கல்லூரியில் முதலாம் ஆண்டில் நுழைந்திருக்கும் மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு... - ஈரோடு கதிர்
*
மிக நீண்ட பயணமான பள்ளிப் படிப்பை
வெற்றிகரமாக முடித்து வந்திருக்கிறீர்கள். முதலில் வாழ்த்துகள். அந்த நீண்ட
பயணத்தை சற்றே திரும்பிப் பாருங்கள். நிகழ்ந்தவை அனைத்தும் இந்த இடத்திற்கு வருவதற்கான
செயல்களே!. சும்மா போனால் போகிறதென்று, போகிற போக்கில் இங்கு
வந்துவிட வில்லை.
*
கல்லூரிக்குள் விரும்பி வந்திருக்கலாம், அழைத்து
வரப்பட்டிருக்கலாம், இழுத்தும் வரப்பட்டிருக்கலாம். அதற்காக
நம்மிடம் மதிப்பெண், பணம் அல்லது சிபாரிசு என ஏதோவொன்று
கூடுதலாய் இருந்திருக்கலாம். ஒரு உண்மையையும் உணரவேண்டும்... தகிப்பும், தேடலும், தேவையும் நிறைந்த யாரோ ஒருவர்
ஏங்கிக்கொண்டிருக்கும் இடமாகவும் இந்த இடம் இருக்கலாம். அதையும் கவனத்தில்
கொள்வோம்.
*
இனிவரும் நான்கு / மூன்று ஆண்டுகளை, இந்தக்
கல்லூரி நாட்களை எவ்விதம் கடக்கலாம், என்னவெல்லாம் அறிந்து
கொள்ளலாம் என்பது குறித்து தீர்மானியுங்கள்.
*
வந்திருப்பதை வெறும் கல்லூரியாக
மட்டும் நினைத்தால், படிக்க வேண்டியதைப் படித்தால், இறுதியில்
பட்டம் கிடைத்துவிடும். வெறும் பட்டம் மட்டுமே ‘எதிர்காலம்’
எனும் பெரும் பயணத்திற்குப் போதுமா?
*
கல்லூரி என்பது பட்டம் மட்டுமே
கொடுக்கும் இடமல்ல. நாம் யாரென நம்மைக் கருதுகிறோமோ, அதைச் செதுக்கித்
தரும் சிற்பக்கூடமும்கூட. முடிந்தவரை உங்களை இந்தக் காலத்திற்குள் செதுக்கிக்
கொண்டு வெளியேறுங்கள்.
*
எப்பொழுதாவது வீட்டில் இருந்து பைக்
அல்லது கார் எடுக்கும்போது, எங்கு போகிறோம், எதற்குப் போகிறோம்,
எவ்ளோ நேரம் ஆகும் எனும் தெளிவில்லாமல் புறப்பட்டிருக்கிறோமா?
அதற்கான பெட்ரோல் செலவு எவ்வளவு இருந்துவிடும்? ஒரு 100 ரூபாய் பெட்ரோல் செலவிற்கே அத்தனை
யோசிக்கின்றோம். அப்ப அடுத்து வரும் வாழ்வின் மிக முக்கியமான நான்கு / மூன்று ஆண்டுகள்
குறித்து தெளிவாகி விட்டோமா? ஏன், எதற்கு,
எப்படி, எங்கு என்பதை உடனடியாக கண்டுபிடிக்கத்
தொடங்குங்கள்.
*
“ஏன் இந்தப் படிப்பைத்
தேர்ந்தெடுத்தோம்!?” எனும் காரணத்தை, நீங்களாகக்
கண்டுபிடிக்கும்வரை, “ஏன்டா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்!?”
எனும் மனநிலை இருக்கவே சாத்தியங்கள் அதிகம்.
*
உங்களை வழிநடத்த பொருத்தமான Mentor யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள். அவர் இனிமேலெல்லாம் பிறக்க
வேண்டியதில்லை. ஏற்கனவே பிறந்து உங்களுக்கு முன், எட்டும்
தொலைவில் சென்று கொண்டிருப்பவரே. மூத்த மாணவர், படித்து
முடித்து வெளியேறியவர், பேராசிரியர், கல்லூரிப்
பேருந்து ஓட்டுனர், தந்தை, தாய்,
உறவு, கல்லூரிக்கு வரும் விருந்தினர், பயிற்சியாளர் உள்ளிட்ட இவர்களில் யாரோ ஒருவராக அவர் இருக்கலாம். இவற்றில்
இல்லாமல் வெளியிலும்கூட இருக்கலாம். தேடிக் கண்டடைய வேண்டியது உங்களின் உடனடிக்
கடமை.
*
“எல்லாம் யாரோ
பார்த்துக்குவாங்க, நான் ஜஸ்ட் ஸ்டூடண்ட் தானே!” என்றெல்லாம் தப்பிக்க நினைக்க வேண்டாம். தனக்கானதைத் தேடி அடையும்
தெளிவும், திறனும், அறிவும்
கொண்டவர்கள்தான் இந்தத் தலைமுறை மாணவ மாணவியர்கள்.
*
கல்லூரி முடித்து வேலைக்குப் போகலாம், தொழில்
துவங்கலாம், நிறுவனம் ஆரம்பிக்கலாம்... அதில் எதுவென
இப்பொழுதே சிந்திக்க ஆரம்பியுங்கள். கல்வியின் கடைசி, கால்
பங்கு காலத்தில் இருக்கின்றோம். இனியும் தாமதிக்க காரணங்களைத் தேடிக்
கொண்டிருக்காதீர்கள்.
*
உங்களுடைய Bio-Dataவில் என்னவெல்லாம் கூடுதலாக இணைக்க முடியும் என்பதை இப்போதிருந்தே
சிந்திக்கத் துவங்குங்கள்.
*
நட்பையும், உங்களின்
குணத்தையும் செழுமைப் படுத்துங்கள். எவருடனும் சொற்கள், செயல்களில்
கவனம் இருக்கட்டும்.
*
No comments:
Post a Comment