Showing posts with label தமிழ் முற்றம். Show all posts
Showing posts with label தமிழ் முற்றம். Show all posts

Mar 23, 2025

நிகழ்காலத்தின் புன்னகை


 ஒவ்வொருவருக்கும் நட்பும் உண்டு பகையும் உண்டு. சில நட்புகள் எப்படி உருவானது என்றே தெரியாது, அதேபோல்தான் சில பகைகளும். ஏன், எப்படி, எதற்காக உருவானது எனத் தெரியாமலே அதன் போக்கில் வளர்ந்து நிற்கும். பகை என்றதும் நாடுகளுக்கு இடையில் நிகழும் யுத்தம், மனித உறவுகளுக்கு இடையில் உருவாகும் பிரிவு என்றெல்லாம் எளிதாகத் தோன்றிவிடலாம். இது அம்மாதிரியான பகை குறித்து அல்ல. தம்முடன் மற்றும் தமக்குள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பகை குறித்தே.


தமக்குள் பகையா எனும் கேள்வி வரலாம். ஒருவர் நினைப்பதற்கும் - செய்வதற்கும், விரும்புவதற்கும் - அடைவதற்கும், இருப்பதற்கும்- வாழ்வதற்கும் இடையே இயல்பாக ஏற்படும் முரண், தொடர்ந்து வளரத் தொடங்கினால் அது வேர் விட்டு வளர்ந்து பகையென கிளை பரப்பிவிடும்.

சற்று சிந்தித்துப் பார்த்தால், நமக்குள் ஏற்பட்ட முரண்கள், முரண்களாக மட்டுமே இருக்கின்றனவா அல்லது பகைகளாக மாறிவிட்டவனா என்பது புரிந்துவிடும். பலர் என்னிடம் உரையாடும்போது, அவர்களை அறியாமல் வெளிப்படுத்துவது, அவர்களுக்கு அவர்களோடு இருக்கும் பகை குறித்துதான். தாம் வளர்த்து வைத்திருப்பது தம்முடனான பகை என்பதை அறியாமலே பலரும் இருப்பதுண்டு. 

உரையாடும் எல்லாரிடமும், அதனை வெளிப்படையாகப் புரியும்படி உணர்த்திவிட முடிவதில்லை. காரணம், அதனைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை என்பதாகவே உணர்த்துவார்கள். நேரம் இல்லை என்பது மிக எளியதொரு தப்பித்தல். புரிந்துகொள்ள முடியாதது என்பது பெரும்பாலும் நேரம் தொடர்பானது கிடையாது. மனம், அறிவு மற்றும் தேடல் தொடர்பானது.

சமீபத்தில் ஒரு மாலை நேரம், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றினை முடித்துவிட்டு, வாகனத்திற்கு வந்தேன். வாகனத்தை இயக்கும் முன், சில மணி நேரமாக அணைத்து வைத்திருந்த இணையத்தை உயிர்ப்பித்தேன். இடைப்பட்ட நேரத்தில் அனுப்பப்பட்டு காத்திருப்பில்  இருந்த சொற்கள் வந்து விழத் தொடங்கின. சொற்கள் என்பவை செய்திகள், தகவல்கள், விசாரிப்புகள், கேள்விகள் மற்றும் பதில்கள் என பல வடிவம் கொண்டவை. அவற்றில் தேவையில்லாதவை சில. ஆனாலும் அவை நம்மை வந்து சேரத்தானே செய்யும். அப்படி வந்து சேர்வதை எந்த மட்டத்தில் நிறுத்துவது என்பது அவரவர் தெரிவு. வந்திருந்தவற்றை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டவைகளில் ஏறத்தாழ எல்லாமே வீட்டை அடைந்த பிறகு, வாசித்தால் போதும். ஆனால் ஒன்று மட்டும் கவனத்தை ஈர்த்தது. அது சில வாரங்களுக்கு முன்பு உரையாடல் தொடங்கியவரிடமிருந்து வந்திருந்தது. திறந்தேன்.

