Showing posts with label வறட்சி. Show all posts
Showing posts with label வறட்சி. Show all posts

May 15, 2017

தண்ணீரின் நியாயங்கள்

உறக்கம் கலைகிறது. தண்ணீர் லாரி வந்து நின்ற அந்த ஓசையில்தான் உறக்கம் கலைந்திருக்க வேண்டும். பேச்சுக்குரல்களையும் பரபரப்பையும் உணர முடிகிறது. எல்லாம் கனவில் நிகழ்வது போல் தெரிந்தது. மீண்டும் உறக்கம் தழுவுகிறது, திடீரென பெருமழை கொட்டும் சப்தம். அருவியின் இரைச்சலுக்கு நிகரானதொரு ஓசை. திடுக்கிட்டு எழுந்து, திறந்திருக்கும் சன்னல் வழியே ஆவலோடு பார்க்கிறேன். தண்ணீர் லாரி நின்ற சப்தமும், பேச்சுக்குரல்களும் நினைவிற்கு வருகின்றன. அந்த அருவி ஓசை, அண்டை வீட்டு தரைத்தள தண்ணீர் தொட்டியில் கொட்டும் நீரின் ஓசையெனத் தெளிவாகிறது. இந்தத் தண்ணீர் எங்கிருந்து வந்திருக்குமெனும் யோசனை உறக்கத்தைத் துண்டிக்கிறது.

இப்போது இருக்கும் வீட்டிற்கு குடி வந்த புதிதில், ‘கோடையில் தண்ணீர் வாங்க வேண்டியிருக்கும்என்று சொன்னபோது காசுக்கு தண்ணி வாங்கிப் புழங்க வேண்டிய நிலையை மிகமிகக் கசப்பாகவே ஏற்றுக்கொண்டதை  மறுப்பதற்கில்லை. ஆனால், காலம் வெகு வேகமாய் அந்தக் கசப்பைப்  புகட்டியது.

ஊரில் விளைந்து வெட்டி எடுப்பதற்கு ஈரமின்றி வாடிக் கிடக்கும் மஞ்சள் வயல் மனதில் நிரம்புகிறது. ஒரு வழியாய் தம்கட்டி விளைய வைத்ததை மண்ணிலிருந்து வெட்டியெடுக்க தண்ணீர் போதவில்லை. வயலில் லாரித் தண்ணீர் விட்டேனும், வெட்டியெடுக்க வேண்டும் என ஊரிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னது நினைவுக்கு வருகிறது. நகரத்தில் லாரி தண்ணீர் வாங்கிப் புழங்கவேண்டி வந்ததையே கசப்பாக எதிர்கொண்டவனுக்கு, விவசாய நிலத்திற்கு லாரித் தண்ணீர் என்பதை எவ்வகையிலும் ஜீரணிக்கவே முடியாது. நள்ளிரவுக் குளுமையையும் தாண்டி கூடுதலாய் வியர்க்கிறது. உறக்கம் முழுக்கத் தொலைந்து போகிறது.

அணையில், ஆற்றில், ஏரி குளங்களில் என எங்கும் நீரில்லாத கடுங்கோடை இது. நகர்ப்புற வசிப்பிட மற்றும் தொழில்களுக்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அவசரமாய் செய்வது, அக்கம் பக்கமிருக்கும் தண்ணீரை லாரிகள் வாயிலாக கொண்டு வந்துவிடுவது. விவசாயத்தை விட நீரை விற்பனை செய்வது புத்திசாலித்தனமானதொரு செயலாக சில விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது. அது குடியிருப்புகளுக்கு மட்டுமல்லாது, அநியாயமாய் நீர் வீணாகும் தொழிற்சாலைகளாக இருந்தாலும், நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?.

நூற்றாண்டுகள் காணாத வறட்சிஎன யார் யாரோ ஏதேதோ அடிப்படையில் தரவுகளைக் கொண்டு விளக்கங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். நூறாண்டுகள் என்பதுள்ளிட்ட  தரவுகளைப் பேசிப் பேசி என்ன செய்யப் போகிறோம்? அம்மாதிரியான தரவுகளை வைத்துக் கொண்டு மேகக் கூட்டத்திடம் எதுவும் சமரசம் பேசவா முடியும்? கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் நிலம் பொட்டலாய்க் கிடக்க, தன்னந்தனியாய் இருக்கும் வீட்டோரத்தில் ஓரிரு தென்னைகளும் வேம்பும் மட்டும் மிஞ்சியிருக்கின்றன. நாள்தோறும் இரவுகளில் பளிச்சென நட்சத்திரம் பூத்திருக்கும் வானத்தை ஆற்றாமையும், இயலாமையும் இனியென்ன செய்வதுஎன்கிற பயமேறிய கேள்வியுமாய் வெறித்துப் பார்க்கும் விவசாயி எவரையேனும் கண்டதுண்டா? அவரிடம் இது இந்த யுகம் காணாத வறட்சிஎனும் தரவுகளை வைத்துக் கொண்டு என்ன சமாதானம் பேசிவிட முடியும்.

