சேர்... என்னையெல்லாம் மறந்துடுவீங்கதானே!?


முந்தைய தினம் மாணவிகளிடம் பெற்றிருந்த பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் எனும் தெம்பு வந்தது. அதுவே உறக்கத்தைத் தள்ளிப்போட்டது, அதுவே பின் ஆழ்ந்த நித்திரையைக் கொடுத்தது. அதுவே விரைந்து நித்திரை கலைய ஆணையிட்டது

செவ்வாய் காலை  கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் மதியம் ஒரு மணிக்கு கரடியனாறு மகா வித்தியாலத்தில் இருக்க வேண்டும் என்பதால் முடிந்தவரை காலை நிகழ்ச்சியை முன்கூட்டியே முடிக்க நினைத்திருந்தேன். பள்ளி அதிபர் திருமதி.பிரபாஹரியிடம் நான் ஏழு மணிக்கே தயாராக இருப்பேன், முடிந்தவரை 11 மணிக்கு முன்னதாக முடிக்க விரும்புகிறேன் எனக் கூறியிருந்தேன்.

அழைத்துச் செல்ல இரண்டு ஆசிரியர்கள் ஆட்டோ ஒன்றில் வந்திருந்தார்கள். கல்லடி பகுதியில் அன்று வழமையான பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் என்பதால் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு 8.30க்கு தொடங்கியது.


வரவேற்கும் விதமாக இரண்டு மாலைகளை அணிவித்து அழைத்துச் சென்றதில் சற்று மிரண்டுதான் போனேன். மட்டக்களப்பு செல்லும் முன்பே அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து சில காணொளிகளைத் தேடிப் பார்த்ததில், விழாக்களில் இப்படி மாலையிடுவதை அறிந்திருந்ததால், அதனை ஒருவகையில் புரிந்துகொண்டாலும், கூச்சம் வழிந்தோடியது. உடனே கழட்டி விடலாமா என அனுமதி கேட்டேன். சிரித்துக் கொண்டே மறுத்தார்கள். அரங்கினுள் நுழைந்து அதிபர் திருமதி.பிரபாஹரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தும் வரை கழுத்தில் வைத்திருந்து கழற்றியதும் அப்பாடா என்றானேன்.



Advanced Level தேர்வுக்கு தயாராகும் உற்சாகமான மாணவிகள் மிகுந்த உத்வேகத்தோடு பங்கெடுத்தார்கள். உரையாடல்களில் உடன்பட்டனர். கேள்விகளைத் தொடுத்துவிட்டு ஒருவரை எதிர்பார்த்தால், நால்வராக முன்வந்தனர். இடைவேளையின்றி மூன்று மணி நேரம் ஒரே வேகத்தில் நகர்ந்தது அமர்வு. நிறைவடைந்ததும் தானாக ஒரு மாணவி முன் வந்து மைக் வாங்கினார். “என்னம்மா விசயம், நன்றியுரை கூற உங்களைப் பணித்திருக்காங்களா!?” என்றேன். ”இல்லை, நானாகத்தான் வந்திருக்கேன்என்றபடி நிகழ்ச்சி குறித்த தம் கருத்தைச் சொல்லத் தொடங்கினார். தேர்ந்தெடுத்த சொற்களில் நிதானமாய் தான் உள்வாங்கியதை மொழிந்தார்.



விடைபெறும் பொழுதுஅந்தப் பள்ளியில் படிக்கும் A-Level மாணவியொருவர் கல்லடி பாலத்தின் அருகே நீரில் இறந்து கிடந்ததாககனமாக செய்தியொன்றைப் பகிர்ந்தார்கள். உயிரோடிருந்திருந்தால் அவளும் இன்றைய அமர்வில் இருந்திருப்பாள் என்பது எனக்கு கனம் கூட்டியது. அந்தப் பெண் கரடியனாறு பகுதியைச் சார்ந்தவர் என்பதால் அதே செய்தி அங்கும் உரையாடப்பட்டது.

மதியம் கரடியனாறு பள்ளி நிகழ்விற்கு அழைத்துச் செல்ல ZOA தொண்டு அமைப்பைச் சார்ந்த நண்பர் ஜெயந்தன் காத்திருந்தார். நேரத்தின் அருமை கருதி, வேறொரு கூட்டத்தில் இருந்த அதிபரைக்கூட சந்திக்காமல் அவசரமாக விடைபெற்றேன்.

மட்டக்களப்பில் மதிய உணவை முடித்து கரடியனாறு நோக்கிப் பயணம் தொடங்கியது. உள்ளடங்கிய கிராமப் பகுதி. 2009ல் இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப்பட்ட பகுதி. எங்கு நோக்கினும் வயல்வெளி. சாலைகளில்  மனிதர்கள் அரிதாகவே தென்படுகிறார்கள். செல்லும் வழியில் ஓரிடத்தில் தொல்லியில் துறையினர் ஏதோ ஆய்வு மேற்கொண்டிருந்தது தெரிந்தது.