”சார் கொஞ்சம் நாளா பல நேரங்களில் வாழ்க்கையே தோல்வி அடைந்துவிட்டது அப்படின்னு பயமா இருக்கு சார். இந்த எண்ணம் போவதற்கு என்ன செய்வது சார்!”

அவருக்கு சவால் மற்றும் தோல்வி இருப்பது உண்மைதான். முதல் வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். நேரம் இருந்தால் பேசலாம் என்று பதிலளித்துவிட்டு புறப்பட்டேன். சில நிமிடங்களில் அழைப்பில் வந்தார். அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், சொல்லாமல் பொதுவான உரையாடலாக ஆரம்பித்தேன்.

அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், பொதுவான என்னுடைய கேள்விகளும், , அதற்கு வந்த பதில்களுமென உரையாடல் தொடர்ந்தது. தாம் அனுப்பியது குறித்து நான் நேரடியாக எதுவும் கேட்கவில்லையே என்ற சிந்தனை அவருக்குள் இருந்திருக்கலாம். அதை உரையாடுவதுதான் என் நோக்கமாக இருந்தாலும், அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்தவாறு, அதனைத் தொடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். சில காலமாக அவரைக் கவனித்த வரையில் இரண்டு செயல்களை நான் உணர்ந்திருந்தேன். 

ஒன்று, தன்னை தொடர்ந்து கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குள் புதைத்துக்கொள்வது. குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவம். இன்று வாழும் சூழல் அந்தக் குழந்தைப் பருவத்திற்கு முற்றிலும் நேரெதிரானது. இது அவருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானதுதான். இந்த நிகழ்காலம் அவருக்கு அவ்வளவாக பிடிக்காமலும் இருக்கலாம். என்னிடம் பகிர்ந்தவரையில் அவரின் நிகழ்காலத்தில் சில இயலாமைகள், தோல்விகள் மற்றும் காயங்கள் உண்டு. சொல்லப்படாதவை இன்னும்கூட இருக்கலாம். 

அப்படியான காரணங்களால், நிகழ்காலத்தில் இயங்குவதைவிட, நிகழ்காலத்தை எதிர்கொள்வதைவிட, ஏதோ ஒருவகையில் கடந்த காலத்தின் அவருக்குப் பிடித்ததொரு தருணத்தில் புதைத்துக்கொள்வது சற்றே சமாதானத்தைக் கொடுத்திருக்கலாம். இம்மாதிரியான சமாதானம், ஆசுவாசங்களுக்காக செய்ய வேண்டாத பலவற்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்து வருவோம்.

அவரிடம் நான் அறிந்த இன்னொன்று, தன்னுடைய நிகழ்காலத்தை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள். அவற்றில் ஒருவித இயலாமை, சோகம், இறுக்கம், புதிர் தன்மை, தெளிவற்ற நிலை, இருண்மை தனித்தோ பிணைந்தோ இருப்பதுண்டு. பெரும்பாலும் வலிக்குள் அமிழ்த்தி, இருளைக் கயிறாக்கி இழுக்க முயற்சிப்பதுபோல் இருக்கும். அங்கிருந்து அடையாளமற்ற ஏதோ ஒன்றுக்கு தகவல் பகிரும், சவால் விடும் முனைப்பிருக்கும்.

அவரின் அந்த இரண்டு இயல்புகளையும் தொடாமல், உரையாடலைத் தொடர்கிறேன். உரையாடல் என் வசம் நீடிக்க, சிறிது நகைச்சுவை மற்றும் கேள்விகளைக் கொண்டு நகர்த்துகிறேன். உரையாடல் பலம் அடைந்ததும், அவர் எதிர்பாராத கணத்தில் நிகழ்காலத்தைவிட கடந்த காலத்தில் உழல்வதில், ஒருவித இருண்மைக்குள் தன்னை அடைப்பதில் இருக்கும் வசதிகள் யாதென கேட்டேன். சரியாக நாடி பிடித்துக்கேட்டது, சற்றே வியப்பினையோ, மெல்லிய அதிர்ச்சியையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும். 

