Showing posts with label என்னுரை. Show all posts
Showing posts with label என்னுரை. Show all posts

Feb 1, 2017

தூரிகைத் தீண்டல்கள்



தம் எச்சில் நாவால் அன்பைத் தடவும் ஒரு செல்ல நாய் குட்டியின் பிரியத்தில், நம்மீது தெளிக்கப்படும் ஏதோவொரு வசவில், நிகழ்த்திவிட்டு நகம் கடிக்கும் பிழைகளில், உறவுகளோடு பசியாறும் காக்கையைக் காணும் கணத்தில், விபத்திலிருந்து மயிரிழையில் தப்பித்த அதிர்வில், கவலையில் வாடியிருக்கையில் கோர்க்கும் பிரியமான விரல்களில், சுருக்கெனத் தைக்கும் கவிதையில், சிறுகதையொன்றின் மிரட்டும் புள்ளியில், விக்கித்து விழியோரம் நீர் சுமக்க வைக்கும் திரைப்படக் காட்சியொன்றில் என இந்த வாழ்க்கையை நாம் சுவாரஸ்யமாக்கிக் கொண்ட கணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

எதையும் தொடங்கவும் நிறைவாக்கவும் ஒரு ஒற்றைச் சொல், ஒற்றைப் பார்வை, ஒற்றைத் தீண்டல், ஒற்றை அசைவு, ஒற்றை உடல்மொழி போன்று ஏதோ ஒருஒற்றைபோதும். ”வாழ்க்கை, கனவுகளைவிட மிக அழகானதுஎனும் திரைப்பட வரியொன்றை வேரோடு பிடுங்கி எனக்குள் ஊன்றிக்கொண்ட கணத்திலிருந்துதான் வாழ்தல் அறம் என்பதை இன்னும் அழகாய் உணரத் தொடங்கினேன். உணர மறந்த வாழ்க்கையின் மெய்யான அழகை மீண்டும் மீண்டும் தீண்டிப் பார்க்கத் தூண்டிக் கொண்டேயிருக்கும் சொற்கள் அவை.

வாழ்க்கையின் நெசவில் ஏதோ ஒரு இழை, தேடித்தேடி பல்வேறு மொழிப் படங்களைப் பார்க்கும் ஆர்வமாய் அமைந்துபோனது. பொழுது போக்குவதற்காக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு வாய்த்ததில்லை. பொழுதை ஒதுக்கிப் பார்க்கும் ஆர்வம் அமைந்தது என்னளவில் வரமே. உலகை எட்டிப் பார்க்க முனைந்ததில் திறக்கப்படாமல் கிடந்த சன்னல்கள் சில திறந்தன. ஆங்கிலம், மலையாளம், இந்தி தவிர்த்த பிற மொழிப் படங்கள் பார்ப்பதில் எனக்கு நூற்றியொரு சத மொழிக்குருடு உண்டு. எனினும் அந்த இருண்மையால் எதையும் இழந்துவிட்டதாக நான் கருத விரும்பவில்லை. அது திரைமொழியின் பலம். காட்சிகளின் வலுவில், திரைக்கதையின் தெளிவில், பாத்திரங்களின் மிளிர்வில், துணைத் தலைப்புகளின் உதவியில் நான் கண்ட படங்கள் பலவற்றிலிருந்து வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை மீட்டெடுத்துக் கொள்ள முடிந்தது. அந்தக் கணங்கள் யாவும் நானும் நீங்களும் வாழ்ந்ததும், வாழ்வதும், வாழப்போவதுமானவை.

வசனம், நிகழ்வு, பார்வை என ஏதேனும் ஒன்று இடைவிடாது தன் அணைப்பிற்குள் நம்மை அழைத்துக் கொண்டேயிருக்கின்றது. விரித்த இரு கைகளுக்குள் அதன் கதகதப்பு வேண்டியோ, அதன் அனுபவம் வேண்டியோ நாம் கட்டுண்டு போகிறோம். அப்படியான சூழல்களிலெல்லாம் திரைக்கதையின் பாத்திரங்கள் நம்முடனோ அல்லது நமக்குள்ளோ வாழ்வதுண்டு. அவர்களிடமிருந்து நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம், தோள் சாய்ந்து அழலாம், வாரியணைத்து அன்பு பகிரலாம், கண்களிலிருந்து கருணையைக் களவாடலாம். இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளலாம்

வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளலாம் என உணர்ந்த கணத்தில்தான் திரைக்கதையின் இழைகளையும் அனுபவங்களின் இழைகளையும் கோர்த்து கட்டுரைகளாக்கப் பழகியிருந்தேன். அப்படி பாத்திரங்களை மெல்ல நகர்த்தி அன்றாடங்களின் அருகே நிறுத்திக் கொண்டதில் முளைத்த கட்டுரைகளின் தொகுப்பே இந்தஉறவெனும் திரைக்கதை”. இவற்றில் நான் அறிந்த, கேட்ட, பார்த்த, பழகிய, கவனித்த பலர் உண்டு. அந்தப் பலரில் சில முகமூடிக்குள் நானும்கூட உண்டு. வாசித்தபோது தாமும் அதில் உண்டென நெகிழ்ந்து, மகிழ்ந்து, கலங்கி, திடுக்கிட்டு, உரிமை கொண்டாடியவர்களும் உண்டு.



