Feb 11, 2013

கீச்சுகள் - 31



பிரச்சனைகள் சிக்கல் மிகுந்ததாகத் தெரிவதற்குக் காரணம், அதை அணுகும் முறையில் சிக்கல் இருப்பதுதான்!





சிலர் தெளிக்கும் அன்பின் துளிகள் மிகக் கனமானவை. சுமக்கச் சுமக்க கூடுதல் சுகத்தைத் தருபவை. சுற்றத்தில் அன்பு செலுத்து எனப் பணிப்பவை.

-

நட்புக்குள், உறவுகளுக்குள் சண்டை போடவும், சண்டை முடியவும் ”உலக மகா” காரணங்கள் தேவையில்லை

-

சிவகுமார் & குடும்பம் நடித்த டெங்கு கொசு சினிமாவுக்கான தணிக்கை சான்றிதழ் சரியானதுதானா? ஊர்ல கொஞ்ச நாளா கொசு குறைஞ்சிருக்கு!

-

பொய் எனும் ஆபரணம் தயாரிக்கத்தான் செய்கூலி சேதாரம் தேவைப்படுகிறது 




பாதை சரியானதுதானா என்பதை எல்லா நேரமும் கைகாட்டிகள் மட்டுமே சொல்லவேண்டியதில்லை. நமக்கும் தெரிந்திருக்கவும், புரிந்திருக்கவும் வேண்டும்

-

பழத்தை சக்கையோடும் உண்ணலாம், சாறு பிழிந்தும் அருந்தலாம். மகிழ்ச்சி என்பதற்கு இதுதான் நியதியென்றில்லை!

-

காதல் திருமணங்களுக்காக அதைத் தடுக்கவேண்டும், இதைத் தடுக்கவேண்டும்னு சொல்றவங்க பேசாமல் புள்ள குட்டி பெத்துக்கிறதையே தடுத்திருந்திருக்கலாம்.

-

பூமியில் உயிரோடிருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கையே அதிகம்

-

எங்க பகுதியில போன வருடம் 75kg IR-20 அரிசி ரூ.1500 இப்போ ரூ.2400. ஆனாப் பாருங்க விவசாயிங்ககிட்ட விற்க நெல்லும் இல்லை அரிசியும் இல்லை

-

நம்பி வர்றவங்களை ஏமாத்துற சூர்யா விக்ரம் கார்த்தி etc குறுக்குக் கதாநாயகன்களைவிட ”ராக்ஸ்டார்” மாதிரியான கிறுக்குக் கதாநாயகன் எவ்வளவோ Male

-

மௌனம் வலிமை இழக்கும் கணங்களில் வார்த்தைகள் முளைக்கின்றன.

-

e-mail முகவரியை தமிழில் அடிக்க வேண்டும் என ஒருவர் மன்றாடுகிறார். அவரின் இந்த மொழிப்பற்றை எப்படி தணிப்பதுனு தெரியாம முழிக்கிறேன்

-

எல்லாச் சொற்களும் விரல் நுனியில் மட்டுமே தோன்றி சொட்டிடுவதில்லை. மனதில் சுரந்து உதடுகள், விரல் வழியே சொட்டுவதுமுண்டு.

-

”வெட்கச் சிரிப்பு” பூக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன் எனக்குள் இன்னும் கொஞ்சம் குழந்தைத்தனம் இருக்கின்றதென்பதை!

-

இந்த அரசியல் பேச்சாளர்கள் தொண்டைகளில் கண்ணாடியை அரைத்துத் தடவியது யாராக இருக்கும். கரகரப்பில் காது கிழியுது.

-

எதிர்பாராத சூழலில் யாராவது பிடித்த ஏதாவது ஒன்றைப் பரிசளிக்கும் போது, உலகிலிருக்கும் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதே அன்பு துளிர்க்கிறது!

-

அன்பு என்பது கிடப்பில் இருந்து அள்ளுவதல்ல, பால் போன்று சொட்டுச் சொட்டாய் சுரப்பது!

