Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Oct 19, 2025

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில், எனக்கு அடுத்தடுத்துப் பல அனுபவங்கள் அமைந்தன. ஆனால், அதிலிருந்த சுவாரஸ்யம் அனைத்தும் ஒரே மையப்புள்ளியைக் கொண்ட அனுபவங்கள் என்பதுதான்.

அந்தத் தினத்திலிருந்து, இரண்டு வாரம் கழித்து, “90% கோபம் கம்மி பண்ணிவிட்டேன்என்று அந்தத் தம்பி அனுப்பிய வாட்சப் தகவல் இப்போதும் மனதிற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது.

90% கோபத்தைக் குறைப்பது அத்தனை எளிதா என்ன? அது அத்தனை எளிதில் வசப்படாத ஒன்றுதான். கோபம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். கோபம் வரும் தருணங்களில் எங்களின் உரையாடல் நினைவில் வந்து போயிருக்கலாம். 

அந்த உரையாடல் அன்று வாய்த்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

சரி... அன்று நடந்தது என்ன...!?

 

01

அதுவொரு செவ்வாய்க்கிழமை. காலை ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தேன். அன்று அந்த நிகழ்ச்சியில் பேசுவது தவிர்த்து, வேறு எந்தத் திட்டமிடலும் முந்தைய இரவு வரை இருக்கவில்லை.

முந்தைய இரவு, ஒருவர் தொடர்பு கொண்டு, 'நாளைக் காலை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் உரையாட முடியுமா?' எனக் கேட்டார். நாங்கள் அவ்வப்போது ஃபோனில் உரையாடிக் கொள்கிறவர்கள்தான். நேரில் என்றதும் குடும்ப விசயம் குறித்து இருக்கலாம் எனக் கருதினேன். குடும்ப விசயம் குறித்து நேரில் ஒருமுறையும், ஃபோனில் சில முறையும் உரையாடியிருக்கின்றேன். சந்திக்கலாம் என ஒப்புதல் தெரிவித்தேன்.

அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார். நிறைவடையும் வரை காத்திருந்தார். நிகழ்விலிருந்து விடைபெற்ற பிறகு, இடம் தேர்ந்து அவருடன் உரையாடல் தொடங்கினேன். கருதியதுபோல் குடும்ப விசயம்தான். எளிய குடும்ப சிக்கல். ஆனால் முடிச்சு இறுகிக் கொண்டேயிருக்கின்றது. அவர் தனியே நின்று அனைத்தையும் அமைதிப்படுத்தி, சரி செய்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மட்டுமே தனித்து எதுவும் செய்ய முடியாது. அதனால் எப்படி சரி செய்வது என்பதில் பெரும் குழப்பம். காரணம், சரி செய்ய வேண்டியதில் இவருடைய பங்கு குறைவானது. சிக்கலை இறுக்கிக்கொண்டே செல்லும் மற்றவர்கள்தான் அதனை சரி செய்ய வேண்டும்.

முன்பே அது பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர் தீர்வு காண விரும்பினாலும், அவரிடம் மட்டுமே பேசுவதால், எதுவும் நகராது. தொடர்புடையவர்களில் ஒருவரிடம் பேசுவதுதான் முக்கியத் தேவை. ஆனால் அவர்கள் உடன்பட மாட்டார்கள். அனைவருக்குமே தாம் செய்வதுதான் சரியென்றிருக்கலாம் அல்லது தாம் ஒரு சிக்கலில் உள்ளோம், அதற்கான தீர்வை தாம்தான் தேட வேண்டும் எனும் தெளிவில்லாமல் இருக்கலாம்.

நீண்ட நேரம் அந்த உரையாடலை எடுத்துச் செல்லத் தேவை இருக்கவில்லை. உங்க வருத்தம், வலி புரியுது. ஆனா, நீங்க  மட்டுமே  சொல்யூசன் உருவாக்க முடியாது. அவங்களும் உடன்படனும். அவங்கள்ல யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களாகவே ஆதரவோ அல்லது  ஆலோசனையோ தேடும் ஒரு புள்ளி இருக்கும், அதை அவங்க அடையும்போது, ஜஸ்ட் நீங்க தோளைத் தொட்டால் போதும், சரினு சொல்லிடுவாங்க. வரட்டும் பேசிப் பார்ப்போம். எது தேவையோ, யாரிடம் சரி வருமோ, அதற்கு ஏற்பாடு செய்வோம்!என்று உறுதியளித்தேன்.

அவர் எவ்வளவு தூரம் மனதளவில் திருப்தி அடைந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் சில தீர்வுகளுக்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டும், சில தீர்வுகளுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். சில தீர்வுகளுக்கு அதீத சகிப்புத்தன்மை வேண்டும்.


02

நண்பரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தருணத்தில் அவர் எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்குத் தகுந்த ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் நினைவில் கொண்டிருந்தாலும், அவருடைய அன்றாட வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அவரின் தொடர் ஓட்டத்தில் ஒரு சவால் வந்தது. ஒரு சாதாரண சம்பவம், சரியாகக் கையாளத் தவறியதால், மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருந்தது. தவறியது எந்தவிதத்திலும் குறைபாடு அல்ல. அப்போது அதுதான் சாத்தியப்பட்டிருக்கும். அது சிக்கலாக மாறி, நாட்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, பல மாதங்களாக நீடித்தது. ஒவ்வொரு சந்திப்பிலும் உரையாடலிலும் அதனைச் சரி செய்ய வலியுறுத்தினேன். முடிந்தவரை தொடர்ந்து என் கவனத்தையும், அக்கறையையும் செலுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கும் எல்லைகள் இருந்தன. எல்லைக்கு மறுபக்கமிருந்து கொடுக்கப்பட்டவை பல நேரங்களில் அவ்வளவாகப் பலன் தராது.

பெரும்பாலும் பொருளாதார இழப்புகளை, நெருக்கடிகளை நாம் பேசும் அளவிற்கு, மனதளவிலான நெருக்கடிகளை, இழப்புகளைப் பேசுவதில்லை. நாட்கள் நகர நகர அவருக்கு மன நெருக்கடி கூடிக்கொண்டேயிருந்தது. அந்த நெருக்கடிகள் அவருக்கு வந்திருக்கக் கூடாதவைதான். ஆனாலும், வரத்தான் செய்யும். அதற்கு சில காரணங்கள் இயல்பாக அமைந்துவிடும். அவர் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லாததாக இருந்தன. எதையும் பூசி மெழுகாமல் முடிந்தவரை என்னுடைய கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அதுவே அந்த நட்பிற்கு நான் செய்யும் அறம். ஒவ்வொரு முடிவும் தெரிவிக்கப்படும்போது, ‘அடடா! கொஞ்சம் முன்ன சொல்லியிருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருக்கலாமே எனத் தோன்றும். அதையும் தெரிவிக்கத் தவறவில்லை. ஆனாலும் உணர்ச்சிகள் ஆளும் களம் இப்படித்தான் இருக்கும்.

ஒருகட்டத்தில், எல்லாவற்றையும் சமன் செய்யும், சரி செய்யும் ஒரு புள்ளி வந்தது. அப்படியொரு தருணம் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனதார விரும்பியிருந்தேன். மிக முக்கியமான முடிவினை அவர் எடுக்க வேண்டிய தருணம். என் கவனத்திற்கு வந்தவுடன், தகுந்த ஆலோசனையோடுதான் முடிவெடுக்க வேண்டுமென ஒரு உளவியலாளரைப் பரிந்துரை செய்தேன். தேவைப்பட்டால் நானும் உடன் வருவதாகத் தெரிவித்தேன். அந்தச் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நேரம். 

உளவியலாளரின் ஆலோசனை மிகச் சரியாக அமைந்தது. அவருக்கு பல்வேறு கோணங்களில் நிறைய தெளிவு கிட்டியது. கடந்த காலத்தின் பிழைகளுக்குக் காரணங்கள் புரிந்தன. எடுக்க வேண்டிய முடிவிற்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது. 

திரும்ப வரும் வழியில் காஃபி குடிப்பதற்காக ஒரு உணவகத்தில் நண்பர் வண்டியை நிறுத்தினார். அந்தச் சாலை வழியே நூற்றுக்கணக்கான முறை சென்று வந்திருந்தாலும், நான் அப்படி குறிப்பாக அந்த உணவகத்தில் நிறுத்தியதில்லை. சிற்றுண்டி, காஃபி என உரையாடல் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படும்போது, உணவகத்தின் முன்பிருந்த விளக்குத் தூணை படம் எடுத்து வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தேன். 


03

அந்தப் படத்தை வைத்து யாரும் அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என நான் கருதவில்லை. அதை ஒரு தம்பி கண்டுபிடித்தார். உணவகத்தின் பெயரைச் சுட்டி அதுதானே எனக் கேட்டார். நான்கு மாவட்டங்கள் தள்ளி இருக்கும் அவர், ஒரு ட்ராவலர் என்பதால் பெரிய ஆச்சரியம் எழவில்லை. ஆனாலும் கண்டுபிடித்ததைப் பாராட்டினேன். அதிலிருந்து உரையாடல் தொடங்கியது.

உடனே அந்த உணவகத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பின்னிரவுப் பொழுதில் சாப்பிடச் சென்றிருக்கிறார். ஒரு மேசையில் அமர, பரிமாறுகிறவர் அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு குடும்பமாக வந்தவர்களை அந்த மேசையில் அமர வைத்திருக்கிறார். சொன்ன விதமும் சரியானதாக இருக்கவில்லை. அதனால் அந்த உணவகம் குறித்து கூகுள் ரிவியூவில் ஒற்றை நட்சத்திரம் அளித்து, புகாரினைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் அதைச் சொன்னபோது என் மனம் கனிந்திருந்தது. தம்பி அந்தப் பணியாளார் செய்தது தவறுதான். சில நெடுஞ்சாலை உணவகங்களில் இப்படியான சேவைக் குறைபாடு இருக்கின்றதுதான். அதை இன்னொரு கோணத்தில் பார்த்திருந்தால் உன்னால் கடந்து வந்திருக்க முடியும். அந்த நபர் அன்று எத்தனையாவது மணி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாரோ தெரியாது. அவருக்கென்று எதுவும் இலக்கு இருக்கின்றதா என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காதே. சுமப்பதற்காக நீயாக சில வழிகளை உருவாக்கிக் கொள்ளாதே!என்பது போல் தெரிவித்தேன். அவர் ஒற்றை நட்சத்திரம் அளித்ததைத் தவறு என்று சொல்லவில்லை. 

சில நிமிடங்களில் அந்த ஒற்றை நட்சத்திர கருத்துப் பகிர்வை அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதுவரை எங்கெல்லாம் ஒற்றை ஸ்டார் கருத்து / புகார் பதிந்திருந்தாரோ அத்தனையையும் அழித்துவிட்டேன் என்றார். இப்போது நான் என்னவெல்லாம் சொன்னேன் என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் மனதை நெகிழ்த்தும்விதமாக ஏதோ சொல்லியிருக்கின்றேன். 




இரண்டு வாரங்கள் கழித்து, அவராகவே 90% கோபத்தைக் குறைத்துவிட்டேன் என்றார். உண்மையில் அது அத்தனை எளிதல்ல என்றாலும், பல தருணங்களில் அவர் முயற்சி வெற்றி கண்டிருக்கலாம்.

குறை காணும் இடத்திலெல்லாம் ஒற்றை நட்சத்திரம் இட்டு புகார் அல்லது குறையைப் பதிவு செய்வது தவறொன்றுமில்லை. சேவைக் குறைபாடுகளைக் கண்டாலும், தம் கருத்தினைப் பதிவு செய்யாமல் ஒதுங்க வேண்டியதில்லை. ஆனால், நான் பகிர்ந்த படத்தை அவர் அடையாளம் கண்டதும் அவருக்கு என்னிடம் பகிரத் தோன்றியது, அந்த புகார் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் எனக்கு அப்போது முதன்மையாகப்பட்டது.  

அதே நாளில் மேலும் இரண்டு பேருக்காக  தனித்தனியே ஃபோனில் காலையும், மாலையும் உளவியல் தொடர்பாக மட்டுமே உரையாடியிருந்தேன். இருவருமே இளம் வயது. நன்கு வாழ வேண்டிய வயது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு வந்திருக்கக்கூடாது. மீள்வதற்கு மிகப் பெரும் பிரயத்தனம் தேவை. 

நாள் முழுக்க சந்தித்த, உரையாடிய, உடன் பயணித்த அவர்கள் குறித்து நிறைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் மனச் சமநிலையுடன் இருப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் இந்தத் தம்பி ஒற்றை நட்சத்திரத்தோடு என்னிடம் வந்தார்.  அந்த உரையாடலும் தொடங்கியது. 

உடனே, அதிலிருந்து அவரை வெளியேற்றுவது எனக்கு முதன்மையாகப்பட்டது. அப்படி தோன்றியதற்கு அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த செயல்களும் காரணமாக இருக்கலாம். எனக்குள் மன நலனும், மனிதமும் முதன்மையாக நின்றன. எதன் நிமித்தமாகவும் மனதிற்குள் கடுமைகளைச் சேர்த்து சுமப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.

இரண்டு வார காலத்தில் அவர் கோபத்தைக் குறைத்தது அவருடைய சுய விருப்பம், திறனில் பேரில் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு என் சொற்கள் மட்டுமே காரணம் எனக் கருதவில்லை. அடுத்த நாளே தெரிவித்திருந்தால் இந்தளவு அதனைப் பொருட்படுத்தியிருப்பேனா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எனும் போது அவர் எடுத்த முடிவு செயல்பட்டிருக்கின்றது எனப் புரிந்துகொண்டேன். ’90% கோவம் கம்மி பண்ணிவிட்டேன்' எனப் பகிர்ந்ததும் 90% இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு சதவிகிதம் இருக்குமென மகிழ்ச்சியாக இருந்தது.

மனம் நெகிழ்ந்திருக்கும்போது, மனம் நிறைவாக இருக்கும்போது சொற்களும் நிறைவாகவும், நெகிழ்வாகவுமே வெளிப்படும். அந்த இளகிய சொற்கள் ஒருவேளை 10% நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாலும், 90% பலனைத் தரும் என்பதை அன்று புரிந்து கொண்டேன். 

