Sep 9, 2013

”ஹைபிரிட்” விநாயகர்

சமீப ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி தினங்களில் பார்க்கும் வண்ணமயமான விநாயகர் எனக்கெல்லாம் சற்றுமே பரிச்சயம் இல்லாதவர். எங்களுக்கு ஊருக்குள் இருக்கும் பிள்ளையார்தான் பழக்கம். பிள்ளையார் என்பதைவிட அவருக்கு எளிமையான பெயர் ”பிள்ளாரு” தான். பழக்கம் என்பதைவிட அவரும் எங்க ஊர் சனத்தில் ஒருவர். அவருக்கு அப்போது இத்தனை சாயங்கள் கிடையாது. இந்த சதுர்த்தி என்ற சொல்லும் எங்களுக்குப் பழக்கப்பட்டதில்லை.


 

ஊரில் மாரியம்மன் கோவில் என்பது கட்டாயம். மாரியம்மன் கோவில் வாசலில் ஏதாவது ஒரு பக்கத்தில் இருக்கும் சதுரத் திண்டில் இருபக்கமும் தலா இரண்டு சிலையென மையத்தில் பிள்ளையார் பாசமாய் வீற்றிருப்பார். அந்தத் திண்டில் அமர்ந்துகொள்ளலாம். ஏறி விளையாடலாம். ஐஸ் விளையாட்டில் பிள்ளையாரின் முதுகில் ஒளிந்து கொள்ளலாம். தாண்டிக்கூட விளையாடலாம். தப்பித்தவறி அவர் மீது கையோ, காலோ பட்டுவிட்டால் உடனே எல்லாம் கண்ணைக் குத்திவிட மாட்டார். கால் பட்டுவிட்ட பதட்டத்தில் “சாமி மன்னிச்சிரு சாமி” என்று மன்னிப்புக் கேட்ட பொழுதெல்லாம் மன்னித்தே விட்டிருக்கிறார். இல்லாவிட்டால் எத்தனை முறை கண் போயிருந்திருக்க வேண்டும். அவரைச் சுற்றி அமர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். என்னெ வேண்டுமானாலும் என்றால் என்ன வேண்டுமானாலும் தான். எதுவும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பூசைக்கு முறைமையுடைய பூசாரி வந்து பூசை செய்யும் தினங்களில் மட்டுமே கொஞ்சம் அந்நியப்பட்டு கடவுளாகத் தெரிவார். மற்ற நாட்களில் அவரும் நம்ம வீட்டு ஆள்தான். பூசாரி பொங்கல் வைத்து, பூசை செய்து, கிள்ளிய இலையில் தழுவுச்சோறு தருவார். சப்பென்றிருக்கும் பொங்கச் சோறில் என்ன ருசி இருந்து விடப்போகிறது. பழமும் நாட்டுச்சக்கரையும் கற்கண்டும் போட்டு பிசைந்த பஞ்சாமிர்தம் ஒரு துளி அந்த சின்னச் சோற்று உருண்டை தலையில் கிரீடமாய் இருக்கும். அந்தச் சுவைக்காகவே வாங்கி தொண்டையைச் சுட்டாலும் சரி என்று தின்பதுண்டு. தப்பித்தவறி அந்தப் பஞ்சாமிர்தத்தில் ஒரு துளி கற்கண்டுத் துண்டு வந்துவிட்டால், அதைக் கரைக்காமலே அதக்கி வைத்திருப்பதில் அத்தனை சுகமும் சுவையும்.

மாரியம்மனுக்கு வருடத்திற்கு ஒரு முறை நோம்பியென்றால். பிள்ளையாருக்கு அந்த நோம்பியோடு ”நிலாப் பிள்ளார்” எனும் கொப்பி (கும்மி) அடித்தல் கூடுதல் விசேசம். பிள்ளையார் கோவில் வாசலில், வளர்பிறை இரவுகளில் சாணியில் ஒரு பிள்ளையார் பிடித்து வைத்து, அருகம்புல் குத்தி வைத்து, பின்னிரவு வரை கும்மியடித்து பதினைந்து தினங்களுக்கு அவரை குதூகலப்படுத்துவதுமுண்டு.