-

வேலை நாட்களிலிருந்து விடுப்புக்குள் பொருந்திக்கொள்ளும் மனமும் உடலும், விடுமுறைகள் முடிந்து வேலைக்குள் அவ்ளோ எளிதாகப் பொருந்துவதில்லை

-

மன வெற்றிடம் நிரந்தரமல்ல... எந்த ஒரு நொடியிலும் சட்டென நிரம்பலாம். அந்த நொடி எது என்பதுதான் கண்ணாமூச்சி!

-

வருவதே தெரியாம வந்து சக்கபோடு போடும் படம்குறித்த மகிழ்ச்சியைவிட ஓவரா ஆட்டம்போட்டு வந்தவுடனே குப்புறவுழுகிற படம் குறித்த மகிழ்ச்சி பெரிது

-

திரையரங்கு வாசலில் காலை 7 மணி சிறப்புக்(!) காட்சிக்கு பனிக்குளிரில் 6 மணிக்கு கணவர்கள் நிற்கும் வீதியிலேயேதான் ”இன்னிக்கும் ’பைப்’ தண்ணி வரலை” எனும் பதட்டத்தோடு வாழும் மனைவிகளும் இருக்கின்றனர்.

-

Use & Throw மனோபாவத்தில், தீர்ந்துபோன நாளை தூக்கி வீசும்முன் சேமிக்கவென அதில் கொஞ்சம் நினைவுகள் இருக்கின்றதென்பதை நினைவில் கொள்வோம்!




கொசுவர்த்தி / ஆல் அவுட் / குட் நைட்... இன்னபிற எல்லாமும் மனிதர்களுக்குப் பழகியதைவிட கொசுக்களுக்கு ரொம்பவே பழகிடுச்சு #கொசு புராணம்

-

இதுதான் நான் என இன்னொரு பக்கத்தைக் காட்டிக் கொள்ளாதது சில இடங்களில் வீரம், பல இடங்களில் கோழைத்தனம்! 

-

தேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே - கருணாநிதி # அதிமுக, மதிமுவில் திமுக இல்லை போல. கேப்டன் மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்! :)

-

ஒருவரைக் கூடுதலாய் பிடிப்பதாலேயே சில நேரங்களில் அவர்களின் செயல்களைப் புரிந்து கொள்கிறோம், பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை!

-

சமீப ஆண்டுகளில் காட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் மனிதர்களை விட, நாட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் பாகன்களே அதிகம்!

-

”ம்ம்ம்..... நம்பிட்ட்ட்ட்ட்டேன்” என அழுத்தமாக வரும் பதிலே சொல்கிறது நம்பவில்லை என்பதை!

-

மரணத்திற்கு நிகரான துன்பத்தை, மரணத்திற்கு முன்பே உணர்ந்திட வாழ்க்கை பல வாய்ப்புகளைத் தருகின்றது

-

காலையில் முகம் கழுவாமல் முன்னே வரும் பெண்.. அழகு...! பேரழகு...!!

-

புறக்கணிப்பைவிட பெருங்கொடுமை புறக்கணிப்பு புரியாதிருத்தல்!

*

Feb 7, 2013

நாம் எனப்படும் நானும் நீங்களும்




என்
ஒரு படம்
பிடிக்கவில்லை
என்கிறீர்கள்,
ஒரு படம்
பிடித்துள்ளது
என்கிறீர்கள்,
இரண்டிலும்
இருப்பது
நானே என்கிறேன்!


***


கத்தியின்
கூரிய முனைகொண்டு
அழகு எனச்சொல்லி
அவசியம் எனச்சொல்லி
என்னில் மிச்சமிருந்த
குழந்தைத்தனத்தை
மெல்ல மெல்ல
உரித்தெடுத்தெடுத்து
நாகரிகம் எனப்
பெயரிடுகிறீகள்

உதிர்ந்து கிடக்கும்
குழந்தைத் தனத்திற்கு
நான் என்ன பெயரிட!

***

ஒவ்வொரு முறையும்
என்னை மௌனிக்கச்
சொல்கிறீர்கள்

நான்…
சொற்களைக் கொன்று
புதைத்துக் கொண்டிருப்பதை
ஒருபோதும்
அறிய விரும்பாமலே!



