ஆறாம் அறிவு
எழுதியது
ஈரோடு கதிர்
ஐந்து அறிவுகளை மட்டும்
வைத்துக்கொண்டு
மிஞ்சியிருக்கும்
வனமொன்றில்
தத்தித்தாவியோடி
பழங்கள் பூக்கள்
இலைகள் தானியங்களில்
பசியாறியவனுக்கு
ஆறாம் அறிவின்
துணைகொண்டு
மிஞ்சிப்போனதை
பெருங்கருணையோடு
பிச்சையிட்டு
பசியாறப் பழக்கிவிட்டீர்கள்
அவ்வப்போது
அரிசி மூட்டைச் சந்தில்
சுருட்டி வைக்கும்
நெகிழிப் பைகளை
என்ன செய்வதெனத்
தெரியாத நீங்களா
அவன் சுமந்தலையும்
அந்த நெகிழிச் சாபத்தை
என்ன செய்து தீர்ப்பதெனச்
சொல்லியிருக்கப் போகிறீர்கள்!
-
உடைந்தொழுகும் வானம்
எழுதியது
ஈரோடு கதிர்
முடிவற்றதாய்க் கருதும்
அந்தச் சாலையோரத்தில்
பாதைகள் தீர்ந்தவன்
நிலவற்ற வானத்தின் கீழிருக்கும்
விளக்கினடியில் அமர்ந்திருக்கிறான்
நட்சத்திரங்களும்
வெண்மேகங்களுமற்ற
கருத்த வானம்
எப்போது வேண்டுமானாலும்
உடைந்துவந்து மூழ்கடிக்கலாம்
விழித்திரைகளில்
குவியும் இருளை
அழித்தழித்து விரட்டப்பார்க்கிறது
பலவீனமான அந்த விளக்கு
விளக்கிற்கும் அவனுக்குமிடைய
விட்டிலொன்று கோடுகளால்
அவளின் நினைவுகளை
விடாமல் வரைந்து கொண்டிருக்கிறது
இமை மூடும் கணப்பொழுதில்
தளும்பிய கருவானம்
உடைந்தோடி வந்து
அவனை நிரப்பிக்கொள்ள
உள்ளே தத்தளிக்கிறாள் அவள்!
முன்னறியிப்பு - Munnariyippu
எழுதியது
ஈரோடு கதிர்
இருபது ஆண்டுகாலம் சிறைக்குள் இருந்து, உறவு நட்பென எவரையும்
சந்திக்காத, எல்லாவற்றையும் தத்துவமாய், எளிதானதாய் அணுகுபவனும், அவனை ஒரு பண்டமாக,
கருவியாக அணுகுபவளும் ஒரு புள்ளியில் தொடங்கி, ஒரு கால் புள்ளியில் முடிக்கிறார்கள்.
ஃப்ரீலான்ஸர் எழுத்தாளர் அஞ்சலிக்கு (அபர்னா கோபினாத்), சிறைக்
கண்காணிப்பாளர் ஒருவரின் சுயசரிதை எழுதும் வாய்ப்பு கிட்டுகிறது. சிறையில் இரண்டு கொலைகள்
செய்த ஆயுள் தண்டனை கைதி ராகவனை (மம்முட்டி) சந்திக்கிறாள். தண்டனைக்காலம் முடிந்தும்
வெளியேறாமல், இருபது ஆண்டுகளாய் சிறையில் இருக்கும் ராகவனை, அத்தனை நாட்களும் ஒருவரும்
வந்து சந்திக்கவில்லை என்பதும், அவர் பரோலில் வெளியே போகவில்லை என்பதும் ஆச்சரியம்
தருகிறது.
தான் கொலைகளைச் செய்யவில்லை எனச்சொல்பவனிடம் ஏன் தண்டனைக்காலம்
முடிந்தும் வெளியில் செல்லவில்லையெனும்போது ”தனக்கென வெளியில் என்ன இருக்கிறது” எனக்கேட்கிறான்.
வெளியே காத்திருக்கும் புதுவாழ்க்கை குறித்துக் கேட்கும்போது, ”வாழ்க்கையில் புதியது,
பழையதென்றில்லை, வாழ்க்கை என்பது ஒன்றுதான்” எனத் தத்துவம் பேசுகிறான். ”இல்லை வெளியில்
சந்தோசமான வாழ்க்கை” எனச் சொல்ல வரும்போது, ”இங்கே சங்கடமொன்றுமில்லை” என்கிறான். கொலைகள்
செய்யவில்லை என்றவனிடம் என்ன உண்மை எனக் கேட்கும்போது, ”இருள் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச்
போட்டால் ஒளி கிடைப்பது போலே, வெளிச்சம் இருக்கும் இடத்தில் ஸ்விட்ச் போட்டால் இருள்
கிடைக்கும் வகையிலான சாதனம் உண்டா!?” என்றும் கேட்கிறான்.
தன்னை ஒரு எழுத்தாளராய் நிரூபிக்க, புகழின் படிகளில் ஏற தனக்கான
வாய்ப்பாக ராகவன் தென்படுகிறான். ராகவன் குறித்து கட்டுரை எழுதுகிறாள். அஞ்சலிக்கும்
ராகவனுக்கும் கிடைக்கும் புகழ், தன்போக்கில் சொடுக்கி வேறு பாதையில் அஞ்சலியை இழுத்துச்செல்கிறது.
”கண்ணாடி பார்க்கும்போது கண்ணாடிக்குள்ளே இருக்கும் தனது
பிம்பம் தன்னைப் பார்க்கும். கண்ணாடியை விட்டு விலகும்போது உள்ளிருக்குமா, விலகிப்போகுமா?
ஆனாலும் திரும்பவும் கண்ணாடி பார்க்கும்போது அது அங்கிருந்தே பார்க்கும்” என்பது உள்ளிட்ட
ராகவனின் எழுத்துக்களைக் காணும் அஞ்சலிக்கு, ராகவன் ஒரு புத்தகத்திற்கான பொக்கிஷமாய்த்
தென்படுகிறான்.
வேகமாய் காலம் கரைந்தோடும் காலகட்டத்தில் இருபது ஆண்டுகளை
சிறை வளாகத்திற்குள்ளும், அறைக்குள்ளும் கழித்து, உலகத்தின் நெடி உணராமல் இருந்தவனிடம்
கட்டாயங்களும், நிர்பந்தங்களும் திணிக்கப்படுகின்றன. ஃப்ரீலான்ஸர் எழுத்தாளராய் ஏற்றுக்கொண்டிருந்த
பணியை ஆரம்பிக்க இயலாமலும், கார்ப்ரேட் பதிப்பக நிறுவனத்திடம் ராகவனின் ஒப்புதலோடு
ஒப்பந்தம் போட்ட பணியை காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற முடியாமலும் தவிக்க ஆரம்பிக்கிறாள்.
இருவரின் போராட்டங்களுக்கும் மிகச் சரியான காரணங்களுண்டு.
அவரவருக்கான நியாயங்களும் உண்டு. ராகவனாய் உள்ளுக்குள் முடங்கித் தடுமாறவும், அஞ்சலியாய்
உள்ளுக்குள் கொதித்துக் குமையவும் நம்மை ஆட்படுத்தி, என்னதான் நடக்கப்போகுமென அலுப்பூட்டி,
அந்த திருப்பத்தின் சிலநொடிகளில் பொதுவான நியாயம் வேறு ஒன்றாகவும் இருக்கத்தானே செய்யுமென
ஒப்புக்கொள்ளச்செய்கிறது.
*
சீனிவாசன் நேரமின்மையால் நடிக்காமல் விட்ட பாத்திரத்தில்
மம்முட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார். துடிப்பும் தவிப்பும் ஆசையும் நிராசையுமாய்
எல்லா உணர்வுகளையும் காட்டும் அபர்னா கோபிநாத்தும், மம்முட்டியும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.
*
*
தற்காலிக வலி நீக்கி
எழுதியது
ஈரோடு கதிர்
இந்த வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்களில் ஒன்று மரணம். ஒவ்வொருவருக்கும்
தம்முடைய மரணம் மிகுந்த மிரட்சியூட்டுவதாய்த் தோற்றமளிக்கிறது. அதேசமயம் தம் உற்றாரின்
மரணம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது மிகப்பெரிய அவநம்பிக்கையூட்டுவதாய்
அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் அத்தனை வெற்றிகளையும், கெக்கலிப்புகளையும் சிதறடித்து,
நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கிட உடனிருப்பவரைக் கொய்துபோகும் ஒற்றை மரணத்தால் முடிகின்றது.
எவருக்குத் தெரியாது, இந்த வாழ்வின் நிறைவுப் புள்ளி சாவு என்பது? ஆனால் எவருக்குத்தான்
அது பிடித்ததாய், விரும்புவதாய் அமைந்துவிடுகிறது.
மரம்போல் இருக்கும் குடும்பத்தின் வேர்களாய் இருப்பவை உறவுகள்.
ஆணிவேரைத் தொலைத்து சல்லிவேர்களில் ஊசலாடும் மரமாகவோ, சல்லிவேரினைத் தொலைத்து ஆணிவேரின்
பிடிப்பில் காலம் நகர்த்தும் மரமாகவோ நாமோ அல்லது நமக்கு நெருக்கமான யாரோ ஒருவர் காலத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்று ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஒரு விபத்து, ஒரு கவனக்குறைவு, ஒரு பேராசை, ஒரு துரோகம்,
ஒரு சதி, இரத்த நாளத்தில் உருவாகும் ஒரு சிறு அடைப்பு, ஒரு தவறு, ஒரு மெத்தனம், ஒரு
தோல்வி, ஒரு அவநம்பிக்கை, ஒரு அறியாமை, கூடுதலாய் அமையும் ஒரு மிடறு மது என இவற்றில்
ஏதாவது ஒரேயொரு ‘ஒரு’ போதுமானாதாய் இருக்கின்றது, ஆசையாய்க் கட்டிக்கொண்டிருக்கும்
கனவின் மேல் அமிலத்தை வார்த்துவிட்டுப் போக.
அமிலத்தின் காயங்களை காலம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆற்றிவிட முனைவதை
அதை அனுபவித்து வருபவர்களுக்கு காலம் புரியவைத்து விடுகிறது. ஆனால் அது ஏற்படுத்திவிட்டுப்
போயிருக்கும் தழும்புதான் எப்போதும் ஜீவிக்கும் பிரச்சனை. எதேச்சையாய் விரல்கள் ஊர்ந்துபோகும்
போதோ, தன் பார்வையே வருடிப்போகும்போதோ நிரடும் தழும்புகளுக்கு குறிப்பிடும் படியான
நிறமும், வடிவமும் உண்டு. அதனுள் நீங்காமல், நிறமற்று வடிவமற்று, மறைந்திருக்கும் சூன்யமான
வலிக்கு நிகராய் எதையும் உருவகப்படுத்திட முடியாது.
ஒரு குடும்பத்தின் கனவு ஊஞ்சல்களின் சங்கிலியாய் இருக்கும்
ஒருவனோ, ஒரு குடும்பத்தின் குலதெய்வமாய் பாவிக்கப்படும் ஒருத்தியோ, இந்த நொடி முதல்
இல்லாமல் போகின்றார்கள் என்பதை உணரும் தருணம் எத்தனை கொடியது என்பதை அனுபவித்துக் கடந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்.
இவ்வாறாக தங்கள்மேல் ஏவிவிடப்பட்ட ஒன்றை, அதே போன்று சுமக்கும்
எத்தனையோ பேருடன், விதவிதமாய் ஒப்பீடுகளுக்குள் உட்படுத்தி சமாதானப்படுத்திக்கொள்ள
முயன்றாலும், திமிறிக்கொண்டு வெளியே வந்து தனித்து நின்று, சீழ் வைத்த புண்ணில் துளிர்க்கும்
வலிபோல் மீண்டும் மீண்டும் வதைத்துக் கொண்டேயிருப்பது அதன் தனியியல்பு.
அம்மா, அப்பா, சகோதரி, சகோதரன், மனைவி, கணவன், மகள், மகன்,
, பேரன், பேத்தி, உற்ற தோழமை என எவர் ஒருவரை இழந்தாலும், இழப்பவர்களுக்குள் ”எங்களுக்கு
மட்டும் ஏன் இப்படி!”யெனும் கேள்விகள் தொடர்ந்து முளை விட்டுக்கொண்டேயிருக்கும். அவர்களுக்கும்
நிதர்சனம் புரியும். அவை பதிலில்லாக் கேள்விகள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும்
தங்களின் மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த, அவர்களிடமிருக்கும் ஒரு தற்காலிக வலி நீக்கியாய்
அந்தக் கேள்விகளைத் தவிர்த்து வேறு எதுவும் இருப்பதில்லை!
கீச்சுகள் தொகுப்பு - 52
எழுதியது
ஈரோடு கதிர்
சொற்கள் தேவைப்படாத சிநேகத் தருணங்கள் ஒருவித அழகு!
-
சடசடவெனப் பெய்யும் மழையில் நனைஞ்சிட்டே பைக்கில் போகும் கணவன் மனைவியை நிறுத்தி ’ரெய்ன் கோட்’டு விக்கிறதுதான் ’காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’
-
எத்தனைதான் பேண்ட் எடுத்தாலும் நோம்பியன்னிக்கு வேட்டி கட்டிக்கிறதுதான் சுகமே!
-
வாட்ஸப், வைபர்னு மக்கள் கரை ஒதுங்கியாச்சு. நெட்வொர்க்காரன் தீபாவளி SMSக்கு காசுனு ஜோக்கடிக்கிறான். #அடேய் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறவனே!
-
பிடிக்காததை ஒரு கணமேனும் ஒதுக்கியோ, விலக்கியோ இந்த வாழ்க்கை எத்தனை அதி அழகானது என்பதை ரசித்து வாழ்ந்துவிடவும் வேண்டும்!
-
மழையை நிறுத்த தமிழர்கள் 2 யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஒன்று ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள். மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள் .
-
பிடித்தலையும், பிடிக்காமையையும் ஏதோ ஒரு காரணத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டு முடிவெடுக்கும் மனம் மிக நுணுக்கமானது.
-
சில தருணங்களில் ’உண்மை’ மிகக் கொடூரமானது!
-
எதற்கோ செய்கிறோமென்பதைவிட, எதற்காகச் செய்கிறோமென கொஞ்சமே கொஞ்சம் புரிந்துகொண்டால் போதும்.
-
செல்போன் நனைஞ்சுபோய்டுதேனு மழையை சபிக்கிறவங்க இருக்கிற வரைக்கும்... அப்படித்தான்யா அடைமழை பெய்யும்!
-
வாழ்வோர் எழுநூறு கோடியெனில் வாழ்ந்து மடிந்தோர் எத்தனை நூறு கோடி!?
-
காற்றும், வெயிலும், குளிரும் தந்திடாத ரகசிய நினைவொன்றை நனைத்துப் போர்த்த மழைக்கு சாத்தியப்படுகிறது.
-
அன்பும் பிரியமும் தழுவும்போது, முன்பு போட்ட சண்டையின் உக்கிரத்தை நினைத்துப் பாருங்கள். உலகின் அதி அபத்தம் எதுவெனக் குழம்பித் தெளிவோம்!
-
என்னிடம் ஒரு பதில்தான் இருக்கிறது. உங்கள் கேள்விக்கான விடையல்ல என்கிறீர்கள். இருவரும் அலுத்துக்கொள்கிறோம். கேள்வியை மாற்றிக்கொள்ளுங்களேன்!
-
செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடுற பழக்கத்தை நாம கைவிடவேயில்ல....
-
படிக்கும் காலத்தில் தாத்தாவாக இருந்து, பெரியவர்களாகும்போது தந்தையாக மாற காந்தியால் மட்டுமே முடிகிறது! # காந்தி தாத்தா to தேசத் தந்தை
-
புரியவைத்து சரி செய்வதைவிட, பயமுறுத்தி சரி செய்வது எளிதெனப் பழகிவிட்டோம்!
-
கனவுகளைவிட அழகானது வாழ்க்கை #pranayam
-
குடும்ப சங்கதிகளில் ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலில் அம்மாவோ, மனைவியோ முன்கூட்டியே, “நீ என்ன முடிவெடுத்தாலும் சம்மதிக்கிறோம்” எனச் சொல்லிவிட்டால், அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள், அதை எப்படியாகினும் செயல்படுத்தி விடுவார்களெனவும் அறிக!