 *

Mar 2, 2018

ரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி!


சனிக்கிழமை கூடலூர் கல்லூரியில் பயிலரங்கை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகும்போதே மதியம் 2.30 மணி. கல்லூரி முதல்வர் தானும் ஈரோடுக்கு வரும் திட்டம் இருப்பதால் உதகை வழியில் செல்லலாம் என்றார். அவருக்கு தனி வாகனம் இருந்ததால், நான் சாம்ராஜ் நகர், சத்தி வழியே ஈரோடு வருகிறேன் எனச் சொல்லி தனித்து புறப்பட்டேன். கூடலூரில் இருந்து முதுமலை, பந்திப்பூர், குண்டல்பேட், சாம்ராஜ் நகர், ஆசனூர், திம்பம், பண்ணாரி, சத்தி, கோபி வழியே ஈரோடு.




முதுமலை வனம் சுமார் பதினைந்து கி.மி, பந்திப்பூர் வனம் சுமார் பனிரெண்டு கி.மி தேசிய நெடுஞ்சாலை. அந்த இருபத்தேழு கி.மீ தொலைவிற்குள் நான் எண்ணிய வரையில் 97 வேகத்தடைகள். இதெல்லாமுமா கணக்கெடுப்பீர்கள் எனும் கேள்வி வரலாம். ஒரே ஆண்டில் அந்தச் சாலையில் நான்காவது பயணம். ஆகவே இந்த முறை எண்ணிவிட வேண்டுமெனத் தோன்றியது. சுல்தான் பத்தேரியிலிருந்து குண்டல்பேட் வரும்போதும் அப்படித்தான் வேகத்தடைகள்.

வேகத்தடைகளை நினைத்து அயர்ச்சி வந்தாலும் மரியாதையாக ஏற்றுக்கொண்டேதான் தீர வேண்டும். காரணம் அந்தக் காட்டில் வாழும் எல்லா உயிரனங்களுக்கும் சாலைகளைக் கடக்க உரிமை உண்டென்பதால் எந்தக் குறையும் சொல்லாமல் நிதானித்து, நேரம் திட்டமிட்டு பயணப்படுவதே இருதரப்பிற்கும் நல்லது.

உதகை வழி தவிர்த்து மீண்டும் சாம்ராஜ் நகர் வழி தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அன்பிற்கினிய நண்பர்கள் சுரேஷ் மற்றும் ஆசிரியர் அறிவழகன் ஆகியோரே. முதல் நாள் போகும் வழியிலேயே ஆசிரியர் அறிவழகன் அவர்களை திம்பத்தில் சந்தித்துவிட்டாலும், அவரின் அன்பிற்கு அந்த நேரம் போதாதது என்பதால் திரும்பி வரும்போது வருகிறேன் எனச் சொல்லியிருந்தேன். திரும்பும் பயணத்தில் இரவு தங்கி காலையில்தான் செல்ல வேண்டுமென வற்புறுத்தியிருந்தார். அடுத்தடுத்த பணிகளால் இயலாது எனத் தெரிந்திருந்தும் மையமாக தலையசைத்துச் சென்றிருந்தேன். போகும் போதே, சாம்ராஜ்நகர் வழி தவிர்த்து தாளவாடி - தெரக்னாம்பி வழியைத் தேர்ந்தெடுத்திருந்தேன். காரணம் அந்த நிலத்தைப் பார்க்கும் ஆசை.




குண்டல்பேட்டில் எரிபொருள் (நம் ஊரை விட 2-3 ரூபாய் லிட்டருக்கு குறைவு) நிரப்பிக்கொண்டு புறப்பட்டபோது, சுரேஷ் அழைத்தார். ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என்றேன். குண்டல்பேட் - சாம்ராஜ் நகர் சாலை குறைவான அகலமே இருந்தாலும், அற்புதமான சாலையமைப்பு. 2002ம் ஆண்டிலிருந்து அந்த சாலை வழியே பயணப்படும் அனுபவம் உண்டு. இந்த முறை மட்டுமே, சாலையோர ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடாமல் கடந்திருந்தேன்.

தாளவாடியில் சுரேஷ் கே.சி.டி பள்ளியை திட்டமிட்டபடியே நேரமான ஐந்து மணிக்கு முன்பே எட்டிவிட்டேன். ஆசிரியைகள் அனைவரையும் காத்திருக்க வைத்திருந்தார். சில நிமிடங்கள் அவர்களிடம் மரியாதை நிமித்தம் பேசி அனுப்பிவிட்டு, நானும் அவரும் கடந்த ஓராண்டுகள் குறித்துப் பேசி என மிக வேகமாக அரை மணிப் பொழுதைக் கரைந்திருந்தோம்.

இருவரும் மறந்திருந்தது அன்றைய தேதியை. அது பிப்ரவரி 24 . அதிலிருக்கும் சிறப்பே, கடந்த ஆண்டு அவர்களின் பள்ளி ஆண்டுவிழா அதே பிப்ரவரி 24ம் தேதிதான் நடந்தது. அதில் நான் தான் சிறப்பு விருந்தினர். அந்த விழாவிற்கும் கூட நான் இதே ஐந்து மணிக்குக்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் சென்றிருந்தேன். அந்த தேதி குறித்த நினைவின்றி, திட்டமிடல் ஏதுமில்லாமல், நாங்கள் இருவரும் மீண்டும் அதே பள்ளியில், அதே தேதியில், அதே நேரத்தில் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்பதை அடுத்த நாள் அறிந்தபோது சிலிர்த்துப் போனேன்.

இரவுக்குள் ஈரோடு திரும்ப வேண்டுமென்பதால், முடிந்தவரை விரைவாக அங்கிருந்து ஆசிரியர் அறிவழகன் சார் வீட்டிற்குச் சென்றோம். சூசையபுரம் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியாராக இருக்கும் அறிவழகன் அவர்களின் மாணவர்தான் சுரேஷ். முப்பதுகளில் இருக்கு சுரேஷ் அவர்களின் வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு வரலாறு.

அறிவழகன் சார் குறித்து சுரேஷும், அவரின் மாணவியான உமாவும், ஏற்கனவே மிகப் பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். பிம்பம் என்பதைவிட பிரியம் என்றே சொல்ல வேண்டும். அவரை அவர்கள் இருவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் மேலான ஒரு ப்ரியத்தை என்னுடனான உரையாடல் மூலம் அவரும் திரட்டி வைத்திருந்தார். நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும் பிரியம். அவர் ஒரு மிகப் பெரிய வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர். இவை யாவற்றையும் கடந்து ‘பிள்ளைகளுக்கான ஆசிரியர்’. ஈரோடு வாசல் வழியாக மிகுந்த நெருக்கத்திற்குள் வந்தவர்களுள் மிகவும் முக்கியமானவர்.



அரை மணி நேரத்தில் கிளம்பிவிட வேண்டும் எனும் நிர்பந்தம் எனக்குள் பெரும் நெருக்கடியாக இருந்தது. ஆறு மணிக்கு கிளம்பினால் எப்படியும் ஈரோட்டை ஒன்பது மணியளவில் அடைந்துவிடலாம். ஆசனூர், திம்பம் என வனத்தில் பயணிப்பது பின்னிரவில் உகந்ததல்ல. திம்பம் மலைப்பாதையில் வாகனம் பழுதடைந்தால், இரவு முழுக்க காத்திருக்க வேண்டிய ஆபத்தும் உண்டு. அதனால் எப்படியும் ஆறு மணிக்கு கிளம்பிவிடும் முடிவோடு உரையாட ஆரம்பித்தோம். மூவரும் வசதியான ஒரு முக்கோன வடிவில் அமர்ந்து உரையாட ஆரம்பித்தோம். ஆசிரியரும் மாணவரும் என அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பாக நான். எங்களோடு நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியரின் துணைவியாரும் இணைந்துகொண்டார். அவர்களின் பள்ளி நாட்கள், பள்ளி அமைப்புகள், தாளவாடி, வனம், ஃபேஸ்புக், கடந்த ஆண்டு விழா, ஈரோடு வாசல், உள்ளத்தனையை உடல், எழுத்து, வாசிப்பு, உறவெனும் திரைக்கதை, உலக சினிமாக்கள், தேர்வுகள், நாப்கின் சேலஞ், மாணவிகள், ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் அரை மணி நேரத்தில் பேசி முடித்திருப்போம் என்றா நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு அரைமணியாக கடந்தோடுகிறது. கடக்கும்பொழுதெல்லாம் அடுத்த இந்த அரை மணியோடு எழுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து தோற்றுக் கொண்டிருக்கையில், உரையாடல் மட்டும் வென்று கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் துணைவியார் வெளியில் சென்று திரும்பும்போது ஒரு ஆசிர்வாத் கோதுமை மாவு பாக்கெட் கையிலிருந்தது. சாப்பிட எதும் வேண்டாம் போகிற வழியில் பார்த்துக் கொள்கிறேன் என மறுத்தும் அடுத்த இருபது நிமிடத்திற்குள் சப்பாத்தி, தக்காளி, பருப்பு என அசத்திவிட்டார். எத்தனை பேசியும் ஓயாதா, தீராத உரையாடல். இத்தோடு முடிக்கலாம் என நினைக்கும்போது ஆசிரியர் ஒரு கேள்வியை பந்துபோல் வீசுவார், நேரத்தை மறந்து நான் மட்டையாளனாய் அந்தக் கேள்வியோடு விளையாடிக் கொண்டிருப்பேன்.



