Jan 27, 2013

அன்பு மிகும் பொழுதுகள்



ஒரு காலத்தில் பெங்களூருக்கு வாரம் ஒருமுறை என ஓடிக்கொண்டிருந்தவனுக்கு, கிட்டத்தட்ட 2-3 மூன்று ஆண்டுகள் கழித்து தொழில் நிமித்தம் செல்லும் வாய்ப்பும், ஒருநாள் தங்கும் வாய்ப்பும் கிட்டியது. இயன்றால் ஃபேஸ்புக் மூலம் நட்பு வலுப்பெற்ற சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் என்ற ஆசையும் மிகுந்திருந்தது. பொதுவாகவே இப்படிப்பட்ட சந்திப்புகளில் கொஞ்சம் சோம்பேறித்தனம் மற்றும் எழுத்தால் அறிந்தவர்களை எழுத்தைத்தாண்டி உருவமாக, நேரிடையாகச் சந்திப்பதில் அதுவரை நான் தீட்டிவைத்திருக்கும் பிம்பத்தின் வர்ணம் மாறும் வாய்ப்பு ஆகிய காரணங்களால் அதைத் தவிர்ப்பதை விரும்புபவன்.



ஆனாலும் அதையெல்லாமும் ஒதுக்கி சிலரைச் சந்திப்பதற்கான காரணத்தை மனது சேகரித்துக் கொண்டே வந்தது. எனவே இந்தமுறை வாய்ப்புக் கிடைத்தால் சந்திப்பதென நினைத்திருந்தேன். சந்தித்தவர்கள் விதைத்த அன்பு முளைவிட்டு கிளைபரப்பு தருணத்தை பகிர்வதிலும் கூடுதல் மகிழ்வே.

·           



மாதங்கிலதா அவர்களை குடும்பத்தினரோடு சந்தித்து உணவருந்திய அந்த சுவாரசிய நிகழ்வும், விடைபெறும்போது ஆட்டோக்காரரிடம் அவர் நிகழ்த்திய கன்னட உரையாடலும் நினைக்க நினைக்க இனிப்பவை. எப்போதும் தமிழில் எழுதி கூடவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அவரை இனி கன்னடத்திலும் முழி(!) பெயர்க்கச் சொல்ல வேண்டும்.

·           

பெங்களூர் வருகிறேன் எனச் சொன்னவுடன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டே ஆகனும் என வற்புறுத்தி என்னை அழைத்த என் மேல்நிலைப்பள்ளித் தோழன் சிவசுப்பிரமணியம் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நானும் சிவசுப்பிரமணியமும் 1991ல் உடுமலை அருகே ஒரு பள்ளியில், விடுதி மாணவர்களாக 12ம் வகுப்பு படித்து 21 ஆண்டுகள் கழித்து 2012ல் ஃபேஸ்புக் வாயிலாக அறிமுகமாகி சிலமாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் சந்தித்து, இந்தமுறை பெங்களூருவில் இல்லம் சென்று உணவருந்தும் வாய்ப்பு, கூடுதல் சுவாரசியம் சிவசுப்ரமணியத்தின் மனைவியின் இல்லம் ஈரோட்டில் 7 வருடமாக நான் வசிக்கும் வீட்டிலிருந்து அடுத்த 2வது வீதியில் இருக்கின்றதென்பதுதான்.



ஃபேஸ்புக்கை ஒவ்வொருவரும் எப்படியெப்படியோ பயன்படுத்தி வரும் சூழலில் சிவசுப்ரமணியம் ஃபேஸ்புக் மூலம் பேஸ்காம் நிர்வாக மேலாளரைத் தொடர்பு கொண்டு தனது பகுதியில் வீதி விளக்குகள் அமைக்கச் செய்திருப்பதைக் கண்டபோது இது இந்தியாதான என்ற ஆச்சரியமும், இது தமிழகம் இல்லையென்ற அங்கலாய்ப்பும் ஒருசேர எனக்குள் நிகழ்ந்தது.

·           

என் பிரியத்திற்குரிய எழுத்துக்குச் சொந்தக்காரரான வா மணிகண்டனின் நிசப்தம் நான் சமீபத்தில் தொடர்ச்சியாக வாசித்துவரும் வலைப்பக்கம். சில மாதங்களுக்கு முன்பு போனில் அழைத்துப் பேசும்போது, ஈரோடு சங்கமம் குறித்த பேச்சு வர, 2011ம் ஆண்டு சங்கமத்திற்கு வந்திருந்தேன் என்றார்.



“அப்படியா நான் கவனிக்காம போயிட்டனே” எனச் சொல்ல.