-
” ”எப்படியிருக்கீங்க!?” எனும் நலம் விசாரித்தல், நலம் அறியும் நேரடிக் கேள்வி மட்டுமேயல்ல. சில வேளைகளில் வெற்றுச் சம்பிரதாயமாகவோ, உரையாடலின் துவக்கமாகவோ இருந்தாலும்கூட, பெரும்பான்மையாக நேரங்களில் நாம் கேட்பவர் நலமாய் இருக்க வேண்டுமெனும் விருப்பத்தை உணர்த்துவதே!
-
இந்த இருள் வானத்தில் நிலவின் புன்னகையை ரசிக்க வெறும் கண்கள் மட்டுமே இருந்தென்ன பயன்!?
-
நெஞ்சு நிமிர்த்துவதற்கும், தொப்பைக்கும் இடையே உடலளவிலும் எதோ ஒரு நேரடித் தொடர்பு இருக்கின்றது!
-
அள்ளியள்ளி கசப்பைத் தந்துபோனவனிடம் இதுவரை இருந்ததும் இன்னும் கொஞ்சம் கைகளில் ஒட்டியிருப்பதும் வேறொன்றுமில்லை ....... அதே கசப்புதான்!
-
'லேஸ் கம்பெனி'க்காரன் காற்றை பாக்கெட் பண்ணி விக்கிகிறதுக்கு முன்பே... 'பூரி'யில் காற்றை நிரப்பி வித்தவங்க நாம!
-
எதிரியின் எதிரி நண்பனாக வேண்டுமென்பது நம்பிக்கைதான்... விதியோ சட்டமோ அல்ல!
-
வாழ்க்கையில் எல்லாக் கிறுக்குத்தனங்களுக்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி விலை கொடுக்கிறோம்!
-
கேமாரால டைம் செட் பண்ணி ஓடிப்போய் நின்னு எடுத்ததெல்லாம் செல்ஃபில வராதாம். கையை நீட்டி கோணித்துக்கொண்டு எடுப்பதுதான் செல்ஃபியாம்!
-
'நாக்குல மச்சம் இருக்கிறவங்க பொய் சொல்வாங்க' என்பது நாக்கில் மச்சம் இல்லாதோர் சொல்லும் பொய்.
-
சில வீடுகளில் நாய் தான் மனிதர்களை வாக்கிங் கூட்டிட்டு போகுது!
-
கொசுவலைக்கு முன் மாதிரி சிலந்தி வலையாகவும் இருக்கலாம். ங்கொய்யாலே... ஒட்டடைல எவ்ளோ கொசு சிக்கியிருக்கு!
-
உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடும் மனிதர்கள் சில அடி தொலைவிலிருந்தாலும், பிரித்துவைத்து கண்ணாம்மூச்சியாடுது வாழ்க்கை!
-
இந்த ’ஆண்கள் தினம்’ ’மகளிர் தினம்’ etc பெரும்பாலும் வீட்டிலிருப்போரை வாழ்த்துவதைவிட வெளியில் இருப்போரை வாழ்த்தும் ’டிசைன்’ கொண்டது!
-
சந்தனமிழைத்த கன்னமும் ஒளி சிதறும் விழிகளும் நறுமண மூச்சுக்காற்றும் தேன் வழியும் இதழ்களும் பிடித்தவர்களிடம் மட்டுமே எளிதில் காணக்கிடைக்கும்
-
விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்தை, கதாநாயகத்தனத்தை, மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
-
அன்பும் ஒரு வதைதான். யாரிடமாவது திணித்து, யாரிடமாவது கறந்துகொண்டே இருக்கின்றோம். ஒருபோதும் சும்மா இருக்கமுடிவதில்லை! #மீள்
-
புரிந்துகொள்ள மறுத்துவிட்டு, அன்பு செலுத்துகிறேன் என்பதுதான் ஆகச்சிறந்த பொய்!
-
சீலீங் ஃபேன்க்கு மேலே ட்யூப் லைட் மாட்டி வச்சிருக்காங்க. ஃபேன் ஓடும்போது அறை முழுக்க வெளிச்சம் பரவனும்னு எலட்ரீசியன் நினைச்சிருக்கலாம்.
-
ஒருசேர கடலையும் மேகத்தையும் தொட்டிட கனவில் அனுமதியுண்டு. உடல், மனசு, உயிரை உலுக்கிட, உறைய வைத்திட வாழ்வின் நிஜமான ஒரு பொழுதில்தான் இயலும்!
-
Subscribe to:
Posts (Atom)