ஒரு
வரியில் சொல்லவேண்டுமென்றால் ஒரு பொழைக்கத் தெரியாதவனின் கதைதான் புத்துமண். அப்படியான பொழைக்கத் தெரியாதவனின் கதையைப் படிப்பதில் என்ன பெரிய ஆர்வம் கிளர்ந்துவிடப் போகிறது எனத் தோணலாம். இந்த ’சோ கால்டு’ பொழைக்கத் தெரியாதவனுக்கு இன்னொரு பெயர் சூட்டினால் என்ன?. சரி போராளி என்று சூட்டிடலாமா?. அந்தப் போராளிகள் அப்படியொன்றும் அந்நியமானவர்கள் அல்ல. நம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்தான். பொதுவாக போராளிகளிடம் தோல்விகள் இருக்கும். வலி இருக்கும். உறுதி நிரம்பியிருக்கும்.
நோக்கம் கூர்மையாய் இருக்கும். அவஸ்தை இருக்கும். குடும்பம்
தனித்து இருக்கும். அதையெல்லாம் விட அவர்களிடம் போராட்டம் தொடர்ந்து இருக்கும்.
மிக
வேகமாய் தன்னை வளர்த்துக்கொண்ட திருப்பூரின் வரைபடத்தில் ஒரு நுண்ணிய சிறு கோடுதான் புத்துமண் நாவலில் வரும் ‘மணியன்’. மணியன் மாதிரியான கோடுகள்தான் மதயானைபோல் எதிர்கொண்ட எல்லாவற்றையும் சிதைத்தோடும் ஒரு தொழில் நகரத்தில் அவ்வப்போது கேள்விக்குறியாய் கொம்பு முறுக்கி நிற்பவை. வளர்ச்சி முறித்துப்போட்ட கிளைகளுக்காகவும், நசுக்கிப்போட்ட தளிர்களுக்காவும் எழும்பும் இவர்களின் குரல், வளர்ச்சி முழக்கத்தில் பெரும்பாலும் தேய்ந்து போவதுதான் முரணான அரண்.
மனித
உரிமைக்காகவும், குத்துயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் நொய்யலைப் பாதுகாக்கவும், சுமங்கலித் திட்டத்தில் நசுக்கப்படுவதைத் தடுக்கவும் என அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகக் காட்டப்படும் ஒரு நகரத்தின் பாய்ச்சலில் எதிர்நீச்சல் போடுகிறார்.
அவருடைய
வாழ்க்கையில் யதார்த்தமான பாத்திரங்களாய் வரும் மனைவி சிவரஞ்சனி, மகள் தேனம்மை, தனது எம்.பில் ஆய்வுக்காக தேடிவந்த ஜூலியா மற்றும் மணியனின் வீடு உள்ளிட்டோர் நிறைய உணர்த்துகிறார்கள்.
மாற்றங்களுக்குள் ஆட்படும் தேனம்மை வெகு இயல்பாய் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் பிம்பமாய் இருக்கிறார்.
ஆச்சரியக்குறிகளை
மட்டுமே விரும்பும் சில முதலாளிகளுக்கு கேள்விக்குறியாய் இருக்கும் மணியன் உறுத்தலாய்ப் படுகிறார். அவரை வளைக்க அல்லது வதைக்க அவர்களுக்கு ஆஜானுபாகுவான நைஜீரிய இளைஞன் விலைக்குக் கிடைக்கிறான். நைஜீரிய இளைஞர்கள் இதற்கும் பயன்படுகிறார்கள் அல்லது பயன்படுத்தப்படுகிறார்கள்
என்பது அவசரத்திலும் அவசரமான ஒரு எச்சரிக்கை. வதையில் சிக்கிய மனிதனை வாதை ஆட்கொள்கிறது.
இடையில்
வரும் மருத்துவர் ஜீவானந்தத்தின் கடிதமும், இறுதியில் தொகுக்கப்பட்ட மணியனின் கை பேசியில் சேர்ந்துகிடந்த குறுந்தகவல்களும், அவர் சேகரித்து வைத்திருந்த குற்றங்களின் செய்திகளும் நிறைய உணர்த்துகின்றன.
அத்தியாயங்களின்
தொடக்கத்தில் இருக்கும் லட்சுமணனின் ”ஒடியன்” கவிதை வரிகள் வாசிப்பின் தன்மையை அடர்த்தியாக்குகின்றன.
எழுத்து வடிமற்ற இருளர்களின் கவிதைகளை தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் ”ஒடியன்” தொகுப்பு வாசிக்க வேண்டிய ஒன்று. அதிலிருக்கும் கவிதைகளை மிகப் பொருத்தமாய் அத்தியாயங்களின் தலையில் சூட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
//
ஆட்டுக்கு
நல்ல தீனி கிடைக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து ரிசர்வ் காட்டில் மேய்க்கிறாள் கோசி. தான் நன்றாக மேய்ந்தாலும் அவளுக்கு என்ன லாபம் எனக் கேட்கிறது ஆடு. உனக்கும் இல்லாமல், காட்டு நரிக்கும் இல்லாமல் ரேஞ்சர் வீட்டுக்கு விருந்தாகப் போகிறேன். செம்போத்து குறுக்கே பறக்கும் கெட்ட சகுனமும் தெரிகிறது. எனவே ‘கோசி என்னைக் கொன்று தின்னு இப்பவே’ என்கிறது ஆடு
//
மற்றும்
//
அரசாங்க
லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்
//
அத்தியாயங்களை, அதிலிருக்கும் மனிதர்களை, சூழலை, நிலையை எதிர்கொள்வதற்கு இவை நம்மை வெகுவாகத் தயார்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.
நாவலை
முடித்து விழிகளை இறுக்க மூடி, ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்கையில் முன் அட்டை கண்ணில் படும். பார்வை கூர்மைப்படும். வெளுத்த ஒரு உள்ளங்கை முழுவதும், விரல்களின் நீளம் வரைக்கும் புத்துமண் அப்பியிருக்கிருக்கும்
படம் மனதில் அப்பிக்கொள்ளும். விரல் நுனிகளால் அதை வருடும்போது எங்கோ ஏதோ ஒரு இளகுகிறது, ஏதோ ஒன்று உதிர்கிறது. பொதுவாக கரையான் கட்டியெழுப்பும் புற்று எவரும் கற்பனை செய்திடாத ஒரு ஈரத்தை தனக்குள் கொண்டிருக்கும். புதினம் முழுக்கவுமே ஈரத்தின் நசநசப்பு மனதிற்குள் நீடிக்கிறது.
புத்துமண் அளவில் கனமான நாவல் அல்ல. கனமற்ற அந்த நாவலின் கடைசிப் பக்கங்களை நாம் எட்டும்போது மனது கனக்கும்.
புத்துமண் அளவில் கனமான நாவல் அல்ல. கனமற்ற அந்த நாவலின் கடைசிப் பக்கங்களை நாம் எட்டும்போது மனது கனக்கும்.
புத்துமண் | சுப்ரபாரதிமணியன் |
120 பக்கங்கள் | 100
ரூபாய் | உயிர்மை
வெளியீடு
No comments:
Post a Comment