Showing posts with label உரை. Show all posts
Showing posts with label உரை. Show all posts

Jan 17, 2020

HR Role in Disruptive Technological Environment


பற்பல சவால்கள் முன் நிற்கும் தொழில்நுட்ப சூழலில் நிறுவனங்களில் மனிதவளத்துறையின் பங்கு. (HR Role in Disruptive Technological Environment).

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) Confederation of Indian Industry (CII) ஈரோடு அமைப்பில் இணைந்திருக்கும் நிறுவனங்களின் மனிதவளத் துறையினருக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எல்லைகளுக்கு சவால் விடுவோம் எனும் தலைப்பில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன். தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியகள் மத்தியில் இயங்கிக் கொண்டிருந்த எனக்கும், இம்மாதிரியான ஒரு கூட்டம் தேவைப்பட்டது. நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் MBA மாணவர்கள் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் உரையாற்ற ஒப்புக்கொண்டதில் இருந்து எனக்குள் கனத்துக் கொண்டிருந்த முதல் சவால் ஈரோட்டில் பேச வேண்டும் என்பதுதான். எனினும் CEO / HR என்பதால் என் தயாரிப்பில் அதீத கவனம் செலுத்திக் கொண்டேயிருந்தேன்.

துவக்கவிழாவிற்கு பிறகு 11.30 மணிக்கு தொடங்கும் முதல் அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நான் செல்லும்போது துவக்கவிழா நடந்து கொண்டிருந்தது. URC தேவராஜன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈரோடு குறித்தும், இங்கு நிறுவனங்கள் வளர வேண்டிய தேவை மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார்.

துவக்க விழா நிறைந்தவுடன் தேநீர் இடைவேளை விடப்பட்டது. பங்கேற்பாளர்களை நோக்கினால் கணிசமாக நண்பர்கள். அதுவும் 10-20 வருடங்களாகப் பழகி வருகின்றவர்கள். இன்ப அதிர்ச்சியின் உட்சபட்சமாக என் எதிர் வீட்டுக்காரரும் பங்கேற்பாளராய். உள்ளூர் என்பதுதான் சவால் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நெருக்கமாய் பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாக அறிந்து பழகியவர்கள் என்பது கடும் சவாலாய் மாறிப்போனது.

முதலில் கூறப்பட்டதுபோல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மனிதவளத்துறை அதிகாரிகள் மட்டுமில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இளம் தொழில்முனைவோர், பள்ளி ஆசிரியர்கள், நிறுவனப் பணியாளர்கள், பயிற்சியாளர்கள் என்றிருந்தவர்களை மனதில் நிறுத்தி தயாரிப்பில் இருந்த பலவற்றை மாற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்குமான உரையாக மாற்றிக் கொண்டேன். என்னுடைய அமர்விற்கு திரு.ரமேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

*


Disruptive Technological Environment என்பதை நேரடியாக பொருள் கொண்டால், நிலை குலையச் செய்யும் தொழில்நுட்ப சூழல் என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது. Disruptive என்கின்ற சொல்லுக்கு நிலை குலைதல் / சீர் குலைதல் என நேரடிப் பொருள் கொள்ளாமல், நேர்மறையாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது காரணம், அதைத் தவிர்க்க முடியாது. அது நமக்கு ஏராளமான எளிமைகளைக் கொண்டு வந்திருக்கின்றது.

‘Disruptive தொழில்நுட்பம்என்பது புதிதாக அறிமுகமாகும் ஒன்று. யாருக்கும் போட்டியாக வராது. ஏற்கனவே இருப்பவற்றின் ஒரு மாதிரியாக எளிமைப்படுத்துவதற்காக வரும். தனக்கென்று பிரத்யேக வழிமுறைகள், செயல்திட்டங்கள் வைத்திருக்கும். திடீரென பிரமாண்டம் காட்டும், ஒருகட்டத்தில் ஏற்கனவே ஆழமாய் காலூன்றி, தவிர்க்க முடியாததாக இருந்த அனைத்தையும் தகர்த்து, தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ளும். இதை வாசிக்கும்போதே அப்படி எளிமையாக, புதுமையாக வந்து ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்த தொழில்கள், தொழில் நுட்ப கருவிகள் மனதிற்குள் நிழலாடுமே.

உதாரணத்திற்கு செல்போன் மற்றும் கிண்டில் மின் நூல் வாசிப்பை மட்டும் குறிப்பிட்டேன்.

