Showing posts with label மாணவிகள். Show all posts
Showing posts with label மாணவிகள். Show all posts

Sep 3, 2019

அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?

திருவையாறு...
இத்தனை ஆண்டுகாலமும் கேள்விப்பட்ட ஒரு ஊர் பெயர் மட்டுமே. ஒரே ஒரு முறை மட்டும் பெரம்பலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நாகப்பட்டினம் செல்லும் வழியில் அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையே திருவையாற்றினைக் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த ஊரின் திருப்பத்தில் அசோகா இனிப்பு சாப்பிடுவதற்காக காவிரி ஆற்றின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து சாப்பிட்டது தவிர வேறெதுவும் தெரியாது.
இந்தச் சூழலில்தான் திருவையாறு அரசர் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்கள். அதன் நிமித்தமாக கவிஞர்.கிருஷ்ணப்பிரியா முன்னெடுப்பில் அங்கிருந்து ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திரு. குப்பு வீரமணி அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவே சென்றடைந்த என்னை நட்புகளோடு வரவேற்றார். அன்பாக உபசரித்தார்.
நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் முடிந்தவரை பங்கேற்பாளர்களின் நிலை, பின்புலம், தேவை ஆகியவற்றை அறிந்துகொள்ள முற்படுவேன். அதன் காரணமாகவே முந்தைய தினமே திருவையாறு சார்ந்த யாரும் இருக்கிறீர்களா என ஃபேஸ்புக்கில் கேட்டு சிலரிடம் தகவல்கள் பெற்றிருந்தேன். எனினும் முழுமையான வடிவம் கிட்டவில்லை. திருச்சியிலிருந்து கல்லணை வழியாக ஆற்றையொட்டியே பயணப்பட்டத்தில் நான் கடந்தது அத்தனையும் கிராமங்கள். அங்கும் சுற்று வட்டமும் கிராமங்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மூன்று மணி நேர அமர்வு என்பதால் LCD வேண்டுமெனக் கேட்டிருந்தேன். இரவுதான் அந்த வசதி இல்லையெனக் கூறியிருந்தார்கள். ஆகவே உரை மற்றும் உரையாடலாவே சமாளிக்கும் மனநிலைக்கு மாறத் துவங்கினேன்.
கல்லூரியின் வரலாறு சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சரபோஜி மன்னரின் அந்தப்புர மாளிகையாக இருந்த கட்டிடத்தில் சமஸ்கிருத பட்டப்படிப்பு துவங்கப்பட்டிருக்கின்றது. சத்திரம் எனும் நிர்வாகத்தின் வாயிலாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரி. தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி என்று மட்டும் இதுவரை பார்த்து வந்த எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் கல்லூரி என்பது ஆச்சரியமாக இருந்தது.
காலையில்தான் அந்தக் கல்லூரியில் இருக்கும் பாடப்பிரிவுகள் தெரியவந்தன. இளங்கலை தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் முதுகலை தமிழ் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. அரங்கு குறித்து விசாரித்தபோது, அடுத்த இடி இறங்கியது. நாற்காலி வசதி இல்லை, அனைவரும் கீழேதான் அமர வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.
நிலத்தில் அமர்வது அவர்களுக்குப் பழகியிருந்தாலும், பயிற்சியாளராக எனக்கு நாற்காலிகளில் அமர்த்தப்படாத பிள்ளைகளிடம் உரையாடுவது பெரும் சவாலானது. கீழே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் நடப்பது, எந்நேரம் கழுத்து வளைந்தபடி நம்மையே அவர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது எல்லாமே சிரமத்திற்குரியது.
LCD இல்லை, நாற்காலிகள் இல்லை. தலைக்கு மேலே வெள்ளம்... இனி சாண் என்ன முழமென்ன என்ற மனநிலையில் இருந்தேன்.
நிகழ்ச்சி குறித்த எந்த விளக்கங்களுமின்றி, எல்லோரும் மீட்டிங் ஹால்ல உட்காருங்க என்றுதான் அழைத்து வரப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்துகொண்டேன். அனைத்து மாணவிகளும் நிலத்தில் அமரவைக்கப்பட்டிருக்க, மிகச் சொற்பமாய் இருந்த மாணவர்கள் மட்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் பெருந்தொகையான மாணவிகளுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவும் படிப்பு என்ன பெரிய படிப்பு என்ற மனநிலை இருந்திருக்கலாம்.
என்ன நிகழ்ச்சி என்று தெரியாது, எப்போது முடியுமென்று தெரியாது, பேசுபவர் குறித்தும் அறிமுகமில்லை, நிலத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுள்ளிட்ட எந்தக் குறையும், குழப்பமும் இல்லாமல் அந்த மாணவிகள் தம் பார்வைகளில் ஒரு கூர்மையைத் தக்க வைத்திருந்தனர்.
முதல் நாள் பயணம், இரவு உறக்கமின்மை, ஏற்பாடுகளில் சில தடுமாற்றங்கள் என என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை அலுப்பு, சலிப்புகளையும் சில நிமிடங்களில் துடைத்தெறியும் வீரியம் அவர்களிடமிருந்தது. உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களையும் தனக்குள் பத்திரப்படுத்தும் பசி அவர்களிடமிருந்தது. முந்தைய நிகழ்வுகள் எத்தனையோ மனதிற்குள் நிழலாடினாலும், இவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.


ஒன்னரை மணி நேரம் கழிந்து தேநீர் இடைவேளை விட்டபோது, சூழ்ந்து கொண்டு “அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?” எனக் கேட்டார்கள். ஆச்சரியமாக ஏன் எனக் கேட்டேன். “கொஞ்சம் தான் பேசியிருக்கீங்க, ப்ளீஸ் சார் நிறையப் பேசுங்க சார்!” எனக் கெஞ்சலாகக் கேட்டதை இங்குதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஆட்டோகிராஃப் வாங்க குவிந்தவர்களிடம், (அது ஒரு ஆர்வ விளைவு மட்டும்தானே) இதை வாங்கி என்ன செய்யப்போறீங்க எனக்கேட்டேன் “என்னைப் பத்தின வரையறையை அதில் எழுதி வச்சுக்குவேன்” என்றார்கள் பலரும்.
இத்தனை நெகிழ்வான அனுபவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த கவிஞர்.கிருஷ்ணப்ரியா மற்றும் திரு. குப்பு வீரமணி ஆகியோருக்கு ப்ரியம் நிறைந்த நன்றிகள். நிகழ்விற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு தஞ்சையிலிருந்து தமது கணவரோடு வந்து கலந்துகொண்ட கவிஞர் கிருஷ்ணப்பிரியா பேரன்பிற்கு உரியவர். எழுபது வயதுகளைக் கடந்திருந்தாலும், அச்சு அசலான இளைஞருக்குரிய ஆர்வத்தோடு எல்லாவற்றிலும் செயல்பட்ட அய்யா குப்பு வீரமணி அவர்கள் மிகப் பெரும் ஆச்சரியத்துக்குரிய முன் மாதிரி.
நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார் இலக்கியத் தடம் அமைப்பைச் சார்ந்த குணா ரஞ்சன் அவர்கள். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


Nov 10, 2018

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் ஒரு நாள்


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நேர வேறுபாடில்லையெனினும், மட்டக்களப்பு கொல்கொத்தாவிற்கு நேர்கோட்டில் இருக்கும் நிலப்பரப்பு என்பதால் விடியல் முன்கூட்டியே நிகழ்ந்துவிடும். ஆறு மணிக்கு முன்பாக நல்ல வெளிச்சத்தைக் காண முடியும். நொடிப்பொழுதில் கரைந்தது போல் இருந்தது அன்றைய இரவு. விழித்தவுடன் அன்றைய இரண்டு நிகழ்வுகளும் மனதை ஆக்கிரமித்திருந்தன.

முறையாக நான் காலை 7.30 மணிக்கு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் இருக்க வேண்டும். A–Level என்றழைக்கப்படும் Advanced Level பிள்ளைகளுக்கான பயிலரங்கு. தமிழகத்தின் +2 மாதிரி, ஆனால் அங்கு மொத்தம் 13 வருடங்கள் படிக்க வேண்டும். A–Level தேர்வில் பெறும் மதிப்பெண் / தரத்திற்கு ஏற்ப அவர்கள் யுனிவர்சிட்டிக்கு செல்வார்கள். சிசிலியாவில் A–Level பயிலும்  மாணவிகளுக்கு பயிலரங்கு. இங்கு திட்டமிடப்பட்ட நேரம் காலை 8 முதல் 11 மணி வரை. அன்றே மதியம் 3 மணி முதல் 6 மணி வரை அங்கேயே சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்குப் பயிலரங்கு.

முன்கூட்டியே சிசிலியா கல்லூரி அதிபர் (முதல்வர்) அருட்சகோதரி. மேரி சாந்தினி அவர்களிடம், ஞாயிறு இரவுதான் வந்து சேருவேன் என்பதால், துவங்கும் நேரத்தை மட்டும் 8.30 அளவில் வைத்துக்கொள்ளலாமா என அனுமதி கேட்டிருந்தேன். அவரும் உங்கள் வசதிப்படி வாருங்கள் என அனுமதித்ததால், காலையில் நேர நெருக்கடி எதுவுமில்லை. காலையில் அழைத்து 9 மணிக்கு வந்து சேர்ந்துவிடுவதாகக் கூறியிருந்தேன்.

2015 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தில் பணியாற்றும் பலதரப்பட்ட தமிழ் உறவுகளை பல்வேறு தருணங்களில் சந்தித்திருந்தாலும், கடந்த ஆண்டுதான் யாழ்ப்பாணத்தில் A–Level பிள்ளைகளை முதன்முறையாக சந்தித்திருந்தேன். ஆகவே இந்த ஆண்டு தொடர்ந்து ஐந்து நாட்களில் ஏழு இடங்களில் விதவிதமான பிள்ளைகளையும், இரண்டு அமர்வுகளில் அவர்களின் ஆசிரியர்களையும் சந்திப்பது குறித்து சுவாரஸ்யமும்  மென் அழுத்தமும் ஒருங்கே கலந்திருந்தன.

நண்பர் கண்ணன் என்னை சிசிலியா பெண்கள் கல்லூரிக்கு அழைத்து வந்தார். வாயிலிலேயே கல்லூரியின் அதிபர் இருந்தார். மிகுந்த வாஞ்சையுடன் கூடிய வரவேற்பு அன்றைய தினத்திற்கு நல்ல துவக்கமாய் அமைந்தது. சில நிமிட உரையாடல் மற்றும் தேநீருக்குப் பின் அரங்கிற்குச் சென்றோம்.

அருட்சகோதரி. மேரி சாந்தினி அவர்கள் வரவேற்பு மற்றும் அறிமுகம் வழங்க பயிலரங்கு தொடங்கியது. மாணவிகள் அரங்கு முழுக்க நிரம்பியிருந்தனர். இந்தியாவில் இருந்து வந்திருக்கும் ஒருவரைச் சந்திப்பது அவர்களுக்கு பல்வேறு மனநிலைகளைத் தந்திருக்கலாம். முதலில் இது என்னவாக இருக்கும் என்பது போன்ற தயக்கம் இருந்தாலும், சிறிது நேரத்தில் என்னோடு இணைந்து பயணிக்கத் தொடங்கினர். மொழியைப் பொறுத்த வரையில், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் புண்ணியத்தில் என் தமிழ் அவர்களுக்கு முழுக்க விளங்கும். அவர்களின் தமிழை மட்டும் ஓரிரு நாட்களுக்கு நான் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். நிகழ்வில் அனைத்து மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கூடிய பங்களிப்பை இடைவிடாது வழங்கினார்கள்.



பயிலரங்கின் இடைவேளைக்குப் பின்புதான் கவனித்தேன் அந்த மாணவியின் முகத்தை. நட்பு குடும்பம் ஒன்றின் மூத்தவள். முல்லைத்தீவுப் பகுதியில் போரில் மிகுந்த பாதிப்படைந்து, மீண்டு மட்டக்களப்பில் வாழ்க்கையை தொடங்கிய குடும்பம். சில ஆண்டுகளுக்கு முன்பு என் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்த பெண் குழந்தை அவள். அங்குதான் படிக்கிறாள் எனக் காலையிலேயே அவர் தந்தை குறிப்பிட்டிருந்தும், அது நினைவில் இருக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகுதான் அந்த முகம் பளிச்செனப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் மகிழ்வோடு கை குலுக்கி நன்றி சொல்ல அலையலையாய் வந்த மாணவிகளில் அவளும் வர, கை பற்றி ஏன் முன்னமே வந்து பேசல எனக் கேட்க மலர்ந்து சிரித்தாள். வளர்ந்தோங்கி கல்வியில் நல்ல இடம் பிடித்தது குறித்து மகிழ்ச்சியாக இருந்தது.



மதியம் 1 மணியளவில் பயிலரங்கு நிறைவடைய, மனதும் திருப்தியில் நிரம்பியது. ஆனால் முந்தைய நாள் இரவு 12 மணிக்கு சாப்பிட்டிருந்ததால், காலையில் உணவைத் தவிர்த்திருக்க பசி உயிரைத் தட்டிக் கொண்டிருந்தது. வாங்க சாப்பிடலாம் என்ற அழைப்பிற்கு பாய்ந்து சென்றேன் என்றே சொல்லலாம்.

அருட்சகோதரி முன்னின்று பரிமாறத் தொடங்கினார். ”மட்டக்களப்பு ஃப்ரெஷ் மீன்என்று சுட்டியதைக் கண்டபோதுதான், அவர் காலையில் வெஜ் ஆர் நான்வெஜ்எனக் கேட்டதற்கு நான் வழக்கம்போல் குறும்பாகப்யூர் நான்-வெஜ்எனச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. மிக மிக திருப்தியான உணவு. நாவைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் சாப்பிட்டுக் கொண்டேயிருக்க உள்ளுணர்வு மதியம் நடத்த வேண்டிய பயிலரங்கை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது.



உணவுக்குப்பின் ஆசிரியர்களுக்கான பயிலரங்குத் தயாரிப்பைச் செதுக்குவதற்கு ஒதுக்கிக் கொண்டேன். மூன்று மணிக்கு பயிலரங்கு தொடங்கியது. சிசிலியா கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மைக்கேல்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் அரங்கில் நிரம்பியிருந்தனர்.

ஆசிரியர்களுக்கான பொதுவான சவால் என்பது, பயிலரங்கு போன்ற அமர்வுகளில் தொடர்ந்து அமர்ந்திருத்தல். வகுப்புகளில் பெரும்பாலும் நிற்க வேண்டிய ஆசிரியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து அமரும் சூழல் வரும்போது அதைக் கையாள மிகவும் சிரமப்படுவார்கள் என்பதே என் புரிதல். வழக்கமாக பள்ளி நேரம் மதியம் 1.30க்கு முடிந்து விடும். ஆனால் இந்தப் பயிலரங்கிற்காக மூன்று மணி நேர மாலைப் பொழுதை ஒதுக்கவேண்டியிருந்ததே அந்த ஆசிரியர்களுக்கான மிகப் பெரிய சவால் என நான் நினைத்துக்கொண்டேன்.



அவர்களுக்கும் பயிலரங்கு குறித்து யோசனைகளும், சந்தேகங்களும் இருந்திருக்க வேண்டும். முதலில் அடர்த்தியான அமைதியோடு இருந்தவர்கள் நேரம் செல்லச் செல்ல இணைந்து பயணிக்கத் தொடங்கினர். இறுதியாக ஆசிரியர்களோடு விதவிதமாய் நிழற்படங்கள் எடுத்துக் கொள்ள இரண்டாம் நிகழ்வு நிறைவாய் அமைந்தது. 

பிள்ளைகளுக்கான அமர்வில் என்னை அறிமுகப்படுத்தியதோடு அதிபரும், ஆசிரியர்களும் சென்றுவிட, அந்த ஸ்பேஸ் மாணவிகளைப் பேச அனுமதிக்கும் வாய்ப்பாக அமைந்தது. அதே நேரம் ஆசிரியர்களுக்கான அமர்வில் பங்கெடுத்த அதிபர், தன்னை அதிபராக மட்டும் கருதிக் கொள்ளாமல், இயல்பான பங்கேற்பாளராக மாற்றிக்கொண்டு, தான் ஒரு உதாரணமாக விளங்கினார். கேள்விகள் விழும்பொழுதெல்லாம் முனைப்போடு பதில் தருவதும், மற்றவர்களைப் பேசத் தூண்டுவதுமாய் அந்த அமர்வை மிக இயல்பாக்கிய பெருமை அருட்சகோதரி. மேரி சாந்தினி அவர்களையே சாரும்.





எல்லாம் நிறைந்து மகிழ்ந்து, நெகிழ்வாய் விடைபெறும்போது, எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டு ஒரு ஆட்டோ வரவழைத்தார். இடம் அடைந்து எவ்வளவு என ஓட்டுனரிடம் கேட்க, “சிஸ்டர் வாங்க வேண்டானு சொல்லிட்டாங்க. மீறி வாங்கினா திட்டு விழும்என மறுத்து யூ-டர்ன் அடித்தார் ஓட்டுனர்.


May 8, 2017

தலைப்புகளும் செய்திகளும்

சமீபத்தில் ஒரு செய்தித்தாளின் ஏழாம் பக்கத்தில் மூன்று கால அளவிலான ஒரு செய்தியின் தலைப்புச் செய்தியாக பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை - பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைதுகண்ணில் அறைகிறது.

தலைப்பைப் படித்தவுடன் பள்ளித் தாளாளர் தம் பள்ளியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவே கருதத் தோன்றியது. இப்படியாக தலைப்பு வைத்து ஈர்ப்பதில் ஊடகத்தினர் எப்போதும் ஒரு அறம்வைத்திருக்கவே செய்கின்றனர். ‘அப்படி தலைப்பு போட்டாதான் சார் படிப்பாங்க!’ என்கிறார்கள். அவர்களின் கூற்றை பெரும்பாலும் மெய்பிப்பவர்களாகவே நாமும் இருக்கின்றோம்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த தலைப்பிற்குள் ஒரு கணம் உறைந்து, கீழே நகர்ந்து  வாசித்தால், பலாத்காரத்திற்கு உட்பட்டிருப்பது 15 வயதே நிரம்பிய  மாணவி என்பதும், பலாத்காரத்தால் அவள் கர்ப்பம் அடைந்ததும் தெரிய வருகிறது. அந்தக் கர்ப்பம் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த நிலையில் பலாத்காரம் செய்தவன், அந்தப் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதும் தெரிகின்றது. இந்தச் சூழலில் அந்தப் பெண் தன் உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்து போகிறாள். அந்தச் சூழலில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை எழுதி வைத்திருக்கிறாள். ஒருவேளை தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்திருக்காவிட்டால், அது ஒரு தேர்வு பயத்தினால் நிகழ்ந்த மரணமாகவோ, காதல்(!) தோல்வியால் நிகழ்ந்த மரணமாகவோ முடிந்திருக்கலாம்.

பாலத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாய் அமைந்த அந்த நபர் ஒரு பள்ளியின் தாளாளராக இருக்கிறார். அந்தப் பள்ளி இந்த மாணவி படித்த பள்ளி என்பதாக உணர்த்தப்படவில்லை. அந்தக் கொடுஞ்செயலைச் செய்தவன் ஒரு பள்ளியின் தாளாளர் என்பது ஒரு கொடுமை என்றால், தற்கொலை செய்துகொண்ட  பெண்ணின் தந்தையின் சகோதரியினுடைய கணவன் என்பதுதான் மிகப் பெரிய கொடுமை. அதாவது அத்தை வழி மாமா. அடிக்கடி வீடு வந்து செல்லும் உறவினர்.

மேலோட்டமாக தலைப்புச் செய்தியோடு கடந்து போயிருந்தால், ஒரு பள்ளித் தாளாளர், தம் பள்ளி மாணவியை சிதைத்திருக்கிறார் எனும் எண்ணத்தோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக அது தொடர்பான சிந்தனைகளை மட்டும் அதையொட்டி குவிக்கச் சொல்லும். பள்ளிகள் மீது, தாளாளர்கள் மீது ஒரு அவநம்பிக்கையை உண்டாக்கும். அதேநேரம் அப்படியான சில கொடுமைகளும் சில பள்ளிகளில் தாளாளர்களால் நடந்தேறியிருக்கலாம்.

ஆனால் இந்த தலைப்புச் செய்தியில் அமுங்கிப் போனது மற்றும் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுகுடும்ப உறவுகளில் முதல் வட்டத்திற்குள் இருக்கும் உறவுகளால் குழந்தைகள் பாலியல் வக்கிரங்கள், சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்களுக்குள் ஆட்படுவதுதான். இன்றளவும் தங்களுக்கு இப்படியான கொடுமைகள் நிகழ்ந்தால், என்ன செய்ய வேண்டும், எப்படிக் கடந்து மீள வேண்டும்? எனும் அறிவுறுத்தல்களை, விழிப்புணர்வை முழுமையாக இன்னும் நாம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்து விடவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது வரை அப்பா, அம்மாவிற்கு தெரிந்திருக்கிறதென செய்தி சொல்கிறது. அந்தச் சூழலில், அந்த இக்கட்டிலிருந்து மனம் மற்றும் உடலளவில் தம் மகளை மீட்க எப்படி பெற்றோர்கள் மறந்து போனார்கள்? தம் பெண்ணிற்கு நம்பிக்கையளித்து எவ்வகையிலேனும் மீட்டிருத்தல் நலம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவியைக் கடத்தி ஒரு மாதம் அடைத்து வைத்திருந்த டாக்ஸி ஓட்டுனர் என்றொரு செய்தி வருகிறது. அதையும் முழுவதுமாகப் படித்தால், அந்த ஆள் அந்தப் பெண்ணின் சித்தப்பா முறை உறவினராக இருக்கிறான். ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சூழலில் இந்த மாணவியை கடத்தியிருக்கிறான்.



உறவுகளின் நெருக்கத்தில் இருக்கும் வக்கிரம் பிடித்தோரை இனம் கண்டு அவர்களிடம் நம் பிள்ளைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவும் நாம் தொடர்ந்து வழி நடத்தவேண்டும். அதைவிட முக்கியம் குணத்தின் கண்ணியில் எங்கோ ஒரு பிறழ்வு தோன்றி வக்கிரம் கூடுகையில், அதிலிருந்து வெளியேறிட உடல் மற்றும் மன நலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் பெறுவதும் அவசியம்

தன் மேல் ஏவப்படும் பலாத்காரத்தை எதிர்க்கும் உறுதியை பெண் பிள்ளைகளிடம் போர்க்கால நடவடிக்கையாய் புகட்ட வேண்டும். அப்படிதேனும் கொடுமைகள் நிகழ்ந்தால், அது உடலில் நிகழ்ந்த ஒரு விபத்திற்கு நிகரானது எனும் தெளிவினை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உடல் மற்றும் மனக்காயத்திலிருந்து மீண்டு விடலாம் எனும் நம்பிக்கையை தந்தே ஆகவேண்டும். இன்னும் மிச்சம் இருக்கும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவ, சமூகத்திற்கு பாடுபட, சுயமாய் சாதித்து முன்னேறிட ஆயிரமாயிரம் காரணங்கள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் சிதைந்து மீண்டு சாதித்திருக்கும் பெண்களின் காணொளிகள் இணையவெளியெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அதை பதின் மற்றும் பருவ வயதுப் பெண்களிடம் காட்டிவிடுவது அவசியமெனத் தோன்றுகிறது. தாங்க முடியாததைத் தாங்கி, கடக்க முடியாததைக் கடந்து வந்திருப்பவர்கள் வாழ்க்கையையும், அதிலிருக்கும் உறுதியையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிக அவசியமானது.

-



வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...