நூற்றாண்டுகள் காணாத வறட்சிஎன்பதைவிட, ஒவ்வொருவருக்கும் தெளிவாகப் புரிந்திருப்பது, ‘இது தம் வாழ்நாளில் கண்டிராத வறட்சிஎன்பதுதான். விவசாயம் என்பதைக் கைவிட்டு பல மாதங்கள் ஆகின்றன. நிலமெங்கும் வெயில் மட்டுமே விதையாய் விழுந்து முளைத்துக் கொண்டேயிருக்கிறது. கிணறு தூர்ந்து, திணறித் திணறி உமிழ்ந்து கொண்டிருந்த ஆழ்துளைக் குழாய்க் கிணறும் ’என் மடியில் ஒன்றுமில்லைஎன உதறி விட்டுவிட்டது. வீட்டைச் சுற்றியிலிருக்கும் செடி கொடிகளுக்கும் தண்ணீர் இல்லை. கட்டுத்தரையில் இருக்கும் எருமைகளுக்கு தீவனம் குறைந்து கொண்டேயிருக்கும் ஆபத்தைவிட, அவைகளுக்கான குடிநீருக்கும் அலைய வேண்டிய அவலம்.

ஆங்காங்கே வறட்சியில் வாடும் கரும்பினை வெட்டச் சொல்லி சர்க்கரை ஆலைகளை விவசாயிகள் மன்றாட, வெட்டப்படும் கரும்பின் நுனிப்  பகுதியானகோந்தாழைக்கு போட்டியோ போட்டி. பொதுவாக இந்தக் கோந்தாழை துளியும் சீண்டப்படாதது. சீண்டப்படாமல் கிடந்த ஒன்றிற்கு பல மைல்கள் தூரம் ஓடி, கட்டு பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் எனக் கொள்முதல் செய்து எடுத்து வந்து, தம்மிடம் இருக்கும் எருமை, மாடுகளை காப்பாற்றியே ஆக வேண்டிய நிர்பந்தம்.

கொஞ்சம் காசும், நம்பிக்கையும் இருப்பவர்கள், தம் நிலத்தில் புதிது புதிதாய் நீர் தேடி ஆழ்துளைக் கிணறு தோண்டுகிறார்கள். ‘இந்த இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும்என்கிற உத்தரவாதம் எதுவும் கிடையாது. தேவை மிகுந்துவிடின், எதன்மீதும் நம்பிக்கை வைக்கத் துணிந்து விடுகிறோம். இருக்கும் கொஞ்சம் தென்னைகளைக் காப்பாற்ற வேண்டி அரை ஏக்கர் நிலப்பரப்பிற்குள் போடப்பட்ட இரண்டு ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளிலும் நீரின் சுவடுகளைக் கூட கண்டறிய முடியாதவர்... ஏற்கனவே இருக்கும் ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை ஆழப்படுத்தும் முயற்சியில், கடைந்தெடுக்கும் பகுதி உள்ளே சிக்கிக் கொண்டதால், இருந்த ஒரே ஆழ்துளைக் குழாய்க் கிணற்றையும் இழந்தவர்... ஆயிரத்து எழுநூறு  அடிகள் ஆழம் வரை கிணறு தோண்டியதில் கடல் நீருக்கு நிகரானதொரு உப்புநீரை அடைந்தவர்... இப்படி தோல்வியின் வடுக்கள் பதிந்த மனிதர்களால் நிரம்பியிருக்கின்றன நம் கிராமங்கள்.

குடிக்கவும் தண்ணீர் இல்லை எனும் இக்கட்டு நேர்வதுபோல், வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் ஒவ்வொருவருக்கும் முடிச்சு விழுகிறது. வாழ்க்கையின் எத்தகைய நிலையை எடுத்துக் கொண்டாலும், அது விரும்பிய வண்ணம், பழகிய வண்ணம் இடையூறுகள் ஏதுமின்றி அமைந்துவிடுதலே அனைவரின் விருப்பமும். அந்த விருப்பத்தின் மிக முக்கியக் காரணம், அது விருப்பம் என்பதையும்விட பழக்கம் என்பதே முதன்மையானது. ஏற்கனவே பழகிப்போன ஒன்றிலிருந்து புரண்டுவிடுதல் என்பது எவ்வகையிலும் எளிதானதல்ல. எல்லாம் அதனதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் வரைக்கும், எல்லாமுமே இதமாக இருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் முடிச்சு விழும்போதோ, தேங்கும்போதோ, அது முன்வைக்கும் புதிர்தான் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனை.

இப்படியான தருணங்களில் புரள்வதை விரும்பி ஏற்பது ஒருவகை, தன் மேல் திணிக்கப்படுவதை உள்வாங்குவது இன்னொரு வகை. இதில் இரண்டாம் வகையை எதிர்கொள்ளும்போது ஏற்படும் அச்சம் கலந்த பதற்றமும், அலுப்பும், திடுக்கிடலும்தான் அரக்கத்தனமாக நம்மை வதைக்கத் துவங்கும்சுருண்டு மிரளும் புள்ளியிலிருந்துஅடுத்து என்னஎனும் கேள்வியோடு தவிக்கையில் ஏற்படும் உளப்போராட்டம் சாதாரணமானதல்ல.