“நீங்க தாங்க கைகுடுத்து வாங்க மணிகண்டன்னு சொல்லி உட்கார வச்சீங்க!” எனக் குண்டைத் தூக்கிப்போட்டார்.



சங்கமம் 2011ல் என்னவெல்லாம் என்னையறியாமல் நிகழ்ந்ததென்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூடிப்போனது. அந்தக் குண்டைச் சுமக்கமுடியாமல் எப்படியாவது நேரில் சந்தித்து இறக்கி வைத்துவிடுவதென அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன்.

·           

அவரும் கப்பன் பார்க்கில் சந்திக்கலாம் என முடிவுவெடுத்து ஃபேஸ்புக் சுவற்றில் பகிர வில்லன் வில்லன் எனும் பெயரிலிருக்கும் ஓம்ஸ்ரீ வருவதாக உறுதியளித்தார். முன்பே எழுத்துவழி, குரல்வழி அறிமுகமானவர்களைச் சந்திப்பதிலேயே கொஞ்சம் கூச்சப்படும் நான், இவரைச் சந்திப்பது குறித்த கூடுதல் கூச்சமும் கூடவே கொஞ்சம் சுவாரசியமும் தயாரிக்கத் தொடங்கினேன்.



ஞாயிறு பின் மதியம் சில்க்போர்டு பகுதியில் என்னை மணிகண்டன் அழைத்துக்கொள்வதாகச் சொல்லியிருக்க, ஜே.பி.சாணக்யாவுடனான அவரின் பைக் சாகசம் போலவே இன்றும் ஒரு சாகசம் கிடைக்கும் என என எதிர்பார்த்திருக்க கருப்பு கலர் ஸ்கார்பியோவில் குடும்பத்தினரோடு வந்திருந்து என்னை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். மூன்று புத்தகங்கள், நீண்ட வலைப்பக்க எழுத்து என அவரின் அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாய் சேகரிப்பது அருமையாதொரு தருணம்.



100 முறை போன ரோட்டிலேயே வழி தெரியாமல் பெங்களூரில் தடுமாறுவதுதான் சுவாரசியம். அந்த சுவாரசியம் கெட்டுவிடக்கூடாதென்று நாங்களும் சுத்திக் குழம்பி தெளிந்து நாலு மணிக்கு அடைய வேண்டிய கப்பன் பூங்காவை 4.45க்கு அடைந்தோம். எப்படியும் தாமதாமகத்தான் சந்திப்போம் என கொஞ்சம் தாமதாமாக வந்திருந்த பதிவர் ராமலஷ்மி, வில்லன் வில்லன் ஆகியோருக்கு அதைவிடத் தாமதமாகச் சென்று நாங்கள் யாரெனப் புரியவைத்தோம்.

·           

வில்லன் வில்லன் ”கதாநாயகன் கதாநாயகன்” போல இருந்தார். இரண்டு நாள் கழித்துதான் அவர் சாருவுக்கு நெருக்கம் என்று தெரிந்து சாரு குறித்து பேசமுடியாமல் போனதிற்கு பின்னர் வருத்தப்பட்டேன்.

·           

கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம் என எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து சோர்வின்றி செயல்பட்டு வரும் ராமலஷ்மி என்னைப் பல சூழல்களில் எழுத்து ரீதியாக ஆற்றுப்படுத்திய ஒரு குருவுக்கு நிகரானவரும்கூட.. தொடர்ந்து எல்லாத் தளங்களிலும் அவரின் செயல்பாடு எனக்கு எப்போதுமே ஆச்சரியம் நிறைந்தது. ஒரு காலத்தில் மாதத்திற்கு 4 இடுகைகள் மட்டும் எழுதியவரை 4லிலிருந்து 10-15 வரை எழுத நான் ஊக்குவித்தேன், இப்போது 4-5களில் சோம்பிக்கிடக்கும் என்னை அவர் ஊக்குவிக்கும் நிலையில் இருக்கும் நிலை குறித்துப் பேசினோம்.

·           

விகடனில் பணியாற்றும் அருளினியன் முதல் நாளிலிருந்தே சந்திக்க வருவதாக உரையாடல் பெட்டியில் தெரிவித்திருந்தார். கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லியிருக்க, மணிகண்டனிடம் யார் இந்த அருளினியன் என விசாரித்தேன். சமீபத்தில் விகடனில் வந்த ”ஒரு பெண் போராளியின் பேட்டி” அவருடையது எனத் தெரிந்தது. அந்தப் பேட்டியின் நம்பகத்தன்மை குறித்து நிறைய சந்தேகங்களும், இன்னும் சரியாகச் சொன்னால் கடுப்பும் கொண்டிருக்கும் நான், அவரை எதிர்கொண்டு பேசுவதை நினைத்து நிறையவே தடுமாறினேன்.



