Nov 9, 2018

மேற்கிலிருந்து கிழக்கிற்கு - 26 மணி நேரம் பயணம்


நவம்பர் 2, 2018 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கசகசப்போடு அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தபோது 99% நிறைவு செய்திருந்த நிம்மதியிருந்தது. இதெல்லாம் நான் தானா?  எத்தனை வேகமாய் இவையாவும் நிகழ்ந்திருக்கின்றன! எனும் பிரமிப்பு அகலவில்லை. உண்மையில் பசிக்கவில்லை. இத்தனைக்கும் காலையிலும் சாப்பிட்டிருக்கவில்லைதான். நினைவுகள் பின்னோக்கி பயணப்பட்டன.

சரியாக ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஞாயிற்றுக்கிழமை, இதே நேரம் CTB (இலங்கை போக்குவரத்து சபை) பேருந்தில் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. சென்னையிலிருந்து விமானம் குறித்த நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டிருந்தது. ஏழாவது முறையாக இலங்கைக்குள் இறங்கப் போகிறேன். இதுவரையில் இல்லாத ஏதோ ஒன்று கனமாக இருந்தது. முதற்காரணம் கடந்த ஆண்டு பயணம் முடித்து விமான நிலையம் வரும் வழியில்தான் பாஸ்போர்ட் தொலைந்துபோனது. அந்தக் இக்கட்டிலிருந்து மீண்டது இப்போது நினைத்தாலும் பிரமிப்பான ஒன்றுதான். விமான நிலைய வாசற்படி வரை வந்து, போலீஸ் நிலையம் சென்று மீண்டும் கொழும்பிற்குத் திரும்பி, விமானத்தை தவறவிட்டு, இந்தியத் தூதரகம் சென்று, இரவுக்குள் எல்லாம் முடித்து அன்றிரவே சென்னைக்கு மற்றொரு விமானத்தில் புதிய பயணசீட்டு வாங்கி காட்சிகள் கடந்த இரண்டு வார காலமாகவே ஓடிக் கொண்டிருந்தன.

கனத்திற்கு மற்றொரு காரணம், ஐந்து நாட்களில் திட்டமிட்டிருந்த நான்கு நிகழ்ச்சிகள் ஒன்பதாக அதிகரித்திருந்தது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் என தொடர்ந்து இயங்க முடியுமா எனும் சிந்தனைதான் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது. இந்த முறை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மிக ஆசுவாசமாக என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களோடு தொடர்பில் இருந்தேன். இதுவரை முழு நாள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்த அனுபவம் உண்டு. இரண்டாம் நாள் மாலை பயிலரங்கை நிறைவு செய்த பின் அன்றைய தினம் உறங்கும் வரை யாரிடமும் எதுவும் பேசமால் இளைப்பாறுவேன். ஆனால் இந்த முறை தொடர்ந்து ஐந்து நாட்கள், அதிலும் நான்கு நாட்கள் காலையும் மாலையும் எனும் அழுத்தம்தான் மெலிதாய் ஒரு அயர்ச்சியையும், அதே நேரம் இதையும் சமாளிப்போம் எனும் சவாலையும் தந்தது.

பயணம் புறப்படும் தினமும் வந்தது. இரவு நீலகிரி பிடித்து சென்னையை அடைந்தபோது விடியவேயில்லை. ரயில் பயணத்தில் மூன்று மணி நேரம் கூட தூங்கியிருக்கவில்லை. விமானத்திற்கு ஏறத்தாழ ஏழு மணி நேரம் இருந்தது. விமான நிலையம் செல்லும் முன்பாக கொழும்பில் இருக்கும் ஸ்வேதாவிற்காக, நன்கு அறிமுகமான தோழமையின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தம்புரா ஸ்ருதிப் பெட்டியை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக முகவரி தேடி அலைந்த சவாலை ஒரு சிறுகதையாக எழுதலாம். பொருளைப் பெற்றுக்கொள்பவன் நான் என்பதும், தருபவர் அவர்தான் என்பதும் அறிமுகப்படுத்தப்படாத ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். என்னவோ இந்தப் பயணத்திற்கு முன்பாக இப்படியான பல்வேறு சவால்களைக் கடந்தபடியேதான் இருந்தேன்.

பயணம் குறித்து முன்கூட்டியே யாரிடமும் சொல்லவில்லை. சென்னை விமான நிலையத்திலிருந்து முதலாவதாகப் பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவில்கூட எங்கு பயணம் என்பதைக் குறிப்பிடத் தோன்றவில்லை. விமானம் கிளம்பும் முன்பாக இலங்கைக்கு எனப் பதிவிட்டதில், பாதிக்கும் மேலாக பாஸ்போர்ட் பத்திரம் எனும் பின்னூட்டங்களே கிடைக்கப்பெற்றன. வாழ்வில் ஏமாறக்கூடாத ஒன்றில் ஏமாறுவதற்கு நிகரான பாடம் உண்டா?. இந்தமுறை பாஸ்போர்ட்டை மிகக் கவனமாக வைத்திருப்பேன் எனும் உறுதியிருந்தது.



முன்கூட்டியே பறக்கத்தொடங்கிய விமானம் முன்கூட்டியே இறங்கியிருந்தது. கடந்த ஆண்டு வாங்கியிருந்த டயலாக் சிம் கார்டு உயிர்ப்புடன் இருந்ததால் பேசுவதற்கு, இணையத் தொடர்பிற்கு சிரமம் இருக்கவில்லை. குடிவரவில் இந்த முறை எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. புதிய பாஸ்போர்ட்டின் முதல் முத்திரை. வரவேற்கும் முகமான புன்னகையொன்று பெரிதாகக் கிட்டியது. பயணப் பொதி அநியாயத்திற்குத் தாமதாக வந்தது.



