நாவாற்காடு பிள்ளைகளின் உற்சாகமான வழியனுப்புக்
கையசைப்பை மனது முழுக்கச் சுமந்தபடி கல்லடிக்குத் திரும்பினேன். நான்கு நாட்கள் கனவுபோல் கடந்திருந்ததை
ஆச்சரியமாய் நினைத்துக் கொண்டேன். இது எனக்கான மிகப் பெரிய சுய
பரிசோதனை. தொடர்ந்து நான்கு நாட்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும்
6-7 மணி நேரப் பேச்சு என்பது என்னால் இயலுமெனத்
தெரிந்துகொண்ட தருணம் இது. திட்டமிட்ட ஒன்பது நிகழ்ச்சிகளில்
எட்டு நிகழ்ச்சிகளை முடித்த நிறைவு பெரும் உற்சாகம் கொடுத்தது. இதுவரை மட்டக்களப்பில் நட்புகள் என யாரையும் சந்தித்திருக்கவில்லை.
ஒருநாள் சிவகாமி-சுந்தர் வீட்டுக்கு சென்று வந்ததோடு
சரி.
முந்தைய நாளே சந்திக்கத் திட்டமிட்டு முடியாமல் போயிருந்த
நண்பர் டேனியலை அழைத்தேன். 2015ல் முதன்முறையாக
மட்டக்களப்பு பயிலரங்கில் சந்தித்தது. மற்றொருமுறை கொழும்பு அலுவலகத்தில்
சந்தித்திருந்தோம். மூன்றாம் முறையாக இந்தச் சந்திப்பு. நிறுவனச் செயல்பாடுகள் குறித்து தொடங்கிய
உரையாடல் பொருளாதாரம், இலங்கை அரசியல் என்று மாறி இறுதியாக இறுதிக்கட்ட
போரில் நீண்ட நேரம் தொடர்ந்தது. ஈழத்தில் இருக்கும் மக்களோடு
போர் குறித்து உரையாடும்பொழுதெல்லாம் எப்படியும் மனது கனத்துவிடும். இந்தமுறையும் கனத்துப் போனது.
சற்று நேரத்தில் நண்பர் கோமகன்,
நண்பரோடு வந்திருந்தார். இருவரும் ஆசிரியர்கள்
என்பதால் அதுவரை நடந்த
பயிலரங்குகள் குறித்தும், அதன் பின்னூட்டங்கள் குறித்தும் துவங்கிய
உரை இறுதியாக அடுத்த நாள் செல்லவிருக்கும் புனித மைக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை
குறித்துத் திரும்பியது. அவர்களும் அந்தக் கல்லூரியின் முன்னாள்
மாணவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பில்
நான் சந்தித்தவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களும்கூட
மைக்கேல் பாடசாலையில் படித்தவர்கள். தமிழ்நாட்டிற்கு புரியும்படி
சொல்ல வேண்டுமென்றால், மறைந்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா
படித்த பாடசாலை.
மைக்கேல் குறித்த அறிமுகங்களில் தவறாமல் இடம் பெற்றவை அருமையான
பள்ளி,
நன்கு படிக்கும் புத்திசாலிப் பிள்ளைகள் ஆனால் அடங்க மாட்டார்கள்,
அவர்களிடம் பயிலரங்கு நடத்துவது பெரும் சவாலாய் இருக்கும் என்றே அனைவரும்
எனக்குத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக கோமகனும்,
அவர் நண்பரும் சிரித்தபடியே.... ’சென்ட்ரல்தானே
பார்த்திருக்கீங்க, மைக்கேல்ஸ் பாருங்க!’ அப்பத் தெரியும் என்பதுதான் மென்மையாய் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.
விடிந்ததும் நிகழ்ச்சிக்கு தயாராகும் முன்பு கொழும்பிற்கு
மதியம் கிளம்புவதா அல்லது இரவு கிளம்புவதா என மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன்.
மதியம் ஒரு மணிக்கு இ.போ.ச பேருந்து இருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் இ.போ.ச பேருந்து என்பதுதான் மிரட்சியாய் இருந்தது.
சரி நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தை வைத்து முடிவு செய்துகொள்ளலாம் என்று
ஆயத்தமானேன்.
இந்த நிகழ்ச்சிகளின் பின்னால் இரண்டு முக்கியமானவர்கள்
இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க வேண்டும் எனும் திட்டமிருந்தது.
அதில் ஒருவர் திருமதி. சக்தி அருட்ஜோதி.
ஓய்வுபெற்ற முன்னாள் பாடசாலை அதிபர். என்னைக் குறித்தான அறிமுகமும், என் பயண விபரமும் கிடைத்த
கணத்தில் அவர்தான் இங்கிருக்கும் பிள்ளைகளுக்கு இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய
இயலுமா என மட்டக்களப்பு வலையகக் கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களிடம்
பரிந்துரை செய்ய, அவர்தான் ஏழு நிகழ்வுகளை அட்டவணையிட்டு
ஒழுங்கு செய்தவர். அவர்களை முடிந்தவரை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு
அதன் பின்னூட்டங்களுடன் மட்டுமே சந்திக்க நினைத்திருந்தேன். அதனாலாயே
சந்திப்பைத் தள்ளி வந்தேன். ஒருவேளை மதியம்
கிளம்புவதாக இருந்தால், காலையிலேயே சந்தித்துவிடுவோம் என்று முதலில்
சக்தி டீச்சரிடமும், வலையக கல்வி பணிப்பாளரிடமும் நேரம் கேட்டேன். நிகழ்ச்சிக்கு முன்னதாகவே நேரம் ஒதுக்கினார்கள்.
நான் இருந்த இடத்திலிருந்து மிக அருகில் இருந்த சக்தி டீச்சரின்
வீட்டிற்கு முதலில் சென்றேன். ஓய்வுக்காலத்தை பேரக்குழந்தையோடு
கழித்துக் கொண்டிருந்த சக்தி டீச்சர் – அருட்ஜோதி சார் தம்பதியினர்
அன்பாக வரவேற்றார்கள். பின்னூட்டங்களைக் கொடுத்ததும்,
மாணவிகளின் பின்னூட்டங்களை மேலோட்டமாக வாசித்தவர், மெதடிஸ்த மத்தியக் கல்லூரியின் பின்னூட்டங்களை ஊன்றி வாசித்தார். அவரின் எண்ணவோட்டம் புரிந்தது. திருப்தியாய் தலையசைத்தார்.
பாராட்டினார். சென்ட்ரல் காலேஜ் ஓகே, மைக்கேல் சற்று கவனமாக கையாளுங்கள் என அவரும்
அறிவுறுத்தினார். நேற்று கோமகன் இன்று சக்தி டீச்சர்....
எனக்குள் பொறுப்பும் சவாலும் கூடியது. அதற்குள்
அருட்ஜோதி சார் அருமையான காபி ஒன்றை தயாரித்து அளித்தார். மனதுக்கு
மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்தபடியாக
வலையகக் கல்வி அலுவலகத்திற்குச் சென்றேன்.
வலையகக் கல்வி பணிப்பாளர் திரு.பாஸ்கரன் மிகுந்த உற்சாகமாக வரவேற்றதோடு,
நிகழ்ச்சிகள் குறித்து நிறையக் கேட்டறிந்தார். அந்த குறுகிய இடைவேளையிலும் இந்திய விவசாயம் குறித்தும் நிறையக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நடந்த நிகழ்ச்சிகள்
குறித்துக் கேட்டு மகிழ்ந்ததோடு, மைக்கேல்ஸ் சற்று சவாலாக இருக்குமென
அவர் பங்குக்கும் தெரிவித்தார்.
கோமகன், சக்தி டீச்சர்,
பாஸ்கரன் சார் என்று மட்டும் நின்றிருந்தாலும்கூட ஓகே, அங்கிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில், என்னை அழைத்துக்
கொண்டு சென்ற ஆசிரியர் திரு. மணிமாறன் அவர்களும்
அதையே சொல்ல... எனக்குள் அழுத்தம் கூடத் தொடங்கியது.
