நடை பிடித்துப்போன ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களுக்கு ரயிலுக்குச் செல்லும்போது இரவுகளில் முடிந்தவரை நடந்தே செல்வது வாடிக்கை. அது பிடித்தமானதும்கூட.
பகலில் ஓடிய மனிதர்களின் ஓட்டம் மெல்ல அடங்கி,
இரவு ஆளுமை செய்யத்தொடங்கும் நேரமது. நள்ளிரவுக்கு சற்று முன்பும் பின்பும் எப்பொழுதுமே
நகரம் ஒருவித இயல்புக்கு மீறிய அழகினை தன்மேல் பூசிக்கொள்ளத் தவறுவதில்லை. சமீபத்தில்
ரயில் பயணங்கள் ஏதும் அமைவதில்லை என்பதாலேயே இம்மாதிரியான இரவு நடைகளும் வாய்ப்பதில்லை.
அன்றைக்கு கொஞ்சம் வேலை அதிகம். அலுலகத்தின்
இரும்பு சுருள் கதவை வேகமாக இழுத்துவிட்டு பூட்டுகளை அமுக்கி பூட்டிய கணம் சர்வ நிச்சயமாக
உணர்ந்தேன், சாவிகளை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டேன் என்பதை. அலுவலக சாவிகளோடு, என்
பைக் சாவியையும் சேர்த்து!
நேரத்தைப் பார்த்தேன் இரவு 11.34 காட்டியது.
எப்பொழுதோ நான் செய்த பாவங்கள் ஒருவிநாடி மின்னல்போல் ஒளிர்ந்து சுட்டுவிட்டு மறைந்தன.
வேறு ஏதும் வாய்ப்புகளே இல்லை என்றபோதும் எதாச்சும் வாய்ப்பிருக்கா என யோசித்தேன்.
மாடிமேல் அலுவலகம் வைத்திருக்கும் நண்பர் ஏற்கனவே சென்றுவிட்டார் எனத் தீர்க்கமாக அறிந்தும்
அவர் கதவு திறந்திருக்கிறதா எனப் பார்த்தேன். எல்லாவற்றையும் விட முட்டாள்தனமாக பூட்டிய
பூட்டுகளை ஒருவேளை திறக்குமோ என இழுத்தும் பார்த்தேன்.
யாரையாவது போனில் அழைக்கலாமா என யோசித்தபோதே,
”ஓ… நடக்க மாட்டீங்ளோ?” என மனசாட்சி கேட்டது.
பல ஆண்டுகளாக தினம்தினம் வந்துபோன சாலையில்
அன்றுதான் முதன்முறையாக நடுநிசியில் நடக்க ஆரம்பித்தேன். பாதையின் ஒவ்வொரு தப்படியும்
வித்தியாசமாகத் தோன்றியது. அடிக்கடி தேடி ரசிக்கும் நிலா அன்று எனக்கு தரிசனம் கொடுக்கவில்லை.
ஒரு இருநூறு மீட்டர் தூரம் கடந்திருப்பேன்.
இருள் நிரம்பிக் கிடந்தது. ”ஓ… இந்த ஏரியா பவர் கட் 11-12 போல எனத்தோன்றியது” மின்சாரம்
தொலையும் இரவுகள் வெகுசீக்கிரத்தில் பழகிப்போய்விட்டன. கனிசமாக பனி பொழிந்துகொண்டிருந்தது.
சில வீடுகளில் மனிதர்கள் வாசற்படியில் முக்காடிட்டவாறு அமர்ந்திருந்தனர். வீதிமுழுக்க
இருள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஏதாவது வீட்டின் சன்னலில் கசியும் வெளிச்சத்தில்
மட்டும் அவ்வப்போது மிகச் சிறிய அளவிற்குக் கலைந்தது.
இத்தனை ஆண்டுகளாய் வந்துபோன வீதிகளில் இத்தனைவித
வீடுகள் இருக்கின்றதா எனும் ஆச்சரியமும் தோன்றியது. பழைய தினமலர், ஜெகநாதபுரம் காலணி,
உழவன் நகர் எனக் கடந்து கம்பர் வீதியின் குறுகிய திருப்பத்தில் நுழைந்தபோது நாய் ஒன்று
ஓங்கிய குரலில் குரைக்கத் தொடங்கியது. கணீரென்று ஒலிக்கும் குரல் அக்கம்பக்கத்து நாய்களுக்கெல்லாம்
உடனே தொத்திக்கொண்டது. ஒன்றாய் ஓங்கிய குரலில் குரைக்கத் துவங்க, மனிதர்களற்ற அந்த
இருள் வீதியின் மையத்தில் ஒரு அடர்ந்த கானகத்தை கற்பனை செய்யத்துவங்கினேன். குரைக்கின்ற
நாய் கடிக்காது எனும் பழமொழி, பேருந்து பெயர்ப்பலகையில் நகரும் LED எழுத்துக்களாக சிந்தையில்
மெல்லிய நடுக்கத்தோடு நகர்ந்தோடியது. நாய்களின் குரைப்பைக் கடந்து நடை வேகத்தைக் கொஞ்சம்
கூட்டினேன்.