அந்தப் புள்ளியில் ஏற்படும் தவிப்பிற்கான மிக முக்கியக் காரணம் அதுவரைக்கும் கடந்த காலம் நமக்குள் படிய வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் கருதியிருப்பவை. ‘இவையெல்லாம் இப்படித்தான்என நாமாக நினைத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை. எல்லாச் சூழல்களில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்அடுத்தது என்ன!?” எனும் கேள்விக்கு பல பதில்களை நாம் தயாரித்து வைத்துக்கொண்டே காத்திருக்க வேண்டும்.



இங்கே நீரின்மை மட்டும்தான் பிரச்சனையாஎன்ற கேள்விக்கு ஆம்எனும் பதில் முழுமையானதாக இருக்க முடியாது. எதையெதையோ கணிக்கத் தெரிந்த நமக்கு, இப்படியானதொரு வறட்சி வரப்போகிறது என கணிக்கத் தெரியவில்லை அல்லது கணித்ததை மக்களிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த முடியவில்லை. வந்தபின் எந்த அறிவுரையும், தரவுகளும் எரிச்சலைத்தான் தரும். வரும்முன் காப்போம் என்பதில் தொடர்ந்து பிழை நிகழ்கிறது.

ஒருவகையில் இம்மாதிரியான வறட்சியை, நிலத்திற்கான ஓய்வென்று புரிந்து கொள்தல் நலம். சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் முறைப்படுத்தல்கள் இருந்திருந்தால், இந்த வறட்சியை எதிர்கொள்ள சற்று முன்னேற்பாடாய் இருந்திருக்க முடியும். சில விவசாய பயிரிடல்களை கை விட்டிருந்திருந்தால், இப்போது இவ்வளவு அழிவுகளைச் சந்திக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது. ‘எப்போதும் ஒரே மாதிரியான பயிர்களைத்தான் பயிரிடுவேன்எனும் பிடிவாதம், இம்மாதிரியான வறட்சிக் காலத்தில் நம்மை வாரிச் சுருட்டி மிதித்துவிடும். ’எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் நீரைப் பயன்படுத்துவேன்எனும் வீம்பில் சிக்கல் நமக்கு மட்டுமல்ல. அந்த நீருக்கு தாகத்தோடு காத்திருக்கும் இன்னொரு உயிருக்குச்  செய்யும் வஞ்சனையும் கூட.

லாரியில் நிரம்பி, தளும்பித் தளும்பி வரும் தண்ணீருக்காக நகர்புறத்தில் வசிப்பவர்கள் காத்திருக்கிறார்கள். தம்மை அண்டியிருக்கும் கால்நடைகளையும், செடி, கொடி, மரங்களையும் காப்பாற்றத் தவிக்கும் விவசாயி இந்தத் தண்ணீரைத் தரமுடியாமல் மனப்போராட்டம் நடத்துகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிகழும் நிலை வந்து வெகு காலமாகிவிட்டது. இதில் யார் வெல்ல, யார் தோற்க!? ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையின் அடிப்படையிலான நியாயங்களுண்டு.

காசு கொடுத்தால் தண்ணீர் லாரிக்கு டீசல் கிடைக்கலாம், ஆனால் தண்ணீருக்கு எங்கே செல்வது!?. லாரித் தண்ணீர் என்பது நேர்மையில்லா ஒரு சமன்பாடு. அந்தந்த நிலத்து மனிதர்களுக்கானா நீரையும் உணவையும் பணத்தால் அடித்துப் பிடுங்குவது நியாயமான செயலாகுமா!? ஒருவகையில் அங்கிருந்த மனிதர்களெல்லாம் நகரத்துக்கு நகர்ந்து விட்டதால், நீரும் லாரிகளில் நகர்ந்து வர வேண்டியிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமோ?

-

நம்தோழி மே வெளியான கட்டுரை


May 13, 2017

நிற்பதா கடப்பதா



பசியோடு வந்த கொக்கிற்கு
குளத்தின் மையத்தில்
ஒரு கருவாடு மட்டும்
மின்னிக்கொண்டிருந்தது

தவித்துக் கொண்டிருந்த
கடைசி மரமும்
தன்னைத் தானே
துண்டித்துக் கொண்டது

வேறு வழியில்லை...
வெயிலை நோக்கி
ஏறித்தான் ஆகவேண்டும்.
போகும் வழியில்
கருத்த மேகம் ஒன்றிருக்கும்
நிற்பதா கடப்பதா
என்ற சந்தேகம் மட்டுமே

இப்போது!

Sep 30, 2013

இயற்கையும் வஞ்சித்திடின்... என் செய்வானடி கிளியே!

இயற்கை சுத்தமாய்க் கைவிட்டதில் காய்ந்து பொட்டல் காடுகளாய் கிடந்த நிலத்தை கர்நாடகக் காடுகள் கறந்து, அணை நிரப்பி வாய்க்கால் வழியனுப்பிய நீரில் நனைந்து உயிர் பிடிக்கின்றன. இந்த முறை ஊருக்குப் போகும்போதே கவனித்தேன். வாய்க்கால் நீர் எட்டும் இடங்கள் கூடுதல் பசுமையாகவோ, சேற்று வயலாகவோ கிடந்தன. 