வெயில், மழை, குளிர், காற்று என எதற்கும் அசராமல் அவர் மொட்டையாய்த்தான் எப்போதும் அமர்ந்திருப்பார். கல்லில் செதுக்கிய சிலையில் காலம் காலமாய் எண்ணைக்காப்பு விட்டு வணங்கியதில் கருப்பாய் செதில்செதிலாய் காட்சியளிப்பார். பூசை தினங்களில் பூசாரி வந்து தண்ணீர்விட்டுக் கழுவி பூவை வைத்து மாலையிட்டு, விபூதி, சந்தனம், குங்குமம் வைக்கையில் ஒரு தற்காலிக புதுமாப்பிள்ளை கெத்துக்கு வந்துவிடுவார். அடுத்த நாளிலிருந்து அடுத்த பூசை வரைக்கும் வாடிய பூக்களோடு காத்திருப்பார்.


காலம் மாறிவிட்டதால். கிட்டத்தட்ட எல்லா ஊர்களுமே தங்கள் ஊரிலிருக்கும் கோவில்களை பெரிதாகக் கட்டுவதை பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டனர். கோவில் வளாகங்களில் இருந்த வேப்பமரங்கள் காணாமல் போயின. சுற்றிலும் சுவர் எழுப்பி, கான்கிரீட் கட்டிடங்களுக்கும் அவரை அடைத்து அவருக்கு கதவும் போட்டாகிவிட்டது. அவரைச் சுற்றியுள்ள சுவர்களில் டைல்ஸ் மினுமினுக்கிறது. வெறும் பிள்ளார் கோவில் என்றிருந்த பெயர் போயி, ”அருள்மிகு செல்வ விநாயகர்” என்றோ, ”அருள்மிகு சித்திவிநாயகர்” என்றோ பலகைகள் நிறுவப்பட்டாகிவிட்டது. காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்து பேச சதுரத்திண்டு இல்லை. முகப்பில் போட்டிருக்கும் டைல்ஸில் அதிக நேரம் அமர்ந்து பேசமுடிவதில்லை. ஏதோ அந்நியரின் வீட்டில் அல்லது ஒரு புதுப்பணக்காரன் வீட்டில் அமர்ந்திருப்பதுபோல் ஒரு அசௌகரியம் வந்துவிடுகிறது.

என் காலத்தில் நான் இழந்ததின் பட்டியலில் எங்களின் செல்லப் ”பிள்ளாரும்” உண்டு என்பதை இப்போது வீதிகளில் சின்னப் பந்தல்களில் ஆரஞ்சு வண்ணத்தை மிகுதியாகப் பூசியிருக்கும், சதுர்த்திக்கான பாடல்களில் மூழ்கியிருக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை.

ஊரில் இன்றைக்கு ’விநாயங் கோயல்ல’ பூசை எனச் சொன்னார்கள். பொங்கச்சோறு, சுண்டல் என கொண்டாட்டம் இருக்கலாம். மைக் செட் வைத்து சிடிக்களில் பாடல்கள் முழங்கிக் கொண்டிருக்கலாம். இங்கிருக்கும் நகரத்து வீதி முனைகளில் வீதிகளை சற்றே ஆக்கிரமிருத்து அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக விநாயகர் கோவில்களில் இருந்து அதிரும் பக்திப் பாடல்களில் ஒன்ற முடியவில்லை. கிட்டத்தட்ட அதே போன்றதொரு கொண்டாட்டம் அங்கும் இருக்கலாம்.

எனக்குப் பிடித்த “பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்” என குழுவாகக் கத்திப் பாடிய பாடல்தான் இன்னும் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டெயிருக்கிறது.

”பிள்ளையாரப்பா நாம தாயாப்புள்ளையா இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சுடுச்சு. இனிமே அதேபோல் எதிர்பார்க்கிறது பைத்தியகாரத்தனம்னும் தோணுது சாமி. நானும் நீளச் சாலையிலிருந்து மெத்தைவீட்டுக்கு மாறியாச்சு. பானைத் தண்ணிக்கு ப்ரிட்ஜ் வந்த மாதிரி, சொம்புத் தண்ணியை பாட்டில் தண்ணி இடம் புடிச்ச மாதிரி பிரமாண்டமான விநாயகர் சிலை முன்பு, எண்ணைக்காப்பில் கருத்த நீயெல்லாம் என்ன செய்திடமுடியும். அன்றைக்கிருந்த உன்மேல் எனக்கிருந்த பிரியம் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது. உனக்கும் நீ எங்கிருந்தாலும் எங்கள் மேல் இருந்த கனிவும் கருணையும் அப்படியே இருக்குமென்று நினைக்கிறேன்”

”உன் ’ஹைபிரிட்’ சந்ததிக்கு இன்னிக்கு பொறந்தநாள்னு ஊரெல்லாம், நாடெல்லாம் படமும் சிலையுமா கொண்டாட்டமா இருக்கு. ஒரு மரபுக்காய், மரியாதை நிமித்தமாய் அவருக்கு பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லிக்கிறேன். நீ எதையும் மறந்துடாத பிள்ளையாரப்பா!”

