Sep 8, 2015

கீச்சுகள் தொகுப்பு - 59



வனத்திற்குள்ளிருந்து நோக்கும் முழுமதி வானம் ஏன் இத்தனை பெரிதாய் இருக்கின்றது!

-

பைத்தியம் போல் சிரிக்கும் சூழல் வரம்!

-

சட்டத்தை மதிப்பவர்கள் தலையிலும், சட்டத்திற்குப் பயந்தவர்கள் ஹேண்டில்பாரிலும், சட்டத்தை மிதிப்பவர்கள் வீட்டிலும்ஹெல்மெட்டை வைத்துள்ளனர்!

-

பதிலே சொல்லாதவனிடம், ’பதில்கள் இல்லைஎன்று மட்டுமே அர்த்தமில்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியமற்ற நிலையும் இருக்கலாம்.

-

போகின்ற பாதையில் சில நேரங்களில், தெரியாமல் நாம் தட்டும் நரகத்தின் கதவுகள் பூட்டப்படாமலும் இருக்கின்றன.

-

பருமனாக இருக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்தவுடன் பெரும்பாலானோர் உதிர்க்கும் சொற்கள்இவங்கெல்லாம் எப்படித்தான் ஓடி திருடனப் புடிப்பாங்களோ!?”

-

செருப்பு திருடு போய்விட மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நடக்க ஆரம்பிக்கவிடுகதையா இந்த வாழ்க்கைபாட்டு அசரீரியாய் ஒலிக்கத்தொடங்கியது.

-
ஏதோ ஒன்று திரை போட்டிருக்கிறது ஆயினுமென்ன... ஏதோ ஒன்று திரை விலக்கும்!

-

பொறுத்து வெறுத்தவன் மோகம் போல் பொழியத் தொடங்கியிருக்கிறது மழை... .......பொறுத்திருந்து பார்ப்போம் ;)

-

மனப்பாங்கு நடத்தையை மாற்றுகிறது. நடத்தை சிந்தனையை மாற்றுகிறது. சிந்தனை மனப்பாங்கை மாற்றுகிறது!


-

இலங்கையில் பல உணவகங்களில் மிளகாயை உணவாகச் சமைக்கிறார்கள். போனால் போகிறதென்று, அவ்வப்போது அதில் கொஞ்சம் அரிசியையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

-

வேறொன்றும் வேண்டாம் இக்கணத்தில் கைகள் இரண்டிலும் கொஞ்சம் சிறகுகள் முளைத்தல் போதும்!

-

எல்லாச் சூழல்களிலும் அணியவியலாத, நம் குழந்தைகளைக்கூட எட்ட நிறுத்தி அணுக வைக்கும் ஆடைகளுக்குத்தான் பெரும்பாலும் அதிக விலை தருகிறோம்.

-

உடலளவில் வாழ்ந்து மறைந்திட மனிதர்களுக்குக் கால எல்லைகள் உண்டு. மனதிற்குள் விருட்சமாக மறுபிறப்பெடுப்பவர்களுக்கு ஏது காலக்கெடு.

-


வளர்த்த கெடா மார்ல பாயுதுனு சொல்ற மேய்ப்பர்களிடம் கேட்க விரும்பும் ஒரேயொரு கேள்வி. “வெட்டுறதுக்குத்தானே நீங்களும் நீவிநீவி வளர்த்துறீங்க

-

பகிர்கையில் அன்பு பனித்துளியளவுதான்உணர்கையில் மட்டும் வெடிகுண்டாய்!

-

குழந்தைகளின் முத்தத்திற்கு விலை நிர்ணயிக்க, இன்னும் காசு அச்சடிக்கப்படவில்லை!

-

சரியாக மொழி பெயர்க்கப்படாத காதல், வெறும் காமம் என்றே அழைக்கப்படுகிறது.

-

தன்னில் துளிர்க்கும் ஒவ்வொரு இலைக்கும், இடம் வைத்திருக்கத்தான் செய்கிறது மரம்!

-

Sep 1, 2015

நெற்றிக்கண்ணைச் சிமிட்டுபவள்





பெருநகரச் சாலைத்திருப்பத்தில்
எஞ்சியிருக்கும்
ஒற்றைப் புளியமரத்தினடியில்
தோல் சுருங்கிய
நொங்கு விற்கும் தாத்தா
காலைப் பொழுதொன்றில்
பதமாய் அடுக்குகிறார்
லாரியில் வந்திறங்கிய
நொங்குக் குலைகளை

இயற்கையெனவும்
சுவையெனவும்
சூடு தணிக்குமெனவும்
முகத்தில் பூசவெனவும்
குலையிலிருந்து தரித்து
சீவிக் கண் திறக்கிறார்

நொங்குகளும் பொழுதும்
தீர்ந்துபோகும் தருணத்தில்
அவரின் ஆயுளில் ஒரு நாள்
தீர்ந்து போயிருக்கின்றது

கருவைச் சுமந்தபடி
கண்ணீர் வழிய
கடப்பவளை நிறுத்தி
இளம் பச்சையும்
எண்ணைக்கருப்புமாய்
மிஞ்சிப்போன
நொங்கொன்றைச் சீவுகையில்
இட வலக் கண்ணோடு திறந்த
நெற்றிக்கண் மெல்லச் சிமிட்டுகிறது
அவருக்குள் புதைந்திருக்கும்
அவளைப் போலவே!


-

Aug 18, 2015

என்னுரை

      விருட்சங்கள் யாவும் அளவெடுத்து, நாள் குறித்து, குழிதோண்டி, விதையூன்றி, நீர் வார்த்ததில் முளைத்தெழுந்தவைகளல்ல. வான் கிழித்துப் பறந்தேகும் பறவையொன்றின் எச்சம் வழி வீழ்ந்தோ, பிறிதொரு பொழுதில் உண்ணலாமென மரப்பொந்தொன்றில் அணிலொன்று பதுக்கிவைத்து மறந்துபோன பழமொன்று காற்றடிக்கையில் விழுந்ததில் துளிர்த்தெழுந்தவைகளாகவும் இருக்கலாம்.

       என்னுள் இருக்கும் மௌனப் பைகள் சில நேரங்களில் நிரம்பித் தளும்பியதிலும், பல நேரங்களில் தானாக வாய் திறந்ததிலும், அரிதாக எவரேனும் அவிழ்த்து விட்டதிலும் கோர்வையாய்ச் சிதறிய சொற்களைக் கோர்த்ததில், சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆகப்பிடித்தது மௌனமேயெனினும் கருவறை விட்டு ஒவ்வொரு முறையும் வெளியேறத் துடிக்கும் வார்த்தைகளுக்கு வழிவிடுகையில் உணர்ந்திட்ட வலி, வரிவரியாய்த் தலைகோதி வாசிக்கையில் ஆசுவாசப்பட்டு விடுகின்றது. இப்படியாக இந்தச் சொற்களுக்கு பிரசவம் பார்க்காமல், உள்ளுக்குள்ளேயே தேக்கி முடக்கி வைத்திருந்திருந்தால், என்னுடைய பல நாட்களும், சில மணி நேரங்களும் மிச்சப்பட்டிருக்கலாம், ஆனால் நான் மிச்சமிருந்திருப்பேனா!?

       நான்கு தலைமுறைக்கான வாழ்க்கையை தெரிந்தோ, தெரியாமலோ ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பாகவே எழுத்து எனக்குக் கைவசப்பட்டது. நினைவுகளில் சிலிர்க்கவும், நிகழ்காலத்தில் வாழவும், எதிர்காலத்தில் நம்பிக்கைகொள்ளவுமென எல்லாக் கதவுகளையும் எழுத்துகொண்டே நான் திறந்து கொண்டிருக்கிறேன். சுவாசிக்கும் காற்று போலவே மிக இயல்பாக எழுத்தினை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். பொதுவாக இரவுகள் வெவ்வேறானவை. குளிரானவை, அடைமழை போர்த்தியவை, வெம்மை சூழ்ந்தவை, அரிதாய் வெளிச்சம் புகுத்தப்பட்டவை. அப்படியான இரவுகளில் ஆழ்ந்த நித்திரையின் முடிவாய் விடியலொன்று தரும் சுகத்திற்கு நிகரான விடுபடுதலை ஒவ்வொரு கட்டுரைகளின் நிறைவிலும் நான் சுகித்திருக்கின்றேன்.

       கணினியோடு கடிமணம் புரிந்து ஈரெட்டு ஆண்டுகள் கழித்துத்தான், கணினி வழியே எண்ணங்களை எழுத்தாக்கி அதை உலகத்தின் பார்வைக்குப் பரிமாற முடியுமென்பதை அறிந்து கொண்டேன். முதன் முதலாய் ஒரு வலைப்பக்கம் உருவாக்கி, ஒரு சேர கொஞ்சம் வரிகள் கோர்த்து அதை உலகின் பார்வைக்கு அனுப்பிட்டு நகம் கடித்த முன்னிரவுப் பொழுதொன்று இப்போதும் பசுமையாய் நினைவில். சொற்களிலிருந்து வாக்கியங்களுக்கு முன்னேறி, வாக்கியங்களிலிருந்து பத்திகளுக்கு நகர்ந்து, அங்கிருந்து பக்கங்களைத் தாண்டும் கனத்தில் ஓர் கனவிருந்தது. இப்படியாக எழுதுபவைகளில் இருபத்தைந்து படைப்புகள் வந்தவுடன், அவற்றைத் தொகுத்து அச்சிலேற்றி அழகுபார்த்து விடவேண்டுமென்பதுதான் அந்தக் கனவு. இருபத்தைந்தினைக் கடந்த வேகம், கனவினைக் கரைத்திருந்தது. அதன்பின் ஒருபோதும் புத்தகம் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. காலமும் அடர் மௌனத்தோடு காத்திருந்தது.
 
 


       எந்தக் கணத்தில் அந்த முடிவினை எடுத்தேனென, சரியாக நினைவுபடுத்த இயலவில்லை. ஆனால் ”ஏன் புத்தகம் வெளியிடல?” என திசைதோறும் வருடிய கேள்விகளுக்கு, என்னிடமிருந்த ஒற்றை மழுப்பல் பதில் எனக்கே சலித்த கணமொன்றில், நண்பர் வேடியப்பன் தமது டிஸ்கவரி பேலஸ் வெளியீடாகக் கொண்டுவர விரும்பியதுதான் ”கிளையிலிருந்து வேர் வரை”. செம்மையாகச் செய்து எனக்கொரு புது அடையாளத்தை அளித்த வேடியப்பனுக்கு அன்பும் பிரியங்களும்.

       எழுத்தின் ருசி உணர்த்திய நட்புகளுக்கும், கட்டுரைகளைத் தெரிவுசெய்து, பிழைதிருத்தம் செய்த தோழமைகளுக்கும், அணிந்துரையால் அலங்கரித்த படைப்பாளிகளுக்கும், எப்போதும் துணையிருக்கும் குடும்ப உறவுகளுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளில்லையென்பது நகைமுரண் தான்.

       ஆனாலும் சொல்வேன் உங்கள் அனைவரின் மீதும் எப்போதும் எனக்கு உண்டு அன்பும் பிரியமும்!

பிரியங்களுடன்
கதிர்


*
கிளையிலிருந்து வேர் வரை - என்னுரை

Jul 9, 2015

மௌனக் கூடு





அதுவொன்றும் சுயம்புவாய்
முளைத்த மௌனமல்ல
விரும்பியும் விரும்பாமலும்
நாமிட்ட விதைகளில்
உறவின் வெளியெங்கும்
விளைந்து படர்ந்திருப்பதுதான்

கனத்து நிற்கும்
மௌனத்தின் இடையே
சொற்களை விழுங்கிக்கொண்டே
ஒரு வழிப்பாதைகளில்
பயணித்திருக்கின்றோம்

மௌனத்தின்
பிரகாசத்தில் கண்கூசியும்
வெம்மையில் வாடியும்
இருளில் தடுமாறியும்
இறுக்கத்தில் குழைந்தும்
கடந்துகொண்டிருந்த கணத்தில்
அந்த மௌனத்தின் ஓட்டில்
அத்தனை விசையாய்
தட்டியிருக்க வேண்டாம்

இப்போது விரிசல் விடும்
ஓட்டிலிருந்து எது வந்தால்
உனக்கும் எனக்கும்
உகந்தாக இருக்கும்!?

-


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...