பெரும்பாலும் கரும்பும் மஞ்சளுமாக போர்த்திக் கிடக்கும் ஒரு சாலையோர செழிப்பான நிலம் அது. மிகமிக சமீபத்தில் தென்னை மரங்கள் பிடுங்கப்பட்டு, சமன் செய்யப்பட்டு, வீட்டுமனைகளாக கல் நடப்பட்டு, எல்லைகளில் வண்ணக்கொடிகள் பறக்கவிடப்பட்டு கர்வமாய் நின்றுகொண்டிருந்த அந்த நிலத்தில் இப்போது தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கின்றது.  மூன்று மாதங்களுக்கு முன்பு ஆயிரம் அடி துளைத்தும் சொட்டுத் தண்ணீர் இல்லையென்றிருந்த நிலம் அது. இப்போது சுற்றிலும் நீர் நிரம்பி ஒறம்பெடுத்துக் கிடக்க, வீடு கட்டுகிறேன் என யார் அஸ்திவாரம் பறித்தாலும் நீர் சுரக்கும் என்பது புரிந்தது. 

மெயின் ரோட்டிலிருந்து 1 கி.மீ தூரம் உள்ளே சென்றால் வரும் நாலு ஏக்கர் பூமியை “ஏக்கரா 40 லட்சத்துக்கு வெலை சொல்றாங்க, பேசிட்டிருக்கோம், வாங்கினா ப்ளாட் போடலாம் இல்லைனா ஃபார்ம் ஹவுஸ் கட்டிடலாம்” என நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நிலத்தைப் பார்த்தேன். அதைச்சுற்றிலும் இருந்த வயல்கள் சேற்று வயல்களாக இருந்தன. இப்போதைக்கு அந்த நிலத்தில் சேற்று உழவுக்கு டிராக்டர் இறக்குவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது எனப் புரிந்தது. 

ஒவ்வொரு வறட்சியிலும் தண்ணீர் பற்றாக்குறையில் பூமி காய்ந்து போகும்போது இதுதான் சாக்கென ரியல் எஸ்டேட் அரக்கன் அதிவேகமாக தன் கால்களை பூமி அதிர ஊன்றி பசிக்கு இரையெடுத்து விடுகிறான். தப்பிப் பிழைப்பது அவ்வளவு எளிதல்ல. எதற்கு, எப்படி என்று தெரியவில்லை, எனினும் எவர் நிலத்தையும் வாங்கும் அளவுக்கு காசு வைத்துக்கொண்டு வேட்டை மனோபாவத்தோடு பலர் இருக்கத்தான் செய்கின்றனர். 

படம் : தி இந்து


தன் நிலத்தை வீட்டுமனைத் திட்டத்திற்கு விற்கும் விவசாயிகள் மீது, மேம்போக்காக, வெறுமெனக் கோபம் கொள்வது வெட்ககரமானது. 

கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மின்சாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், மழை பொய்த்து எல்லாம் காய்ந்து போனாலும், பேய் மழை கொட்டி எல்லாம் அழுகிப் போனாலும், விதைபோட்டு, உரம் போட்டு, வெட்டிப்பார்க்கையில் மண்ணோடு மண்ணாக மட்கிக் கிடந்தாலும், பூச்சிகள் வந்து அரித்துத் தின்றாலும், புழுக்கள் வந்து கொறித்துத் தின்றாலும், மயில்கள் வந்து துவம்சம் செய்தாலும், தன் வயிற்றுக்கு ஒழுங்கா தின்னும் தின்னாமலும், சுவாசித்தும் சுவாசிக்காமலும் போராடும் விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டம் சாதாரணமல்ல.

கிலோ 2 ரூபாய்க்கு வெங்காயம் விற்கும்போதும், 3 ரூபாய்க்கு தக்காளி விற்கும்போதும் விவசாயிகள் படும் வேதனையைச் சொல்ல வலிச் சாயம் பூசிய வார்த்தைகள் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கும்போதும், அதே தக்காளி கிலோ 45 ரூபாய்க்கு விற்கும்போது, தத்தம் நிலத்தில் மட்டும் வெங்காயமும் தக்காளியும் இல்லாமல் போகும் வரலாற்றை எழுதவும் வார்த்தைகள் கிடைப்பதில்லை.

கடன்பட்டு, உடன்பட்டு, உடலை உருக்கி, மண்ணுக்குள் போட்டது முளைக்குமா?, பூச்சிக்கு தப்புமா?, நோயைத் தாங்குமா?, அறுவடை வரை தண்ணீர் தாட்டுமா? எனப் பல போராட்டங்களைத் தாக்குப்பிடித்து ஒரு விவசாயி விளைவித்ததை, விலை பேசி வாங்கும் வியாபாரி எல்லாக் காலகட்டத்திலும் செழிப்பாகவே இருக்கின்றார். 

வியாபாரிக்கும், வியாபாரியிடம் வாங்கிச் சாப்பிடுவோருக்கும் நகக்கண்ணில் என்ன, நகத்தில் கூட அழுக்குப்படுவது ஆச்சரியமான ஒன்று. விவசாயிக்கு நகக்கண்ணில் அழுக்குப் படுவது மட்டுமல்ல, நகமே கூட நைந்துபோவதோ அழுகிப் போவதோ உண்டு. 

ஆறு மாதத்திற்கு முன்பு கிலோ 2 ரூபாய்க்கு வாங்கியதை, இப்போது கிலோ 60 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணும் நிலையில் இருக்கும் மனிதர்கள் எதையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இப்போது கிலோ 60 ரூபாய்க்கு போகிறதே என்று வெங்காயத்தை பயிர் செய்யும் விவசாயி, விளைந்து அறுவடை செய்யும் போது, கிலோ 4 ரூபாய்க்கே கேட்கப்படாத சூழல் வரும்போது அதை தாங்கும் திராணியற்றுப் போகிறான்.

எவரும் சந்திக்காத போராட்டங்களைச் சந்தித்து மூட்டைகட்டி, சந்தைக்கு வரும் விவசாயி ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என கணக்குப் பார்த்து, காபி டீ குடிக்க கணக்குப் பார்த்து சிரமப்பட மட்டும் உரிமையுண்டே தவிர, தன் பொருளுக்கு தான் விலை நிர்ணயிக்கும் உரிமை ஒருபோதும் இருப்பதில்லை. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என சிரமப்பட்டு, விற்று நிமிரலாமேயேன வருபவனின் பொருளுக்கு வியாபாரி மட்டுமே எப்போதும் விலை நிர்ணயம் செய்கிறார், அவரே அந்தப் பொருளுக்கு லாபமும் தீர்மானிக்கிறார். வேறு வழியின்றி, வக்கின்றி வியாபாரி கொடுக்கும் காசை ஓரிரு சமயங்களில் மகிழ்வாகவும், பெரும்பாலான சமயங்களில் கசப்போடும் மட்டுமே பெற்றுச் செல்கிறான் விவசாயி. 

விவசாயி என்பதற்கான அடையாளத்தோடு கசங்கிய வேட்டி, சட்டை, துண்டுமாய் வருபவன் பேருந்தில் ஏறும்போதுகூட, “யோவ் சில்லறை இருந்தா ஏறு இல்லாட்டி எறங்கு!” என்றே அதட்டுகிறார்கள். தாலுக்கா ஆபீசில் ஒரு சான்றிதழ் வாங்கவோ, போஸ்ட் ஆபீசில் ஒரு மணி ஆர்டர் அனுப்பவோ, வங்கியில் நகை அடகு வைக்கவோ, பயிர்க்கடன் வாங்கவோ செல்லும்போது அவனுக்கு புரியாத மொழியில், பழக்கப்படாத வரிகளில் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்லும்போது அது தவணையாக தரப்படும் என்கிறார்கள். நகரத்தின் அகலமான நெரிசல் மிகுந்தசாலையில் தடுமாற்றமாய்க் கடக்கையில் “ஏய்யா என் தாலியை அறுக்கிறே!” எனக் கேவலப்படுத்துகின்றனர். கோவிலுக்கு போனால் கூட பளபளக்கும் வெள்ளையில் வருபவர்களைக் காண்கையில் “எல்லாரும் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லுங்க” என்றே பூசாரி கற்பூரம் போல் எரிந்து விழுகிறார். இவ்வளவு ஏன், எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், எத்தனையோ சம்பாதித்தாலும் விவசாயத்தை மட்டுமே செய்பவனுக்கு, திருமணத்திற்குப் பெண் தர உள்ளூர் விவசாயி, உறவுக்கார விவசாயிகளே கூட ஒப்புக்கொள்ளாத முரணும் இங்கு மட்டுமே சாத்தியம்.

துன்பப்பட்டு, அவமானப்பட்டு, ஒதுக்கப்பட்டு ஏன் விவசாயத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு எழாமல் இல்லை. “யாரோ சம்பாதிக்க, யாரோ தின்ன நான் மட்டுமே நாயாப்பேயா காலம் முழுதும் அல்லாடிக்கொண்டேயிருக்க வேண்டுமா!?” என்ற அலுப்பு எழாமல் இல்லை. இரண்டு திட்டங்களைக் கையில் எடுத்தார்கள். ஒன்று தம் பிள்ளைகளை விவசாய நிலத்தை விட்டு வெளியேற்றுவது. “இந்தா நல்லா படி, எங்களை மாதிரி கஷ்டப்படாதே, எங்காச்சும் வேலைக்குப் போயிடு.. அல்லது தொழில் செய்து பிழைத்துக்கொள்” என்று. அடுத்து, சாலையோரம் இருக்கும் நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள் அல்லது அவர்களே கூட்டணி அமைத்து, வீட்டுமனைகளாகப் பிரித்துப்போட்டு கல் நட்டு வண்ணம் பூசி, மையத்தில் ஒரு குடிசை போட்டு வியாபாரம் செய்து முதலாளியாக உயர்கிறார்கள்.

அதன்பின் சில்லறை வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறவேண்டிய அவசியம் இருப்பதில்லை. பளபளக்கும் உடையில் பொலிரோ காரில் சென்று இறங்கும் முன்னாள் விவசாயி என்கின்ற இன்னாள் முதலாளிக்கு சமூகம் கூடுதல் மரியாதை கொடுக்கத் துவங்குகிறது. உள்ளூர் வார்டுச் செயலாளரோ, வட்டமோ எதிரில் பார்க்கும்போது வணக்கம் வைக்கிறார். தாலுக்கா ஆபீஸில் சிறப்புக் கவனிப்பில் அதனதன் முறையில் வேலை நடக்கிறது. வங்கி மேலாளர் வரவேற்று, குளிர்பானம் வாங்கிக் கொடுக்கிறார்.

அடுத்த கட்டமாய் அக்கம்பக்க ஊரில் சாலையோரம் இருக்கும் நிலங்களை விலை பேசுகிறார்கள், வீட்டுமனையாக்கி சின்னத்திரை பிரபலங்களை வைத்து விளம்பரப் படமெடுத்து சுழல் நாற்காலிகளில் செல்போன் பிடித்த படி “எங்க வீட்டுமனைத் திட்டத்திலே பார்த்தீங்கனா.” என மோதிரத்தில் வைரக்கல் மினுமினுக்கப் பேசுகிறார்கள். வியாபாரிபோல், நகரத்துவாசி போல் எந்தக் கவலையுமின்றி 60 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்குகிறார்கள். பிள்ளைகளுக்கு 3000 பத்திரிக்கை அடித்து, நாலாயிரம் பேருக்குச் சோறுபோட்டு பெரிய அளவில் திருமணம் நடத்துகிறார்கள். புதிதாக ஷூ அணிந்து வாக்கிங் செல்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.

இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு நிலமெங்கும் தண்ணீர் செழித்திருக்கும். காலம்காலமாக செய்த விவசாயம் எல்லோரையும் தன்னுள் சுழற்றி இழுத்துப் போட்டுக்கொள்ளும். கனிந்த மடியில் பால் சுரப்பது போல, எந்த நிலத்தையும் கூறுபோட்டு கல் நடமுடியாது. வண்ணக் கொடிகள் நடமுடியாது. விவசாயம் செய்வதில்லை என விட்டிருந்த நிலத்தை கூலிவேலைக்குச் சென்று வந்த எவரேனும், குத்தகைக்கு உழுது விவசாயம் செய்வார்கள்.

எந்த ஒரு விவசாயியும் வியாபாரிகளுக்கோ, சமூகத்திற்கு அவ்வளவு எளிதில் அஞ்சி தன் முதுகெலும்பை உடைத்துக் கொள்வதில்லை. சூழலும் இயற்கையும் சேர்ந்து சதி செய்யும்போது சூழும் புழுக்கத்தில் தடுமாறிப் போகிறான், கூடவே தடம் மாறியும். என்னதான் செய்வான் அவனும், என்னைப்போல, உங்களைப்போல எல்லா ஆசாபாசங்கள் கொண்ட, ரத்தமும் சதையுமான மனிதன்தானே! 

-

நன்றி :  தி இந்து 

-

Jan 12, 2013

அதற்காக மன்னியுங்கள்!

என் மின்னஞ்சல் பெட்டியும் கை பேசியின் குறுந்தகவல் பெட்டியும் பொங்கல் வாழ்த்துகளால் நிறையத் துவங்கிவிட்டன. ஏனோ என்னால் எல்லா ஆண்டுகள் போலவும் வாழ்த்துகளைப் பரிமாற முடியவில்லை.

வீட்டிலிருந்து வரும் வழியெங்கும் பெருமாடி வீடுகளின் முன்வாசல் சரிவு சுண்ணாம்பால் கரை கட்டி, சாண நிறத்தில் மெழுகப்பட்டுக் கொண்டிருந்தது. பலவீடுகளில் நான் கடந்த மதியப் பொழுதில் பாட்டிகள் அந்த வேலையை செய்து கொண்டிருந்தனர். அந்தப் பாட்டிகளைப் பார்க்கும் பொழுதே அவர்களுக்கும் அந்த வீடுகளுக்கும் தொடர்பிருக்காத அந்நியம் தெரிந்தது. இந்த வீட்டு மகராசிகளோ, மகராசன்களோ எப்போது கடைசியாக சாணத்தைத் தொட்டிருப்பார்கள் என்றும் தோன்றியது. முதலில் அவர்கள் வீட்டு வாசலில் மொழுகுவது சாணம்தானா அல்லது மஞ்சகோபியா என்றும் சந்தேகம் வந்தது. நகர்புறத்தில் மருத்துவக் குணம் நிறைந்த சாணத்தின் மகிமை தெரியாத போதும், ஏதோ கடனேயென சாண நிறத்தில் இப்படி பூசிமொழுவது ஒரு சடங்காக இருக்கின்றது.

அலுவலகத்தின் அருகிலிருக்கும் சந்திப்பில், கிராமத்து மனிதர்கள் ஆவாரம் கொத்தும், பூளைப்பூடும் குவித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். காப்புக் கட்டு என்பதும் ஒரு கொண்டாட்டத்திற்குரிய நாள் தான். சிறுவயதில் இருக்கும்போது, அன்று காலையிலேயே யார் யார் எங்கே காப்புக் கட்டுவது என இடம் பிரித்தாகிவிடும் வீடு, கிணறு, மோட்டார் ரூம், கட்டை வண்டி, கட்டுத்தரைப் பந்தல், கலப்பை, வயலின் நான் பக்கம், எதாச்சும் ஒரு தென்னை மரத்துக்கு,  தோட்டத்தின் பக்கத்தில் இருக்கும் மானுவு பூமி கருப்புச்சாமி, மாரியம்மன் கோவில், விநாயகன் கோவில், பொட்டுச்சாமி என பனி படரும் பின்மாலை நேரத்தில் ஓடியோடி கையில் இருக்கும் ஆவாரம் பூ, பூளைப்பூ கட்டினை வைத்துவிட்டு சாமியும் கும்பிட்டு விட்டு ஓடிவரவேண்டும்.