ஒரு புத்தகத்தை வாசிக்க, எங்கோ ஒரு மரம் வெட்டப்பட்டிருக்க வேண்டும். வெட்டுக்கூலி, குத்தகை கொடுக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு, காகித ஆலைக்கு வந்து, அங்கு பலரிடம் பல கட்ட வேலைக்காரர்களிடம் வேலை வாங்கி, வெளுக்கப்பட்டு காகிதமாக மாறி, லாரியில் ஏறி பல நிலைகள் மாறி கடைக்கு வந்து, அச்சகத்துக்கு வந்தடையும் காகிதம்தான் புத்தகத்தின் மூலம். அடுத்து அந்தப் புத்தகத்தை வடிவமைத்த பிறகு, அச்சிடுவதற்கு ஃப்லிம்-ப்ளேட் என்ற நிலைகள் உண்டு. அச்சகம் எனும் மிகப்பெரிய, நவீன வசதி தேவை. காகிதம் வந்தது போலவே, அச்சிடும் மை வந்தடையும் வரலாறும் நீளமானது. எல்லாம் இணைந்து அச்சகத்தில் அச்சிட்டு, பைண்டிங் யூனிட்டில் மடித்து, தைத்து / ஒட்டி, கத்தரித்து, கடைகளுக்கு அனுப்பி, அங்கிருந்து ஒரு வாசகனை சென்றடைவது என்பது மிகப் பெரிய உழைப்பு மற்றும் பணம் உள்ளிட்ட பல்வேறு செலவு, செயல்களை உள்ளடக்கியது. இதே புத்தகத்தை மின்-புத்தகமாக நாம் வாசிப்பதன் பின்னே, வடிவமைப்புக்கான உழைப்பு தவிர அத்தனையும் தேவையற்றதாகிவிடுகிறது. அச்சு ஊடகத்தின் எதிரியாக மின் நூல் வரவில்லை. இதுவொரு புது வாய்ப்பாக, வித்தியாசமாக வந்தது. எளிமையானதாக இருந்தது. ஒருகட்டத்தில் மேலே குறிப்பிட்டவற்றில் 90 சதவிகத உழைப்பு, செயல்களை தகர்த்து வருகிறது. இன்னும் தகர்க்கும். இதுதான் Disruptive Technological Environment. இதை நாம் எதிர்க்க முடியாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முழுக்க வந்துவிடுமா? தெரியாது. ஆனால் இதன் வளர்ச்சியை தடுக்க முடியாது. தடுப்பது அறமும் அன்று. இது கபளீகரம் செய்யும் இடத்தில் நாம் இருந்தால், இதனைச் சமாளிக்க நாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? இதேபோல் செல்போன் உதாரணத்தையும் விரிவாகப் பகிர்ந்திருந்தேன். இந்த 20 ஆண்டுகளில் செல்போன் மட்டும் குறைந்தபட்சம் 25 வகைப் பொருட்களை இல்லாமல் ஆக்கியிருக்கின்றது. இதுவும் தவிர்க்க முடியாது.



இப்படியான போட்டியாகத் தெரியாத ஒரு நவீனம் மிகப் பெரிய போட்டியாக வரும் சூழலில் நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டியவற்றில் மனிதவளத் துறை சார்ந்து நான் எடுத்துக்கொண்ட மூன்று புள்ளிகள்.

1. ஆட்கள் நியமனத்தில் மாற்றம்
2. பணியில் இருக்கும் மூத்தவர்களை நிர்வகிப்பது.
3. கட்டாய அலுவலகப் பணி எனும் வழக்கத்தை கேள்விக்குட்படுத்துவது
...ஆகியவை குறித்து விரிவாகப் பேசினேன். நிறுவனத்தில் அதிகாரம் செலுத்தக்கூடிய மனிதவளத்துறை அதிகாரிகளுக்கு இவை யோசிக்க வேண்டிய ஒன்றாக அமைந்திருந்திருக்கலாம். சிறு நிறுவனத்தினர், தொழில் முனைவோருக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம் என சொல்லத் தெரியவில்லை.

Disruptive Technological Environment குறித்து மேலும் சிந்திபது மற்றும் அதைச் சமாளிக்க திட்டமிடுவது குறித்து தொடர்ந்து உழைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

Dec 31, 2018

நானும் 2018ம்...

