Dec 16, 2015

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…



மகாத்மாகாந்தி வீதி முனையிலிருக்கும்
டாஸ்மாக் அருகே சின்னவீடு போல்
ரகசியப் பிரியமாய் அமைந்திருக்கிறது
’நவீன வசதிகள்’ கொண்ட அந்த பார்

மழை வெள்ளம் சுழித்தோடும்
சாக்கடை மேல் பாவிய
கான்க்ரீட் பலகையின் மீது
முறிந்துபோன
தம் நான்காம் காலைப் பதித்தபடி
சாபங்களையும் வசவுகளையும்
சபதங்களையும் அழுகைகளையும்
சுமந்துகிடக்கும் அந்தப் பழைய மேசையை
ஆக்கிரமித்த நண்பர்கள்
வெவ்வேறு கட்சியினராய் இருக்கவேண்டும்

கோவன் ஜாமீனில் துவங்கி
மதுரை நந்தினிக்கு நகர்ந்து
சசிபெருமாள் சாவு வரை
காரசாரமாய் அலசி ஓய்ந்தபோது
பெரும்தூறல் விழத் தொடங்கியது
மதுக்குப்பி காலியாகிச் சோர்ந்திருந்தது

”மாப்ல… ஒரு ஆப்ப்ப்பு சொள்ள்ரா” எனும்
குழறல் சத்தத்தில் சிலிர்த்த காலிக்குப்பி
குழறியவன் முகத்தில் காறி உமிழ்ந்தது

முகத்தில் வழியும் குப்பியின் எச்சிலை
நாக்கு நீட்டி ருசித்தவன் ரத்தத்தில்
ராஜபோதை பழகத் தொடங்கியது!

 

-
குங்குமம் (14.12.2015) இதழில் வெளியான கவிதை

1 comment:

sivakumarcoimbatore said...

விடிவு காலம் வரும் வரை....காத்து இருப்போம் ...

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர் ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில் , எனக்கு ...