-

நன்றி : கல்கி

Feb 5, 2013

”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு - சிவகாசி


இணையத்தில் எழுதத் துவங்கியதின் ஒரு பயனாக சிவகாசி பாரதி இலக்கியச்சங்கமும், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்திய மூன்றாம் மரபு இலக்கிய மாநாட்டில் பங்கேற்பும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.



கடந்த நவம்பரில் ஒருநாள் கவிஞர் திலகபாமா அவர்கள் அழைத்து, இலக்கிய மாநாட்டில் பங்கேற்று ஊடகத் தடங்கள் வகையில் இணைய வலைப்பக்களைப் பயன்படுத்துவது குறித்து உரையாற்ற அழைத்தார். முதலில் நான் அசந்த விசயம் 2013 பிப்ரவரி மாநாட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தேதிகேட்டது. வெறும் 25 நிமிடத்தில் எப்படியாவது வந்து உரையாற்றுங்கள் எனும் நிலையைக் கூட சந்தித்துவிட்டேன். ஆனால் முதன் முதலாக 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு தேதி குறித்த இவர்களின் நீண்ட திட்டமிடலைப் பாராட்டியே தீரவேண்டும்.



அதிகாலையில் சிவகாசியை அடைந்து உறங்கிக் கொண்டிருந்த என்னை அழைப்பு மணி மூலம் முதலில் எழுப்பியது கல்கி உதவியாசிரியர் அமிர்தம் சூர்யா. அரைத்தூக்கத்தில் இருந்த என்னை அந்தக் கோலத்தில் எதிர்பாரா சூர்யா முதலில் தடுமாறிவிட்டு “ஒ… நண்பா நீங்களா!?” என மகிழ்ந்து “ஒரு நிமிடம்” என ஓடிச் சென்று இந்த வார கல்கியில் வந்திருக்கும் கவிதைப் பக்கத்தை மடக்கி கல்கி இதழை என்னிடம் அளித்துச் சென்றார்.




சிறப்பாகத் துவங்கிய காலையில் அங்கேயே உணவுண்டு, ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். விழா அரங்கிற்குச் செல்லும்போதுதான் தென்னக மாநிலங்களிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து வியந்தேன்.


*

முதன்மை விருந்தினர்கள் திரு.மாலன், திரு.பொன்னீலன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீ காளீஸ்வரி தாளாளர் அ.பா.செல்வராஜன், கல்லூரி முதல்வர் முனைவர். ச.கண்மணி ஆகியோர் மேடையில் அமர “மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு துவங்கியது. தமிழ்தாய் வாழ்த்திற்குப் பிறகு ரவி சுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாரதி பாடல் இனிமையாய் அமைந்தது.





கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் திலகபாமா அவர்கள், இரண்டு நாட்களும் ”படைப்புவெளி,, ஊடகத்தடங்கள், விவாதக்களம், கவிதைச் சிந்தனைகள்” என நான்கு பிரிவுகளில் பங்கெடுக்க வந்திருந்த படைப்பாளிகளான பொன்னீலன், ஓவியர் சந்ரு, காவ்யா சண்முகசுந்தரம், மாலன், தமிழச்சி தங்கபாண்டியன், அமிதர்ம் சூர்யா, சோ.தர்மன், முருகபூபதி, பெருகு ராமகிருஷ்ணா(ஆந்திரா), அன்வர் அலி(கேரளா), வே.எழிலரசு, ரவிசுப்பிரமணியம், முருகபூபதி, டோரதி, இராஜேஸ்வரி, ஆர்த்தி(கர்நாடகா), கிருஷ்ணப்ப்ரியா, வைகைச்செல்வி, மதுமிதா, பத்மஜா, தமிழரசி, உமாராவ் ஆகியோர் படைப்பாளிகள் படம் மற்றும் விபரங்களோடு அரங்கிற்கு அறிமுகப்படுத்தி கௌரவிக்கப்பட்டனர். (இவை என் நினைவில் உள்ள பட்டியல்)






அமிர்தம் சூர்யா அவர்களின் ”வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்” கவிதைத்தொகுப்பை ரவி சுப்ரமணியம் அவர்கள் வெளியிட தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார். வைக செல்வி அவர்களின் Echo of Nature புத்தகத்தை ”காவ்யா” சண்முகசுந்தரம் வெளியிட பெருகு ராமகிருஷ்ணா பெற்றுக்கொண்டார்.



