இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை 24 மணி நேரமும் மக்களுக்கு வாரி வழங்கத் தொடங்கிய பின், மக்கள் வேறு ஒருவித மனநிலைக்கு நகர்ந்துவிட்டனர் எனத் தோன்றுகிறது. அதுவும் செய்தி தொலைக்காட்சிகளுக்கிடையே போட்டி உருவான பின்னர், நேயர்களின் போக்கில் இரு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று செய்திகளை அறிந்துகொள்வதில் இருந்த காத்திருப்பு, தேடல் தொலைந்து விட்டது. மற்றொன்று செய்திகளை ஏனோதானோவென்று சட்டெனக் கடந்துபோகும் தன்மை பெருகிவிட்டது.

ஒவ்வொரு தொலைக்காட்சியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தத்தம் அரசியல் சார்பு நிலையோடு செய்திகளை வழங்கத்தொடங்கின பிறகு ஒட்டுமொத்தமாக செய்திகள் குறித்த நம்பகத் தன்மை நீர்த்துப் போய்விட்டது என்பதை மறுக்க முடியுமா எனத் தெரியவில்லை.

இன்னிக்கு பரபரப்பு நியூஸ் ஒன்னுமேயில்ல!என டீக் கடையில் ஒருவர் அலுத்துக் கொள்கிறார். எப்போதும் பரபரப்பு விரும்புகின்ற, என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனக் கேள்வி தோன்றுகிறது.பின்னிரவு நேரம். வீதிகளின் வழியாக பெருந்துறை சாலையில் இணையும் இடத்தில் இருக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வாசலருகே மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதுதான் ஒரு 108 வந்து நிற்கிறது. பக்கத்திலேயே ஒரு வாடகை ஆம்னி வேனும் வந்து நிற்கிறது. ஆம்னியில் இருந்து ஒரு ஊரே இறங்குகிறது. ஆம்புலன்சின் பின்பக்க கதவு நோக்கியும், தாழ் தளத்திலிருக்கும் அவசர சிகிச்சை படிகளின் அருகிலும் பதட்டமாக ஓடுகிறது.

அம்மா போன்று தோற்றமளிக்கும் பெண்மணி ஒருவர், மஞ்சள் பையோடு, தூக்கிப் போடப்பட்ட கொண்டையோடு, கதறலோடு ஆம்னியிலிருந்து இறங்கி, தள்ளாடியபடி மருத்துவமனை வாசலை நோக்கி நகர்கிறார்.

தீர்ந்துபோகும் அந்த நாளில் தேக்கிய அத்தனை மகிழ்வும் உற்சாகமும் அந்தப் பெண்ணைக் கண்ட நொடியில் வடிந்து போகிறது. குப்பென மனதில் இருள் அப்புகிறது.  அடிவயிற்றில் ஏதோ ஒன்று உருள்கிறதா, அடைக்கிறதா என உணரமுடியாத ஒரு உணர்வு.

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது.

ஒவ்வொரு பரபரப்பின் பின்னாலும் நிறைய பரிதவிப்பும், பதட்டமும் வலியும், பயமும் இருக்கும் என டீக் கடையில் கண்ட, முகம் மறந்துவிட்ட ஆளிடம் சொல்லத் தோன்றுகிறது.


8 comments:

Yaathoramani.blogspot.com said...

இரண்டு நிலைகளுக்கு சாட்சியாய்
இருப்பது கூட இலக்கியவாதியாக அல்லது
சமூக உணர்வுள்ள மனிதனாய் இருந்தால்தான்
சாத்தியம் எனவும் படுகிறது

அதியா வீரக்குமார் said...

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது//....இது பெருவேதனை..

_வீரா

அதியா வீரக்குமார் said...

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது//....இது பெருவேதனை..

_வீரா

Unknown said...

//ஒவ்வொரு பரபரப்பின் பின்னாலும் நிறைய பரிதவிப்பும், பதட்டமும் வலியும், பயமும் இருக்கும் என டீக் கடையில் கண்ட, முகம் மறந்துவிட்ட ஆளிடம் சொல்லத் தோன்றுகிறது.//


இனி எப்போ "Live & Exclusive" ன்னு பாத்தாலும், இந்த வரி மனதில் வரும்...

ராஜி said...

பரபரப்பு நியூசுக்கா பஞ்சமா?!

குட்டன்ஜி said...

இதை ஒரு பத்திரிகை நிருபர் பார்த்தால் பரபரப்பு செய்தியாகும்!மனித நேயம் உள்ளவர் பார்க்கையில் மன வலிதான்!

'பரிவை' சே.குமார் said...

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது.

வேதனையின் வலி...

முடியும்(முத்து)பாண்டியன். said...

அவள் கடந்த ஒவ்வொரு அடியிலும், ஒரு போதி மரம் முளைவிட்டு கிளை பரப்புகிறது//....வலி நிறைந்த வார்த்தைகள்