Showing posts with label ரியல் எஸ்டேட். Show all posts
Showing posts with label ரியல் எஸ்டேட். Show all posts

Nov 18, 2015

கண்டிப்பாக மழை வேண்டும்...

பெய்ய வேண்டியதிலும், பொய்த்துப் போவதிலும் ஒருபோதும் இயற்கைக்கு அளவீடுகள் இருப்பதில்லை. வீடுகளுக்குள்ளேயே தனித்தனி தீவுகளாக வசிக்கும் மனிதர்களை உள்ளடக்கிய நகரங்கள் பெருமழை நாட்களில் தீவுகளாக மிதப்பது வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஆனால், அது முழுக்க முழுக்க இயற்கையின் குற்றமல்ல.
குளங்கள், ஏரிகள் மூடப்பட்டு வீட்டுமனைகளும், பேருந்து நிலையங்களும், வணிக வளாகங்களும் உருவாக்கப்பட்டபோது, எல்லாம் அருகில் இருப்பதும் ஒரு வகையில் வசதிதான் என மவுனமாய் இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் கள்ளமவுனமாய்க் கடந்துபோன, நமக்கான பாடம் அல்லது எச்சரிக்கை இந்த பெருமழையில் ஏற்பட்டிருக்கும் சங்கடம் என்பதை காலம் தாழ்ந்தேனும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். 

வெள்ளப் பாதிப்புகள் குறித்து பார்வையிட கொடிகள் புடைசூழச் செல்பவர்களை, நிவாரணம் வழங்குமிடங்களில் பெரிய அளவில் நிறுவப்படும் பதாகைகளை, சகித்துக் கொண்டு மறந்துபோவது போலவே மழை நீர் சேகரிப்பையும், மிக எளிதாக மறந்துபோனோம். 

வாழ்நாள் கனவாக இடம் வாங்கி வீட்டைக் கட்டும் எவரும், அதற்கு முன் அந்த இடம் ஏரியாக இருந்ததா? குளமாக இருந்ததா? என்பது குறித்து கிஞ்சித்தும் யோசிக்கவோ, கேள்வி கேட்கவோ பொறுமையில்லை. 

ஏரிகளைச் சமாதியாக்கி அதன் மேல் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்களின் காலடி முழுக்க இதுதான் என் இடமென மழை நீர் நாய்க்குட்டிபோல் காலைச் சுற்றியபடி சூழ்ந்துகொண்டு அடம் பிடிக்கின்றது. சாலையில் மிதந்து செல்லும் விலை உயர்ந்த கார்களுக்கு இப்போது அங்கு வேலையில்லை. அழுக்கடைந்த படகுகள்தான் அசைந்தபடி வந்திருக்கின்றன அனைவரையும் மீட்க. 

ஒரு சுனாமியில் பெரும் பாதிப்படைந்த நாம், இன்னொரு சுனாமி வந்தால் எதிர்கொள்ளவும் தப்பிக்கவும் முன்தயாரிப்புகளோடு, யுக்திகளோடு இருக்கிறோமா என்பதற்கான நேர்மையான பதில் தேவை. 

முந்தைய ஆண்டுகளில் இதைவிட பாதிப்பேற்படுத்திய மழை வெள்ளத்தில் சிக்கிய நாம், இந்த ஆண்டு மழை வெள்ளத்தை எதிர்கொள்ளவும், தப்பிக்கவும் எவ்விதத்திலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பதை வரவேற்பரையில் பிரியமாய் நிற்கும் வெள்ள நீரில் வெடவெடத்தபடி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

சரியான நேரத்துக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை, கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாகாவே காத்திருந்த வாடிக்கையாளர்களை, தொப்பலாய் நனைந்தபடி முண்டியடித்து அரசு கொடுக்கும் விலையில்லாப் பொருட்களைப் பெற்று வந்தவர்களையும் இந்தப் பெருமழை தினங்களில் காணமுடிந்தது. 