அடுத்த நாள் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு முதல் பயிலரங்கு அமர்வு தொடங்கவிருந்த சூழலில் இரவுப் பயணத்தைத் தவிர்த்து முடிந்தவரை பகலிலேயே பயணித்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று விட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததன் விளைவு, கொழும்பு நகரத்திற்குள் செல்லாமல் கட்டுநாயகாவில் இருந்தே பயணத்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று ஒரு வாரமாகவே தேடிக் கொண்டிருந்தேன்.

வெளியில் மஞ்சு காத்திருந்தார். மஹியாங்கன செல்லும் பேருந்து ஒன்று இருப்பதாகவும், அதில் சென்று கதுருவெல எனும் இடத்தில் இறங்கி அங்கிருந்து மட்டக்களப்பு சென்றுவிடலாம் என்பதையும் அழைப்பில் தெரிவித்தார். அவரிடம் ஒரு பையை ஒப்படைத்துவிட்டால் பயணச் சுமை கணிசமாகக் குறையும். மட்டக்களப்பில் அவர் சார்பில் கொடுக்க வேண்டிய சில புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார். சந்தித்து, உரையாடி, பொருட்களைப் பரிமாறி கதுருவெல செல்லும் CTB பேருந்தை அடைந்தேன். நடத்துனரும் ஓட்டுனரும் வந்தார்கள். பெட்டியை வாங்கி ஓட்டுனர் இருக்கை அருகே வைத்துக் கொண்டார்கள். 2.30 மணிக்கு கிளம்பிவிடும் என்றும், கதுருவெலயில் மட்டக்களப்பு பேருந்தில் ஏற்றிவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். செல்லும் வழி ஊர்கள் எனக்கு நன்கு நினைவில் இருந்தன. குருநாகல், தம்புள்ள, பொலணருவா, வாழைச்சேனை, மட்டக்களப்பு இதுதான் பயண வழி. இதில் கதுருவெல என்பது பொலணருவே அருகே இருக்கும் ஊர். அந்தப் பேருந்தில் கதுருவெலவில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை மறுத்தால் கொழும்பிற்குச் சென்று இரவு வரை காத்திருந்து இரவு ட்ராவல்ஸ் பேருந்தில் பயணித்து காலை நான்கு மணி சுமாருக்கு இறங்கிக் கொள்ள வேண்டும்.



எப்படியும் இரவு 10 மணிக்குள் மட்டக்களப்பு சென்றடைந்து விடலாம் எனும் நம்பிக்கையில் மஞ்சுவை கொழும்பு செல்லும் பேருந்திற்கு அனுப்பிவிட்டு, நான் CTB பேருந்திலேயே காத்திருந்தேன். சரியாக 2.31 மணிக்கு பேருந்து புறப்பட்டது. நான் மட்டுமே பேருந்தில். ஒரே ஒரு பயணிக்காக பேருந்து பயணிக்குமா எனும் ஆச்சரியத்தோடு இருக்க, விமான நிலையத்திலிருந்து கட்டுநாயகா பேருந்து நிலையம் சென்று வசதியான ஒரு இடத்தில் நின்று கொண்டது. நிமிடங்கள் ஓட ஆரம்பித்தன. நான் மட்டுமே பேருந்தில், ஓட்டுனரும் நட்த்துனரும் காணவில்லை. கடைசி இருக்கைகளில் நான்கு மாணவர்கள் வந்து அமர்ந்தார்கள். அரை மணி நேரம் கழித்து அவர்களும் இறங்கிப் போய்விட, எனக்கு முன்பு இருந்த இருக்கைக்கு ஒரு நபர் வந்தார். இடையிடையேபேருந்து கிளம்பிவிட்டதா!?’ எனும் கேள்விகளுக்கு இல்லை எனும் ஒரே பதிலை அனுப்பிக் கொண்டேயிருந்தேன். மணி 3.30ஐ நெருங்க ஆரம்பித்தபொழுது, தனியார் பேருந்து நடத்துனர் வந்து ஏதோ பேசி விரட்ட இ.போ.ச பேருந்து மெல்லக் கிளம்பியது. நான் மெல்ல அதிர்ச்சிக்குள் நகர ஆரம்பித்தேன்.



கதுருவெல அங்கிருந்து 200 கி.மீ தூரம். எட்டு மணிக்கு சென்று விடும் எனச் சொன்ன நம்பிக்கை இன்னும் பலமாக இருந்தது. நடத்துனர் வந்தார், டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்தில் ஏதேதோ செய்து பார்த்து ஒரு வெள்ளைத் துண்டுச் சீட்டைப் பெற்று டிக்கெட் விபரங்கள் அனைத்தையும் பேனாவால் எழுதிக் கொடுத்து பணம் பெற்றுக் கொண்டார். பயணக் களைப்பு, வெயில் தகிப்பு, பேருந்து நகர ஆரம்பித்ததில் வீசிய காற்று ஆகியவை என்னை தூக்கத்தில் ஆழ்த்தியது. நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தேன். விழித்துப் பார்த்தபோது நேரம் நான்கரை மணியைக் கடந்திருந்தது. சிங்களக் கிராமங்களின் வாயிலாக பேருந்து துள்ளி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்தில் கணிசமான தூரத்தைக் கடந்திருப்போம், குருநாகலை அண்மித்திருப்போம் எனும் ஆர்வத்தோடு கூகுள் வரைபடத்தில் தேடினேன். அப்பொழுதுதான் கட்டுநாயகாவில் இருந்து 23 கி.மீ தூரம் மட்டுமே கடந்திருப்பது புரிந்தது. குருநாகலுக்கு சுமார் 50 கி.மீ இன்னும். கதுருவெலவிற்கு ஏறத்தாழ 170 கி.மீ. எப்போது எட்டப் போகிறோம் எனும் நினைப்போடு பேருந்தின் போக்கைக் கவனித்தேன். ஓட்டுனர் நல்ல வேகம்தான், ஆனால் சுமார் ஐநூறு மீட்டர் தொலைக்கு ஒரு பேருந்து நிறுத்தம் இருப்பதாகப்பட்டது. யாரையேனும் இறக்கிவிட்டு அல்லது ஏற்றிக்கொண்டு சீறலாய்ப் புறப்பட்டு நான்காவது கியரைத் தொடும்போது அடுத்த நிறுத்தம் வந்துவிடுகிறது.





மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வேறு வழியில்லாமல் பேருந்து நிறுத்தங்களை எண்ணத் தொடங்கினேன். அதுவே மேலும் கடுப்பைக் கிளற, அதைக் கை விட்டுவிட்டு மனிதர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எல்லோரும் உள்ளூர் சிங்கள மக்கள். ஏறுவதும் இறங்குவதுமான வேடிக்கையாக இருந்தது. அவ்வப்போது மழை தூறிக் கொண்டிருந்தது. எனக்குள் சென்றடையும் நேரம் குறித்த கேள்வி கனக்கத் தொடங்கியது. பொதுவாக இலங்கையின் கிழக்கு நகரங்கள் எட்டு மணிக்கெல்லாம் அடங்கிவிடும். இந்த நிலையில் எப்போ கதுருவெல சென்று அங்கிருந்து மட்டக்களப்பு செல்வது என்பதை நினைக்கையில் தவறான முடிவெடுத்துவிட்டோமோ எனும் அச்சம் சூழ ஆரம்பித்தது. தனிப்பட்ட என் பாதுகாப்பு குறித்த அச்சமன்று அது. இரவு சென்றடைய முடியாவிடில் காலை எட்டு மணி பயிலரங்கிற்கு என்ன செய்வது எனும் அச்சமே.

ஒரு வழியாக குருநாகல் நகரத்தை அடையும்போது மாலை 6 மணியை நெருங்கியிருந்தது. சுமார் 75 கி.மீ தொலைவிற்கு இரண்டரை மணி நேரம், அதுவில்லாமல், ஒரு மணி நேரக் காத்திருப்பெல்லாம் அநியாயமா இல்லையாடா எனும் கேள்வியை என் பசிக்கு உணவாக விழுங்கிக் கொண்டேன். இதில் குருநாகல் பேருந்து நிலையத்தில் வேறு ஏறத்தாழ 20 நிமிடங்கள் பேருந்து நின்று ஆட்களை ஏற்றுக் கொண்டது. அதுவரை மக்கள் ஏறி இறங்கினாலும் என்னருகில் யாரும் அமர்ந்த நினைவில்லை.

இப்போது பேருந்து நிரம்பி வழியத் தொடங்க பர்தா அணிந்த பெண்ணும், அவர் மகனுமாய் என்னருகில் உட்கார்ந்தார்கள். தமிழ் குரல் முதன்முறையாகக் கேட்டது. தமிழா என்று அவரைக் கேட்க, அவர் இல்லை முஸ்லீம் என்றார். இலங்கை மொழி, மதம் அந்தப் பதிலில் சட்டெனப் புரிந்தது. கதுருவெல எப்போது சென்றடையும் எனக் கேட்க, தோராயமாக பதில் தந்தவர், என் தமிழை இனம் கண்டு, புதுசா வர்றீங்களா என்றார். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்றேன். ”மட்டக்களப்பில் கல்யாணம் பண்ணியிருக்கீங்ளா, புள்ளைகுட்டிங்களைப் பார்க்கப் போறீங்களா!?” என்றார். பதட்டப்பட்டு மறுத்து பயணம் குறித்து விளக்கினேன். கடுறுவேலா-மட்டக்களப்பு பேருந்து குறித்து தம்மோடு வந்திருக்கும் மற்றொரு பெண்ணிடம் அவர் விசாரிக்க, அவர் என்னைக் குறித்து விசாரிக்க, நான் தமிழ்நாடு என்று சொல்ல, தம் கையில் இருந்த பிள்ளையைக் காட்டி, இவரோட அப்பா கன்னியாகுமரிதான் எனச் சொல்ல, நான் மட்டக்களப்பு பேருந்தைப் பிடிப்பதிலேயே குறியாக இருக்க, அவர் ஆசுவாசமாய்அண்ணா... இந்தப் பஸ் 9 மணிக்குத்தான் போய்ச் சேரும், அங்கேதான் இறங்குவேன். உங்களை மட்டக்களப்பு பஸ்ஸில் ஏத்திவிடுறேன். பயப்படாம இருங்க!” என்றார்.

தளரும் நேரத்தில் இம்மாதிரியான சொற்கள் தரும் நம்பிக்கை எதனினும் உயர்ந்தது. நம்பிக்கை கூடினாலும் உடலளவில் நான் மிகுந்து தளர்ந்திருந்தேன். விமான நிலையத்தில் ஒரு அரை லிட்டர் தண்ணீர் வாங்கியதோடு சரி. அதில் பாதியைத்தான் இந்த நான்கு மணி நேரமாகக் குடித்திருப்பது நினைவுக்கு வந்தது. இடையில் தண்ணீர் வாங்கும் வாய்ப்பு எங்குமே கிடைக்கவில்லை. குருநாகலில் வாங்கியிருந்திருக்க வேண்டும். களைப்பு கூடிக் கொண்டே போனது.

குருநாகலில் புறப்பட்ட பேருந்து வேறு முகம் காட்டி மின்னலாய் சீறியது. இடையில் எங்கும் நிறுத்தவில்லை. தம்புள்ள, ஹபரன என ஒவ்வொன்றாய் கடக்க, நேரமும் கடந்து கொண்டேயிருந்தது. கூகுள் வரைபடத்தில் தொலைவு குறைந்து கொண்டே வந்தது. கதுருவெலவை நெருங்க மிச்சமிருந்த தண்ணீரைக் குடித்தேன். இரவு 9 மணியளவில் கதுருவெலவில் நிற்க ஓட்டுனரும், நட்த்துனரும் பின்பக்கம் இருந்த ஒரு பேருந்தை சுட்டிக் காட்டினார்கள். அந்தப் பெண் ஓடி வந்துவாங்கண்ணா அந்தப் பஸ்ல ஏறுங்கஎன அடையாளம் காட்டினார். பேருந்தை நெருங்கி ஓட்டுனரிடம் மட்டக்களப்பு எனச் சொல்ல, ஏறிக்குங்க என்றார். தமிழ் குரல். முழுத் தெம்பு வந்தது. அந்தப் பெண்ணிடம் நன்றி பகிர, உங்க நெம்பர் கொடுங்க என்றார். விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு, தமிழ்நாடு வந்தாப் பேசுங்க என்றபடி விடைபெற்றேன். அருகில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கி பாதியைச் சரித்தபின் முழுத் தெம்பும் வந்தது

நான் ஏறிய பேருந்தின் சன்னல்களை மூடியபடி வந்த நபர் ஒருவர், பின் பக்கமாய் நின்ற மற்றொரு பேருந்தைக் காட்டி அதற்கு மாறிக்கொள்ளுமாறு கூறினார். அந்து யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு செல்ல வந்திருக்கும் பேருந்து. சிலர் அமர்ந்திருந்தனர். ஏறி பெட்டிகளை வைத்து அமர, பாட்டு அதிர்ந்தது. மட்டக்களப்பு பேருந்தில் ஏறிவிட்டேன் எனும் தகவல்களைச் சொல்லிவிட்டு, பேருந்து புறப்படும் தருணத்திற்காகக் காத்திருந்தேன். நிமிடங்கள் ஓடி முக்கால் மணி நேரத்தை எட்டியிருந்தது. ஒருவரையொருவர் பார்த்து பேருந்து கிளம்புவது குறித்து புலம்பிக் கொண்டிருந்தனர். எப்போது போனால் என்ன? எப்படியும் மட்டக்களப்பு சென்று விடுவோம் என்பதே போதுமானதாக இருந்தது.

ஒரு கட்டத்தில் பயணிகள், பேருந்து புறப்பாடு குறித்து குரல் எழுப்ப சட்டெனப் புறப்பட்டது. சுமார் ஒரு கி.மீ சென்ற பேருந்து சாலையில் யூ-டர்ன் அடித்து வந்த வழியே பயணித்தது, ஒரு கி.மீ பயணித்த பேருந்து மீண்டும் யூ-டர்ன் அடித்து முன்பு நின்ற இடத்திற்கே வந்திருந்தது. “அடேய் என்னங்கடா இது!!!?” எனும் வடிவேலு பாணிக் கேள்வியை விழுங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் சீறிப் புறப்பட்டது, எங்கே யூ-டர்ன் அடிக்குமோ எனக் காத்திருக்க மட்டக்களப்பிற்கான தொலைவு கூகுள் வரை படத்தில் குறையத் தொடங்கியது. நேரம் இரவு 10 மணியைக் கடந்திருந்தது.



பதினொன்று நாற்பது மணியளவில் கல்லடியில் இறங்கினேன். அது எனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம். நிறுத்தத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவில் தங்கும் இடம். எளிதாக சென்றடைந்தேன். ஒருவழியாக அறை சாவிகளைப் பெற்று உள்ளே நுழைய, நான் சாப்பிடுவதற்காக நண்பர் வாங்கி வைத்திருந்த மசால் தோசை மிகப் பிரியமாகக் காத்திருந்தது. குளித்துவிட்டு வந்து தோசையைப் பதம் பார்க்க ஆரம்பித்தேன்.

காலை 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தேன். தமிழ்நாட்டின் மேற்குக் கோடியிலிருந்து இலங்கையின் கிழக்குக் கோடியை அடைவதற்கு 26 மணி நேரம் ஆகியிருந்தது மலைப்பாக இருந்தது. அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம் எனும் தெம்பும், அடுத்த 110 மணி நேரம் எப்படியாக அமையப்போகிறது எனும் குறுகுறுப்பும் சேர்ந்து உறக்கமாய் என்னை அழுத்தியது. விடியலுக்காக நானும், எனக்காக மட்டக்களப்பு விடியலும் காத்திருக்கத் தொடங்கினோம்.

Oct 1, 2018

கனவொன்றின் பாதியில்




நீந்திய மலை
ஏறிய கடல்
பறந்த நிலம்
தவழ்ந்த வானம்
நுகர்ந்த கோபம்
உணர்ந்த மணம்
தொடும் மகிழ்ச்சி
நினைத்த வருடல்
ஒலித்த கண்ணீர்
வழிந்த சொல்
தழுவிய நிழல்
படிந்த தேகம்
உறங்கும் விண்மீன்
ஒளிரும் இருள்
இவைகளைச் சற்றே மிச்சம் வைத்திருக்கும்
கரைந்தொழுகும் கனவொன்றின்
முதற் புள்ளியை
அடைந்துவிடும்
கனவொன்றின்
பாதியில் இருக்கிறேன்!

Sep 9, 2018

உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”



“சரி... ‘வியாபாரம்’ செய்யத் தெரிஞ்சவன், பொழைக்கத் தெரிஞ்சவன் யாராச்சும் இப்படி ஒரு படத்தை மெனக்கெட்டு டைரக்ட் செய்வானா? தயாரிப்பானா?” எனும் கேள்வி இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. வியாபாரத்தைத் தாண்டி, தான் நேசிக்கும் ஒன்றிற்காக செய்யும் தியாகமே உன்னதங்களைக் கொடுத்திருக்கின்றன. உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”
ஜுங்கா படத்திற்காக விஜய் சேதுபதி மேல் அயர்ச்சி கொண்டதும், கிண்டல் அடித்ததுமான அதே மனநிலையோடுதான், அந்த மனநிலைகளுக்கு கொடுத்த ஆற்றலின் ஆயிரம் மடங்கு ஆற்றலோடு விஜய் சேதுபதியை “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்காகப் பாராட்டத் தோன்றுகிறது.
அந்த ஆயிரம் மடங்கு பாராட்டை இரட்டிப்பாக்கி இயக்குனர் லெனின் பாரதியின் கைகளில் சமர்ப்பிக்கத் தோன்றுகிறது.


