”ஹைபிரிட்” விநாயகர்

சமீப ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி தினங்களில் பார்க்கும் வண்ணமயமான விநாயகர் எனக்கெல்லாம் சற்றுமே பரிச்சயம் இல்லாதவர். எங்களுக்கு ஊருக்குள் இருக்கும் பிள்ளையார்தான் பழக்கம். பிள்ளையார் என்பதைவிட அவருக்கு எளிமையான பெயர் ”பிள்ளாரு” தான். பழக்கம் என்பதைவிட அவரும் எங்க ஊர் சனத்தில் ஒருவர். அவருக்கு அப்போது இத்தனை சாயங்கள் கிடையாது. இந்த சதுர்த்தி என்ற சொல்லும் எங்களுக்குப் பழக்கப்பட்டதில்லை.


 

ஊரில் மாரியம்மன் கோவில் என்பது கட்டாயம். மாரியம்மன் கோவில் வாசலில் ஏதாவது ஒரு பக்கத்தில் இருக்கும் சதுரத் திண்டில் இருபக்கமும் தலா இரண்டு சிலையென மையத்தில் பிள்ளையார் பாசமாய் வீற்றிருப்பார். அந்தத் திண்டில் அமர்ந்துகொள்ளலாம். ஏறி விளையாடலாம். ஐஸ் விளையாட்டில் பிள்ளையாரின் முதுகில் ஒளிந்து கொள்ளலாம். தாண்டிக்கூட விளையாடலாம். தப்பித்தவறி அவர் மீது கையோ, காலோ பட்டுவிட்டால் உடனே எல்லாம் கண்ணைக் குத்திவிட மாட்டார். கால் பட்டுவிட்ட பதட்டத்தில் “சாமி மன்னிச்சிரு சாமி” என்று மன்னிப்புக் கேட்ட பொழுதெல்லாம் மன்னித்தே விட்டிருக்கிறார். இல்லாவிட்டால் எத்தனை முறை கண் போயிருந்திருக்க வேண்டும். அவரைச் சுற்றி அமர்ந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். என்னெ வேண்டுமானாலும் என்றால் என்ன வேண்டுமானாலும் தான். எதுவும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பூசைக்கு முறைமையுடைய பூசாரி வந்து பூசை செய்யும் தினங்களில் மட்டுமே கொஞ்சம் அந்நியப்பட்டு கடவுளாகத் தெரிவார். மற்ற நாட்களில் அவரும் நம்ம வீட்டு ஆள்தான். பூசாரி பொங்கல் வைத்து, பூசை செய்து, கிள்ளிய இலையில் தழுவுச்சோறு தருவார். சப்பென்றிருக்கும் பொங்கச் சோறில் என்ன ருசி இருந்து விடப்போகிறது. பழமும் நாட்டுச்சக்கரையும் கற்கண்டும் போட்டு பிசைந்த பஞ்சாமிர்தம் ஒரு துளி அந்த சின்னச் சோற்று உருண்டை தலையில் கிரீடமாய் இருக்கும். அந்தச் சுவைக்காகவே வாங்கி தொண்டையைச் சுட்டாலும் சரி என்று தின்பதுண்டு. தப்பித்தவறி அந்தப் பஞ்சாமிர்தத்தில் ஒரு துளி கற்கண்டுத் துண்டு வந்துவிட்டால், அதைக் கரைக்காமலே அதக்கி வைத்திருப்பதில் அத்தனை சுகமும் சுவையும்.

மாரியம்மனுக்கு வருடத்திற்கு ஒரு முறை நோம்பியென்றால். பிள்ளையாருக்கு அந்த நோம்பியோடு ”நிலாப் பிள்ளார்” எனும் கொப்பி (கும்மி) அடித்தல் கூடுதல் விசேசம். பிள்ளையார் கோவில் வாசலில், வளர்பிறை இரவுகளில் சாணியில் ஒரு பிள்ளையார் பிடித்து வைத்து, அருகம்புல் குத்தி வைத்து, பின்னிரவு வரை கும்மியடித்து பதினைந்து தினங்களுக்கு அவரை குதூகலப்படுத்துவதுமுண்டு.

வெயில், மழை, குளிர், காற்று என எதற்கும் அசராமல் அவர் மொட்டையாய்த்தான் எப்போதும் அமர்ந்திருப்பார். கல்லில் செதுக்கிய சிலையில் காலம் காலமாய் எண்ணைக்காப்பு விட்டு வணங்கியதில் கருப்பாய் செதில்செதிலாய் காட்சியளிப்பார். பூசை தினங்களில் பூசாரி வந்து தண்ணீர்விட்டுக் கழுவி பூவை வைத்து மாலையிட்டு, விபூதி, சந்தனம், குங்குமம் வைக்கையில் ஒரு தற்காலிக புதுமாப்பிள்ளை கெத்துக்கு வந்துவிடுவார். அடுத்த நாளிலிருந்து அடுத்த பூசை வரைக்கும் வாடிய பூக்களோடு காத்திருப்பார்.


