Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Mar 29, 2025

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அடுப்புகளை, பற்ற வைக்காமல் திறந்துவிட்டு, தீப்பெட்டியோடு திரும்புகிறாள். எதிரில் நிற்கும் பிள்ளைகள் முன் மண்டியிடுகிறவள், ”ரெண்டு பேரும் அம்மாகூட வந்துடுறீங்களா!?” எனக்கேட்க ”‘எங்கம்மா, தாத்தா வீட்டுக்கா?” எனக் கேட்கும் மகளையும் மகனையும் அணைத்தபடி கதறுகிறாள். பாட்டல் ராதா திரைப்படத்தில், குடி நோயாளியின் மனைவி தற்கொலைக்கு முனையும் காட்சி இது.


இன்னொரு தருணத்தில் ”அப்படியே குழந்தைங்களோடு கொளுத்திக்கலானு நினைச்சேன். அப்புறம் உன்னை மாதிரி ஆளுக்காக ஏன் சாகனும்னு தோணுச்சு!” எனும் அஞ்சலம், தாலியை கழற்றி கணவனின் கையில் வைத்துவிட்டு, ”போதுன்ற அளவுக்கு குடி. அப்படியே விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு செத்துடு. நாங்களாவது நிம்மதியா இருப்போம்” என உறுதியான வேறொரு முகம் காட்டுகிறாள். இது சினிமாவில் வரும் அஞ்சலம் முகம் மட்டுமல்ல. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகளின் முகம்.




எதிரிகளின் மரணத்தை ஒருவர் வேண்டுவதைவிட, குடி நோயாளிகளின் மரணம், அவரை மிகவும் நேசித்த குடும்பத்தாரால் மிக அதிகமாக ஒருகட்டத்தில் வேண்டப்படுகின்றது எனும் உண்மை அவ்வளவாக ரசிக்க முடியாதது. ‘செத்து தொலைஞ்சிட்டாக்கூட நாங்க எப்படியாச்சும் நிம்மதியா இருந்துடுவோம்’ என்று பல தருணங்களில் வெகு எளிதாகச் சொல்வதைக் கேட்க முடியும்

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் குடி நோயாளிகளாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அவர்களில் எழுபது லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலையில் உள்ளனர். குடிப்பதால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கின்றது. அது எந்தளவு ஆதாரப்பூர்வமானது எனத் தெரியவில்லை என்றாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

பாட்டல் ராதா, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஒரு குடி நோயாளியின் கதை. படத்தில் குடி மீட்பு மையம் மற்றும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA-ஏஏ) அமைப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். சமீபத்தில்தான் ஏஏ அமைப்பு குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது

2023 ஆகஸ்ட் 7-ம் தேதி காலை ஆறரை மணி சுமாருக்கு, நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது கல்லூரி நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்று கொண்டிருந்தேன். தேதியும் நேரமும் துல்லியமாக நினைவில் இருக்கக் காரணம், முந்தைய தினம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘வாழ்தல் அறம்’ தலைப்பில் பேசியிருந்தேன். அந்த உரையைக் கேட்டுவிட்டுத்தான் அவர் அழைத்திருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு பேசுகிறோம். உரை குறித்து, தமக்கு நெருக்கமாக உணர்ந்தது குறித்துப் பேசியவர், தன் கடந்த காலக் கதையைச் சொல்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது யாரையும் சந்திப்பதையோ, யாருடனும் உரையாடுவதையோ தவிர்ப்பவன் நான். மனசு முழுக்க நிகழ்ச்சி குறித்த கவனம்தான் இருக்கும். ஆனால் அன்று பேசினேன். அந்த உரையாடல் பின்வரும் நாட்களில் அற்புதங்கள் செய்யப்போவதை அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு ஏறத்தாழ சம வயதுதான். பள்ளிப் படிப்பு, குடும்பச் சூழல், நட்புகள், படிப்பை தொடராமல் வேலைக்குச் சென்றது, தொழில், திருமணம் எனும் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான காலத்தில் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. குடி நோயாளியாகவும் மாறியிருக்கின்றார். சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், இழப்புகள் ஏராளம். எதுவும் அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாதவை.

பலபேர் தனித்தனியே அனுபவிக்க வேண்டிய சவால்கள், வேதனைகள், அவமானங்கள், போராட்டங்களை குடி நோயாளிகள் தனி நபராக அனுபவித்து விடுகின்றனர் என்பது ஒருபோதும் அவர்களுக்குப் புரிவதில்லை. புரியும்போது பலருக்கும் காலம் கடந்து விடுகின்றது.

ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அவருடைய கடந்த காலம் இன்னும் மிச்சம் இருந்தது. நான் கிருஷ்ணகிரி தாண்டியிருந்தேன். மாலை பேசிக்கொள்ளலாம் என அப்போதைக்கு தொடரும் போட்டோம். பாதிக்கப்பட்டதைக் கேட்டாயிற்று, மீண்டது எப்படி எனும் ஆவல் எனக்குள் ஊஞ்சலாடிக்கொண்டேயிருந்தது.

மாலை உரையாடல் தொடங்கியது. பல அனுபவங்களைப் பகிர்ந்து இறுதியாக, குடியின் உக்கிரத்தில் இருந்தபோது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏஏ) கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைக்கப்பட்டு, அதன் வாயிலாக மீண்டதைச் சொன்னார்.

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குறித்து மேலோட்டமாகக் கேள்விப்பட்டதுண்டு. அவர் மூலமாக விரிவாக அறிந்துகொள்கிறேன். ஏஏ குடி நோயிலிருந்து மீண்டவர்கள், மீள விரும்புகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் உலகளாவிய அமைப்பு. அவர்கள் இயங்கும் முறை, யாரெல்லாம் அதில் உறுப்பினர்கள் என்பதுள்ளிட்ட விபரங்களை அவர் கூறவில்லை. அந்த அமைப்பிற்குள் சென்று, ஒட்டுமொத்தமாக மீண்டு, அதில் தற்போது அவரும் பங்களிப்பதைச் சொன்னார். அவர் சென்றிருந்த எல்லையிலிருந்து, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் முற்றிலும் சிதைந்திருந்த நிலையிலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஏஏ நிகழ்விற்கு நீங்கள் ஒருமுறை வந்து பாருங்கள் என்று அழைத்தார். ஏறத்தாழ அனைத்து பெரு நகரங்களிலும் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு, குறிப்பாக ஈரோட்டில் அனைத்து நாட்களிலும் கூட்டம் நடைபெறுவதாக் கூறினார்.

சில மாதங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் தம் உறவினர் குடி நோயாளியாக இருப்பதைக் கூறி சைக்கியாட்ரிஸ்ட் யாரையேனும் பரிந்துரை முடியுமா எனக் கேட்க, எனக்கு ஏஏ நினைவுக்கு வந்தது. நண்பரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் நிலைமையைச் சொல்லி, சரி வருமா எனக்கேட்டேன். வரச் சொல்லுங்க சரியாகிவிடுவார் என நம்பிக்கை அளித்தார்.

ஆனால், எனக்கு நம்பிக்கை வரவில்லை. காரணம், அவர் காலையில் நான்கு மணிக்கே குடியைத் தொடங்கிவிடுகிறவர். மாட்டுக் கொட்டகை, மோட்டர் ரூம், குப்பை மேடு, புதர், வாழை, இளம் தென்னை மரங்களின் மட்டைகள் என புழங்கும் இடமெங்கும் பாட்டில்களை பதுக்கி வைத்து குடிப்பவர். குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடினாலும், அவர் தொடர்ந்து வைத்துக் கொண்டேயிருப்பார். நாள் முழுக்க போதையில் இருப்பவர். உறவினரிடம் ஏஏ குறித்து நான் கேள்விப்பட்டதைக் கூறி, கூட்டத்திற்குச் செல்வாரா எனக் கேட்டேன்.

அவருக்கும் முழு நம்பிக்கை இல்லையென்றாலும், அந்தக் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். எப்படியாவது குடி நிறுத்தப்படவேண்டும் என்பதால், எதையும் செய்யத் தயாராக அவர்கள் இருந்தனர். அவரிடமே ஒப்புதல் வாங்கி ஞாயிறு மாலை செல்லவதாக, முதல் நாள் இரவு தெரிவித்தனர். நான் நண்பரிடம் ஞாயிறு அன்று கூட்டம் நடக்கும் இடம் மற்றும் சந்திக்க வேண்டியவரின் விபரங்கள் பெற்று வழங்கினேன்.

அடுத்த நாள் மாலை செல்லலாம், அவருக்கு நிச்சயம் நல்லது நடக்கும் எனும் மெல்லிய நம்பிக்கையோடு குடும்பம் உறங்கச் சென்றது. ஆனால் விடியல் அவர்களுக்கானதாக இல்லை. காரணம் விடியும் முன்பே அவர் ஆரம்பித்துவிட்டார். குடும்பம் சோர்ந்து போனது. ஏஏ நண்பரை அழைத்து நடந்ததைச் சொன்னேன். சற்றும் சுணங்காமல் அடுத்த கூட்டத்திற்கு வர வையுங்கள் என்றார்.

குடும்பம் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றது. அவரே என் உறவினரை அழைத்து அடுத்த கூட்டத்திற்கு போகிறேன் என ஒப்புதல் அளித்திருக்கிறார். குடும்பம் அழைத்துச் சென்றது. என்னவோ மாயம் நிகழ்ந்தது. குடியை நிறுத்தி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு மிக நெருங்கிய நட்புகள் அமைந்தன. தினமும் ஃபோனில் பேசுவது, கூட்டங்களுக்கு கொண்டாட்டமாக செல்வது என அவருக்கு புதியதோர் உலகம் அமைந்தது. குடும்பம் மிகப் பெரிய நிம்மதியை அடைந்தது.

பிறிதொரு தருணத்தில் ‘ஏன் அந்த முதல் ஞாயிற்றுக்கிழமை குடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, ‘எப்படியும் குடியை விடச் சொல்லுவாங்க, கடைசியா ஒருமுறை குடிச்சிட்டு விட்டுடலாம்னு குடிச்சேன்!’ எனச் சிரித்திருக்கிறார். மது இல்லாமல் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் இருக்கிறார்.

இன்னொருவர், ஒரு சாமானியன் சினிமாவில் வெற்றி அடைவதைப்போல் இருபது ஆண்டுகளில் யாரும் கற்பனை செய்ய முடியாத வளர்ச்சியடைந்தவர். அதில் பிற்பாதியில் மதுப்பழக்கம் வளர்ந்தது. அனைத்தும் முதலீடாக இருந்ததால் பொருளாதாரத்தில் சிக்கல் இல்லை. குடும்பத்தில், உறவுகளில் காயம் ஏற்பட்டது. பிள்ளைகள் தவித்தனர். இரண்டு முறை டீ-அடிக்‌ஷன் மையத்திற்குச் சென்றும், குடியை விடமுடியவில்லை.

அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இரவுகளில் அவரின் ஃபோன் அழைப்புகளைக் கண்டு அனைவரும் எரிச்சல் அடைந்தனர், கூடவே கேவலாமாகப் புறக்கணித்தனர். உச்சபட்சமாக பள்ளியில் படிக்கும் மகனோடு மிகக் கடுமையான சண்டை ஏற்பட்டது. உடல் நிலையிலும் கணிசமான அச்சம் ஏற்பட்டது.

எனக்குத் தெரியவந்தபோது, அந்த ஏஏ நண்பர் மூலம் தமிழகத்தின் பெரு நகரம் ஒன்றில் உள்ள ஏஏ ஆர்வலர் ஒருவருடைய தொடர்பைப் பெற்று வழங்கினேன். அவரை சென்று சந்தித்தனர். அவர் அரசு உயர் பதவியில் இருந்தவர், குடியிலிருந்து மீண்டவர். சுமார் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு, கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஒப்புதல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.

வரும் வழியில் எதுவும் பேசமால் ஆழ்ந்த யோசனையில் இருந்தவர், அடுத்த நாள் காலை, இனி குடிக்கமாட்டேன் என வீட்டில் அறிவித்திருக்கிறார். அதனைக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரேயொரு உரையாடலில் இப்படி நிறுத்துவது முடியுமா, நிலைக்குமா எனும் சந்தேகம் இருந்தது. ஆச்சரியம் பேராச்சரியமானது. பல மாதங்களாக தொடர்ந்து குடிக்காமல் இருக்கிறார்.

குடி நோயாளியாக இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, ‘குடியை விட்டுடு!’ என அறிவுறுத்தியிருக்கிறார். அவர் ஆச்சரியமாகப் பார்க்க “இதெல்லாம் எப்படி உருவாக்கினேனு உனக்குத் தெரியும். ஒருகட்டத்தில் இது எதுவுமே என் அடையாளமாக இல்ல. குடிகாரன்தான் என் அடையாளமாக இருந்துச்சு. ஊர்ல யார் மதிச்சு, மதிக்காம என்ன, என் பையன் என்னை மதிக்கல. எப்படியாச்சும் நிறுத்தி தொலையனும்னு நினைச்சப்ப, ஒரு கூட்டத்துக்கு வான்னு சொல்லி ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவரு ரெண்டு மணி நேரம் பேசினார். நல்லதுக்குத்தான் பேசினார். பேசினது காதில் விழுந்துச்சு. நான் யாரு, இந்த ஆளெல்லாம் அட்வைஸ் பண்ற நிலையில நான் இருக்கேனேனு மட்டும்தான் மனச அறுத்துச்சு. அப்ப முடிவு பண்ணினேன். நிறுத்திட்டேன். இப்பதான் என் அடையாளம் எனக்கே தெரியுது” என்றிருக்கிறார்.

உடைவதற்கும் உயர்வதற்கும் ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு போதும் எனும் வரிதான் நினைவுக்கு வருகின்றது.

பாட்டல் ராதா படத்தில் ஏஏ கூட்டங்கள், வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டதும், இந்த இரண்டு பேரின் மாற்றங்களுக்கு நினைவுக்கு வந்தன. நான் இதுவரை ஏஏ கூட்டத்தில் கலந்துகொண்டதில்லை. நண்பர் வந்து பார்க்கச் சொல்லி அழைத்துக்கொண்டேயிருக்கிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு பேரின் மாற்றங்களும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

தேவையுள்ளோர், அந்தந்தப் பகுதியில் நடக்கும் ஏஏ அமைப்பின் நிகழ்வுகளை விசாரித்து, தங்களுக்கு சரி வரும் என்று உணர்ந்தால், நம்பிக்கையிருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். குடி நோயிலிருந்து மீள்வது சிலருக்கு உடனே நிகழலாம், சிலருக்கு ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

குடியில் சிக்குண்டு தவிப்போரைப் புறந்தள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களாக, நோயாளிகளாகக் கருதி, அவர்களுக்குப் பொருத்தமான, சரியான உதவியைப் பெற்றுக் கொடுத்துவிடுதல் அனைவருக்குமான விடுதலையாக இருக்கும்.

- ஈரோடு கதிர்



.

Dec 16, 2015

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…



மகாத்மாகாந்தி வீதி முனையிலிருக்கும்
டாஸ்மாக் அருகே சின்னவீடு போல்
ரகசியப் பிரியமாய் அமைந்திருக்கிறது
’நவீன வசதிகள்’ கொண்ட அந்த பார்

மழை வெள்ளம் சுழித்தோடும்
சாக்கடை மேல் பாவிய
கான்க்ரீட் பலகையின் மீது
முறிந்துபோன
தம் நான்காம் காலைப் பதித்தபடி
சாபங்களையும் வசவுகளையும்
சபதங்களையும் அழுகைகளையும்
சுமந்துகிடக்கும் அந்தப் பழைய மேசையை
ஆக்கிரமித்த நண்பர்கள்
வெவ்வேறு கட்சியினராய் இருக்கவேண்டும்

கோவன் ஜாமீனில் துவங்கி
மதுரை நந்தினிக்கு நகர்ந்து
சசிபெருமாள் சாவு வரை
காரசாரமாய் அலசி ஓய்ந்தபோது
பெரும்தூறல் விழத் தொடங்கியது
மதுக்குப்பி காலியாகிச் சோர்ந்திருந்தது

”மாப்ல… ஒரு ஆப்ப்ப்பு சொள்ள்ரா” எனும்
குழறல் சத்தத்தில் சிலிர்த்த காலிக்குப்பி
குழறியவன் முகத்தில் காறி உமிழ்ந்தது

முகத்தில் வழியும் குப்பியின் எச்சிலை
நாக்கு நீட்டி ருசித்தவன் ரத்தத்தில்
ராஜபோதை பழகத் தொடங்கியது!

 

-
குங்குமம் (14.12.2015) இதழில் வெளியான கவிதை

Jul 18, 2012

35 ரூபாய்க்கு என்ன செய்யலாம்?






நேற்று இரவு 7.30 மணி இருக்கும். அலுவலக அறையின் வாசலில் அவர் நின்றார். 

“உள்ளே வரலாமா”? என்றார்

”வாங்க” என்று சொல்லிவிட்டு…. பார்த்த உருவமா இருக்கே என நினைவுகளை மீட்டெடுத்தேன்.

”யார்னு தெரியுதுங்ளா?” என்றார்

”ம்ம்ம்.. அட தெரியுதுங்க, தெரியாம என்ன” என்றேன்

பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறிய தொழில் நிறுவனம் நடத்தி வந்தவர். ஈரோட்டின் ஒரு பிரதானச் சாலையில் அவரின் நிறுவனம் இருந்தது. ஓரிருமுறை வேலையாக சென்றிருக்கிறேன், அவரும் வந்து போயிருப்பதாக நினைவு. அவரை 1998, 1999களில் சந்தித்ததாக நினைவு. யோசித்தும் கூட பெயர் நினைவுக்கு வரவில்லை. பெயரைக் கேட்கலாமா வேணாம என மனது ஊசலாடியது.

மெலிதாக தடுமாற்றத்தோடு, மெதுவாக வந்தவர், மப்பில் இருக்கிறாரோ எனத் தோன்றியது. நான் பார்த்த காலத்தில் குடியை வெகுவாக சிலாகித்தவர் என்பதும், எப்போதும் பான்பராக் வாசத்தோடு இருப்பவர் என்பதும் நினைவிற்கு வந்தது.

“உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்” என்றார்

என்ன உதவியாக இருக்கும் எனும் சிந்தனையோடு..

“ம்ம்ம். என்னங்க” என்றேன்

“ஒரு நூறு ரூபா பணம் குடுங்க, காலையில 9 மணிக்கு கொண்டு வந்து தந்துடுறேன்”

“ஆஹா… ஏங்க என்னாச்சு…. ஏன் நூறு ரூவாயிக்கு… இவ்ளோ தூரம்” என்றேன்

வெகு வெகு அரிதாக… மிகப் பழகிய நண்பர்கள் எப்போதாவது அவசரமாக வந்து 50 அல்லது 100 குடுங்க வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சு என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் ஒரு துளியும் சந்தேகம் வந்ததில்லை. ஆனால் நேற்று சந்தேகம் வலுத்தது.

“இன்னிக்கு எனக்கு பர்த்டேங்க, 100 ரூவா குடுங்க, காலையில சத்தியமா தந்துடுறேன்”

பிறந்தநாள் என்று சொல்லியும் ஏனோ வாழ்த்தத் தோன்றவில்லை எனக்கு, சிந்தனை அவரையும் மதுவையும் குறித்தே உழன்று கொண்டிருந்தது.

“எங்கிருந்து வர்றீங்க, இப்ப?”

“அக்கா வீட்ல இருந்து வர்றேங்க” என ஒரு பகுதியைச் சொன்னார்.

அக்கா வீடு இருப்பதாகச் சொல்லும் பகுதியிலிருந்து, அவர்கள் நிறுவனம் இருந்த பகுதியைவிட என்னைச் சந்திக்க வந்திருப்பது கூடுதல் தொலைவும் கூட.

”சரிங்க…. உங்க கடை அங்கிருந்து பக்கம்தானே, ஏன் இவ்ளோ தூரம்” என கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டேன்

“இல்லீங்க…. சரிங்க…. 50 ரூபா குடுங்க போதும், காலையில் தந்துடுறேன்”

“பணம் இல்லைங்ளே… இப்பத்தானே ஒருத்தருக்கு கொடுத்து அனுப்பினேன்” என்று சமாளித்தேன்

“அய்யய்யோ.. உங்கள நம்பித்தான்… இவ்ள தூரம் வந்தேன், எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“நிஜமா இல்லீங்க, இப்பத்தான் ஒரு பில்லுக்கு சுத்தமா பொறுக்கிக் கொடுத்தேன்”

“இல்லீங்க, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது, எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“எப்படி வந்தீங்க… வண்டி இல்லைனா சொல்லுங்க… உங்க கடையில வேணா விடுறேன்” என்றேன்

“சரி… ஒரு 35 ரூபாயாச்சும் குடுங்க… ப்ளீஸ்….”

“நிஜமா இல்லீங்க”

”என் பர்த்டேங்க இன்னிக்கு, உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் எப்படியாச்சும் குடுங்க:” என அடம்பிடிக்க ஆரம்பித்தார்.

“சரிங்க… 35 ரூபாய வெச்சு, பர்த்டே-க்கு என்ன பண்ணப்போறீங்க” என்றேன்

”அப்பப்ப ஹான்ஸ் போடுவங்க …. ஹான்ஸ் வாங்கக் கூட காசில்ல… நீங்க 35 ரூபா எப்படியாச்சும் குடுங்க” எனத் தொடர்ந்தார்.

அந்த அடம் கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கியது. இல்லையெனும் மறுப்பைத் தீவிரமாக்கியது.

ஒருவழியாக எழுந்து சென்றார்.

”கொடுத்திருக்கலாமோ?” ”ஏன் கொடுக்க வேண்டும்?” என மனது உழன்று கொண்டேயிருந்தது. பின்னர் மறந்து போனேன்.

காலை அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், நேற்று அவர் அமர்ந்திருந்த நாற்காலியைப் பார்த்தவுடன் ”அந்த 35 ரூபாய்” நினைவுக்கு வந்தது.

அந்த நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த நண்பரை அழைத்து

“இந்த மாதிரி…. ******* ல இருந்து அவர் வந்தார்” என்றவுடன்

“வந்து காசு எதும் கேட்டாரா? பயங்கரமான ட்ரிங்ஸ்ங்க அவரு” என்றார் நண்பர்.

நடந்த கதையைச் சொன்னேன். குடியால் அந்த நிறுவனத்தில் அவர் இல்லையென்றும், வேறு பக்கம் வேலைக்குச் செல்வதாகவும், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லையென்றும் நண்பர் தொடர்ந்தார்.

மீறிய குடியின் பொருட்டு வேலை, தொழில் சிதைந்து, குடிப்பதற்காக சிறிய தொகை கேட்டு வரும் ஆட்கள் குறித்துப் பட்டியலிட்டார் நண்பர். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர், அம்மாவின் மருத்துவச்செலவுக்கு 300 ரூபாய் வேண்டுமெனக் கேட்டு வர, அந்த நிறுனத்தின் உரிமையாளரை இவர் போனில் அழைக்க... அவர் அந்த பணியாளார் ஊர் முழுக்க காசு வாங்கிய கதையைச் சொல்லி எச்சரித்ததையும் கூறினார்.

நான் தெளிந்தேன்.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு என்னைச் சந்தித்து அவர் பணம் கேட்ட தீவிரம், திடம் குறித்து யோசிக்கையில்…. இது போன்ற தீவிரங்கள், பணத்திற்காக ஒரு குற்றத்தை வெகு எளிதாகச் செய்யக்கூட தயங்காதோ எனவும் தோன்றியது. நேற்று அந்த 35 ரூபாயைப் பெற்றிட வேறு என்ன செய்திருப்பாராக இருக்கும் எனவும் யோசிக்க முயன்றது மனம்.

மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

-0-


Sep 26, 2011

டாஸ்மாக்



போதை சூழ் மனிதர்களிடம்
போதையற்று உழல்வதே
ஒரு போதை!

-0-

சபதத்தோடு தொடங்கும் குடி
மதுக்குப்பி தீர்கையில்
தீர்த்துவிடுகிறது சபதத்தை!

-0-

தழுவித் தஞ்சம்புகும் மது
திறக்கிறது அம் மனங்களையும்
சிலநேரம் அம்மணங்களையும்!

-0-

பசியாய் அன்பும் உணவாய் வம்பும்
அவ்வப்போது பரிமாறப்படுகிறது
மதுபான மேசைகளில்!

-0-

கூடுதலாய்ச்சேரும் மதுத்துளிகள்
ஒரேநேரத்தில் எழுப்பவல்லது
உறங்கும் கடவுளையும் சாத்தானையும்!

-0-

வரம்புகள் மீறப்படும்
மதுச்சுற்றிலும் உணரலாம்
சிறுதுளி பெருவெள்ளம்

-0-

Jan 4, 2011

தற்கொலை, கொலை

எர்ணாகுளம் அருகே நெட்டூர் நெடுஞ்சாலையில் காலை பதினொரு மணியளவில் அதிவேகத்தில் வந்த அந்த விலை உயர்ந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதுகிறது. மோதிய வேகத்தில் காரின் ஏர்பேக் திறந்து முன்னிருக்கையில் இருந்த இருவரைப் பாதுகாக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் ஒரு கணவன் மனைவியுடன் வந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அதே இடத்தில் இறந்து போகிறது. மற்ற மூவரும் மிக மோசமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவத்தை நேரில் கண்ட அருகாமை கிராமத்து மக்கள் கோபத்தில் காரை மிக மோசமாக அடித்து சிதைக்கின்றனர். காரில் சென்றவர்கள் போதையில் இருப்பது தெரிந்ததும் கோபம் மூர்க்கமாகிறது. நான்கு பேரையும் சரமாரியாக அடித்துத் துவைக்கின்றனர்.  நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து அடித்ததில் நால்வரும் மிக மோசமாக தாக்கப்படுகின்றனர். விரைந்து வந்த காவல்துறை நால்வரையும் மீட்கிறது. காவல் துறை இன்னும் சில நிமிடங்கள் தாமதித்து வந்திருந்தாலும் நால்வரும் அடித்தே கொல்லப் பட வாய்ப்பிருந்திருக்கிறது. 

இறுதியாய் காரை ஓட்டியவர் போதையில் இருந்ததாகவும், அதிவேகத்தில் வந்து மோதியதாகவும் இ.பிகோ 304ன் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓட்டிய நபர் சிறையில் இருக்கிறார். ஒரு பாவமும் அறியாக் குழந்தையை பலி கொடுத்து இன்னும் அந்தக் குடும்பம் இன்னும் மருத்துவமையில் இருக்கிறது. காரை ஓட்டியவரின் குடும்பமும், நண்பர்களும் கோவைக்கும் எர்ணாகுளத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறனர்.