கிராமங்களையும்தான் மழை பதம் பார்த்துள்ளது. கிராமங்கள் மீண்ட வேகத்தில் நகரங்கள் மீள முடிவதில்லை. அதன் கைகள் கட்டப்பட்டுள்ளனவா அல்லது விரல்கள் இக்கட்டுகளுக்கு சிக்கிக் கொண்டிருக்கின்றனவா என்பது அவரவர்க்குத் தெரியும். பொதுவாக கூடுதல் வாடகைக்குப் போகும் தரை தளத்து வீடுகள், மழை வெள்ளத் தாக்குதலையொட்டி, இனி அதிகம் கவனம் பெறாமல் போவது மட்டும்தான் இந்த மழையிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருந்தால் இன்னும் எத்தனை மழை வந்தாலும் நம்மைத் திருத்தமுடியாது என்றெல்லாம் அறிவுரை சொல்வது மட்டுமல்ல இப்போதைய நோக்கம். 

நகரத்தினர் பெரிதாக அறிந்திடாத பல்லாயிரம் கிராமங்களின் கதைகள் இங்குண்டு. உதாரணத்துக்கு அதில் ஒன்றை இங்கே பகிர்வது மட்டுமே இப்போதைய நோக்கம்… 



கர்நாடக அரண்களைத் தாண்டி ஒகேனக்கல்லில் குதித்து வரும் காவிரி ஆறு சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் தஞ்சம் அடைகிறது. அங்கிருந்து புதுவடிவமெடுத்து ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உரசிச் சென்றாலும், அம்மாவட்ட மக்களுக்கு காவிரியால் பெரிதாகப் பயனேதும் இல்லையென்றே சொல்லலாம். நீர்மின் திட்டங்கள் தவிர்த்து ஜேடர்பாளையம்வரை தடுப்புகள் கிடையாது. கால்வாய்கள் கிடையாது. ஜேடர்பாளையத் தடுப்பணையிலிருந்து வேலூர் மோகனூர் என நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் பாசனம் உண்டு. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தனியாக அமைக்கப்பட்ட இடதுகரை, வலது கரை கால்வாய்கள்தான் சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரளவு நேரடியாகப் பலன் தருபவை. நீர் திறப்பில் தஞ்சைக்கு முதலிடம் கொடுத்துவிட்டு, அதன்பின்னரே இடது மற்றும் வலது கரை கால்வாய்களுக்கு என்பதுதான் விதி. 

"ஒகேனக்கல்லில் வெள்ளம்" என மின்னும் மகிழ்ச்சியான செய்திகளைக் காணும்போதே, களைத்த முகத்துடன் யாரேனும் ஒருவர் "ம்ம்ம்ம்... ஒகேனக்கல்ல குளிக்கலாம்னு வந்தம், தண்ணி நெறய போவுதுனு வுடமாட்டேங்றாங்க… ப்ச்… இப்ப என்ன பண்றதுனு தெரியல!?" என வருத்தம் தோய்ந்த முகத்தோடு காவிரியை சபிக்கும் மனநிலையோடு பேட்டி கொடுப்பார்."அருவியில் குளிக்கத் தடை, சுற்றுலாப் பயணிகள் அவதி" என்றும் செய்திகள் வரும். அப்படிப் பேட்டி கொடுப்பவர்களைப் பார்க்கும்போது அடிவயிற்றிலிருந்து அப்படியொரு கோவம் வரும். அவர்கள் குளிக்க முடியவில்லையே எனக் காவிரியைச் சபிக்கும் நேரத்தில் இங்கே எழுநூறு அடி ஆழ்துளைக்குழாய் கிணற்றிலிருந்து திணறித் திணறி மோட்டார் உவர் நீரை கொஞ்சமாய் உமிழ்ந்து கொண்டிருக்கும். அதில்தான் மாடு கன்று, மனிதர்கள், எஞ்சியிருக்கும் செடி கொடிகள், தப்பிப்பிழைத்திருக்கும் தென்னை மரங்கள் உயிர் பிழைத்தாக வேண்டும். 

எப்படியும் மைசூர் அணை நிரம்பிவிடும், கபினி நிரம்பிவிடும், நிலத்தை வெட்டியாக போட்டு வைத்திருக்க முடியாது என ஏதாவது பயிரிட நினைக்கும் ஒவ்வொரு முறையும் காவிரியின் மடியை இறுத்திப் பிடித்துக்கொண்டு கர்நாடகா வஞ்சிக்க, விவசாயிகளின் வயிறு கபகபவென எரிந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் "விதைத்து தொலையாவிட்டாலும் போகுது, இருக்கிற பண்டம்பாடிகளுக்கு குடிக்கத் தண்ணி வேணுமே!" என்பதே வேண்டுதலாய் இருக்கும். 