பக்கத்துவீட்டு சேட்டுப்பையன் போல் மலர்ச்சியாக வந்த அருளினியன் சட்டென ஒட்டிக்கொண்டார்



“அண்ணா, உங்களை முன்னமே எனக்குத் தெரியும்”



விளையாடுகிறாரோ என நினைத்துக்கொண்டே “அப்படியா எப்படிங்க?” என்றேன்



விகடனில் வந்த ”கஞ்சம் வெங்கட சுப்பையா” பேட்டியை உங்க ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தீங்க, அந்தப் பேட்டி எடுத்தது நான்தான் என்றார். அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேட்டி. அருளினியனோடு கொஞ்சம் மனது நெருங்கத் தொடங்கியது. நிறையப் பேசினோம். மற்றவர்களும் உடனிருப்பதால் பெண் போராளி பேட்டி குறித்து பேசுவதை தவிர்த்துவிடுவதென்றே முடிவு செய்திருந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்தி; அதுகுறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டு, அவரும் அதற்கு பதிலளித்தார். எனினும் சூழல் குறித்து மேலும் அதை நீட்டிக்கவில்லை.



”ஈரோடு எங்கண்ணா இருக்கு” என்றார். தமிழக வரைபடத்தை ஒருவழியாகச் சொல்லி, ”ஒருமுறை வாங்க” என்றேன்



”வருகிறேன் ஆனால் என்னை அடித்துவிட மாட்டீர்களே” என்றார் சிரித்துக்கொண்டே



”போராளி பேட்டி குறித்து மிகுந்த கோபம் இருந்தது. கஞ்சம் வெங்கட சுப்பையா பேட்டி குறித்து மிகுந்த அன்பிருந்தது. இரண்டும் ஒருமாதிரி சமன் ஆகியிருக்கிறது அருளினியன்” என்றேன்.



அதுசரியான சமன்தானா என்று தெரியவில்லை எனினும், அவரை அவராகவே ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் என்பது மட்டும் புரிந்தது.

·           

புறப்படும் நேரத்தில் செல்லி ஸ்ரீனிவாசன்  மகளுடன் பரபரப்பாக வந்தடைந்தார். ஃபேஸ்புக்கில் அதிரடி கமெண்டுகளால் அறிமுகமானவர். ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அவரின் அதிரடி கண்டு இது Fake Idயாக இருக்குமோ என்றும் கூட மடத்தனமாக நினைத்ததுண்டு. சந்திக்க வந்தபோது தனது கணக்கை முடக்கி அமைதியில் நீந்திக்கொண்டிருந்தார் செல்லி. ஃபேஸ்புக் இல்லாத அமைதியை வைராக்கியமாகக் கொண்டிருப்பது குறித்து நிறையப் பகிர்ந்தார். வந்து இருந்த சில நிமிடங்களில் தான் கையோடு கொண்டுவந்த ஒட்டுமொத்த உற்சாகத்தையும் அங்கிருக்கும் அனைவரிடமும் கைமாற்றிச் செல்லும் வல்லமை அவரிடமிருந்தது.

·           

புறப்படுகையில் வா மணிகண்டன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அவருடைய புதிய கவிதைத் தொகுப்பான ”என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” புத்தகத்தை அளித்தார். நேசிப்பிற்குரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை அன்பளிப்பாகப் பெறுவதில் எப்போதும் கூடுதல் மகிழ்விருப்பதை அந்தக் கணமும் உணர்ந்தேன்.

·           

சூழல் இணக்கமாக அமையும் தருணங்களில் மனிதர்கள் மிகையான அன்பைப் பகிர்வதில் எப்போதும் தோற்பதில்லை. எதிர்பார்க்காத அளவு ஒவ்வொருவரும் அளித்தனர். சுமக்கமுடியாத அளவு நானும் சுமந்து திரும்பினேன். 

-



·           

Jan 23, 2013

நானாகும் நான்




என்னை எனக்கு
அதிகம் பிடிக்கிறது
என்னை எனக்கு
அதிகம் பிடிக்காதபோதும்!

*

யாரோ ஏற்றிவிட்ட இடத்தில்
யாரோ இறக்கிவிட்ட இடத்தில்
எப்போதாவது என்னிடத்தில் நானும்

* 

நான் இப்படிப்பட்டவனென
நீங்கள் நினைக்கும்
அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!

