May 8, 2017

தலைப்புகளும் செய்திகளும்

சமீபத்தில் ஒரு செய்தித்தாளின் ஏழாம் பக்கத்தில் மூன்று கால அளவிலான ஒரு செய்தியின் தலைப்புச் செய்தியாக பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை - பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைதுகண்ணில் அறைகிறது.

தலைப்பைப் படித்தவுடன் பள்ளித் தாளாளர் தம் பள்ளியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவே கருதத் தோன்றியது. இப்படியாக தலைப்பு வைத்து ஈர்ப்பதில் ஊடகத்தினர் எப்போதும் ஒரு அறம்வைத்திருக்கவே செய்கின்றனர். ‘அப்படி தலைப்பு போட்டாதான் சார் படிப்பாங்க!’ என்கிறார்கள். அவர்களின் கூற்றை பெரும்பாலும் மெய்பிப்பவர்களாகவே நாமும் இருக்கின்றோம்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த தலைப்பிற்குள் ஒரு கணம் உறைந்து, கீழே நகர்ந்து  வாசித்தால், பலாத்காரத்திற்கு உட்பட்டிருப்பது 15 வயதே நிரம்பிய  மாணவி என்பதும், பலாத்காரத்தால் அவள் கர்ப்பம் அடைந்ததும் தெரிய வருகிறது. அந்தக் கர்ப்பம் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த நிலையில் பலாத்காரம் செய்தவன், அந்தப் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதும் தெரிகின்றது. இந்தச் சூழலில் அந்தப் பெண் தன் உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்து போகிறாள். அந்தச் சூழலில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை எழுதி வைத்திருக்கிறாள். ஒருவேளை தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்திருக்காவிட்டால், அது ஒரு தேர்வு பயத்தினால் நிகழ்ந்த மரணமாகவோ, காதல்(!) தோல்வியால் நிகழ்ந்த மரணமாகவோ முடிந்திருக்கலாம்.

பாலத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாய் அமைந்த அந்த நபர் ஒரு பள்ளியின் தாளாளராக இருக்கிறார். அந்தப் பள்ளி இந்த மாணவி படித்த பள்ளி என்பதாக உணர்த்தப்படவில்லை. அந்தக் கொடுஞ்செயலைச் செய்தவன் ஒரு பள்ளியின் தாளாளர் என்பது ஒரு கொடுமை என்றால், தற்கொலை செய்துகொண்ட  பெண்ணின் தந்தையின் சகோதரியினுடைய கணவன் என்பதுதான் மிகப் பெரிய கொடுமை. அதாவது அத்தை வழி மாமா. அடிக்கடி வீடு வந்து செல்லும் உறவினர்.

மேலோட்டமாக தலைப்புச் செய்தியோடு கடந்து போயிருந்தால், ஒரு பள்ளித் தாளாளர், தம் பள்ளி மாணவியை சிதைத்திருக்கிறார் எனும் எண்ணத்தோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக அது தொடர்பான சிந்தனைகளை மட்டும் அதையொட்டி குவிக்கச் சொல்லும். பள்ளிகள் மீது, தாளாளர்கள் மீது ஒரு அவநம்பிக்கையை உண்டாக்கும். அதேநேரம் அப்படியான சில கொடுமைகளும் சில பள்ளிகளில் தாளாளர்களால் நடந்தேறியிருக்கலாம்.

ஆனால் இந்த தலைப்புச் செய்தியில் அமுங்கிப் போனது மற்றும் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுகுடும்ப உறவுகளில் முதல் வட்டத்திற்குள் இருக்கும் உறவுகளால் குழந்தைகள் பாலியல் வக்கிரங்கள், சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்களுக்குள் ஆட்படுவதுதான். இன்றளவும் தங்களுக்கு இப்படியான கொடுமைகள் நிகழ்ந்தால், என்ன செய்ய வேண்டும், எப்படிக் கடந்து மீள வேண்டும்? எனும் அறிவுறுத்தல்களை, விழிப்புணர்வை முழுமையாக இன்னும் நாம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்து விடவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது வரை அப்பா, அம்மாவிற்கு தெரிந்திருக்கிறதென செய்தி சொல்கிறது. அந்தச் சூழலில், அந்த இக்கட்டிலிருந்து மனம் மற்றும் உடலளவில் தம் மகளை மீட்க எப்படி பெற்றோர்கள் மறந்து போனார்கள்? தம் பெண்ணிற்கு நம்பிக்கையளித்து எவ்வகையிலேனும் மீட்டிருத்தல் நலம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவியைக் கடத்தி ஒரு மாதம் அடைத்து வைத்திருந்த டாக்ஸி ஓட்டுனர் என்றொரு செய்தி வருகிறது. அதையும் முழுவதுமாகப் படித்தால், அந்த ஆள் அந்தப் பெண்ணின் சித்தப்பா முறை உறவினராக இருக்கிறான். ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சூழலில் இந்த மாணவியை கடத்தியிருக்கிறான்.



உறவுகளின் நெருக்கத்தில் இருக்கும் வக்கிரம் பிடித்தோரை இனம் கண்டு அவர்களிடம் நம் பிள்ளைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவும் நாம் தொடர்ந்து வழி நடத்தவேண்டும். அதைவிட முக்கியம் குணத்தின் கண்ணியில் எங்கோ ஒரு பிறழ்வு தோன்றி வக்கிரம் கூடுகையில், அதிலிருந்து வெளியேறிட உடல் மற்றும் மன நலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் பெறுவதும் அவசியம்

தன் மேல் ஏவப்படும் பலாத்காரத்தை எதிர்க்கும் உறுதியை பெண் பிள்ளைகளிடம் போர்க்கால நடவடிக்கையாய் புகட்ட வேண்டும். அப்படிதேனும் கொடுமைகள் நிகழ்ந்தால், அது உடலில் நிகழ்ந்த ஒரு விபத்திற்கு நிகரானது எனும் தெளிவினை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உடல் மற்றும் மனக்காயத்திலிருந்து மீண்டு விடலாம் எனும் நம்பிக்கையை தந்தே ஆகவேண்டும். இன்னும் மிச்சம் இருக்கும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவ, சமூகத்திற்கு பாடுபட, சுயமாய் சாதித்து முன்னேறிட ஆயிரமாயிரம் காரணங்கள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் சிதைந்து மீண்டு சாதித்திருக்கும் பெண்களின் காணொளிகள் இணையவெளியெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அதை பதின் மற்றும் பருவ வயதுப் பெண்களிடம் காட்டிவிடுவது அவசியமெனத் தோன்றுகிறது. தாங்க முடியாததைத் தாங்கி, கடக்க முடியாததைக் கடந்து வந்திருப்பவர்கள் வாழ்க்கையையும், அதிலிருக்கும் உறுதியையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிக அவசியமானது.

-



May 7, 2017

வால்பாறை

மீண்டும் வால்பாறை எனும் முழுவதுமான நினைவு சனிக்கிழமை காலையில் வந்தபோது உண்மையில் சோர்ந்து போயிருந்தேன். சரியாக 45 தினங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக் கழக விவேகானந்தர் உயராய்வு மைய நிகழ்ச்சிச் சென்று வந்ததுதான் வால்பாறைக்கான ஓரளவு முழுமையான பயணம். 1989-91 வரை பொள்ளாச்சி அருகே ஒரு பள்ளியில் படித்திருந்தாலும், ஓங்கி நிற்கும் மலை ஒரு வியப்பாக இருக்குமே தவிர வால்பாறைக்குச் சென்று திரும்பும் வாய்ப்பெல்லாம் சாத்தியப்படவேயில்லை. 1999ல் ஒருமுறை நண்பர்களோடு சுற்றுலா சென்று வந்த பிறகு அங்கு செல்லும் வாய்ப்பு வாய்க்கவேயில்லை. 2002ம் ஆண்டு ஜேசிஸ் இயக்கத்தில் மண்டலத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, ஒவ்வொரு சங்கத்திற்கும் ஓரிரு முறையேனும் சென்று வாக்கு சேகரிக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவ்வளவு தூரம் சென்று திரும்புவதெல்லாம் ஆகாது எனக் காரணம் சொல்லி, ஓட்டு சேகரிக்கச்கூட நான் வால்பாறை சங்கத்திற்குச் சென்றிருக்கவில்லை.

அப்படியான ஊருக்குத்தான் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறை வர ஒப்புக் கொண்டிருந்திருக்கிறேன். ஒப்புக்கொண்டது சுமார் 15 நாட்களுக்கு முன்பு. சிக்கிம் பயணத்தில் இருந்தபோது மே 7ம்தேதி வர முடியுமா எனக் கேட்டார்கள். எதுவும் யோசிக்காமல் வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்துவிட்டேன். சிலிகுரி – டார்ஜிலிங் – கேங்க்டாக் – நதுல்லா பாஸ் – கேங்க்டாக் – சிலிகுரி என கடந்த வாரம் மலைமலையாய் ஏறியேறி இறங்கியதில் இப்போதைக்கு மலைப்பயணம் முடியவே முடியாது என்றிருந்த நிலையில், ஒப்புக்கொண்டிருந்த ஏழாம் தேதியும் அருகில் வந்துவிட்டது. இந்த நிலையில் எட்டு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து திரும்பி மூன்று நாட்கள் இடைவெளியில் சென்னையில் இரண்டு ஒருநாள் பயிலரங்குகளை முடித்துவிட்டு சனிக்கிழமை காலைதான் வீடு திரும்பியிருந்தேன். வெள்ளிக்கிழமையே கல்லூரி முதல்வர் அழைத்து வருகை குறித்துக் கேட்டிருந்தார். தொடர் பயணம், பயிலரங்குகள், சராசரி தூக்கம் நான்கு மணி நேரங்கள்தான் என்றிருந்த நிலையில் எப்போது வருவேன் என்று தீர்மானிக்க முடியவில்லை, ஆனால் நிகழ்ச்சிக்குத் தவறாது வந்துவிடுவேன் என்று மட்டும் உறுதிப்படுத்தியிருந்தேன்.

வால்பாறையில் இருக்கும் அனைத்துக் கிராமங்களிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவ, மாணவியர்களை பெற்றோர்களுடன் அழைத்து அவர்களைக் கல்லூரிக் கல்விக்கு ஊக்கப்படுத்துவதே நிகழ்ச்சியின் நோக்கம். பாரதியார் பல்கலைக் கழகத்தின் நேரடிக் கல்லூரியான வால்பாறைக் கல்லூரி தன்னிச்சையாக இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்துவது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆகவே எந்தக் காரணத்தை முன்வைத்தும் அதில் கலந்துகொள்வதை தவறவிட்டுவிட முடியாது. ஆகா, எல்லா வகையிலான உடலின் அலுப்பு, சலிப்புகளை ஒதுக்கி மாலை புறப்பட்டு இரவு சென்றடைந்தேன். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக வால்பாறையில் தங்கும் இரவு.

இரவின் தட்பவெப்பத்தை உணர்ந்தபின், இந்த கோடைக்கும் ஏதுவான மலைப்பகுதியாக வால்பாறை இருப்பதாகவே தோன்றியது. கோடையில் இரண்டு விதமான மனிதர்கள் உண்டு. குளிரூட்டிகள் துணையோடு உறங்கும் இவர்களில், இரவில் வெம்மையில்லாமல் உறங்கினால் போதுமென குளிரூட்டியை குறைவாக இயங்கும் வகையில் வைத்துக் கொள்கிறவர்கள் ஒருவகை, குளிர வேண்டும் என தட்பவெப்பநிலையை அதளபாதாளத்தில் வைத்து போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குபவர்கள் இன்னொரு வகை.

வால்பாறை முதல் வகை மனிதர்களுக்குப் போதுமானது. காற்றாடியை முதல் அல்லது இரண்டாம் வேகத்தில் வைத்துக் கொண்டு எளிதாய் உறங்கிப் போகலாம். உதகை, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு போல் தண்ணீரைத் தொடுவதற்கு நடுங்க வேண்டியதில்லை. அமைதியாய் ஓய்வெடுக்கவும், இரவு பகலை ஓரளவு இனிதாய்க் கடப்பதற்கும் வால்பாறை மிகத்தோதான ஒரு இடமாகவே மனதில் பதிந்துபோனது.



பயணிக்க இவ்வளவு அழகான மற்றும் நெரிசல் குறைந்த சாலை வேறு மலைப்பகுதிகளில் இல்லையென்றே கருதுகிறேன். செல்லும் பாதையெங்கும் அடர் வனமாய் இருந்து, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த வனமும் அழிக்கப்பட்டு, முழுக்க முழுக்க தேயிலைத் தோட்டங்களாக இருப்பதைக் காணும்போது வருத்தம் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கு மனிதன் மட்டுமே எதனினும் சுயநலம் மிகுந்தவனாக இருக்கும் சாபம் புரிபடவேயில்லை.

கல்லூரியினர் செலுத்தியிருந்த உழைப்பிற்கு நிகரான எண்ணிக்கையில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் இந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்து சேரவில்லை என்ற சிறு வருத்தம் அவர்களுக்கு இருந்தாலும், வந்திருந்த மாணவ மாணவிகள் தம் படிப்பை கல்லூரிக் கட்டத்திற்கு நகர்த்துவார்கள் எனும் நம்பிக்கை இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களுக்குக் கிட்டியிருக்கும். அதைவிட முக்கியம், இம்மாதிரியான ஒரு செயலுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒட்டுமொத்தமாய் கூடியிருந்த கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் கல்லூரி மீது நன்மதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.



எங்கிருந்தோ அழைத்து, இழுத்து, பிடித்து வரப்பட்டவர்களால் தான் இன்றைய வால்பாறையும், அதன் தேயிலைத் தோட்ட அடையாளங்களும். தலைமுறை தலைமுறையாய் தோட்ட வேலையிலிருப்பவர்களின் பிள்ளைகள் சிலர் முதன்முறையாக கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார்கள், நுழையப்போகிறார்கள். அவர்கள்தான் அதுவரையிலான குடும்ப வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைப் பக்கங்களை எழுதப்போகிறவர்கள். அதற்கு உயர்கல்வி மிக முக்கியமான ஒன்றும்கூட.

அவர்களோடு பயனுள்ள வகையில் ஒரு பொழுதைக் கழிப்பதை நினைக்கும்போது, பயணம், வேலைப்பளு என்றிருக்கும் அலுப்பு சலிப்பை ஒதுக்கிவிட்டு சிரமப்பட்டேனும் சென்றுவிடுவது ஒன்றும் ஆகாத காரியமில்லை. விரும்பியதைச் செய்தேன்… நிறைவாய் இருக்கிறது.

-



May 5, 2017

அமுது

மேனி தின்று
பசியாறத் துடிக்கும்
அத்தனை விழிகளுக்கும்
மௌனம் பேசும்
பார்வையாலும்
கசப்பு வழியும்
புன்னகைகளாலும்
அமுதூட்டுகிறாள்
நாட்டியக்காரி

May 4, 2017

சூது



சக்கரம் சுழல்கிறது
இது சூதாட்டம் தான்
ஒருமுனையில் நடத்தும் நீ
மறுமுனையில் கனவுகளை
பணயம் வைத்த நான்
நிற்கும் புள்ளியில்தான்
இருவர் வாழ்க்கையுமே

சுழன்றோயும் சக்கரத்தின் மீது
தோற்பவருக்கு குரோதமும்
வெல்பவருக்கு பிரியமும் குவியலாம்
ஆயினுமென்ன சுற்றும் பொழுதெல்லாம்
சக்கரம் சுழன்றுகொண்டேயிருக்கும்


May 3, 2017

சாபம் சூழ் முத்தம்



முற்றுப்புள்ளியின்றி திகட்டுகிறது
மகரந்தம் நிரம்பியிருக்கும்
கனவு முத்தமொன்று

நினைவுத் தகட்டை தீயிலிட்டு
சேமித்து வைக்கப்பட்டிருந்த
பாடல்களையும் படங்களையும்
பொசுக்கி அழிப்பதுபோல் கரையும்
கனவு முத்தச்சுவை சூழ் சாபம்

தீர்க்கும் முத்தம் யாதோ!

May 2, 2017

வேகத்தின் ருசி

து நான்கு வழிச்சாலைகள் இல்லாத காலம். எதிரெதிரே வாகனங்கள் சீறியபடியே இருக்கும், சாலையோரங்களில் மரங்கள் அடர்ந்திருக்கும். பயணங்கள் எதுவும் பெரிய குறையாகத் தெரியவில்லை. காலம் வளர்ச்சியென்ற வடிவில் சாலைகளை விரிவாக்கம் செய்யப் பணித்தது. அத்தனை மரங்களும் வெட்டப்பட்டன. கண்ணுக்கெட்டும் வரை நேர்கோடாய், அலை மடிப்புகளோடு அழகிய வடிவம் கொண்டன சாலைகள். இடையில் மட்டும் அரளிச்செடிகள் புகை படிந்து. செல்லும் வழியெங்கும் இருக்கும் ஊர்களைப் புறக்கணித்து புறவழிச் சாலைகள். அந்தச் சாலைகள் மீது சொல்லொணா கவர்ச்சியொன்றுன்று. செல்லும் இடத்தை விரைந்து அடைய யாருக்குத்தான் பிடிக்காது. ஆனாலும் நமக்கு இப்படியான புறவழிச்சாலைகள் வராத காலம்வரை, ஊர்களினூடாகப் பயணித்தது குறித்து புகார்கள் இல்லை, சலிப்புகள் இல்லை.

இப்போது அப்படியொரு பயணம் வாய்க்கும்போது, புறவழிச் சாலையில் விரையும் பேருந்து எங்கேனும் ஊர்ப் பக்கம் நுழைந்தால் மிகுந்த கோபம் வருகிறது. புறப்பட்ட இடத்திலிருந்து செல்லுமிடத்திற்கு உடனே செல்ல வேண்டுமென்கிற வேட்கை ஏற்படுகிறது. சில நேரங்களில் அது வெளியில் பகிர முடியா வெறி அல்லது அவஸ்தை. ‘அது எதுவாக இருந்தால் என்ன? எனக்கு வேகமாகப் போகவேண்டும்என்கின்ற தவிப்பு அது. என்றைக்கு நெகுநெகுவென, மிதப்பது போன்ற உணர்வு தரும் சாலையில் பயணிக்க ஆரம்பித்தோமோ, அப்போது முதல் விரிவுபடுத்தப்பட்ட  சாலைகளென்றாலே வேகம் அப்பிக்கொண்டது.

இந்த வேகம் வெறும் பயணித்திற்கானதாக மட்டுமில்லை. ஆழ்ந்த உளவியல் ரீதியானதும்கூட. ஒருமுறை வேகத்தின் ருசி உணர்கின்றவர்களைஇனியெல்லாம் வேகம் என்பதே தம் விருப்பமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. வேகம் குறித்துப் பேசுகையில் வேகம் எனும் சொல்லை தனக்குள் அடைத்துக்கொண்டு கண்ணியமாய் வேடிக்கை பார்க்கும் விவேகம் என்ற சொல் குறித்துச் சிந்திக்கத் தோன்றுகிறது. இவ்விரண்டு சொற்களுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கும்? எதிலிருந்து எது வந்திருக்கும்? ஒரு எழுத்தில் வேறுபடும் இவ்விரு சொற்களும் எப்படி எதிரெதிர் முரண்களாய் வாழ்கின்றன என்றெல்லாம் யோசிக்காமல் இல்லை.



மீபத்தில் ஒரு கல்லூரியில் முப்பெரும் விழா. நையாண்டியும், கருத்துச் செறிவும் கலந்த பாட்டரங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. உதவியாய் இரண்டு இசைக் கலைஞர்கள். அதில் ஒருவர் பார்வைத் திறனற்றவர்நிகழ்வின் இடையே ஒரு பேராசிரியர் பாடுவதற்காக அழைக்கப்படுகிறார். அந்த இடைவெளியில் இரண்டு பாடகர்களும், இசைக்கலைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒலி வாங்கியை கையில் ஏந்திவிடியுது... பொழுது விடியுதுஎனும் பாடலைப் பாடத் துவங்கிய பேராசிரியர் தன் வரிகளுக்கான இசை கோர்க்கப்படவில்லை என்பதை உணர்ந்து அடுத்த வரிக்கு நகரத் தடுமாறுகிறார். சட்டென இசைக் கலைஞர்களைப் பார்த்தவாறு மீண்டும் அதே வரியைப் பாடுகிறார். பார்வையற்ற கலைஞருக்கு இவர் பார்ப்பது, எதிர்பார்ப்பது தெரிய நியாயமில்லை.

சூழலை உணர்ந்த மற்றொரு பாடகர், சுதாரித்து பார்வையற்ற இசைக்கலைஞரின் முதுகைத் தொடுகிறார். அது நீ இசைக்க வேண்டும்என்பதற்கான உத்தரவு. தன்னிலை மீண்ட அந்தக் கலைஞர், இசைக்கும் குச்சிகளை ஓங்குகிறார். அப்பொழுது பாடல் வரி இடையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஓங்கிய குச்சிகளை அடிக்காமல், காற்றிலேயே வைத்தபடி வரியின் நிறைவுக்காகக் காத்திருக்கிறார். வரி நிறைகிறது. ஒரு இடைவெளி கிடைக்கிறது. அடுத்த வரியின் முதற்சொல் ஒலிக்கையில் முன் குச்சிகளை நளினமாய் இறக்குகிறார். அதிரும் இசை இணைந்து பயணிக்கிறது. தருணம் இனிக்கிறது. இந்தக் காட்சியில் அந்த இசைக் கலைஞர் குச்சிகளை ஓங்கியது வேகம் என்றால், வரி நிறைவுறும் வரைக் காத்திருந்தது விவேகம் என்றாகிறது.

ந்த யுகத்தின் மாபெரும் அறப்போராய் நிகழ்ந்தேறிய மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்கூட விவேகத்தின் அடையாளமென்றே கருதத் தோன்றுகிறது. அந்தப் போராட்டமும்கூட நம் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கதவு தட்டல்தான். திறக்கப்படுவதற்காக இரண்டு வழிகளை மேற்கொள்ளலாம். பதட்டமாகவோ, நிதானமாகவோ தட்டுவது ஒரு வழி. எது குறித்தும் பிரஞ்னையற்று உடைத்துத் திறத்தல் இன்னொரு வழி. இவற்றில் எதில் வேகம், எதில் விவேகம் அடங்கிய வேகம்  என்பதை நாம் அறிவோம். அந்தப் போராட்டத்தின் முடிவு கசப்பானதாய் மாற்றப்பட்டதில் அரசியல் இருந்தாலும் அதுவும் வேகம் என்பதின் ஒரு வடிவமே!
 
நீண்டு கொண்டிருந்த போராட்டத்தின் நிறைவுக் கணங்களை வேகமாய் அல்லது விவேகமாய்க் கையாளும் பொறுப்பு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டது. அதை வேகமாய்க் கையாண்டவர்கள் அதையொரு கறுப்பு தினமாய் மாற்றினர். போராட்ட முடிவை விவேகமாய்க் கையாண்ட காவல்துறை இணை ஆணையர் ஒருவர், தம் செயலை ஒரு முன்னுதாரணமாக அமைத்து தன்னை கதாநாயகனாய் மாற்றிக் கொண்டார்.

தீக்குச்சி உரசுகையில் உருவாகும் நெருப்புக்கு பெயரிடச் சொன்னால், நான் அதற்குவேகம்என்று பெயரிடுவேன். அழுத்தி அடைப்பட்டுக் கிடந்த வெப்ப ஆற்றலின் விடுதலை அது. விடுதலை இப்படியானது என்பதை உருவகிக்கும் செயல் அது. ஆனால் அதை வேகமாகவே பயன்படுத்துவதற்கும், விவேகமாகப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இலக்கின்றி வேகமாய் இயங்கும் நெருப்புச் சொட்டினை, எதன் மீதேனும் தூக்கிப்போட்டால், அது தன் வேகத்தைப் பல மடங்கு பெருக்கி எதையும் அழிக்கும் வல்லமை கொண்டதாய் மாறிப்போகிறது. பாரதியின் அக்னிக் குஞ்சுக்கு பெருங்காடொன்றினை வெந்து தணிக்கச் செல்லும் வல்லமை இருந்ததுதானே. ஆற்றலும் வேகமும் ஒருங்கே இருக்கும் நெருப்பை ஒரு ஒழுங்குக்குள் ஆட்படுத்துவதை விவேகமெனக் கருதத் தோன்றுகிறது.

அதை அடுப்பின் வழி செலுத்தி அதன் மேல் கனை வைத்தால் அது சமைக்க உதவும் நெருப்பு. இயந்திரங்களின் வடிவத்திற்குள், பொருந்தும் வழிகளினூடாக செலுத்தினால் மாபெரும் ஆற்றல் கிட்டும். நீரில் மிதக்கும் கப்பலின் இயந்திரத்திற்குள்ளிருப்பதாக மாற்றினால்நீந்திக் கடல் கடக்கவும், விமானத்தின் இயந்திரத்திற்குள்ளிருப்பதாக மாற்றினால் . வானமேகி எல்லைகள் கடந்து பறக்கவுமான ஆற்றல் அது. அதையே ராக்கெட் இயந்திரத்திற்குள் செலுத்தினால் கோள்கள் தேடும் ஒரு பேராற்றல்.

இதோ காட்டாறு என்பதை வேகமென உருவகப்படுத்துகையில் அதன் வேகம் மிரட்சியூட்டுகிறதுஅதே காட்டாற்றை அணை கட்டித் தேக்கும்போது தன்னை விவேகமுடையதாய் வடிவமைத்துக் கொள்கிறது. வேகமாய் நகரும் நீரை, தடுப்பு ஏற்படுத்துகையில் இயல்பாகவே அழுத்தம் கூடுகிறது. அழுத்தம் கூடிய  நீரை ஒரு பாதை வழியாய்ச் செலுத்தி சக்கரத்தைச் சுழல விட்டால், அங்கிருந்து கிடைப்பதுபசுமை மின் சக்தி’. அணையிருந்து மதகுகளின் வழி செலுத்தி நீர்மின் திட்டங்களுக்கும், கால்வாய் வழியே பாசனங்களுக்கும் பயன்படுத்தும் செயலுக்கு பெயர்தானே விவேகம்.

இடை விடாது வீசும் காற்றின் வேகத்திற்கு குறுக்கே, தூண் ஒன்றை நிறுவி அதன் தலையில்  காற்றாடியைப் பொருத்தினால், விவேகமாய் மாற்றப்படும் காற்றில் சுழலும் காற்றாடியிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

இயற்கையின் வடிவத்திற்குள் மாறாமல் இருப்பவை இன்னும் கோடானு கோடி. குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்க, ஒருபோதும் வேகத்தை விரும்புவதில்லை. தன் வருகைக்காக பனிரெண்டாண்டுகள் காத்திருக்க ஆணையிடுவது அவற்றின் கர்வம் அல்லது அதுதான் இயற்கையின் நியதி.

கருவாகும் ஒரு உயிர் வேகமாய் உலகைக் காண நினைத்தால் அதற்குப் பெயர் குறைப் பிரசவம். அதே உயிர் மிக வேகமாய் உலகைக் காண நினைத்தால் அதற்குப் பெயர் கருச்சிதைவு. கருவொன்று இந்த உலகை நோக்கி வருவதற்கு பத்து மாதங்கள் தேவையென்பது இயற்கையின் நியதி. அதற்கு கோடானு கோடிக் காரணங்கள் இருக்கும். அந்தக் காரணங்களை வேகமென்ற பெயரில் கேள்வி கேட்க இன்னும் அனுமதிகள் வழங்கப்படவில்லை.

வேகத்தைக் காதலிக்கும், நேசிக்கும், யோசிக்கும், யாசிக்கும் எவரொருவரும் மரணம் என்று வரும்போது மட்டும் வேகத்தை விலக்க நினைக்கும் முரண் எவ்வளவு அழகியதொரு தத்துவம். வேகமாய் வாழ்வு முடிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே, ஒவ்வொருவரும் காலை நேரங்களில் வேர்க்க விறுவிறுக்க வேகமாக ஓடுகிறோம், நடக்கிறோம். ஒன்று சாலையில் அல்லது மருத்துவமனைகளை நோக்கி என்பது நமக்குப் புரியும் கணம் விவேகம் முளைக்கும் ஒரு புனித கணம்.

ஆங்கிலத்தில்விஎனும் எழுத்து விக்டரி எனும் வெற்றியைக் குறிப்பதாகச் சொல்வதுண்டு. அதை இங்கு பொருத்துவது சரியாக வருமா என்ற சந்தேகம் இருந்தாலும், அழகானதாகப் பொருந்துவதை மறுக்க முடியாது. ‘விஉடன் இணையும் வேகம்விவேகம்என்று கருதப் பிடிக்கிறது. விவேகம் என்பது வேறொன்றுமில்லை. அது வேகத்தைக் கையாளும் ஒரு ஆகச்சிறந்த கலை!

-

நம்தோழி ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை

-


May 1, 2017

உயிர்த்தல்



தறிக்கப்பட்டு எஞ்சியிருக்கும்
பெருமரத்தின் அடிக்கட்டையில்
கிளைகளாய் கைகள் நீட்டிக்
காத்திருக்கிறேன்

இளைப்பாறக் கிளைதேடும்

பறவையொன்று 
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...