-*-

Sep 5, 2013

பயணம் ஒரு கோட்டில்



நேர் கோடென நீளும்
பாதையில் ஊர்கிறேன்
உயரத்தில் இறக்கை விரித்த
பருந்தொன்று
ஒத்த அலைவரிசையில்
உடன் பயணிக்கிறது

என் கோட்டில் அது பறக்கிறதா
அதன் கோட்டில் நான் நகர்கிறேனா
இருவருக்குமே தெரியவில்லை

இடதோ வலதோ
மெல்ல அசைந்து நகர்கையில்
வருடியும் வருடாமலும் செல்கிறது
விரிந்த பறவையின் நிழல்

எனக்கு கீழும் கூட
ஒரு எறும்பு
என் கோட்டிலேயே பயணிக்கலாம்

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.

***
நன்றி: அதீதம்


Sep 3, 2013

சாபம்


முப்பது வருசத்துக்கு மேல இருக்கும். அப்போ மூனாவது படிச்சிட்டிருந்தேன். அவன் அப்ப எங்கோடத்தான் படிச்சிட்டிருந்தான். என்னென்னமோ யோசிச்சுப் பாக்கறேன், அவம்பேரு மாத்ரம் நெனப்லையே வரல. அவனோட அக்கா பேரு ராணிங்கிறது மட்டும் நெனப்புல இருக்குது. இப்போ அவனுக்கு எதாச்சும் ஒரு பேரு சொல்லனுமே. அதேன் அப்படியொரு புதுப் பேர வெச்சு செரமப்படனும் ராணி தம்பினே இருக்கட்டும்.


அப்போ எங்கூர்ல தெக்குப்பக்கமா நாயக்கருங்க கொஞ்சம் பேர் இருந்தாங்க. நாயக்கருங்க சாமி சச்சுருவானதுன்னும், நாயக்கருங்க சாபம் உட்டா அது அப்படியே பலிச்சுரும்னு பெரியவிங்க சொல்லுவாங்க. அதனாலயோ என்னமோ, பள்ளிக்கூடத்துல கூட யாரும்ம் நாயக்கரு ஊட்டு பசங்ககிட்ட பெரிசா வம்புதும்பு வெச்சுக்க மாட்டாங்க.

நாயக்கருங்க ஊடெல்லாம் இருக்கிற பக்கம்தான் இந்த ராணி தம்பி ஊடும் இருந்துச்சு. என்ன நெனைச்சானோ ஏது நெனைச்சானோ தெரியல, ஒரு நா எங்கிட்ட,


”எங்கூட்ல சாபம் உடற பொட்டி இருக்குதுடா”னு சொன்னான்.



“டேய் நாயக்கருங்கதானே சாபம் உடுவாங்க, நீ எப்டி சாபம் உடமுடியும். பொய் சொல்ற”னு சொல்றப்பையே கொஞ்சூண்டு பயமும் இருந்துச்சு.



ஊட்டுக்கு வந்து ஆயாகிட்டே ”சாபம் உடுறதுக்கு பொட்டி எல்லாம் வெச்சிருப்பாங்களா”னு கேட்டேன்



”சாபம் உடறதுனா…. நாய்க்கரு, அவிய கோயலுக்குப் போயி, இவியெல்லாம் நாசமா போவோனும், கய்யிகாலு வராம போவோனும்னு சாமி கும்புட்டா, அந்த மாதரயே நடந்துரும்னு சொல்லுவாங்க”னு ஆயா சொல்லுச்சு



அடுத்த நாளு அவங்கிட்டப்போயி ’எங்காயா இப்படி சொல்லுச்சு’னு சொல்றதுக்கும் பயம். நெறையப் பேர்கிட்ட அவுங்க ஊட்ல சாபம் உடுற பொட்டியிருக்குனு சொல்லியிருக்கான். அதனாலயோ என்னமோ ஆரும் அவங்கூட பெருசா பேசிக்கிறதெல்லாம் கெடையாது. வெளையாட்ல கூட அவங்கூட ஆரும் சண்ட கட்றதில்ல.