சட்டைப்பையில் இருந்த கைபேசி லேசாகத் முனகியது.
குறுந்தகவல். ”Morning Walking?” என நண்பரிடமிருந்து. “Now Going” எனப் பதிலளித்தேன்.
மிக நிச்சயமாக அதிர்ச்சியடைந்திருப்பார். அந்த அதிர்ச்சி குறித்து என் இதழில் குறுஞ்சிரிப்பு
வழிவதை நானே உணர்ந்தேன். அடுத்த சில விநாடிகளில் ”Now??????? Why???” என வந்ததிலேயே
அதில் இருக்கும் பதட்டமும் ஆர்வமும் புரிந்தது. “Tell u tomo” எனப் பதில் அளித்துவிட்டு
நாளைக்கு இதற்கு எப்படி கதை, திரைக்கதை அனுப்பலாம் என யோசிக்கத் துவங்கினேன். இப்போது
நடந்துவிட்டதால் காலை வாக்கிங் போகவேண்டியதில்லை என்பதே கொஞ்சம் குதூகலத்தைத் தந்தது.
*
இந்த புத்தாண்டு இரவில் 12 மணி வரை புத்தாண்டை
வரவேற்க கண் விழிக்காமல் உறக்கத்தை அணைத்ததால், விடியல் உறக்கத்தைப் புறந்தள்ளி வெகு
எளிதாக என்னைச் சூழ்ந்தது. மிகச் சுறுசுறுப்பாகக் கிளம்பி நடையை விரைவாக எட்டிப்போடத்
துவங்கியபோது காலை 5.15. ஒரு வாரம் முன்பு கட்டாயத்தின் பேரில் நடந்த அதே பாதையை இந்த
இளம்காலை நேரத்தில் விருப்பத்தின் பேரில் நடந்து அளக்கலாம் என்பது கூடுதல் உற்சாகத்தைத்
தந்தது.
கம்பர் வீதியின் முடிவில் அன்றைய இரவில் அநியாயத்துக்கு
குலைத்த அந்த நாய்களில் நான்கைந்து சாலை ஓரமாக சுருண்டு படுத்திருந்த காட்சி ஒரு ஓவியம்போல்
தெரிந்தது. பெரும்பாலான வீட்டு வாசல்களில் விதவிதமான கோலமும், கோலத்தின் மேல் பகுதியில்
அரைவட்டமாக Happy New Year என கோணல்மாணலாக கோலமிடப்பட்டிருந்தது.
ஒரு புத்தாண்டை மனிதர்கள் எத்தனையெத்தனை விதமாக
கொண்டாடுகிறார்கள் என மனது அசைபோடத் தொடங்கியது. அடுத்த நாளுக்காக முந்தையை இரவே ஊரடங்கிய
நேரத்தில் கூடுதலாய் கண் விழித்து கோலமிட்டவர்கள், இந்த அதிகாலையில் ஆழ்ந்து உறங்கிக்
கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. நீண்ட வீதியின் மையத்தில் மிகப் பெரிய எழுத்தில் சுண்ணாம்பாலும்
எழுதப்பட்டிருந்தது. வாசலில் கோலமிட்டு வாழ்த்துக் கோலமிட்டவர்கள் யாரை நினைத்து கோலமிட்டிருப்பார்கள்?.
சிலரை மனதில்கொண்டு சிலர் கோலமிட்டோ, எழுதியோ
இருக்கலாம். பலர் உற்சாகத்தில் ஏதாவது செய்ய வேண்டுமேயென எழுதியும் கோலமிட்டும் இருக்கலாம்.
அந்த தினத்தின் முன்பாதி நேரத்தில் அந்த வாழ்த்துகளை நூறு அல்லது ஆயிரம் விழிகள் வருடிச்செல்லலாம்.
ஆனால் விடியும் தருணத்தில் அவ்வளவு தொலைவிற்கு விதவிதமான வாழ்த்துகளை வருடும் கொஞ்சம்
விழிகளில் என் விழிகளும் என்பது கூடுதல் இறுமாப்பைக் கொடுத்தது.
நடையை எட்டிப்போட ஆரம்பித்தேன். கட்டாயத்தின்
பேரில் முன்பொரு நடுநிசியில் முனகலோடு நடந்து எட்டிய தொலைவினை அந்தக் காலையில் உற்காசமாகத்
தீர்க்கத் துவங்கினேன். நால்ரோடு சந்திப்பு வரை நடந்து திரும்பும்போது கவனமாக இன்னொரு
வழியைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.
கடந்து போகும் அந்த வீதிகளிலும் விதவிதமான
கோலங்கள், வாழ்த்துகள் என எந்த ஆண்டும் இதுவரைக் காணாத அளவில் கண்களினூடே மனதில் நிரப்பிக்கொண்டே
வந்தேன்.
*
ஒரே செயலை கட்டாயத்தின்பேரிலும், விருப்பின்பேரிலும்
வேறுவேறு மாதிரி அணுகுவதிலிருந்து, இந்த மனது எப்போது மாறத்துவங்கும் என்பதுதான் இப்போதை
மிகப்பெரிய சிந்தனைக் குடைச்சலாக இருக்கின்றது.
-
9 comments:
விருப்பத்தின் பேரில் வாசித்தேன்... குதூகலமாய் நடையிட்டுக் கடந்தேன். மனத்தின் மடைமாற்றி வாசிக்கையில், நடை எல்லாம் ஒரு எழுதுபொருளா என்று சொன்னது மனம். மீண்டும் மனம் மாற்றினேன், அந்த நாய்களும் அதன் செய்கைகளும் கள்ளமில்லா உறவினைக் கசிந்து கொள்வதை உணர்ந்தேன். கசிவது, உள்ளங்கசிவதும் நுண்ணிய இன்பமென உணர்ந்தேன்.
ஆக, பழகிக்கொள்வோமாக! மடைமாற்றிப் பழகிக் கொள்வோமாக!! வாழ்க்கை வசப்படும்!!!
அழகிய எதார்த்த நடை!
திடீரென ஒருநாளில் நடைப் பயிற்சியைத் தொடங்கிய ஒரு நாளில் இதில் இவ்வளவு ஆனந்தமா என நினைத்து வியந்து கொண்டே நடந்தேன்!!
வாழ்க்கை ஸ்டேடஸ்களாலானது:))
கூடவே உங்களுடன் நடந்தது போல் இருந்தது.
இரண்டாவது காட்சி படம் பார்த்துவிட்டு ஈரோட்டில் இருந்து 15 கி.மி. தூரத்தில் உள்ள எனது கிராமத்திற்கு நண்பர்களிடம் சவால் விட்டு நடந்து போனது, குறுக்கு வழியாக முத்தம்பாளையம் மேட்டில் உள்ள கிளை வாய்க்கால் வழியாக சென்ற போது பால்கறக்க சென்ற நபரின் பின்னால் நான்கடி தூரத்தில் சத்தமில்லாமல் அவர் காலடிக்கேற்ப நடந்து அவர் வேறு வழியில் செல்லும்வரை தொடர்ந்தது, அப்போது தாகத்தால் இருட்டில் படியில்லாத கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றது, உங்கள் பதிவின் மூலம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆமாம் சாவிக்கு என்ன செய்தீர்கள்.
அருமையான நடை.கூடவே வந்தது போல ஒரு தோற்றம்.நியூ இயர் கோலங்கள் மனக்கண்ணில் ..அருமை.இரவில் வேறு தோற்றம் தரும் நம் சுற்றுபுறங்கள் என்றாவது ஒரு நாள் காணும்போது புதிதாக உணர்வோம்.நல்ல வாசிப்பு அனுபவம் கொடுத்தமைக்கு நன்றி.
அன்பின் கதிர் - எளிய நடையில் ஒரு வேறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளை - இரு வேறு மன நிலையில் நிக்ழ்த்தும் போது - ஒன்று கட்டாயத்தினாலும் மற்றது விருப்பத்தினாலும் - மனம் மூன்றாவதாக இரண்டினையும் ஒப்பு நோக்கி மகிழும் போது - அட்டா - என்ன அருமையான பதிவு உருவாகிறது ? சாவியினை மறந்த ஒரு தவறினால் ஏற்பட்ட அழகான பதிவு. இரசித்துப் படித்தேன் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா
night is very beauty
Post a Comment