-0-

இரவு நேரம் விருந்தில் சிறப்பாக சாப்பிட்டத்தோடு, கூடுதல் மகிழ்ச்சியாய் மதுவோடு சரசமாடிவிட்டு இரவு பத்து மணிக்கு நாமக்கல்லில் இருந்து காரில் நண்பர்கள் இருவர் புறப்படுகின்றனர். வாகனத்தை இயக்கச் சென்ற கார் உரிமையாளரை ”இருங்க.. நான் ஓட்டுறேன், நீங்க தூங்குங்க” என்று கட்டாயப்படுத்திவிட்டு நண்பர் காரை ஓட்டத்துவங்குகிறார். எப்போதும் மிகச் சிறப்பாக காரை ஓட்டும் திறமை கொண்டவர்தான். 



கண்ணாடிகள் ஏற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட நிலையில் கார் திருச்செங்கோடு நகரைத்தாண்டி பள்ளிபாளையம் அருகே நெருங்கும் போது, இடது பக்க இருக்கையில் உறக்கத்தில் இருந்தவர் திடுக்கிட்டு எழுந்து ”எதோ சப்தம் வருது, டயர் கருகுகிற வாசம் அடிக்குது” என நிறுத்தச் சொல்கிறார். இறங்கிப் பார்த்தால் இடது பக்க பின் சக்கர டயர் நார்நாராக் கிழிந்து புகை பறக்கிறது. வரும் வழியில் பஞ்சர் ஆனது கூடத் தெரியாமல் பல கி.மீ. தொலைவிற்கு காரை ஓட்டி வந்தது புரிகிறது. 


-0-

இது அவ்வப்போது கேள்விப்படும், சா()தா’ரணமான சம்பவங்களே. இந்த நிகழ்வுகளில் இடம் பெறுபவர்கள் நாம் எனில் பாதிப்பின் சூட்டை, அழுத்தத்தை, வலியை நேரிடையாக உணர்கிறோம். நிகழ்வுகளில் இருப்பவர்கள் நம் நண்பர்களெனில், அவை கொஞ்சம் கூடுதல் கவனத்தையும் ஆர்வத்தையும் பெறுகின்றன.


ஒவ்வொரு பயணமும் மறுபிறவி என்பதை அனுதினமும் நாம் சந்திக்கும், கேள்வியுறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது. எல்லோரையும் மீறி விபத்து நிகழ்வதை ஒருபோதும் தடுக்க முடிவதில்லை. அது நியதியாய் இருக்கும் மரணம் போன்றது. குடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது. தடுப்பது நம் கையில் இருக்கிறதென்பதை மறுக்கவும் வேண்டாம், மறக்கவும் வேண்டாம். குறைந்த பட்சம் குடி போதையில் வாகனம் இயக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம்!

-0-

Jul 26, 2010

குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!


(படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்... (இஃகிஃகி) ஒன்னு படத்தை அழுத்தி பெரிதாக்கி படிங்க, இல்லாட்டி சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க, அப்படியும் படிக்க முடியலனா.. பாவம் போஸ்டர்னு மன்னிச்சு விட்ருங்க)




சில பருப்புகள்.... ஸ்ஸ்ஸ்ஸாரி....... பொறுப்பிகள்:

1. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம்.

2. அருமை, மிக அருமை மற்றும் சிரிப்பான் போட்டு பின்னூட்டம் வந்தால்,  பின்னூட்ட அடிமைகள் மறுவாழ்வு விழா வாசன் பார்வை அமைப்பு (!!!) மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

3. தள்ளாடாமல் மிக அருமையாக போட்டோ  எடுத்துள்ளதாக பாராட்டி(!!!) பின்னூட்டாதிக்க தாக்குதல் நடத்தினால் உங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யப்படும்.

4. ஒரு மணி வரைக்கு என்ன பண்ணுனீங்கனு வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தம் ஜெய்ய்ய்ய்ய்ப்படும்... ஜாரி
_______________________

Dec 31, 2009

குடும்பம் வீட்ல காத்துக்கிட்டிருக்கு

”அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க” காலையிலிருந்தே யாரைப் பார்த்தாலும் இதே கேள்விதான். ”ஒன்னுமில்லைங்க”னு சொல்லிச் சொல்லி சோர்ந்து போயி ஒரு கட்டத்தில, அவங்க கேட்குமுன்னே நான் யாரைப் பார்த்தாலும் “அப்புறம் இன்னிக்கு நைட் எங்கே புரோக்கிராமுங்க”னு கேட்க ஆரம்பிச்சுட்டேன்...

கிட்டத்தட்ட எல்லோரும் இன்று இரவுக்கான நிகழ்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றனர். பதின்ம வயதுகளில் புது வருடப் பிறப்பு என்பது ஒரு சந்தோச நிகழ்வாக இருந்தது போல் ஓர் உணர்வு....

இருபது வயதுகளில் இயக்கம், சங்கம் என்று தினவெடுத்து திரிந்த போது ஒவ்வொரு ஆண்டும் சங்கத்திற்கு நிதி சேகரிக்க (சேராதது வேறு சோகம்) புத்தாண்டு இரவுக்கு நிகழ்ச்சி நடத்தி, அடுத்த நாள் முதல்நாள் இரவு நடந்த சில அட்வென்சர் விசயங்களை பேசிச் சிரித்துத் திளைத்து இரண்டு மூன்று நாட்கள் களைப்பாய் திரிவதுண்டு...

