமீபத்தில் துவங்கப்பட்ட சேவை என்று நினைக்கிறேன். பத்து பதினைந்து பேர் கூட இல்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டது. கரூர் பை-பாஸ்ல இறக்கிவிடுங்க என நடத்துனரிடம் தெரிவித்துவிட்டு சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன். திடீரென யாரோ தட்டும் உணர்வு. விழித்துப் பார்த்தால் நடத்துனர் கரூர் பை-பாஸ் என்றார். இறங்க முற்படும்போது சிலர் பஸ் ஸ்டேண்ட் போகும்தானே உள்ளிருந்து பதட்டத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

கோவை-ஈரோடு திருப்பத்தில் ஒருவர் மட்டும் நின்றபடி யாரிடமோ காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். நேரம் பார்த்தேன் இரவு 1.00 மணி. ஒரு மணிக்கு செல்ஃபோனில் காரசாரமாகப் பேசும் அளவிற்கு மாறிப்போயிருப்பதை ஒட்டியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. திருச்சி பேருந்து ஒன்று வந்தது. கூட்டம் இல்லை. அப்படியே இருந்த சிலரும் இருக்கைகளில் முடிந்தவரை சுருண்டு படுத்திருந்தனர்.

மற்ற மாநிலங்களில் எப்படியெனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்த நேரத்தில் பேருந்து இருக்குமா என்றெல்லாம் பயம் கொள்ளத் தேவையில்லை. மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் வகையில் இந்த மாதிரி போக்குவரத்து வசதிகளில் இரவு முழுக்க அரசுப் பேருந்துகள் தாராளமாக இயங்குவதாகவே நம்புகிறேன்.

நீண்ட இடைவெளிகள் விட்டு பயணிப்பதால் பேருந்துப் பயணம் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், சமகால இடைவெளிகளில் சற்று சிரமம் தரும் இம்மாதிரியான சவாலான அனுபவங்கள் நமக்கு ஒருவகையில் தேவை என்றுதான் தோன்றுகிறது.

No comments: