வால்பாறை

மீண்டும் வால்பாறை எனும் முழுவதுமான நினைவு சனிக்கிழமை காலையில் வந்தபோது உண்மையில் சோர்ந்து போயிருந்தேன். சரியாக 45 தினங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக் கழக விவேகானந்தர் உயராய்வு மைய நிகழ்ச்சிச் சென்று வந்ததுதான் வால்பாறைக்கான ஓரளவு முழுமையான பயணம். 1989-91 வரை பொள்ளாச்சி அருகே ஒரு பள்ளியில் படித்திருந்தாலும், ஓங்கி நிற்கும் மலை ஒரு வியப்பாக இருக்குமே தவிர வால்பாறைக்குச் சென்று திரும்பும் வாய்ப்பெல்லாம் சாத்தியப்படவேயில்லை. 1999ல் ஒருமுறை நண்பர்களோடு சுற்றுலா சென்று வந்த பிறகு அங்கு செல்லும் வாய்ப்பு வாய்க்கவேயில்லை. 2002ம் ஆண்டு ஜேசிஸ் இயக்கத்தில் மண்டலத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, ஒவ்வொரு சங்கத்திற்கும் ஓரிரு முறையேனும் சென்று வாக்கு சேகரிக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவ்வளவு தூரம் சென்று திரும்புவதெல்லாம் ஆகாது எனக் காரணம் சொல்லி, ஓட்டு சேகரிக்கச்கூட நான் வால்பாறை சங்கத்திற்குச் சென்றிருக்கவில்லை.

அப்படியான ஊருக்குத்தான் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறை வர ஒப்புக் கொண்டிருந்திருக்கிறேன். ஒப்புக்கொண்டது சுமார் 15 நாட்களுக்கு முன்பு. சிக்கிம் பயணத்தில் இருந்தபோது மே 7ம்தேதி வர முடியுமா எனக் கேட்டார்கள். எதுவும் யோசிக்காமல் வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்துவிட்டேன். சிலிகுரி – டார்ஜிலிங் – கேங்க்டாக் – நதுல்லா பாஸ் – கேங்க்டாக் – சிலிகுரி என கடந்த வாரம் மலைமலையாய் ஏறியேறி இறங்கியதில் இப்போதைக்கு மலைப்பயணம் முடியவே முடியாது என்றிருந்த நிலையில், ஒப்புக்கொண்டிருந்த ஏழாம் தேதியும் அருகில் வந்துவிட்டது. இந்த நிலையில் எட்டு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து திரும்பி மூன்று நாட்கள் இடைவெளியில் சென்னையில் இரண்டு ஒருநாள் பயிலரங்குகளை முடித்துவிட்டு சனிக்கிழமை காலைதான் வீடு திரும்பியிருந்தேன். வெள்ளிக்கிழமையே கல்லூரி முதல்வர் அழைத்து வருகை குறித்துக் கேட்டிருந்தார். தொடர் பயணம், பயிலரங்குகள், சராசரி தூக்கம் நான்கு மணி நேரங்கள்தான் என்றிருந்த நிலையில் எப்போது வருவேன் என்று தீர்மானிக்க முடியவில்லை, ஆனால் நிகழ்ச்சிக்குத் தவறாது வந்துவிடுவேன் என்று மட்டும் உறுதிப்படுத்தியிருந்தேன்.

வால்பாறையில் இருக்கும் அனைத்துக் கிராமங்களிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவ, மாணவியர்களை பெற்றோர்களுடன் அழைத்து அவர்களைக் கல்லூரிக் கல்விக்கு ஊக்கப்படுத்துவதே நிகழ்ச்சியின் நோக்கம். பாரதியார் பல்கலைக் கழகத்தின் நேரடிக் கல்லூரியான வால்பாறைக் கல்லூரி தன்னிச்சையாக இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்துவது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆகவே எந்தக் காரணத்தை முன்வைத்தும் அதில் கலந்துகொள்வதை தவறவிட்டுவிட முடியாது. ஆகா, எல்லா வகையிலான உடலின் அலுப்பு, சலிப்புகளை ஒதுக்கி மாலை புறப்பட்டு இரவு சென்றடைந்தேன். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக வால்பாறையில் தங்கும் இரவு.