அதற்கு பின்னான காலகட்டத்தில் அலைபேசி வந்தபின் குறுந்தகவல்களை அனுப்புவதும் பெறுவதும் புதுவருடக் கொண்டாட்டத்தின் முக்கிய கடமையாக மாறிப்போனது. 364 நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்தவர்கள்கூட இந்த நாளில் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பி உள்ளேன் அய்யா போட்டுவிடுவது சுவாரசியமானது. சில புத்தாண்டுகளுக்கு அதுபோலவே நானும் அனுப்புவதுண்டு.

இப்போது வருடப்பிறப்பு என்பது மற்றுமொரு முதல் தேதி என்ற நிலைக்கு வந்தது போல் உணர்கிறேன், ஒரே வித்தியாசம் தினமும் தேதிக் காகிதத்தை கிழிப்போம், முதல் தேதி மாதம் காட்டும் காகிதத்தைக் கிழிப்போம், ஆனால் இந்த முதல் தேதிக்கு காலண்டரையே மாற்றுகிறோம்.....

அதுக்குப்போயி இத்தனை கொண்டாட்டம் என புத்திசாலித்தனமாக (!!!! ஹ்க்கும்) நினைக்கும் போது, இந்த தினமும் ஒரு முக்கிய வியாபார தினமாக மாறியதில் ஆச்சரியம் இல்லை, இலவசமாக இருக்கும் குறுந்தகவலுக்கு கட்டணம் நிர்ணயிப்பது முதல், சரக்குக்கு கொடுக்கப்படாத சில்லறையை கண்டு கொள்ளாமல் விடுவது வரை எல்லாமே வியாபாரத்தின் முக்கிய தந்திரமாகத் தெரிகிறது.

அதுவும் புதுவருடக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாய் குடித்துத் தீர்க்கப்படும் சரக்குக்கு இதுதான் கணக்கு என்று இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக வருடம் பிறக்கும் பனிரெண்டு மணிக்கு சற்று முன்பும், பின்பும் சீறும் வாகங்களை கட்டுப்படுத்த கஷ்டப்படும் காவல்துறையினரைப் பார்க்க பரிதாபமாகவும் இருக்கும்.

2002 புதுவருடம் என்று நினைக்கிறேன்... வழக்கம்போல் ஈரோட்டில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம் கலகலத்துக் கொண்டிருந்தது, அப்போதெல்லாம் காவல்துறை இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்கவில்லை. நள்ளிரவு தாண்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் அடிக்கடி அலற ஆரம்பித்தது. விடிந்ததும்தான் தெரிந்தது, இரவில் குடித்துவிட்டு வேகமாக போய் விழுந்து நொறுங்கியதில், அரசு மருத்துவமனையில் எட்டு பிணங்கள் விழுந்து கிடந்தது. அதுவும் நாலைந்து சாலைகள் மட்டுமே இருக்கும் ஈரோடு மாதிரி சின்ன நகரத்துக்குள் ஒரே இரவில் எட்டு மரணம் என்பது அதிர்ச்சியின் உச்சம். இறந்த அத்தனை பேரும் இருபதுகளில், அந்தந்த குடும்பத்தின் வருங்காலக் நம்பிக்கையா இருந்தவர்கள். உடனே காவல்துறைக் கண்காணிப்பாளர் இரவுகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை மிகக்கடுமையாக ஒடுக்க ஆரம்பித்தார். காலப்போக்கில் கடுமையும் மாறிப்போனது.

அதன்பின் ஒவ்வொரு புத்தாண்டு இரவிலும் சாலைகளின் ஓரத்தில் பத்திரமாக (தள்ளாடாமல் !!!) நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் போது இளசுகளின் ஆட்டமும், சீறிப்பாயும் வாகனங்களும், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து காவல்துறை துரத்தி பிடித்து அடிப்பதும், விபத்தில் சிக்கி ரத்தக்காவு கொடுப்பதும் சலனமில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.



இந்த ஆண்டாவது புத்தாண்டு குடியின் பொருட்டு விபத்தோ, பிரச்சனையோ நடக்காமல் இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி கொள்வோம். குடியை சிலாகித்து கொண்டாடுபவர்களிடம் சொல்ல விரும்பது... கொஞ்சம் கவனமாக இருங்கள், குடும்பம் வீட்ல காத்துக்கிட்டிருக்கு...

மற்றபடி புதிய 2010 காலண்டரை சுவற்றில் மாட்டிட காத்திருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
_______________________________________________

Sep 13, 2009

மின்னல் போல் வருபவன்

-------------------------------------------------------------------------

சரியாக பத்து வருடங்களுக்கு முன் செப்டம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு எனக்கு என் நண்பனின் நண்பனிடமிருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது...ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும், அதில் என் நண்பனைக் காணவில்லையென்று. அதிர்ச்சியில் பதறினேன் “காணோம்னா எங்கே, எப்படி”

அவனிடம் நான் பழகி இரண்டு வருடங்கள்தான் இருக்கும், இது நாள் வரை என் வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களில் மிகப்பெரிய யதார்த்தவாதி அவன். ஒரு விடயம் தொடர்பாக ஆலோசனை கேட்கும் போது, நமக்கு சாதகமாக ஆலோசனை சொல்லும் போது, அவன் மட்டும் நடைமுறை சாத்தியம் என்னவோ அதை மட்டும் தான் சொல்லுவான், அது நான் விரும்பத்தகாத கூற்றாகக் கூட இருக்கும், ஆனாலும் அவன் சொல்லுவதுதான் மிகச்சரியாக இருக்கும்.