வெகு அரிதாகவே இப்படியான ஒரு உரையாடல் அமையும். சமீப ஆண்டுகளின் எல்லா நிகழ்வுகளிலும், என்னை ஏதோ ஒன்று ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒன்றில் ஈடுபடும்போது, மனது வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் அன்று, எல்லாம் மறந்து துறந்து, உரையாடலுக்குள் மூழ்கிப்போன அந்தத் தருணம் உயிர்ப்பு மிகுந்தது. மனதைச் சலவை செய்து புத்துணர்வாக்குவது. நிறைந்த நினைவுகளோடு விடைபெற்றபோது நேரம் இரவு 9.05 மணி.

அந்த நேரத்திற்குள் வீட்டிலிருப்பேன் மாலை அழைத்தபோது வாக்குறுதி கொடுத்திருந்தேன். வெளியில் வந்து வண்டியை எடுத்ததும், வீட்டிற்கு அழைத்து வர்ற வழியில் லேட்டாகிடுச்சு, பண்ணாரிகிட்ட வந்துட்டிருக்கேன். எப்படியும் பத்தரை மணிக்குள் வந்துவிடுவேன் என்ற பொய்யைச் சொல்லிவிட்டு ஆசனூரை நோக்கி வாகனத்தை விட்டேன். அந்தப் பொய்க்கு தலை வாரி பூச்சூடி பவுடர் இட பண்ணாரி சோதனைச் சாவடியில் ஒரு காரணம் காத்திருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. 

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரைப் பார்த்து, “அப்புறங்க குப்புசாமி நல்லாருக்கீங்ளா!?” என்பதைக் கேட்டு அவர் அதிர்ந்து போய் மகிழ்ச்சியும், குழப்பமுமாய் விழித்தார்.  எலக்ட்ரீசியனாக வேலை செய்துகொண்டிருந்த அவர், திடிரென ஒருநாள் காவலர் தேர்வுக் சென்று, தேர்ச்சி பெற்று பணியில் இணைந்த காலத்தில் பார்த்தது. அதன்பின் இப்போதுதான் 21 ஆண்டுகள் கழித்து அவரைப் பார்க்கிறேன். அப்புறமென்ன அங்கே ஒரு முக்கால் மணி நேர அரட்டை. இப்படியாக மதியம் 2.30 மணிக்கு கூடலூரில் புறப்பட்டவன், உரையாடல்களைச் சுமந்துகொண்டு ஒரு வழியாக இரவு 1.00 மணியளவில் வீட்டையடைந்தேன். அந்தத் தருணத்திலும்கூட மிகுந்த புத்துணர்வோடு இருந்ததுதான் அழகிய முரண்.

Oct 27, 2017

தூரத்து கட்டைவிரல்



தயங்கி நிற்கையில்
மென் அழுத்தத்தில்
முன்தள்ளுவதும்
தடுமாறித் துவளுகையில்
தன் திறன் கூட்டி
மேலேற்றுவதும்
மனக் காயங்கள் மீது
மயிலிறகு கொண்டு
மருந்திடுவதும்
திகைத்து விழிக்கையில்
திசை கண்டு
நம்பிக்கையூட்டுவதும்
மேடையில் நிற்கையில்
தூரத்திலிருந்து
கட்டைவிரல் உயர்த்துவதும்
ஒடுங்கி நிற்கும்போது
ஒரு வாய்ப்பளியுங்குள் என
யாசிப்பதும்
நடுங்கும் விரல்களில்
பிரியத்தின்
கதகதப்பைப் பகிர்வதும்
மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலித்தும்கூட பற்றிய கை
விடாமலிருத்தலும்
அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்
மிக எளிதுதான்!
யோசித்துச்
சொல்ல வேண்டுமெனில்...
சற்றுக் கடினம் தான்!
இன்னும்....
உண்மையாகச்
சொல்ல வேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!

Nov 4, 2015

சாத்தியம்



தயக்கமெனும் தகிப்பில்
மெல்ல
நீர் வார்ப்பதும்

தடுமாறித் துவளுகையில்
தாங்கிப் பிடித்து
மேலேற்றுவதும்

மனக் காயங்கள் மீது
மயிலிறகால்
மருந்திடுவதும்

திகைத்து விழிக்கையில்
திசை உருவாக்கி
நம்பிக்கையூட்டுவதும்

பொருளறியாச் சொற்களுக்கு
பிரியத்தின் அகராதியில்
அர்த்தம் தேடுவதும்

உயரத்திற்கு நகர்த்திவிட்டு
தொலைவிலிருந்து
கை அசைப்பதுவும்

சோர்ந்து நிற்கும்போது
வாய்ப்பொன்றை
யாசித்து ஈட்டித்தருவதும்

நடுங்கும் விரல்களில்
நம்பிக்கையின் கதகதப்பை
பிரியமாய்ப் பகிர்வதும்

மூழ்கியதிலிருந்து மீள்கையில்
வலியிலும் பற்றிய கை
விடாமலிருத்தலும்

அவர்களே யோசிக்காதபோது
அவர்களுக்காக
யோசிப்பதும்

மேலோட்டமாய்ச் சொன்னால்
மிக எளிதுதான்!

யோசித்துச் சொன்னால்
சற்றுக் கடினம் தான்!

உண்மையாகச் சொல்லவேண்டுமெனில்
நட்பில் அது சாத்தியம் தான்!

-

Mar 3, 2015

ஏ.பி.ஆர் எனும் ஆளுமை



ஒரு ஞாயிறு காலை என்பது, ஏதாவது காரணங்களை பகடையாய் உருட்டி தனக்கே தனக்கென வைத்துக்கொள்ள விரும்பும் ஒன்று. அவர் வருவதாகச் சொல்லிவிட்டார். அவரை ஓரிரு மாதங்களாகத்தான் அறிவேன். நண்பர் ஷான் மூலம் அறிமுகம். சிங்கப்பூரில் தான் செய்ய விரும்பும் ஒரு திட்டத்தின் பணியை ஷான் மூலமாக என்னிடம் வழங்கினார். ஆரம்பம் முதலே ஏதோ ஒரு பிசிறு எங்களுக்குள் இருந்தது. பிசிறு என்பதைவிட அலைவரிசை சரியாக அமையவில்லை எனச் சொல்லலாம். ஆனாலும் வேலைகளை அவர் சொல்வதிலும், அதை நாங்கள் செயல்படுத்த முயல்வதிலும் உயிர்ப்போடு இருந்தோம்.

அதே காலகட்டத்தில் தொடர் அலைச்சல்,  பயணங்கள், கூட்டங்கள், கூடுதலாய் சில பணிகள், அதுவும் இரண்டு மாத காலகட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு பணியை இரண்டு வாரத்தில் முடிக்கும் வகையில் சவாலாய் எடுத்துக்கொண்ட கால நெருக்கடி என என்னால் அதில் ஒன்றவும் முடியவில்லை, ஒன்றினாலும் அவரால் நான் கேட்பதை அனுப்ப முடியவில்லை. அந்த வேலையில் கொஞ்சம் அலுப்பு சேர்ந்துகொண்டது.

மனமும், உடலும் அப்படியாக சோர்ந்திருந்த ஒரு ஞாயிறு காலைதான் அவர் வருவதாக அறிவித்துவிட்டார். அதை நான் எவ்வகையிலும் தவிர்க்கவோ, மறுக்கவோ இயலாது. சனிக்கிழமையே வருவதாக ஏற்பாடுகளில் இருந்தார். நகர் முழுவதுமான ஒட்டுமொத்த மின் தடையைக் காரணம் காட்டி, ஞாயிறுக்கு நகர்த்தினேன். சனிக்கிழமை மாலை ஷான் வந்து சந்தித்தார். எங்களுக்குள் ஏதோ ஒன்று மிக இயல்பாக ஒத்துப் போகிறது. அடுத்த நாள் அவர் வருவதை எதிர்கொள்ளும் மனநிலையை ஷான் உடன் பேசிப்பேசி தயார் நிலையில் வைத்துக் கொண்டேன்.

கோவையிலிருந்து இண்டர்சிட்டியில் கிளம்பினார். பொறுமையாக திருச்சி () நாகர்கோவில் பாஸஞ்சரில் வாருங்கள் எனச் சொல்லியும், இன்டர்சிட்டியில் வருவது வசதி எனச்சொன்னவர் திருப்பூரைக் கடந்துவிட்டேன் என ஏழு மணிக்கு அழைத்தார். இடம் சொல்லுங்கள் வந்துவிடுகிறேன் என்றார். இல்லை நானே வந்து அழைத்துக்கொள்கிறேன் என்றேன்.

அவர் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்திருப்பதையும், அந்த வேலையை முடிக்க ஈரோடு நேரிடையாகவே வந்துவிடுவது குறித்தும், அவரின் வயது, அவருடையை நிலை என அதுவரை நான் கேள்விப்பட்டது குறித்தும் மனைவியிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். ஒருவகையில் அவரை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு அது.

ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயிலிலிருந்து இறங்கி நிலைய முகப்பிற்கு அவர் வந்து நிற்கும் நொடிகளில், அவரை அடையாளம் கண்டு அருகில் சென்று, கதவு திறந்துவாங்க சார்” என்றேன்.

அவர் பெயர் : .பி.ராமன். வயது : 82

1951ல் சிங்கப்பூர் (அப்போது அது மலேசியா) சென்றவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வசிக்கிறார். மலேசியா சிங்கப்பூர் வானொலிகளில் 700 நாடகங்கள், அறுபது ஆண்டுகளாக பத்திரிக்கைப் பணி, பல தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாத் துறையோடு தொடர்ச்சியாக நீண்ட தொடர்பு என அவரைப் பற்றிய விபரங்கள் வியப்பையும், மகிழ்ச்சியையும், மிரட்சியையும் தருகின்றன.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தோள் மீது கை போட்டிருக்கும் அளவிற்கு நட்பு கொண்டிருந்தவர்.

பார்த்த மாத்திரத்தில் அவருடைய வயதை என் தாத்தாவோடும், அவருடைய சிங்கப்பூர் வாழ்நாள் வயதை என் தந்தை வயதோடும் ஒப்பிட்டுக் கொள்கிறேன்.

கேட்டிருக்க வேண்டாத அதே கிளிஷே கேள்வியை நானும் கேட்கிறேன்எப்படி சார் இந்த வயசிலும் இப்படி அலையறீங்க, எல்லாத்தையும் இழுத்துப் போட்டுறீங்க!?”

இப்படி அலையாட்டி, இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்காட்டி, என் வயசுக்கு நான் முடங்கிப் போய்றுவேன். என் வயசுல நான் தொடர்ந்து நல்லா இருக்கனும்னா... இப்படி இயங்கிட்டே இருக்கனும் என்கிறார்.

அவரின் வயதில் பாதிக்கும் குறைவாய் இருக்கும் என்னை அவருக்கு மிக மிக சமமாக உணர்ந்து பேசும் மனநிலை வாய்த்திருப்பது திறன் என்று சொல்வதைவிட ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு காஃபி மட்டும் வேண்டுமென்கிறார். ஷான் அதே நேரம் வருகிறேன் எனச் சொன்னதால், அரசு மருத்துவமனை முன்பு அவருக்காக காத்திருக்கும் நிமிடத்தில்

கதிர், சிங்கப்பூர் போயி அறுபது வருசத்துக்கும் மேல ஆச்சுங்க... அங்க எங்க வாழ்க்கை பாத்தீங்கன்னா... எங்களுக்குனு கஷ்டம், வருத்தம், அலைச்சல், பதட்டம், உளைச்சல், கவலை, பயம், சங்கடம் இப்படி எதுமே இல்ல.  எதுமே இல்லாம இருக்கிறதேகூட நம்மை ஒரு மாதிரி வீழ்த்திடும். நான் சும்மா இருக்கவே கூடாது. எதாச்சும் செய்துட்டே இருக்கனும்” என்கிறார்.

அவருடைய எதிர்பார்ப்புகளை பொறுமையாகக் கேட்கிறேன். தன்னுடைய அனுபவம், உழைப்பு, வயது, தகுதி, தொலைவு என்று எதுகுறித்தும் பேசாமல் வேலையில் ஒன்றிப்போகிறார். தன் விருப்பங்களை மிக மிகப் பக்குவமாய் எடுத்தியம்புகிறார். அவரின் மீதான வியப்பு என்னுள் படிந்து கிடக்கிறது. மாலைக்குள் அவருடைய வேலைகளை திருப்திகரமாக முடிக்கிறேன். அவருக்கும் மிக நிறைவாக இருக்கிறது.



அவர் சென்னை செல்வதற்கான பயண ஏற்பாடுகளில் முடிந்தவரை உடன் இருந்து பத்திரமாக அனுப்பி வைத்தது நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

’நாற்பதுகளுக்குள் நுழைந்து விட்டோம், இனி என்ன’ என்பதான என் எண்ணங்களில் தன் செயல்பாடு எனும் சம்மட்டி கொண்டு அடித்துவிட்டுப் போயிருக்கிறார். புகை படிந்திருந்த கண்ணாடியை பளிச்சென துடைத்து விட்டதுபோல் மனதிற்குள் ஏதோ ஒரு தெளிவு. மனிதர்களை விட ஆகச்சிறந்த பாடங்கள் உலகில் இல்லை எனும் நினைப்பை மீண்டும் ஒருமுறை இவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் எழுதும் சூழலில் நான் எதுவும் உணர்வுவயப்பட்ட நிலையில் இருக்கிறேனா என மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பிக் கொள்கிறேன்.

அவரோடு நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள், அவர் குறித்த விசயங்களை முடிந்தவரையில் ஆவணப்படுத்துங்கள் என்பதுதான். இந்த தலைமுறை எக்காரணம் கொண்டும் தவிர்த்துவிடவோ, தொலைத்துவிடவோ கூடாத ஒரு நபர் ஏ.பி.ஆர் அவர்கள்.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...