ஆடியில் முறையாய் ஆடிப்பாடி வந்தடைய வேண்டிய தண்ணீர் தரையெட்டாமல் மேகத்திற்குள்ளேயே பதுங்கிக் கிடந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்கு இந்த ஆண்டும் வாய்ப்பில்லாமல் போனது. மே, ஜூன் பருவ மழை ஏமாற்றிப்போக, காவிரி மேல் இருந்த நம்பிக்கை தூர்ந்துபோனது கால்வாய்ப் பாசன விவசாயிகளுக்கு. கடந்த ஆண்டுகளிலும் கூட ஏதோ ஒரு மாயம் நிகழும், மேட்டூர் நிரம்பும், காவிரி கடைமடைவரைப் பாயும். 

இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் வருமா வராதா என்ற கவலையில் மேட்டூர் அணையை நோக்கி இடைவிடாது பிரார்த்தித்தபடி தவமிருந்த அந்த சந்தேகக் காலத்தில், கபினி அணை மட்டும் ஒரு முறை நிரம்ப, ஆணையத் தீர்ப்புக்காக கொஞ்சம் நீர் திறக்க என மேட்டூர் அணை திக்கித் திணறி 80 அடிகளைக் தொட்டு நின்றது. ஒருவழியாக "மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க பாசனத்திற்காக மேட்டூர் இடது மற்றும் வலதுகரை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது" எனும் மின்னற்செய்திகளைப் பார்த்தபோது உயிரின் வேர்களில் 'நீர்' வார்த்ததுபோன்றே இருந்தது. 

சில நாட்களில் தண்ணீர் கால்வாய்களில் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. தயங்கித் தயங்கி வந்தடைந்த தண்ணீரை ஒருவரும் நம்பத் தயாரில்லை. மேட்டூர் அணைக்கு நீர் வருவதும், நிற்பதுமான கண்ணாமூச்சிக் காலத்தில் சற்று தாமதமாய்ப் பூத்த நம்பிக்கையில் நாற்றங்கால்களைத் தயார்படுத்தினார்கள். ஓரிரு மழைகளும் உதவிட நடவும் செய்தார்கள். பயிர் வேர் பிடித்து பச்சை அடர்த்தியாகும் தருணத்தில் அணைக்கு நீர் வரத்து அற்றுப்போக நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சறுக்கத் தயாராக இருந்தது. 60 அடித் தண்ணீரை நம்பி பயிர்கள் விளைந்துவிடும் என நம்புவது மூட நம்பிக்கைக்கு நிகரானது. விட்ட தண்ணீர் விளைச்சல் வரை நீடிக்குமா, கொடுஞ்சாபமாய் கருகிப்போகுமா என்ற பயத்தில் ஒவ்வொரு விவசாயியும் உறக்கம் வராமால்தான் புரட்டாசியில் புரண்டு கொண்டிருந்தார்கள். வெயில் வேறு தன் பங்கிற்கு சித்திரைபோல் வெளுத்து வாங்கியது. 

பொதுவாக ஐப்பசி மாதம் அடைமழைக்காலம். இயற்கையின் கருணை ஈரம் மிகுந்தது. உண்மை மீண்டும் உரத்து நிரூபிக்கப்பட்டது. கர்நாடகம் கருணை காட்டவில்லையெனினும், ஆங்காங்கு பெய்த மழையின் உதவியோடும் கர்நாடகத்தின் துணையின்றியே மேட்டூர் அணை 60 அடியிலிருந்து அடுத்த சில நாட்களில் 85 அடியை எட்டிவிட்டது. 

விவசாயிகள் கால்வாய்களில் தங்களுக்குத் தண்ணீர் வேண்டவே வேண்டாமென கெஞ்சும் அளவிற்கு எங்கும் பரவலாய் அடைமழை, புயல்மழை, பேய்மழை பெய்யத் தொடங்கியது. ஓர் இரவில் மட்டும் கொட்டிய மழையில், கால்வாயின் கசிவு நீரும் இணைந்துகொள்ள 40 ஆண்டுகளில் காணாத பெரு வெள்ளத்தை எங்கள் கிராமங்கள் தரிசித்தன. காலம் காலமாய் நிரம்பாத, வானம் பார்த்த பூமியின் கிணறுகள் கடை போகின்றன. எதனினும் வலியது இயற்கை என்பதை இன்னுமொருமுறை தன் போக்கில் நிரூபித்துவிட்டது. 