காலம் மாறிவிட்டதால். கிட்டத்தட்ட எல்லா ஊர்களுமே தங்கள் ஊரிலிருக்கும் கோவில்களை பெரிதாகக் கட்டுவதை பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டனர். கோவில் வளாகங்களில் இருந்த வேப்பமரங்கள் காணாமல் போயின. சுற்றிலும் சுவர் எழுப்பி, கான்கிரீட் கட்டிடங்களுக்கும் அவரை அடைத்து அவருக்கு கதவும் போட்டாகிவிட்டது. அவரைச் சுற்றியுள்ள சுவர்களில் டைல்ஸ் மினுமினுக்கிறது. வெறும் பிள்ளார் கோவில் என்றிருந்த பெயர் போயி, ”அருள்மிகு செல்வ விநாயகர்” என்றோ, ”அருள்மிகு சித்திவிநாயகர்” என்றோ பலகைகள் நிறுவப்பட்டாகிவிட்டது. காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்து பேச சதுரத்திண்டு இல்லை. முகப்பில் போட்டிருக்கும் டைல்ஸில் அதிக நேரம் அமர்ந்து பேசமுடிவதில்லை. ஏதோ அந்நியரின் வீட்டில் அல்லது ஒரு புதுப்பணக்காரன் வீட்டில் அமர்ந்திருப்பதுபோல் ஒரு அசௌகரியம் வந்துவிடுகிறது.

என் காலத்தில் நான் இழந்ததின் பட்டியலில் எங்களின் செல்லப் ”பிள்ளாரும்” உண்டு என்பதை இப்போது வீதிகளில் சின்னப் பந்தல்களில் ஆரஞ்சு வண்ணத்தை மிகுதியாகப் பூசியிருக்கும், சதுர்த்திக்கான பாடல்களில் மூழ்கியிருக்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை.

ஊரில் இன்றைக்கு ’விநாயங் கோயல்ல’ பூசை எனச் சொன்னார்கள். பொங்கச்சோறு, சுண்டல் என கொண்டாட்டம் இருக்கலாம். மைக் செட் வைத்து சிடிக்களில் பாடல்கள் முழங்கிக் கொண்டிருக்கலாம். இங்கிருக்கும் நகரத்து வீதி முனைகளில் வீதிகளை சற்றே ஆக்கிரமிருத்து அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக விநாயகர் கோவில்களில் இருந்து அதிரும் பக்திப் பாடல்களில் ஒன்ற முடியவில்லை. கிட்டத்தட்ட அதே போன்றதொரு கொண்டாட்டம் அங்கும் இருக்கலாம்.

எனக்குப் பிடித்த “பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்” என குழுவாகக் கத்திப் பாடிய பாடல்தான் இன்னும் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டெயிருக்கிறது.

”பிள்ளையாரப்பா நாம தாயாப்புள்ளையா இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சுடுச்சு. இனிமே அதேபோல் எதிர்பார்க்கிறது பைத்தியகாரத்தனம்னும் தோணுது சாமி. நானும் நீளச் சாலையிலிருந்து மெத்தைவீட்டுக்கு மாறியாச்சு. பானைத் தண்ணிக்கு ப்ரிட்ஜ் வந்த மாதிரி, சொம்புத் தண்ணியை பாட்டில் தண்ணி இடம் புடிச்ச மாதிரி பிரமாண்டமான விநாயகர் சிலை முன்பு, எண்ணைக்காப்பில் கருத்த நீயெல்லாம் என்ன செய்திடமுடியும். அன்றைக்கிருந்த உன்மேல் எனக்கிருந்த பிரியம் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது. உனக்கும் நீ எங்கிருந்தாலும் எங்கள் மேல் இருந்த கனிவும் கருணையும் அப்படியே இருக்குமென்று நினைக்கிறேன்”

”உன் ’ஹைபிரிட்’ சந்ததிக்கு இன்னிக்கு பொறந்தநாள்னு ஊரெல்லாம், நாடெல்லாம் படமும் சிலையுமா கொண்டாட்டமா இருக்கு. ஒரு மரபுக்காய், மரியாதை நிமித்தமாய் அவருக்கு பொறந்தநாள் வாழ்த்துச் சொல்லிக்கிறேன். நீ எதையும் மறந்துடாத பிள்ளையாரப்பா!”

-*-

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் விநாயகப் பெருமானுக்கு - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

மலரும் நினைவுகளுடன் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..!

'பரிவை' சே.குமார் said...

உங்களின் மலரும் நினைவுடன் விநாயகர் சதுர்த்திப் பகிர்வு...

வாழ்த்துக்கள் அண்ணா.

ஆரூரன் விசுவநாதன் said...

"பிள்ளையாரப்பா நாம தாயாப்புள்ளையா இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சுடுச்சு. இனிமே அதேபோல் எதிர்பார்க்கிறது பைத்தியகாரத்தனம்னும் தோணுது சாமி. நானும் நீளச் சாலையிலிருந்து மெத்தைவீட்டுக்கு மாறியாச்சு. பானைத் தண்ணிக்கு ப்ரிட்ஜ் வந்த மாதிரி, சொம்புத் தண்ணியை பாட்டில் தண்ணி இடம் புடிச்ச மாதிரி பிரமாண்டமான விநாயகர் சிலை முன்பு, எண்ணைக்காப்பில் கருத்த நீயெல்லாம் என்ன செய்திடமுடியும். அன்றைக்கிருந்த உன்மேல் எனக்கிருந்த பிரியம் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது. உனக்கும் நீ எங்கிருந்தாலும் எங்கள் மேல் இருந்த கனிவும் கருணையும் அப்படியே இருக்குமென்று நினைக்கிறேன்”

real words....