எதிர்பார்த்தவிதமாகவே பதில்கள் வந்தன. எதிர்பார்த்த விதமாக ஒன்று அமைகின்றதென்றால் அலைவரிசை இசைவாகிறது என்றுதானே பொருள். பதில்களிலிருந்து கவனமாக, ஆங்காங்கே கேள்விகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். சரியான கேள்விகளை இனம் கண்டடைவது உரையாடல் கலையில் முக்கியமானது.

வாழும் காலம் எத்தகையதெனினும், அதனை முற்றிலுமாகப் புறக்கணித்து விடாமல், எவ்வகையிலேனும் எதிர்கொள்வதே சரி என உணர்த்துவதே என் நோக்கம். காரணம் நிகழ்காலம் என்பது பூரணமான உண்மை. ஓர் உண்மை நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அதனை மறைப்பது, புறக்கணிப்பது மற்றும் இகழ்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. 

அந்த பிடிக்காத உண்மைக்கு எதிர்காலம் சார்ந்த கனவின் வர்ணங்களை சிலர் மட்டுமே பூசுவதுண்டு. பெரும்பாலானோர் நிகழ்காலத்தின் மீது கடந்த காலத்தினை ஒப்பனைகளாகவும், முகமூடிகளாகவும்  அணிவித்து ஒருவிதமாக ஆசுவாசம் அடைந்து விடுவதுண்டு. எதிர்காலத்தின் வர்ணம் பூசுவதுகூட சில நல்ல விளைவுகளுக்கு வாய்ப்பாக அமைவதுண்டு. ஆனால் கடந்த காலத்தில் திருப்தியடைவது நிகழ்காலத்தையும் சிதைக்கும், எதிர்காலத்தையும் நோய்மையானதாக்கும்.

ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும்போது சிந்தனைகள் படபடக்கும். அது சிந்தனைக் கொந்தளிப்பாகவும் மாறும் ஆபத்துண்டு. ஏதோவொன்றை செய்யத்துடிக்கும். அதன் காரணமாக, நிகழ்காலத்தை சொற்களாக்கி, அதன்மீது ஏற்கனவே இருக்கும் ஒவ்வாமையை இருளாக்கி வர்ணமாகப் பூசும்போது, நிகழ்காலம் எளிதாக இருண்மையடைந்துவிடும். இயல்பாகவே அவற்றிலிருந்து இயலாமையும், சோகமும், பரிதாபமும் துர்நாற்றமாக வீசத் துவங்கிவிடும். அதனை நுகர்வதில் நம்மையறியாமல் ஒரு குரூர பிடிப்பு உருவாகிவிடும். நாம் நாமாக இல்லாமல் வேறொன்றாக மாறியிருப்போம். அப்படி வேறொன்றாக மாறுவதை நம்மோடு நாம் பகையில் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

மெல்ல அவருடைய குழந்தைப் பருவ முகமூடியையும், சோக இழையோடும் சொல் வங்கியையும் மாற்றி மாற்றித் தொடுகிறேன். ஒருவேளை அப்படியில்லாமல் வேறு மாதிரியாக இருக்க வேண்டுமென்றால், ‘எப்படி இருந்தால் சரியாக இருக்கும்!’ எனும் கேள்விகளைத் தொடுக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் தந்துவிட முடியாது. நீண்ட பதில்கள் அளிக்கும்போது அந்தப் பதில்களை உள்ளுக்குள் ஒருமுறை நிகழ்த்துவது அல்லது பயிற்சி செய்வது நிகழும். அந்த நிகழ்த்தலும், பயிற்சியும் அந்தந்த கணங்களில்  ஒருவித வாழ்தல்தான்.

