ஒரு பேச்சாளனின் டைரிக் குறிப்பு


உங்க ஸ்பீச் கேட்ட அன்னிக்கு ராத்திரி என்னவோ தூக்கமே வரலைங்க. என்னென்னவோ செய்றேன் தூக்கமே வரல. எனக்குத் தெரிஞ்சு அப்படி ஆனதே இல்லை. ஏன் எதுக்குனும் யோசிக்கிறேன். இப்பவரை தெரியல. ஆனா உங்களோட அந்தப் பேச்சு என்னவோ டிஸ்டர்ப் பண்ணிடுச்சுஎன அந்தப் பள்ளியின் தாளாளர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் குறும்புன்னகையோடு மட்டுமே நின்று கொண்டிருந்தேன். உண்மையில் அப்படியான ஒரு பாராட்டை நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் பாராட்டப்பட்ட சூழல் அப்படி.

காலை ஒன்பது மணிக்கு துவங்கி தலா இரண்டரை மணி நேரம் என மூன்று அமர்வுகள் பயிலரங்கை முடித்துவிட்டு நிறைவான மனதோடு தேநீர் அருந்திக்கொண்டிருந்த போதுதான் தாளாளர் அவ்விதம் சொன்னார். அருகிலேயே பள்ளியின் செயலரான அவரின் கணவர் மற்றும் ஆசிரியர்களும் உடன் இருந்த தருணத்தில்தான் அப்படிச் சொன்னார்.

அவர்களின் பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் என்ன பேசினேன் என்பது நினைவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என கலந்திருந்த கூட்டம். பந்தல் போட்டிருந்தார்கள். மாலை நிழலில் பந்தலுக்குள் இருந்தோரை என்னால் இனம் காண முடியவில்லை. ஆசிரியர்கள் எங்கே! பெற்றோர்கள் எங்கே! மாணவர்கள் எங்கே என என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலேயே சற்று யோசித்தபடியே அங்கும் இங்குமாய் மனதால் தாவித்தாவி பேசி முடித்தேன். பொதுவாக இப்படியான கூட்டங்களுக்குச் செல்லும்போது, காத்திருக்கும் நேரத்தில் முன்னதாகவே கூட்டத்திற்குள் ஒருமுறை வலம் வந்து யார் யார் எங்கெங்கே என்பதை அறிந்து சற்று தெளிவாகத் தயாராகிவிடுவேன். அன்றைக்கு அப்படிச் செய்யாமல் பிழை செய்துவிட்டேன். அந்த உறுத்தல், தடுமாற்றம் எனக்கு மட்டுமே உரித்தானது. வெளியில் தெரிய நியாயமில்லை.

நீங்க அன்னிக்கு பேசிட்டிருக்கும்போதே ஸ்டூடன்ஸ்க்கு ஒரு ட்ரெயினிங்க்கு உங்களைக் கூப்பிடனும்னு சார்கிட்டே சொல்லிட்டிருந்தேன்என அருகாமையில் இருக்கும் ஆசிரியரைச் சுட்டினார் செயலர். மனதை சமநிலையில் வைக்க முயற்சித்தபடி செவி கொடுக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்ன பேசினேன் என்ற யோசனையே மனதிற்குள் ஓடியது.

காலையில் எட்டு மணிக்கு பள்ளிக்குள் நுழையும்போதே செயலர் வரவேற்றார். ஆசிரியர்கள் சீருடையில் இருந்தார்கள். அதே சீருடையில் செயலரும். “என்ன சார் நீங்களும் யூனிபார்ம்ல இருக்கீங்க!?”. ”மண்டே மட்டும் டீச்சர்ஸ்க்கு யூனிபார்ம்ங்க. அவங்களுக்கு எடுக்கும்போது எனக்கும் ஒரு செட் எடுத்துடுவாங்க!” எனப் புன்னகைத்தார்.

பள்ளி, கல்லூரி நிகழ்வுகளுக்கு ஒரு பேச்சாளரைத் தீர்மானிப்பதில் இரண்டு மூன்று வகைகள் உண்டு. நாடறிந்த பேச்சாளரை கௌரவத்தின் அடிப்படையில் நிர்வாகம் தீர்மானிக்கும். ஓரளவு கேள்விப்படும், அறியப்படும் பேச்சாளார்கள் முதல்வர்கள், ஆசிரியர்கள் மட்டத்தில் தீர்மானிக்கப்படும். கல்லூரி நிகழ்வுகளுக்கு சில வேளைகளில் மாணவர்கள் சார்பிலும் தீர்மானிக்கப்படுவதுண்டு. இந்த உரைக்கு நிர்வாகத்தினரின் நண்பரின் வழியாக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன்

பொதுவாக உரைக்கு அழைக்கப்படுவதில், இந்த நிகழ்வுக்கு இந்த உரைதான் வேண்டும், அதற்கு இந்தப் பேச்சாளர்தான் வேண்டும் எனும் தெளிவு அரிதாகவே அமைகின்றன. அப்படியாக ஒரு பேச்சாளன் தெரிவு செய்யப்பட்டு, மேடை வழங்கப்பட்டால், அந்த மேடைக்காக உயிரைக் கொடுத்து உரை தயாரிக்கலாம் என்பதே என் கருத்து. மேடையை நிரப்புவதற்காக சில தருணங்களில் நாம் அழைக்கப்படுவதும், எது வேணாப் பேசுங்க என பணிக்கப்படுவதும் மனதிற்கு அத்தனை உகந்ததாக அமைவதில்லை. ஆனாலும் வளர வேண்டிய தருணத்தில் அவற்றை மறுக்கவும் முடிவதில்லை.