அடுத்த நாள் பொங்கல். பொங்கல் நாளில் எப்போதாவது சூரியனுக்குப் பொங்கல் வைத்ததாய் நியாபகம், மற்றபடி கூடுதுறைக்கோ, குலதெய்வம் கோயிலுக்கோ, கொடுமுடிக்கோ சூழலைப் பொறுத்துச் சென்றுவருவதில் பொங்கல் நாள் கழிந்துவிடும்

ஆஹா… அடுத்த நாள்….. மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கலை நினைக்க போனவருடம் ”ஹேப்பி கவ் பொங்கல் சார்”னு ஒரு வெண்ணை ரொம்ப சீரியசாக வாழ்த்தியதுதான் நினைவுக்கு வருகின்றது. அவன் ஆங்கில மோகத்தில் தீயை வைக்க!

ரொம்ப நாட்கள் எங்கள் வீட்டில் இரண்டு எருதுகள் இருந்தன. கூடவே ஐந்தாறு உருப்படிகள் எருமை கன்று என. மாட்டுப் பொங்கல் அன்று எருது வைத்திருக்கும் கட்டுத்தரைகளில் அவைகளுக்குத்தான் கூடுதல் மரியாதை. வாய்க்காலில் தேய்த்துத் தேய்த்து குளிக்கவைத்து  எருதுகளுக்கு பெயிண்ட்டும், எருமைகளுக்கு காவிக்கல்லும் பூசி, பொங்கல் வைத்து பூசை செய்து கொண்டாடிய காலம் நினைவில் படிந்து கிடக்கிறது.

அடுத்த நாள் கறிநாள்…. பெரும்பாலும் அன்றைக்கென்று பார்த்து ஏதாவது உறவில் கெடாவிருந்து வந்துவிடும்.

இப்படிக் கழிந்த பொங்கல் பொழுதுகள், சமீப ஆண்டுகளில் சாயம் நீர்த்துப்போய் மிக மிக அவசரமான ஒரு விடுமுறை நாட்களாக நகர்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் பரவாயில்லை. திருமணமான காலம் தொட்டு எல்லா விசேசங்களுக்கும் முதலில் மாமியார் வீட்டுக்கு செல்லத் தொடங்கியதால் தீபாவளி, பொங்கல் என பொழுதுகள் அங்கேதான் விடியத் துவங்குகின்றன. அது கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதால் குழந்தைகளும் நிரம்பியிருப்பதால் சில வருடங்களாக நாங்கள் அனைவரும் சேர்ந்து பொங்கலன்று வெண்கலப் பானையில் பொங்கல் வைத்து குதூகலமாய்க் கொண்டாடிவிட்டு மாட்டுப் பொங்களுக்கு எங்கள் தோட்டத்திற்கு ஓடிவிடுவதுண்டு.

மாட்டுப்பொங்கல் மாடுகள் அல்லாத பொங்கலாகவே மாறிப்போய்விட்டன. உழவுக்கு மாடுகள் இல்லாததால் எல்லாம் எருமைப் பொங்கல் என்றே மாறிவிட்டன.

*



இதோ இன்று மாலை முதற்கொண்டே எப்போது ஊருக்குக் கிளம்பலாம் என மனைவியும் மகளும் பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். வாரத்தின் முதல் பாதியை பண்டிகை ஆளுமை செய்ய முயல்வதால் முடிக்க வேண்டிய வேலைகள் அழுத்துவதையும் விட, அங்கு போய் என்ன செய்யப்போகிறோம் என்ற சுமையே என்னை இன்னும் கிளம்பவிடாமல் செய்கின்றது.

எங்கள் பகுதி காவியிரின் நேரடிக் கால்தடம் பதியும் பகுதி. காய்ந்து கிடக்கின்றோம். மனிதன் இயற்கைக்கு இழைத்த அநீதிக்காக சிறுதண்டனையாக தன் மடியை இறுக்கிக் கொண்டது மேகம். ஏற்கனவே அவள் தந்தததை, அரசியல் விளையாட்டிலும் அடிபட்டு அடிமையாய்க் கிடக்கிறாள் காவிரி கர்நாடகத்தில். மேட்டூரும், பவானி சாகரும் தாங்களே தாகத்தில் இருக்க, எங்களுக்கு எப்படி தாகம் தீர்க்க நினைப்பார்கள்.

காவிரியில் நீர் வராத வருடங்களை எப்பொதோ சந்தித்ததுண்டு. சமீப ஆண்டுகளில் கண்ணுக்கு எட்டியவரை பசுமை நீண்டு கிடந்த என் ஊரும் தடமும் வறண்டு கிடக்கின்றன. பொங்கல் எனும் வார்த்தையை நினைக்ககூட சங்கடமாகவே இருக்கின்றது. இந்த ஆண்டு வராமலே போயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

எப்போது கிராமத்தில் நுழைந்தாலும் மலர்ந்த முகத்தோடு எதிர்ப்படும் மனிதர்களும், வறண்டு கிடக்கும் முக்கால் வாசி நிலங்களின் வெறுமையும் எதோ ஒரு சோகத்தை மனசு முழுக்க பூசுவதை எப்படித் தவிர்க்கப் போகிறேன்.