நூற்றாண்டுகளைக் கடந்த கரடியனாறு மகா வித்தியாலம் பள்ளியை அடைந்தோம். அங்கே Advanced Level பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவென்பதால், மட்டக்களப்பு மேற்கு வலையத்தில் உள்ள மற்றொரு பள்ளியிலிருந்தும் பிள்ளைகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆர்வத்தில் 9,10ம் வகுப்பு பிள்ளைகளும் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளி நேரம் முடிந்தபிறகு, சிறப்பு நிகழ்வாக பிள்ளைகள் அழைத்து அமர வைக்கப்பட்டிருந்தனர். Advanced Level பிள்ளைகள் மட்டுமே இலக்கு என்பதால், மற்ற வகுப்பு பிள்ளைகளை அனுப்பிட வேண்டினேன். ஒரு வழியாக 9ம் வகுப்பு பிள்ளைகளை அனுப்பி வைக்க மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் பறந்தனர். முதன்முறையாக இருபால் பிள்ளைகளை இங்கு சந்திக்கிறேன்.

ZOA சேவை அமைப்பினர் பெரும் பிரயத்தனம் எடுத்து மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். Projector, Audio, பிள்ளைகளுக்கான Refreshments என அனைத்தும் சிறப்பாக இருந்ததால், அதுவே பெரும் துணையாய் அமைந்தது. கிராமப்புற பிள்ளைகள் எப்போதும் தயக்கங்களை உடைத்து முன்வருவார்கள். எதையும் பற்றிக்கொள்ளும் தகிப்பு அவர்களிடம் பலம். அவ்விதமே இரண்டு பள்ளிகளின் பிள்ளைகளும் உத்வேகத்தோடு பங்கெடுத்தனர். தொடர்ச்சியான இரண்டாவது நாள், கல்லடியிலிருந்து பயணித்து வந்தது என அனைத்து களைப்பையும் அந்தப் பிள்ளைகள் தம் உற்சாகமான பங்கேற்பால் முறியடித்து இனிய பொழுதாக்கினர்.



உண்மையில் பள்ளி நேரம் மதியம் 1.30க்கு முடிய அதன்பின் ஒரு பயிலரங்கில், யார், எதற்கு, எவ்வளவு நேரம் என்றெல்லாம் தெரியாமல் முதன்முறையாக அமர வைக்கப்படுவது சலிப்பேற்படுத்தக்கூடியதே. எனினும் அவர்கள் அமர்ந்திருந்தனர், நிறைய உரையாடினர், குதூகலமும் கொண்டாட்டமுமாய் கொண்டு சென்றனர்.

விடைபெறும்போது ஒவ்வொருவரும் ஓடி வந்து கை பற்றி பேசத் தொடங்கினர். ஒரு மாணவன் புன்னகையோடு தயங்கித் தயங்கி வந்தான். ”என்ன தம்பி உள்ளதான் இருந்தியா... முகமே காட்டல!” என்றபடி கை நீட்டினேன். கைகளெங்கும் தழும்பு. ”என்னது... இத்தனை தழும்பு?” என்றதற்கு, ”இதெல்லாம் விழுப்புண்கள் சேர்!” என அழுத்தமாய் புன்னகைத்தான். ”நல்லா படி... உயரத்துக்குப் போ!” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. மகள் வயதொத்த ஒரு பெண் ஓடி வந்தாள், “சேர்... என்னையெல்லாம் மறந்துடுவீங்கதானே!?” ஏக்கம் தொணிக்கும் கேள்வி. ஆயிரங்களில் பிள்ளைகளைச் சந்தித்துக் கடப்பதால் மறந்துவிடுவது வெகு இயல்பானது. என்ன சொல்ல? “தொடர்பில் இரு மா... நினைவு வச்சிருப்பேன்!” ன்றேன். இணையத்தின் வழி தொடர்பில் இருக்கிறாள். அனைவரிடமும் நெகிழ்ந்து விடைபெற்றேன்.




வாகனம் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டது. ஓட்டுனர் போர் நிகழ்ந்த கால வாழ்வு குறித்த சில நினைவுகளை, இடங்களைச் சுட்டி சொல்லிக்கொண்டே வந்தார்.

கல்லடியை அடைந்தபோதும் மனம் கனத்தே இருந்தது. ஆனால் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் எனும் நிம்மதியும் அந்த கனத்தினூடே கலந்திருந்தது.

இரண்டு நாட்களின் நிறைவில் திருப்திக்கு நிகரான களைப்பு இருந்தது. இதுவரை இப்படி இரண்டு நாட்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கிய அனுபவம் உண்டு. மூன்றாம் நாள் தொடரும்போது குரல் பாதிக்கப்பட்டிருக்குமா? மூன்றாவது நாளும் சுமார் ஏழு மணி நேரம் நின்று பயிலரங்கு நடத்தமுடியுமா என்றெல்லாம் லேசான சந்தேகம் இருந்தாலும், இரண்டு நாட்களைக் கடந்த மகிழ்ச்சி, எடுத்த பொறுப்பில் பாதியை நெருங்கியிருக்கும் தெம்பு அடுத்த நாளை எதிர்கொள்ள ஆயத்தமாக்கியது.









2 comments:

poongs said...

இன்னும் பல குழந்தைகளின் வாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்ற வாழ்த்துகள்ங்க கதிர்.

Dineshkumar KK said...

கதிர், அருமை ஒவ்வொரு குழந்தைகளின் சந்தேகங்களும், கவலைகளும், பயமும் தங்களால் இயன்ற அளவு தீர்க்க முடிந்தது அறிந்து மகிழ்ச்சி! பிள்ளைகளின் பின்னூட்டம் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!👍💐