இரவின் தட்பவெப்பத்தை உணர்ந்தபின், இந்த கோடைக்கும் ஏதுவான மலைப்பகுதியாக வால்பாறை இருப்பதாகவே தோன்றியது. கோடையில் இரண்டு விதமான மனிதர்கள் உண்டு. குளிரூட்டிகள் துணையோடு உறங்கும் இவர்களில், இரவில் வெம்மையில்லாமல் உறங்கினால் போதுமென குளிரூட்டியை குறைவாக இயங்கும் வகையில் வைத்துக் கொள்கிறவர்கள் ஒருவகை, குளிர வேண்டும் என தட்பவெப்பநிலையை அதளபாதாளத்தில் வைத்து போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குபவர்கள் இன்னொரு வகை.

வால்பாறை முதல் வகை மனிதர்களுக்குப் போதுமானது. காற்றாடியை முதல் அல்லது இரண்டாம் வேகத்தில் வைத்துக் கொண்டு எளிதாய் உறங்கிப் போகலாம். உதகை, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு போல் தண்ணீரைத் தொடுவதற்கு நடுங்க வேண்டியதில்லை. அமைதியாய் ஓய்வெடுக்கவும், இரவு பகலை ஓரளவு இனிதாய்க் கடப்பதற்கும் வால்பாறை மிகத்தோதான ஒரு இடமாகவே மனதில் பதிந்துபோனது.



பயணிக்க இவ்வளவு அழகான மற்றும் நெரிசல் குறைந்த சாலை வேறு மலைப்பகுதிகளில் இல்லையென்றே கருதுகிறேன். செல்லும் பாதையெங்கும் அடர் வனமாய் இருந்து, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த வனமும் அழிக்கப்பட்டு, முழுக்க முழுக்க தேயிலைத் தோட்டங்களாக இருப்பதைக் காணும்போது வருத்தம் மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கு மனிதன் மட்டுமே எதனினும் சுயநலம் மிகுந்தவனாக இருக்கும் சாபம் புரிபடவேயில்லை.

கல்லூரியினர் செலுத்தியிருந்த உழைப்பிற்கு நிகரான எண்ணிக்கையில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் இந்த வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்து சேரவில்லை என்ற சிறு வருத்தம் அவர்களுக்கு இருந்தாலும், வந்திருந்த மாணவ மாணவிகள் தம் படிப்பை கல்லூரிக் கட்டத்திற்கு நகர்த்துவார்கள் எனும் நம்பிக்கை இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களுக்குக் கிட்டியிருக்கும். அதைவிட முக்கியம், இம்மாதிரியான ஒரு செயலுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒட்டுமொத்தமாய் கூடியிருந்த கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் கல்லூரி மீது நன்மதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.



எங்கிருந்தோ அழைத்து, இழுத்து, பிடித்து வரப்பட்டவர்களால் தான் இன்றைய வால்பாறையும், அதன் தேயிலைத் தோட்ட அடையாளங்களும். தலைமுறை தலைமுறையாய் தோட்ட வேலையிலிருப்பவர்களின் பிள்ளைகள் சிலர் முதன்முறையாக கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார்கள், நுழையப்போகிறார்கள். அவர்கள்தான் அதுவரையிலான குடும்ப வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைப் பக்கங்களை எழுதப்போகிறவர்கள். அதற்கு உயர்கல்வி மிக முக்கியமான ஒன்றும்கூட.

அவர்களோடு பயனுள்ள வகையில் ஒரு பொழுதைக் கழிப்பதை நினைக்கும்போது, பயணம், வேலைப்பளு என்றிருக்கும் அலுப்பு சலிப்பை ஒதுக்கிவிட்டு சிரமப்பட்டேனும் சென்றுவிடுவது ஒன்றும் ஆகாத காரியமில்லை. விரும்பியதைச் செய்தேன்… நிறைவாய் இருக்கிறது.

-



No comments: