வனத்திற்குள்ளிருந்து நோக்கும் முழுமதி வானம் ஏன் இத்தனை பெரிதாய் இருக்கின்றது!
-
பைத்தியம் போல் சிரிக்கும் சூழல் வரம்!
-
சட்டத்தை மதிப்பவர்கள் தலையிலும், சட்டத்திற்குப் பயந்தவர்கள் ஹேண்டில்பாரிலும், சட்டத்தை மிதிப்பவர்கள் வீட்டிலும் ’ஹெல்மெட்’டை வைத்துள்ளனர்!
-
பதிலே சொல்லாதவனிடம், ’பதில்கள் இல்லை’ என்று மட்டுமே அர்த்தமில்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியமற்ற நிலையும் இருக்கலாம்.
-
போகின்ற பாதையில் சில நேரங்களில், தெரியாமல் நாம் தட்டும் நரகத்தின் கதவுகள் பூட்டப்படாமலும் இருக்கின்றன.
-
பருமனாக இருக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்தவுடன் பெரும்பாலானோர் உதிர்க்கும் சொற்கள் “இவங்கெல்லாம் எப்படித்தான் ஓடி திருடனப் புடிப்பாங்களோ!?”
-
செருப்பு திருடு போய்விட மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நடக்க ஆரம்பிக்க ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ பாட்டு அசரீரியாய் ஒலிக்கத்தொடங்கியது.
-
ஏதோ ஒன்று திரை போட்டிருக்கிறது ஆயினுமென்ன... ஏதோ ஒன்று திரை விலக்கும்!
-
பொறுத்து வெறுத்தவன் மோகம் போல் பொழியத் தொடங்கியிருக்கிறது மழை... .......பொறுத்திருந்து பார்ப்போம் ;)
-
மனப்பாங்கு நடத்தையை மாற்றுகிறது. நடத்தை சிந்தனையை மாற்றுகிறது. சிந்தனை மனப்பாங்கை மாற்றுகிறது!
-
இலங்கையில் பல உணவகங்களில் மிளகாயை உணவாகச் சமைக்கிறார்கள். போனால் போகிறதென்று, அவ்வப்போது அதில் கொஞ்சம் அரிசியையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
-
வேறொன்றும் வேண்டாம் இக்கணத்தில் கைகள் இரண்டிலும் கொஞ்சம் சிறகுகள் முளைத்தல் போதும்!
-
எல்லாச் சூழல்களிலும் அணியவியலாத, நம் குழந்தைகளைக்கூட எட்ட நிறுத்தி அணுக வைக்கும் ஆடைகளுக்குத்தான் பெரும்பாலும் அதிக விலை தருகிறோம்.
-
உடலளவில் வாழ்ந்து மறைந்திட மனிதர்களுக்குக் கால எல்லைகள் உண்டு. மனதிற்குள் விருட்சமாக மறுபிறப்பெடுப்பவர்களுக்கு ஏது காலக்கெடு.
-
”வளர்த்த கெடா மார்ல பாயுது”னு சொல்ற மேய்ப்பர்களிடம் கேட்க விரும்பும் ஒரேயொரு கேள்வி. “வெட்டுறதுக்குத்தானே நீங்களும் நீவிநீவி வளர்த்துறீங்க”
-
பகிர்கையில் அன்பு பனித்துளியளவுதான்… உணர்கையில் மட்டும் வெடிகுண்டாய்!
-
குழந்தைகளின் முத்தத்திற்கு விலை நிர்ணயிக்க, இன்னும் காசு அச்சடிக்கப்படவில்லை!
-
சரியாக மொழி பெயர்க்கப்படாத காதல், வெறும் காமம் என்றே அழைக்கப்படுகிறது.
-
தன்னில் துளிர்க்கும் ஒவ்வொரு இலைக்கும், இடம் வைத்திருக்கத்தான் செய்கிறது மரம்!
-
2 comments:
மீண்டும் மீண்டும் படித்தாலும் அலுக்காத எழுத்து வரம்.இப்ப புரியுது எங்கிருந்து இன்ஸ்பிரேஷன் வருதுன்னு.
அருமை
Post a Comment