கல்லூரி தாளாளர் வாழ்த்துரை வழங்குகையில் தமிழகத்தில் தமிழைப் பயன்படுத்தக்கூட தயங்குகிறோம் எனும் கருத்தை முன்வைத்தார்.



அடுத்து வாழ்த்துரை வழங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் உலகத்தில் ஒரு உயர்ந்த மொழியாக தமிழ் பாவிக்கப்பட்டிருந்ததை கோடிட்டுக் காட்டினார். குறுகிய நேரத்தில் மிக நேர்த்தியானதொரு உரையை தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினார்.



மிக யதார்த்தாமான உரையை வழங்கிய பொன்னீலன், எல்லா மொழியும் உயர்ந்ததுதான், தமிழைத் தமிழாகப் பேசுங்கள், ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசுங்கள், ஒன்றை இன்னொன்றோடு கலந்து கொச்சைப்படுத்த வேண்டாம் எனும் கருத்தை அற்புதமாக வழங்கினார்.



துவக்கவிழாப் பேருரையாற்ற வந்த மாலன் அவர்கள் மாணவர்களுக்கு குறிப்பெடுக்க ஏதுவாக, உரைக் குறிப்புகளை LCD திரையிலும் அளிக்கும் வகையில் தயாரித்து அளித்தார். மூன்றாம் மரபு பெயர் உருவானதிலிருந்து, மூன்றாம் மரபு குறித்து ஆழமானதொரு உரையை அளித்தவிதம் மிகச் சிறப்புடையதாக இருந்தது.



அதைத் தொடர்ந்து ஜெர்மனியிலிருக்கும் சுசீந்திரன் அவர்களோடு SKYPE வழியே கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஈழம் குறித்து போருக்கு பிந்தைய படைப்புகளின் நம்பகத்தன்மை குறித்தும் பலவிதங்களில் கேள்வி விவாதம் என நகர்ந்தது.





அதையடுத்து மதியம் நான்கு அரங்குகளில் பலதரப்பட்ட படைப்புகள் குறித்த விவாதங்கள், கருத்துரையாடகள் நடைபெற்றன.



நான் தமிழ் இளங்கலை, முதுகலை மாணவர்களிடம், தங்கள் படைப்புத் திறன்களை உலகம் முழுமைக்கு எளிதில் எடுத்துச் செல்லும் ஊடகமாக வலைப்பக்கம் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்து உரையாற்றினேன்.



நிகழ்ச்சி 05.02.2013 செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. என்னால் ஒரு நாள் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்வு குறித்த படங்களும், விபரங்களும் மாநாட்டு அமைப்பாளர்கள் மூலம் அறியவரும் என நம்புகிறேன்



*



இந்த இலக்கிய மாநாட்டின் வெற்றி என்பது ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி நிர்வாகத்தையும் பாரதி இலக்கியச் சங்கத்தைச் சார்ந்த கவிஞர். திலகபாமா அவர்களையுமே சாரும்! குறிப்பாக திலகபாமா அவர்களின் உழைப்பும், அர்பணிப்புத் தன்மையும் கண்டு மனமகிழ்ந்து போனேன். நான்கு மாநிலங்களிலிருந்து இத்தனை பேரை அழைத்து, அனைவரையும் சிறப்புறக் கவனித்து அனுப்ப திறமை வேண்டும் என்பதையும்விட மிக உன்னதமான மனது அவரிடமிருக்கின்றது.