காலையில் தொடங்கி மாலை வரை தாளாளரும், செயலரும் மாறி மாறி பயிலரங்கில் அமர்ந்திருந்தார்கள். முடிந்தவுடன் பயிலரங்கை குறித்துப் பேசுவதை விடுத்து, ஆண்டு விழாவில் பேசிய உரை குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். நான் ஆண்டு விழாவில் பேசிய அடுத்த இரண்டாம் நாள், அதே குழுமத்தின் மற்றொரு பள்ளி ஆண்டு விழாவிற்கு தமிழகத்தின் பெரும் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். தொலைக்காட்சி பிரபலம். சில உரைகளைக் கேட்டிருக்கிறேன். ஒன்றோடு ஒன்று கோர்க்கக்கூட முடியாத அரதப் பழசான நகைச்சுவைத் துணுக்குகளை ஒருவித தொணியில் கோர்த்து தெளிக்கும் அவரின் உரைகள் மீது எந்த ஈர்ப்பும் இல்லை

பேச்சாளர்களில் சிலர் குறித்து விமர்சனங்களும், சிலர் குறித்து அலாதியான மரியாதையும் எனக்கு உண்டு. என்னை யாரோடும் பொருத்திப் பார்க்க மாட்டேன். உண்மையில் எந்தப் பேச்சாளராக இருந்தாலும், அவர்களிடமிருந்து செய்ய வேண்டியது அல்லது செய்யக்கூடாதது என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள முயன்று கொண்டேயிருப்பேன்.

நானாக அந்த விழா குறித்துக் கேட்கவில்லை. அவராகவே அந்த விருந்தினர் குறித்துச் சொல்லிவிட்டு, அவருக்கு பதிலா உங்களைக் கூப்பிட்டிருக்கனும்ங்க என்றபோது சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் ன்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன். அந்தப் பாராட்டைம்ம்ம்... நாம யாரு.. கெத்துல்லஎன எடுத்துக்கொள்ளாமல், பாதையில் வலுவாகப் பயணிக்க இன்னும் என்னைத் தயார்படுத்த வேண்டுமெனத் தோன்றியது.



நான் மிகவும் மதிக்கும் பேச்சாளர், எனக்குச் சொன்ன அறிவுரைஎப்போது 100% பயமேயில்லாமல் ஒரு மேடையில் ஏறுகிறோமோ அன்றோடு பேசுவதை விட்டுவிட வேண்டும்என்பதுதான். ஒவ்வொரு மேடைக்கும் சற்று அழுத்தத்தையும் பயத்தையும் என்னோடு வைத்திருப்பதை ஆரோக்கியமாகவே கருதுகிறேன். எங்கேனும் பிடிபட்ட ஒரு உதாரணத்தை, சம்பவத்தை, செய்தியை என் பாணியில் உரையாக மாற்றுவதற்காக சில பல மணி நேரங்கள் யோசித்து, தேடி அதன்பின்பே ஒரு வடிவமாகக் கொள்கிறேன். ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தித்தான் பேச வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறேன். சமீபத்தில்கூட பயிலரங்கில் ஒரு உதாரணத்தை முன் வைப்பதற்காக மட்டும் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் தேடினேன். அந்த வகையில் என் தயாரிப்புகள் மீது எனக்கு பெரும் பிரியம் உண்டு.

மேடையில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டால், அது எனக்கான ஒரு மணி நேரமாகத் தோன்றாது. அரங்கில் ஆயிரம் பேர் இருந்தால் அது ஆயிரம் மணி நேரமாகத் தோன்றும். அந்த ஆயிரம் மணி நேரத்திற்கு நேர்மை செய்ய வேண்டுமெனும் அழுத்தம் எப்போதுமிருக்கும். அதுவே என்னை இயக்குகிறது. உரை என்பது ஒன்றைத் தேடிச் சேகரித்து வந்து கேட்பவரிடம் கடத்தும் காரியம். அதற்கு நியாயம் செய்தே தீர வேண்டும். அந்த நியாத்தில் கேட்போரை குதூகலிக்கச் செய்ய வேண்டும் எனும் சமாதானம் புறந்தள்ளப்பட வேண்டும். ஏதாவது ஒன்றை இடம் பெயர்த்த வேண்டும்.

உரையோ பயிலரங்கோ என்னிடம் கூர்மையாய் இருக்கும் ஒரு நோக்கம், கலந்துகொண்டோரின் உறக்கத்தை அன்றிரவு சில நிமிடங்களுக்கு தள்ளிப் போடவேண்டும் என்பதே. ’என்னவோ அவர் சொன்னாரே!’ எனும் சிந்தனைக்கே அந்த ஓரிரு நிமிடங்கள். பள்ளி விழா உரை குறித்தும், தன் உறக்கமின்மை குறித்தும் சொன்ன பள்ளித் தாளாளரின் பாராட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் பொறுப்போடு, இன்னும் உத்வேகத்தோடு இனி வரும் உரைகளுக்கு தயாரிக்க உழைக்க வேண்டிய அங்கீகாரமாகவும் அதைக் கொள்கிறேன்.

No comments: