அது நான்கு வழிச்சாலைகள் இல்லாத
காலம். எதிரெதிரே வாகனங்கள் சீறியபடியே இருக்கும், சாலையோரங்களில்
மரங்கள் அடர்ந்திருக்கும். பயணங்கள் எதுவும் பெரிய குறையாகத்
தெரியவில்லை. காலம் வளர்ச்சியென்ற வடிவில் சாலைகளை விரிவாக்கம்
செய்யப் பணித்தது. அத்தனை மரங்களும் வெட்டப்பட்டன. கண்ணுக்கெட்டும் வரை நேர்கோடாய், அலை மடிப்புகளோடு அழகிய
வடிவம் கொண்டன சாலைகள். இடையில் மட்டும் அரளிச்செடிகள் புகை படிந்து.
செல்லும் வழியெங்கும் இருக்கும் ஊர்களைப் புறக்கணித்து புறவழிச் சாலைகள்.
அந்தச் சாலைகள் மீது சொல்லொணா கவர்ச்சியொன்றுன்று. செல்லும் இடத்தை விரைந்து அடைய யாருக்குத்தான் பிடிக்காது. ஆனாலும் நமக்கு இப்படியான புறவழிச்சாலைகள் வராத காலம்வரை, ஊர்களினூடாகப் பயணித்தது குறித்து புகார்கள் இல்லை, சலிப்புகள்
இல்லை.
இப்போது
அப்படியொரு பயணம் வாய்க்கும்போது,
புறவழிச் சாலையில் விரையும் பேருந்து எங்கேனும் ஊர்ப் பக்கம் நுழைந்தால்
மிகுந்த கோபம் வருகிறது. புறப்பட்ட இடத்திலிருந்து செல்லுமிடத்திற்கு
உடனே செல்ல வேண்டுமென்கிற வேட்கை ஏற்படுகிறது. சில நேரங்களில்
அது வெளியில் பகிர முடியா வெறி அல்லது அவஸ்தை. ‘அது எதுவாக இருந்தால்
என்ன? எனக்கு வேகமாகப் போகவேண்டும்’ என்கின்ற
தவிப்பு அது. என்றைக்கு நெகுநெகுவென, மிதப்பது
போன்ற உணர்வு தரும் சாலையில் பயணிக்க ஆரம்பித்தோமோ, அப்போது முதல்
விரிவுபடுத்தப்பட்ட சாலைகளென்றாலே
வேகம் அப்பிக்கொண்டது.
இந்த
வேகம் வெறும் பயணித்திற்கானதாக மட்டுமில்லை.
ஆழ்ந்த உளவியல் ரீதியானதும்கூட. ஒருமுறை வேகத்தின்
ருசி உணர்கின்றவர்களை, இனியெல்லாம் வேகம் என்பதே தம் விருப்பமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.
வேகம் குறித்துப் பேசுகையில் வேகம் எனும் சொல்லை தனக்குள் அடைத்துக்கொண்டு
கண்ணியமாய் வேடிக்கை பார்க்கும் விவேகம் என்ற சொல் குறித்துச் சிந்திக்கத் தோன்றுகிறது.
இவ்விரண்டு சொற்களுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கும்?
எதிலிருந்து எது வந்திருக்கும்? ஒரு எழுத்தில்
வேறுபடும் இவ்விரு சொற்களும் எப்படி எதிரெதிர் முரண்களாய் வாழ்கின்றன என்றெல்லாம் யோசிக்காமல்
இல்லை.
சமீபத்தில் ஒரு கல்லூரியில்
முப்பெரும் விழா. நையாண்டியும், கருத்துச் செறிவும் கலந்த பாட்டரங்கம்
நிகழ்ந்து கொண்டிருந்தது. உதவியாய் இரண்டு இசைக் கலைஞர்கள்.
அதில் ஒருவர் பார்வைத் திறனற்றவர். நிகழ்வின்
இடையே ஒரு பேராசிரியர் பாடுவதற்காக அழைக்கப்படுகிறார். அந்த இடைவெளியில் இரண்டு
பாடகர்களும், இசைக்கலைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒலி வாங்கியை கையில் ஏந்தி “விடியுது...
பொழுது விடியுது” எனும் பாடலைப் பாடத் துவங்கிய
பேராசிரியர் தன் வரிகளுக்கான இசை கோர்க்கப்படவில்லை என்பதை உணர்ந்து அடுத்த வரிக்கு
நகரத் தடுமாறுகிறார். சட்டென இசைக் கலைஞர்களைப் பார்த்தவாறு மீண்டும்
அதே வரியைப் பாடுகிறார். பார்வையற்ற கலைஞருக்கு இவர் பார்ப்பது,
எதிர்பார்ப்பது தெரிய நியாயமில்லை.
சூழலை
உணர்ந்த மற்றொரு பாடகர்,
சுதாரித்து பார்வையற்ற இசைக்கலைஞரின் முதுகைத் தொடுகிறார். அது ’நீ இசைக்க வேண்டும்’ என்பதற்கான
உத்தரவு. தன்னிலை மீண்ட அந்தக் கலைஞர், இசைக்கும் குச்சிகளை ஓங்குகிறார். அப்பொழுது பாடல் வரி
இடையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஓங்கிய குச்சிகளை அடிக்காமல்,
காற்றிலேயே வைத்தபடி வரியின் நிறைவுக்காகக் காத்திருக்கிறார்.
வரி நிறைகிறது. ஒரு இடைவெளி கிடைக்கிறது.
அடுத்த வரியின் முதற்சொல் ஒலிக்கையில் முன் குச்சிகளை நளினமாய் இறக்குகிறார்.
அதிரும் இசை இணைந்து பயணிக்கிறது. தருணம் இனிக்கிறது.
இந்தக் காட்சியில் அந்த இசைக் கலைஞர் குச்சிகளை ஓங்கியது வேகம் என்றால்,
வரி நிறைவுறும் வரைக் காத்திருந்தது விவேகம் என்றாகிறது.
இந்த யுகத்தின் மாபெரும் அறப்போராய்
நிகழ்ந்தேறிய மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்கூட விவேகத்தின் அடையாளமென்றே கருதத்
தோன்றுகிறது. அந்தப் போராட்டமும்கூட நம் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கதவு தட்டல்தான். திறக்கப்படுவதற்காக இரண்டு வழிகளை மேற்கொள்ளலாம்.
பதட்டமாகவோ, நிதானமாகவோ தட்டுவது ஒரு வழி.
எது குறித்தும் பிரஞ்னையற்று உடைத்துத் திறத்தல் இன்னொரு வழி.
இவற்றில் எதில் வேகம், எதில் விவேகம் அடங்கிய வேகம் என்பதை நாம் அறிவோம். அந்தப் போராட்டத்தின் முடிவு கசப்பானதாய் மாற்றப்பட்டதில் அரசியல் இருந்தாலும்
அதுவும் வேகம் என்பதின் ஒரு வடிவமே!
நீண்டு
கொண்டிருந்த போராட்டத்தின் நிறைவுக் கணங்களை வேகமாய் அல்லது விவேகமாய்க் கையாளும் பொறுப்பு
போராட்டக்காரர்களுக்கும்,
காவல்துறைக்கும் வழங்கப்பட்டது. அதை வேகமாய்க்
கையாண்டவர்கள் அதையொரு கறுப்பு தினமாய் மாற்றினர். போராட்ட முடிவை
விவேகமாய்க் கையாண்ட காவல்துறை இணை ஆணையர் ஒருவர், தம் செயலை ஒரு முன்னுதாரணமாக அமைத்து தன்னை கதாநாயகனாய் மாற்றிக் கொண்டார்.
தீக்குச்சி உரசுகையில் உருவாகும்
நெருப்புக்கு பெயரிடச் சொன்னால்,
நான் அதற்கு ‘வேகம்’ என்று
பெயரிடுவேன். அழுத்தி அடைப்பட்டுக் கிடந்த வெப்ப ஆற்றலின் விடுதலை
அது. விடுதலை இப்படியானது என்பதை உருவகிக்கும் செயல் அது.
ஆனால் அதை வேகமாகவே பயன்படுத்துவதற்கும், விவேகமாகப்
பயன்படுத்துவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இலக்கின்றி வேகமாய் இயங்கும்
நெருப்புச் சொட்டினை, எதன் மீதேனும் தூக்கிப்போட்டால்,
அது தன் வேகத்தைப் பல மடங்கு பெருக்கி எதையும் அழிக்கும் வல்லமை கொண்டதாய் மாறிப்போகிறது. பாரதியின் அக்னிக் குஞ்சுக்கு பெருங்காடொன்றினை வெந்து தணிக்கச் செல்லும் வல்லமை இருந்ததுதானே. ஆற்றலும் வேகமும்
ஒருங்கே இருக்கும் நெருப்பை ஒரு ஒழுங்குக்குள் ஆட்படுத்துவதை விவேகமெனக் கருதத் தோன்றுகிறது.
அதை
அடுப்பின் வழி செலுத்தி அதன் மேல் கலனை வைத்தால் அது சமைக்க உதவும் நெருப்பு. இயந்திரங்களின் வடிவத்திற்குள்,
பொருந்தும் வழிகளினூடாக செலுத்தினால் மாபெரும் ஆற்றல் கிட்டும்.
நீரில் மிதக்கும் கப்பலின் இயந்திரத்திற்குள்ளிருப்பதாக மாற்றினால், நீந்திக் கடல் கடக்கவும், விமானத்தின் இயந்திரத்திற்குள்ளிருப்பதாக
மாற்றினால் . வானமேகி எல்லைகள் கடந்து பறக்கவுமான ஆற்றல் அது.
அதையே ராக்கெட் இயந்திரத்திற்குள் செலுத்தினால் கோள்கள் தேடும் ஒரு பேராற்றல்.
இதோ
காட்டாறு என்பதை வேகமென உருவகப்படுத்துகையில் அதன் வேகம் மிரட்சியூட்டுகிறது.
அதே காட்டாற்றை அணை கட்டித் தேக்கும்போது தன்னை விவேகமுடையதாய்
வடிவமைத்துக் கொள்கிறது. வேகமாய் நகரும் நீரை, தடுப்பு ஏற்படுத்துகையில் இயல்பாகவே அழுத்தம் கூடுகிறது. அழுத்தம் கூடிய நீரை ஒரு பாதை வழியாய்ச் செலுத்தி சக்கரத்தைச் சுழல விட்டால், அங்கிருந்து கிடைப்பது ‘பசுமை மின் சக்தி’. அணையிருந்து மதகுகளின் வழி செலுத்தி நீர்மின் திட்டங்களுக்கும், கால்வாய் வழியே பாசனங்களுக்கும் பயன்படுத்தும் செயலுக்கு பெயர்தானே விவேகம்.
இடை
விடாது வீசும் காற்றின் வேகத்திற்கு குறுக்கே, தூண் ஒன்றை நிறுவி அதன் தலையில் காற்றாடியைப் பொருத்தினால்,
விவேகமாய் மாற்றப்படும் காற்றில் சுழலும் காற்றாடியிலிருந்து மின்சாரம்
தயாரிக்க முடியும்.
இயற்கையின்
வடிவத்திற்குள் மாறாமல் இருப்பவை இன்னும் கோடானு கோடி. குறிஞ்சிப் பூக்கள்
பூத்துக் குலுங்க, ஒருபோதும் வேகத்தை விரும்புவதில்லை.
தன் வருகைக்காக பனிரெண்டாண்டுகள் காத்திருக்க ஆணையிடுவது அவற்றின் கர்வம்
அல்லது அதுதான் இயற்கையின் நியதி.
கருவாகும்
ஒரு உயிர் வேகமாய் உலகைக் காண நினைத்தால் அதற்குப் பெயர் குறைப் பிரசவம். அதே உயிர் மிக வேகமாய்
உலகைக் காண நினைத்தால் அதற்குப் பெயர் கருச்சிதைவு. கருவொன்று
இந்த உலகை நோக்கி வருவதற்கு பத்து மாதங்கள் தேவையென்பது இயற்கையின் நியதி. அதற்கு கோடானு கோடிக் காரணங்கள் இருக்கும். அந்தக் காரணங்களை
வேகமென்ற பெயரில் கேள்வி கேட்க இன்னும் அனுமதிகள் வழங்கப்படவில்லை.
வேகத்தைக்
காதலிக்கும், நேசிக்கும், யோசிக்கும், யாசிக்கும்
எவரொருவரும் மரணம் என்று வரும்போது மட்டும் வேகத்தை விலக்க நினைக்கும் முரண் எவ்வளவு
அழகியதொரு தத்துவம். வேகமாய் வாழ்வு முடிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே,
ஒவ்வொருவரும் காலை நேரங்களில் வேர்க்க விறுவிறுக்க வேகமாக ஓடுகிறோம்,
நடக்கிறோம். ஒன்று சாலையில் அல்லது மருத்துவமனைகளை
நோக்கி என்பது நமக்குப் புரியும் கணம் விவேகம் முளைக்கும் ஒரு புனித கணம்.
ஆங்கிலத்தில் ’வி’ எனும் எழுத்து விக்டரி எனும் வெற்றியைக் குறிப்பதாகச் சொல்வதுண்டு.
அதை இங்கு பொருத்துவது சரியாக வருமா என்ற சந்தேகம் இருந்தாலும்,
அழகானதாகப் பொருந்துவதை மறுக்க முடியாது. ‘வி’
உடன் இணையும் வேகம் ’விவேகம்’ என்று கருதப் பிடிக்கிறது. விவேகம் என்பது வேறொன்றுமில்லை.
அது வேகத்தைக் கையாளும் ஒரு ஆகச்சிறந்த கலை!
-
நம்தோழி ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை
-
நம்தோழி ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை
-
No comments:
Post a Comment