Oct 29, 2025

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா...’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரளவு அறிந்திருப்போம்.


ஆனால், 'இந்தக் காலத்துப் பசங்க புள்ளைங்களுக்குஇன்னொரு பக்கமும் இருக்கலாம். நாம் ஆச்சரியப்படும் அல்லது அயர்ச்சியுறும் அவர்களின் முகங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னே நாம் அறியாத இன்னொரு பக்கம் இருக்கின்றது. அப்படியானதொரு பக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சமீபத்தில் ஆங்கிலத்தில் அனுப்பட்ட மடல் இது. நேரடி இணையவழி தமிழாக்கம் என்பதால் சில சொற்கள் வித்தியாசமாகத் தோன்றலாம்

*

வணக்கம்,


நேற்று உங்கள் அமர்வில் கலந்துகொண்ட பிறகு, என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு சிறிய பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆழமான உந்துதல் ஏற்பட்டது - அது எனக்கு வலிமை, பொறுமை, மற்றும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்த ஒரு கதை.


நான் ஒரே பள்ளியில் 14 ஆண்டுகள் படித்தேன், அந்தக் காலகட்டம் முழுவதும் நான் பெரும்பாலும் தனிமையில்தான் இருந்தேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் பெரிதாக இல்லை. என்னைச் சுற்றியிருந்த பலரும் மோசமான, toxic தன்மையுடையவர்களாக இருந்தனர் - நான் அடிக்கடி கேலிக்கும், உடல்ரீதியான அவமதிப்புக்கும் (body shaming) ஆளானேன்.


ஆயினும்கூட, எங்கள் மாவட்டத்தில் அதுதான் சிறந்த பள்ளி என்று என் பெற்றோர் நம்பியதால், நான் அங்கேயே தொடர்ந்தேன். அவர்கL கவலை வரவோ அல்லது அவர்கள் மனம் புண்படவோ கூடாது என்பதற்காக, அது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நான் ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தின் மத்தியிலும், நான் தொடர்ந்து கடினமாகப் படித்து, என் பள்ளியில் முதல் 5 மாணவர்களுக்குள்ளேயே இருந்தேன். ஆனால், 12ஆம் வகுப்பின்போது, நான் மனதளவில் மிகவும் சோர்வடைய ஆரம்பித்தேன். குறிப்பாக practical மற்றும் public exam-களுக்கு முன்பு கவனம் செலுத்தவே முடியவில்லை.

வெறும் பத்து நாட்களில் முழுப் பாடத்திட்டத்தையும் படித்து, 600-க்கு 526 மதிப்பெண்களைப் பெற்றேன். நான் JEE Mains தேர்வையும் எழுதினேன், அதில் 93 சதவிகிதம் (percentile) மதிப்பெண் பெற்றேன். ஆனால், அப்போது எதைத் தேர்ந்தெடுப்பது என எனக்குத் தெரியாததால், நான் NIT-யில் சேரவில்லை.


பின்னர், நான் இரண்டு ஆண்டுகள் NEET-க்காகத் தயாரானேன், ஆனால் அந்த கட்டம் மனதளவிலும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் கடினமானதாக இருந்தது - நான் மீண்டும் தோல்விகளையும், தனிமையையும் அதிகம் சந்தித்தேன். 720-க்கு 530 மதிப்பெண்கள் எடுத்தேன், MBBS கிடைப்பதற்கு வெறும் 30 மதிப்பெண்கள் குறைவாக இருந்தது. நிதி நெருக்கடிகள் காரணமாக, நான் பொறியியல் படிக்க முடிவு செய்து இங்கு சேர்ந்தேன்.


இங்கேயும் கூட, என்னால் நம்பகமான நட்புகளை உருவாக்க கடினமாக இருக்கிறது. தனிமை என்னை சில நேரங்களில் தொடர்ந்து துரத்துகிறது. ஆனால் ஐயா, நேற்று நீங்கள் நடத்திய பயிலரங்கு அமர்வு உண்மையிலேயே கண்களைத் திறப்பதாக இருந்தது. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையைப் பற்றி ஆழமான உண்மைகளை தாங்கி வந்தது - அது வெறும் கல்வி அல்லது வெற்றியைப் பற்றியது அல்ல; நாம் யார் என்பதையும், வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியம் என்பதையும் புரிந்துகொள்வது பற்றியதாக இருந்தது.


என் வாழ்க்கை ஒரே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நகர்கிறது - நம் மனநிலைதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது (Our mindset decides our life)” அந்த மனநிலை மட்டுமே என்னை இன்று இங்கே கொண்டு வந்துள்ளது, மேலும் உங்கள் அமர்வு அந்த உண்மையை இன்னும் ஆழமாக வலுப்படுத்தியது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அந்த அமர்வின் போது நான் உங்களுடன் பேச மிகவும் விரும்பினேன், ஆனால் என் introvert nature என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆயினும்கூட, நாம் நமது பயத்தினைக் கடக்கும்போதே வளர்ச்சி தொடங்குகிறது என்பதை உங்கள் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. நான் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. நேற்று முதல், வித்தியாசமாகச் சிந்திக்க, அர்த்தமுள்ளதாக வாழ, மற்றும் தைரியமாக என்னைப் வெளிப்படுத்த, நான் உங்களை என் role model - ஆகக் கருதுகிறேன்.


நேற்று, நான் வெறுமனே ஒரு அமர்வில் கலந்துகொள்ளவில்லை… “நான் யார்?” என்ற கேள்விக்கு ஒரு பதிலைக் கண்டுபிடித்தேன்.


*

சமீபத்தில் என்னை நன்கு அறிந்த ஒரு பள்ளியின் முதல்வர், அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் என்னை அறிமுகப்படுத்தும்போது, என்னைக் குறித்த விபரங்கள் பலவற்றை விரிவாகத் தெரிவித்துவிட்டு, ”இதையெல்லாம் தாண்டி, இந்த நிகழ்விற்கு இவரை அழைக்க ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அது, இவர் எப்போதும் பிள்ளைகளின் பக்கம் மட்டுமே நிற்பார். நாம் பிள்ளைகள் குறித்து ஒரு கவலை அல்லது புகார் உள்ளிட்ட எதைப் பகிர்ந்தாலும், அந்தக் கவலை, புகார் பெற்றோர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர் பக்கத்தில் இருந்து வந்ததாக இருந்தாலும் சரி, 'அதெல்லாம் இருக்கட்டும்ங்க, அந்தப் பையன் - பொண்ணு சைடுலா எதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம், அதையும் என்னவென்று பார்ப்போம்என்பார்எனக் குறிப்பிட்டார்.


அதைக் கேட்டதும், எனக்கும் 'அட... ஆமாம்தானே...எனத் தோன்றியது. உண்மையில் அப்படியொரு இயல்பு, நிலைப்பாடு என்னிடம் இருப்பதை நானே உணர்ந்த தருணம். அதுவரை எதுவானாலும் பிள்ளைகள் பக்கம் நான் நிற்க விரும்பியதைநானே அவ்வளவாக, தெளிவாக உணர்ந்திருக்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டதில்லை. நம்மிடம் இருக்க வேண்டிய குணம், பண்பு அல்லது நிலைப்பாடு என்பது ஏதோவொரு புள்ளியில் தானாக வந்து நம்மிடம் இணைந்துவிடுகின்றன. சிலவற்றை எப்போது, எதன் நிமித்தம் வந்து சேர்ந்த்து என அடையாளம் கண்டுவிட முடியும். பலவற்றை அப்படி இனம் காண முடிவதிலை.


மேலே இருக்கும் மடல் வந்து சில வாரங்கள் ஆகியிருந்தாலும், ’பதின்வயதில் பலருக்கும் எளிதாக வாய்க்கும் ஒன்றை எட்ட, எத்தனையெத்தனை தடைகளைத் தாண்டி ஒரு பிள்ளை வர வேண்டியிருந்திருக்கின்றதுஎன்பது மட்டும் மனதில் அலைந்துகொண்டேயிருந்தது. அந்த மடலுக்கு விரிவாக பதில் அனுப்பியிருந்தேன். அடுத்தமுறை அவருடைய கல்லூரிக்குச் செல்லும்போது தேடி, சந்தித்து பேசிவிட்டு வரவேண்டும் எனவும் நினைத்திருக்கிறேன்.

இம்மாதிரியான அவர்களின் இன்னொரு பக்கம்இப்படி மடல்களாக நீளும், உரையாடல்களாக எட்டும், சில வேளைகளில் வெறும் ஓரிரு வரிகளிலும்கூட வந்தடையும்.


எது வந்தாலும் பிள்ளைகள் பக்கம் நிற்க விரும்புவதன், நிற்க முற்படுவதன் பின்னே, அவ்வளவு எளிதில் வெளிப்படாத, நம்மால் அவ்வளவாக வாசிக்கப்படாத அந்தப் பக்கங்களில் கனத்திருக்கும், உண்மைகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆழமாக உணர்கிறேன்.


Oct 19, 2025

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

தொண்ணூறு சதவிகிதம் - ஈரோடு கதிர்

ஒரே நாளில் பல்வேறு விதமான அனுபவங்கள் அமைவது இயல்பான ஒன்றுதான். சில வாரங்களுக்கு முன் ஒரு நாளில், எனக்கு அடுத்தடுத்துப் பல அனுபவங்கள் அமைந்தன. ஆனால், அதிலிருந்த சுவாரஸ்யம் அனைத்தும் ஒரே மையப்புள்ளியைக் கொண்ட அனுபவங்கள் என்பதுதான்.

அந்தத் தினத்திலிருந்து, இரண்டு வாரம் கழித்து, “90% கோபம் கம்மி பண்ணிவிட்டேன்என்று அந்தத் தம்பி அனுப்பிய வாட்சப் தகவல் இப்போதும் மனதிற்குள் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது.

90% கோபத்தைக் குறைப்பது அத்தனை எளிதா என்ன? அது அத்தனை எளிதில் வசப்படாத ஒன்றுதான். கோபம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். கோபம் வரும் தருணங்களில் எங்களின் உரையாடல் நினைவில் வந்து போயிருக்கலாம். 

அந்த உரையாடல் அன்று வாய்த்ததற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

சரி... அன்று நடந்தது என்ன...!?

 

01

அதுவொரு செவ்வாய்க்கிழமை. காலை ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தேன். அன்று அந்த நிகழ்ச்சியில் பேசுவது தவிர்த்து, வேறு எந்தத் திட்டமிடலும் முந்தைய இரவு வரை இருக்கவில்லை.

முந்தைய இரவு, ஒருவர் தொடர்பு கொண்டு, 'நாளைக் காலை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சிறிது நேரம் உரையாட முடியுமா?' எனக் கேட்டார். நாங்கள் அவ்வப்போது ஃபோனில் உரையாடிக் கொள்கிறவர்கள்தான். நேரில் என்றதும் குடும்ப விசயம் குறித்து இருக்கலாம் எனக் கருதினேன். குடும்ப விசயம் குறித்து நேரில் ஒருமுறையும், ஃபோனில் சில முறையும் உரையாடியிருக்கின்றேன். சந்திக்கலாம் என ஒப்புதல் தெரிவித்தேன்.

அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வந்துவிட்டார். நிறைவடையும் வரை காத்திருந்தார். நிகழ்விலிருந்து விடைபெற்ற பிறகு, இடம் தேர்ந்து அவருடன் உரையாடல் தொடங்கினேன். கருதியதுபோல் குடும்ப விசயம்தான். எளிய குடும்ப சிக்கல். ஆனால் முடிச்சு இறுகிக் கொண்டேயிருக்கின்றது. அவர் தனியே நின்று அனைத்தையும் அமைதிப்படுத்தி, சரி செய்துவிட முயற்சி செய்கிறார். ஆனால் அவர் மட்டுமே தனித்து எதுவும் செய்ய முடியாது. அதனால் எப்படி சரி செய்வது என்பதில் பெரும் குழப்பம். காரணம், சரி செய்ய வேண்டியதில் இவருடைய பங்கு குறைவானது. சிக்கலை இறுக்கிக்கொண்டே செல்லும் மற்றவர்கள்தான் அதனை சரி செய்ய வேண்டும்.

முன்பே அது பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர் தீர்வு காண விரும்பினாலும், அவரிடம் மட்டுமே பேசுவதால், எதுவும் நகராது. தொடர்புடையவர்களில் ஒருவரிடம் பேசுவதுதான் முக்கியத் தேவை. ஆனால் அவர்கள் உடன்பட மாட்டார்கள். அனைவருக்குமே தாம் செய்வதுதான் சரியென்றிருக்கலாம் அல்லது தாம் ஒரு சிக்கலில் உள்ளோம், அதற்கான தீர்வை தாம்தான் தேட வேண்டும் எனும் தெளிவில்லாமல் இருக்கலாம்.

நீண்ட நேரம் அந்த உரையாடலை எடுத்துச் செல்லத் தேவை இருக்கவில்லை. உங்க வருத்தம், வலி புரியுது. ஆனா, நீங்க  மட்டுமே  சொல்யூசன் உருவாக்க முடியாது. அவங்களும் உடன்படனும். அவங்கள்ல யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்க. அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்களாகவே ஆதரவோ அல்லது  ஆலோசனையோ தேடும் ஒரு புள்ளி இருக்கும், அதை அவங்க அடையும்போது, ஜஸ்ட் நீங்க தோளைத் தொட்டால் போதும், சரினு சொல்லிடுவாங்க. வரட்டும் பேசிப் பார்ப்போம். எது தேவையோ, யாரிடம் சரி வருமோ, அதற்கு ஏற்பாடு செய்வோம்!என்று உறுதியளித்தேன்.

அவர் எவ்வளவு தூரம் மனதளவில் திருப்தி அடைந்தார் எனத் தெரியவில்லை. ஆனால் சில தீர்வுகளுக்கு அதிக தொலைவு பயணிக்க வேண்டும், சில தீர்வுகளுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். சில தீர்வுகளுக்கு அதீத சகிப்புத்தன்மை வேண்டும்.


02

நண்பரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தருணத்தில் அவர் எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்குத் தகுந்த ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் நினைவில் கொண்டிருந்தாலும், அவருடைய அன்றாட வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அவரின் தொடர் ஓட்டத்தில் ஒரு சவால் வந்தது. ஒரு சாதாரண சம்பவம், சரியாகக் கையாளத் தவறியதால், மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருந்தது. தவறியது எந்தவிதத்திலும் குறைபாடு அல்ல. அப்போது அதுதான் சாத்தியப்பட்டிருக்கும். அது சிக்கலாக மாறி, நாட்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, பல மாதங்களாக நீடித்தது. ஒவ்வொரு சந்திப்பிலும் உரையாடலிலும் அதனைச் சரி செய்ய வலியுறுத்தினேன். முடிந்தவரை தொடர்ந்து என் கவனத்தையும், அக்கறையையும் செலுத்திக் கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கும் எல்லைகள் இருந்தன. எல்லைக்கு மறுபக்கமிருந்து கொடுக்கப்பட்டவை பல நேரங்களில் அவ்வளவாகப் பலன் தராது.

பெரும்பாலும் பொருளாதார இழப்புகளை, நெருக்கடிகளை நாம் பேசும் அளவிற்கு, மனதளவிலான நெருக்கடிகளை, இழப்புகளைப் பேசுவதில்லை. நாட்கள் நகர நகர அவருக்கு மன நெருக்கடி கூடிக்கொண்டேயிருந்தது. அந்த நெருக்கடிகள் அவருக்கு வந்திருக்கக் கூடாதவைதான். ஆனாலும், வரத்தான் செய்யும். அதற்கு சில காரணங்கள் இயல்பாக அமைந்துவிடும். அவர் எடுத்த சில முடிவுகள் எனக்கு ஒப்புதல் இல்லாததாக இருந்தன. எதையும் பூசி மெழுகாமல் முடிந்தவரை என்னுடைய கருத்துகளை நேரடியாகத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன். அதுவே அந்த நட்பிற்கு நான் செய்யும் அறம். ஒவ்வொரு முடிவும் தெரிவிக்கப்படும்போது, ‘அடடா! கொஞ்சம் முன்ன சொல்லியிருந்திருந்தா வேற மாதிரி சொல்லியிருக்கலாமே எனத் தோன்றும். அதையும் தெரிவிக்கத் தவறவில்லை. ஆனாலும் உணர்ச்சிகள் ஆளும் களம் இப்படித்தான் இருக்கும்.

ஒருகட்டத்தில், எல்லாவற்றையும் சமன் செய்யும், சரி செய்யும் ஒரு புள்ளி வந்தது. அப்படியொரு தருணம் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என மனதார விரும்பியிருந்தேன். மிக முக்கியமான முடிவினை அவர் எடுக்க வேண்டிய தருணம். என் கவனத்திற்கு வந்தவுடன், தகுந்த ஆலோசனையோடுதான் முடிவெடுக்க வேண்டுமென ஒரு உளவியலாளரைப் பரிந்துரை செய்தேன். தேவைப்பட்டால் நானும் உடன் வருவதாகத் தெரிவித்தேன். அந்தச் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலோசனை நேரம். 

உளவியலாளரின் ஆலோசனை மிகச் சரியாக அமைந்தது. அவருக்கு பல்வேறு கோணங்களில் நிறைய தெளிவு கிட்டியது. கடந்த காலத்தின் பிழைகளுக்குக் காரணங்கள் புரிந்தன. எடுக்க வேண்டிய முடிவிற்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது. 

திரும்ப வரும் வழியில் காஃபி குடிப்பதற்காக ஒரு உணவகத்தில் நண்பர் வண்டியை நிறுத்தினார். அந்தச் சாலை வழியே நூற்றுக்கணக்கான முறை சென்று வந்திருந்தாலும், நான் அப்படி குறிப்பாக அந்த உணவகத்தில் நிறுத்தியதில்லை. சிற்றுண்டி, காஃபி என உரையாடல் தொடர்ந்தது. அங்கிருந்து புறப்படும்போது, உணவகத்தின் முன்பிருந்த விளக்குத் தூணை படம் எடுத்து வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்திருந்தேன். 


03

அந்தப் படத்தை வைத்து யாரும் அந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என நான் கருதவில்லை. அதை ஒரு தம்பி கண்டுபிடித்தார். உணவகத்தின் பெயரைச் சுட்டி அதுதானே எனக் கேட்டார். நான்கு மாவட்டங்கள் தள்ளி இருக்கும் அவர், ஒரு ட்ராவலர் என்பதால் பெரிய ஆச்சரியம் எழவில்லை. ஆனாலும் கண்டுபிடித்ததைப் பாராட்டினேன். அதிலிருந்து உரையாடல் தொடங்கியது.

உடனே அந்த உணவகத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். பல மாதங்களுக்கு முன்பு ஒருநாள் பின்னிரவுப் பொழுதில் சாப்பிடச் சென்றிருக்கிறார். ஒரு மேசையில் அமர, பரிமாறுகிறவர் அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு குடும்பமாக வந்தவர்களை அந்த மேசையில் அமர வைத்திருக்கிறார். சொன்ன விதமும் சரியானதாக இருக்கவில்லை. அதனால் அந்த உணவகம் குறித்து கூகுள் ரிவியூவில் ஒற்றை நட்சத்திரம் அளித்து, புகாரினைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் அதைச் சொன்னபோது என் மனம் கனிந்திருந்தது. தம்பி அந்தப் பணியாளார் செய்தது தவறுதான். சில நெடுஞ்சாலை உணவகங்களில் இப்படியான சேவைக் குறைபாடு இருக்கின்றதுதான். அதை இன்னொரு கோணத்தில் பார்த்திருந்தால் உன்னால் கடந்து வந்திருக்க முடியும். அந்த நபர் அன்று எத்தனையாவது மணி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாரோ தெரியாது. அவருக்கென்று எதுவும் இலக்கு இருக்கின்றதா என்பது நமக்குத் தெரியாது. எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காதே. சுமப்பதற்காக நீயாக சில வழிகளை உருவாக்கிக் கொள்ளாதே!என்பது போல் தெரிவித்தேன். அவர் ஒற்றை நட்சத்திரம் அளித்ததைத் தவறு என்று சொல்லவில்லை. 

சில நிமிடங்களில் அந்த ஒற்றை நட்சத்திர கருத்துப் பகிர்வை அழித்துவிட்டதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் அதுவரை எங்கெல்லாம் ஒற்றை ஸ்டார் கருத்து / புகார் பதிந்திருந்தாரோ அத்தனையையும் அழித்துவிட்டேன் என்றார். இப்போது நான் என்னவெல்லாம் சொன்னேன் என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் மனதை நெகிழ்த்தும்விதமாக ஏதோ சொல்லியிருக்கின்றேன். 




இரண்டு வாரங்கள் கழித்து, அவராகவே 90% கோபத்தைக் குறைத்துவிட்டேன் என்றார். உண்மையில் அது அத்தனை எளிதல்ல என்றாலும், பல தருணங்களில் அவர் முயற்சி வெற்றி கண்டிருக்கலாம்.

குறை காணும் இடத்திலெல்லாம் ஒற்றை நட்சத்திரம் இட்டு புகார் அல்லது குறையைப் பதிவு செய்வது தவறொன்றுமில்லை. சேவைக் குறைபாடுகளைக் கண்டாலும், தம் கருத்தினைப் பதிவு செய்யாமல் ஒதுங்க வேண்டியதில்லை. ஆனால், நான் பகிர்ந்த படத்தை அவர் அடையாளம் கண்டதும் அவருக்கு என்னிடம் பகிரத் தோன்றியது, அந்த புகார் தவிர வேறெதுவும் இல்லை என்பதுதான் எனக்கு அப்போது முதன்மையாகப்பட்டது.  

அதே நாளில் மேலும் இரண்டு பேருக்காக  தனித்தனியே ஃபோனில் காலையும், மாலையும் உளவியல் தொடர்பாக மட்டுமே உரையாடியிருந்தேன். இருவருமே இளம் வயது. நன்கு வாழ வேண்டிய வயது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு வந்திருக்கக்கூடாது. மீள்வதற்கு மிகப் பெரும் பிரயத்தனம் தேவை. 

நாள் முழுக்க சந்தித்த, உரையாடிய, உடன் பயணித்த அவர்கள் குறித்து நிறைய மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் மனச் சமநிலையுடன் இருப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியிருந்தனர். அந்தத் தருணத்தில்தான் இந்தத் தம்பி ஒற்றை நட்சத்திரத்தோடு என்னிடம் வந்தார்.  அந்த உரையாடலும் தொடங்கியது. 

உடனே, அதிலிருந்து அவரை வெளியேற்றுவது எனக்கு முதன்மையாகப்பட்டது. அப்படி தோன்றியதற்கு அன்றைய தினம் அடுத்தடுத்து நிகழ்ந்த செயல்களும் காரணமாக இருக்கலாம். எனக்குள் மன நலனும், மனிதமும் முதன்மையாக நின்றன. எதன் நிமித்தமாகவும் மனதிற்குள் கடுமைகளைச் சேர்த்து சுமப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.

இரண்டு வார காலத்தில் அவர் கோபத்தைக் குறைத்தது அவருடைய சுய விருப்பம், திறனில் பேரில் நிகழ்ந்திருக்கலாம். அதற்கு என் சொற்கள் மட்டுமே காரணம் எனக் கருதவில்லை. அடுத்த நாளே தெரிவித்திருந்தால் இந்தளவு அதனைப் பொருட்படுத்தியிருப்பேனா எனத் தெரியவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து எனும் போது அவர் எடுத்த முடிவு செயல்பட்டிருக்கின்றது எனப் புரிந்துகொண்டேன். ’90% கோவம் கம்மி பண்ணிவிட்டேன்' எனப் பகிர்ந்ததும் 90% இல்லாவிட்டாலும் குறிப்பிட்டதொரு சதவிகிதம் இருக்குமென மகிழ்ச்சியாக இருந்தது.

மனம் நெகிழ்ந்திருக்கும்போது, மனம் நிறைவாக இருக்கும்போது சொற்களும் நிறைவாகவும், நெகிழ்வாகவுமே வெளிப்படும். அந்த இளகிய சொற்கள் ஒருவேளை 10% நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாலும், 90% பலனைத் தரும் என்பதை அன்று புரிந்து கொண்டேன். 

 *

Oct 17, 2025

நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்

நிதானமாக இதை வாசியுங்கள். நிறையப் பேருக்கு இது வருத்தம் தரும் பதிவாகவும் இருக்கலாம். இதன் நோக்கம் வருத்தம் அடையச் செய்ய அல்ல. கிடைத்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே!

இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையின் சுருக்கம் ...

புற்​று​நோய் முற்​றிய​தால் நேரம் கழிகிறது.  இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்​பர்​களே” - 21 வயது இளைஞர் உருக்​க​மான பதிவு

கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் 19 வயது இளைஞர் ஒரு​வருக்கு பெருங்​குடலில் புற்​று​நோய் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அது முற்​றிய நிலை​யாக நான்காவது நிலைக்கு சென்​றுள்​ளது. மருத்​து​வர்​கள் கீமோதெரபி உட்பட அனைத்து வித​மான சிகிச்​சைகளும் அளித்​துள்​ளனர். எனினும், புற்​று​நோய் முற்​றிய​தால் ஒன்​றும் செய்ய முடியவில்​லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்​வதே சிரமம் என்று கைவிரித்துள்​ளனர். தற்​போது 21 வயதாகும் அந்த இளைஞர் சமூக வலைதளத்​தில் தன்​னுடைய வலி, கனவு​கள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில்...

/

விரை​வில் தீபாவளி வரு​கிறது. தெருக்​கள் ஏற்​கெனவே விளக்​கு​களால் ஜொலிக்​கின்​றன. அவற்றை நான் கடைசி முறை​யாக பார்க்​கிறேன் என்​பதை நினைக்​கும்​போது மிக​வும் கடின​மாக இருக்​கிறது. இந்த பண்​டிகை கால விளக்​கு​கள், சந்​தோஷம், சிரிப்​பு, சத்​தம் என எல்​லா​வற்​றை​யும் இழக்க போகிறேன்.

நான் சத்​தமில்​லாமல் சிறிது சிறி​தாக சரிந்து கொண்​டிருக்​கும் போது, வாழ்க்கை தொடர்ந்து நகர்வது விசித்​திர​மாக உள்​ளது. அடுத்த ஆண்டு என்​னுடைய இடத்​தில் வேறு யாரோ ஒரு​வர் விளக்கு ஏற்​று​வார். நான் வெறும் நினை​வாக மட்​டுமே இருப்​பேன்.

எனக்கு சுற்​றுலா செல்​வது பிடிக்​கும். தனி​யாக நிறு​வனம் தொடங்க ஆசைப்​பட்​டேன். செல்ல நாய் வளர்க்க நினைத்​தேன். ஆனால், எனது நேரம் கழிந்து கொண்​டிருப்​பது நினை​வுக்கு வரு​கிறது. அதனால் அந்த எண்​ணங்​கள் மங்​கி​விடு​கின்​றன.

நான் வீட்​டில்​தான் இருக்​கிறேன். எனது பெற்​றோரின் முகத்​தில் சோகத்​தைப் பார்க்​கிறேன். இவற்றை எல்​லாம் நான் ஏன் எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரிய​வில்​லை. அடுத்து என்ன நடக்​கிறதோ தெரி​யாது. அதில் நான் மறைந்து போவதற்கு முன்பு சத்தமாக சொல்​லி​விட்டு செல்​வதற்​காக இருக்​கலாம்.

/

முதலில், அந்த இளைஞரின் வயதில் இருக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து சொல்ல விரும்புவது, உங்கள் வாழ்க்கை மீது, உங்கள் அன்றாடங்கள் மீது, உங்களுக்கு கிடைத்தவைகள் மீது ஏதேனும் புகார் இருந்தால், புறந்தள்ளிவிட்டு மீண்டுமொரு அந்த இளைஞர் கூறியிருப்பதை வாசியுங்கள்.

அப்படியும் புகார்கள் இருந்தால் சரியான நபருடன் உரையாடுங்கள். இந்த வாரத்தில் அப்படி என்னோடு உரையாடியவர்களின் எண்ணிக்கையும், உரையாடலும் என்னை மலைக்க வைத்துள்ளது. ஏதேதோ இன்மைகள், குறைகள், புகார்கள். மிக முக்கியமான சின்னச் சின்னக் குழப்பங்கள். ஒரு சரியான வழிகாட்டியை, மனதில் இருப்பதை வெளிப்படுத்தினால் கேட்பதற்கான நபரை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

பொதுவாக நம் எல்லோருக்குமே, அந்த இளைஞரின் பதிவினை வாசிக்கும்போது பலவிதமான உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம். பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம். சிலருக்கு அச்சம் தந்திருக்கலாம். இவ்ளோதானா வாழ்க்கை எனும் சலிப்பைத் தந்திருக்கலாம்.... இன்னும்கூட நிறைய இருந்திருக்கலாம். நிச்சயமாக யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.

சிலவற்றை எந்த வகையிலும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டை மீறி வருகின்றவை.

ஆனால், நாம் அறிந்து நம்மால் தடுக்க, தவிர்க்க இயலுகின்றவற்றை, அவ்வாறு செய்யாமல் நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், வாய்ப்புகள், வளங்கள், உறவுகள், உடல் நலம், மன நலம் ஆகியவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றோமா எனும் கேள்வியை எழுப்பினால் போதும். சரியாக வேண்டியவைகள் மெல்ல மெல்ல சரியாகும்.

வாழ்க்கை நிச்சயமற்றதுதான். ஆனால், நம் யாருக்கும், அந்த இளைஞருக்கு 'தான் இல்லாமல் போகப்போவதுதெரிந்துவிட்ட நிலை போல் இல்லை. அந்த நிறைவுப் புள்ளி தெரியாதது எத்தனை பெரிய வரம் என்பது அது தெரிந்துவிட்டால்தான் தெரியும். அவருக்கு ஒவ்வொரு விடியலும் மரணத்தை நெருங்கும் மைல் கற்கள். எதையும் ’இதைச் செய்து என்ன ஆகப்போகிறது’ எனும் பதிலற்ற கேள்வியோடுதான் செய்ய வேண்டியிருக்கும்.

நமக்கு நாளை இருக்கின்றது, இந்த தீபாவளி இருக்கின்றது, அடுத்த தீபாவளியும் இருக்குமென ஆழமாக நம்புகிறோம், மனதார விரும்புகிறோம். நமக்கு அடுத்த மாதம், புத்தாண்டு, பொங்கல் உண்டு. மாணவர்களுக்கு தேர்வுகள், விடுமுறைகள், திறப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு கூட்டங்கள், வருமானங்கள், அதிகாரங்கள், தேர்தல்கள் உண்டு. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகள், வெற்றிகள், பரிசுகள் உண்டு. குடும்பத்தினருக்கு திருமணங்கள், திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், விருந்துகள் உண்டு.  மனித வாழ்க்கையில் எதெல்லாம் அடிப்படைத் தேவையோ, விருப்பமோ அவையெல்லாம் கிடைக்கும் சாத்தியங்கள் பெரும்பாலும் உண்டு.

அந்த இளைஞராக இப்போதைக்கு நாம் இல்லாதிருப்பது எதெனினும் மிகப் பெரிய பரிசு. நமக்குக் கிடைத்திருக்கும் நேரம், உடல் நலம், மன நலம், உறவுகள், நட்புகள், வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றில் கொஞ்சம் போதாமைகள் இருந்தாலும், இருப்பதை இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மனதார கவனம் செலுத்துவோம்.

நான் பல தருணங்களில் சொன்னதுதான் ‘நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்!’. அந்த வாழ்வு நம் கைகளில் இப்போது இருக்கின்றது அல்லது அந்த வாழ்வின் பிடியில் தற்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம்.

அதனை நன்கு வாழ்ந்துவிடலாம். அந்தத் தீர்மானம் பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கின்றது.

 ~ ஈரோடு கதிர் 

Apr 26, 2025

விதைக்கப்படும் துயரங்கள்

 நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத் தேவைகள் கடந்து ஒவ்வொருவரும் நிறைய செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அவசியமானது போக, ஆசைக்கும், ஆடம்பரத்திற்கும், சாகசத்திற்கும் அவரவர் விரும்பிய வகையில் நிறைய செய்கின்றோம். செய்யும் அனைத்துமே இந்த வாழ்வுக்கானதுதான் என ஆழமாக நம்பினாலும், உண்மையில் அனைத்துமே அதற்கானதாக இருந்துவிடுவதில்லை என்பதுதான் அதிலிருக்கும் நகை முரண். அவற்றில் விபத்துகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.


வாழ்வின் தடமெங்கும் விபத்து சார்ந்த இழப்புகளை ஒவ்வொருவரும் சந்தித்தும், கேட்டும், கண்டும் வந்திருப்போம். அவற்றில், சாலை விபத்துகளைத்தான் அதிகம் கேள்விப்படுகின்றோம். பணியிட விபத்துகள், வீட்டில் நிகழும் விபத்துகள், சுற்றுலா விபத்துகள், இயற்கைப் பேரிடர் விபத்துகள்,  நீர்நிலை விபத்துகள்,  விமான விபத்துகள், ரயில் விபத்துகள், படகு, கப்பல் விபத்துகள், விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு விபத்துகள் என விபத்துகளின் களங்கள் நிறைய உண்டு. 

அடிக்கடி புழங்கும் சாலைப் பிரிவில் இரண்டு பேருக்கான அஞ்சலிப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் மத்திம வயதினராகத் தெரிந்தனர். அந்தப் பதாகைகள் இருந்த இடத்திலிருந்து 50 அடி தொலைவில், கனரக  வாகனங்களை கழுவும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. 

அன்றைய தினம் சாயப்பட்டறை ஆசிட் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரி சுத்தம் செய்யப்படுவதற்காக வந்திருக்கிறது. மூடியைத் திறந்து சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய நபர் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்திருக்கின்றார். அவரைக் காப்பாற்றுவதற்காக முதலாளியும், இன்னொருவரும் பதட்டத்தில் இறங்க அவர்களுக்கும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்திருக்கின்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இறந்துபோன இரண்டு பேர்தான் பதாகைகளில் இருந்தவர்கள். முதலாளியும் இறந்துபோன சூழலில், வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வெறுமையாக மயான அமைதியோடு இருக்கின்றது. எத்தனையோ முறை இதுபோன்ற டேங்கர்களைக் கழுவியதுண்டு எனும் நம்பிக்கையோ, ஆசிட்டின் கொடூரம் குறித்த அறியாமையோ அந்த அரிய உயிர்களைக் கொய்து போயிருக்கலாம்.  

ஒவ்வொரு நாளும் இதுபோன்று எத்தனையோ விபத்துகளைக் கேள்விப்படுகின்றோம். விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது எனும் மனநிலை பலருக்கும் உண்டு. ‘நம்ம கையில் என்ன இருக்கு? தினமும் எத்தனையோ நடந்துட்டுத்தானே இருக்கு!’ என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கடந்து விடுகின்றோம். சற்று சிந்தித்தால், நாம் அறிந்த பல விபத்துகள் ஏறத்தாழ தவிர்த்திருக்கக் கூடியவைதான். 

ஒரு விபத்து மற்றவர்களுக்கு பெட்டிச் செய்தி. ஆனால் உற்றவர்களுக்கு, வாழ்நாள் முழுமைக்குமான மிகப் பெரிய துயரம். அது ஒருபோதும் பாடம் ஆவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. 

விபத்துகளை எளிதாக இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று தம் கட்டுப்பாட்டில் இருப்பது. மற்றொன்று தம் கட்டுப்பாட்டில் இல்லாதது. அதிகமாக நிகழ்வது தம் கட்டுப்பாட்டில் இருக்கும் விபத்துகள்தான். அந்த விபத்துகளுக்கான மிக முக்கியமான காரணங்களாக சிலவற்றைப் பட்டியலிடலாம். அதீத நம்பிக்கை, அசட்டுத் தைரியம், விழிப்புணர்வு இல்லாதது, தவிர்க்க வேண்டியதை தவிர்க்காதது, கவனக் குறைவு, அலட்சியம், உடல்நிலை உள்ளிட்டவை அதில் அடங்கும்.

நட்புகளோடு சுற்றுலா செல்லும்போது சூழல் அறியாமல், பலரும் நீர் நிலைகளில் இறங்குவதுண்டு. அவர்களில் சிலருக்கு நீச்சல் தெரிந்திருக்கலாம். நீச்சல் பழகிய நீர்நிலைக்கும், அங்கிருக்கும் நீர்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமும் ஒன்றுபோல் தெரியும். ஆனால் அனைத்து நீர்நிலைகளும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் தனித்த வடிவங்கள், போக்குகள் மற்றும் தன்மைகள் உண்டு. சிலருக்கு நீர்நிலைகள் குறித்த அனுபவமோ, பழக்கமோ துளியும் இருக்காது. எனினும், நட்புகளுடன் இருக்கும் துள்ளல் மனநிலையில் இறங்கி ஆபத்தை வரவழைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக கோடை விடுமுறைக் காலங்களில், ஆர்வமிகுதியில் நீர்நிலைகளுக்குச் செல்வோர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக் கொள்வதை அதிகமாகக் காண முடியும்.

சரியான வழிகாட்டுதல் இன்றி மலையேற்றம் செல்வோர் வழி தவறி காணாமல் போவதுண்டு. திடீரெனப் பெய்யும் பெருமழைகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புண்டு. உடல்நிலைப் பொருட்படுத்தாது மலை ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொண்டவர்களும் உண்டு. தமிழகத்தையே உலுக்கிய குரங்கனி தீ விபத்தின் பின்னால், அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் மலை குறித்த அறியாமை இருந்தது. எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். முறையான அனுமதி, தொடர்புடைய வழிகாட்டுதல்கள் இல்லாததால் அவர்களுக்கு உதவிகள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

சாகச மனநிலைக்காக, வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, ரீல்ஸ் எடுப்பதற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பு அம்சங்களை பாராமல், அணைகளில் ஏறுவது, படகில் பயணிப்பது, பாரா க்ளைடிங்கில் பறப்பது, பைக்கில் சீறிப்பாய்வது, ரேஸ் விடுவது என எத்தனையோ செயல்கள் விபத்துகளாக மாறுவதைக் கண்டுகொண்டேதான் இருக்கின்றோம். இவைகளுக்கு ஈரம் உலராத உதாரணங்கள் நம்மிடையே நிச்சயம் இருக்கும்.

சூழல்கள் பல நேரங்களில் நமக்கு மிகப் பெரும் பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும், அவற்றையெல்லாம் வாழ்வின் பரபரப்பில் எளிதில் மறந்துவிடும் பலவீனம் கொண்டவர்கள்தான் நாம்.

நம்முடைய சாலைப் பயண தேவைகளும், விகிதங்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. ‘சும்மா வெளியில் போய்ட்டு வருவோம்!’ என சில நூறு கிமீ தூரம் கார் ஓட்டிச்செல்வது பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. ‘டீ குடிக்க, சாப்பிட’ என நெடுந்தொலைவு சென்று வருவது தொடர்ந்து இயல்பாகிக் கொண்டிருக்கின்றது. ‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு, அதனால ஒரு ட்ரைவ் போயிட்டு வந்தேன்!’ என சிலர் சொல்வதுண்டு.  

என்னுடைய பயிலரங்கில் ஒருவர், வீட்டில் கணவருடன் ஏற்பட்ட சிறு சண்டைக்கான எரிச்சலில், வீட்டில் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு சுமார் நூறு கி.மீ தூரம் ஓட்டியபிறகுதான் மனம் ஆறியதாகக் கூறினார். அவர் பயணித்தது மழை பெய்யும் சாத்தியம் கொண்டு ஓர் இரவு நேரத்தில். மிக முக்கியமானது அவருக்கு ஓரளவுதான் கார் ஓட்டத் தெரியும்.

நான் அறிந்த ஒரு ஓட்டுநர், மிகக் கடுமையான உழைப்பாளி, நல்ல மனிதர். தினமும் சென்னைக்கு இரவு முழுக்க லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். நீண்ட காலமாக ஓட்டுகின்ற, மிகுந்த அனுபவம் மிக்கவர். ஒருநாள் முதலாளியின் குடும்பத்தினருடன் தென்மாவட்டத்திற்குச் செல்ல இவர்தான் ஓட்டிச் சென்றிருந்தார். இரவு திரும்பி வரும்போது, அவர்களுடைய ஊரை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்ட விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது. அவரும், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்ணும் அந்த விபத்தில் மரணமடைந்தனர். மிகச் சமீபத்தில் சுமார் 150 கிமீ தொலைவிற்குள், வெவ்வேறு இடங்களில் மூன்று உயர் ரக கார்கள் நொறுங்கி உருக்குலைந்து கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் சுங்கவரி செலுத்தும் நெடுஞ்சாலைகளில் விபத்து நடந்த சில மணி நேரங்களில் அவை அப்புறப்படுத்திவிடுவதுண்டு. 

இரவு பகலாக தொலை தூரத்திற்கு லாரி ஓட்டும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநருக்கு, கார் ஓட்டுவது எளிதானதாகத் தெரியலாம். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நீண்ட காலம் ஒன்றில் பழகியவருக்கு, அதையொத்த ஆனால் வேறு வடிவத்தில், வேறு திறன் கொண்டிருப்பது சட்டனெ ஒரு கணத்தில் சவாலானதாக மாறிவிடலாம். அந்த ஒரு கணம் போதாதா!

பல ஆண்டுகளாக ஓட்டுகிறேன், பல லட்சம் கி.மீ தொலைவு ஓட்டியிருக்கின்றேன் என்பதுபோன்ற அதீத நம்பிக்கை மற்றும் பெருமைகளோடு மட்டும் வண்டியை இயக்கிவிடக்கூடாது. எப்போதுமே அதீத நம்பிக்கை யதார்த்தங்களை மறைக்க முயற்சி செய்யும். போதுமான ஓய்வு எடுக்காமல் வாகனம் இயக்குவது, பின்னிரவுகளில் தூக்கம் வந்தாலும் சீக்கிரம் இடம் சென்றடைந்துவிடலாம் என முயற்சிப்பது, சாலை நன்றாக உள்ளது, வண்டி சீறுகின்றது என வேகத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எதைச் செய்தாலும் ஆபத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்றே பொருள். மது போதைப் பயணங்கள் குறித்தெல்லாம் எதுவும் தனியே எழுத வேண்டிய தேவையில்லையென நினைக்கிறேன்.

சாலை விபத்துகள் எண்ணிகையின் பின்னாலும் ஒரு தோராயமான கணக்கு இருக்கத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரம் வண்டிகள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன என்றால், அதில் சுமார் பத்து விபத்துகள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அதன் சராசரியை இரண்டு விதமாகக் கணக்கில் கொள்ளலாம். ஒரு லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் பத்து விபத்துகள் நடக்கலாம் அல்லது 1000 வண்டிக்கு பத்து விபத்துகள் நடக்கலாம். எதற்கெடுத்தாலும் வண்டியை எடுத்துக்கொண்டு, பறக்க முற்படுபவர்களிடம் சொல்வது. ஒரு லட்சம் கிமீ தொலைவிற்குள், 1000 முறை வண்டியை இயக்குவதற்குள் சுமார் பத்து முறை சிறிதாகவோ பெரிதாகவோ, எங்காவது இடிக்கலாம், விபத்துகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் தூரத்தை வெளிநாடுகளில் நேர அளவீட்டில் சொல்வதுண்டு. காரணம் அவர்களின் சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து தன்மை அவ்விதமானது. ஆனால் நம் ஊர்களில் நேர அளவினை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் பயணிப்பது மிகுந்த ஆபத்தானது. காரணம், இங்கு எப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எப்போதும் சாலை செப்பனிடப்படும் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் மேப் காட்டும் சராசரி நேரத்தைவிட முன்கூட்டியே சென்றடைவதை ஒருவித வெற்றியாகக் கருதுவோரும் இங்குண்டு. 

நமக்கு அனுபவம் உள்ளது, நமக்கு எதும் நடக்காது, சரி செய்துதான் பார்ப்போமே என்பது போன்ற நம்பிக்கைகள்தான் பல தருணங்களில் பெரும் துயரினைக் கொண்டுவந்துள்ளன. இது சாலை விபத்துகள் முதல் சாகச விபத்துகள் வரைப் பொருந்தும்.




யாருடைய உரையாடல் என்று நினைவில்லை. சமீபத்தில் கேட்டதில் ஆழப்பதிந்த உரையாடல் அது. ”எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. அந்த வாழ்வில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன். ஆனால் ஒருபோதும் சாகசம் என்ற பெயரில் ரிஸ்க் எடுக்கமாட்டேன்!” இது பலருக்குமான பாடம் என்றால் மிகையல்ல.

விபத்துகளினால் உறவு மற்றும் நட்புகளில் இழப்புகளைச் சந்தித்தவர்களை கணிசமாக நாம் அறிந்திருப்போம். அந்தக் குடும்பங்களின் நிலை விபத்துக்கு முன், விபத்துக்குப் பின் என மாறியிருப்பதையும் கண்டிருப்போம். அந்த மாற்றம் ஒருபோதும் கற்பனை செய்திடாதது. விபத்துகள் உயிர்களைக் கொய்திடும்போதே, துயரங்களை விதைத்து விடுகின்றது.

நாம் அறிந்த விபத்துகளின் பட்டியலை எடுத்து அதன் தன்மைகளை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே, அவற்றில் மிகப் பெரும்பான்மையானவை மிக நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எல்லாருக்குமே தாம் செய்யும் தவறு தெரியாமலோ, புரியாமலோ இல்லை. ஆனாலும் அதனைத் தொடர்ந்து செய்வதற்கு, அவர்களிடம் சில காரணங்கள் இருப்பதுண்டு. அவற்றில் மிக முக்கியமான காரணம் ‘நான் அப்படித்தான் செய்வேன்!’ எனும் மனோபாவம். அந்த மனோபாவத்திற்கு ‘நான் இப்படித்தான்!’ என தன்னை தவறாக வரையறுத்துக்கொள்வதும் ஒரு காரணம். சூழலுக்கும், காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப என்னை தகவமைத்துக்கொள்வேன் என்றில்லாமால், நான் என்றால் இப்படித்தான் என வரையறுத்தல் வெறும் வீம்பு மட்டுமே. வீம்பு செழித்து வாழும் இடங்களில், ஒருபோதும் அறிவு உயிர்ப்புடன் இருப்பதில்லை.

Apr 6, 2025

முதியதோர் உலகு





அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி வரும் வழியில் அமர்ந்திருந்தார். அவரைக் கடக்கும்போது கவனித்தேன். அவரும் என்னைப் பார்த்த நொடியில் புன்னகைத்தார். புன்னகையை எப்படிப் புறந்தள்ள முடியும். நானும் புன்னகைத்தேன். 

அந்தப் புன்னகைக்குக் காத்திருந்தவர்போல் எழுந்தார். ஏதோ கேட்க, சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. என் வேகத்தைக் குறைத்தேன். சிரித்த முகம். சிலருக்குத்தான் அப்படி இயல்பாக வாய்க்கும். சிலர் தன்னை அப்படி அமைத்துக் கொண்டதும் உண்டு. அவர் ஏதோ பேசத் தொடங்கியிருந்தார். காதில் இருந்த இயர்பட்ஸில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ‘சொல்லுங்க!’ என்றேன்.

”உங்களை அடிக்கடி பார்க்கிறேன். பேசனும்னு நினைப்பேன். காதில் அதைப் போட்டுட்டு வேகமாப் போவீங்க. தொந்தரவா இருக்குமோனு பேசாம போய்டுவேன். இன்னிக்குத்தான் பேச முடிஞ்சிருக்கு!” என்றபடி என்னோடு நடையில் இணைகிறார்.

அவரைக் கவனித்திருக்கிறேனா? உண்மையில் நினைவில்லை. கவனித்திருக்கலாம், மனதில் பதிந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் அப்படி யாரிடமும் பேசத் தோன்றியதில்லை. ஓரிரு தலையசைப்புகள் எப்போதாவது உண்டு. மற்றபடி காலை நடை என்பது எனக்கான தவ வேளை. பெரும்பாலும் ஏதாவது கேட்டபடி, எனக்குள் உரையாடியபடி நடப்பேன். 

“அப்டீங்ளா.... ஸாரி நான் கவனிச்சதில்ல... சொல்லுங்க!”

எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டார். அப்படியான கேள்விகளை விரும்புவதில்லை. அங்கே என திசையை மட்டும் காட்டினேன். தம் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். சாலையின் முடிவில் நான் திரும்பும் திசைக்கு எதிர்பக்கம் அவரின் பகுதி. 

அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிறைவு செய்திருக்கிறார். மகன் மருத்துவர். மகள் பட்டயக் கணக்காளர். பிள்ளைகளின் வயது சொல்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சமீப ஆண்டுகளில் படிப்பு முடித்து பணிக்கு சென்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவரே சொல்லிக்கொண்டிருக்க, முடிவாக என்ன சொல்ல வருகிறார் என என்னால் இனம் காண முடியவில்லை. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

“சரிங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்!” என நடையை வேகப்படுத்தியிருக்க முடியும். சரி என்னதான் சொல்ல வருகிறார் எனும் சிந்தனையோடு அவருடன் தொடர்கிறேன். என்னைவிட சற்று உயரம் குறைவானர் மற்றும் வயதானவர் என்பதால் என் நடை வேகத்திற்கு அவர் சிரமப்படுவது புரிந்தது. வேகத்தைக் குறைக்கிறேன். 

அவர் குறித்த அறிமுகம் நிறைவடைந்த நிலையில், நான் என்ன செய்கிறேன் எனக்கேட்கிறார். மேலோட்டமாகச் சொன்னதும், ”நீங்க வெளியில் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போக முடியுமா? நானும் அதில் எதுவும் செய்ய முடியுமா?” 

இத்தனைக்கும் நான் செய்வதாகச் சொன்னதில், பள்ளி எனக் குறிப்பிடவும் இல்லை இல்லை. பேசத் துவங்கி சில நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? என வரிசையாகக் கேள்விகள் துளிர்க்க, கட்டுப்படுத்திக்கொண்டு, “எதுக்காக நீங்க வர நினைக்கிறீங்க?” என்கிறேன்.

”வந்தா எதாவது அடிஷனல் இன்கம் கிடைக்குமேனு!” என்றார். ஆச்சரியத்தைவிட சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“பென்சன் இருக்குமே உங்களுக்கு, மகனும் மகளும் நல்ல நிலையில் இருக்கிறதாச் சொன்னீங்கதானே!?”

“பென்சன் வருது. ஆனா ரொம்ப செலவு பண்ணி பழகிட்டோம். முன்ன சம்பளம் வந்தப்ப நிறைய வெளியே போறது, போன இடத்தில் காஸ்ட்லியா தங்குறது, பெருசா செலவு செய்றதுனு பழக்கமாகிடுச்சு. இப்பவும் அப்படியேதான் செலவாகுது. அதில்லாம வீட்டு லோன் போய்ட்டு இருக்கு. எதிலுமே செலவைக் குறைக்க முடியல”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு பெரிதாக யோசிக்க மனம் வரவில்லை. அவர் சொன்னதை கேட்க மட்டுமே செய்தேன். 

“எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கம். ஃபர்ஸ்ட் போஸ்டிங் திருவண்ணாமலைல, அங்க இங்கனு சுத்தி கடைசியா இங்கே வந்துட்டோம். வொய்ஃப்க்கு இந்தப் பக்கம்தான் நேட்டிவ். முன்ன ஸ்கூல், வேலைனு எப்பவும் வெளியே போய்ட்டேன் பிரச்சனையில்ல. எனக்கும் அவங்களுக்கும் 13 வருட வித்தியாசம். முன்னெல்லாம் நல்லாதான் இருந்தாங்க. இப்ப வீட்லையே இருக்கிறதால, ரொம்ப திட்டிட்டே இருக்காங்க. இன்கமும் பாதியாகிடுச்சு. அதான் எதாச்சும் செய்யனும்னு பார்க்கிறேன்”

“என்ன வயசு உங்க ரெண்டு பேருக்கும்?”

“எனக்கு 66, அவங்களுக்கு என்னைவிட 13 வயசு குறைவு. நல்லாப் படிச்சிருக்காங்க. நான்தான் வேலைக்கெல்லாம் போக வேணாம்னு சொல்லிட்டேன். எதாச்சும் செய்யனும்னு இப்ப சொல்லிட்டே இருக்காங்க. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாதிரி சிலதெல்லாம் ட்ரை பண்ணினாங்க. எல்லாம் ஃபெயிலியர் ஆகிட்டு. அதில நிறைய பணம் போயிடுச்சு”

வேறு என்னவெல்லாம் செய்தார்கள் எனக் கேட்கவில்லை. தம்மால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா எனத் தெரியாமல் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர் பலர் உண்டு. தடாலடியாக முடிவெடுப்பார்கள், எவரையும் நம்புவார்கள், எடுத்துக்கொண்ட ஒன்றை மிகைப்படுத்தி புகழ்வார்கள், அதைச் செய்யும் அறிவும், திறனும் உண்டா என்று சிந்திக்க மாட்டார்கள். எதையாவதைச் செய்து பலர் சிறிதாகவும், சிலர் பெரிதாகவும் இழப்பினைச் சந்திப்பதுண்டு. 

“எது சரி வருமோ, பார்த்து செய்ங்க!”

“நீங்க போறபக்கம் என்னையும்....” என இழுத்தார். நறுக்கென கத்தரித்துவிட்டு நான் நகர்ந்திருக்கலாம். ‘நிதானமா இரு!’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

”போகும்போது சொல்றேனு உங்ககிட்ட பொய் சொல்லிட்டுப் போய்டலாம். அதெல்லாம் சரி வராதுங்க. என்னையும் உங்களுக்குத் தெரியாது. யார் எது செய்தாலும், அது இன்னொருவருக்கு சரியா வரனும்னு இல்லை. முதல்ல உங்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதைத் சரி செய்யப் பாருங்க. உங்க மகன், மகள்கிட்ட பேசுங்க. அவங்ககிட்ட இத எப்படி சொல்றது, ஆலோசனை கேட்கிறதுனு நினைக்காதீங்க. படிச்சிருக்காங்க. புரிஞ்சுக்குவாங்க. உங்க வைஃப் எதுக்கு திட்டுறாங்கனு அமைதியா யோசிங்க. அவங்க மனசுல என்ன இருக்குனு கேளுங்க. படிச்சிருந்தும் அவங்க வேலைக்குப் போகாதது, சொந்தக் காலில் நிற்கமுடியாததுகூட மனக்குறையா இருக்கலாம். மற்றபடி செலவு செய்றது, மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நீங்க நாலு பேரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். பார்த்துக்கோங்க” என்றபடி சற்று வலுக்கட்டாயமாகத்தான் விடை பெற்றேன்.

அவர் என்னைப்போல் பலரிடமும், முன்பின் அறியாதவர்களிடமும்கூட இதுபோல் கேட்டிருக்கலாம். உண்மையான தேவைக்காக கேட்கிறாரா அல்லது ஏதேனும் உளவியல் சவால் இருந்து அதைக் கையாளத் தெரியாமல் இப்படி வெளிப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. இனியொருமுறை நான் அவரை சந்திக்காமல் போகலாம். சந்தித்தாலும் தலையசைப்போடு கடந்து, காலப்போக்கில் அதுவும் தேய்ந்து போகலாம். 

நான் அவரை மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனமாகியிருக்க வேண்டும். ஆனால் மனதின் ஏதோவொரு ஓரத்தில் அவர் மெல்ல நடந்து கொண்டேயிருந்தார். அது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு இல்லை. ஏன் ஒரு மனிதர் இப்படியாகிறார் எனும் என்னுடைய புரிதலுக்கான அலசல்தான்.