இடைவிடாமல் மழை நனைத்த தீபாவளி நாட்கள் குறித்து கிராமத்தில் எவருக்கும் பெரிதாய்ப் புகாரில்லை. உரச் சாக்கினை மடித்து கொங்கடை செய்து தலையிலும் முதுகிலும் போட்டுக்கொண்டு வயலோரங்களில் மாடுகளையும் எருமைகளையும் மேய்த்தபடி அவர்கள் மழையை கடந்துபோகும் தருணங்களில் நகரங்கள் அதுவும் குறிப்பாக தலைநகரம் தண்ணீரில் மிதக்கும் செய்தி கேட்டு வருந்துவதா, நொந்து போவதா, பிரார்த்தனை செய்வதா எனும் மனநிலையில் இருக்கையில், நகரத்தின் நெடு வீதிகளில் படகு ஓடுவதை நகரங்களில் வாழ்வோரே படம் பிடித்து பகடி செய்து இணையவெளியெங்கும் பரப்பிக்கொண்டிருப்பதை கசப்பான புன்னகையோடு பார்க்க மட்டுமே செய்யமுடிகிறது. 

காவிரி ஆற்றின் கிளைக் கால்வாயின் கரையிலமர்ந்து நான் இதை எழுதுவது போன்றே பல்லாண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தைக் கண்ட பாலாற்றின் கரையில் மனசை அமர்த்தி ஒருவர் எழுதுவதும் உங்கள் கண்களில் படும் சாத்தியமுண்டு. 

உண்மையில், மழை வேண்டும்… வேறு வழியில்லை… கண்டிப்பாக மழை வேண்டும்… அதை எவ்வகையிலும் நிந்திக்க இயலவில்லை…!
அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் எனும் வேண்டுதல்களும், இனியாவது எச்சரிக்கையுடன் கூடிய உள்கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளும் உண்டு!

-
நன்றி : தி இந்து

Sep 30, 2013

இயற்கையும் வஞ்சித்திடின்... என் செய்வானடி கிளியே!

இயற்கை சுத்தமாய்க் கைவிட்டதில் காய்ந்து பொட்டல் காடுகளாய் கிடந்த நிலத்தை கர்நாடகக் காடுகள் கறந்து, அணை நிரப்பி வாய்க்கால் வழியனுப்பிய நீரில் நனைந்து உயிர் பிடிக்கின்றன. இந்த முறை ஊருக்குப் போகும்போதே கவனித்தேன். வாய்க்கால் நீர் எட்டும் இடங்கள் கூடுதல் பசுமையாகவோ, சேற்று வயலாகவோ கிடந்தன. 

பெரும்பாலும் கரும்பும் மஞ்சளுமாக போர்த்திக் கிடக்கும் ஒரு சாலையோர செழிப்பான நிலம் அது. மிகமிக சமீபத்தில் தென்னை மரங்கள் பிடுங்கப்பட்டு, சமன் செய்யப்பட்டு, வீட்டுமனைகளாக கல் நடப்பட்டு, எல்லைகளில் வண்ணக்கொடிகள் பறக்கவிடப்பட்டு கர்வமாய் நின்றுகொண்டிருந்த அந்த நிலத்தில் இப்போது தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கின்றது.  மூன்று மாதங்களுக்கு முன்பு ஆயிரம் அடி துளைத்தும் சொட்டுத் தண்ணீர் இல்லையென்றிருந்த நிலம் அது. இப்போது சுற்றிலும் நீர் நிரம்பி ஒறம்பெடுத்துக் கிடக்க, வீடு கட்டுகிறேன் என யார் அஸ்திவாரம் பறித்தாலும் நீர் சுரக்கும் என்பது புரிந்தது. 