மூத்த மற்றும் பலதரப்பட்ட படைப்பாளிகளைச் சந்திக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த நிகழ்வு எனக்கு அமைந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியின் முடிவில், கழுகுமலைக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சென்றுவரலாம் என அழைத்துச் சென்றனர். குறைந்த நேரமே இருந்தால் எங்களால் கழுகுமலையில் அதிக நேரம் செலவிடமுடியவில்லை என்றாலும் அங்கு கண்ட வெட்டுவான் குகைக் கோவிலும், அங்கிருக்கும் சமணர் படுகையும் காணத்தகுந்த ஒரு அதிசயம். தொல்லியல் துறையில் பணியாற்றும் ஓவியர் திரு.சந்ரு அவர்களின் நண்பரை அலைபேசி வாயிலாக அழைத்து, வெட்டுவான்கோவில், சமணர் படுகை குறித்து மிக நீண்ட, தெளிவானதொரு விளக்கத்தைக் கேட்டறிந்தோம்.



அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கான பயணம், வாகனத்தில் இருந்த ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இருந்த குழந்தைத் தனத்தை வெளிக்கொணர்ந்த தருணம் என்றே சொல்லலாம். குறிப்பாக தாரா முரளி என்ற நாட்டுப்புறக் கலைஞனின் பாட்டும் இசையும், அவரோடு மற்றவர்களும் என வாகனம் முழுக்க குதூகலம் நிரம்பித்தளும்பியது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில், அங்கு அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ரத்தினவேல் நடராஜன் அவர்களோடு சில நிமிடச் சந்திப்புகள் என சிவகாசி திரும்பினோம்.




குறிப்பாக, ஓவியர் சந்ரு அவர்களோடு அதிக நேரம் செலவழித்தாலும், அப்போது அவரை அதிகம் அறிந்திருக்கவில்லை. ஊர் திரும்பி இணையத்தில் அவரின் பேட்டி மற்றும் கட்டுரைகளைப் படித்தபோது இப்படி ஒரு மா கலைஞனுடன் என் நிமிடங்கள் கழிந்ததையறிந்து மனம் பூரித்தது. 





என்னைப் பொறுத்தவரையில் எனக்கு இந்த மாநாடும், அதையொட்டி விளைந்த நட்புகளும், புதிய அறிமுகங்களும் என்னை இன்னும் செம்மைப்படுத்திக்கொள்ள முன்னெடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மீண்டும் ஒருமுறை நன்றிகள் திலகபாமா!



-


Feb 1, 2013

ஒரு பாதை இரு பார்வை




நடை பிடித்துப்போன ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களுக்கு ரயிலுக்குச் செல்லும்போது இரவுகளில் முடிந்தவரை நடந்தே செல்வது வாடிக்கை. அது பிடித்தமானதும்கூட.

பகலில் ஓடிய மனிதர்களின் ஓட்டம் மெல்ல அடங்கி, இரவு ஆளுமை செய்யத்தொடங்கும் நேரமது. நள்ளிரவுக்கு சற்று முன்பும் பின்பும் எப்பொழுதுமே நகரம் ஒருவித இயல்புக்கு மீறிய அழகினை தன்மேல் பூசிக்கொள்ளத் தவறுவதில்லை. சமீபத்தில் ரயில் பயணங்கள் ஏதும் அமைவதில்லை என்பதாலேயே இம்மாதிரியான இரவு நடைகளும் வாய்ப்பதில்லை.

அன்றைக்கு கொஞ்சம் வேலை அதிகம். அலுலகத்தின் இரும்பு சுருள் கதவை வேகமாக இழுத்துவிட்டு பூட்டுகளை அமுக்கி பூட்டிய கணம் சர்வ நிச்சயமாக உணர்ந்தேன், சாவிகளை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டேன் என்பதை. அலுவலக சாவிகளோடு, என் பைக் சாவியையும் சேர்த்து!

நேரத்தைப் பார்த்தேன் இரவு 11.34 காட்டியது. எப்பொழுதோ நான் செய்த பாவங்கள் ஒருவிநாடி மின்னல்போல் ஒளிர்ந்து சுட்டுவிட்டு மறைந்தன. வேறு ஏதும் வாய்ப்புகளே இல்லை என்றபோதும் எதாச்சும் வாய்ப்பிருக்கா என யோசித்தேன். மாடிமேல் அலுவலகம் வைத்திருக்கும் நண்பர் ஏற்கனவே சென்றுவிட்டார் எனத் தீர்க்கமாக அறிந்தும் அவர் கதவு திறந்திருக்கிறதா எனப் பார்த்தேன். எல்லாவற்றையும் விட முட்டாள்தனமாக பூட்டிய பூட்டுகளை ஒருவேளை திறக்குமோ என இழுத்தும் பார்த்தேன்.