நாளு போகப்போக அவனுக்கு திமுரு ஜாஸ்தியாயிக்கிட்டே இருந்துச்சு. யாருகிட்ட வேணா சண்ட போடுவான். சண்ட போடறப்போ,



”இர்றா எங்கூட்ல சாபம் உடுற பொட்டி இருக்குது. நாளைக்கு சாபம் உடறேன்”னு சொல்வான்



ஒன்னுக்குதண்ணிக்கு உட்டாலுஞ்செரி, மத்தியானச்சோத்துக்கு உட்டாலுஞ் செரி பசங்க புள்ளைங்கனு எல்லாருமே, அவுத்துட்ட கழுதைக மாதர ஊரையே சுத்திச்சுத்தி வெளையாடுவோம். அவன் சாபப் பொட்டியப் பத்தி சொன்னதுக்கப்புறம், அவங்கூட்டுச் சந்துல ஓடுறப்ப மட்டும்கொஞ்சம் பயமா இருக்கும்.



அவங்களுது ஓட்டு ஊடு. முன்னால வாசல்ல ஒரு எரும கட்டி வெச்சிருப்பாங்க. மத்தியானம் அவங்கூட்டு சந்துல ஓடறப்போ, ஒருசில நாளைக்கு ராணி தம்பியோட அம்மா நின்னுட்ருக்கும். எப்படி சாபம் உடற பொட்டிய வெச்சுக்கிட்டு பயமமில்லாம இந்தூட்ல இருக்காங்கனு நெனைச்சுக்குவேன்.



ஒரு நா கொஞ்சூண்டு தெகிரியமா ”டேய் சாபம் உடற பொட்டி என்னமாறிடா இருக்கும்”னு கேட்டேன்



”அது பெரீய்ய பொட்டிடா, எங்கப்பா மலக்கருப்புச்சாமி கோயிலுக்கிட்ட வாங்கீட்டு வந்துச்சு”



“அதுல இருந்து எப்டிடா சாபம் உடுறது”



“அதுல ஒரு கதவு இருக்குதுடா, அதத் தொறந்து யாரு மேல சாபம் உடனுமோ அவுங்க பேரச் சொல்லி, என்ன நடக்கவேணும்னு சொன்னாலும் அது அப்படியே பலிச்சுரும்டா”



பொட்டி பத்தி என்னென்னமோ சொன்னான். கடைசியா ஒருநாளைக்கு ஊட்டுக்கு கூட்டிட்டுப்போயி சாபம் உடற பொட்டிய காட்றேன்னும் சொன்னான்.



பொட்டியப் போயி பாக்குறதா, பாக்க வேணாமாங்கிறதே பெரிய பிரச்சனையா இருந்துச்சு



ஒரு நாள் என்னமோ அதும் இதும் சொல்லி ஊட்டுக்கு கூட்டிட்டுப் போனான். பயம்னா பயம் அத்தன பயம். ஊடு தொறப்பு போட்ருந்துச்சு. வாசல்ல எரும கட்றதுக்கு ஒரு பந்தல் இருந்துச்சு. பந்தலுக்கு ஒரு பக்கம் செவுரு. ரெண்டு பக்கம் தென்னந்தடுக்கு வெச்சு கட்டியிருந்தாங்க. தடுக்கும் செவுரும் இருக்குற மூலையில ஒரு பொட்டி இருந்துச்சு. சொருசொருப்பான மரப்பொட்டி அது. ரோஸ்கலர்ல, பச்சக்கலர்ல கலரு பூசுன மாதர இருந்துச்சு. ஆனா அவன் மொத சொன்னமாதர அதுக்கு கதவெல்லாம் இல்ல. பக்கத்துல போயி பாக்கறதுக்கும் பயமா இருந்துச்சு.


அந்த வருசம் முச்சூடும், அந்த பொட்டியச் சொல்லிச் சொல்லி அப்பப்ப மெரட்டுவான். பொட்டியப் பாக்குறதுக்கு முன்னால இருந்த பயம் பொட்டிய பார்த்த பொறவு கொஞ்சம் கொறஞ்சு போச்சு.



அடுத்த வருசம் என்ன காரணமோ தெரியல, ராணி ஊடு சொந்த ஊருக்கே குடிபோயிட்டாங்க. வருசம் போவப்போவ, அவம்பேருகோட மறந்துபோச்சு ஆனா அந்த சாபம் உடற போட்டிய மட்டும் மறக்கவே முடீல.



வாழ்க்கைல நீ கேட்ட மொத பொய் எதுனு ஒரு ப்ரெண்டு கேட்டப்போ பொசுக்குனு அந்த சாபம் உடற பொட்டிதான் நாவகத்துக்கு வந்துச்சு. இப்ப ராணி தம்பி என்ன பண்றான், எங்க இருக்காங்கனு ஒன்னும் தெரியல.