படித்து ஆசிரியர் ஆனவர். பல ஆண்டுகள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர். திறக்கப்படாத பல கதவுகளைத் திறப்பதுதானே கல்வியின் நோக்கம்.  நன்கு படித்த மனைவிக்கு திறக்கப்பட்டிருக்க வேண்டிய கதவுகளை, திறக்க உதவி செய்யாதது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தக் கதவுகளை இவரே அடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் ஒரு பெண் கோபப்பட்டால், ஏன் கோபம் வருகின்றது என ஆராயப்படுவதேயில்லை. படித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாத மற்றும் 13 வயது குறைவான மனைவியின் மனப்போராட்டத்தை, அவருடைய நிலையிலிருந்து புரிந்துகொள்ள மறுத்து,  நான் வீட்டில் இருப்பதால், வேலையில்லாமல் இருப்பதால், வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டதால் சண்டை வருகிறது எனக் கருதிக்கொள்வது சிக்கலை மேலும் பெரிதாக்கவே செய்யும். 

பிள்ளைகளுக்கு என்ன தெரியும் எனும் பிற்போக்குத்தனம் பல பெற்றோர்களிடம் உண்டு. ‘பிள்ளைகளுக்கு நிறையத் தெரியும். அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல. நம் காலம் போன்று அவர்கள் காலம் இல்லை!’ என்பதனை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் ஏற்படும் பிணக்குகளுக்கு, சிக்கல்களுக்கு, முரண்பாடுகளுக்கு அவர்களிடம் அப்பா-அம்மா எனும் அதிகாரத்தைச் செலுத்தாமல், உன்னை மதிக்கின்றேன் என்பதை உணர்த்தி அவர்களின் கருத்தைக் கேட்டால் பெரு ஆச்சரியங்கள் நிகழும். ‘இதுல எப்படிண்ணே எரியும்!’ என பெட்ரமாக்ஸ் லைட் மேண்டிலை செந்தில் உடைப்பதுபோல, ‘இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க!’ என பெரியவர்களின் குழப்பத்தை பொசுக்கென உடைத்துவிடும் திறன் வாய்ந்தவர்கள் இந்தத் தலைமுறையினர். அவர்களிடம் தீர்வுகள் தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

சம்பளம் வாங்கிய காலத்தில் இருபது முப்பது ஆண்டுகாலம் பெரிய அளவில் செலவு செய்து பழகிவிட்டால், பென்சன் வாங்கும் காலத்தில் வருமானம் பாதியாக குறையும் சூழலில் செலவுகளை எப்படிக் குறைக்க முடியும்? வயது முதிரும் காலத்தில் மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள், பிள்ளைகளுக்கான செலவுகள் என்று கூடத்தானே செய்யும். நிதி குறித்த அடிப்படை புரிதல் மற்றும் நிதி மேலாண்மையில்லாத பலரும் ஏதோவொரு தருணத்தில் பொருளாதார நெருக்கடியில் எளிதாக ஆட்பட்டுவிடுவதுண்டு.

எது சிக்கனம், எது கஞ்சத்தனம், எது அவசியமான செலவு, எது ஆடம்பரமான செலவு, எது ஊதாரித்தனம் என ஒவ்வொருவரும் தெளிவடைதல் முக்கியம். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்வதை பண சுழற்சிக்கு நல்லது என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதுண்டு. ஒருவர் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர, தாமும் அதுபோல் செய்யலாம் என நினைத்தால், என்றேனும் ஒருநாள் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும்.

பணி ஓய்வு பெறுகின்றவர்களுக்கென சில உளவியல் சவால்கள் உண்டு. உண்மையில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இருபது முப்பது ஆண்டு காலம் ஒரே மாதிரியான வேலையைச் செய்தவர்கள், அதிகாரம் செலுத்தியவர்கள், பல்வேறு பலன்களை அனுபவித்தவர்கள், திடீரென ஒருநாள் அங்கிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு, ஓய்வு காலம் எனும் நிர்பந்தத்தில் ஆட்படுத்தப்படுகின்றனர். வெகு எளிதாக தனித்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதை அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வீடுதானென்றாலும், அதன்பிறகு அது புதிய சூழல்தான். பொருத்திக்கொள்வது மிகச் சவாலானது. அந்த நிலையில் அவர்கள் தம்முடனே முரண்படுவர், அதைவிட மோசமானது குடும்பத்தில் இருக்கும் அனைவருடனும் ஏற்படும் முரண்கள். இதில் யாரையும் தனித்து குறை சொல்ல முடியாது. அறியாமைதான் காரணம். ஓய்வுகாலம் எனும் சூழலுக்கு தயார்படுத்துவது இருதரப்பிலும் மிகவும் முக்கியம். 

வாழ்வின் பயண வழித்தடமெங்கும் சேகரிக்கும் அனுபவங்கள் முதுமையில் உதவுவதாக இருக்க வேண்டும். எந்த அனுபவங்களையும் சேகரிக்காத, அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாதோர் முதுமை மிகவும் பலவீனமாகவே அமையும். பலவீனமான தருணங்களில் தெளிவாக சிந்திக்கவியலாது. முதுமை உடலை வேண்டுமானால் பலவீனப்படுத்தலாம். ஆனால், அறிவு மற்றும் மனதை எந்தவகையிலும் பலவீனப்படுத்தக்கூடாது.

வாழ்தல் என்பது முதுமைக்கும் தன்னை தயார்படுத்துவதுதான். தன்னைப் பாதுகாத்தல் என்பதும் தன்னை நேசித்தலின் ஓர் அங்கம். 

~ ஈரோடு கதிர்

Mar 29, 2025

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அடுப்புகளை, பற்ற வைக்காமல் திறந்துவிட்டு, தீப்பெட்டியோடு திரும்புகிறாள். எதிரில் நிற்கும் பிள்ளைகள் முன் மண்டியிடுகிறவள், ”ரெண்டு பேரும் அம்மாகூட வந்துடுறீங்களா!?” எனக்கேட்க ”‘எங்கம்மா, தாத்தா வீட்டுக்கா?” எனக் கேட்கும் மகளையும் மகனையும் அணைத்தபடி கதறுகிறாள். பாட்டல் ராதா திரைப்படத்தில், குடி நோயாளியின் மனைவி தற்கொலைக்கு முனையும் காட்சி இது.


இன்னொரு தருணத்தில் ”அப்படியே குழந்தைங்களோடு கொளுத்திக்கலானு நினைச்சேன். அப்புறம் உன்னை மாதிரி ஆளுக்காக ஏன் சாகனும்னு தோணுச்சு!” எனும் அஞ்சலம், தாலியை கழற்றி கணவனின் கையில் வைத்துவிட்டு, ”போதுன்ற அளவுக்கு குடி. அப்படியே விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு செத்துடு. நாங்களாவது நிம்மதியா இருப்போம்” என உறுதியான வேறொரு முகம் காட்டுகிறாள். இது சினிமாவில் வரும் அஞ்சலம் முகம் மட்டுமல்ல. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகளின் முகம்.




எதிரிகளின் மரணத்தை ஒருவர் வேண்டுவதைவிட, குடி நோயாளிகளின் மரணம், அவரை மிகவும் நேசித்த குடும்பத்தாரால் மிக அதிகமாக ஒருகட்டத்தில் வேண்டப்படுகின்றது எனும் உண்மை அவ்வளவாக ரசிக்க முடியாதது. ‘செத்து தொலைஞ்சிட்டாக்கூட நாங்க எப்படியாச்சும் நிம்மதியா இருந்துடுவோம்’ என்று பல தருணங்களில் வெகு எளிதாகச் சொல்வதைக் கேட்க முடியும்

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் குடி நோயாளிகளாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அவர்களில் எழுபது லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலையில் உள்ளனர். குடிப்பதால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கின்றது. அது எந்தளவு ஆதாரப்பூர்வமானது எனத் தெரியவில்லை என்றாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.

பாட்டல் ராதா, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஒரு குடி நோயாளியின் கதை. படத்தில் குடி மீட்பு மையம் மற்றும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA-ஏஏ) அமைப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். சமீபத்தில்தான் ஏஏ அமைப்பு குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது

2023 ஆகஸ்ட் 7-ம் தேதி காலை ஆறரை மணி சுமாருக்கு, நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது கல்லூரி நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்று கொண்டிருந்தேன். தேதியும் நேரமும் துல்லியமாக நினைவில் இருக்கக் காரணம், முந்தைய தினம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘வாழ்தல் அறம்’ தலைப்பில் பேசியிருந்தேன். அந்த உரையைக் கேட்டுவிட்டுத்தான் அவர் அழைத்திருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு பேசுகிறோம். உரை குறித்து, தமக்கு நெருக்கமாக உணர்ந்தது குறித்துப் பேசியவர், தன் கடந்த காலக் கதையைச் சொல்கிறார்.

நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது யாரையும் சந்திப்பதையோ, யாருடனும் உரையாடுவதையோ தவிர்ப்பவன் நான். மனசு முழுக்க நிகழ்ச்சி குறித்த கவனம்தான் இருக்கும். ஆனால் அன்று பேசினேன். அந்த உரையாடல் பின்வரும் நாட்களில் அற்புதங்கள் செய்யப்போவதை அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு ஏறத்தாழ சம வயதுதான். பள்ளிப் படிப்பு, குடும்பச் சூழல், நட்புகள், படிப்பை தொடராமல் வேலைக்குச் சென்றது, தொழில், திருமணம் எனும் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான காலத்தில் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. குடி நோயாளியாகவும் மாறியிருக்கின்றார். சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், இழப்புகள் ஏராளம். எதுவும் அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாதவை.

பலபேர் தனித்தனியே அனுபவிக்க வேண்டிய சவால்கள், வேதனைகள், அவமானங்கள், போராட்டங்களை குடி நோயாளிகள் தனி நபராக அனுபவித்து விடுகின்றனர் என்பது ஒருபோதும் அவர்களுக்குப் புரிவதில்லை. புரியும்போது பலருக்கும் காலம் கடந்து விடுகின்றது.

ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அவருடைய கடந்த காலம் இன்னும் மிச்சம் இருந்தது. நான் கிருஷ்ணகிரி தாண்டியிருந்தேன். மாலை பேசிக்கொள்ளலாம் என அப்போதைக்கு தொடரும் போட்டோம். பாதிக்கப்பட்டதைக் கேட்டாயிற்று, மீண்டது எப்படி எனும் ஆவல் எனக்குள் ஊஞ்சலாடிக்கொண்டேயிருந்தது.

மாலை உரையாடல் தொடங்கியது. பல அனுபவங்களைப் பகிர்ந்து இறுதியாக, குடியின் உக்கிரத்தில் இருந்தபோது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏஏ) கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைக்கப்பட்டு, அதன் வாயிலாக மீண்டதைச் சொன்னார்.

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குறித்து மேலோட்டமாகக் கேள்விப்பட்டதுண்டு. அவர் மூலமாக விரிவாக அறிந்துகொள்கிறேன். ஏஏ குடி நோயிலிருந்து மீண்டவர்கள், மீள விரும்புகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் உலகளாவிய அமைப்பு. அவர்கள் இயங்கும் முறை, யாரெல்லாம் அதில் உறுப்பினர்கள் என்பதுள்ளிட்ட விபரங்களை அவர் கூறவில்லை. அந்த அமைப்பிற்குள் சென்று, ஒட்டுமொத்தமாக மீண்டு, அதில் தற்போது அவரும் பங்களிப்பதைச் சொன்னார். அவர் சென்றிருந்த எல்லையிலிருந்து, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் முற்றிலும் சிதைந்திருந்த நிலையிலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஏஏ நிகழ்விற்கு நீங்கள் ஒருமுறை வந்து பாருங்கள் என்று அழைத்தார். ஏறத்தாழ அனைத்து பெரு நகரங்களிலும் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு, குறிப்பாக ஈரோட்டில் அனைத்து நாட்களிலும் கூட்டம் நடைபெறுவதாக் கூறினார்.

சில மாதங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் தம் உறவினர் குடி நோயாளியாக இருப்பதைக் கூறி சைக்கியாட்ரிஸ்ட் யாரையேனும் பரிந்துரை முடியுமா எனக் கேட்க, எனக்கு ஏஏ நினைவுக்கு வந்தது. நண்பரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் நிலைமையைச் சொல்லி, சரி வருமா எனக்கேட்டேன். வரச் சொல்லுங்க சரியாகிவிடுவார் என நம்பிக்கை அளித்தார்.

ஆனால், எனக்கு நம்பிக்கை வரவில்லை. காரணம், அவர் காலையில் நான்கு மணிக்கே குடியைத் தொடங்கிவிடுகிறவர். மாட்டுக் கொட்டகை, மோட்டர் ரூம், குப்பை மேடு, புதர், வாழை, இளம் தென்னை மரங்களின் மட்டைகள் என புழங்கும் இடமெங்கும் பாட்டில்களை பதுக்கி வைத்து குடிப்பவர். குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடினாலும், அவர் தொடர்ந்து வைத்துக் கொண்டேயிருப்பார். நாள் முழுக்க போதையில் இருப்பவர். உறவினரிடம் ஏஏ குறித்து நான் கேள்விப்பட்டதைக் கூறி, கூட்டத்திற்குச் செல்வாரா எனக் கேட்டேன்.

அவருக்கும் முழு நம்பிக்கை இல்லையென்றாலும், அந்தக் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். எப்படியாவது குடி நிறுத்தப்படவேண்டும் என்பதால், எதையும் செய்யத் தயாராக அவர்கள் இருந்தனர். அவரிடமே ஒப்புதல் வாங்கி ஞாயிறு மாலை செல்லவதாக, முதல் நாள் இரவு தெரிவித்தனர். நான் நண்பரிடம் ஞாயிறு அன்று கூட்டம் நடக்கும் இடம் மற்றும் சந்திக்க வேண்டியவரின் விபரங்கள் பெற்று வழங்கினேன்.

அடுத்த நாள் மாலை செல்லலாம், அவருக்கு நிச்சயம் நல்லது நடக்கும் எனும் மெல்லிய நம்பிக்கையோடு குடும்பம் உறங்கச் சென்றது. ஆனால் விடியல் அவர்களுக்கானதாக இல்லை. காரணம் விடியும் முன்பே அவர் ஆரம்பித்துவிட்டார். குடும்பம் சோர்ந்து போனது. ஏஏ நண்பரை அழைத்து நடந்ததைச் சொன்னேன். சற்றும் சுணங்காமல் அடுத்த கூட்டத்திற்கு வர வையுங்கள் என்றார்.

குடும்பம் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றது. அவரே என் உறவினரை அழைத்து அடுத்த கூட்டத்திற்கு போகிறேன் என ஒப்புதல் அளித்திருக்கிறார். குடும்பம் அழைத்துச் சென்றது. என்னவோ மாயம் நிகழ்ந்தது. குடியை நிறுத்தி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு மிக நெருங்கிய நட்புகள் அமைந்தன. தினமும் ஃபோனில் பேசுவது, கூட்டங்களுக்கு கொண்டாட்டமாக செல்வது என அவருக்கு புதியதோர் உலகம் அமைந்தது. குடும்பம் மிகப் பெரிய நிம்மதியை அடைந்தது.

பிறிதொரு தருணத்தில் ‘ஏன் அந்த முதல் ஞாயிற்றுக்கிழமை குடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, ‘எப்படியும் குடியை விடச் சொல்லுவாங்க, கடைசியா ஒருமுறை குடிச்சிட்டு விட்டுடலாம்னு குடிச்சேன்!’ எனச் சிரித்திருக்கிறார். மது இல்லாமல் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் இருக்கிறார்.

இன்னொருவர், ஒரு சாமானியன் சினிமாவில் வெற்றி அடைவதைப்போல் இருபது ஆண்டுகளில் யாரும் கற்பனை செய்ய முடியாத வளர்ச்சியடைந்தவர். அதில் பிற்பாதியில் மதுப்பழக்கம் வளர்ந்தது. அனைத்தும் முதலீடாக இருந்ததால் பொருளாதாரத்தில் சிக்கல் இல்லை. குடும்பத்தில், உறவுகளில் காயம் ஏற்பட்டது. பிள்ளைகள் தவித்தனர். இரண்டு முறை டீ-அடிக்‌ஷன் மையத்திற்குச் சென்றும், குடியை விடமுடியவில்லை.

அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இரவுகளில் அவரின் ஃபோன் அழைப்புகளைக் கண்டு அனைவரும் எரிச்சல் அடைந்தனர், கூடவே கேவலாமாகப் புறக்கணித்தனர். உச்சபட்சமாக பள்ளியில் படிக்கும் மகனோடு மிகக் கடுமையான சண்டை ஏற்பட்டது. உடல் நிலையிலும் கணிசமான அச்சம் ஏற்பட்டது.

எனக்குத் தெரியவந்தபோது, அந்த ஏஏ நண்பர் மூலம் தமிழகத்தின் பெரு நகரம் ஒன்றில் உள்ள ஏஏ ஆர்வலர் ஒருவருடைய தொடர்பைப் பெற்று வழங்கினேன். அவரை சென்று சந்தித்தனர். அவர் அரசு உயர் பதவியில் இருந்தவர், குடியிலிருந்து மீண்டவர். சுமார் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு, கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஒப்புதல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.

வரும் வழியில் எதுவும் பேசமால் ஆழ்ந்த யோசனையில் இருந்தவர், அடுத்த நாள் காலை, இனி குடிக்கமாட்டேன் என வீட்டில் அறிவித்திருக்கிறார். அதனைக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரேயொரு உரையாடலில் இப்படி நிறுத்துவது முடியுமா, நிலைக்குமா எனும் சந்தேகம் இருந்தது. ஆச்சரியம் பேராச்சரியமானது. பல மாதங்களாக தொடர்ந்து குடிக்காமல் இருக்கிறார்.

குடி நோயாளியாக இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, ‘குடியை விட்டுடு!’ என அறிவுறுத்தியிருக்கிறார். அவர் ஆச்சரியமாகப் பார்க்க “இதெல்லாம் எப்படி உருவாக்கினேனு உனக்குத் தெரியும். ஒருகட்டத்தில் இது எதுவுமே என் அடையாளமாக இல்ல. குடிகாரன்தான் என் அடையாளமாக இருந்துச்சு. ஊர்ல யார் மதிச்சு, மதிக்காம என்ன, என் பையன் என்னை மதிக்கல. எப்படியாச்சும் நிறுத்தி தொலையனும்னு நினைச்சப்ப, ஒரு கூட்டத்துக்கு வான்னு சொல்லி ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவரு ரெண்டு மணி நேரம் பேசினார். நல்லதுக்குத்தான் பேசினார். பேசினது காதில் விழுந்துச்சு. நான் யாரு, இந்த ஆளெல்லாம் அட்வைஸ் பண்ற நிலையில நான் இருக்கேனேனு மட்டும்தான் மனச அறுத்துச்சு. அப்ப முடிவு பண்ணினேன். நிறுத்திட்டேன். இப்பதான் என் அடையாளம் எனக்கே தெரியுது” என்றிருக்கிறார்.

உடைவதற்கும் உயர்வதற்கும் ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு போதும் எனும் வரிதான் நினைவுக்கு வருகின்றது.

பாட்டல் ராதா படத்தில் ஏஏ கூட்டங்கள், வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டதும், இந்த இரண்டு பேரின் மாற்றங்களுக்கு நினைவுக்கு வந்தன. நான் இதுவரை ஏஏ கூட்டத்தில் கலந்துகொண்டதில்லை. நண்பர் வந்து பார்க்கச் சொல்லி அழைத்துக்கொண்டேயிருக்கிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு பேரின் மாற்றங்களும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

தேவையுள்ளோர், அந்தந்தப் பகுதியில் நடக்கும் ஏஏ அமைப்பின் நிகழ்வுகளை விசாரித்து, தங்களுக்கு சரி வரும் என்று உணர்ந்தால், நம்பிக்கையிருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். குடி நோயிலிருந்து மீள்வது சிலருக்கு உடனே நிகழலாம், சிலருக்கு ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

குடியில் சிக்குண்டு தவிப்போரைப் புறந்தள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களாக, நோயாளிகளாகக் கருதி, அவர்களுக்குப் பொருத்தமான, சரியான உதவியைப் பெற்றுக் கொடுத்துவிடுதல் அனைவருக்குமான விடுதலையாக இருக்கும்.

- ஈரோடு கதிர்



.

Mar 23, 2025

நிகழ்காலத்தின் புன்னகை


 ஒவ்வொருவருக்கும் நட்பும் உண்டு பகையும் உண்டு. சில நட்புகள் எப்படி உருவானது என்றே தெரியாது, அதேபோல்தான் சில பகைகளும். ஏன், எப்படி, எதற்காக உருவானது எனத் தெரியாமலே அதன் போக்கில் வளர்ந்து நிற்கும். பகை என்றதும் நாடுகளுக்கு இடையில் நிகழும் யுத்தம், மனித உறவுகளுக்கு இடையில் உருவாகும் பிரிவு என்றெல்லாம் எளிதாகத் தோன்றிவிடலாம். இது அம்மாதிரியான பகை குறித்து அல்ல. தம்முடன் மற்றும் தமக்குள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பகை குறித்தே.


தமக்குள் பகையா எனும் கேள்வி வரலாம். ஒருவர் நினைப்பதற்கும் - செய்வதற்கும், விரும்புவதற்கும் - அடைவதற்கும், இருப்பதற்கும்- வாழ்வதற்கும் இடையே இயல்பாக ஏற்படும் முரண், தொடர்ந்து வளரத் தொடங்கினால் அது வேர் விட்டு வளர்ந்து பகையென கிளை பரப்பிவிடும்.

சற்று சிந்தித்துப் பார்த்தால், நமக்குள் ஏற்பட்ட முரண்கள், முரண்களாக மட்டுமே இருக்கின்றனவா அல்லது பகைகளாக மாறிவிட்டவனா என்பது புரிந்துவிடும். பலர் என்னிடம் உரையாடும்போது, அவர்களை அறியாமல் வெளிப்படுத்துவது, அவர்களுக்கு அவர்களோடு இருக்கும் பகை குறித்துதான். தாம் வளர்த்து வைத்திருப்பது தம்முடனான பகை என்பதை அறியாமலே பலரும் இருப்பதுண்டு. 

உரையாடும் எல்லாரிடமும், அதனை வெளிப்படையாகப் புரியும்படி உணர்த்திவிட முடிவதில்லை. காரணம், அதனைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை என்பதாகவே உணர்த்துவார்கள். நேரம் இல்லை என்பது மிக எளியதொரு தப்பித்தல். புரிந்துகொள்ள முடியாதது என்பது பெரும்பாலும் நேரம் தொடர்பானது கிடையாது. மனம், அறிவு மற்றும் தேடல் தொடர்பானது.

