ஒட்டடை படிந்து ஓரமாய்

உலகின் மிக அழகான ஓவியம் அவரவர் முகமே. யாரும் இல்லாத நேரத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி கொடுக்கப்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வித்தியாசமான கோணங்களில் நம் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அதே போல் மிக அழகான சொல் அவரவர் பெயரே.

ஒரு முறை எங்களிடம் திருமணப் பத்திரிக்கை அச்சிட வந்த ஒரு அரசியல் கட்சிக்காரர் பத்திரிக்கையின் ஒரு முக்கிய இடத்தில்

“அய்யா படம் வரணுங்க”னு சொல்லிட்டு போயிட்டார்,

நாங்களும் அவரோட அய்யா (அப்பா) படத்தை கொண்டுவந்து தருவார் போல இருக்குனு கொஞ்சம் மெத்தனாம இருந்துட்டோம், அடுத்த நாள் வந்து கேட்டபோது

“இன்னும் உங்க அய்யா படம் தரல, அது கொடுத்தீங்கனா வேலை முடிஞ்சிடும்னு” எதேச்சையாகச் நம்ம வடிவமைப்பாளர் சொல்ல, உடன் வந்த அல்லக்கைக்கு வந்ததே கோபம்

“என்ன... அய்யா படம் இல்லாம பிரஸ் நடத்தறீங்களா”னு எகிர,

“இவரோட அய்யா படத்த நாங்க எதுக்குங்க வச்சிருக்கோம்னு” நம்மாளு வெள்ளந்தியாச் சொல்ல

அவங்க கூட புதுசா சேர்ந்திருந்த கைத்தடி ஒன்னு எக்கச்சக்கமாக எகிறி “என்னது வட்டத்தோட அய்யாவா, நாங்க இந்த தமிழ்நாட்டோட அய்யாவச் சொல்றோம்” னாரு

அப்பப் போயி “அதாருங்க வட்டம்” னு இன்னொரு கேள்வி கேட்கத் தோனியது கூடவே புரிஞ்சு போச்சு நம்ம கட்டம் சரியில்லைனு.

அந்த தொண்டர் படையில் இருந்த ஒரு புண்ணியவான் கொஞ்சமா விளக்கினார், வட்டம்னா என்ன, மாவட்டம்னா என்ன, அய்யானா என்னவென்று.

அப்பவும் கொஞ்சம் அப்பாவியா மனசுக்குள்ளேயே கேட்டுக்கிட்டான் நம்ம ஆளு “ஏங்க இவங்களுக்கெல்லாம் உண்மையாவே ஒரு பேரு இருக்கும்தானேனு”

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது, பல சமயங்களில் மிகுந்த சுவாரசியமான ஒன்று. நேரம், நாள், நட்சத்திரம், நியூமராலாஜி, இன்னோரு வெங்காயம் நேமாலாஜி எல்லாம் பார்த்து வைக்கும் பெயரை, பல நேரங்களில் பெயர் சொல்லி விளிப்பது மரியாதைக் குறைவான ஒன்றாக கருதப்படுவது எதனால்? எங்கே இந்த விதி பிறந்தது.

கலைஞர், அம்மா, அய்யா, சின்ன அய்யா, கேப்டன் என எல்லோருக்கும் வைக்கப்பட்ட பெயருக்குப் பதில் இந்த வார்த்தைகளால் மட்டுமே அழைக்கப்படுவது மட்டும்தான் மரியாதையான ஒன்றா? அதுவும் இவர்களின் சார்பு தொலைக் காட்சிகளில் இவர்களின் உண்மையான பெயர்கள் ஒருபோதும் உச்சரிக்கப் படுவதேயில்லை.

