வாழ்க்கை
பல நேரங்களில் ஒரு பெருமைமிகு, விசித்திரமான
விளையாட்டுக் களம் போன்றதுதான். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின்
இலக்காக இருப்பது போன்றே,
போட்டியாளனும், எதிரியும் விளையாட்டில் தவிர்க்க
முடியாதவர்கள். போட்டியாளனும் எதிரிகளும் விளையாட்டில் மட்டுமல்ல
வாழ்க்கை முழுதும் நிரம்பியே இருப்பவர்கள். பெரும்பாலான நேரங்களில்
அவர்கள் எதிரிகள் என்றோ, போட்டியாளன் என்றோ தெரியாமலேயே அவர்களோடு
இயைந்து வாழ நிர்பந்திக்கப்படுவதுதான் வேடிக்கை.
போட்டியாளன்
ஆவதற்கும், எதிரி ஆவதற்கும் குறிப்பிட்ட
சம்பவங்களோ, தெளிவான காரணங்கள் இருக்கவேண்டியதில்லை. தம் இலக்கை
நோக்கி அவர் போக்கில் ஓடும் யாரோ ஒருவர்,
அதுவரையிலும் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒருவருக்கு சட்டென எதிரியாகவும்,
போட்டியாளனாகாவும் ஆகிவிட முடியும். மிகச் சிறியதொரு
சூழல் அதை நிகழ்த்திவிடும். யோசித்துப் பார்த்தால் அவர்கள் போட்டியாளனும்,
எதிரியும் ஆனதற்கு நியாயமான இமை முடி அளவு காரணம்கூட இருக்க முடியாது.
வாழ்நாளில் அப்படியொருவரை அதற்குமுன்
சந்தித்திருக்கவோ, இனி சந்திக்கவோ கூட சாத்தியமின்றிப் போகலாம்.
ஆனால் அவர்கள்தான் அப்போது போட்டியாளராகவும், எதிரியாகவும்
மாறிப்போவார்கள்.
சமீபத்தில்
ஒருமுறை, சாலை சந்திப்பில் காரில் குறுக்காக கடக்க முயல்கிறேன்.
என் வலதுபுறம் வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி, நான்
கிட்டத்தட்ட கடந்திருந்த நிலையில், சட்டென வளைத்து காருக்கு முன்பாக
தன் வாகனத்தை நிறுத்திக் கொண்டு என்னைப் பார்த்து முறைத்தார். அது குறுக்காகக் கடப்பவர்களுக்கு எப்போதும் உரிமை என்பது ’ஒரு மாத்திரை’ அளவு குறைவானது எனக் கருதும் மனநிலையின்
வெளிப்பாடு. அந்த நிலையில் அநேகமாக எங்களில் யார் ஒருவர் நிதானித்து
விட்டுக் கொடுத்திருந்தாலும் விட்டுக்கொடுத்தவருக்கு 10-20 நொடிகள்
மட்டுமே தாமதம் ஏற்படலாம். அவர் முறைத்ததைப் பார்த்தபோது எனக்கு
உள்ளூர சிரிப்புதான் வந்தது. என் சிரிப்பில் ஒளிந்திருக்கும்
திடம் நான் சாலையைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டேன் எனும் நிரூபணம்தான். இந்த நிலையில் என் வாகனத்திற்கு குறுக்காக மறித்து நிற்பது என்பது அவரின் பொறுமையின்மை
என்பதாகவே தோற்றம் கொடுத்தது. அந்த தோற்றம் கொடுக்கும் தெம்பு
அலாதியானது. அந்தச் சூழலில் எங்கள் மேல் பாயும் கோபப் பார்வைகள்
மற்றும் எரிச்சல் குரல்கள்களிலிருந்து நம்மை விடுவிக்க வைக்கும் தோற்றம் கொடுப்பது.
’நா கிட்டத்தட்ட க்ராஸ் பண்ணிட்டப்ப வேணும்னே நீ குறுக்கே போட்டு நிக்கிறே!’
எனும் இந்த நிலை எனக்குச் சாதகமானது. ஒருவேளை அதில்
நானே குற்றம் இழைத்திருந்தாலும், அதற்கும் சேர்த்துதான் அந்த
நபர் பதிலளிக்க வேண்டும். வாகனங்கள் தேங்க ஆரம்பிக்கின்றன.
அவரை நோக்கி ஆத்திரக் குரல்கள் எழும்புகின்றன. வசவுகள் கூடுகின்றன. நான் அமைதியாக ஒரு ஏளனப் பார்வையோடு
அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருகட்டத்தில் தாங்க முடியாமல்
அந்த நபர் விருக்கென நகர்கிறார்.