லோக்கல் லாங்வேஜ்ல சொல்லனும்னா... சற்று டரியல் ஆகியிருந்தேன்.
மைக்கேல்ஸ் பாடசாலைக்கான பயிலரங்கிற்கு, அருகில் உள்ள சிசிலியா கான்வென்டிற்கு
மாற்றப்பட்டிருந்தது. சிசிலியா அரங்கில் மற்றொரு நிகழ்வு இருந்த
காரணத்தால், எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய நிகழ்வு தாமதமாகத்தான்
துவங்கும் எனத் தெரிவித்திருந்தார்கள். சிசிலியா சென்று அரங்கிற்குள்
நுழையும்போது அருட்சகோதரி. மேரி சாந்தினி இருந்தார். இரண்டாம் முறையாக சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.
மாணவர்களை அமர்த்தி வைக்க சற்று நேரம் பிடித்தது.
அப்போது ஒரு ஆசிரியை வந்து ‘இராமகிருஷ்ணா
மிஷன்’ நிர்வாகி என்னை சந்திக்க அழைப்பதாகக் கூறினார்.
ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா
எனக் கேட்க, காலையில் சிசிலியாவில் நடந்தது இராமகிருஷ்ணா
மடத்தின் நிகழ்ச்சிதான் எனச் சொன்னார். அவர் அழைத்துச்
சென்ற இடத்தில் ஒரு இளம் துறவி நின்று கொண்டிருந்தார். வணக்கம்
சொன்னேன். கல்லடியில் இருக்கும் மடத்தின் நிர்வாகியாக இருப்பதாகத்
தெரிவித்தார். ஏறத்தாழ என் நாக்கில் மட்டக்களப்புத் தமிழ் ஒட்டியிருந்தது.
சட்டென அவர் இப்பத்தான் மூன்று மாதம் முன்பு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன்.
இன்னும் இங்கத்தைய தமிழ் புழங்கவில்லையெனச் செல்ல ஒருவாரத்திற்குப் பின்
தமிழகத் தமிழில் எனக்குப் பேச்சு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கட்டுரை ஒன்றை இராமகிருஷ்ண விஜயம் இதழில்
வெளியிட்ட வகையில் சுவாமி விமுர்த்தானந்தா அவர்களோடு அறிமுகம் கிடைத்ததைச் சொல்லி,
அவர் குறித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விடைபெற்றேன்.
அரங்கில் மாணவர்கள் தயார் நிலையில் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் குறித்து நான்கு முனைகளிலிருந்தும் எனக்குச் சொல்லப்படிருந்தது
அழுத்தமாய் மாறியிருந்தது. உண்மையில் இவர்களை எப்படி
சமாளிக்கப் போகிறோம் என்றே நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது.
திங்கட்கிழமை சிசிலியா அரங்கு மைக் சரியாக வேலை செய்யாததால், இந்தமுறை நன்றாக இருக்க வேண்டும்
என முன்பாகவே வேண்டியிருந்தேன். ஆனாலும்
அது சரிவர இயங்கவில்லை. பலமுறை முயற்சித்தும் திருப்தி ஆகாததால்,
தங்கள் கல்லூரிக்கே சென்று அதை எடுத்து வர ஆசிரியர் மணிமாறன் ஏற்பாடு
செய்தார். அதற்காக அவர் மிகுந்த பிரயத்தனம் எடுத்தார்.
மாணவர்கள் ஒருவித குறுகுறுப்போடு,
சற்று கூச்சலும் குழப்பமுமாக அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான் நிகழ்ச்சியைத் தொடங்காமல் அமைதியாகக் காத்திருந்தேன்.
மெல்ல எழுந்து மாணவர்களைச் சுற்றிவர ஆரம்பித்தேன். என்னைப் பார்ப்பதும் அவர்களுக்குள் பேசுவதுமாய் ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் அரட்டை ஓய்வதாகத் தெரியவில்லை. ஒரு குழு
வெகு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது. அவர்களின் மத்தியில் ஒரு காலி இருக்கை இருக்க, அதில்
அமர்ந்தேன்.
கிண்டலும் சிரிப்புமாய் சட்டென
என்னை ஓட்ட ஆரம்பித்தார்கள். ‘யார், எங்கிருந்து, எதுக்கு வந்திருக்கீங்க!?’ எனும் கேள்விகள் பறந்தன இந்தியா
என்றதும் ‘விஜய் தெரியுமா சார்!?’ என்றான் ஒருவன்.
‘எனக்குத் தெரியும், அவருக்குத் தெரியாது!’
என்றேன். ’அப்ப என்னை உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே!’
என்றான். எப்படி எனக் கேட்க, ”போக்கிரி படத்தில் விஜய் கூட டான்ஸ் ஆடுறது நான் தான், என்னைப் பார்க்காம படத்தில் அப்படியென்ன பார்த்தீங்க!” என்றான். இன்னொருவன் ’அனுஷ்கா தெரியுமா
சார். அவ என் அக்கா சார்!’ என்றான்.
இப்படி அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
நானும்
அதற்காகத்தான் காத்திருந்தேன். எனக்கான நுழைவை அவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
அவர்களை மேலும் கவனிக்க ஆரம்பித்தேன்..
முடிந்தவரை அவர்களைப் பேச விட்டு, கொட்ட விட்டு
ஓரிரு வார்த்தைகளில் அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக மைக் ஏற்பாடாகி பயிலரங்கு தொடங்கியது.
ஆசிரியர் மணிமாறன் அவர்கள் வரவேற்புரை, அறிமுகவுரை
நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.
மைக்கேல்ஸ் பிள்ளைகள் குறித்து அத்தனைபேரும் கூறியிருந்ததை
மனதில் வைத்துக் கொண்டு ஆரம்பித்தேன். எல்லோரும்
மைக்கேல்ஸ் மாணவர்கள் குறித்து அறிமுகப்படுத்தும்போது, மிக நன்றாகப்
படிப்பவர்கள், அதற்கு நிகராகக் குறும்பு செய்பவர்கள் என்பதையே
வலியுறுத்தியிருந்தனர். எந்த அளவுக்கு குறும்போ அதற்கு நிகரான தேடலும் அவர்களிடம்
இருந்தது. குறும்பை எனக்கான
ஒத்துழைப்பாக மாற்றிவிட வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன்.
இந்த அரங்கு எப்படியிருக்கும் என்பது குறித்து தீர்க்கமாக
முன்னோட்டம் தெரிவிக்கும்போதே, அமைதியானர்கள். அனுஷ்காவின் தம்பியும்,
விஜயின் நண்பனும் குனிந்த தலை நிமிரவில்லை. இடைவேளையில் தனித்தனியே உரையாடினேன்.
நிகழ்வின் நிறைவில் நெகிழ்வான சில பின்னூட்டங்களை கையளித்தார்கள்.
அவர்களின் ’விஜய் தெரியுமா, அனுஷ்கா தெரியுமா!?’ என ஆரம்பத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள்தான்
“வீ வில் மிஸ் யூ / ஐ மிஸ் யூ சார்!” என எழுதிக் கொடுத்திருந்தார்கள். ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சி
குறித்து பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார். அன்போடு என்னை அறைக்கு
அழைத்து வந்து விடைபெற்றார்.
நிகழ்ச்சியை
முடித்து அறைக்குத் திரும்பியதும், தொடர்ந்து நிகழ்ச்சிகளின் மேல் அக்கறையாய்
இருந்தவர்களுக்கு I have done it! எனும் செய்தியை அனுப்பிவிட்டு
ஐந்து நாட்களின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு மெல்ல மிதக்க ஆரம்பித்தேன். காலையில்
சந்தித்திருந்த இராமகிருஷ்ணமட நிர்வாகி, நேரம்
இருப்பின் மாலை சந்தியுங்கள் எனச் சொல்லியிருந்தார். மாலை நான்கு மணிக்கு அவரைச் சந்தித்தேன். அரை மணி நேரம்
எனத் திட்டமிட்டிருந்த சந்திப்பு ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களை எடுத்துக் கொண்டது.
மீண்டும் சக்தி டீச்சரை சந்தித்து மைக்கேல்ஸ் பிள்ளைகளின்
பின்னூட்டங்களை அளித்து, வாசித்துவிட்டு பாஸ்கரன் சாரிடம் கொடுத்துவிடச்
சொல்லி வேண்டினேன். நான் எவ்வளவோ மறுத்தும் இரவு உணவிற்கு அருட்ஜோதி
சார் என்னை சரவண பவன் உணவகத்திற்கு வலிந்து அழைத்துச் சென்றார். நிறைவான மனதோடு, அன்பு நிறைந்தவர்களோடு சாப்பிடும்போது உணவும் அமுதம் அமைகிறது. திரும்புகையில்
என்னை அறையில் விட்டுவிட்டு, பேருந்துக்கு புறப்படும் நேரத்தைக்
கேட்டுவிட்டுப் போனார். மிகச்சரியாக நான் அறையைவிட்டு கிளம்பலாம்
என நினைத்த நேரத்தில் அறையின் வாசலில் காத்திருந்தார். என் தந்தை வயது கொண்டிருப்பவர்.
எனக்கு பதட்டமானது, ஏன் சார் இப்படி சிரமப்படுறீங்க
என்றேன். அதெல்லாம் பரவாயில்லை என என்னோடு பேருந்து நிறுத்தம்
வரை உடன் வந்து, என்னோடு இருந்து பதிவு செய்திருந்த பேருந்து
வந்ததும் ஏற்றி வழியனுப்பிச் சென்றார்.
// Yes... I have done it!
மட்டக்களப்பில் ஏறத்தாழ 117 மணி
நேரம்...
ஆயிரக்கணக்கான நட்புகள்...
பல நூறு கை பற்றுதல்கள்...
அரிய சில சந்திப்புகள்...
பல நூறு கை பற்றுதல்கள்...
அரிய சில சந்திப்புகள்...
கொண்டாட்டம்
ஏக்கம்
நெகிழ்வு
சிரிப்பு
கண்ணீர்
பிரியம்
மரியாதை
பேரன்பு...
ஏக்கம்
நெகிழ்வு
சிரிப்பு
கண்ணீர்
பிரியம்
மரியாதை
பேரன்பு...
லவ்
யூ மட்டக்களப்பு
நன்றி நல் உள்ளங்களே! :)
நன்றி நல் உள்ளங்களே! :)
சென்று வருகிறேன்
//
என்று அன்றிரவு பேருந்தில் இருந்தபடி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது அந்த
ஊர், மண், கட்டிடங்கள், காற்று, கடலுக்கு மட்டுமல்ல. அங்கே
அந்த ஐந்து நாட்களில் நான் கடந்து வந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் மற்றும் நூற்றுக்கணக்கான
ஆசிரியர்களுக்கும்தான்.
இந்த
நிகழ்வுகளின் பின்னால் அன்பிற்கினிய மஞ்சுபாஷினி, சஞ்சயன் செல்வமாணிக்கம், கோபி ஆகியோரின்
உதவி என்றைக்கும் அன்பிற்கும் நன்றிக்கும் உரியது.
மிகவும் சொகுசான பேருந்து மிதந்தபடி விரைந்து கொண்டிருந்தது.
சாமி-2 ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையில்
இருந்து திருநெல்வேலிக்குத் திரும்பியிருந்த, ராவணப் பிச்சையும் இராம்சாமியும்
சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது.
பின் இருக்கையில் காத்தான்குடியில் ஏறியிருந்த இருவரில், ஒருவர் தன் அருகில் இருந்தவருக்கு எல்லா வசனங்களையும் ஐந்து விநாடிகள் முன்கூட்டியே
சொல்லிக் கொண்டிருந்தார். “யோவ் ஹரீஈஈஈஈஈ” என்று எழுந்த இயலாமைக்
குரலை அமுக்கிவிட்டு, இதுவும் ஒரு அனுபவமென, கடந்திருந்த ஐந்து நாட்களை அசை போட ஆரம்பித்தேன்.
No comments:
Post a Comment