-

Jan 21, 2013

விபத்து ரொம்ப பக்கம்தான்




மாலை 5 மணியிருக்கும் அரசு மருத்துவனை தாண்டி பவானி நகருக்குள் கிட்டத்தட்ட நுழைந்தாகிவிட்டது. நகரப் பரப்புக்குள் நுழைவதால் வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். உடன் வரும் நண்பர்கள் வானம்பாடி, சுவாமி, பிரபாகர் ஆகியோருடன் உற்சாக உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது.



அரசு மருத்துவமனை கடந்து வண்டிப்பேட்டை அருகே காவலர் குடியிருப்பு கடக்கும் இடத்தில் எங்களுக்கு முன்னால் சென்ற கல்லூரி சிற்றுந்து ஒன்று, நின்று மெதுவாக இடது புறம் ஒதுங்கி நகர்ந்தது. அதே நேரம் எதிர்ப்புறமிருந்து வந்த ஒரு கார் நட்டநடு சாலையில் நிற்பது தெரிந்தது. பரபரப்பான சூழலில் ஏன் இப்படி நிற்கிறது எனக் காரை உற்றுப்பார்க்க, அப்படியே அதிர்ந்து போனேன். ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் அப்படியே சிலை மாதிரி அமர்ந்திருக்க, பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி அவர் முகத்தில் தண்ணீரை வீசியடித்துக் கொண்டிருந்தார்.

எதோ விபரீதம் எனப் புரிந்தது. ஓட்டுனர்கள் வாகனம் இயக்குகையில் மாரடைப்பு வருவது குறித்து அடிக்கடி வாசிக்கும் செய்தி நினைவிற்கு வந்தது. அருகிலிருந்த நண்பர் சுவாமி குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்.

“சுவாமி, அந்த கார் ஓட்றவருக்கு எதோ ஒடம்பு சரியில்லனு நெனைக்கிறேன், ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணுவீங்களா?” எனக் கேட்டுக்கொண்டே சட்டென என் வண்டியை இடது ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்த காரை நோக்கி ஓடி ஓட்டுனர் இருக்கைக் கதவைத் திறந்தேன்.

சுமார் 65 வயது கடந்த ஒரு பெரியவர் இருக்கையில் அப்படியே சிலை மாதிரி அமர்ந்திருக்க அவர் முகம் சட்டையெல்லாம் தண்ணீர் ஈரம். அருகிலிருந்து பெண் உச்சபட்ச பதட்டத்தில் வார்த்தைகளை தடுமாறித் தடுமாறிப் பேசினார்

“இப்ப கெளம்ப வேண்டாம் நாளைக்குப் போலாம்னுதான் சொன்னோம், இப்ப வந்து இப்படியாகிப் போச்சுங்ளே…”

“என்னாச்சுங்க”

“என்னுனே தெரிலீங்… அப்டியே வண்டிய நிறுத்திட்டு ஒன்னும் பேசாம மயக்கமாயிட்டாரு”

அருகில் வந்த நண்பர் சுவாமி என்னை மெல்ல ஒதுக்கிவிட்டு அவர் கை நாடி பார்த்தார்.

“ஒன்னுமில்ல, லோ பிரஷர்தான்” என நம்பிக்கை கொடுத்தார்.

அவரிடம் மெல்லிய அசைவு தெரிந்தது. விழிகள் மூடியிருந்தன. இன்னும் சிலர் வந்தனர். மெல்லக் கை பிடித்து இருக்கையில் இருந்து இழுத்து வெளியே நிற்க வைத்து சாலை ஓரத்துக்கு அழைத்துச் சென்றோம்.
வாகனங்கள் இரு பக்கமும் தேங்க ஆரம்பித்தன. அந்தக் காரை ஓரமாக நிறுத்துவதாகச் சொல்லிவிட்டு மெல்ல சாலையின் இடது ஓரத்திற்கு நகர்த்தும் போது, பின்னிருக்கையில் இருந்த இளவயது பெண்மணி “ஏனுங்.. போன் இருக்குங்ளா, ஒரு நெம்பருக்கு போட்டுக்குடுங்களேன்” என்றார். அவர் சொன்ன எண்களை ஒத்தி அவரிடம் கொடுத்தேன். பின் இருக்கையில் சிறுவயதுக் குழந்தை ஒன்றும், கைக் குழந்தை ஒன்றும் இருந்தன. ஓரமாய் நிறுத்திவிட்டு எல்லாக் கண்ணாடிகளையும் ஏற்றிவிட்டு அவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு எதிர்பக்கம் நகர்ந்தேன். ஒரு வீட்டு வாசலில் நாற்காலியில் அமர வைத்திருந்தவரைச் சுற்றிக் கூட்டம் மொய்த்தது. அப்படியே துவண்டு சரிந்திருந்தார்.