இங்கு எல்லோரிடமும் கை கொள்ளா அளவிற்கு கதைகளுண்டு. அந்தக் கதைகள் யாவிலும் ஒரு புள்ளி அளவிற்கேனும் உண்மையிருக்கும். அந்தப் புள்ளியிலிருந்துதான் கற்பனைகள் துளிர்க்கின்றன. அதன் வேர் பாய்ச்சலுக்கும், கிளை விரித்தலுக்கும் எல்லைகளும் வேலிகளும் எவரும் கட்டுவதில்லை. கதை மாந்தர்களுக்கும், நிஜ மாந்தர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பே அந்த உண்மையெனும் புள்ளிதான். அந்த உண்மையின் பலமே ஒன்றோடு ஒன்றைப் பிணைக்கின்றது.

பொதுவாக யாரேனும் உடனிருக்கும்போது எனக்கு ஒரு வரிகூட எழுதவியலாது எனும்  மனத்தடை உண்டெனக்கு. ஆனால் நிர்பந்தங்கள் நம்மையே நமக்குக் காட்டும் என்பதுபோல், தொடரின் ஒரு கட்டுரையை வெளிநாட்டுப் பயணமொன்றில் பலர் சூழ்ந்து புழங்கும் விமான நிலையக் காத்திருப்பில் எழுதியதன் மூலம் உடைந்துபோனது. இப்படிப் பல அனுபவங்களை நான் இந்தக் கட்டுரைகளின் வாயிலாக எடுத்துக் கொண்டேன்.

இந்தக் கட்டுரைகள் எழுதும் காலத்தில் எனக்கு சவாலாக இருந்தவர் ஓவியர் ஞானப்பிரகாஷம் ஸ்தபதி. மிரட்டும், மயக்கும், நெகிழவைக்கும் அவரின் ஓவியங்களுக்கு நிகராக நான் சொற்களை அடுக்கியிருக்கிறேனா என்ற பதட்டத்தை இடைவிடாது கொடுத்தவர்.

திரைக்கதைகளிலிருந்து துளி மையெடுத்து, நான் கடந்த, காணும் வாழ்க்கையோடு குழைத்து விரல்களில் தொட்டு கிறுக்கிக் கொண்டிருந்தவனிடம், வர்ணங்களையும் தூரிகையும் கொடுத்து நம்பிக்கையூட்டிய குங்குமம் முதன்மை ஆசிரியர் தி.முருகன் அவர்கள் வைத்த நம்பிக்கை மட்டுமே இந்தக் கட்டுரைகள்.

தான் கருதியதை விரும்பியதை, அளிக்க வேண்டியதை எந்தவிதச் சமரசங்களுமின்றி வழங்கிய அனைத்து திரைக்கதை ஆசிரியர்களுக்கும், இயக்குனர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எத்தனை எழுதி ஓய்ந்தாலும் தீர்ந்து போகாத கதைகளும், மனிதர்களும் இங்கு எப்போதுமுண்டு. அதனாலென்ன, இன்னும் காலம் இருக்கின்றது.


ப்ரியங்களுடன்
ஈரோடு கதிர்

Jan 25, 2017

சேமிப்பிலிருக்கும் சில சொற்கள்



கடந்தோடிய காலம் தன்னோடு அரவணைத்திருந்த உணர்வுகளின் கதகதப்பையும், கனத்திருக்கும் எண்ண மேகத்திலிருந்து நழுவும் சிறு தூறலின் குளிரையும் எத்தனை காலம் தான் மனதெங்கும் தூக்கிச் சுமக்கவியலும். தூக்கிச் சுமக்கும் நினைவுகளில் உயிர்க்கும் சிந்தனைகளைத் தோள் சாய்க்கையில், பாந்தமாய் அணைத்து வருடுகையில் விரலெங்கும் ஒட்டும் ஈரமான சொற்களின் தொகுப்போடு உங்கள் முன் நிற்கிறேன்.

