கையருகே இருக்கும் இந்த சதுரத்துண்டு கடலை மிட்டாய் மழை ஈரத்திற்கு
லேசாய் பிசுபிசுக்கிறது. கடலை மிட்டாய் முன்பு போலெல்லாம் இல்லை. முந்தைய
காலத்தில் வாழ்ந்து இந்தக் காலத்திற்கு வந்துவிட்டவர்களுக்கென்றே இருக்கும்
பிரத்யேகப் புகார் இது. எதைப் பார்த்தாலும் முன்பு போல் இல்லை எனும் இத்துப்போன
ஒப்பீடு. இப்போது புகார் கூறுமளவிற்கு முந்தையை தலைமுறைகள் புகார் கூறியதா என்பது
தெரியவில்லை.
சரி முன்பு போல் ஒன்று இல்லையென்றால்....!
இப்போதைய
கடலை மிட்டாய் தயாரிப்பில் ஏதோ ஒரு இயந்திரத்தனம் தெரிகின்றது. அந்த இனிப்பில்
ஈர்க்கும் ருசியில்லை, கடலையில் வறுபட்ட மணமில்லை. அதுவும் ஒரு துண்டினை
தனியே பாலித்தின் கவரில் இட்டு சாக்லெட் போல ஏதோ ஒரு நிறுவனம்
சந்தைப்படுத்துகிறது. புதிதாய் ருசிப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை, காலங்காலமாய் கடலையோடு புழங்கியவர்களுக்கு சகிக்க முடியாதொரு ருசி அது.
பேச
விரும்பியது, கடலை மிட்டாயின் ருசி, மணம்,
தரம் குறித்தல்ல. அதைச் சாப்பிடும் விதம் குறித்தே... பொதுவாக கடலை
மிட்டாயை எப்படிச் சாப்பிடுகிறோம்!? அது சாப்பிடுவதா -
ருசிப்பதா!?
* வாயில் போட்ட கணத்தில் கடக்முடக்கென கடித்துக் குதப்பி விழுங்கி, அடுத்தடுத்த துண்டுகளை அள்ளிப் போட்டுச் சாப்பிடுவது ஒருவகை. 😂
* மிட்டாயை உள்வாங்கியவுடன் மென்றுவிடாமல் கடைவாயில் அடக்கி, நனைத்து, ஊறவைத்து கடலை பிசிறுகளோடு சொட்டுச்
சொட்டாக இனிப்பைக் கவர்ந்து முற்றிலும் ருசித்துவிட்டு சக்கையாய் மிஞ்சும் கடலைக்
கூட்டை சவசவ என மென்று விழுங்குதல் அல்லது அதை மட்டும் துப்பிவிடுதல் இன்னொரு வகை. 😇
* வாயில் போட்டதை இரண்டு துண்டுகளாக்கி இடமும் வலமும் அடக்கி, நெல்லிக் கனியை கடைவாயில் அதக்கிக் கொறிப்பது போல், இனிப்பைக்
கொஞ்சம் கறந்து, அதற்கு இணையாக ஒரு கடலையை மெல்லத் தகர்த்து
உள்ளிழுத்து கடைவாய் பற்களில் மென்று, சரிவிகிதத்தில்
ரசித்து ருசிக்கலாம். 😋 இதுவும் ஒரு வகைதான்.
இன்னும்கூட
உண்ணும், ருசிக்கும் அனுபவங்கள் இருக்கலாம். எல்லாமே நம்
விருப்பம்தான். கடலை மிட்டாய் என்ன சொல்லிவிடப்போகிறது. தன்னை இப்படித்தான் உண்ண
வேண்டும், ருசிக்க வேண்டுமென எதுவும் பொட்டலத்தின் மீது
விளக்கமுறைகளை அச்சிட்டு வைத்திருப்பதில்லை.
கடலை
மிட்டாய் போலத்தான் நிகழ்கால வாழ்க்கையும்!
1 comment:
கடலை மிட்டாயை எப்படி ருசிப்பது என்று சொல்கிறீர்களோ என்று படித்தால் !.... கடைசியில்தான் தெரிகிறது நீக்கள் சொல்லவருவது கடலைமிட்டாயை அல்ல வாழ்க்கையின் சாரத்தை என்பது. மகிழ்ச்சி !!! My Web Link "கிளிக்"குங்க
Post a Comment