யாரோ அவர் முகத்தில் தண்ணீர் அடித்து, தண்ணீர் பாட்டிலைக் வாயில் வைக்க கொஞ்சம் பருகினார். மெல்ல தெளிந்து கண் திறந்தார்.

அந்தப் பெண்மணியை நோக்கி ”எதாச்சும் உங்களுக்கு டாக்டர் தெரியுமா, இல்ல பக்கத்துல எதாச்சும் டாக்டரைப் பார்க்கலாமா?” எனக் கேட்டேன்.
”டாக்டரு ஆரும் தெரியாதுங்ளே” என்றவர் கண் விழித்து சூழலைக் கவனித்த கணவன் மீது பாய்ந்தார்

“ஒன்னயத்தான் காரோட்ட வேண்டாம்… காரோட்ட வேண்டாம்னு சொன்னம்ல, நாளைக்கு போயிக்கலாம்லனு சொன்னா, கேட்டையா, ஒனக்கு எத்தன சொன்னாலும் ஏற்ரதேயில்ல” என முழங்க அவர் அப்படியே கண் சொருகித் தளர்ந்தார்.

“இப்ப ஏம்மா இப்படிச் சத்தம் போடுறீங்க… மொதல்ல ஆஸ்ப்த்திரிக்கு கூட்டிட்டுப் போற வழியப் பாருங்க என ஒருவர் அதட்டினார்
சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க எனும் குரல்களில் அந்தப் பெண்மணிக்கும் பதட்டம் கூடியது.

ஒருவர் ஓடிச்சென்று அவர்களின் காரை எடுத்து பின்பக்கமாக நகர்ந்து வலது புறம் திரும்பி அவரை அமர்த்தி வைத்திருந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.

மெல்ல அவரைப் பிடித்து வண்டியில் ஏற்றினார்கள்.
அரை மனதோடு நாங்களும் கிளம்பினோம்

நீண்ட நேரம் நண்பர் சுவாமி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார் “என்ன பொம்பளப்பா அது, இப்படித் திட்டுதே”

சமீபத்தில் பயணங்களில் ஓட்டுபவர்கள் நெஞ்சுவலியால் இறந்த செய்திகள் குறித்து எங்களிடையே பேச்சு ஓடியது. அந்தக் காரை பார்த்த கணத்தில் அந்தப் பெரியவர் சிலை மாதிரி அமர்ந்திருந்த கோலம் எனக்கும் வந்து வந்து போனது. அது மிரட்டலாகவும் இருந்தது.
நண்பர்களை வழியனுப்பும் பரபரப்பில் அந்தச் சம்பவம் நினைவிலிருந்து அகன்றுபோயிருந்தது. அடுத்த நாள் காலையில் என் கைபேசியை எடுத்துத் தேடினேன், முதல் நாள் மாலை 5.11 மணி சுமாருக்கு அழைப்பு சென்றிருந்த அந்தப் புதிய எண்ணிற்கு அழைத்தேன்

“ஏங்க நேத்தைக்கு சாயந்திரம், கார் ஓட்டிட்டு வந்த பெரியவர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமே போச்சே, இப்ப எப்படிங்க இருக்காரு”

நேற்று அழைத்திருந்த என் எண் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

”அண்ணா… அவரு நல்லாருக்காருங்… லோ பிரஷருங்க…. நட்ராஜ் டாக்டர்ட்ட போயி சரியாயிடுச்சுங்க. எங்க அக்கா மாமனாருங்க அவரு.”

”இனிமே அவரை கொஞ்சம் கவனமா இருக்கச் சொல்லுங்க… அப்புறம் அக்கா மாமியார்கிட்டே அவர ரொம்ப மெரட்டாதீங்கனும் சொல்லி வைங்க” என்றேன்

புரிந்து கொண்டு சிரித்தார்.

அதிவேகத்தில் செல்கையில் இப்படியேதும் நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே மனது அதிர்ந்தது. தினந்தோறும் நடக்கும் பலநூறு விபத்துகளில் ஒருசில இப்படிப் பட்ட உடல் நலக்குறைவாலும் நடக்கலாம் என்பதும் புரிந்தது.

நினைவு தளர்ந்து செயல்படா இக்கட்டில் ஆட்படுகையிலும், நடுரோட்டிலேனும் வண்டியை நிதானமாக நிறுத்திவிட்ட அந்தப் பெரியவரின் செயல் ஆச்சரியமாகவும் இருந்தது.