சமீபத்தில் ஒரு மாலை நேரம், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றினை முடித்துவிட்டு, வாகனத்திற்கு வந்தேன். வாகனத்தை இயக்கும் முன், சில மணி நேரமாக அணைத்து வைத்திருந்த இணையத்தை உயிர்ப்பித்தேன். இடைப்பட்ட நேரத்தில் அனுப்பப்பட்டு காத்திருப்பில்  இருந்த சொற்கள் வந்து விழத் தொடங்கின. சொற்கள் என்பவை செய்திகள், தகவல்கள், விசாரிப்புகள், கேள்விகள் மற்றும் பதில்கள் என பல வடிவம் கொண்டவை. அவற்றில் தேவையில்லாதவை சில. ஆனாலும் அவை நம்மை வந்து சேரத்தானே செய்யும். அப்படி வந்து சேர்வதை எந்த மட்டத்தில் நிறுத்துவது என்பது அவரவர் தெரிவு. வந்திருந்தவற்றை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டவைகளில் ஏறத்தாழ எல்லாமே வீட்டை அடைந்த பிறகு, வாசித்தால் போதும். ஆனால் ஒன்று மட்டும் கவனத்தை ஈர்த்தது. அது சில வாரங்களுக்கு முன்பு உரையாடல் தொடங்கியவரிடமிருந்து வந்திருந்தது. திறந்தேன்.

”சார் கொஞ்சம் நாளா பல நேரங்களில் வாழ்க்கையே தோல்வி அடைந்துவிட்டது அப்படின்னு பயமா இருக்கு சார். இந்த எண்ணம் போவதற்கு என்ன செய்வது சார்!”

அவருக்கு சவால் மற்றும் தோல்வி இருப்பது உண்மைதான். முதல் வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். நேரம் இருந்தால் பேசலாம் என்று பதிலளித்துவிட்டு புறப்பட்டேன். சில நிமிடங்களில் அழைப்பில் வந்தார். அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், சொல்லாமல் பொதுவான உரையாடலாக ஆரம்பித்தேன்.

அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், பொதுவான என்னுடைய கேள்விகளும், , அதற்கு வந்த பதில்களுமென உரையாடல் தொடர்ந்தது. தாம் அனுப்பியது குறித்து நான் நேரடியாக எதுவும் கேட்கவில்லையே என்ற சிந்தனை அவருக்குள் இருந்திருக்கலாம். அதை உரையாடுவதுதான் என் நோக்கமாக இருந்தாலும், அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்தவாறு, அதனைத் தொடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். சில காலமாக அவரைக் கவனித்த வரையில் இரண்டு செயல்களை நான் உணர்ந்திருந்தேன். 

ஒன்று, தன்னை தொடர்ந்து கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குள் புதைத்துக்கொள்வது. குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவம். இன்று வாழும் சூழல் அந்தக் குழந்தைப் பருவத்திற்கு முற்றிலும் நேரெதிரானது. இது அவருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானதுதான். இந்த நிகழ்காலம் அவருக்கு அவ்வளவாக பிடிக்காமலும் இருக்கலாம். என்னிடம் பகிர்ந்தவரையில் அவரின் நிகழ்காலத்தில் சில இயலாமைகள், தோல்விகள் மற்றும் காயங்கள் உண்டு. சொல்லப்படாதவை இன்னும்கூட இருக்கலாம். 

அப்படியான காரணங்களால், நிகழ்காலத்தில் இயங்குவதைவிட, நிகழ்காலத்தை எதிர்கொள்வதைவிட, ஏதோ ஒருவகையில் கடந்த காலத்தின் அவருக்குப் பிடித்ததொரு தருணத்தில் புதைத்துக்கொள்வது சற்றே சமாதானத்தைக் கொடுத்திருக்கலாம். இம்மாதிரியான சமாதானம், ஆசுவாசங்களுக்காக செய்ய வேண்டாத பலவற்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்து வருவோம்.

அவரிடம் நான் அறிந்த இன்னொன்று, தன்னுடைய நிகழ்காலத்தை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள். அவற்றில் ஒருவித இயலாமை, சோகம், இறுக்கம், புதிர் தன்மை, தெளிவற்ற நிலை, இருண்மை தனித்தோ பிணைந்தோ இருப்பதுண்டு. பெரும்பாலும் வலிக்குள் அமிழ்த்தி, இருளைக் கயிறாக்கி இழுக்க முயற்சிப்பதுபோல் இருக்கும். அங்கிருந்து அடையாளமற்ற ஏதோ ஒன்றுக்கு தகவல் பகிரும், சவால் விடும் முனைப்பிருக்கும்.

அவரின் அந்த இரண்டு இயல்புகளையும் தொடாமல், உரையாடலைத் தொடர்கிறேன். உரையாடல் என் வசம் நீடிக்க, சிறிது நகைச்சுவை மற்றும் கேள்விகளைக் கொண்டு நகர்த்துகிறேன். உரையாடல் பலம் அடைந்ததும், அவர் எதிர்பாராத கணத்தில் நிகழ்காலத்தைவிட கடந்த காலத்தில் உழல்வதில், ஒருவித இருண்மைக்குள் தன்னை அடைப்பதில் இருக்கும் வசதிகள் யாதென கேட்டேன். சரியாக நாடி பிடித்துக்கேட்டது, சற்றே வியப்பினையோ, மெல்லிய அதிர்ச்சியையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

எதிர்பார்த்தவிதமாகவே பதில்கள் வந்தன. எதிர்பார்த்த விதமாக ஒன்று அமைகின்றதென்றால் அலைவரிசை இசைவாகிறது என்றுதானே பொருள். பதில்களிலிருந்து கவனமாக, ஆங்காங்கே கேள்விகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். சரியான கேள்விகளை இனம் கண்டடைவது உரையாடல் கலையில் முக்கியமானது.

வாழும் காலம் எத்தகையதெனினும், அதனை முற்றிலுமாகப் புறக்கணித்து விடாமல், எவ்வகையிலேனும் எதிர்கொள்வதே சரி என உணர்த்துவதே என் நோக்கம். காரணம் நிகழ்காலம் என்பது பூரணமான உண்மை. ஓர் உண்மை நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அதனை மறைப்பது, புறக்கணிப்பது மற்றும் இகழ்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. 

அந்த பிடிக்காத உண்மைக்கு எதிர்காலம் சார்ந்த கனவின் வர்ணங்களை சிலர் மட்டுமே பூசுவதுண்டு. பெரும்பாலானோர் நிகழ்காலத்தின் மீது கடந்த காலத்தினை ஒப்பனைகளாகவும், முகமூடிகளாகவும்  அணிவித்து ஒருவிதமாக ஆசுவாசம் அடைந்து விடுவதுண்டு. எதிர்காலத்தின் வர்ணம் பூசுவதுகூட சில நல்ல விளைவுகளுக்கு வாய்ப்பாக அமைவதுண்டு. ஆனால் கடந்த காலத்தில் திருப்தியடைவது நிகழ்காலத்தையும் சிதைக்கும், எதிர்காலத்தையும் நோய்மையானதாக்கும்.

ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும்போது சிந்தனைகள் படபடக்கும். அது சிந்தனைக் கொந்தளிப்பாகவும் மாறும் ஆபத்துண்டு. ஏதோவொன்றை செய்யத்துடிக்கும். அதன் காரணமாக, நிகழ்காலத்தை சொற்களாக்கி, அதன்மீது ஏற்கனவே இருக்கும் ஒவ்வாமையை இருளாக்கி வர்ணமாகப் பூசும்போது, நிகழ்காலம் எளிதாக இருண்மையடைந்துவிடும். இயல்பாகவே அவற்றிலிருந்து இயலாமையும், சோகமும், பரிதாபமும் துர்நாற்றமாக வீசத் துவங்கிவிடும். அதனை நுகர்வதில் நம்மையறியாமல் ஒரு குரூர பிடிப்பு உருவாகிவிடும். நாம் நாமாக இல்லாமல் வேறொன்றாக மாறியிருப்போம். அப்படி வேறொன்றாக மாறுவதை நம்மோடு நாம் பகையில் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

மெல்ல அவருடைய குழந்தைப் பருவ முகமூடியையும், சோக இழையோடும் சொல் வங்கியையும் மாற்றி மாற்றித் தொடுகிறேன். ஒருவேளை அப்படியில்லாமல் வேறு மாதிரியாக இருக்க வேண்டுமென்றால், ‘எப்படி இருந்தால் சரியாக இருக்கும்!’ எனும் கேள்விகளைத் தொடுக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் தந்துவிட முடியாது. நீண்ட பதில்கள் அளிக்கும்போது அந்தப் பதில்களை உள்ளுக்குள் ஒருமுறை நிகழ்த்துவது அல்லது பயிற்சி செய்வது நிகழும். அந்த நிகழ்த்தலும், பயிற்சியும் அந்தந்த கணங்களில்  ஒருவித வாழ்தல்தான்.

அவரின் கடந்த கால நிலைத்தல் மற்றும் சோக இழையோடும் சொல் வங்கி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிகழ்காலம் எனும் உண்மையை திடமாக, நேர்மையாக எதிர்கொள்வது ஏன் சிறந்தது என்பதை உணர்த்துகிறேன். தாமே தம்மோடு பகைத்திருந்ததை எளிய சொற்களில் ஒப்புக்கொள்கிறார். சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் பயண நேரத்திற்குள் அந்த உரையாடல் நிறைவடைந்து விடுகின்றது.

ஒற்றை உரையாடலின் வாயிலாக ஒருவர் முற்றிலும் மாறிவிடுவார் என்று மட்டுமே நான் நம்பி விடுவதில்லை. மாற முடியும் என்பதற்கான விடை மட்டும் ’பளிச்’ என பல நேரங்களில் கிடைத்துவிடும்.  

வேதியியல் பரிசோதனையில் வேதிப்பொருட்களின் அளவை, வர்ணச் சேர்க்கையில் வர்ணங்களின் அளவை ஒவ்வொருமுறை மாற்றும் போதும் ஒவ்வொரு விதமான விளைவு, நிறம் கிடைக்கும். அவை நமக்கு சரியானதாகவும் இருக்கலாம், சரியற்றதாகவும் இருக்கலாம். எந்தவொன்றைச் செய்தாலும், நிச்சயம் அதற்கென்று ஒரு விளைவு இருக்கும். 

பிறரிடமோ, தம்மிடமோ பகை கொள்தல் எளிது, களைதல் கடினம். ஆனால் இயலாதது அல்ல. சற்றே விழித்துக்கொண்டால், சரியான நபரை, தேவையான நேரத்தில் துணை கொண்டால் வாழ்வின் போக்கை ஓரளவு தீர்மானிக்க முடியும்.

உரையாடல் நிறைவடைந்த சில நிமிடங்களில் அவரிடமிருந்து, செய்தி ஒன்று வருகின்றது. திறக்கிறேன். ”சார் கொஞ்சம் நாளா வாழ்க்கை சரியாக போய்க் கொண்டிருக்கிறது சார். இன்னும் மென்மேலும் முன்னேறும் என்று நம்புகிறேன்!”

நிகழ்காலம் புன்னகைத்தது. அந்த நாள் அர்த்தமுள்ளதாக மாறியது.

ஈரோடு கதிர்

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...