இலங்கைக்கும்
இந்தியாவிற்கும் நேர வேறுபாடில்லையெனினும்,
மட்டக்களப்பு கொல்கொத்தாவிற்கு நேர்கோட்டில் இருக்கும் நிலப்பரப்பு என்பதால்
விடியல் முன்கூட்டியே நிகழ்ந்துவிடும். ஆறு மணிக்கு முன்பாக நல்ல
வெளிச்சத்தைக் காண முடியும். நொடிப்பொழுதில் கரைந்தது போல் இருந்தது
அன்றைய இரவு. விழித்தவுடன் அன்றைய இரண்டு நிகழ்வுகளும் மனதை ஆக்கிரமித்திருந்தன.
முறையாக நான்
காலை 7.30 மணிக்கு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் இருக்க வேண்டும்.
A–Level என்றழைக்கப்படும் Advanced Level பிள்ளைகளுக்கான
பயிலரங்கு. தமிழகத்தின் +2 மாதிரி,
ஆனால் அங்கு மொத்தம் 13 வருடங்கள் படிக்க வேண்டும்.
A–Level தேர்வில் பெறும் மதிப்பெண் / தரத்திற்கு
ஏற்ப அவர்கள் யுனிவர்சிட்டிக்கு செல்வார்கள். சிசிலியாவில் A–Level
பயிலும் மாணவிகளுக்கு பயிலரங்கு.
இங்கு திட்டமிடப்பட்ட நேரம் காலை 8 முதல்
11 மணி வரை. அன்றே மதியம் 3 மணி முதல் 6 மணி வரை அங்கேயே சிசிலியா பெண்கள் கல்லூரி
தேசிய பாடசாலை மற்றும் புனித மைக்கேல் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்குப்
பயிலரங்கு.
முன்கூட்டியே
சிசிலியா கல்லூரி அதிபர்
(முதல்வர்) அருட்சகோதரி. மேரி சாந்தினி அவர்களிடம்,
ஞாயிறு இரவுதான் வந்து சேருவேன் என்பதால், துவங்கும் நேரத்தை மட்டும்
8.30 அளவில் வைத்துக்கொள்ளலாமா என அனுமதி கேட்டிருந்தேன்.
அவரும் உங்கள் வசதிப்படி வாருங்கள் என அனுமதித்ததால், காலையில் நேர நெருக்கடி எதுவுமில்லை. காலையில் அழைத்து 9 மணிக்கு வந்து சேர்ந்துவிடுவதாகக்
கூறியிருந்தேன்.
2015 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தில் பணியாற்றும் பலதரப்பட்ட தமிழ் உறவுகளை பல்வேறு தருணங்களில்
சந்தித்திருந்தாலும், கடந்த ஆண்டுதான் யாழ்ப்பாணத்தில்
A–Level பிள்ளைகளை முதன்முறையாக சந்தித்திருந்தேன்.
ஆகவே இந்த ஆண்டு தொடர்ந்து ஐந்து நாட்களில் ஏழு இடங்களில் விதவிதமான
பிள்ளைகளையும், இரண்டு அமர்வுகளில் அவர்களின் ஆசிரியர்களையும் சந்திப்பது குறித்து சுவாரஸ்யமும் மென் அழுத்தமும் ஒருங்கே கலந்திருந்தன.
நண்பர் கண்ணன் என்னை
சிசிலியா பெண்கள் கல்லூரிக்கு அழைத்து வந்தார். வாயிலிலேயே கல்லூரியின் அதிபர் இருந்தார். மிகுந்த வாஞ்சையுடன் கூடிய
வரவேற்பு அன்றைய தினத்திற்கு நல்ல துவக்கமாய் அமைந்தது. சில நிமிட உரையாடல்
மற்றும் தேநீருக்குப் பின் அரங்கிற்குச் சென்றோம்.
அருட்சகோதரி. மேரி சாந்தினி அவர்கள் வரவேற்பு மற்றும் அறிமுகம் வழங்க பயிலரங்கு தொடங்கியது. மாணவிகள் அரங்கு முழுக்க நிரம்பியிருந்தனர். இந்தியாவில் இருந்து வந்திருக்கும் ஒருவரைச் சந்திப்பது அவர்களுக்கு பல்வேறு மனநிலைகளைத் தந்திருக்கலாம். முதலில் இது என்னவாக இருக்கும் என்பது போன்ற தயக்கம் இருந்தாலும், சிறிது நேரத்தில் என்னோடு இணைந்து பயணிக்கத் தொடங்கினர். மொழியைப் பொறுத்த வரையில், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் புண்ணியத்தில் என் தமிழ் அவர்களுக்கு முழுக்க விளங்கும். அவர்களின் தமிழை மட்டும் ஓரிரு நாட்களுக்கு நான் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். நிகழ்வில் அனைத்து மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் கூடிய பங்களிப்பை இடைவிடாது வழங்கினார்கள்.