மெயின் ரோட்டிலிருந்து 1 கி.மீ தூரம் உள்ளே சென்றால் வரும் நாலு ஏக்கர் பூமியை “ஏக்கரா 40 லட்சத்துக்கு வெலை சொல்றாங்க, பேசிட்டிருக்கோம், வாங்கினா ப்ளாட் போடலாம் இல்லைனா ஃபார்ம் ஹவுஸ் கட்டிடலாம்” என நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நிலத்தைப் பார்த்தேன். அதைச்சுற்றிலும் இருந்த வயல்கள் சேற்று வயல்களாக இருந்தன. இப்போதைக்கு அந்த நிலத்தில் சேற்று உழவுக்கு டிராக்டர் இறக்குவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது எனப் புரிந்தது. 

ஒவ்வொரு வறட்சியிலும் தண்ணீர் பற்றாக்குறையில் பூமி காய்ந்து போகும்போது இதுதான் சாக்கென ரியல் எஸ்டேட் அரக்கன் அதிவேகமாக தன் கால்களை பூமி அதிர ஊன்றி பசிக்கு இரையெடுத்து விடுகிறான். தப்பிப் பிழைப்பது அவ்வளவு எளிதல்ல. எதற்கு, எப்படி என்று தெரியவில்லை, எனினும் எவர் நிலத்தையும் வாங்கும் அளவுக்கு காசு வைத்துக்கொண்டு வேட்டை மனோபாவத்தோடு பலர் இருக்கத்தான் செய்கின்றனர். 

படம் : தி இந்து


தன் நிலத்தை வீட்டுமனைத் திட்டத்திற்கு விற்கும் விவசாயிகள் மீது, மேம்போக்காக, வெறுமெனக் கோபம் கொள்வது வெட்ககரமானது. 

கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மின்சாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், மழை பொய்த்து எல்லாம் காய்ந்து போனாலும், பேய் மழை கொட்டி எல்லாம் அழுகிப் போனாலும், விதைபோட்டு, உரம் போட்டு, வெட்டிப்பார்க்கையில் மண்ணோடு மண்ணாக மட்கிக் கிடந்தாலும், பூச்சிகள் வந்து அரித்துத் தின்றாலும், புழுக்கள் வந்து கொறித்துத் தின்றாலும், மயில்கள் வந்து துவம்சம் செய்தாலும், தன் வயிற்றுக்கு ஒழுங்கா தின்னும் தின்னாமலும், சுவாசித்தும் சுவாசிக்காமலும் போராடும் விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டம் சாதாரணமல்ல.

கிலோ 2 ரூபாய்க்கு வெங்காயம் விற்கும்போதும், 3 ரூபாய்க்கு தக்காளி விற்கும்போதும் விவசாயிகள் படும் வேதனையைச் சொல்ல வலிச் சாயம் பூசிய வார்த்தைகள் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கும்போதும், அதே தக்காளி கிலோ 45 ரூபாய்க்கு விற்கும்போது, தத்தம் நிலத்தில் மட்டும் வெங்காயமும் தக்காளியும் இல்லாமல் போகும் வரலாற்றை எழுதவும் வார்த்தைகள் கிடைப்பதில்லை.

கடன்பட்டு, உடன்பட்டு, உடலை உருக்கி, மண்ணுக்குள் போட்டது முளைக்குமா?, பூச்சிக்கு தப்புமா?, நோயைத் தாங்குமா?, அறுவடை வரை தண்ணீர் தாட்டுமா? எனப் பல போராட்டங்களைத் தாக்குப்பிடித்து ஒரு விவசாயி விளைவித்ததை, விலை பேசி வாங்கும் வியாபாரி எல்லாக் காலகட்டத்திலும் செழிப்பாகவே இருக்கின்றார். 

வியாபாரிக்கும், வியாபாரியிடம் வாங்கிச் சாப்பிடுவோருக்கும் நகக்கண்ணில் என்ன, நகத்தில் கூட அழுக்குப்படுவது ஆச்சரியமான ஒன்று. விவசாயிக்கு நகக்கண்ணில் அழுக்குப் படுவது மட்டுமல்ல, நகமே கூட நைந்துபோவதோ அழுகிப் போவதோ உண்டு. 

ஆறு மாதத்திற்கு முன்பு கிலோ 2 ரூபாய்க்கு வாங்கியதை, இப்போது கிலோ 60 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணும் நிலையில் இருக்கும் மனிதர்கள் எதையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இப்போது கிலோ 60 ரூபாய்க்கு போகிறதே என்று வெங்காயத்தை பயிர் செய்யும் விவசாயி, விளைந்து அறுவடை செய்யும் போது, கிலோ 4 ரூபாய்க்கே கேட்கப்படாத சூழல் வரும்போது அதை தாங்கும் திராணியற்றுப் போகிறான்.

எவரும் சந்திக்காத போராட்டங்களைச் சந்தித்து மூட்டைகட்டி, சந்தைக்கு வரும் விவசாயி ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என கணக்குப் பார்த்து, காபி டீ குடிக்க கணக்குப் பார்த்து சிரமப்பட மட்டும் உரிமையுண்டே தவிர, தன் பொருளுக்கு தான் விலை நிர்ணயிக்கும் உரிமை ஒருபோதும் இருப்பதில்லை. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என சிரமப்பட்டு, விற்று நிமிரலாமேயேன வருபவனின் பொருளுக்கு வியாபாரி மட்டுமே எப்போதும் விலை நிர்ணயம் செய்கிறார், அவரே அந்தப் பொருளுக்கு லாபமும் தீர்மானிக்கிறார். வேறு வழியின்றி, வக்கின்றி வியாபாரி கொடுக்கும் காசை ஓரிரு சமயங்களில் மகிழ்வாகவும், பெரும்பாலான சமயங்களில் கசப்போடும் மட்டுமே பெற்றுச் செல்கிறான் விவசாயி. 

விவசாயி என்பதற்கான அடையாளத்தோடு கசங்கிய வேட்டி, சட்டை, துண்டுமாய் வருபவன் பேருந்தில் ஏறும்போதுகூட, “யோவ் சில்லறை இருந்தா ஏறு இல்லாட்டி எறங்கு!” என்றே அதட்டுகிறார்கள். தாலுக்கா ஆபீசில் ஒரு சான்றிதழ் வாங்கவோ, போஸ்ட் ஆபீசில் ஒரு மணி ஆர்டர் அனுப்பவோ, வங்கியில் நகை அடகு வைக்கவோ, பயிர்க்கடன் வாங்கவோ செல்லும்போது அவனுக்கு புரியாத மொழியில், பழக்கப்படாத வரிகளில் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்லும்போது அது தவணையாக தரப்படும் என்கிறார்கள். நகரத்தின் அகலமான நெரிசல் மிகுந்தசாலையில் தடுமாற்றமாய்க் கடக்கையில் “ஏய்யா என் தாலியை அறுக்கிறே!” எனக் கேவலப்படுத்துகின்றனர். கோவிலுக்கு போனால் கூட பளபளக்கும் வெள்ளையில் வருபவர்களைக் காண்கையில் “எல்லாரும் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லுங்க” என்றே பூசாரி கற்பூரம் போல் எரிந்து விழுகிறார். இவ்வளவு ஏன், எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், எத்தனையோ சம்பாதித்தாலும் விவசாயத்தை மட்டுமே செய்பவனுக்கு, திருமணத்திற்குப் பெண் தர உள்ளூர் விவசாயி, உறவுக்கார விவசாயிகளே கூட ஒப்புக்கொள்ளாத முரணும் இங்கு மட்டுமே சாத்தியம்.

துன்பப்பட்டு, அவமானப்பட்டு, ஒதுக்கப்பட்டு ஏன் விவசாயத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு எழாமல் இல்லை. “யாரோ சம்பாதிக்க, யாரோ தின்ன நான் மட்டுமே நாயாப்பேயா காலம் முழுதும் அல்லாடிக்கொண்டேயிருக்க வேண்டுமா!?” என்ற அலுப்பு எழாமல் இல்லை. இரண்டு திட்டங்களைக் கையில் எடுத்தார்கள். ஒன்று தம் பிள்ளைகளை விவசாய நிலத்தை விட்டு வெளியேற்றுவது. “இந்தா நல்லா படி, எங்களை மாதிரி கஷ்டப்படாதே, எங்காச்சும் வேலைக்குப் போயிடு.. அல்லது தொழில் செய்து பிழைத்துக்கொள்” என்று. அடுத்து, சாலையோரம் இருக்கும் நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள் அல்லது அவர்களே கூட்டணி அமைத்து, வீட்டுமனைகளாகப் பிரித்துப்போட்டு கல் நட்டு வண்ணம் பூசி, மையத்தில் ஒரு குடிசை போட்டு வியாபாரம் செய்து முதலாளியாக உயர்கிறார்கள்.