அந்த விடியல் மழைக் காட்சிக்கும், காற்றை வலிமையோடு அறுக்கும் அந்த நீள் தகரத்தின் உறுத்தும் ஓசையோடு உச்சிக்கு நகரும் பொட்டல் வெயில் காட்சிக்கும் இடையேதான் எத்தனை கனமானதொரு வாழ்வு.
விரிந்து கிடக்கும் மலையையும் விட கனக்கும் வாழ்வுதான் ரங்கு முதல் கேத்தர வரை அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும். படம் என்னவோ ரங்குவின் வாழ்க்கையைச் சொல்வதாய் இருக்கலாம். ஆனால் மனம் என்னவோ அடிவாரத்துக் கிழவி தொடங்கி, பத்திரிக்கை கொடுக்க மலையேறுபவர், லோகுவின் தக்காளிக் கூடையை ஏற்றிக்கொள்ளும் மாட்டு வண்டிக்காரர், கிறுக்குக் கிழவி, கழுதைக்காரர், வனகாளி, கணக்குப் பிள்ளை, கங்காணி, சாக்கோ, அத்தா, குதிரை பாஞ்சான் மேட்டு காப்பி கடைக்காரர், ஊத்துராசா என அத்தனை பேரின் வாழ்க்கையும் ஏதோ இரண்டு பருவநிலைகளுக்கு இடையே என்னவாக இருக்கும் என ஓட்டிப் பார்க்க வைக்கிறது.
எத்தனையோ மொழி சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். இதோ இந்தக் கணத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலை எதனினும் சிறந்த படம் எனத் தோன்றுகிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கருதும் ஒன்றாகவும் இது இருக்கலாம். இருக்கட்டுமே! இந்த மனநிலையைக் கரைக்க, இந்த இடத்தைப் பிடிக்க இன்னொரு படம் என்னில் நுழையும் வரை உணர்ச்சிவயப்பட்ட இந்தக் கணத்தை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்.
பார்த்துவிடுங்கள். ஒரு அசல் வாழ்க்கையை பார்த்த... இல்லையில்லை வாழ்ந்த அனுபவம் கிட்டும்.
மிகக் கூடுதலாக நேசிக்கும் அந்த எளிய மனிதர்கள் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து நம்மை சற்றேனும் மீட்டெடுப்பார்கள். சக மனிதர்கள் மேல் நம்பிக்கை கூட்டுவார்கள். மேலே சொன்ன பாத்திரங்களில் எவர் ஒருவரைப் போலும், இன்னொருவரைக் கண்டாலும் நேசிப்பில் நெகிழ்வீர்கள்.
❤️

Aug 28, 2018

For the attention of new entrants to the college...


For the attention of new entrants to the college...





Firstly congratulations for the successful completion of your long School journey, just look back for a while, all that happened were actions to reach this place and it didn’t happen just like that in the path

*
Would have entered college by wish or by force, for that either the marks, money or recommendation would have existed as an added weightage. Should also understand a fact that this place must be someone’s dream, passion and desperation, let us have that in mind!

*
Decide on how these upcoming 3 or 4 years to be spent and what are all to be learnt
*
Thinking this as a college and reading the syllabus may yield a degree, however will that degree be suffice for your future journey?

*
College is not only a place to obtain a degree, It is also a sculpture gallery to carve ourselves as per our thoughts too! Carve yourselves as much as possible within these years and move

*
Whenever we take a bike or a car from home for a journey, have we started without having a clarity on the purpose of the destination and the time it takes? How much it would cost for the petrol? As we think so much for this 100 rupees petrol expenditure, are we clear about this important 3-4 years period? Why, how, where, start exploring soon

*
“Why did I choose this subject?” If you don’t find an answer for this yourself, then there is all possibility you will end up with a question of regretting your choice

*
Find your mentor, he or she is not going to born but already exist in front of you, may be your senior, professor, bus conductor, father, mother, relative, college guest, trainer, it could be anyone or may be a one outside, it’s your sole responsibility to find out

*
 “I’m just a student and someone will take care of all!”, don’t think of escapism with this thought. This generation students has clarity, ability and intelligence to search and attain what they want!

*
Start thinking now about your option after college, “going for work, becoming an entrepreneur, can start an industry”, it could be anything, we are at the last stage of course completion, don’t waste time on finding reasons for procrastination

*
Start thinking about the additional features to be added in your bio data from now on

*
Enrich your attitude and friendship, be cautious with your words and actions

-       Erode Kathir

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு


கல்லூரியில் முதலாம் ஆண்டில் நுழைந்திருக்கும் மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு... ஈரோடு கதிர்




*
மிக நீண்ட பயணமான பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கிறீர்கள். முதலில் வாழ்த்துகள். அந்த நீண்ட பயணத்தை சற்றே திரும்பிப் பாருங்கள். நிகழ்ந்தவை அனைத்தும் இந்த இடத்திற்கு வருவதற்கான செயல்களே!. சும்மா போனால் போகிறதென்று, போகிற போக்கில் இங்கு வந்துவிட வில்லை.


*
கல்லூரிக்குள் விரும்பி வந்திருக்கலாம், அழைத்து வரப்பட்டிருக்கலாம், இழுத்தும் வரப்பட்டிருக்கலாம். அதற்காக நம்மிடம் மதிப்பெண், பணம் அல்லது சிபாரிசு என ஏதோவொன்று கூடுதலாய் இருந்திருக்கலாம். ஒரு உண்மையையும் உணரவேண்டும்... தகிப்பும், தேடலும், தேவையும் நிறைந்த யாரோ ஒருவர் ஏங்கிக்கொண்டிருக்கும் இடமாகவும் இந்த இடம் இருக்கலாம். அதையும் கவனத்தில் கொள்வோம்.


*
இனிவரும் நான்கு / மூன்று ஆண்டுகளை, இந்தக் கல்லூரி நாட்களை எவ்விதம் கடக்கலாம், என்னவெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து தீர்மானியுங்கள்.


*
வந்திருப்பதை வெறும் கல்லூரியாக மட்டும் நினைத்தால், படிக்க வேண்டியதைப் படித்தால், இறுதியில் பட்டம் கிடைத்துவிடும். வெறும் பட்டம் மட்டுமே எதிர்காலம்எனும் பெரும் பயணத்திற்குப் போதுமா?


*
கல்லூரி என்பது பட்டம் மட்டுமே கொடுக்கும் இடமல்ல. நாம் யாரென நம்மைக் கருதுகிறோமோ, அதைச் செதுக்கித் தரும் சிற்பக்கூடமும்கூட. முடிந்தவரை உங்களை இந்தக் காலத்திற்குள் செதுக்கிக் கொண்டு வெளியேறுங்கள்.


*
எப்பொழுதாவது வீட்டில் இருந்து பைக் அல்லது கார் எடுக்கும்போது, எங்கு போகிறோம், எதற்குப் போகிறோம், எவ்ளோ நேரம் ஆகும் எனும் தெளிவில்லாமல் புறப்பட்டிருக்கிறோமா? அதற்கான பெட்ரோல் செலவு எவ்வளவு இருந்துவிடும்? ஒரு 100 ரூபாய் பெட்ரோல் செலவிற்கே அத்தனை யோசிக்கின்றோம். அப்ப அடுத்து வரும் வாழ்வின் மிக முக்கியமான நான்கு / மூன்று ஆண்டுகள் குறித்து தெளிவாகி விட்டோமா? ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்பதை உடனடியாக கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்.


*
ஏன் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?” எனும் காரணத்தை, நீங்களாகக் கண்டுபிடிக்கும்வரை, “ஏன்டா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?” எனும் மனநிலை இருக்கவே சாத்தியங்கள் அதிகம்.


*
உங்களை வழிநடத்த பொருத்தமான Mentor யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள். அவர் இனிமேலெல்லாம் பிறக்க வேண்டியதில்லை. ஏற்கனவே பிறந்து உங்களுக்கு முன், எட்டும் தொலைவில் சென்று கொண்டிருப்பவரே. மூத்த மாணவர், படித்து முடித்து வெளியேறியவர், பேராசிரியர், கல்லூரிப் பேருந்து ஓட்டுனர், தந்தை, தாய், உறவு, கல்லூரிக்கு வரும் விருந்தினர், பயிற்சியாளர் உள்ளிட்ட இவர்களில் யாரோ ஒருவராக அவர் இருக்கலாம். இவற்றில் இல்லாமல் வெளியிலும்கூட இருக்கலாம். தேடிக் கண்டடைய வேண்டியது உங்களின் உடனடிக் கடமை.


*
எல்லாம் யாரோ பார்த்துக்குவாங்க, நான் ஜஸ்ட் ஸ்டூடண்ட் தானே!என்றெல்லாம் தப்பிக்க நினைக்க வேண்டாம். தனக்கானதைத் தேடி அடையும் தெளிவும், திறனும், அறிவும் கொண்டவர்கள்தான் இந்தத் தலைமுறை மாணவ மாணவியர்கள்.


*
கல்லூரி முடித்து வேலைக்குப் போகலாம், தொழில் துவங்கலாம், நிறுவனம் ஆரம்பிக்கலாம்... அதில் எதுவென இப்பொழுதே சிந்திக்க ஆரம்பியுங்கள். கல்வியின் கடைசி, கால் பங்கு காலத்தில் இருக்கின்றோம். இனியும் தாமதிக்க காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள்.


*
உங்களுடைய Bio-Dataவில் என்னவெல்லாம் கூடுதலாக இணைக்க முடியும் என்பதை இப்போதிருந்தே சிந்திக்கத் துவங்குங்கள்.


*
நட்பையும், உங்களின் குணத்தையும் செழுமைப் படுத்துங்கள். எவருடனும் சொற்கள், செயல்களில் கவனம் இருக்கட்டும்.


*




Aug 4, 2018

உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2


கண்களில் கண்ணீரோடு தான் சில வரிகளைக் கடந்தேன் அண்ணா.. பத்து வயது கடந்த நிலையிலேயே என் மகளும் இந்த வலியை அனுபவிக்கிறாளே என்று நிறைய கஷ்டப்பட்டுருக்கேன்.. அந்த மாதிரியான சமயங்களில் அவளின் முகம் கொஞ்சம் வாடினாலும் .. அவளை நாங்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில்லை...

எங்கள் இருவரின் வலியையும் தாயாய் உணர்ந்த என்னவரால் அந்த வலி கூட சுகமாக மாறிவிடும் பல வேளைகளில்...

ஆண்கள் கூட புரிந்து கொள்ளும் வேதனையை அதை நன்றாக உணர்ந்த பெண்கள் புரிந்து கொள்ளாதது வேதனையான விஷயம்...

*

I remember the day .. During 3 rd of my periods ..the situation took me to travel..
After get inside the train with in 2 hours my bleed started unconditional.
Full dress wetted. All knows that the express trains particularly in north side sleeper also we can't travel..near bathrooms and pathways oocupaid by passengers...

I started cry..my husband went to see ttr for a ac coach. That s the most untorable pain in my life in heart and body...

I take one towel and wipe the seat where i sit..with water.. And wrape me with a big bedsheet ...which i bring for sleep...

200 Nos more than i crossed to reach the new coach...

Where i sit there also all know abt my periods all are talk about that..

After this incident i ask myself why i was cry..
That s because of pain.. Or bcoz of shy..
Still i don't know ..

But most unconditional moment..
That struck on my mind..

Even i use napkins during..that much over bleed that's s also a 3 rd day how could it hpn i don't know.

Feeling painful..

