Showing posts with label அதீதம். Show all posts
Showing posts with label அதீதம். Show all posts

Sep 5, 2013

பயணம் ஒரு கோட்டில்



நேர் கோடென நீளும்
பாதையில் ஊர்கிறேன்
உயரத்தில் இறக்கை விரித்த
பருந்தொன்று
ஒத்த அலைவரிசையில்
உடன் பயணிக்கிறது

என் கோட்டில் அது பறக்கிறதா
அதன் கோட்டில் நான் நகர்கிறேனா
இருவருக்குமே தெரியவில்லை

இடதோ வலதோ
மெல்ல அசைந்து நகர்கையில்
வருடியும் வருடாமலும் செல்கிறது
விரிந்த பறவையின் நிழல்

எனக்கு கீழும் கூட
ஒரு எறும்பு
என் கோட்டிலேயே பயணிக்கலாம்

பறவையின் நிழல் என்னை வருடிய
எதோ ஒரு நொடியில்
என் கால் எறும்பினை
மரணத்தில் புதைத்திருக்கலாம்.

***
நன்றி: அதீதம்


Nov 5, 2012

ஒளி விருட்சம்



இல்லாதது கண்டஞ்சி 
இல்லாததற்குள்ளும்
இருள் கண்டஞ்சி
இருட்டுக்குள்ளும்
ஒளிந்துகொள்கிறேன்
பயம் அஞ்சி அகலுகிறது.

***

நீ பொத்தியிருந்து
தனித்துவிட்ட
என் கைகளுக்குள்
ஒரு விதையை
ஒளித்துவைத்திருக்கிறேன்
விதைக்குள் இருக்கும்
விருட்சம் எனக்குள்
வளர்ந்துகொண்டிருக்கிறது

***

கரு மேகம் பூத்த வானமாக
இருளடைந்த மனது
தாகத்தில் நிலமுமில்லை
பெய்யும் நோக்கத்தில்
மேகமுமில்லை
நான் மட்டும் மழையாய்
கரைந்து கொண்டிருக்கிறேன்!

***

உடையும் விருப்பமும்
இருந்ததில்லை
உடைபடாமல் காக்கும்
வித்தையுமறிந்ததுமில்லை
உடைபடாமல் பிடித்தியிறுத்தும்
ஏதோ ஒரு ஈரச் சொல்
எங்கோ அன்பில்
நனைந்து பிறந்திருக்கலாம்!

***

நன்றி அதீதம்


*

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...