ரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி!


சனிக்கிழமை கூடலூர் கல்லூரியில் பயிலரங்கை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகும்போதே மதியம் 2.30 மணி. கல்லூரி முதல்வர் தானும் ஈரோடுக்கு வரும் திட்டம் இருப்பதால் உதகை வழியில் செல்லலாம் என்றார். அவருக்கு தனி வாகனம் இருந்ததால், நான் சாம்ராஜ் நகர், சத்தி வழியே ஈரோடு வருகிறேன் எனச் சொல்லி தனித்து புறப்பட்டேன். கூடலூரில் இருந்து முதுமலை, பந்திப்பூர், குண்டல்பேட், சாம்ராஜ் நகர், ஆசனூர், திம்பம், பண்ணாரி, சத்தி, கோபி வழியே ஈரோடு.
முதுமலை வனம் சுமார் பதினைந்து கி.மி, பந்திப்பூர் வனம் சுமார் பனிரெண்டு கி.மி தேசிய நெடுஞ்சாலை. அந்த இருபத்தேழு கி.மீ தொலைவிற்குள் நான் எண்ணிய வரையில் 97 வேகத்தடைகள். இதெல்லாமுமா கணக்கெடுப்பீர்கள் எனும் கேள்வி வரலாம். ஒரே ஆண்டில் அந்தச் சாலையில் நான்காவது பயணம். ஆகவே இந்த முறை எண்ணிவிட வேண்டுமெனத் தோன்றியது. சுல்தான் பத்தேரியிலிருந்து குண்டல்பேட் வரும்போதும் அப்படித்தான் வேகத்தடைகள்.

வேகத்தடைகளை நினைத்து அயர்ச்சி வந்தாலும் மரியாதையாக ஏற்றுக்கொண்டேதான் தீர வேண்டும். காரணம் அந்தக் காட்டில் வாழும் எல்லா உயிரனங்களுக்கும் சாலைகளைக் கடக்க உரிமை உண்டென்பதால் எந்தக் குறையும் சொல்லாமல் நிதானித்து, நேரம் திட்டமிட்டு பயணப்படுவதே இருதரப்பிற்கும் நல்லது.

உதகை வழி தவிர்த்து மீண்டும் சாம்ராஜ் நகர் வழி தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அன்பிற்கினிய நண்பர்கள் சுரேஷ் மற்றும் ஆசிரியர் அறிவழகன் ஆகியோரே. முதல் நாள் போகும் வழியிலேயே ஆசிரியர் அறிவழகன் அவர்களை திம்பத்தில் சந்தித்துவிட்டாலும், அவரின் அன்பிற்கு அந்த நேரம் போதாதது என்பதால் திரும்பி வரும்போது வருகிறேன் எனச் சொல்லியிருந்தேன். திரும்பும் பயணத்தில் இரவு தங்கி காலையில்தான் செல்ல வேண்டுமென வற்புறுத்தியிருந்தார். அடுத்தடுத்த பணிகளால் இயலாது எனத் தெரிந்திருந்தும் மையமாக தலையசைத்துச் சென்றிருந்தேன். போகும் போதே, சாம்ராஜ்நகர் வழி தவிர்த்து தாளவாடி - தெரக்னாம்பி வழியைத் தேர்ந்தெடுத்திருந்தேன். காரணம் அந்த நிலத்தைப் பார்க்கும் ஆசை.
குண்டல்பேட்டில் எரிபொருள் (நம் ஊரை விட 2-3 ரூபாய் லிட்டருக்கு குறைவு) நிரப்பிக்கொண்டு புறப்பட்டபோது, சுரேஷ் அழைத்தார். ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என்றேன். குண்டல்பேட் - சாம்ராஜ் நகர் சாலை குறைவான அகலமே இருந்தாலும், அற்புதமான சாலையமைப்பு. 2002ம் ஆண்டிலிருந்து அந்த சாலை வழியே பயணப்படும் அனுபவம் உண்டு. இந்த முறை மட்டுமே, சாலையோர ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடாமல் கடந்திருந்தேன்.