அவரின் கடந்த கால நிலைத்தல் மற்றும் சோக இழையோடும் சொல் வங்கி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிகழ்காலம் எனும் உண்மையை திடமாக, நேர்மையாக எதிர்கொள்வது ஏன் சிறந்தது என்பதை உணர்த்துகிறேன். தாமே தம்மோடு பகைத்திருந்ததை எளிய சொற்களில் ஒப்புக்கொள்கிறார். சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் பயண நேரத்திற்குள் அந்த உரையாடல் நிறைவடைந்து விடுகின்றது.

ஒற்றை உரையாடலின் வாயிலாக ஒருவர் முற்றிலும் மாறிவிடுவார் என்று மட்டுமே நான் நம்பி விடுவதில்லை. மாற முடியும் என்பதற்கான விடை மட்டும் ’பளிச்’ என பல நேரங்களில் கிடைத்துவிடும்.  

வேதியியல் பரிசோதனையில் வேதிப்பொருட்களின் அளவை, வர்ணச் சேர்க்கையில் வர்ணங்களின் அளவை ஒவ்வொருமுறை மாற்றும் போதும் ஒவ்வொரு விதமான விளைவு, நிறம் கிடைக்கும். அவை நமக்கு சரியானதாகவும் இருக்கலாம், சரியற்றதாகவும் இருக்கலாம். எந்தவொன்றைச் செய்தாலும், நிச்சயம் அதற்கென்று ஒரு விளைவு இருக்கும். 

பிறரிடமோ, தம்மிடமோ பகை கொள்தல் எளிது, களைதல் கடினம். ஆனால் இயலாதது அல்ல. சற்றே விழித்துக்கொண்டால், சரியான நபரை, தேவையான நேரத்தில் துணை கொண்டால் வாழ்வின் போக்கை ஓரளவு தீர்மானிக்க முடியும்.

உரையாடல் நிறைவடைந்த சில நிமிடங்களில் அவரிடமிருந்து, செய்தி ஒன்று வருகின்றது. திறக்கிறேன். ”சார் கொஞ்சம் நாளா வாழ்க்கை சரியாக போய்க் கொண்டிருக்கிறது சார். இன்னும் மென்மேலும் முன்னேறும் என்று நம்புகிறேன்!”

நிகழ்காலம் புன்னகைத்தது. அந்த நாள் அர்த்தமுள்ளதாக மாறியது.

ஈரோடு கதிர்

Mar 7, 2025

அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு

தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்து வைத்திருக்கும் ஏதோவொன்றிலிருந்து விடுபடாமல் சுமப்பவர்கள், அதே இடத்தில் தேங்கியிருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. காரணம் தாம் நம்பிய, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தவொன்றிலிருந்தும் விடுபடுதல் அத்தனை எளிதல்ல. 

"கிட்டாதாயின் வெட்டென மற" எனும் ஔவையின் வாக்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எத்தனையோ இடங்களில் எளிதில் விடுபட உதவிய மந்திரம் அது. சொல்வதற்கு எதுவும் எளிதுதான். ஆனால் நிகழ்த்துவதென்பது அத்தனை எளிதல்ல என்பது திருவள்ளுவர் கூறியதை வைத்துப் பார்த்தால் இரண்டாயிரமாண்டு அனுபவம் நமக்கு. 

தொழில், வேலை, பணம், பதவி, புகழ், உறவு உள்ளிட்ட பலவற்றில் ஏதோவொரு தருணத்தில் விடுபட வேண்டிய, கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்போது மிகச் சரியான, அந்தச் சூழலுக்கு உகந்த முடிவெடுக்க முடியாமல் தடுமாறியதால் ஏற்பட்ட விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும்.

ஏதோவொரு தருணத்தில் எல்லாமும் நமக்கு இணக்கமாக, நமக்கென்றே வாய்த்ததாக இருப்பவை, இன்னொரு தருணத்தில் ஒட்டுமொத்தமாக எதிர்நிலை எடுத்திருக்கும். இணக்கமாக இருந்ததன் கதகதப்பை அனுபவித்ததுபோல், எதிர்நிலைக்குச் சென்றதின் வெம்மையை அத்தனை எளிதில் எதிர்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலுவதில்லை. அதற்கு மிகப் பெரிய திடமும், பக்குவமும், நிதானமும், புரிதலும் தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் பெரும்பாலும் தடுமாறி, உருமாற நேரிடுகின்றது.

சில தொழில்களை மிகப் பெரும் நம்பிக்கையுடன் ஆரம்பித்திருப்பார்கள். ஆரம்பித்தபோது நன்றாக இருந்திருக்கும். காலவோட்டத்தில் பெரிய காரணங்கள் ஏதுமின்றி, சில தொழில்கள் தம் வேகத்தை, திறனை இழந்துவிடும். தொடங்கியவரின் திறமைக் குறைவு, உழைப்புக் குறைபாடு அதற்குக் காரணமாக இருக்க வேண்டியதில்லை. அந்தத் தொய்வு காலத்தின் விளைவு. ஆனால், விரும்பி ஆரம்பித்த அந்தத் தொழில் மீது ஏற்பட்டிருந்த பிணைப்பு, மாற்றி யோசிக்கவோ, சற்று விலகி நின்று பார்க்கவோ அனுமதிக்காது. அதன் காரணமாக விடுபடவோ, வெளியேறவோ தெரியாமல் தொடர்ந்து அதற்குள்ளாகவே உழன்று கொண்டிருக்க வேண்டி வந்துவிடும்.

எதன் ஒன்றிலும் உழல ஆரம்பித்துவிட்டால் நூற்கண்டின் ஒரு முனையை எடுத்துக்கொண்டு மிகக்குறுகிய வட்டத்திற்குள் குறுக்கும் மறுக்கும் ஓடுகின்றோம் என்று பொருள். அவிழ்க்க முடியா சிக்கல் விழுவதைத் தவிர வேறென்ன நிகழும்?. சிக்கல்கள் மிகும்பொழுது, சிக்கல்களால் ஏனையவை முடங்கும்பொழுது, தாறுமாறாக அறுத்தெறிவது தவிர வேறென்ன வழி?

ஏதோவொரு காலத்தில் வேலை கிடைத்திருக்கும், கடையை ஆரம்பித்திருப்பார்கள். ஓர் எல்லையைத் தாண்டி வளரவோ, விரிவடையவோ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தாலும், அதனை ஒப்புக்கொள்ள ஏராளமான தடைகள் உண்டு. ’ஏன் வேலையை விட்டுட்டே? ஏன் கடையை மூடிட்டே?’ எனும் கேள்விகள் வெகுவாகத் தாக்கும் சாத்தியமுண்டு. அந்தத் தாக்குதல் குறித்த அச்சமே பெரும் மனத்தடையை ஏற்படுத்தும். அதே சமயம், அதுவரை செய்த வேலை அல்லது வியாபாரம் மிகவும் பழகிப்போன, வசதியான ஒன்றாக மனதிற்குள் படிந்து போயிருக்கலாம். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வளர்ச்சியில்லாத நிலையில், அதிலேயே தொடர்வதா அல்லது வேறொன்றிற்கு மாறுவதா என முடிவெடுக்க முடியாமல், நிலைமையைக் கடினமாக்கிக்கொள்வோர் மிகக் கணிசமாக உண்டு. 

தொழில், வேலை, வியாபாரம் ஆகியவையாவது வாழ்க்கையோடு மிகுந்த தொடர்புடையதெனச் சொல்லலாம். நம்மைச் சுற்றிலும் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. தொழில்சார் அமைப்புகளும் உண்டு, சேவை அமைப்புகளும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து கிளை பரப்பிய சில சேவை அமைப்புகள், சங்கங்கள் நம் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. அதன் வெவ்வேறு நிலைகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள். சிலர் தம் திறன் என்ன, தம்  இடம் எதுவெனத் தெளிவாக இருப்பார்கள். பலருக்கு அதுவரையிலும் குறிப்பாக தம் குடும்பம் மற்றும் சுற்றத்தில் கிடைக்காததொரு பதவி மற்றும் அங்கீகாரத்தை இம்மாதிரியான அமைப்புகள் எளிதில் வழங்கிவிடும். அதுவொரு போதையாகத் தழுவிப் பிணைந்துகொள்ளும். தொடர்ந்து அதீதமாக ஈடுபடுவது, அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொள்வது, விழாக்களைப் பெரும் பொருட்செலவில் ஏற்று நடத்துவது என தன் பிடிக்குள் மெல்ல மெல்ல அந்த அமைப்புகள் மனிதர்களை கபளீகரம் செய்யும். இதற்காகப் பல லட்சங்களை இன்னும் சொல்லப்போனால் கோடிக்கணக்கான ரூபாய் வரை விரயம் செய்தவர்களைக்கூட அறிவேன். அதன் காரணமாக தொழில், குடும்பம் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் மீது குறைந்தபட்ச கவனம்கூட செலுத்தமுடியாமல் முடங்கி, மிகக் கணிசமான இழப்பினை சந்தித்தவர்கள் உண்டு.

குடும்ப உறவுகள் குறிப்பாக திருமண உறவுகளில் விழும் முடிச்சுகள் அத்தனை எளிதில் அவிழ்க்கப்பட முடிவதில்லை. தமக்குத் துளியும் பொருந்தாத, ஒருபோதும் நிம்மதியை உணர்ந்திடாத இருவர், ஒரே அறைக்குள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இங்குண்டு. அதிலிருந்து விடுபடவேண்டிய நினைப்பே இல்லாதவர்கள் பலர் உண்டு.




மிகத் தன்மையான குடும்பம் அது. ஒரே மகளுக்குத் தேடித்தேடி மாப்பிள்ளை பார்த்து வெகுசிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் பிள்ளைகளின் வாழ்வு அழகியதாகவே தோன்றியது. சில மாதங்கள் கழிந்து, கற்பனை செய்திட முடியாத மாதிரியான சிக்கல்கள் முளைக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் பிள்ளைகளின் உறவு தொடராமல் இருப்பதுதான் நல்லது எனும் முடிவுக்கு எல்லோருமே வருகின்றனர். பெரிய அளவிலான பாதிப்புகள் பெண் பக்கம்தான் விளைந்தன. எனினும் பெண்ணின் அப்பா மிகத் தெளிவாக, நிதானமாக, தேவையான, தங்களுக்கு உகந்த முடிவினை தைரியமாக எடுக்க முனைந்தார்.

உறவுகளாய் இணையும்போது இருக்கும் பிரியம், பரவசம், அன்பு உள்ளிட்ட எதுவுமே பிரியும்போது இருக்காது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனாலும் சம்பந்தி வீட்டாரிடம் ஆச்சரியப்படும் வகையில் மிக நிதானமான உரையாடலைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். ’எப்படியும் பிரிவுதான் இருவருக்கும் நல்லது, கீறல்கள் காயங்கள் எதுவுமின்றி பிரிந்துவிடுவோம். யார் குறித்தும், குற்றம் சொல்வதோ, புகாரோ வேண்டாம். பிரிகின்ற இருவருமே அடுத்ததொரு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும். அதனை மனதில் வைத்து எதுவும் சங்கடமின்றி இயல்பாக விலகிட வழி வகுப்போம்’ என்பதை மிகத் தெளிவாகவும், திடமாகவும் சொல்லிவிட்டார். 