2018ல் மிக முக்கியமான ஒரு காரியம் செய்திருக்கிறேன். சுற்றிலும் நடக்கும் அபத்தம், சகிக்க முடியாத கண்றாவிகளையெல்லாம் பார்த்தவுடன் ஜிவ்வ்வ்வுனு ஒரு கோபம் வரும் தெரியுமா...! அதை எழுதி, பேசி என எதுவும் செய்யாமல், அதற்காகவே இருக்கும் இரண்டு வாட்ஸப் குழுமங்களில் பகிர்ந்துவிட்டு அமைதியாகி விடுகிறேன். அந்த குழுக்களில் தலா 8 மற்றும் 5 பேர் மட்டுமே! குழுமங்களின் பெயரை வெளியில் சொல்வதில் சில சட்டச் சிக்கல்கள் உண்டு என்பதால்.... ஆமாம் அதில் ஒரு வக்கீல் அண்ணன் இருக்கிறார்.
மற்றபடி...
இத்தனை வேகமாய் ஒரு ஆண்டு கடக்குமென்றால் எத்தனை ஆண்டுகளையும் வாழ்ந்து கடக்கலாம் எனத் தோன்றும் ஆண்டு 2018.
2018 என்னளவில் அற்புதமான ஆண்டு...
பேரன்பு தளும்பும் மனிதர்களை இந்த ஆண்டும் இனம் கண்டு கை பற்றிக் கொண்டேன்.
சாலைப் பயணத்தில் அற்புத அனுபவமாக ஒரு நாள், காலை ஈரோட்டில் புறப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்தது என இடை தங்காமல் பயணித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு அனுபவம். அதிலும் அஜந்தா குகை விசிட்...ம்ம்ம்... என்றும் மறக்க முடியா தருணம்.
உடற்பயிற்சியில் 100 நாட்கள் அதிலும் 100வது நாள் 21 கி.மீ ஓடியது கெத்து என்றால், அதன்பின் தொடர்ந்து ஏமாற்றி சோம்பேறியா இருப்பதற்கு என்னை நானே மொத்திக் கொள்ளலாம்.
ஏறத்தாழ 22 ஆண்டுகளாக இருந்த ஒரு துறையிலிருந்து வெளியேறிய திடமான முடிவு ஒன்று எடுத்திருக்கிறேன். அதேபோல் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆர்வம் காட்டிய அமைப்புகளிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறேன்.
எழுத்தில்... புதிய தலைமுறை கல்வியில் 25 வாரங்கள் தொடர் எழுதியது மிக மகிழ்வான பணி. அயல்சினிமா, மின்னம்பலம் என உறவெனும் திரைக்கதையின் அடுத்த பாகத்தை சற்றே மெதுவாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எழுத்தில் இன்னும் சில இலக்குகளை நானே கைவிட்டது குறித்து வெட்கப்படுகிறேன்.
பேச்சு மற்றும் பயிற்சியில் குறிப்பாக இலங்கைக்கு மேற்கொண்ட அனுபவத்தில் என்னை நானே பெருமையாக உணர்ந்தேன். தொடர்ந்து ஐந்து நாட்களில் 9 அமர்வுகளில் ஏறத்தாழ 35 மணி நேரம் பயிற்சியளித்த ஆற்றல் பெரும் தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்கி டிசம்பர் 30 தேதிக்குள்ளாக 102 மேடை மற்றும் அரங்குகளில் பங்கெடுத்திருக்கிறேன். அதன்வாயிலாக ஏறத்தாழ 30,000ற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 22,000+. இதற்காக சுமார் 227 மணி நேரம் பேசியிருக்கிறேன். வெறும் 18 பேர் முதல் 2900 பேர் வரை என இரண்டு எல்லைகளுக்குமான கூட்டத்தை இந்த ஆண்டு சந்தித்தேன். சிறப்பு விருந்தினராகச் சென்று, ஒரு கூட்டத்தில் வெறும் 2 நிமிடம் மட்டுமே பேச வேண்டிய சவாலான அனுபவமும் இந்த ஆண்டில் நிகழ்ந்தது. அந்த சவாலை சரியாக கடந்ததாலே சில கூட்ட வாய்ப்புகள் கிடைத்ததையும் மறுக்க முடியாது.
வாசிப்பு என்று எடுத்துக்கொண்டால்.... @#$%@#%@#$% தட் மீன்ஸ்..... த்த்தூ....த்த்தூ....
இந்த ஆண்டில் வருத்தமானது, துன்பமானது எதுவும் இல்லாமலா இருந்திருக்கும். நான் அதை நினைவில் கொள்ளவோ, மீட்டிப் பார்க்கவோ விரும்புவதில்லை என்பதாலேயே அவற்றில் பகிர எதுவும் இல்லை.
மற்றபடி எங்கள் ஈரோடு வாசல் குழுமத்தில் கணிசமான நேரம் மற்றும் பங்களிப்பை செய்திருக்கிறேன். அதிலிருந்து அற்புதமான பலரை அடையாளம் கண்டது பெருமையளிக்கிறது. ஈரோடு வாசல் தம்மளவில் சமூகத்திற்கான உடனடிப் பங்களிப்பாக கஜா புயல் நிவாரணத்தில் 2.20 லட்சம் ரூபாய்க்கு உணவுப் பொருட்களை வழங்கியிருப்பதில் பெரும் நிறைவு கொள்கிறேன்.
நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் காட்டும் அன்பிற்கு என்ன பிரதியன்பு செலுத்தப்போகிறேன் எனும் வினாக்களோடுதான் எப்போதும் இருக்கிறேன்.
எவர் மீதும் பெரிய புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் வரும், அதுவும் இப்பொழுதெல்லாம் குறைந்து வருகிறது.
இந்த வாழ்வை அதன் இயல்புகளோடு இனிதே வாழ்ந்திடும் கனவு அனுபவமாகவும் தொடர்கிறது. இனியும் தொடரும். இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே..