அதன்பின் சில்லறை வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறவேண்டிய அவசியம் இருப்பதில்லை. பளபளக்கும் உடையில் பொலிரோ காரில் சென்று இறங்கும் முன்னாள் விவசாயி என்கின்ற இன்னாள் முதலாளிக்கு சமூகம் கூடுதல் மரியாதை கொடுக்கத் துவங்குகிறது. உள்ளூர் வார்டுச் செயலாளரோ, வட்டமோ எதிரில் பார்க்கும்போது வணக்கம் வைக்கிறார். தாலுக்கா ஆபீஸில் சிறப்புக் கவனிப்பில் அதனதன் முறையில் வேலை நடக்கிறது. வங்கி மேலாளர் வரவேற்று, குளிர்பானம் வாங்கிக் கொடுக்கிறார்.

அடுத்த கட்டமாய் அக்கம்பக்க ஊரில் சாலையோரம் இருக்கும் நிலங்களை விலை பேசுகிறார்கள், வீட்டுமனையாக்கி சின்னத்திரை பிரபலங்களை வைத்து விளம்பரப் படமெடுத்து சுழல் நாற்காலிகளில் செல்போன் பிடித்த படி “எங்க வீட்டுமனைத் திட்டத்திலே பார்த்தீங்கனா.” என மோதிரத்தில் வைரக்கல் மினுமினுக்கப் பேசுகிறார்கள். வியாபாரிபோல், நகரத்துவாசி போல் எந்தக் கவலையுமின்றி 60 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்குகிறார்கள். பிள்ளைகளுக்கு 3000 பத்திரிக்கை அடித்து, நாலாயிரம் பேருக்குச் சோறுபோட்டு பெரிய அளவில் திருமணம் நடத்துகிறார்கள். புதிதாக ஷூ அணிந்து வாக்கிங் செல்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.

இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு நிலமெங்கும் தண்ணீர் செழித்திருக்கும். காலம்காலமாக செய்த விவசாயம் எல்லோரையும் தன்னுள் சுழற்றி இழுத்துப் போட்டுக்கொள்ளும். கனிந்த மடியில் பால் சுரப்பது போல, எந்த நிலத்தையும் கூறுபோட்டு கல் நடமுடியாது. வண்ணக் கொடிகள் நடமுடியாது. விவசாயம் செய்வதில்லை என விட்டிருந்த நிலத்தை கூலிவேலைக்குச் சென்று வந்த எவரேனும், குத்தகைக்கு உழுது விவசாயம் செய்வார்கள்.

எந்த ஒரு விவசாயியும் வியாபாரிகளுக்கோ, சமூகத்திற்கு அவ்வளவு எளிதில் அஞ்சி தன் முதுகெலும்பை உடைத்துக் கொள்வதில்லை. சூழலும் இயற்கையும் சேர்ந்து சதி செய்யும்போது சூழும் புழுக்கத்தில் தடுமாறிப் போகிறான், கூடவே தடம் மாறியும். என்னதான் செய்வான் அவனும், என்னைப்போல, உங்களைப்போல எல்லா ஆசாபாசங்கள் கொண்ட, ரத்தமும் சதையுமான மனிதன்தானே! 

-

நன்றி :  தி இந்து 

-

Sep 10, 2009

தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு...

__________________________________________________________ __________________________________________________________


விடியற்காலை நேரம், எங்கள் தோட்டத்திற்கு அருகில் செல்லும் அந்த சாலையில், நின்று கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் சிறிதும் இல்லாத சாலை அது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்தச் சாலையில், அந்த அதிகாலை நேரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

பெயர் இல்லாத, வெளிர் மஞ்சள், வெளிர் நீலம் வரி வரியாக பூசப்பட்ட பேருந்துகள், நான் நின்று கொண்டிருந்த குறுகிய நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்து கொண்டிருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் ஒரு எண் மட்டும் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது.

அந்த காலை நேரத்திலும் பேருந்துகள் நிரம்பி சென்று கொண்டிருந்தது. அருகில் இருந்த உறவினரிடம் கேட்டேன்


“என்னங்க இது, பேர் போடாம நிறைய பஸ் போகுது”


“எல்லாம் சிப்காட்கு ஆள் கூட்டிட்டுப் போறங்க” என்றார்.

புதிதாக உருவாகும் பின்னலாடை நிறுவனங்களில், ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க, நிறுவனம் சார்பில் பழைய பேருந்துகளை வாங்கி, 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பி, கிராமப் பகுதியில் இருக்கும் ஆட்களை வேலை செய்ய வலை விரித்து, பிடித்துக் கொண்டு வருவது.

காலை 6 மணிக்கு, பேருந்து நிறுவனத்திலிருந்து 60-70 கி.மீ தள்ளி இருக்கும் ஊர்களிலிருந்து புறப்பட்டு, பெரும்பாலும் கிராமங்கள் வழியாக சுற்றிச்சுற்றி பின்னலாடை நிறுவனத்தை நோக்கி வருகிறது. “தொழில் தெரியுமா நல்லது, தெரியாத அது அதை விட நல்லது, எளிதில் கற்றுக்கொள்ளலாம்.” ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 130-150 ரூபாய் சம்பளம், வீட்டிற்கு அருகிலே வந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவர். (12 மணி நேரம் ஷிப்ட் (காலை 8 முதல் இரவு 8), கிட்டத்தட்ட நின்று கொண்டேயிருக்க வேண்டும், காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்குத் தான் வீடு வந்து சேர முடிகிறது எனவும் ஒரு சிலர் வருத்தப் படுவதுண்டு)

காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், மிகக் குறைந்த அளவிலான நிலம், வைத்திருந்தவர்கள், கால்நடைகளை வைத்து பால் கறந்து ஊற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் என பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது. வெயிலில் வேலை செய்ய வேண்டியதில்லை, கோவணம் கட்டிக் கொண்டோ, சேலையை எடுத்துச் சொருகிக் கொண்டோ சேற்றில், மண்ணில் வேலை செய்ய வேண்டியதில்லை.

விளைவு விவசாய விளை நிலங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை.


ஒவ்வொரு முறை விதைக்கும் போதும், இந்த போகத்திற்கு விதைக்க, மூன்று, நான்கு முறை களையெடுக்க, அறுவடை செய்ய ஆள் கிடைக்குமா என்ற அவ நம்பிக்கையுடனே ஆரம்பிக்கின்றனர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.

சாலை ஓர விளை நிலங்கள் மிக எளிதில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வாங்கப் பட்ட நிலம் உடனே, சமன்படுத்தப் பட்டு, வேலி போடப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, சாக்கடைகள் கட்டப்பட்டு, பூங்காக்களுக்கென நிலம் (கொடுமை விளைந்து கொண்டிருந்த நிலத்தை கற்பழித்து விளையாட பூங்கா அமைப்பது) ஒதுக்கப்பட்டு குடும்பப் பெண்ணாய் இருந்த நிலம் சீவி சிங்காரிக்கப்பட்டு கடை பரப்பப்பட்டது. சில வாரங்களில் போட்ட முதலீட்டில், எண்ணிப்பார்க்க முடியாத அளவு லாபத்துடன் வீட்டு மனைகளாக விற்கப்படுகிறது.

அடுத்தடுத்த பேருந்துகள் ஆட்களோடு பறந்து கொண்டிருந்தது.

“என்னங்க இத்தன பஸ் போகுது” என்றேன்

இனிமே இங்க யாரும் விவசாயம் பண்ண முடியாது, காட்ல கூலிக்கு ஆளு அம்பே கெடைக்கிறதில்ல, இருக்கற தண்ணிக்கு ஏதாவது மரத்த வெக்கோனும், இல்லைனா நல்ல விலைக்குப் போனா வித்துப்போட்டு, பணத்தை வச்சி பொழச்சிகோனும், இனுமே விவசாயங்கறது நாய் படற பாடு ஆயிப்போச்சு” என்றார்.

இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” அவர் மனைவி.

“ப்ச்...” என்று உதடு பிளுக்கினார்.


“தண்ணீரும், சோறும் தந்த மண்ண விட்டு...” முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் கேட்ட கருத்தம்மா படப் பாடல் வரி நினைவுக்கு வந்து, மனதைப் பிசைந்தது.






-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...