பெயர் சொல்லி அழைப்பது மிகப் பெரிய குற்றம் என்பது போலவே தலைவர்களும், அவர்களைச் சுற்றியுள்ள தொண்டர்களும் முழுக்க முழுக்க மாறியது எதனால்? முக்கியக் காரணம் வயது, அந்தஸ்து குறைவானர்கள் நம்மை பெயர் சொல்லி அழைத்தாலே மரியாதைக் குறைவாக எண்ணுவது தமிழகத்தில் அதிகம் என்று நினைக்கிறேன். உண்மையான பெயர் சொல்லி அழைப்பது எதன் அடிப்படையில் மரியாதைக் குறைவாக இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

அதாவது வேட்டி அல்லது கோவணம் கட்டியவர் டவுசர் போட்டவரையும், டவுசர் போட்டவர் பேண்ட் போட்டவரையும், பேண்ட் போட்டவர் பேண்ட் போட்டு சட்டையை பேண்டில் இன் செய்திருப்பவரையும் “சார்” என்றே அழைக்கின்றனர். தம்மை விட அந்தஸ்தில், படிப்பில் உயர்வாய் இருப்பவர்களை யாரும் அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அடையாளப் படுத்த பெரிதும் தயங்குகின்றனர்.

கிராமங்களில் பெயர் சொல்லி அழைப்பதைவிட சாதியைச் சொல்லி அழைக்கும் அசிங்கமே கௌரவமாக வேறு பார்க்கப்படுகிறது.

சிலகாலம் துபாயில் (விவேகானந்தர் தெருவில் இருந்தவரானு கேட்கக்கூடாது) இருந்து திரும்பிய நண்பர், “இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார்னு கூப்பிடறோம், அங்கெல்லாம் யாராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள்” என்று சொன்னபோது எனக்கும் “அட ஆமாம்ல” என்றே தோன்றியது.

அதன்பிறகு இப்பொழுதெல்லாம் வயதில் பெரியவர்களை மிக எளிதாக அவர்கள் பெயரோடு அண்ணா என்றோ, அக்கா என்றோ அழைத்துக் கொள்வது பழகிப்போயிருக்கிறது. நீண்ட நாட்களாக அழைத்துவிட்ட காரணத்தால், சிலரை மட்டும் “சார்” என்று அழைப்பதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. எல்லோரையும் வெறுமென பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் முழுதாய் வரவேயில்லை.

பல நேரங்களில், பல இடங்களில் அழைக்கப்படாமலே இருக்கும் பெயர்கள் ஒட்டடை படிந்து ஓரமாய் கிடக்கிறது, என் பெயரும் உட்பட...

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

60 comments:

vasu balaji said...

அதாங்க புரியல. என்னா எழவு சாரும் மோரும் வேண்டிகிடக்கு. ஒரு ஆஃபீஸ் நோட்ல கூட ....சார்னு போடலைன்னா கொலக்குத்தம் பண்ணா மாதிரி. பேரு வச்சி கூப்டுறாண்டா அதிகாரியன்னு போட்டுகுடுக்க வேற ஆளுங்க. நல்ல ஆதங்கம்.

பின்னோக்கி said...

வட்டம் மாவட்டம்..மாவாட்டம் :) தெரியாம இருக்கீங்க கதிர்..உலகம் தெரியாதவரா இருக்கீங்க :)

இந்த ஊருல தான் பேர சொல்லி கூப்பிட்டாலே அவமானமா நினைக்குறவங்க இருக்காங்க..

கலகலப்ரியா said...

ஆஹா.. ரொம்பத் தேவையான பதிவு.. சார் மோர் எல்லாம் வேண்டாம்.. கதிர்ன்னு சொல்றப்பவே சார் மாதிரிதான் ஒலிக்குது.. =))

கதிர் (சார்..) =)).. //சிலகாலம் துபாயில் (விவேகானந்தர் தெருவில் இருந்தவரானு கேட்கக்கூடாது).. //

இந்த சீரியசான பதிவில பார்த்திபன் சார கொண்டு வந்தா.. நம்மளுக்கு லொள்ளு தன்னால வருது.. ரொம்ப சாரி சார்.. =))...


//வானம்பாடிகள் said...