*

தங்களின் பதிவால் நிச்சயம் பல நல் உள்ளங்கள் பெண் களின் வலியை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன. பொய்மை விலங்கை உடைக்க முயற்சி எடுத்த தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி

*

கடையில் போய் நாம் கேட்டாலும் அதை பேப்பரில் மடித்து தரும் நிலைதான் இருக்கிறது

*
நாம இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறது இந்த விஷயத்தில்

*

இன்று பல பள்ளிகளில் இயற்கை உபதைகளில் இருந்து விடுபட அனுமதி கேட்பதற்கே இளவயது பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

*

ஆண்களுக்கு இதெல்லாம் ஜென்மத்தில் புரியப் போவதில்லை என்ற என் எண்ணத்தை உடைத்து விட்டீர்கள்.

*

அறியாமையை உணர வைக்கிறது....

*

நாம் இன்னும் நாப்கின் பற்றி பேசுவதையே taboo வாக கருதிக்கொண்டிருக்கிறோம்.. Tampon எனும் வகை பேட்கள் இன்னும் சவுகரியமானவை என்கிறார்கள் அதை உபயோகித்தவர்கள்.. இளம் தலைமுறைக்கு அதை பழக்க அம்மாக்கள் தயங்குகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கே அது ஏற்கமுடியாததாகவும் அச்சமாகவும் இருக்கிறது.. நீச்சலுக்கு செல்ல, கறைப்படும் என்ற கவலையில்லாமல் இருக்க என்று பல விதமாய் உபயோகம். வலி தவிர வேறு எதுவும் அந்நாட்களில் பெண்களின் அன்றாடத்தை கட்டிப்போடக்கூடாது.. இன்னும் கடக்கவேண்டியத்தொலைவு நிறைய இருக்கிறது..

*

எனது வீட்டில் இரண்டு பெண்களுக்கும் மனைவிக்கும் இதுவரை அவர்கள் சென்று வாங்கியதாய் ஞாபகம் இல்லைங்க..அந்த பயமும் ஒரு மன இறுக்கம் இல்லாமல் இன்றும் எதிர்கொள்கிறார்கள் எனது பெண்கள்.இது அவர்களின் சிறு வயதிலேயே கற்பிக்கும் ஒரு முக்கியமான பாடம்

*

இன்னும் நிறைய பதிவுகள்,கட்டுரைகள் வர வேண்டும்.

*

உணரவேண்டிய பதிவு....ஆண்கள் மட்டுமல்ல சில பதவியில் இருக்கும் பெண்களும்..... நான் ஆசிரியையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது.....வலியுடனும் வேதனையுடனும் விடுமுறை கேட்டும் கிடைக்காத தருணம் இதைப் படிக்கும் போது நினைவில் வந்தது.....

*

நீங்க சொன்ன மாதிரி தனிதட்டு , தனிப்படுக்கைன்னு கிராமங்களில் இன்னும் இருக்குங்க .

*

பெண்ணாய் இதை உணர முடிகிறது, மேலும் இன்றைய பல ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் மகளின் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் மன பிரச்சனைகளை புரிந்து மிகவும் அனுசரனையாக நடந்து கொள்ளகிறார்கள் இதுவும் மிக பெரிய மாற்றமே

*

நீங்க எழுதியிருக்கும். மாணவி, தலைமையாசிரியை நிகழ்வு குறித்து ஒரு கருத்து. பெரும்பாலும் பெண்களுக்கிடையில் இந்த மாதவிடாய் பெரிய விடயமே இல்லாதது போல் ஒரு பாவனை இருக்கும். அதிலும் வயது மூத்த பெண்கள் இளவயது பெண்களின் வயிற்றுவலிக்கு, 'என்னமோ எங்களுக்கு இல்லாதது மாதிரி.. எல்லோருக்கும் உள்ளதுதான்..' என்கிற ரீதியில் அதை பார்ப்பது வழக்கம்.  இம்மாதிரியான அனுபவங்களை சித்தி, அத்தை, அக்கா என்று வயது மூத்த பெண்கள் எங்களிடம் காட்ட தான் செய்தார்கள்.

இளவயதில் இருக்கும் மாதவிடாய் சிரமங்கள், அதீத இரத்தப்போக்கையும் வயிற்றுவலியையும் புரியாத புதிர் தன்மையையும் கொண்டதாக இருக்கும் என்பதை மூத்தவர்கள் புரிந்துக் கொள்ள தவறுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் இன்று வரை சமூகத்தில் தொடரும் மாமியார் - மருமகள் பிரசனையைப் போன்றதுதான்.

*

முட்டு வீட்டுல முழுசும் ஓய்வில் இருக்கும் பழக்கம் தான் ,ஆதலால் அந்த நாளில் பெண்கள் ரொம்ப நல்ல சத்தான ஆகாரம் உண்டும்,உடலில் ஏற்படும் அசதியை போக்கவும் தான் அந்த முட்டு வீடு.

*

நாங்கள் இன்னும் கூட இப்படித்தான் இருக்கிறோம்....அந்தக் கடினமான நாட்களை கடத்துதல் என்பது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாபெரும் சவால்...தான்...