பத்து பதினைந்து வருடங்களாக குடும்ப அட்டைக்கு இலவச சேலைகள் கொடுத்து வந்த அரசு இந்த வருடம் அரிசி வெல்லம் கூட 100 ரூபாயும் நொட்டுகிறது.

இலவசமாக கிடைப்பதை ஏன் விடவேண்டும் என்றுதான் இதுகாறும் வாங்கினார்களே தவிர, எவர் ஒருவரும் விரும்பிச் சென்று வாங்கியதாக அறியவில்லை. எங்கள் பகுதிகளில் டோர் சீலை (ஸ்டோர்-ரேசன் கடை) என்றே அதைக் குறிப்பிடுவதுண்டு. எப்போதாவது காட்டு வேலைக்குப் போகும் போதும், மாற்றுச் சீலையாகவும், பந்திவிரிக்கவும், அரிதாக தொட்டில்கட்டவும் அதை ஒரு பண்டாமாகப் பயன்படுத்தினார்களே ஒழிய ஒருபோதும் அதை கலைஞர் சீலை, ஜெயலலிதா சீலை என்று பெருமையாக ஒரு நல்ல இடத்திற்கு உடுத்திக் கொண்டு போனதாக நான் அறிந்ததில்லை.
இதோ இந்த ஆண்டு அதே டோரில் அரிசி வெல்லம் கூட கார்டுக்கு 100 ரூபாய் என மகத்தான புதுமையைப் புகுத்தியுள்ளது அரசாங்கம். கொடுப்பதை ஏன் விடவேண்டுமென எல்லோரும் பெற்று வந்திருப்பார்கள். சில வீடுகளில் அது அன்று மாலையே டாஸ்மாக் மூலம் அரசாங்கத்திற்கே வள்ளல் தன்மையோடு வழங்கப்பட்டிருக்கும். எங்கள் சனத்தில் எத்தனை பேர் அதில் பொங்கல் பொங்கித் தின்று செரிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

இந்த வருடம் காப்புக்கட்டு மந்தமாகவே நடைபெறும். பொங்கலன்று எங்காச்சும் கோவிலுக்கு போனாலும் போவார்கள் அல்லது இருக்கும் நிலத்தில் கொஞ்சம் மட்டும் கடலையோ, சோளமோ போட்டுவிட்டு இரவு பகலாக கரண்டுக்கு காத்திருந்து காத்திருந்து மோட்டார் போடும் விவசாயிகள் பொங்கலன்று கிடைக்கும் தடையற்ற மின்சாரத்திற்கு கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்.

மாட்டுப் பொங்கலன்று இருக்கும் எருமை மாட்டுக்கு ஏனோதானோவெனப் பூஜை போடும்போதே கரைந்துபோய் கொஞ்சமாய் இருக்கும் வைக்கோல் போர் வயிற்றில் புளியைக் கரைக்கும். சுத்துப்பட்டு எந்தப் பகுதியிலும் நெல் விளைச்சல் இல்லை, தீவனம் காசு கொடுத்துக்கூட வாங்க வழியில்லை எனும் உண்மை மனசுக்குள் உதைக்க அடுத்த வருட பொங்கல் வரைக்கும் இருக்கும் மாடுகன்றுகளை எப்படித் தாட்டுவது எனும் உளப்போராட்டம் இந்த 160 ரூபா பஞ்சப்படியில் தீர்ந்துவிடாது.

காய்ந்த நிலங்களையும், குடிதண்ணீருக்கு மட்டும் மிஞ்சியிருக்கும் கிணற்று நீரையும், தீவனத்திற்கு விடைதெரியாமல் அடுத்த வருடம் கட்டுத்தரைகளில் இதே உருப்படிகள் இருக்குமா என்ற சந்தேகத்தை மடியில் சுமக்கும் எருமை மாடுகளையும் கொண்ட என் கிராம்த்து உறவுகளின்

”என்ன பண்றது, மழையும் இல்ல, வாய்க்காத் தண்ணியும் வரல, இருக்கிற தண்ணிய கட்றதுக்கு கரண்டும் வர்றதில்ல” என ஒலிக்கவிருக்கும் ஜீவனற்ற குரல்களின் மத்தியில் என்னால் நீங்கள் ”ஹேப்பி பொங்கல்” என வண்ணமயமாக விடுக்கும், மின்மடல் குறுந்தகவல்களுக்கு திரும்ப மனதார நன்றி கூறி வாழ்த்துச் சொல்லமுடியவில்லை மனிதர்களே.

அதற்காக மன்னியுங்கள்…


மற்றபடி உங்கள் அனைவருக்கும் உதட்டளவில் ”ஹேப்பி பொங்கல்”


மரபுகளையும் உண்மையான மகிழ்ச்சியையும் வெகுவேகமாகத் தொலைத்த நாம், அவசர அவசரமாய் மாற்றும் தொலைகாட்சிச் சானல்களில் கிடைக்கின்றதான் ஏதாவது சினிமா நட்சத்திரன் மாயாஜாலத்தில் கிடைக்கிறதா எனத் தேடுவதையும் நிறுத்திவிடவேண்டாம்.

----

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...