அதாங்க புரியல. என்னா எழவு சாரும் மோரும் வேண்டிகிடக்கு//

வானம்பாடி ஐயா... உங்கள நான் சார்ன்னு கூப்டறது மரியாத நிமித்தம்னு.. ரயில்வேல உங்க சிஷ்யப் புள்ளைகள வச்சு மதிச்சிடப்டாது.. சார் அப்டிங்கிறது நான் உங்களுக்கு வைத்திருக்கும் பெயர்..
என்னமா கோவம் வருதுடா சாருக்கு...

மேடம் த எஸ்கேப்பு..

ஹேமா said...

கதிர்,எங்கள் பழங்கங்களால் பெயர் சொல்லி அழைக்காமல் மரியாதைக்குரியவர்கள் ஆக்கிவிட்டோம்.ஆனால் பெயர் சொல்லி அழைப்பதில் ஒரு நெருக்கம் இருக்கத்தான் செய்கிறது.
வெளிநாடுகளில் அது வழக்கமாய் இருக்கிறது.வந்த புதிதில் கஸ்டமாயிருந்தது.இப்போ அது சகஜமாய்ப்போச்சு.இணையத்தில்கூட பின்னூட்டமிட அந்தச் சங்கடம் இருக்கிறது.

ராகவன் said...

அன்பு கதிர்,

நான் பணிபுரியும் இடத்தின் மேனேஜிங் டைரக்டர் என் நண்பரும் கூட. என்னுடைய முந்தைய சமபாஷனைகளில், பெயரிட்டு அழைப்பது தான் வழக்கம். அப்படி தான் தொடர்ந்தது, நான் நண்பனாய் இருக்கும் வரையில். அவர் அழைத்ததன் பேரில் நான் இவரிடம் ஒரு சீனியர் லெவலில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதும் பெயரிட்டு தான் அழைப்பது வழக்கம். ஒரு நாள் அவரிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது, அதில் அவர் நான் அவரை பெயர் சொல்லி அழைப்பதால் ஏற்படும் சங்கடங்களை சங்கடமின்றி எழுதியிருந்தார், அன்றிலிருந்து நான் அவரை சார் என்று தான் அழைக்கிறேன். மற்றவர்கள் ஏற்றிக்கூறுவதால் இந்த பிரச்னை பெரியதாகிறது. இதற்கு முன்னால் பணி புரிந்த ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில் பெயர் சொல்லித் தான் அழைக்க வேண்டும். முன்னால் பின்னால் எந்த அடைமொழியும் தேவையில்லை.

இங்கு பழகுவதற்கு இன்னும் நாட்கள் ஆகும், கணவன் பெயரைக்கூட சொல்ல உரிமை அற்றவர்களும் இருக்கிறார்கள் தானெ.

எனக்கு குறைகள் இல்லை, நான் உங்களை கதிர் என்று தான் அழைக்கிறேன் எப்போதும். இல்லையா கதிர்!

அன்புடன்
ராகவன்

thiyaa said...

//
உலகின் மிக அழகான ஓவியம் அவரவர் முகமே.
//

உண்மைதான் அதுவும் பருவ வயதில் ம்ம்ம்ம் ....

பிரபாகர் said...

அதான் கதிர்... மரியாதை என்பது அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதுதான் உறவுகளைத்தவிர என்பதுதான் எனது கருத்தும். நல்ல இடுகை கதிர்.

Unknown said...

கதிர், பொதுவாக நம்மூரில் இருப்பவர்களை நான் நெருங்கிப் பழகும் வரையில் “சார்” என்றே அழைப்பது வழக்கம். பெயர் சொல்லி அழைத்தால் “மரியாத தெரியாத பயலா இருப்பான் போல” என்று நினைத்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம். உங்களையும் இதற்கு முன் இட்ட பின்னூட்டங்களில் “சார்” என்றே விளித்திருக்கிறேன். இனி “கதிர்” என்றே அழைப்பேன் (ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு ஒட்டடையைத் துடைக்கிறேன்)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல சிந்தனை நண்பா..;-)))

Thamira said...

கவிதைத்தனமாக முடித்திருக்கிறீர்கள் கதிர். ஆனால் பதிவின் மூடுக்கு பொருத்தமாகத்தான் இல்லை.!

பழமைபேசி said...

மாப்புன்னு அழகாக் கூப்புடுறம்ல?

ARV Loshan said...

அருமை..
நல்லா சிந்திச்சிருக்கீங்க..
நம்ம அலுவலகத்தில் சார்,மோரெல்லாம் போடக் கூடாதுன்னு சட்டமே இருக்கு..

அதுசரி இப்போது சண் டிவி இல் கலைஞரை கருணாநிதி என்கிறார்களே, கவனித்தீர்களா?

நான் கூட அண்மையில் இப்பிடி புத்திஜீவித்தனமாக சிந்தித்து பெயர் பற்றி பதிவிட்டேன்.. பார்த்தீங்களா?

ARV Loshan said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
கவிதைத்தனமாக முடித்திருக்கிறீர்கள் கதிர். ஆனால் பதிவின் மூடுக்கு பொருத்தமாகத்தான் இல்லை.!
//

agree.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்
(அண்ணே... ரொம்ப பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுது, நல்லவேளை தங்கமணி உங்கள ஆபிஸ்ல சார்னு கூப்புடாமா இருந்தா சரி)

நன்றி @@ பின்னோக்கி
(ஆமாங்க, இன்னும் வார்டு, ஒன்றியம்னு இப்படித்தான் சொல்றாங்க, பேரு சொல்ல மாட்டேங்கிறாங்க)


நன்றி @@ கலகலப்ரியா
(கதிர் னா சார் னு ஒலிக்குதா....
குறும்புதானே மேடம்....
எப்ப்ப்ப்பூபூபூடி)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஹேமா
(ஆமாங்க பின்னூட்டத்தில பல தடவ சார் னு வரும்போது ச்ச்ச்சங்கட்டமா இருக்கும்)

நன்றி @@ ராகவன்
(உங்கள் மேனேஜிங் டைரக்டர் உடன் அப்படி பேச வேண்டிய நிர்பந்தம் புரிகிறது. காதலிக்கும் போது வாடா போடா என அழைத்தவனை, கணவனாக பெயர் சொல்லி அழைக்க முடியாதா கதையெல்லாம் நிறைய இருக்குங்க)

நன்றி @@ தியாவின் பேனா
(ம்ம்ம்ம்ம்ம்!!!!!)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரபா
(உறவுகளைத்தவிர என்பதும் சரிதான் பிரபா)

நன்றி @@ KVR
(அப்பாடா... சக்ஸஸ்)

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்
(அப்படிங்களா, இனி கவனிக்கிறேன்)

நிகழ்காலத்தில்... said...

\\பழமைபேசி said...

மாப்புன்னு அழகாக் கூப்புடுறம்ல?\\

பெயர் சொல்லி கூப்பிடுவதைவிட மாப்பு அப்படின்னு கூப்பிட்டா இன்னும்
நெருக்கமா இல்லையா கதிர்:))

நான் என்னை விட மூத்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை.,

மற்றவர்களை பெயர் சொல்லித்தான் அழைக்கிறேன்:))

வாழ்த்துக்கள் கதிர் (மாப்பு)

நிகழ்காலத்தில் சிவா

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பழமைபேசி
(ரொம்ப அழகுங்க மாப்பு)

நன்றி @@ LOSHAN
(கலைஞர் தொலைக்காட்சியில கலைஞரை கருணாநிதி என்கிறார்களா?)
உங்க இடுகையை படிக்கிறேன் லோசன்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நிகழ்காலத்தில் (சிவா)
(பெயர் சொல்லி கூப்பிடுவதைவிட அண்ணா, தம்பி, மாப்பு இப்படி கூப்பிட்டா அதிக நெருக்கம்தாங்க சிவா)

Jerry Eshananda said...

"விளைஞ்ச கதிர்."

ஷண்முகப்ரியன் said...

சின்ன விஷயம்தான் ஆனால் அழகாகச் சிந்தித்திருக்கிறீர்கள் தம்பி.