Mar 15, 2018

ஒரு பேச்சாளனின் டைரிக் குறிப்பு


உங்க ஸ்பீச் கேட்ட அன்னிக்கு ராத்திரி என்னவோ தூக்கமே வரலைங்க. என்னென்னவோ செய்றேன் தூக்கமே வரல. எனக்குத் தெரிஞ்சு அப்படி ஆனதே இல்லை. ஏன் எதுக்குனும் யோசிக்கிறேன். இப்பவரை தெரியல. ஆனா உங்களோட அந்தப் பேச்சு என்னவோ டிஸ்டர்ப் பண்ணிடுச்சுஎன அந்தப் பள்ளியின் தாளாளர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் குறும்புன்னகையோடு மட்டுமே நின்று கொண்டிருந்தேன். உண்மையில் அப்படியான ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் பாராட்டப்பட்ட சூழல் அப்படி.

காலை ஒன்பது மணிக்கு துவங்கி தலா இரண்டரை மணி நேரம் என மூன்று அமர்வுகள் பயிலரங்கை முடித்துவிட்டு நிறைவான மனதோடு தேநீர் அருந்திக்கொண்டிருந்த போதுதான் தாளாளர் அவ்விதம் சொன்னார். அருகிலேயே பள்ளியின் செயலரான அவரின் கணவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்த தருணத்தில்தான் அப்படிச் சொன்னார்.

அவர்களின் பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் என்ன பேசினேன் என்பது நினைவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கலந்திருந்த கூட்டம். பந்தல் போட்டிருந்தார்கள். மாலை நிழலில் பந்தலுக்குள் இருந்தோரை என்னால் இனம் காண முடியவில்லை. ஆசிரியர்கள் எங்கே! பெற்றோர்கள் எங்கே! மாணவர்கள் எங்கே என என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலேயே சற்று யோசித்தபடியே அங்கும் இங்குமாய் மனதால் தாவித்தாவி பேசி முடித்தேன். பொதுவாக இப்படியான கூட்டங்களுக்குச் செல்லும்போது, காத்திருக்கும் நேரத்தில் முன்னதாகவே கூட்டத்திற்குள் ஒருமுறை வலம் வந்து யார் யார் எங்கெங்கே என்பதை அறிந்து சற்று தெளிவாகத் தயாராகிவிடுவேன். அன்றைக்கு அப்படிச் செய்யாமல் பிழை செய்துவிட்டேன். அந்த உறுத்தல், தடுமாற்றம் எனக்கு மட்டுமே உரித்தானது. வெளியில் தெரிய நியாயமில்லை.

நீங்க அன்னிக்கு பேசிட்டிருக்கும்போதே ஸ்டூடன்ஸ்க்கு ஒரு ட்ரெயினிங்க்கு உங்களைக் கூப்பிடனும்னு சார்கிட்டே சொல்லிட்டிருந்தேன்என அருகாமையில் இருக்கும் ஆசிரியரைச் சுட்டினார் செயலர். மனதை சமநிலையில் வைக்க முயற்சித்தபடி செவி கொடுக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்ன பேசினேன் என்ற யோசனையே மனதிற்குள் ஓடியது.

காலையில் எட்டு மணிக்கு பள்ளிக்குள் நுழையும்போதே செயலர் வரவேற்றார். ஆசிரியர்கள் சீருடையில் இருந்தார்கள். அதே சீருடையில் செயலரும். “என்ன சார் நீங்களும் யூனிபார்ம்ல இருக்கீங்க!?”. ”மண்டே மட்டும் டீச்சர்ஸ்க்கு யூனிபார்ம்ங்க. அவங்களுக்கு எடுக்கும்போது எனக்கும் ஒரு செட் எடுத்துடுவாங்க!” எனப் புன்னகைத்தார்.

