அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?

திருவையாறு...
இத்தனை ஆண்டுகாலமும் கேள்விப்பட்ட ஒரு ஊர் பெயர் மட்டுமே. ஒரே ஒரு முறை மட்டும் பெரம்பலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நாகப்பட்டினம் செல்லும் வழியில் அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடையே திருவையாற்றினைக் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த ஊரின் திருப்பத்தில் அசோகா இனிப்பு சாப்பிடுவதற்காக காவிரி ஆற்றின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து சாப்பிட்டது தவிர வேறெதுவும் தெரியாது.
இந்தச் சூழலில்தான் திருவையாறு அரசர் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்கள். அதன் நிமித்தமாக கவிஞர்.கிருஷ்ணப்பிரியா முன்னெடுப்பில் அங்கிருந்து ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திரு. குப்பு வீரமணி அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவே சென்றடைந்த என்னை நட்புகளோடு வரவேற்றார். அன்பாக உபசரித்தார்.
நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் முடிந்தவரை பங்கேற்பாளர்களின் நிலை, பின்புலம், தேவை ஆகியவற்றை அறிந்துகொள்ள முற்படுவேன். அதன் காரணமாகவே முந்தைய தினமே திருவையாறு சார்ந்த யாரும் இருக்கிறீர்களா என ஃபேஸ்புக்கில் கேட்டு சிலரிடம் தகவல்கள் பெற்றிருந்தேன். எனினும் முழுமையான வடிவம் கிட்டவில்லை. திருச்சியிலிருந்து கல்லணை வழியாக ஆற்றையொட்டியே பயணப்பட்டத்தில் நான் கடந்தது அத்தனையும் கிராமங்கள். அங்கும் சுற்று வட்டமும் கிராமங்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மூன்று மணி நேர அமர்வு என்பதால் LCD வேண்டுமெனக் கேட்டிருந்தேன். இரவுதான் அந்த வசதி இல்லையெனக் கூறியிருந்தார்கள். ஆகவே உரை மற்றும் உரையாடலாவே சமாளிக்கும் மனநிலைக்கு மாறத் துவங்கினேன்.
கல்லூரியின் வரலாறு சற்றே சுவாரஸ்யமாக இருந்தது. சரபோஜி மன்னரின் அந்தப்புர மாளிகையாக இருந்த கட்டிடத்தில் சமஸ்கிருத பட்டப்படிப்பு துவங்கப்பட்டிருக்கின்றது. சத்திரம் எனும் நிர்வாகத்தின் வாயிலாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரி. தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி என்று மட்டும் இதுவரை பார்த்து வந்த எனக்கு ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் கல்லூரி என்பது ஆச்சரியமாக இருந்தது.
காலையில்தான் அந்தக் கல்லூரியில் இருக்கும் பாடப்பிரிவுகள் தெரியவந்தன. இளங்கலை தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் முதுகலை தமிழ் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. அரங்கு குறித்து விசாரித்தபோது, அடுத்த இடி இறங்கியது. நாற்காலி வசதி இல்லை, அனைவரும் கீழேதான் அமர வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.
நிலத்தில் அமர்வது அவர்களுக்குப் பழகியிருந்தாலும், பயிற்சியாளராக எனக்கு நாற்காலிகளில் அமர்த்தப்படாத பிள்ளைகளிடம் உரையாடுவது பெரும் சவாலானது. கீழே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் நடப்பது, எந்நேரம் கழுத்து வளைந்தபடி நம்மையே அவர்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது எல்லாமே சிரமத்திற்குரியது.
LCD இல்லை, நாற்காலிகள் இல்லை. தலைக்கு மேலே வெள்ளம்... இனி சாண் என்ன முழமென்ன என்ற மனநிலையில் இருந்தேன்.
நிகழ்ச்சி குறித்த எந்த விளக்கங்களுமின்றி, எல்லோரும் மீட்டிங் ஹால்ல உட்காருங்க என்றுதான் அழைத்து வரப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்துகொண்டேன். அனைத்து மாணவிகளும் நிலத்தில் அமரவைக்கப்பட்டிருக்க, மிகச் சொற்பமாய் இருந்த மாணவர்கள் மட்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் பெருந்தொகையான மாணவிகளுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் என்பது ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகவும் படிப்பு என்ன பெரிய படிப்பு என்ற மனநிலை இருந்திருக்கலாம்.
என்ன நிகழ்ச்சி என்று தெரியாது, எப்போது முடியுமென்று தெரியாது, பேசுபவர் குறித்தும் அறிமுகமில்லை, நிலத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதுள்ளிட்ட எந்தக் குறையும், குழப்பமும் இல்லாமல் அந்த மாணவிகள் தம் பார்வைகளில் ஒரு கூர்மையைத் தக்க வைத்திருந்தனர்.
முதல் நாள் பயணம், இரவு உறக்கமின்மை, ஏற்பாடுகளில் சில தடுமாற்றங்கள் என என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை அலுப்பு, சலிப்புகளையும் சில நிமிடங்களில் துடைத்தெறியும் வீரியம் அவர்களிடமிருந்தது. உதிர்க்கும் ஒவ்வொரு சொற்களையும் தனக்குள் பத்திரப்படுத்தும் பசி அவர்களிடமிருந்தது. முந்தைய நிகழ்வுகள் எத்தனையோ மனதிற்குள் நிழலாடினாலும், இவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.


ஒன்னரை மணி நேரம் கழிந்து தேநீர் இடைவேளை விட்டபோது, சூழ்ந்து கொண்டு “அவ்ளோதானா சார், பேசமாட்டீங்ளா சார்?” எனக் கேட்டார்கள். ஆச்சரியமாக ஏன் எனக் கேட்டேன். “கொஞ்சம் தான் பேசியிருக்கீங்க, ப்ளீஸ் சார் நிறையப் பேசுங்க சார்!” எனக் கெஞ்சலாகக் கேட்டதை இங்குதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஆட்டோகிராஃப் வாங்க குவிந்தவர்களிடம், (அது ஒரு ஆர்வ விளைவு மட்டும்தானே) இதை வாங்கி என்ன செய்யப்போறீங்க எனக்கேட்டேன் “என்னைப் பத்தின வரையறையை அதில் எழுதி வச்சுக்குவேன்” என்றார்கள் பலரும்.
இத்தனை நெகிழ்வான அனுபவத்திற்கு முக்கியக் காரணமாக இருந்த கவிஞர்.கிருஷ்ணப்ரியா மற்றும் திரு. குப்பு வீரமணி ஆகியோருக்கு ப்ரியம் நிறைந்த நன்றிகள். நிகழ்விற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு தஞ்சையிலிருந்து தமது கணவரோடு வந்து கலந்துகொண்ட கவிஞர் கிருஷ்ணப்பிரியா பேரன்பிற்கு உரியவர். எழுபது வயதுகளைக் கடந்திருந்தாலும், அச்சு அசலான இளைஞருக்குரிய ஆர்வத்தோடு எல்லாவற்றிலும் செயல்பட்ட அய்யா குப்பு வீரமணி அவர்கள் மிகப் பெரும் ஆச்சரியத்துக்குரிய முன் மாதிரி.
நிறைவாக பல மாணவிகளை ஒன்று திரட்டி ஒரு குழு நிழற்படம் எடுத்தார் இலக்கியத் தடம் அமைப்பைச் சார்ந்த குணா ரஞ்சன் அவர்கள். அதில் ஒரு மாயம் செய்யப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


No comments: