குறைந்தபட்சம் தொட்டுவிடும் தேடல் அது - வின்சன்ட், நாவற்காடு பாடசாலைகள்


ஆசிரியர்களுக்குமான இரண்டாவது பயிலரங்கும் நிறைவடைந்த திருப்தி, தொடர் அடை மழை என இரவு மிக நெகிழ்வாய் அமைந்தது. காலையிலும் மழை தொடர்ந்து கொண்டிருந்தது.

வின்சென்ட் மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கான பயிரலரங்கு. நண்பர் உமா சங்கர் அழைத்துச் சென்றார். மழை சாரலாக மாறி மெல்ல அடங்கத் தொடங்கியிருந்தது. பள்ளியை நெருங்கும்போதுதான் கவனித்தேன், அகலமான சாலையில் சில தற்காலிக குறியீடுகள் வைக்கப்பட்டிருந்தன. அது பள்ளி நேரத்திற்கான சமிஞ்சைகள். U-Turn கூடாது என்பதும் அவற்றில் ஒன்று. சாலையில் யாரும் இல்லை, எனினும் விதிகளை மிகக் கச்சிதமாக மதித்து வாகனத்தை நிறுத்தினார். இப்படி பள்ளிகள் முன்பு காலையும் மதியமும் மட்டும் சிக்னல்கள் வைப்பது ஒரு நல்ல யோசனையாகப் பட்டது. அதை நேர்த்தியாக மதிக்கும் இலங்கை மக்களின் குணம் கற்றுக்கொள்வதற்கு உரியது.




பயிலரங்கு தொடங்கியது. பிள்ளைகள் பெரும் வீச்சு காட்டினார்கள். உரையாடலை ஊக்குவிக்கும் வண்ணம் ஏதேனும் சாக்லேட் தருவது வழக்கம். காலையில் பள்ளியில் என்னிடம் கொடுத்திருந்த சாக்லெட்களை மொத்தமாய் கபளீகரம் செய்துவிடுவது போல ஒவ்வொருவரும் ஆர்வமாய் பங்கெடுக்கத் தொடங்கினர்.

மிக ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தினர். தரம் வாய்ந்த பிள்ளைகள் தாம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் முனைப்போடு வெளிப்படுத்தினர். சிறிதும் அவர்களிடம் நான் தயக்கத்தைக் கண்டிருக்கவில்லை. நேரம் கடக்க கடக்க நான் உற்சாகம் ஆனேன். உண்மையில் மூன்று மணி நேரம் அதற்குள் நெருங்கிவிட்டதா என நான் நினைக்கும் அளவிற்கான ஒத்துழைப்பு.





மதியம் நாவற்காடு  பள்ளியில் ZOA  அமைப்பினர் ஏற்பாடு பயிலரங்கு இருப்பதால் வின்சென்ட் பள்ளியில் குறித்த நேரத்தில் முடித்தே தீர வேண்டியிருந்தது.

நிகழ்வை முடித்து அதிபர் திருமதி.சுபாஹரனை சந்தித்து விடைபெறவும், நண்பர் ஜெயந்தன் வந்து சேரவும் சரியாக இருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு நாவற்காடு நோக்கி பயணித்தோம்.

*

கரடியனாறு அளவிற்கு தொலைவு இல்லையென்பதே எனக்கு முதல் ஆறுதலாக இருந்தது. ஆனால் அதே வழியில்தான் பயணித்தோம். செல்லும் வழியில் மழையடிக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் நின்றது. மாணவர்களும், மாணவிகளும் வெள்ளைச் சீருடையில் குடைகளைப் பிடித்தவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியை நெருங்குகிறோம் எனச் சொன்னார்கள். அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும் பிள்ளைகள் எனத் தெரிந்தது. கடக்கும் பொழுதெல்லாம் வாகனத்தில் இருந்து அவர்களை எட்டிப் பார்த்தபடியே கடந்தேன். அவர்கள் அதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி என்றார்கள். இன்னுமே மீண்டிடாத இடம் போன்றுதான் தோன்றியது. பள்ளி மிக எளிமையாகத் தென்பட்டது. எளிமையாக என்பதைவிட ஏழ்மையாக என்றுதான் சொல்ல வேண்டும்.

வகுப்பறைகள் மிக எளிமையாக இருந்தன. கலையரங்கத்திற்கான கட்டிடம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் இருந்தது. அதில் தான் பயிலரங்கிற்காமாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். லைட், ஃபேன் இருந்தும், கட்டிடத்திற்கு இன்னும் மின் இணைப்பு வந்திருக்கவில்லை.