சிக்கல் வரும்போதும், தவறு நிகழும்போதும்…. அது எதனால் வந்தது, நிகழ்ந்தது என ஆராய்வதை விட்டு முதலில் மீள்வது எப்படியென மட்டுமே யோசிக்க வேண்டும் எனும் புத்திக் கொள்முதல் கிடைத்தது.

-

Jan 12, 2013

அதற்காக மன்னியுங்கள்!

என் மின்னஞ்சல் பெட்டியும் கை பேசியின் குறுந்தகவல் பெட்டியும் பொங்கல் வாழ்த்துகளால் நிறையத் துவங்கிவிட்டன. ஏனோ என்னால் எல்லா ஆண்டுகள் போலவும் வாழ்த்துகளைப் பரிமாற முடியவில்லை.

வீட்டிலிருந்து வரும் வழியெங்கும் பெருமாடி வீடுகளின் முன்வாசல் சரிவு சுண்ணாம்பால் கரை கட்டி, சாண நிறத்தில் மெழுகப்பட்டுக் கொண்டிருந்தது. பலவீடுகளில் நான் கடந்த மதியப் பொழுதில் பாட்டிகள் அந்த வேலையை செய்து கொண்டிருந்தனர். அந்தப் பாட்டிகளைப் பார்க்கும் பொழுதே அவர்களுக்கும் அந்த வீடுகளுக்கும் தொடர்பிருக்காத அந்நியம் தெரிந்தது. இந்த வீட்டு மகராசிகளோ, மகராசன்களோ எப்போது கடைசியாக சாணத்தைத் தொட்டிருப்பார்கள் என்றும் தோன்றியது. முதலில் அவர்கள் வீட்டு வாசலில் மொழுகுவது சாணம்தானா அல்லது மஞ்சகோபியா என்றும் சந்தேகம் வந்தது. நகர்புறத்தில் மருத்துவக் குணம் நிறைந்த சாணத்தின் மகிமை தெரியாத போதும், ஏதோ கடனேயென சாண நிறத்தில் இப்படி பூசிமொழுவது ஒரு சடங்காக இருக்கின்றது.

அலுவலகத்தின் அருகிலிருக்கும் சந்திப்பில், கிராமத்து மனிதர்கள் ஆவாரம் கொத்தும், பூளைப்பூடும் குவித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். காப்புக் கட்டு என்பதும் ஒரு கொண்டாட்டத்திற்குரிய நாள் தான். சிறுவயதில் இருக்கும்போது, அன்று காலையிலேயே யார் யார் எங்கே காப்புக் கட்டுவது என இடம் பிரித்தாகிவிடும் வீடு, கிணறு, மோட்டார் ரூம், கட்டை வண்டி, கட்டுத்தரைப் பந்தல், கலப்பை, வயலின் நான் பக்கம், எதாச்சும் ஒரு தென்னை மரத்துக்கு,  தோட்டத்தின் பக்கத்தில் இருக்கும் மானுவு பூமி கருப்புச்சாமி, மாரியம்மன் கோவில், விநாயகன் கோவில், பொட்டுச்சாமி என பனி படரும் பின்மாலை நேரத்தில் ஓடியோடி கையில் இருக்கும் ஆவாரம் பூ, பூளைப்பூ கட்டினை வைத்துவிட்டு சாமியும் கும்பிட்டு விட்டு ஓடிவரவேண்டும்.

அடுத்த நாள் பொங்கல். பொங்கல் நாளில் எப்போதாவது சூரியனுக்குப் பொங்கல் வைத்ததாய் நியாபகம், மற்றபடி கூடுதுறைக்கோ, குலதெய்வம் கோயிலுக்கோ, கொடுமுடிக்கோ சூழலைப் பொறுத்துச் சென்றுவருவதில் பொங்கல் நாள் கழிந்துவிடும்

ஆஹா… அடுத்த நாள்….. மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கலை நினைக்க போனவருடம் ”ஹேப்பி கவ் பொங்கல் சார்”னு ஒரு வெண்ணை ரொம்ப சீரியசாக வாழ்த்தியதுதான் நினைவுக்கு வருகின்றது. அவன் ஆங்கில மோகத்தில் தீயை வைக்க!