தாளவாடியில் சுரேஷ் கே.சி.டி பள்ளியை திட்டமிட்டபடியே நேரமான ஐந்து மணிக்கு முன்பே எட்டிவிட்டேன். ஆசிரியைகள் அனைவரையும் காத்திருக்க வைத்திருந்தார். சில நிமிடங்கள் அவர்களிடம் மரியாதை நிமித்தம் பேசி அனுப்பிவிட்டு, நானும் அவரும் கடந்த ஓராண்டுகள் குறித்துப் பேசி என மிக வேகமாக அரை மணிப் பொழுதைக் கரைந்திருந்தோம்.

இருவரும் மறந்திருந்தது அன்றைய தேதியை. அது பிப்ரவரி 24 . அதிலிருக்கும் சிறப்பே, கடந்த ஆண்டு அவர்களின் பள்ளி ஆண்டுவிழா அதே பிப்ரவரி 24ம் தேதிதான் நடந்தது. அதில் நான் தான் சிறப்பு விருந்தினர். அந்த விழாவிற்கும் கூட நான் இதே ஐந்து மணிக்குக்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் சென்றிருந்தேன். அந்த தேதி குறித்த நினைவின்றி, திட்டமிடல் ஏதுமில்லாமல், நாங்கள் இருவரும் மீண்டும் அதே பள்ளியில், அதே தேதியில், அதே நேரத்தில் ஒன்றாக இருந்திருக்கிறோம் என்பதை அடுத்த நாள் அறிந்தபோது சிலிர்த்துப் போனேன்.

இரவுக்குள் ஈரோடு திரும்ப வேண்டுமென்பதால், முடிந்தவரை விரைவாக அங்கிருந்து ஆசிரியர் அறிவழகன் சார் வீட்டிற்குச் சென்றோம். சூசையபுரம் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியாராக இருக்கும் அறிவழகன் அவர்களின் மாணவர்தான் சுரேஷ். முப்பதுகளில் இருக்கு சுரேஷ் அவர்களின் வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு வரலாறு.

அறிவழகன் சார் குறித்து சுரேஷும், அவரின் மாணவியான உமாவும், ஏற்கனவே மிகப் பெரிய பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். பிம்பம் என்பதைவிட பிரியம் என்றே சொல்ல வேண்டும். அவரை அவர்கள் இருவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் மேலான ஒரு ப்ரியத்தை என்னுடனான உரையாடல் மூலம் அவரும் திரட்டி வைத்திருந்தார். நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும் பிரியம். அவர் ஒரு மிகப் பெரிய வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர். இவை யாவற்றையும் கடந்து ‘பிள்ளைகளுக்கான ஆசிரியர்’. ஈரோடு வாசல் வழியாக மிகுந்த நெருக்கத்திற்குள் வந்தவர்களுள் மிகவும் முக்கியமானவர்.அரை மணி நேரத்தில் கிளம்பிவிட வேண்டும் எனும் நிர்பந்தம் எனக்குள் பெரும் நெருக்கடியாக இருந்தது. ஆறு மணிக்கு கிளம்பினால் எப்படியும் ஈரோட்டை ஒன்பது மணியளவில் அடைந்துவிடலாம். ஆசனூர், திம்பம் என வனத்தில் பயணிப்பது பின்னிரவில் உகந்ததல்ல. திம்பம் மலைப்பாதையில் வாகனம் பழுதடைந்தால், இரவு முழுக்க காத்திருக்க வேண்டிய ஆபத்தும் உண்டு. அதனால் எப்படியும் ஆறு மணிக்கு கிளம்பிவிடும் முடிவோடு உரையாட ஆரம்பித்தோம். மூவரும் வசதியான ஒரு முக்கோன வடிவில் அமர்ந்து உரையாட ஆரம்பித்தோம். ஆசிரியரும் மாணவரும் என அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பாக நான். எங்களோடு நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஆசிரியரின் துணைவியாரும் இணைந்துகொண்டார். அவர்களின் பள்ளி நாட்கள், பள்ளி அமைப்புகள், தாளவாடி, வனம், ஃபேஸ்புக், கடந்த ஆண்டு விழா, ஈரோடு வாசல், உள்ளத்தனையை உடல், எழுத்து, வாசிப்பு, உறவெனும் திரைக்கதை, உலக சினிமாக்கள், தேர்வுகள், நாப்கின் சேலஞ், மாணவிகள், ஆசிரியர்கள் என எல்லாவற்றையும் அரை மணி நேரத்தில் பேசி முடித்திருப்போம் என்றா நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு அரைமணியாக கடந்தோடுகிறது. கடக்கும்பொழுதெல்லாம் அடுத்த இந்த அரை மணியோடு எழுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து தோற்றுக் கொண்டிருக்கையில், உரையாடல் மட்டும் வென்று கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் துணைவியார் வெளியில் சென்று திரும்பும்போது ஒரு ஆசிர்வாத் கோதுமை மாவு பாக்கெட் கையிலிருந்தது. சாப்பிட எதும் வேண்டாம் போகிற வழியில் பார்த்துக் கொள்கிறேன் என மறுத்தும் அடுத்த இருபது நிமிடத்திற்குள் சப்பாத்தி, தக்காளி, பருப்பு என அசத்திவிட்டார். எத்தனை பேசியும் ஓயாதா, தீராத உரையாடல். இத்தோடு முடிக்கலாம் என நினைக்கும்போது ஆசிரியர் ஒரு கேள்வியை பந்துபோல் வீசுவார், நேரத்தை மறந்து நான் மட்டையாளனாய் அந்தக் கேள்வியோடு விளையாடிக் கொண்டிருப்பேன்.வெகு அரிதாகவே இப்படியான ஒரு உரையாடல் அமையும். சமீப ஆண்டுகளின் எல்லா நிகழ்வுகளிலும், என்னை ஏதோ ஒன்று ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒன்றில் ஈடுபடும்போது, மனது வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் அன்று, எல்லாம் மறந்து துறந்து, உரையாடலுக்குள் மூழ்கிப்போன அந்தத் தருணம் உயிர்ப்பு மிகுந்தது. மனதைச் சலவை செய்து புத்துணர்வாக்குவது. நிறைந்த நினைவுகளோடு விடைபெற்றபோது நேரம் இரவு 9.05 மணி.