இரண்டு பள்ளிகளைச் சார்ந்த A-Level இரு பாலர் பிள்ளைகள் கலந்து கொண்டிருந்தனர். சிவப்பு மற்றும் நீலக் கழுத்துப்பட்டையை வைத்தே இரு பள்ளிக்குமான வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டேன்.

பயிலரங்கு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக தற்காலிக மின் இணைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். பேசுவதற்கு வசதியாக ஒரு மைக்செட்காரரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் திருவிழாவிற்கு தயாராவது போல் சினிமா பாடலை ஒலிக்கவிட்டு ஒலியை பலவாறு சரி செய்து கொண்டிருந்தார். எனினும் நிகழ்வு தொடங்கியதும், மைக் சொதப்பியது. மைக் இல்லாமலே பேச முயற்சித்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேர பேச்சு என எட்டாவது நிகழ்ச்சி என்றளவில் நானும் களைத்திருந்தேன். சப்தமாக பேசுவது மிகச் சிரமமாக இருந்தது. ஆனாலும் மைக் செட் தம்பி ஏதேதோ செய்து மைக்கை சரி செய்து கொடுத்தார்.



இடைவேளையில் அனைவருக்கும் Refreshments வழங்கப்பட்டது. பிள்ளைகள் அங்கும் இங்கும் உலவ, நான் பள்ளியைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தேன். பயிலரங்கில் இருந்த ஒரு பத்தாம் வகுப்பைச் சார்ந்த சிறிய மாணவன், அவனுடைய பையை எடுத்துக்கொண்டிருந்தான். “என்ன தம்பி வீட்டுக்கு போறியா!?” எனக் கேட்டேன். இல்லை என்றவன் கையில் அமைப்பினர் வழங்கிய குளிர் பானம் இருந்தது. ”அது ஏன் இங்கே கொண்டு வந்திருக்கே, அங்கேயே குடிக்க வேண்டியதுதானே!?” ”வீட்ல தம்பிக்கு கொண்டு போறேன் சேர்என்றான். ஒரு கணம் விக்கித்துப் போனேன். ”சரி அதை பேக்ல வச்சுட்டு வா, இன்னொன்னு வாங்கி நீ குடிஎன்றேன். மறுத்தான். “நானே வாங்கித் தர்றேன் நீ குடி, இதை வீட்டுக்கு கொண்டு போ!” என்றேன். கடுமையாக மறுத்தான். “ஏன் இந்த ட்ரிங் உனக்கு பிடிக்காதா!?” எனக் கேட்டேன். “பிடிக்கும், ஆனா வேணாம் சேர்என்றான். என்னால் இயன்றவரை வற்புறுத்தியும், நான் தோற்றுத்தான் போனேன்.



பயிலரங்கு தொடர்ந்தது. பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு பங்கெடுத்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு பயிலரங்கை நிறைவு செய்தேன். எல்லாம் எடுத்து வைக்கும்போது மைக் செட் தம்பி வந்து மைக் எடுத்துக்கட்டுமா எனக் கேட்டார். பெயரைக் கேட்டு கை குலுக்கி, ரொம்ப சிரமப்பட்டு, நல்லா செஞ்சு கொடுத்தே தம்பிஎன்றேன். எதோ சொன்னார். விளங்கல என்றேன். குனிந்துமைக் சரியா இல்லாதத்துக்கு மன்னிச்சிடுங்க. அடுத்தமுறை சரியா இருக்கும் என்றார். நெகிழ்வோடு அணைத்துக் கொண்டேன்.

வெளியேறி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்தேன். ஒன்பதில் எட்டு நிகழ்ச்சிகள் செய்து முடித்த திருப்தி. அலையலையாய் வெளியேறிய பிள்ளைகள் கும்பலாய் வந்து கை பற்ற முயற்சித்தார்கள். குறைந்தபட்சம் தொட்டுவிடும் தேடல் அது. மேலும் நெகிழ்ந்து புறப்பட்டோம்.

எங்களுக்கு முன்பாக புறப்பட்ட பிள்ளைகள், நாங்கள் செல்லும் பாதையில் வரிசையாக சைக்கிளில் நீண்ட தூரம் வரைக்கும் சென்று கொண்டிருந்தனர். எங்கள் வாகனம் ஒதுங்கும்போது அடையாளம் கண்டு “சேர்என விதவிதமாக கத்தியபடி மலர்ச்சியோடு கை ஆட்டியதெல்லாம் வாழ்நாளின் மிக நெகிழ்வான நிகழ்வுகள். ஏறத்தாழ 25 தினங்களைக் கடந்து இதை எழுதும் கணத்திலும்கூட நெகிழ்ந்து குழைகிறேன்.


1 comment:

Blue Sky said...

Super sir(jeyanthan)