ரொம்ப நாட்கள் எங்கள் வீட்டில் இரண்டு எருதுகள் இருந்தன. கூடவே ஐந்தாறு உருப்படிகள் எருமை கன்று என. மாட்டுப் பொங்கல் அன்று எருது வைத்திருக்கும் கட்டுத்தரைகளில் அவைகளுக்குத்தான் கூடுதல் மரியாதை. வாய்க்காலில் தேய்த்துத் தேய்த்து குளிக்கவைத்து  எருதுகளுக்கு பெயிண்ட்டும், எருமைகளுக்கு காவிக்கல்லும் பூசி, பொங்கல் வைத்து பூசை செய்து கொண்டாடிய காலம் நினைவில் படிந்து கிடக்கிறது.

அடுத்த நாள் கறிநாள்…. பெரும்பாலும் அன்றைக்கென்று பார்த்து ஏதாவது உறவில் கெடாவிருந்து வந்துவிடும்.

இப்படிக் கழிந்த பொங்கல் பொழுதுகள், சமீப ஆண்டுகளில் சாயம் நீர்த்துப்போய் மிக மிக அவசரமான ஒரு விடுமுறை நாட்களாக நகர்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் பரவாயில்லை. திருமணமான காலம் தொட்டு எல்லா விசேசங்களுக்கும் முதலில் மாமியார் வீட்டுக்கு செல்லத் தொடங்கியதால் தீபாவளி, பொங்கல் என பொழுதுகள் அங்கேதான் விடியத் துவங்குகின்றன. அது கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதால் குழந்தைகளும் நிரம்பியிருப்பதால் சில வருடங்களாக நாங்கள் அனைவரும் சேர்ந்து பொங்கலன்று வெண்கலப் பானையில் பொங்கல் வைத்து குதூகலமாய்க் கொண்டாடிவிட்டு மாட்டுப் பொங்களுக்கு எங்கள் தோட்டத்திற்கு ஓடிவிடுவதுண்டு.

மாட்டுப்பொங்கல் மாடுகள் அல்லாத பொங்கலாகவே மாறிப்போய்விட்டன. உழவுக்கு மாடுகள் இல்லாததால் எல்லாம் எருமைப் பொங்கல் என்றே மாறிவிட்டன.

*



இதோ இன்று மாலை முதற்கொண்டே எப்போது ஊருக்குக் கிளம்பலாம் என மனைவியும் மகளும் பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். வாரத்தின் முதல் பாதியை பண்டிகை ஆளுமை செய்ய முயல்வதால் முடிக்க வேண்டிய வேலைகள் அழுத்துவதையும் விட, அங்கு போய் என்ன செய்யப்போகிறோம் என்ற சுமையே என்னை இன்னும் கிளம்பவிடாமல் செய்கின்றது.

எங்கள் பகுதி காவியிரின் நேரடிக் கால்தடம் பதியும் பகுதி. காய்ந்து கிடக்கின்றோம். மனிதன் இயற்கைக்கு இழைத்த அநீதிக்காக சிறுதண்டனையாக தன் மடியை இறுக்கிக் கொண்டது மேகம். ஏற்கனவே அவள் தந்தததை, அரசியல் விளையாட்டிலும் அடிபட்டு அடிமையாய்க் கிடக்கிறாள் காவிரி கர்நாடகத்தில். மேட்டூரும், பவானி சாகரும் தாங்களே தாகத்தில் இருக்க, எங்களுக்கு எப்படி தாகம் தீர்க்க நினைப்பார்கள்.

காவிரியில் நீர் வராத வருடங்களை எப்பொதோ சந்தித்ததுண்டு. சமீப ஆண்டுகளில் கண்ணுக்கு எட்டியவரை பசுமை நீண்டு கிடந்த என் ஊரும் தடமும் வறண்டு கிடக்கின்றன. பொங்கல் எனும் வார்த்தையை நினைக்ககூட சங்கடமாகவே இருக்கின்றது. இந்த ஆண்டு வராமலே போயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

எப்போது கிராமத்தில் நுழைந்தாலும் மலர்ந்த முகத்தோடு எதிர்ப்படும் மனிதர்களும், வறண்டு கிடக்கும் முக்கால் வாசி நிலங்களின் வெறுமையும் எதோ ஒரு சோகத்தை மனசு முழுக்க பூசுவதை எப்படித் தவிர்க்கப் போகிறேன்.

பத்து பதினைந்து வருடங்களாக குடும்ப அட்டைக்கு இலவச சேலைகள் கொடுத்து வந்த அரசு இந்த வருடம் அரிசி வெல்லம் கூட 100 ரூபாயும் நொட்டுகிறது.