*

ஒரு தந்தையாக, கணவனாக உங்கள் கூற்று 100% சரியே. தவிர உங்கள் கையாளும் முறை அபாரம். அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். பொதுவாக பெண்களின் பிரச்சனையை இப்போது ஆண்கள் சுலபத்தில் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும் நிம்மதியை கொடுக்கிறது. நன்றி அய்யா."தீட்டுஎன்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். முன்பெல்லாம். பெண்களுக்கு தீட்டு வந்தால் இன்றயத்தை போல பாட்ஸ் எதுவும் கிடையாது. தவிர உடல் உபாதைகள் இருக்கும். அந்த நேரத்தில் அவளுக்கு ஓய்வு தேவை. அதனாலேயே அவர்களை ஒரு வட்டத்துக்குள் மறதி மூன்று நாட்களுக்கு பத்தியமாக பாதுகாத்தார்கள். அதனால் தான் என்னவோ சுலபமாக இந்த ஸ்கேனிங்கும் இல்லாமல் 15 பிள்ளைகள் பெறமுடிந்தது. இப்போ அந்த வழக்கம் அருகிப்போனதால் ஒரு பிள்ளைக்கும் 15 ஸ்கானிங் என்றாகிவிட்டது. எப்போ இந்த வழக்கம் தவறான நோக்கில் பார்க்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. பாஞ்சாலி சபதத்தில் தான் வீட்டுக்கு விளக்காக இருப்பதாக பாஞ்சாலி கூறும் செய்தியை பார்க்கும் பொது அப்போதெல்லாம் அவர்கள் இதை மறைத்துப் பார்க்கும் செய்தியாக பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்த சவாலில் எனக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை. ஒரு பெண்ணாக அவளுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் முற்போக்காக சிந்தித்தாலும் கூட ஒரு பெண் எந்த அளவுக்கு இத்தகைய சவால்களையும் விரும்புகிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். நிசஹகாயமாக அவளுக்கு இத்தகைய சவால்கள் சங்கடத்தைக் கொடுக்கும். யார் இந்த சவால்களை முன்வைத்தார்களோ எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணாக என்னால் இதை நினைத்ததுக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் என்னை ஒரு பிற்போக்கு வாதி என்று முத்திரை குத்தாலம். இந்த விஷயத்தில் நான் பிற்போக்குவாதியாகவே இருக்க விரும்புகிறேன். பெண்ணின் மாதவிடாய் என்பது இயற்க்கையாக நடக்கக் கூடிய ஒரு சம்பவம். அந்த நேரத்தில் அவளுக்கு இருக்கும் மனநிலை, உடல் மாற்றம், வலி என்பன எல்லாம் வெறும் சவாலுக்கு உரியதா? அதை இப்படி பகிரங்கமாக விளம்பர படுத்துவது... சரியா என்று எனக்கு தெரியவில்லை. அது பாட்டுக்கு நடந்துகொண்டு போகட்டுமே... விட்டுடலாமே.

*

இதை பற்றி எழுதுவதற்கு ஒரு தைரியம்மும் முற்போக்கு சிந்தனையும்,பெண்கள் மீது நல்ல அன்பும் வேண்டும்.

*

இது குறித்து எனக்கு சில ஆதங்கம் உண்டு. அந்த காலத்தில் தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வைத்ததுக்கு முக்கியமான காரணங்கள் இருந்தது. அந்த மாதிரி நாட்கள்ள உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். அப்போ அவங்களுக்கு முழுமையான ஓய்வும் அவசியம் தேவை. அந்த காலத்தில் இதெல்லாம் கிடைச்சது. ஆனா இப்போ, அந்த கஷ்டத்தோட வீட்டு வேலைகளையும் செய்து, வேலைக்கும் போயிட்டு வந்து, குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் பற்றிய சிறு அக்கறை கூட யார்கிட்டயும் இல்லை. அந்த காலத்தில் ஒதுக்கி வைச்சாங்க, இந்த காலத்தில் வீட்டுக்குள்ள சேர்த்திக்கறாங்க. ஆனா அந்த காலத்தில் கிடைத்த ஓய்வும் கவனிப்பும் தொலைந்து போயி மேலும் சிரமங்கள் மட்டுமே மிச்சமானது


*

திரு அக்ஷய் குமார் பல சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்... திறந்தவெளியை தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையின் அவசியத்தை உணர்த்தும் படம்...

தலைமை ஆசிரியையின் பார்வையும் செயலும் தவறென்பது எனது கருத்து.. பள்ளியின் தேர்ச்சி சதவீதம் நூறாகயிருக்க வேண்டும்.. அனைவரும் எண்பது விழுக்காடுக்கு அதிகமாக மதிப்பெண்கள்... இத்யாதி.. இல்லையேல் மாவட்ட கல்வி அதிகாரி மெமோ... etc., ஒவ்வொரு முறையும் ஒரு மாணவி தன்னை சந்தித்து ஏதாவது கேட்கையில்(However naughty or notorious he/she maybe)... இவள் சொல்வது உண்மை"யோ" எனும் பார்வைதான் இருக்க வேண்டும்... இவர்கள் /இவள் எப்போதும் இப்படித்தான் என்ற... Pre(determined /conceived )closed mind to be shunned. அவரது பதவி, வயதுக்கு முதிர்ச்சியான பார்வையிருந்திருக்க வேண்டும்...

பள்ளி /கல்லூரி மாணவியோ அல்லது பணிக்கு செல்லும் பெண்களோ அல்லது விடுதியில் தங்கியிருப்பவர்களோ (கோவை), விரும்பத்தகாதது நடப்பின் துணிச்சலோடு தட்டிக்கேட்பது மற்றும் தன் சம்பந்தப்பட்டவர்க்கு தெரிவிப்பது பற்றி சிறு பிராயத்திலிருந்தே ஊக்குவித்தல் அவசியம். நீ பாட்டுக்கு பதிலே பேசாம வா... வேறு தெருவில போய்வா.. அலுவலக மேலதிகாரி. Transfer, harassment or CR etc., ஏதாவது ஒன்றிற்கு பயம்... A psychological war within herself subdues her..

மறுபடியும் அதே பள்ளி மாணவி.. பல வழிகளில் சொல்லியிருக்கலாம்... துண்டு சீட்டில் எழுதி.. சைகையால்.. அருகே சென்று மெதுவாக செவியில்.. வெளியே சென்றபோது பின்தொடந்து சென்று.. அதைவிட்டு அதேயிடத்தில் அழுதுகொண்டே.... மாற்றம் தேவை பெற்றோர் /ஆசிரியர்களிடம்...

*

In Dubai I have never seen a used napkin anywhere whether in a public or private toilet but in all my working places in India I have seen used napkins flooding in female toilets . No one takes it seriously..

*


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...