எங்கள் ஊரின் மிகப்பெரிய வழக்கறிஞர் ஒருவரின் மைத்துனன் அவன். தன் சகோதரியின் வீட்டிலேயே தங்கி தன் மாமாவுடன் உதவியாக இருந்தான். அப்போதுதான் சட்டம் முடித்திருந்தான். செப்டம்பர் கடைசி வாரத்தில் தன் மாமாவுடன் நீதி மன்றத்தில் இணைவதாக கூறியிருந்தான். வழக்கறிஞராக மிகப்பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது.

பழகிய இரண்டு வருடத்தில் சில முறை மட்டுமே அவன் மது அருந்தி அதுவும் சிறிதளவு அருந்துவதை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அடிக்கடி, அதிக அளவில் குடிப்பதை அறிந்தேன். ஏன் என்ன காரணம் என்று கேட்டால் தத்துவார்த்தமாக, எல்லாக் குடிகாரனும் சொல்லும் சொத்தை சமாதானத்தை என்னிடமும் சொன்னான்.

அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு என்னிடம் பேசினான், ராசிபுரத்தில் இருக்கிறேன், ஒரு கிடாவெட்டு விருந்து. மாலை ஈரோடு திரும்புவதாக கூறினான். ஈரோடு வரும் வழியில் பள்ளிபாளையம் தாண்டும் போது மாலை நான்கு மணிக்கு, காவிரியில் குளிக்க நான்கு பேரும் சென்றிருக்கிறார்கள். தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. அற்புதமாக நீச்சல் அடிக்கக் கூடியவன். இன்னும் அதிகமாக தண்ணீர் போகும் போதும் கூட ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை அந்த ஆற்றை நீச்சலிலேயே கடக்கும் வல்லமை படைத்தவன்.


ஆனால் அன்று ஆற்றில் இறங்கி நீந்தி கால்வாசி ஆற்றைக் கடக்கும் போது தீடீரென மூழ்கியிருக்கிறான். ஒரு விநாடி மேலே எம்பி “டேய் முடியல” என்றிருக்கிறான், அவ்வளவுதான் எங்கே என்றே தெரியவில்லை. உடன் வந்தவர்கள் சில அடிகள் தூரத்தில் இருந்திருக்கின்றனர். சில நிமிடங்கள் ஏதோ விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்து, இன்னும் சில நிமிடங்களில் ஏதோ விபரீதத்தை உணர்ந்து கூச்சலிட அந்தப் பகுதி மீனவர்கள், துணி வெளுப்போர் பரிசல் போட்டு வந்து பரபரப்பாய் தேடியும் அவன் எங்கே என்றே தெரியவில்லை.

எதுவும் முடியாத நிலையில் எனக்கு முதல் அழைப்பு வந்தது. அவனுடைய சகோதரியிடம் தகவல் சொல்லவேண்டி.

காணாமல் மட்டும் போனதாக மனது நினைத்தது. இறந்திருப்பான் என நினைக்கக் கூட தயங்கியது. எங்காவது தண்ணீருக்குள்ளேயே நீச்சல் அடித்து, ஏதோ ஒரு இடத்தில் கரையேறியிருப்பான், நிச்சயம் கண்டுபிடித்து விடுவோம் என ஒரு நம்பிக்கை.

பதட்டம், குழப்பம், வேதனை, பயம், நம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாம் அடுத்த சில மணி நேரங்கள் மனதைப் பிசைந்தது. காவல்துறை, தீயணைப்புத்துறை என யார் யாரோ வந்தார்கள், வெளிச்சம் மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. ஆறு ஓங்காரமாய் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணிவரை அந்த ஆற்றங்கரையில் குறுக்கும் மறுக்குமாய் ஓடி, பழகிய முகத்திடமெல்லாம் ஏதாவது நம்பிக்கையான ஒரு வார்த்தை வராதா எனத் தேடினேன். அதே நேரம் நம்பிக்கையும் வேகமாக கரைய ஆரம்பித்தது.

“சரி காலையில் வந்து தேடுவோம்” என எல்லோரும் கலைந்து அவரவர் வீடு செல்ல, அலைபேசியை இறுகக் கையில் பிடித்தபடி, மூட மறுக்கும் இறுக்கமான விழிகளோடு எப்போது விடியும் எனக் காத்துக்கிடந்து, விடிந்தும் விடியாமல் ஆற்றங்கரைக்கு ஓடி வந்தால், இரவு நடந்த கவலையான பரபரப்பு இல்லாமல் அந்தப் பகுதி நபர்கள் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அதன்பின் ஒவ்வொருவராய் வர பல முறைகளில் இறுகிய மனதோடு தேடுதல் வேட்டை துவங்கியது, இனி உடல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து, தேடித்தேடி செவ்வாய்கிழமை இரவு நீரில் நொதித்துப் போன உடலை மட்டும் எடுத்தோம்.

சில நாட்களுக்குப் பின் அவன் இறந்த போது அலைபேசியில் அழைத்தவனைச் சந்தித்து பேசிய போது “ஏங்க எத்தன தடவ இந்த ஆத்த கிராஸ் பண்ணியிருக்கான், ஆனா, அன்னைக்கு மட்டும் குடிக்காம இருந்திருந்தா செத்துருக்க மாட்டான்” என்றான்.

குடிக்க நினைக்கும் போது, எப்போதாவது குடிக்கும் போதும், குடிப்பவர்களைப் பார்க்கும் போதும் அவன் ஒரு மின்னல் மாதிரி நினைவில் இன்னும் வந்து கொண்டேயிருக்கிறான்.

-------------------------------------------------------------------------

கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...