பயிலரங்கின்
இடைவேளைக்குப் பின்புதான் கவனித்தேன் அந்த மாணவியின் முகத்தை. நட்பு குடும்பம்
ஒன்றின் மூத்தவள். முல்லைத்தீவுப் பகுதியில் போரில்
மிகுந்த பாதிப்படைந்து, மீண்டு மட்டக்களப்பில் வாழ்க்கையை தொடங்கிய
குடும்பம். சில ஆண்டுகளுக்கு முன்பு என் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்த
பெண் குழந்தை அவள். அங்குதான் படிக்கிறாள் எனக் காலையிலேயே அவர்
தந்தை குறிப்பிட்டிருந்தும், அது நினைவில் இருக்கவில்லை. இடைவேளைக்குப்
பிறகுதான் அந்த முகம் பளிச்செனப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில்
மகிழ்வோடு கை குலுக்கி நன்றி சொல்ல அலையலையாய் வந்த மாணவிகளில் அவளும் வர, கை பற்றி ஏன் முன்னமே
வந்து பேசல எனக் கேட்க மலர்ந்து சிரித்தாள். வளர்ந்தோங்கி கல்வியில் நல்ல இடம் பிடித்தது குறித்து மகிழ்ச்சியாக
இருந்தது.
மதியம் 1 மணியளவில் பயிலரங்கு நிறைவடைய, மனதும் திருப்தியில் நிரம்பியது.
ஆனால் முந்தைய நாள் இரவு 12 மணிக்கு சாப்பிட்டிருந்ததால்,
காலையில் உணவைத் தவிர்த்திருக்க பசி உயிரைத் தட்டிக் கொண்டிருந்தது.
வாங்க சாப்பிடலாம் என்ற அழைப்பிற்கு பாய்ந்து சென்றேன் என்றே
சொல்லலாம்.
அருட்சகோதரி
முன்னின்று பரிமாறத் தொடங்கினார்.
”மட்டக்களப்பு ஃப்ரெஷ் மீன்” என்று சுட்டியதைக்
கண்டபோதுதான், அவர் காலையில் ”வெஜ் ஆர்
நான்–வெஜ்” எனக் கேட்டதற்கு நான் வழக்கம்போல்
குறும்பாக “ப்யூர் நான்-வெஜ்” எனச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. மிக மிக திருப்தியான
உணவு. நாவைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் சாப்பிட்டுக் கொண்டேயிருக்க
உள்ளுணர்வு மதியம் நடத்த வேண்டிய பயிலரங்கை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது.
உணவுக்குப்பின்
ஆசிரியர்களுக்கான பயிலரங்குத்
தயாரிப்பைச் செதுக்குவதற்கு ஒதுக்கிக் கொண்டேன். மூன்று மணிக்கு பயிலரங்கு தொடங்கியது. சிசிலியா கல்லூரியின்
ஆசிரியர்கள் மற்றும் மைக்கேல்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் அரங்கில் நிரம்பியிருந்தனர்.
ஆசிரியர்களுக்கான
பொதுவான சவால் என்பது,
பயிலரங்கு போன்ற அமர்வுகளில் தொடர்ந்து அமர்ந்திருத்தல். வகுப்புகளில் பெரும்பாலும் நிற்க வேண்டிய ஆசிரியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து அமரும் சூழல் வரும்போது அதைக்
கையாள மிகவும் சிரமப்படுவார்கள் என்பதே என் புரிதல். வழக்கமாக
பள்ளி நேரம் மதியம் 1.30க்கு முடிந்து விடும். ஆனால் இந்தப் பயிலரங்கிற்காக மூன்று மணி நேர மாலைப் பொழுதை ஒதுக்கவேண்டியிருந்ததே அந்த ஆசிரியர்களுக்கான மிகப் பெரிய சவால் என நான் நினைத்துக்கொண்டேன்.
அவர்களுக்கும்
பயிலரங்கு குறித்து யோசனைகளும்,
சந்தேகங்களும் இருந்திருக்க வேண்டும். முதலில்
அடர்த்தியான அமைதியோடு இருந்தவர்கள் நேரம் செல்லச் செல்ல இணைந்து
பயணிக்கத் தொடங்கினர். இறுதியாக ஆசிரியர்களோடு விதவிதமாய் நிழற்படங்கள்
எடுத்துக் கொள்ள இரண்டாம் நிகழ்வு நிறைவாய் அமைந்தது.
பிள்ளைகளுக்கான
அமர்வில் என்னை அறிமுகப்படுத்தியதோடு அதிபரும், ஆசிரியர்களும் சென்றுவிட, அந்த ஸ்பேஸ் மாணவிகளைப் பேச அனுமதிக்கும் வாய்ப்பாக அமைந்தது. அதே நேரம் ஆசிரியர்களுக்கான அமர்வில் பங்கெடுத்த அதிபர், தன்னை அதிபராக மட்டும் கருதிக் கொள்ளாமல், இயல்பான
பங்கேற்பாளராக மாற்றிக்கொண்டு, தான் ஒரு உதாரணமாக
விளங்கினார். கேள்விகள் விழும்பொழுதெல்லாம் முனைப்போடு பதில்
தருவதும், மற்றவர்களைப் பேசத் தூண்டுவதுமாய் அந்த அமர்வை மிக
இயல்பாக்கிய பெருமை அருட்சகோதரி. மேரி சாந்தினி அவர்களையே சாரும்.
எல்லாம் நிறைந்து
மகிழ்ந்து, நெகிழ்வாய் விடைபெறும்போது, எங்கே செல்ல வேண்டும் எனக்
கேட்டு ஒரு ஆட்டோ வரவழைத்தார். இடம் அடைந்து எவ்வளவு என ஓட்டுனரிடம்
கேட்க, “சிஸ்டர் வாங்க வேண்டானு சொல்லிட்டாங்க. மீறி வாங்கினா திட்டு விழும்” என மறுத்து யூ-டர்ன் அடித்தார் ஓட்டுனர்.
No comments:
Post a Comment