பிரிவும் அவ்விதமே நிகழ்ந்தது. இவருக்கு இருந்த நிதானமும், பக்குவமும், தெளிவும் எதிர்தரப்பிற்கு இல்லை. அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாதுதானே!? ஆங்காங்கே அவர்கள் சொன்னதாக ஏதேதோ காதுகளுக்கு வந்தன. மூன்றாம் மனிதர்கள் கூறிய எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அடர் மௌனம் காத்தார்.  மகளை இதிலிருந்து மீட்டெடுத்து, அவள் மனச் சமநிலை அடைந்ததும், இன்னொரு சரியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட வேண்டுமென்று தீர்க்கமாக இருந்தார். கீறல்கள் இன்றி மகள் விடுபட்டாள். 

அவர்களின் நெருக்கடியான காலகட்டத்திலும் பேச நினைத்திருந்தேன். சூழலும் வாய்ப்பும் அமையவேயில்லை. அத்தனையும் எனக்கு மிக மேலோட்டமாக அவ்வப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மகளின் வாழ்க்கை முறிந்த வலி, வேதனை, பதட்டம் ஆகியவற்றிலிருந்து மீண்டு, மகளின் புதிய வாழ்க்கை குறித்து ஒருவித நிம்மதியோடு இருந்தவர்களிடம், ஆற அமர அமர்ந்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவர்களாகவே கடந்து வந்த அந்தக் கொடூரமான காலத்தைப் பேச ஆரம்பித்தனர். நானாக எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்கு வெளிப்படுத்தத் தோன்றியிருக்கலாம். தங்கள் மனதைக் கீறி எல்லாவற்றையும் கொட்ட ஆரம்பித்தனர். இதுவரை மூடப்பட்டிருந்த புண் திறக்கப்பட்ட வீச்சம் அவர்களின் பேச்சில் இருந்தது. சீழ் வெளியேறியதை உணர்ந்தேன். நிதானமும், தெளிவும், திடமும், நம்பிக்கையும் எத்தனை முக்கியம் என்பதை இன்னொருமுறை உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடந்து வந்த விதம் மிகுந்த மனநிறைவினைத் தந்தது.

விடுபட வேண்டியவற்றிலிருந்து விடுதலையாகாமல் இருப்பதற்கு தலைவிதியோ, சாபமோ காரணமில்லை. முடிவெடுப்பதில் இருக்கும் போதாமையே மிகப் பெரிய காரணம். முடிவெடுத்தலில் நிகழும் மிகப் பெரிய முரண், தனித்து முடிவு எடுக்க வேண்டியபோது, பலரையும் அதற்குள் திணித்துக்கொண்டு குழம்புவது, துணைபுரிகின்றவர்களோடு தீர்க்க வேண்டியதை தனித்து நின்று போராடிக் களைப்படைவது. முடிவெடுத்தல் மிகப் பெரியதொரு கலை. அதனைக் கற்றுக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்வது மற்றும் தேவையெனின் துணை சேர்த்து செயல்படுவது மிக முக்கியம்.

கடந்து வந்துவிட்டவர்களைத் தள்ளி நின்று பார்க்கும்போது, திரைப்படத்தில் ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறிவிடுவதுபோல் கருதி விடுகிறோம். ஆனால் அவர்கள் கடந்து வந்த காலம் என்பது வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள், நொடிப்பொழுதுகள் என அதீதமான நீளம் கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்த வாழ்வில் அதுவொரு பகுதியே. 

கடக்கவே முடியாது என அஞ்சியதை, கடக்க முடியுமா எனத் தயங்கியதை ஏதோவொரு வகையில் கடக்கும்போது, வாழ்வு உடனடியாக வெகுமதி அளித்துவிடுகின்றது. அந்த வெகுமதி நமக்கு நாமே பெருமைகொள்வதோ, மற்றவர்கள் நம்மைக் கண்டு வியப்பதோ அல்ல. அந்த வெகுமதிக்கு நிம்மதியென்று ஒரு பெயருண்டு.

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...