ஒரு தற்கொலை

விதைக்கப்பட்டோ அல்லது
வேண்டாமென எறியப்பட்டோ...
தன்னையே விதையாக்கி
பூமித்தாயின் புழுக்கத்தை தாங்கி..

சுவாசிக்க காற்று தேடி
பூமி பிளந்து புதிதாய் முளைவிட்டு
சூரியனின் சூட்டிலே கண் விழித்து
பனித்துளியிலே பசியாறி...

எவர் காலிலும் மிதி படாமல்
எவை வாய்க்கும் உணவாகாமல்
வரப்போரம் வாழ்க்கைப் பட்டு
வேலிக்குள் சிறைப்பட்டு...

நீர் தேடி வேர்பாய்ச்சி
நிலத்திற்குள் நரம்புகள் இறுக்கி
காற்று ஆடிய நடனத்திற்கு
காதலோடு இசைந்தாடி...

வளர்ந்து வாலிபமாகி
வண்டுக்கடி தாங்கி
உதிர்ந்த பாளையை உரமாக்கி
எஞ்சிய பாளைக்கு உயிர் கொடுத்து

பிஞ்சாக பிரசவித்து
திருடிக்குடித்த நீரைக்கொண்டு
திரட்சியான இளநீர் ஆக்கி
சந்தைக்கனுப்பி காத்திருந்த தென்னையிடம்

மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...

நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...

மனம் ஒடிந்து மட்டைகளை இழந்து
குலை நடுங்க குரும்பைகளை உதிர்த்து
அடி வயிற்று வேர் அனைத்தையும் அறுத்து
ஆடிக் காற்றின் துணையோடு அமரராகிப் போனது...


---------------------------------------------------------------------------
பொறுப்பி: மீள் இடுகை

23 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

//மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...

நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது//

கவிதை ஒரு தளத்தில் இருக்கிறது
குளிர் பானங்களுக்கு என்றுமே எதிரி நான் ....
நம் மக்கள் பகட்டாய் இருந்தால் மதிப்பார்கள் ....இளநீர் நல்லதென்று அமெரிக்கன் சொல்ல வேண்டும் கதிர் சொன்னால் செல்லாது செல்லாது

vasu balaji said...

/மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...

நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது.../

அட அட. உங்கள் இடுகைகள் எல்லாமே அருமை எனினும் ஒவ்வொரு வார்த்தையும் அறையும் இந்த இடுகை மிகச் சிறப்பானதென்பேன்.

/மனம் ஒடிந்து மட்டைகளை இழந்து
குலை நடுங்க குரும்பைகளை உதிர்த்து
அடி வயிற்று வேர் அனைத்தையும் அறுத்து
ஆடிக் காற்றின் துணையோடு அமரராகிப் போனது.../

ஆஹா. அசத்துங்கள் கதிர். தமிழ் மணம் வீட்டில் அமுக்குறேன்.

க.பாலாசி said...

//வளர்ந்து வாலிபமாகி
வண்டுக்கடி தாங்கி
உதிர்ந்த பாளையை உரமாக்கி
எஞ்சிய பாளைக்கு உயிர் கொடுத்து//

தென்னையின் வலி...

//நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...//

அருமையான வரிகள்....

நீண்ட நாட்களாய் எதிர்பார்த்த மீள் இடுகை...

அகல்விளக்கு said...

வலியை கவிதை வடித்திருக்கிறது.

நன்று...

shortfilmindia.com said...

//நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் /சொன்னபோது...//

அருமையான வரிகள் கதிர்

கேபிள் சங்கர்

நர்சிம் said...

//நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது//

நல்லா வந்திருக்கு கதிர்.

பா.ராஜாராம் said...

உங்களின் இந்த நேயம் பிரமிப்பு கதிர்.ரொம்ப நல்ல வெளிப்பாடு.உடல் நலம் தேவலையா இப்போ?
இன்னும் எனக்கு ஓட்டு போட தெரியலை மக்கா..சீக்கிரம் கத்துக்கிரனும்.

நிலாமதி said...

இயற்கையான இளநீரை விட்டு பகட்டான நச்சு திரவ போத்தல்கள் கான்கள் கவர்ச்சியாகஇருக்கின்றன என்பது உண்மைதான்.பதிவுக்கு நன்றி .

ப்ரியமுடன் வசந்த் said...

//மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...//

கொலை...

பின் தற்கொலை...

ப்ரியமுடன் வசந்த் said...

//நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...//

புலவரே வாழ்க நீவீர்..
அசால்ட்டா வருகிறது கவி வார்த்தைகள்..

Unknown said...

//
மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...

நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை//


அன்பே சிவம் படத்தில் கமல் சொன்னது போல் நம்மில் பலர் வெளிநாட்டுக்காரன் தூக்கிப் போடுற எலும்புத் துண்டுக்கு........!!

நல்லா இருக்கு கதிர்...

Athisha said...

ரொம்ப நல்லா இருக்குங்க அண்ணே!

நாகா said...

என்ன சொல்றது கதிர்... உங்கள் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்

பழமைபேசி said...

மாப்பு, நல்லா இருக்கு!

V.N.Thangamani said...

உண்மைதான் கதிர்.
இதயம் கணக்கத்தான் செய்கிறது.
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்.

tamiluthayam said...

அய்யா, இடுகை போடுவதோடு உங்கள் வேலையும், பின்னூட்டம் போடுவதோடு எங்கள் வேலையும் முடிந்து விடக்கூடாது.
மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில் மயங்கி இருப்பவனை அந்த மயக்கத்தில் இருந்து நாம் மீட்க வேண்டும். அதை செய்யாத வரை நாம் உதவாக்கரைகள். இயல்பிலேயே நான் மேல் நாட்டு மினு மினுப்பை வெறுப்பவன்.

நாடோடி இலக்கியன் said...

அருமையான பதிவு கதிர்.

பா.சதீஸ் முத்து கோபால் said...

மிகச் சிறந்த கவிதை நண்பரே.... நீங்கள் எழுதியதில் நான் அதிகம் விரும்பியது இதை தான். முதல் வரியை படித்ததும் மற்ற வரிகளை அதுவே இழுத்துக் கொண்டு போய்விட்டது. இப்படித் தான் இருக்க வேண்டும் கவிதை.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமையான கவிதை - மேலைநாட்டின் தாக்கத்தால் நம் நாட்டு இளநீர் விலை போகவில்லை. தென்னை தற்கொலை செய்து கொள்கிறது. ஒவ்வொரு வரியும் வலிக்கிறது. நல்ல கருத்து - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

Anonymous said...

VERY PROUD TO SAY THAT

"I' AM YOUR FOLLOWER"

தீபா நாகராணி said...

என்னை மாதிரி ஆட்களுக்கு, இது மாதிரி வாசிச்சதும் புரியவும் செய்யணும், வலியை எளிமையா உணரவும் செய்யணும். இது வரை வாசித்த கவிதைகளில் காணப்படும் இந்த பொதுவான விஷயத்தை குறிப்பிட்டு வாழ்த்துகிறேன்! தொடர்ந்து, எளிமையும், வலிமையும் நிறைந்த இது போன்ற சத்தான கவிதைகளை எதிர் பார்க்கிறோம்!

velmurugan said...

அருமையான பதிவு.


SUDHANDHIRAPARAVAI said...

அருமை