இதை அப்படியே
பிரதியெடுத்ததுபோல் என் நண்பருக்கும் அதே பொன்றதொரு சம்பவம் நிகழ்கிறது. இத்தனைக்கும் அவர் மிகுந்த நிதானம் பாவிக்கின்றவர்.
மனிதர்களின் பலவிதமான பிறழ்வுகளின்போது மிக எளிதாக அவர்களை அவர்களின்
செயல்களிலிருந்து பிரித்துப் பார்த்து “மனுசப்பயன்னா அப்படித்தான்!”
எனும் நிதானமான, சமாதான வரியோடு அவர்களை எதிர்கொண்டு
இணக்கம் பாவிக்கிறவர். அவர் காரில் ஒருமுறை சாலையைக் கடக்கும்போது,
எனக்கு நிகழ்ந்து போலவே அவரின் வாகனத்தின் முன்பு குறுக்கே பைக் நிறுத்திக்கொண்டு
வம்பு செய்த மனிதரை முதலில் அமைதியாக உற்றுப் பார்த்திருக்கிறார். அவரின் அமைதியை தன் ஆணவத்திற்கான அனுமதியாகக் கருதிய அந்த நபர் இன்னும் ஏதேதோ
பேச, சட்டென இறங்கிய நண்பர் பொளேர்..பொளேர்
என நட்ட நடுரோட்டில் அடித்திருக்கிறார். அது சட்டென கை கலப்பாக
மாறி நிகழ்ந்து தணிந்தது.
கடந்தேகும்
மனிதர்களில் ஒரு உறவைப் பூக்கச் செய்ய, நொடிப்பொழுதில் ஒரு மெல்லிய புன்னகை மிகப் போதுமானதாக இருப்பதுபோல்,
எந்த வகையிலும் முன்பின் அறிமுகமோ, தொடர்போ,
அவசியமோ இல்லாமல் ஒரு எதிரியைச் சம்பாதிக்க, ஒவ்வாத
ஒற்றைச் செயல் அல்லது ஒற்றைச்சொல் போதும். அந்தக் கணத்தில் தோன்றும்
சிறு பகை, பெரும் பகையாக மாறி எஞ்சிய வாழ்க்கை முழுதும் தொடர்ந்த
வரலாறுகளும் இங்குண்டு. உடன் பிறந்த உறவுகளிலும்கூட தலைமுறைகளாக
பகையைத் தொடர்ந்தவர்களும், தொடர்கிறவர்களும் இங்குண்டு,
பலரின்
வாழ்க்கையில் இப்பெரும் பகைகளுக்குப் பின்னால் இருப்பது குறித்து ஆராய்ந்தால், அவை யாவற்றிற்கும் காரணம் ஒரு சிறு முடிச்சே எனும்
ஆச்சரியக் கசப்பே மிஞ்சும். மகத்தான மனித உறவுகளைவிட தருணம்,
சொல், அவமதிப்பு, புறக்கணிப்பு,
ஏமாற்றுதல் எனும் சிறு முடிச்சுகள் எவ்விதம் ஆதிக்கம் செலுத்துகின்றன
என்பது எப்போதும் புரியாத புதிர்தான்.
இப்படியான
எல்லாக் கோபங்களுக்கும், பகைகளுக்கும்
பின்னால் மறந்துபோன புன்னகைகளும், உறவுகளுக்கிடையே உலர்ந்துபோன
உறவின் கதகதப்புகளும் பெருந்தொகையில் உயிர்ப்பின்றி கனத்துக் கிடக்கும். அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் வழிகளும், முறைகளும்
தெரியாமல் தவிக்கும் அவலம்தான் மனித குலத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம்.
புன்னகையால்
உறவுகள் பூத்துவிடுவது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், சக மனிதர்களிடம் உதிரும் புன்னகையிலும்,
சிரிப்பிலும் உயிர்த் தன்மை இருத்தல் அவசியம். பல நேரங்களில் தயாரிக்கப்பட்ட சிரிப்பு அணிந்திருக்கும் மனிதர்களை ஏனோ நமக்குப்
பிடித்து விடுகிறது. ஆனால் அப்படியான சிரிப்புகளில் ஒருபொழுதேனும் ஏதேனும் மலரின் நறுமணத்தை
நாம் உணர்ந்ததுண்டா? அந்தப் புன்னகைகளில் கண்கள் மலர்வதில்லை.
அந்தப் புன்னகைகள் இனம் புரியா வீச்சத்தை தன்னுள்ளே பொத்தி வைத்து
உமிழ்கின்றவைகள். அவ்வீச்சம் முழுவதும் ஏதேனும் வாதை பரவியிருக்கும், காத்திருப்பு நிரம்பியிருக்கும், சொல்ல முடியாத
இடத்தில் அடைந்த காயத்தின் வேதனை அடங்கியிருக்கும். தயாரிக்கப்பட்ட சிரிப்பு
உதிர்ப்பவர்களை நம்புங்கள், ஆனால் அந்த சிரிப்பின் மேல் முனையில் ஒரு நட்சத்திரத்தை வரைந்து வைத்துக்
கொள்ளுங்கள், காரணம் அம்மாதிரியான எதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
ஏதோ ஒரு
புள்ளியில் பூத்து, நட்பாய்,
உறவாய் மாறிப்போகும் உறவுகள் கொடுக்கும் இதம், நம்பிக்கை பொதுவாக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை
அதன் தன்மை மற்றும் உயிர்ப்போடு வழங்கிட எவராலும் சொற்களை நம்பிக்கை மிகு ஒழுங்கில்
கோர்த்துவிட முடிவதில்லை. உறவுகளின் மத்தியில் எண்ணப் பரிமாற்றங்களும்,
உணர்வுப் பரிமாற்றங்களும் சொற்கள் மட்டும் உடல் மொழிகளால் ஒவ்வொரு முறையும்
நிகழ்த்தப்படுகின்றன. இந்தப் பரிமாற்றங்கள் சரியாக அமையாதவர்களுக்குள்
எப்போதும் ஒரு வெற்றிடம் கனன்று கொண்டே இருக்கும்
கை
பற்றிக்கொள்ளுதல் அல்லது விரல் கோர்த்துக் கொள்ளுதல் என்பது உறவு நிலைகளுக்கிடையே உரிமை, பிரியம், நேசிப்பு,
அக்கறை ஆகியவற்றை இடம் பெயர்த்தும் ஒரு கலை. விரல் கோர்த்துக் கொள்வதோ,
கை கோர்த்துக் கொள்வதோ இரண்டுமே ஒரு சம்பிரதாயமான செயல்பாடோ,
உடலின் அங்கங்களை ஒன்றாய் இணைத்து சுகம் எய்துவதோ மட்டுமல்ல.
விரல்கள் கோர்த்துக்கொள்வதில் விதவிதமான வகைகள் உண்டு. அவை அழுத்தம், இறுக்கம், நேரம்,
வருடல் எனப் பல வகைப்படும். ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றை தனித்து உணர்த்தும்.
மெல்லப் பற்றிக்கொள்தல் ஒன்றைச் சொல்கிறதென்றால், சட்டென
இறுக்கிப் பிடித்தல் இன்னொன்றைச் சொல்லும். இறுக்கத்தின் கனத்திற்கேற்ப அந்தக்
கணத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய, வாரி வழங்கவேண்டிய
நம்பிக்கை, அன்பு, பரிவு, ஆதரவு பரிமாறப்படும். கவனத்தில்கொள்ள வேண்டியது பற்றிக்கொள்தல்,
பிணைத்துக் கொள்தல் வேறு நசுக்குதல் வேறு; இது
கைகளுக்கு மட்டுமல்ல, உறவுகளுக்கும் பொருந்தும்.
வாழ்க்கை எவ்வளவு உன்னதமான ஒரு பரிசோ அது போன்றே உறவுகளும் உன்னதமான ஒரு பரிசே. உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களும் உறவுகளில் இவ்வளவு நேர்த்தியும், சார்புத்தன்மையும், உணர்வுகளும் கொண்டிருப்பவையா எனத் தெரியவில்லை. மனித உறவுகளில் நேர்த்தியும், உணர்வுகளும் என்பதையும் தாண்டி சார்ப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகப் படுகிறது. மனிதர்களின் கைப் பற்றுதல்கள், ஆறுதல்கள், அரவணைப்பு இல்லாமல் வாழ்க்கையெனும் இந்த அலை பொங்கும் கடலை நீந்திக்கடப்பதென்பது எளிதா என்ன? இவை யாவற்றையும் கெடுக்கும், சிதைக்கும் தன்மை பாரதி காட்டிலோர் பொந்திடை வைத்த அக்கினிக்குஞ்சு போன்றதொரு ‘துக்கினியூண்டு’ கோபத்திற்கு உண்டு. கோபம் என்பதை திறன், அடையாளம், தகுதி என பல நேரங்களில் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கே மனித உறவுகளோடு வாழ
வேண்டுமா?
கோபத்தோடு குடித்தனம் நடத்த வேண்டுமா என்பதை நாம் தானே தீர்மானிக்கவியலும்.