இலவசமாக கிடைப்பதை ஏன் விடவேண்டும் என்றுதான் இதுகாறும் வாங்கினார்களே தவிர, எவர் ஒருவரும் விரும்பிச் சென்று வாங்கியதாக அறியவில்லை. எங்கள் பகுதிகளில் டோர் சீலை (ஸ்டோர்-ரேசன் கடை) என்றே அதைக் குறிப்பிடுவதுண்டு. எப்போதாவது காட்டு வேலைக்குப் போகும் போதும், மாற்றுச் சீலையாகவும், பந்திவிரிக்கவும், அரிதாக தொட்டில்கட்டவும் அதை ஒரு பண்டாமாகப் பயன்படுத்தினார்களே ஒழிய ஒருபோதும் அதை கலைஞர் சீலை, ஜெயலலிதா சீலை என்று பெருமையாக ஒரு நல்ல இடத்திற்கு உடுத்திக் கொண்டு போனதாக நான் அறிந்ததில்லை.
இதோ இந்த ஆண்டு அதே டோரில் அரிசி வெல்லம் கூட கார்டுக்கு 100 ரூபாய் என மகத்தான புதுமையைப் புகுத்தியுள்ளது அரசாங்கம். கொடுப்பதை ஏன் விடவேண்டுமென எல்லோரும் பெற்று வந்திருப்பார்கள். சில வீடுகளில் அது அன்று மாலையே டாஸ்மாக் மூலம் அரசாங்கத்திற்கே வள்ளல் தன்மையோடு வழங்கப்பட்டிருக்கும். எங்கள் சனத்தில் எத்தனை பேர் அதில் பொங்கல் பொங்கித் தின்று செரிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

இந்த வருடம் காப்புக்கட்டு மந்தமாகவே நடைபெறும். பொங்கலன்று எங்காச்சும் கோவிலுக்கு போனாலும் போவார்கள் அல்லது இருக்கும் நிலத்தில் கொஞ்சம் மட்டும் கடலையோ, சோளமோ போட்டுவிட்டு இரவு பகலாக கரண்டுக்கு காத்திருந்து காத்திருந்து மோட்டார் போடும் விவசாயிகள் பொங்கலன்று கிடைக்கும் தடையற்ற மின்சாரத்திற்கு கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்.

மாட்டுப் பொங்கலன்று இருக்கும் எருமை மாட்டுக்கு ஏனோதானோவெனப் பூஜை போடும்போதே கரைந்துபோய் கொஞ்சமாய் இருக்கும் வைக்கோல் போர் வயிற்றில் புளியைக் கரைக்கும். சுத்துப்பட்டு எந்தப் பகுதியிலும் நெல் விளைச்சல் இல்லை, தீவனம் காசு கொடுத்துக்கூட வாங்க வழியில்லை எனும் உண்மை மனசுக்குள் உதைக்க அடுத்த வருட பொங்கல் வரைக்கும் இருக்கும் மாடுகன்றுகளை எப்படித் தாட்டுவது எனும் உளப்போராட்டம் இந்த 160 ரூபா பஞ்சப்படியில் தீர்ந்துவிடாது.

காய்ந்த நிலங்களையும், குடிதண்ணீருக்கு மட்டும் மிஞ்சியிருக்கும் கிணற்று நீரையும், தீவனத்திற்கு விடைதெரியாமல் அடுத்த வருடம் கட்டுத்தரைகளில் இதே உருப்படிகள் இருக்குமா என்ற சந்தேகத்தை மடியில் சுமக்கும் எருமை மாடுகளையும் கொண்ட என் கிராம்த்து உறவுகளின்

”என்ன பண்றது, மழையும் இல்ல, வாய்க்காத் தண்ணியும் வரல, இருக்கிற தண்ணிய கட்றதுக்கு கரண்டும் வர்றதில்ல” என ஒலிக்கவிருக்கும் ஜீவனற்ற குரல்களின் மத்தியில் என்னால் நீங்கள் ”ஹேப்பி பொங்கல்” என வண்ணமயமாக விடுக்கும், மின்மடல் குறுந்தகவல்களுக்கு திரும்ப மனதார நன்றி கூறி வாழ்த்துச் சொல்லமுடியவில்லை மனிதர்களே.

அதற்காக மன்னியுங்கள்…


மற்றபடி உங்கள் அனைவருக்கும் உதட்டளவில் ”ஹேப்பி பொங்கல்”


மரபுகளையும் உண்மையான மகிழ்ச்சியையும் வெகுவேகமாகத் தொலைத்த நாம், அவசர அவசரமாய் மாற்றும் தொலைகாட்சிச் சானல்களில் கிடைக்கின்றதான் ஏதாவது சினிமா நட்சத்திரன் மாயாஜாலத்தில் கிடைக்கிறதா எனத் தேடுவதையும் நிறுத்திவிடவேண்டாம்.

----

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...