மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளுக்காக
விடியலே உற்சாகமாக இருந்தது. இன்றைய தினத்தை நிறைவு செய்தால் பாதிக்கும் மேல் தாண்டிவிட்ட
திருப்தி வந்துவிடும். காலையில் மெதடிஸ்த மத்திய
ஆண்கள் கல்லூரி இலங்கையின் கிழக்கில், கொழும்பில், வெளிநாடுகளில் வசிக்கும், தொடர்பில்
இருக்கும் பல்வேறு இணைய நட்புகள் படித்த கல்லூரி. கல்லூரியின்
அதிபர் திரு.பாஸ்கரன் அவர்கள் சரியான நேரத்தில் வந்து அழைத்துக்
கொண்டார்.
கல்லூரிக்குள் நுழையும்போதுதான்
அதன் துவக்க வருடத்தைப் பார்த்தேன். 1814 துவங்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் 204
ஆண்டுகளான கல்லூரி. கட்டிடங்கள் முழுமையாக
மாறிவிட்டிருந்தாலும், இரண்டு நூற்றாண்டுகளின் வரலாறு என்பது மிரட்டத்தான் செய்தது
முதன்முறையாக
மாணவர்களை மட்டும் சந்திக்கும் நிகழ்வு.
காற்றோட்டமும் வெளிச்சமும் நிரம்பியிருக்கும் நீள் அரங்கில் மாணவர்கள்
நிரம்பியிருந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களை அமைதிப்படுத்த அவ்வப்போது
முயற்சியெடுத்தபடியே இருந்தனர். . ஆனாலும் மாணவர்கள் என்றாலே கொஞ்சம் அப்படித்தான் என்பதும் அங்கும் பொதுவானதாகவே
இருந்தது. அதிபர் திரு.பாஸ்கரன் சிறப்பானதொரு
தொடக்க உரை நிகழ்த்தினார்.
பயிலரங்கு தொடங்கியது. ஒருமுனையில்
ஒத்துழையாமை இருந்தாலும், இன்னொரு முனையில் மாணவர்கள் பேரார்வம்
காட்டினர். பல்வேறு கிராமப் புறங்களில் O-Level தேர்வில் தேர்ச்சியடைந்து, மட்டக்களப்பில் இருக்கும்
முக்கியக் கல்லூரியான மத்தியக் கல்லூரிக்கு வந்திருப்பதை சில மாணவர்கள் உணர்த்தினர்.
சிலர் படிப்பில் மிகத் தீவிரமாக இருந்தனர். இவர்களுடனேயே பயணித்து தேவையானதை உணர்த்துகையில் மற்றவர்களும் மெல்ல
வழிக்கு வந்தார்கள். இடைவேளைக்குப் பிறகு முழுவதும் ஒன்றிப்போனார்கள்.
ஆரம்பத்தில் சேட்டையெனக் கருதிய பிள்ளைகளும் உத்வேகத்தோடு பங்கெடுத்தார்கள்.
நிகழ்வு முழுக்க உடனிருந்த வேதியியல் ஆசிரியர் திரு.உமா சங்கர் அவர்கள்
வேண்டிய அனைத்தையும் சிறிதும் தயங்காமல் செய்து கொடுத்தார்.
அத்தோடு எனக்கு இனிய நண்பராகவும் மாறிப்போனார். நிகழ்விற்கு பின் என்னை அழைத்துக் கொண்டு அறையில் விட்டது மற்றும் மாலை ஆசிரியர்கள்
பயிலரங்கிற்கு பொறுப்பெடுத்துக் கொண்டது என ஒரு முன் மாதிரியாக அவர் இருந்ததைக் கண்டு
வியந்தேன். அந்த நட்பும் பெருமைக்குரிய நட்பாகக் கருதுகிறேன்.
அறைக்குத் திரும்பி இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்க கிடைத்தது. முதன் முறையாக மட்டக்களப்பில்
மழையைக் கண்டேன். சடசடக்கும் பகல் மழை. கடற்கரையோர நிலப்பரப்பில் வாழ்வோருக்கு இது பழக்கப்பட்டிருந்தாலும்,
என்னைப் போன்றவர்களுக்கு கடலோர மழையென்பது ஒரு பேரதிசயமே.
மாணவர்களின் பின்னூட்டங்களை மேலோட்டமாக வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கு கலந்து கொண்ட
ஒரு மாணவன் தன்னுடைய சொந்த ஊரான திருகோணமலை மாவட்டம், மூதூர்
பிரதேசத்தில் இருக்கும் சேனையூர் மத்தியக் கல்லூரியிலும் சென்று இதே போன்று வகுப்பு
நடந்த வேண்டும் எனக் கேட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. தனக்குக் கிடைத்தது
தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பெருந்தன்மை மனம் அது.
மதியம் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு வின்சென் மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது. மழையைப் பொருட்படுத்தாது மத்தியக் கல்லூரி
மற்றும் வின்சென்ட் பாடசாலை ஆசிரியப் பெருமக்கள் திரண்டிருந்தனர்.
பயிலரங்கு தொடங்கியது முதலே உற்சாகமும், சிரிப்புமாய் அவர்கள்
பங்கெடுத்த விதம் பெரும் ஊக்கம் கொடுத்தது. தொடர்ந்து அமர்ந்திருப்பது
ஒரு சவால் என்றாலும்கூட, அதைப் பொருட்படுத்தாது உற்சாகமாக பங்கெடுத்தனர்.
வெளியில் சடசடக்கும் மழை, உள்ளே அவர்களோடு உற்சாகமான உரையாடல் என அந்த மூன்று மணி நேரம் மிக வேகமாய்க்
கடந்து போனது.
பணி நேரம் முடிந்து தொடர்ந்து மூன்று மணி நேரம் அவர்களை
இருக்கப் பணிப்பதைவிட,
வேலை நாளின் வேலை நேரத்தில் வைப்பதே இது போன்ற பயிலரங்குகளுக்கு உகந்ததாக
இருக்கும் எனும் குறிப்பையும் ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.
நிகழ்வை முடித்து விடைபெறும்போதும் நன்கு இருள் சூழ்ந்திருந்தது.
மனதிற்குள் பிரகாசமாய் இருந்தது. மழை மெலிதாய் சடசடத்துக் கொண்டிருந்தது.
அழைத்து வந்த ஆசிரியர் உமா சங்கர் அவர்களோடு இனிதாய் ஒரு உரையாடல் நிகழ்ந்தது.
அறைக்குத் திரும்பும்போது மழை சற்று வலுத்திருந்தது மூன்று நாட்களை மிக
எளிதாகக் கடந்திருந்த தெம்பு பெரும் ஆசுவாசம் கொடுத்தது.
-
No comments:
Post a Comment