தன் விருப்பம் போல், தன்னியல்பில் வாழ்க்கைச் சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கு ஓட முடிவதும், ஓட முடியாமல் போவதும்தான் இங்கிருக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டு சில நேரங்களில் திறனை நிரூபிக்கும் விளையாட்டு போலவும், சில நேரங்களில் விளையாட்டின் வெற்றி தோல்விகள் மூலம் ஏதோ ஒன்றை ஈட்ட எத்தனிக்கும் முயற்சி போலவும் காட்சியளிக்கின்றது. யார் யாரோ விளையாட, அவர்களின் வெற்றி தோல்விகள் மூலம் பலன் ஈட்டுவது, ஒருவகைப் பந்தயம் அல்லது சூதாட்ட வடிவமாகின்றது. இந்த வாழ்க்கை விளையாட்டில் நாம் இருப்பதும், நம்மைச்சுற்றி பல்வேறு பாத்திரங்கள் நிரப்பப்பட்டிருப்பதும் உண்மையிலேயே சுவாரசியமானதுதான்.

கற்றுக்கொள்ளல் எனும் தேடல் முதுகில் தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சலனமற்று அமைதியாய்க் கடக்க முடிவதில்லை, எதோ ஒன்றை மனம் இடைவிடாது தேடுகிறது. கற்றுக்கொள்வதற்கென இங்கு அச்சடித்த பாடங்களும், போதனைத் திட்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்தத் தேடலை செம்மையாகப் பூர்த்தி செய்பவர்கள் சிலர். அதில் மிக முக்கியமானது காலம். கரைந்தோடும் வாழ்நாளில் இந்தக் கணத்தை அர்த்தமுள்ளதாக்கி இருக்கும் காலத்தைத்தான் எப்போதும் முதலில் வணங்க விரும்புகிறேன். அடுத்து தங்கள் ஒவ்வொரு அசைவுகளாலும் கற்றுக் கொடுத்தபடியிருக்கும் சக மனிதர்கள். சற்றே பார்வையை விசாலமாக்கிக் கொண்டால், திகட்டத் திகட்ட பாடமாய் வந்து குவிகிறார்கள். நிறைய நிறைய என நிறைவாய்க் கற்றுக் கொண்டேயிருக்கலாம். காலடியில் அமைதியாய் இருக்கும் புல் தொடங்கி, தலைக்கு மேல திரண்டு நிற்கும் மேகம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் கற்றுக் கொடுத்தபடியே இருக்கின்றன.

அவ்வப்போது கற்றுக் கொண்டதிலிருந்து நிர்பந்தமாகவோ, விருப்பமாகவோ எழுதிய தேர்வுகளின் தொகுப்பே பெயரிடப்படாத புத்தகம்”. விடைகள் சரியோ தவறோ என்ற குழப்பங்கள் இருந்தாலும், ஏதேனும் ஒன்றை எழுதிக் கொண்டேயிருப்பதில் இருக்கும் பெரு விருப்பமும், வியப்பும், எழுதியவுடன் இறக்கி வைக்கும் தளர்வான நிம்மதியும் அலாதியானதொரு உணர்வு.  



என் உணர்வுகளை ஒரு விதையாய் தன்னுள் தாங்கி, செம்மையாய் வளர்த்தெடுக்கும் நம் தோழிஇதழுக்கும், இதழை நடத்தி வரும் சக்தி மசாலா குழுமத்திற்கும், இதழ் ஆசிரியர் திரு..செ.ஞானவேல் அவர்களுக்கும் பேரன்பும் பெரும் பிரியங்களும். வேர்களையும், கிளைகளையும் அவ்வப்போது அனுமதித்த அந்திமழை, தி இந்து இணையம், தமிழின் அமுதம் இதழ்களுக்கும் அன்பு நிறை நன்றிகள்.

பிரியத்தின் வழி நின்று எனது இரண்டாவது நூலான இதனையும் வெளியிட முன்வந்திருக்கும் இனிய நண்பர் வேடியப்பன் அவர்களுக்கு நெகிழ்வான பிரியம் நிறை நன்றிகள்.

இந்த கட்டுரைகளின் சொற்களுக்குள் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ உறைந்திருக்கும் என் மகள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் என் கூடுதல் நேசமும் வாழ்த்துகளும். வாசித்த சொற்கள்தான், வாசித்த நடைதான், ஆயினும் வாசிப்போம், உடனிருப்போம், ஊக்குவிப்போம் எனும் மனது படைத்த உறவுகளுக்கும், தோழமைகளுக்கும், வாசக மனங்களும் அன்பும் நன்றிகளும்.

இந்தப் பயணத்தில் இடையிடையே நாம் சந்தித்துக் கொண்டேயிருப்போம்! 

பிரியங்களுடன்
-கதிர்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...