பள்ளி, கல்லூரி நிகழ்வுகளுக்கு ஒரு பேச்சாளரைத் தீர்மானிப்பதில் இரண்டு மூன்று வகைகள் உண்டு. நாடறிந்த பேச்சாளரை கௌரவத்தின் அடிப்படையில் நிர்வாகம் தீர்மானிக்கும். ஓரளவு கேள்விப்படும், அறியப்படும் பேச்சாளார்கள் முதல்வர்கள், ஆசிரியர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்படும். கல்லூரி நிகழ்வுகளுக்கு சில வேளைகளில் மாணவர்கள் சார்பிலும் தீர்மானிக்கப்படுவதுண்டு. இந்த உரைக்கு நிர்வாகத்தினரின் நண்பரின் வழியாக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன்

பொதுவாக உரைக்கு அழைக்கப்படுவதில், இந்த நிகழ்வுக்கு இந்த உரைதான் வேண்டும், அதற்கு இந்தப் பேச்சாளர்தான் வேண்டும் எனும் தெளிவு அரிதாகவே அமைகின்றன. அப்படியாக ஒரு பேச்சாளன் தெரிவு செய்யப்பட்டு, மேடை வழங்கப்பட்டால், அந்த மேடைக்காக உயிரைக் கொடுத்து உரை தயாரிக்கலாம் என்பதே என் கருத்து. மேடையை நிரப்புவதற்காக சில தருணங்களில் நாம் அழைக்கப்படுவதும், எது வேணாப் பேசுங்க என பணிக்கப்படுவதும் மனதிற்கு அத்தனை உகந்ததாக அமைவதில்லை. ஆனாலும் வளர வேண்டிய தருணத்தில் அவற்றை மறுக்கவும் முடிவதில்லை.

காலையில் தொடங்கி மாலை வரை தாளாளரும், செயலரும் மாறி மாறி பயிலரங்கில் அமர்ந்திருந்தார்கள். முடிந்தவுடன் பயிலரங்கை குறித்துப் பேசுவதை விடுத்து, ஆண்டு விழாவில் பேசிய உரை குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். நான் ஆண்டு விழாவில் பேசிய அடுத்த இரண்டாம் நாள், அதே குழுமத்தின் மற்றொரு பள்ளி ஆண்டு விழாவிற்கு தமிழகத்தின் பெரும் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். தொலைக்காட்சி பிரபலம். சில உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஒன்றோடு ஒன்று கோர்க்கக்கூட முடியாத அரதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளை ஒருவித தொணியில் கோர்த்து தெளிக்கும் அவரின் உரைகள் மீது எந்த ஈர்ப்பும் இல்லை

பேச்சாளர்களில் சிலர் குறித்து விமர்சனங்களும், சிலர் குறித்து அலாதியான மரியாதையும் எனக்கு உண்டு. என்னை யாரோடும் பொருத்திப் பார்க்க மாட்டேன். உண்மையில் எந்தப் பேச்சாளராக இருந்தாலும், அவர்களிடமிருந்து செய்ய வேண்டியது அல்லது செய்யக்கூடாதது என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முயன்று கொண்டேயிருப்பேன்.

நானாக அந்த விழா குறித்துக் கேட்கவில்லை. அவராகவே அந்த விருந்தினர் குறித்துச் சொல்லிவிட்டு, அவருக்கு பதிலா உங்களைக் கூப்பிட்டிருக்கனும்ங்க என்றபோது சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் ன்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன். அந்தப் பாராட்டைம்ம்ம்... நாம யாரு.. கெத்துல்லஎன எடுத்துக்கொள்ளாமல், பாதையில் வலுவாகப் பயணிக்க இன்னும் என்னைத் தயார்படுத்த வேண்டுமெனத் தோன்றியது.



நான் மிகவும் மதிக்கும் பேச்சாளர், எனக்குச் சொன்ன அறிவுரைஎப்போது 100% பயமேயில்லாமல் ஒரு மேடையில் ஏறுகிறோமோ அன்றோடு பேசுவதை விட்டுவிட வேண்டும்என்பதுதான். ஒவ்வொரு மேடைக்கும் சற்று அழுத்தத்தையும் பயத்தையும் என்னோடு வைத்திருப்பதை ஆரோக்கியமாகவே கருதுகிறேன். எங்கேனும் பிடிபட்ட ஒரு உதாரணத்தை, சம்பவத்தை, செய்தியை என் பாணியில் உரையாக மாற்றுவதற்காக சில பல மணி நேரங்கள் யோசித்து, தேடி அதன்பின்பே ஒரு வடிவமாகக் கொள்கிறேன். ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தித்தான் பேச வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறேன். சமீபத்தில்கூட பயிலரங்கில் ஒரு உதாரணத்தை முன் வைப்பதற்காக மட்டும் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் தேடினேன். அந்த வகையில் என் தயாரிப்புகள் மீது எனக்கு பெரும் பிரியம் உண்டு.

மேடையில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டால், அது எனக்கான ஒரு மணி நேரமாகத் தோன்றாது. அரங்கில் ஆயிரம் பேர் இருந்தால் அது ஆயிரம் மணி நேரமாகத் தோன்றும். அந்த ஆயிரம் மணி நேரத்திற்கு நேர்மை செய்ய வேண்டுமெனும் அழுத்தம் எப்போதுமிருக்கும். அதுவே என்னை இயக்குகிறது. உரை என்பது ஒன்றைத் தேடிச் சேகரித்து வந்து கேட்பவரிடம் கடத்தும் காரியம். அதற்கு நியாயம் செய்தே தீர வேண்டும். அந்த நியாத்தில் கேட்போரை குதூகலிக்கச் செய்ய வேண்டும் எனும் சமாதானம் புறந்தள்ளப்பட வேண்டும். ஏதாவது ஒன்றை இடம் பெயர்த்த வேண்டும்.

உரையோ பயிலரங்கோ என்னிடம் கூர்மையாய் இருக்கும் ஒரு நோக்கம், கலந்துகொண்டோரின் உறக்கத்தை அன்றிரவு சில நிமிடங்களுக்கு தள்ளிப் போடவேண்டும் என்பதே. ’என்னவோ அவர் சொன்னாரே!’ எனும் சிந்தனைக்கே அந்த ஓரிரு நிமிடங்கள். பள்ளி விழா உரை குறித்தும், தன் உறக்கமின்மை குறித்தும் சொன்ன பள்ளித் தாளாளரின் பாராட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் பொறுப்போடு, இன்னும் உத்வேகத்தோடு இனி வரும் உரைகளுக்கு தயாரிக்க உழைக்க வேண்டிய அங்கீகாரமாகவும் அதைக் கொள்கிறேன்.

Dec 29, 2017

டிசம்பர் 28 முதல் டிசம்பர் 28 முடிய

உண்மையில் 2017ம் ஆண்டு எனக்கு ஜனவரி 1ம் தேதி துவங்கவில்லை.

2016 டிசம்பர் 28ம் தேதியே எனக்கான ஆண்டு துவங்கிவிட்டது எனச் சொல்லலாம். தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயிரங்கு நடத்திய நிகழ்விலிருந்துதான் பள்ளி மாணவ மாணவியர்களை நோக்கி கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்தேன். 2017ன் முதல் நிகழ்ச்சியாக குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பிரைமரி பள்ளி ஆண்டு விழா எனத் தொடர்ந்த பயணத்தில், இந்த ஆண்டு அதே டிசம்பர் 28ம் தேதி குருமந்தூர் அருகே வெட்டையம்பாளையும் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 14ம் ஆண்டு விளையாட்டு விழா 99வது நிகழ்ச்சி. 31ம் தேதி இரவு ஒரு குடியிருப்பு நலச்சங்கத்தின் புத்தாண்டு இரவு நிகழ்ச்சியில் பேசவுள்ளதால் எண்ணிக்கை 100ஐ அடைந்து விடும். எந்த விதத்திலும் திட்டமிடாத்து இந்த 100 எனும் எண்ணிக்கை.

இந்தப் பயணத்தில் பெரு நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை, பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றோடு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், விவசாயக் கல்லூரி, தொழிட்நுட்பக் கல்லூரி, ஆசிரியர்கள் பயிற்சி மையம் என பல்வேறு தரப்பில் இருக்கும் பணியாளர்களையும், மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்த ஆண்டு கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக சந்தித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 18,000. மாணவர்கள், ஆசியர்கள் சார்ந்த 65 உரை மற்றும் பயிலரங்குகளின் வாயிலாக சந்தித்த மாணவ மாணவியர்கள் சுமார் 13000 பேர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 850 பேர்.

யாழ்ப்பாணம் தெள்ளிப்பளையில் சந்தித்த ஒன்பது வயது மாணவர்கள் முதல் ஈரோட்டில் ஐம்பத்தைந்து வயதில் ’நான் இப்பொழுதுதான் வாழ்க்கையைத் தொடங்குகிறேன்’ எனச் சொன்ன ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் வரை பல்வேறு வயதில், பல்வேறு நிலையில் இருப்பவர்களை இந்த ஆண்டில் கடந்து வந்திருக்கிறேன். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வாழ்வகத்தில் சந்தித்த பார்வைத் திறனற்ற பிள்ளைகள் எனக்குள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர்கள்.

நிகழ்ச்சிகளின் முடிவில் வெளியில் ஓடி வந்து கை பற்றிக் கொள்ளும் பிள்ளைகள், கால் தொட்டு ஆசிர்வதியுங்கள் என உயிரை நடுங்க வைக்கும் பிள்ளைகள், ஆர்வமாய்ப் பேச ஆரம்பித்து திக்கித் திணறி கண்ணீர் சிந்தும் பிள்ளைகள், இரண்டு நாட்கள் கழித்து யோசித்து யோசித்து கை பேசியில் அழைக்கும் பிள்ளைகள், வாட்சப்பில் வந்து என்ன பேசுவதெனத் தெரியாமல் திணறும் பிள்ளைகள், உங்களை அண்ணாவென அழைக்கட்டுமா எனக் கேட்கும் வால் முளைத்த பட்டாம்பூச்சிகள் என இந்த ஆண்டு எனக்கு பிள்ளைகள் சூழ் சிறப்பு ஆண்டு.

இத்தனைக்கும் மேலாக, நான் படித்த கல்லூரிக்கு 25 ஆண்டுகள் கழித்து பயிற்சியாளராக போன அனுபவம் பெரும் தெம்பூட்டுகிறது.

கல்வி உலகம் தவிர்த்து...

என்னை வளர்த்து ஆளாக்கிய ஜேஸிஸ் இயக்கத்தில், பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மண்டல மாநாட்டிலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.

மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு ‘மாற்றத்தை நிர்வகித்தல்’ பயிலரங்கினை நான்கு அமர்வுகளில் நடத்தியது மிக நல்ல அனுபவம்.

உரை, பயிற்சி எனத் தீவிரமானதில் எழுத்து மிகவும் குறைந்து போயிருக்கின்றது. ஆண்டின் துவக்கத்தில் வெளியான “பெயரிடப்படாத புத்தகம்”, “உறவெனும் திரைக்கதை” கட்டுரைகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதுவுமே எழுதவில்லை.

மகள் மழலையாக பத்தாண்டுகளுக்கு முன்பு உச்சரித்துக் கொண்டிருந்த அதே காரை இந்த ஆண்டு அவள் பிறந்த நாளன்று சஸ்பென்சாக வாங்கியது, குடும்பத்துடன் வடகிழக்கு இந்தியா, நண்பர்களோடு கர்நாடகா-கேரளா மற்றும் இலங்கை பயணங்கள் என மகிழ்வான தருணங்கள் கொண்ட ஆண்டு.

எங்க ஊர் நட்புகளை ஒன்று திரட்டி “ஈரோடு வாசல்” எனும் வித்தியாசமான வாட்சப் குழுமத்தை உருவாக்கி, அதில் எழுத்து, உடற்பயிற்சி, வாசிப்பு பேச்சு, வாசிப்பு, உரையாடல் என பல்வேறு திறமையாளர்களை இனம் கண்டது நெகிழ்வான அனுபவம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் பாஸ்போர்ட்டை தவற விட்டதன் மூலம் மிகப் பெரிய பாடம் கற்றுக்கொண்ட ஆண்டு.

நிறைவான அன்பைத் தருவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் யோசித்ததேயில்லை. எவர் மீதும் புகார் இல்லை, வெறுப்பு இல்லை, வன்மம் இல்லை. சில தருணங்களில் சிலரிடம் கோபம் உண்டு. ஒருபோதும் அதை திட்டமிட்டு வளர்க்கவோ நீட்டிக்கவோ விரும்பியதில்லை.




எல்லா வகைகளிலும் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களின் அன்பு மற்றும் நேசிப்போடு இந்த ஆண்டை மகிழ்வோடு நிறைவு செய்கிறேன்... இன்னும் கூடுதல் அன்பினையும் பிரியங்களையும் தேடிக்கொண்டே....