‘A ROSE IS A ROSE BY WHATEVER NAME IT IS CALLED' என்ற ஷேக்ஸ்பியரின் வரிதான் இதனைப் படிக்கையில் நினைவுக்கு வந்தது.

கலகலப்ரியா said...

//
நன்றி @@ கலகலப்ரியா
(கதிர் னா சார் னு ஒலிக்குதா....
குறும்புதானே மேடம்....
எப்ப்ப்ப்பூபூபூடி)//

சரி சரி.. நாம எழுதறத எப்போ பின்பற்றி இருக்கோம்... விடுங்க விடுங்க..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜெரி
(ஆஹா.... எப்படி இப்படியெல்லாம்)

நன்றி @@ ஷண்முகப்ரியன்
(அண்ணா, அந்த வரிகள் பல இடங்களில் நான் பயன்படுத்துவதும் கூட)

//கலகலப்ரியா said...
சரி சரி.. நாம எழுதறத எப்போ பின்பற்றி இருக்கோம்... விடுங்க விடுங்க..//

மோடம்.... சாரி.... மேடம் சிலத கண்டும் காணம போயிடனுங்க.

க.பாலாசி said...

//அவங்க கூட புதுசா சேர்ந்திருந்த கைத்தடி ஒன்னு எக்கச்சக்கமாக எகிறி “என்னது வட்டத்தோட அய்யாவா, நாங்க இந்த தமிழ்நாட்டோட அய்யாவச் சொல்றோம்” னாரு//

இந்த அல்லக்ககைங்கன்னாலே இப்டித்தான். தலைவன் கூட சில சமயத்துல மூடிகிட்டு இருப்பான், ஆனா இவங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே அப்பப்பா.

இதுகூட பரவாயில்ல சிலபேரு மெனக்கெட்டு கடனவாங்கி வீட்ட கட்டிட்டு சொந்த அம்மா, அப்பா பேரக்கூட வைக்காம நீங்க சொல்றமாதிரி அய்யாபேரு, அம்மா பேருன்னு வைச்சிருப்பாங்க. பாத்தாலே எரிச்சலா வரும்.

சரி மேட்டருக்கு வருவோம். வேறென்ன பேரு சொல்லி கூப்பிடுறதுங்கறது எல்லா இடத்திலயும் பொருந்துமான்னு தெரியல. சில இடங்கள்ல பொருத்தமா இருக்கலாம். மற்றபடி என்னிடம் கருத்தேதும் இல்லிங்க சார்.

கலகலப்ரியா said...

//மோடம்.... சாரி.... மேடம் சிலத கண்டும் காணம போயிடனுங்க.//

முடியலையே மோர்.. ஸாரி... ஸார்... B-)

ISR Selvakumar said...

உங்களுடைய பெயர் சொல்லும் பதிவு!

Ashok D said...

சரிங்க கதிர் சார்.

நல்ல அவதானிப்பு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலாசி
(ஆஹா, அடிக்கடி சூடாகறீங்களே பாலாஜி, எதுக்கும் அல்லக்கைங்க கிட்ட கவனமா இருங்க)

//மற்றபடி என்னிடம் கருத்தேதும் இல்லிங்க சார்.
//

இது வேறயா... நடத்து ராசா... நடத்து)

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
முடியலையே மோர்.. ஸாரி... ஸார்...//

மீ.....டூ...

ஆனா...... கும்மியடிக்க நிறைய நேரம் இருக்கோ இன்னிக்கு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Selvakkumar

நன்றி @@ D.R.Ashok

கலகலப்ரியா said...

என்ன மீ டூ...? கும்மி அடிக்க டைம் இருக்கு... ஆனா பண்ண மாட்டேன்.. என்னோட நல்ல புள்ள சாயம் வெளுத்துடும்.. ஆமா.. =))

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு கதிர்.

ஆரூரன் விசுவநாதன் said...

நீங்கள் என்னை "சார்" என்று அழைக்கும் போதும் இப்படி உணர்ந்திருக்கிறேன் கதிர்.

நல்ல பதிவு......ஆரூர் என்றே என்னையும் அழையுங்கள், அதுதான் என் விருப்பமும்

அன்புடன்
ஆரூரன்

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை கதிர்.

அதனால்தான் நான் உங்களை கதிரென்றே விழிக்கிறேன்.ஐ.டி துறையில் இந்த பிரச்சனை பெரிதாக இல்லை.எல்லோரையும் பேர் சொல்லியே அழைப்பார்கள்.

இன்று நண்பர் நர்சிம் அவர்களும் ஒரு சின்ன விஷயத்தை ரொம்ப சுவாரஸ்யமா எழுதியிருந்தார்.இங்கே நீங்களும்.

அன்புடன் நான் said...

பதிவு நல்லாயிருக்கு கதிரண்ணா.

மணிஜி said...

அமெரிக்கர்களுக்கு சார் என்று அழைத்தால் பிடிக்காது.பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புவர்.(அமெரிக்கன் கான்சலேட்டில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன்)

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
என்னோட நல்ல புள்ள சாயம் வெளுத்துடும்.. ஆமா.. =))//

அடி ஆத்தாடி இன்னுமா ஒலகம் நம்புது

நிலாமதி said...

சார் .....என் அழைப்பதும் பெயர் சொல்லி அழைப்பதும் தேவையை பொருத்தது . அவர்களுக்கு இடையே ஆன நெருக்கத்தை பொறுத்தது. சிந்திக்க வைக்கிறது.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சரவணக்குமார்

நன்றி @@ ஆரூரன்
(சரிங்கண்ணா....ஆனா என்னவிட சின்ன வயசுன்னு மட்டும் சொல்லீடாதீங்க)

நன்றி @@ நாடோடி இலக்கியன்
(நம்மை நெருங்க வைத்ததற்கு பெயர் சொல்லி அழைத்ததும் காரணம்)

நன்றி @@ கருணாகரசு
(வாங்க வணக்கம்)

நன்றி @@ தண்டோரா
(நம்ம ஊர்லதாங்க இப்படி)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நிலாமதி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.. இதெல்லாம் கூட பரவாயில்லீங்க.. ஆந்திரால.. வி.பி.காரு, மேனஜர் காருன்னு சொல்லிப் படுத்துவாங்க :))

நல்ல இடுகை. கலக்குங்கள்!

வால்பையன் said...

அய்யாவும், வேணாம் கொய்யாவும் வேனாம்னு நாடு மாறிடுச்சுன்னா!
நாம வல்லரசு ஆயிட்டோம்னு அர்த்தம்!

ப்ரியமுடன் வசந்த் said...

//இப்பொழுதெல்லாம் வயதில் பெரியவர்களை மிக எளிதாக அவர்கள் பெயரோடு அண்ணா என்றோ, அக்கா என்றோ அழைத்துக் கொள்வது பழகிப்போயிருக்கிறது. //

அதுதானே உண்மையான பாசம் போல் இருக்கு..

சொல்லுங்க கதிர் அண்ணே...

சீமான்கனி said...

கதிர் அண்ணே வணக்கம் நலமா இருக்கிங்கள???
வந்துடனே உங்க பதிவை பர்ர்த்து ரெம்ப யோசிக்கவசுடிங்க அண்ணே....
சவுதி லும் அப்படித்தான் அண்ணே..யார இருந்தாலும் பெயர் சொல்லித்தான் குப்ப்டுவங்க அதுவும் புல் நேம் சொல்லித்தான் குப்ப்டுவங்க..
சின்னவங்க பெரியவங்க லாம் பக்கமட்டங்க...

velji said...

நீங்கள் சொல்வது சரிதான்.

the sweetest thing for one is his name.

நம் சூழலில் மரியாதை என்பதற்கு அடிமையாகிக் கிடக்கிறோம்.

ஆ.ஞானசேகரன் said...

மிக சரியா சொன்னீங்க கதிர்... பெயரை அழைக்கும் பொழுது நமக்கே ஒரு மகிழ்வு வருவதும் நிஜம்

ரோஸ்விக் said...

கலக்குங்க தல....அருமையான பதிவு....
பொதுவா வெளி நாடுகளுடன் தொடர்புடைய துறைகளில், பெயர் சொல்லி அழைக்கப்பட வேண்டும் என கட்டாயம் செய்துள்ளார்கள். வெளி நாட்டினருக்கு வயதோ, வசதியோ அல்ல அந்தஸ்தோ கணக்கல்ல. அவர்களுக்கு மனிதனுக்கு பெயர் வைப்பதே அழைப்பதற்குத் தானே என தீர்க்கமாக நம்புகிறார்கள்.
நம்மவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை...அது ஏனோ புரியவில்லை.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு...சரியான உறவுமுறை தெரிந்தவர்களிடம், உறவுமுறையை சொல்லி மிகவும் நன்றாகப் பேசுவேன்.
அதனால், நீங்கள் கூறுவதுபோல் கதிர் அண்ணன், கதிர் மாப்ள, கதிர் மாமா, கதிர் பங்காளி, கதிர் தல என அழைப்பது மிகுந்த நெருக்கத்தை தரும் என நினைக்கிறேன்...:-) நீங்க என்ன சொல்றீங்க?

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை. அழகாய் முடித்திருக்கிறீர்கள்.

Nathanjagk said...

//அப்பப் போயி “அதாருங்க வட்டம்” னு இன்னொரு கேள்வி கேட்கத் தோனியது கூடவே புரிஞ்சு போச்சு நம்ம கட்டம் சரியில்லைனு.
//
கொஞ்சம் லேட் பிக்கப்புங்ணா..! கரை வேட்டிய பாத்ததும் கட்சித்தலைவர், கட்சிக்​கொடி இமேஜெஸ் எல்லாம் பேஜ்மேக்கர்ல 'ஆட்டோமேட்டிக்கா' ஓபன் ஆயிருக்க ​வேணாம்? ​

//அதாவது வேட்டி அல்லது கோவணம் கட்டியவர் டவுசர் போட்டவரையும், டவுசர் போட்டவர் பேண்ட் போட்டவரையும், பேண்ட் போட்டவர் பேண்ட் போட்டு சட்டையை பேண்டில் இன் செய்திருப்பவரையும் “சார்” என்றே அழைக்கின்றனர்.//

இதுக்கு ​பேருதான் ஒரு ப்ளோல வர்றதுங்கிறதா?

Nathanjagk said...

//இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார்னு கூப்பிடறோம்,//
ராஸலீலா (சா.நி) புக்ல ஒரு வரி..
அரசு அலுவலகங்களில் ​வேலை ​செய்யும் இடைநிலை ஊழியர்கள், தங்கள் ​மேலதிகாரிகளோடு ​பேசும் ​போது.. எந்த வாக்கியமானாலும் அதை "சார்" என்று ஆரம்பித்து "சார்" என்றே முடிக்க ​வேண்டும் - இது எழுதப்படாத பாரம்பரியம்!
நீங்களே 2, 3 வாக்கியங்களை திங் பண்ணிக்கோங்க..!
சார் குட்மார்னிங் சார்..
சார் கூப்பிட்டீங்களா சார்..
....

மரியாதை 'சார்'ந்த மரபு ஊன்றி நிலைத்த இடம் அரசு அலுவலகங்கள்தான்!

புலவன் புலிகேசி said...

//“இங்கு மட்டும்தான் யாரப் பார்த்தாலும் சார்... சார்னு கூப்பிடறோம், அங்கெல்லாம் யாராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள்” //

தடு போன்ற விசயங்கள் இந்தியாவில் மென்பொருள்,BPO துறைகளில் இருக்கிறது. பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவுனா பேரே வச்சிக்காதீங்க..நல்ல இடுகை நண்பரே.......

நர்சிம் said...

If you don't mind..என்று சொல்லி ஏதாவது செய்யச் சொல்வார்கள்.

No..I mind 'என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்..அப்புறம் எதற்கு முதல் கேள்வி?

இது போன்ற நிறைய ஃபார்மாலிட்டிகளால்..ஹும்.

தேவையான இடுகை கதிர்.

தமிழ் நாடன் said...

இங்கு இந்தோனேசியாவிலும் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம்தான் உள்ளது. ஆனால் பெயருக்கு முன்னே அவரவர் நிலையை பொறுத்து மரியாதை விளிப்புகளை சேர்த்துக்கொள்வார்கள். எங்கள் அலுவலக உதவியாளர் கூட எங்கள் முதலாளியை Pak Bruno என்றே அழைப்பார். Pak என்பது தன்னைவிட மூத்தவரை அழைக்க பயன்படுத்துவது.

இதே இந்தியாவில் என்றால் முதலாளி பொறுத்துக்கொள்வாரா? சிந்திக்கவேண்டிய விடயம்.

ஈரோடு கதிர் said...

நன்றி @ செந்தில்
(சாரு... அங்க காரு ஆயிடுச்சா... ஹ ஹ ஹ)

நன்றி @ வால்பையன்

நன்றி @ வசந்த்

நன்றி @ seemangani
(வாங்க, ரொம்ப நாள் ஆச்சு. நல்லாயிருக்கீங்களா)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ velji
//மரியாதை என்பதற்கு அடிமை//
(நல்ல வரி)

நன்றி @@ ஞானசேகரன்
(ஆமாங்க)

நன்றி @@ ரோஸ்விக்
(உறவு சொல்லி அழைக்கும் போது இன்னும் நெருங்கிறோம்)

நன்றி @@ ராமலக்ஷ்மி

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜெகநாதன்
(//கொஞ்சம் லேட் பிக்கப்புங்ணா..!//
கொஞ்சமில்லைங்க நிறைய லேட்...

அட... பேஜ் மேக்கர், நம்ம ஆளா நீங்க)

//மரியாதை 'சார்'ந்த மரபு ஊன்றி நிலைத்த இடம் அரசு அலுவலகங்கள்தான்!//

ஆமாங்க சார்... ஸாரி ஜெகன்


நன்றி @@ புலவன் புலிகேசி
(//மரியாதைக் குறைவுனா பேரே வச்சிக்காதீங்க//
ஏங்க செலவு பண்ணி வைக்கிர பேர் வேற. வச்சிக்குவோம் ஆனா சொல்லப்படாது)

நன்றி @@ நர்சிம்
(நர்சிம், அப்படிக் கேள்விக்கறது மரியாதையாம், ஆனா நீங்க உண்மையைச் சொன்னா சுடுமாம்...
நானும் க்க்ஹும்)

நன்றி @@ தமிழ் நாடன்
(சிந்திக்கவேண்டியதுதான்)

மாதவராஜ் said...

நல்ல அவசியமான பதிவு. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டிய விஷயங்கள் இருப்பதாகவே இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

prabhu bharathi said...

dear kathir
munna pinney theriyalanaalum avangala mariathaya koopidanumnu namakku ippadi pala varthaigal kedachirukey. athuvumillamal appadi koopiduvathanal nerukkam athigam aaguthu, kariamum aaguthu.
but ithuku peru ottadai alla

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சரிதான் கதிர். பெயர் என்பது ஒருவனுக்கான தனிச் சொத்து என்பதென் எண்ணம். என் பெயரை நினைத்து நான் எப்போதும் கர்வப்படுவதுண்டு ;)

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

பெயர் சொல்லி அழைப்பது மரியாதை குறைவான செயல் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்ட சமூகம் இது..மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாகத்தானே நிகழும்.மரியாதை வைத்திருக்கும் நபரை,வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பதில் எனக்கு ஒரு தர்மசங்கடம் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் நிச்சயமாக பெயர் சொல்லி அழைக்கும் போது ஒரு நெருக்கம் இருக்கத்தான் செய்கிறது..