யாரையாவது போனில் அழைக்கலாமா என யோசித்தபோதே, ”ஓ… நடக்க மாட்டீங்ளோ?” என மனசாட்சி கேட்டது.

பல ஆண்டுகளாக தினம்தினம் வந்துபோன சாலையில் அன்றுதான் முதன்முறையாக நடுநிசியில் நடக்க ஆரம்பித்தேன். பாதையின் ஒவ்வொரு தப்படியும் வித்தியாசமாகத் தோன்றியது. அடிக்கடி தேடி ரசிக்கும் நிலா அன்று எனக்கு தரிசனம் கொடுக்கவில்லை.

ஒரு இருநூறு மீட்டர் தூரம் கடந்திருப்பேன். இருள் நிரம்பிக் கிடந்தது. ”ஓ… இந்த ஏரியா பவர் கட் 11-12 போல எனத்தோன்றியது” மின்சாரம் தொலையும் இரவுகள் வெகுசீக்கிரத்தில் பழகிப்போய்விட்டன. கனிசமாக பனி பொழிந்துகொண்டிருந்தது. சில வீடுகளில் மனிதர்கள் வாசற்படியில் முக்காடிட்டவாறு அமர்ந்திருந்தனர். வீதிமுழுக்க இருள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஏதாவது வீட்டின் சன்னலில் கசியும் வெளிச்சத்தில் மட்டும் அவ்வப்போது மிகச் சிறிய அளவிற்குக் கலைந்தது.

இத்தனை ஆண்டுகளாய் வந்துபோன வீதிகளில் இத்தனைவித வீடுகள் இருக்கின்றதா எனும் ஆச்சரியமும் தோன்றியது. பழைய தினமலர், ஜெகநாதபுரம் காலணி, உழவன் நகர் எனக் கடந்து கம்பர் வீதியின் குறுகிய திருப்பத்தில் நுழைந்தபோது நாய் ஒன்று ஓங்கிய குரலில் குரைக்கத் தொடங்கியது. கணீரென்று ஒலிக்கும் குரல் அக்கம்பக்கத்து நாய்களுக்கெல்லாம் உடனே தொத்திக்கொண்டது. ஒன்றாய் ஓங்கிய குரலில் குரைக்கத் துவங்க, மனிதர்களற்ற அந்த இருள் வீதியின் மையத்தில் ஒரு அடர்ந்த கானகத்தை கற்பனை செய்யத்துவங்கினேன். குரைக்கின்ற நாய் கடிக்காது எனும் பழமொழி, பேருந்து பெயர்ப்பலகையில் நகரும் LED எழுத்துக்களாக சிந்தையில் மெல்லிய நடுக்கத்தோடு நகர்ந்தோடியது. நாய்களின் குரைப்பைக் கடந்து நடை வேகத்தைக் கொஞ்சம் கூட்டினேன்.

சட்டைப்பையில் இருந்த கைபேசி லேசாகத் முனகியது. குறுந்தகவல். ”Morning Walking?” என நண்பரிடமிருந்து. “Now Going” எனப் பதிலளித்தேன். மிக நிச்சயமாக அதிர்ச்சியடைந்திருப்பார். அந்த அதிர்ச்சி குறித்து என் இதழில் குறுஞ்சிரிப்பு வழிவதை நானே உணர்ந்தேன். அடுத்த சில விநாடிகளில் ”Now??????? Why???” என வந்ததிலேயே அதில் இருக்கும் பதட்டமும் ஆர்வமும் புரிந்தது. “Tell u tomo” எனப் பதில் அளித்துவிட்டு நாளைக்கு இதற்கு எப்படி கதை, திரைக்கதை அனுப்பலாம் என யோசிக்கத் துவங்கினேன். இப்போது நடந்துவிட்டதால் காலை வாக்கிங் போகவேண்டியதில்லை என்பதே கொஞ்சம் குதூகலத்தைத் தந்தது.