Oct 18, 2013

கல்லூரி பாடத்தில் எனது கவிதை



கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு அனுபவம் கிட்டுகிறது. அந்தக் கல்லூரிகளோடு ஏதோ ஒரு வகையில் என்னை தொடர்புபடுத்திக்கொள்ளவும் முடிகிறது. சமீபத்தில் பேசும் வாய்ப்புக் கிட்டியதில் கூடுதல் மகிழ்ச்சியை அளித்த இடங்களில் கோபி கலைக் கல்லூரியும் ஒன்றென்பேன். அதற்கு மிக முக்கியமாய் இரண்டு காரணங்கள்அந்த காரணங்கள் என்னெவென்பதற்கு முன்னால் ஒரு முன்கதைச் சுருக்கம்

முன்கதைச் சுருக்கம்:
1991ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்துவிட்டு, பொறியியல் படிப்புக்குத் தேறமாட்டேன் என்பதால் ஆர்ட்ஸ் காலேஜ்தான் என முடிவானபோது முதலில் சேர விரும்பித் தேர்ந்தெடுத்த கல்லூரிகோபி கலை அறிவியல் கல்லூரி”. விண்ணப்பம் வாங்கி இளங்கலை வேதியியல் படிப்புக்கு அங்கு விண்ணப்பிக்கச் சென்ற நண்பனிடம் கொடுத்து அனுப்பினேன். பல நாட்கள் கழிந்தும் சேர்க்கைக்கான அழைப்பு வரவேயில்லை, இத்தனைக்கும் சிபாரிசு எல்லாம் கைவசம் இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில் விண்ணப்பம் வரவில்லை எனத் தெரிந்தது. அந்த நல்லவனை, அதுதான் அந்த நண்பனை நெருக்கி விசாரித்ததில் அந்த நல்லவன் அதை தொலைத்துவிட்டிருந்தது தெரிந்தது.

அதன்பின் இன்னும் இரண்டு கல்லூரிகளுக்கு அலைந்துதிரிந்து இறுதில் ஈரோட்டில் ஒரு கல்லூரியில் வேதியியல் பிரிவில் இடமில்லையென்று கனிணி அறிவியல் பிரிவில் இடம் கொடுத்தார்கள். ஆனாலும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமுண்டு. ஏக்கத்திற்கான மிக முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் அது ஒன்றுதான் இந்தப் பகுதியில்இருபாலர் கல்லூரி

காரணம் 1 :
கனவாய் உறைந்து போயிருந்த கோபி கலை அறிவியல் கல்லூரியிலிருந்து ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அருமை நண்பர் திரு.பரமேஸ்வரன் அவர்களின் மூலமாக என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துவாழ்வும்பொறுப்பும் நம்மிடமேஎனும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். சுமார் 1500 மாணவ மாணவியர்கள் அமர்ந்திருந்த மேடை மிகப் பிரமாண்டமான உணர்வைத் தந்தது என்றால் மிகையில்லை. இவ்வளவு மாணவ மாணவிகளிடம் பேசுவதுதான் இதுதான் முதல்முறை. விழாவில் எந்த அறிமுகமின்றி நேரடியாக பெயர் சொல்லி பேச அழைக்கப்பட்டபோது அங்கு எழுந்த உற்சாகமான கைதட்டல் எனக்கு புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.




காரணம் 2:
சில மாதங்களுக்கு முன்பு கோபி கலை அறிவியல் கல்லூரியில் இருந்து பேராசிரியர் முனைவர். மகுடேஸ்வரன் அழைத்திருந்தார். எனதுஒரு ஏழு மணி எழவு” கவிதை முதலாம் ஆண்டு தமிழ் பாடப்புத்தகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.  


நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது கவிதை இடம்பெற்றிருந்த இருந்த இரண்டு புத்தகங்களையும் அளித்தார். பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது விழாவில் நன்றியுரையாற்றிய உதவிப்பேராசிரியர் முனைவர். சுந்தரமூர்த்தி

சார் உங்க கவிதையை நான்தான் பாடம் நடத்தினேன்என்றார்.

கூட்டத்துல கலந்துக்கிட்ட ஸ்டூடண்ட்ஸ்க்கு இது பாடத்தில் உண்டுங்ளா!?”

ஆமாம்

பேச அழைத்தபோது எழுந்த கைதட்டலுக்கு காரணம் புரிந்தது.

கொஞ்சம் தயங்கிக் கேட்டேன்

இந்தக் கவிதை ஜஸ்ட் படிக்கிறதுக்கு மட்டும் தானே!?”

இல்லைங்க, பரிட்சையிலும் கேள்விகள் வரும்என்றார்

(அப்போது  ’அந்தக் கவிதையில் கேள்வி எதும் கேட்டா எனக்கே கூட பதில் எதும் வராதே, பசங்க பொண்ணுங்க நெலமை எப்படியிருக்கும்” எனத் தோன்றியது கொஞ்சம் ஓவர்தான் எனப்பட்டது)

கோபிக் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...