நாலாவதோ அஞ்சாவதோ படிக்குறப்போ ஒரு தடவை பவானி பழைய பஸ் ஸ்டாண்ட்ல ஆயா பழக்கடக்காரங்கிட்ட பழத்து வெலைய கொறச்சுப் போடுனு பேசிட்டிருந்தப்போ கடைக்குள்ள ராணி தம்பி ஊட்ல காட்டுன சாபம் உடற பொட்டி மாதரயே நெறைய பொட்டி அடிக்கியிருந்துச்சு. இந்த பொட்டியில சாபம் வெச்சுருப்பாங்களோனு பயிந்துக்கிட்டே



“ஆயா அதென்ன பொட்டினு கேளாயா”னு நச்ச ஆரம்பிச்சேன்



பழமெல்லாம் வாங்கி முடிச்சபொறவு, கடக்காரருகிட்ட ஆயா...



“அதென்னப்பாது பொட்டி, தம்பி என்னயென்னனு கேக்குது” என்றது



“பழம் வர்ற பொட்டி ஆயா.. வெளியூர்ல இருந்துதான் நெறையப் பழம் வரும். அதைய இப்படி பொட்டிலதான் அனுப்புவாங்க”னு சொன்னாரு.


-

Aug 26, 2013

இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!



செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை 24 மணி நேரமும் மக்களுக்கு வாரி வழங்கத் தொடங்கிய பின், மக்கள் வேறு ஒருவித மனநிலைக்கு நகர்ந்துவிட்டனர் எனத் தோன்றுகிறது. அதுவும் செய்தி தொலைக்காட்சிகளுக்கிடையே போட்டி உருவான பின்னர், நேயர்களின் போக்கில் இரு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று செய்திகளை அறிந்துகொள்வதில் இருந்த காத்திருப்பு, தேடல் தொலைந்து விட்டது. மற்றொன்று செய்திகளை ஏனோதானோவென்று சட்டெனக் கடந்துபோகும் தன்மை பெருகிவிட்டது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தத்தம் அரசியல் சார்பு நிலையோடு செய்திகளை வழங்கத்தொடங்கின பிறகு ஒட்டுமொத்தமாக செய்திகள் குறித்த நம்பகத் தன்மை நீர்த்துப் போய்விட்டது என்பதை மறுக்க முடியுமா எனத் தெரியவில்லை.

”இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!” என டீக் கடையில் ஒருவர் அலுத்துக் கொள்கிறார். எப்போதும் பரபரப்பு விரும்புகின்ற, என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனக் கேள்வி தோன்றுகிறது.







பின்னிரவு நேரம். வீதிகளின் வழியாக பெருந்துறை சாலையில் இணையும் இடத்தில் இருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வாசலருகே மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் ஒரு 108 வந்து நிற்கிறது. பக்கத்திலேயே ஒரு வாடகை ஆம்னி வேனும் வந்து நிற்கிறது. ஆம்னியில் இருந்து ஒரு ஊரே இறங்குகிறது. ஆம்புலன்சின் பின்பக்க கதவு நோக்கியும், தாழ் தளத்திலிருக்கும் அவசர சிகிச்சை படிகளின் அருகிலும் பதட்டமாக ஓடுகிறது.

அம்மா போன்று தோற்றமளிக்கும் பெண்மணி ஒருவர், மஞ்சள் பையோடு, தூக்கிப் போடப்பட்ட கொண்டையோடு, கதறலோடு ஆம்னியிலிருந்து இறங்கி, தள்ளாடியபடி மருத்துவமனை வாசலை நோக்கி நகர்கிறார்.

தீர்ந்துபோகும் அந்த நாளில் தேக்கிய அத்தனை மகிழ்வும் உற்சாகமும் அந்தப் பெண்ணைக் கண்ட நொடியில் வடிந்து போகிறது. குப்பென மனதில் இருள் அப்புகிறது.  அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருள்கிறதா, அடைக்கிறதா என உணரமுடியாத ஒரு உணர்வு.

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது.

ஒவ்வொரு பரபரப்பின் பின்னாலும் நிறைய பரிதவிப்பும், பதட்டமும் வலியும், பயமும் இருக்கும் என டீக் கடையில் கண்ட, முகம் மறந்துவிட்ட ஆளிடம் சொல்லத் தோன்றுகிறது.






வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...