*

இந்த புத்தாண்டு இரவில் 12 மணி வரை புத்தாண்டை வரவேற்க கண் விழிக்காமல் உறக்கத்தை அணைத்ததால், விடியல் உறக்கத்தைப் புறந்தள்ளி வெகு எளிதாக என்னைச் சூழ்ந்தது. மிகச் சுறுசுறுப்பாகக் கிளம்பி நடையை விரைவாக எட்டிப்போடத் துவங்கியபோது காலை 5.15. ஒரு வாரம் முன்பு கட்டாயத்தின் பேரில் நடந்த அதே பாதையை இந்த இளம்காலை நேரத்தில் விருப்பத்தின் பேரில் நடந்து அளக்கலாம் என்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.

கம்பர் வீதியின் முடிவில் அன்றைய இரவில் அநியாயத்துக்கு குலைத்த அந்த நாய்களில் நான்கைந்து சாலை ஓரமாக சுருண்டு படுத்திருந்த காட்சி ஒரு ஓவியம்போல் தெரிந்தது. பெரும்பாலான வீட்டு வாசல்களில் விதவிதமான கோலமும், கோலத்தின் மேல் பகுதியில் அரைவட்டமாக Happy New Year என கோணல்மாணலாக கோலமிடப்பட்டிருந்தது.

ஒரு புத்தாண்டை மனிதர்கள் எத்தனையெத்தனை விதமாக கொண்டாடுகிறார்கள் என மனது அசைபோடத் தொடங்கியது. அடுத்த நாளுக்காக முந்தையை இரவே ஊரடங்கிய நேரத்தில் கூடுதலாய் கண் விழித்து கோலமிட்டவர்கள், இந்த அதிகாலையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. நீண்ட வீதியின் மையத்தில் மிகப் பெரிய எழுத்தில் சுண்ணாம்பாலும் எழுதப்பட்டிருந்தது. வாசலில் கோலமிட்டு வாழ்த்துக் கோலமிட்டவர்கள் யாரை நினைத்து கோலமிட்டிருப்பார்கள்?.

சிலரை மனதில்கொண்டு சிலர் கோலமிட்டோ, எழுதியோ இருக்கலாம். பலர் உற்சாகத்தில் ஏதாவது செய்ய வேண்டுமேயென எழுதியும் கோலமிட்டும் இருக்கலாம். அந்த தினத்தின் முன்பாதி நேரத்தில் அந்த வாழ்த்துகளை நூறு அல்லது ஆயிரம் விழிகள் வருடிச்செல்லலாம். ஆனால் விடியும் தருணத்தில் அவ்வளவு தொலைவிற்கு விதவிதமான வாழ்த்துகளை வருடும் கொஞ்சம் விழிகளில் என் விழிகளும் என்பது கூடுதல் இறுமாப்பைக் கொடுத்தது.

நடையை எட்டிப்போட ஆரம்பித்தேன். கட்டாயத்தின் பேரில் முன்பொரு நடுநிசியில் முனகலோடு நடந்து எட்டிய தொலைவினை அந்தக் காலையில் உற்காசமாகத் தீர்க்கத் துவங்கினேன். நால்ரோடு சந்திப்பு வரை நடந்து திரும்பும்போது கவனமாக இன்னொரு வழியைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.

கடந்து போகும் அந்த வீதிகளிலும் விதவிதமான கோலங்கள், வாழ்த்துகள் என எந்த ஆண்டும் இதுவரைக் காணாத அளவில் கண்களினூடே மனதில் நிரப்பிக்கொண்டே வந்தேன்.

*

ஒரே செயலை கட்டாயத்தின்பேரிலும், விருப்பின்பேரிலும் வேறுவேறு மாதிரி அணுகுவதிலிருந்து, இந்த மனது எப்போது மாறத்துவங்கும் என்பதுதான் இப்போதை மிகப்பெரிய சிந்தனைக் குடைச்சலாக இருக்கின்றது.

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...