அந்த நேரத்திற்குள் வீட்டிலிருப்பேன் மாலை அழைத்தபோது வாக்குறுதி கொடுத்திருந்தேன். வெளியில் வந்து வண்டியை எடுத்ததும், வீட்டிற்கு அழைத்து வர்ற வழியில் லேட்டாகிடுச்சு, பண்ணாரிகிட்ட வந்துட்டிருக்கேன். எப்படியும் பத்தரை மணிக்குள் வந்துவிடுவேன் என்ற பொய்யைச் சொல்லிவிட்டு ஆசனூரை நோக்கி வாகனத்தை விட்டேன். அந்தப் பொய்க்கு தலை வாரி பூச்சூடி பவுடர் இட பண்ணாரி சோதனைச் சாவடியில் ஒரு காரணம் காத்திருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. 

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரைப் பார்த்து, “அப்புறங்க குப்புசாமி நல்லாருக்கீங்ளா!?” என்பதைக் கேட்டு அவர் அதிர்ந்து போய் மகிழ்ச்சியும், குழப்பமுமாய் விழித்தார்.  எலக்ட்ரீசியனாக வேலை செய்துகொண்டிருந்த அவர், திடிரென ஒருநாள் காவலர் தேர்வுக் சென்று, தேர்ச்சி பெற்று பணியில் இணைந்த காலத்தில் பார்த்தது. அதன்பின் இப்போதுதான் 21 ஆண்டுகள் கழித்து அவரைப் பார்க்கிறேன். அப்புறமென்ன அங்கே ஒரு முக்கால் மணி நேர அரட்டை. இப்படியாக மதியம் 2.30 மணிக்கு கூடலூரில் புறப்பட்டவன், உரையாடல்களைச் சுமந்துகொண்டு ஒரு வழியாக இரவு 1.00 மணியளவில் வீட்டையடைந்தேன். அந்தத் தருணத்திலும்கூட மிகுந்த புத்துணர்வோடு இருந்ததுதான் அழகிய முரண்.

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

இளையவன் Balaji said...

சொந்த ஊரை விட்டு வேற்றூரில் திரவியம் தேடும் எம்மைப்போல தமிழ் தேடலர்களுக்கு நம்மூர் பற்றிய உங்கள் பதிவு மனம் வருடியது ...பல்வேறு மனம் விரும்பிய வழித்தடங்களை கண் முன் நிறுத்தியதற்கு நன்றி ...