அன்று காலையிலிருந்தே மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. அதுவே நம் ஊராக இருந்தால் சிணுங்கும் மழைக்கு ஊரே அடங்கிப் போயிருக்கும், ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படவில்லை. வேகமாய் மழை துளிர்க்கும் நேரங்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது குறையும், மழை குறைந்தால் மீண்டும் வீதிகளில் நெரிசல் அதிகரிக்கும், இது போல் காலை முதல் மாலை வரை இயல்பாக மனிதர்கள் புழங்கிக் கொண்டிருந்தனர்.
தொழில் நிமித்தமாகப் போன நான், இரவு வரை இருக்க வேண்டிய காரணத்தால் மழையையும், மனிதர்களின் நெரிசலையும் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தீன். மழையிலும் நெரிசலிலும் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து கொண்டேயிருந்தது.
அவ்வளவு நெரிசலிலும் இரண்டு, மூன்று மாடுகள் வீதியில் முன்னும் பின்னும் வந்து போய்கொண்டிருந்தன. அது வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி, சிலர் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும் மாட்டின் பின் பக்கத்தை தொட்டுக் கும்பிடுவதும், அவர்கள் தொடும் போது மாடு வாலால் அடிப்பது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.
மாலை நான்கு மணியிருக்கும், சுமார் பதினைந்து வயதிருக்கும் ஒரு சிறுவன் பெரிய இரும்பு வாளியோடு வந்தான், நடு வீதியில் ஒரு மாட்டின் காலடியில் உட்கார்ந்தான், மாட்டிக் காம்புகளை லேசாக கசக்கினான். மாடு அசால்டாக நின்றது (எனக்கு சின்ன வயதில் பால் கறக்கும் மாட்டின் காம்புகளைத் தொட்டு உதை வாங்கியது நினைவிற்கு வந்தது)
மழை பெய்து அந்த இடம் சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து வேகமாக வருவதும், போவதுமாக இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அந்த சிறுவன், இரும்பு வாளியில் “சர்சர்” என பாலைக் கறக்க ஆரம்பித்தான். கவனிக்க வேண்டிய விசயம் அவன் மாட்டின் காம்புகளை கழுவவேயில்லை. வேகமாக செல்லும் வாகனம் சிதறியடித்த சேற்றுத் துளிகளும் அந்த வாளியில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அதைப் பற்றி அந்தச் சிறுவன் துளியும் கவலைப் படுவதாக தெரியவில்லை. மாடும் நடு வீதியில் பாலைத் தருவதும், பசியில் போஸ்டரைத் தின்பதும், ஓராமாய் கிடக்கும் குப்பையில் மீந்து போன காய்கறிகளைத் தேடுவதும் என “இதெல்லாம் சகஜம் பாஸ்” என்பது போல் சாவகாசமாக நின்று பால் கொடுத்துக் கொண்டிருந்தது.
கிராமத்தில் பச்சைப்புல்லும், வைக்கோலும் தின்று, வாகன ஓசைக்கு மிரளும் தோட்டத்து மாடுகளும், காம்புகளைச் சுத்தமாகக் கழுவி, மிகச் சுத்தமான பாத்திரத்தில் பால் கறக்கும் விவசாயிகளும் மனதிற்குள் கிண்டலாக சிரிப்பதுபோல் ஒரு விநாடி தோன்றியது.
-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.