கலெக்டர் ஆபிஸில் உதவியாளராய்ப் பணிபுரியும் மஞ்சுவாரியார்,
குடும்பம், மகள், அலுவலகம் என இருக்கும் சாதாரணப் பெண்மணி. பள்ளியில் தன் மகள் வழியே
அனுப்பிய ஒரு வித்தியாசமான கேள்விக்காக குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு பெறுகிறார்.
குடியரசுத் தலைவரைச் சந்திக்கப்போகிறோம் என்பதிலிருந்து சுற்றம் நட்பு அலுவலகம் என
அவர் குறும்பாய் செய்யும் அலம்பல் ரசிப்புக்குரியது. கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராய்ப்
பணிபுரியும் அவரை சப்-கலெக்டர் வந்து அழைத்துச் செல்லும்போது கேட்கவா வேண்டும்.
சந்திப்பின்போது அங்கிருக்கும் கெடுபிடிகளைக் கண்டு வியந்து,
மிரண்டு குடியரசுத் தலைவர் வந்து நமஸ்தே எனச் நொடியில் மயங்கி விழுகிறார். அவர் மயங்கி
விழுந்த செய்தி கேட்டு அதே சுற்றம் நட்பு அலுவலகம் ஓடஓட விரட்டி கிண்டல் செய்கிறது.
ஃபேஸ்புக் உலகம் அவரைக் கழுவிக்கழுவி ஊற்றுகிறது. பேருந்தில் உடன் வரும் ஒரு பாட்டி
கிண்டல் செய்து விரட்டுகிறார். கணவனும் மகளும் அவளை அங்கேயே விட்டுவிட்டு மேற்படிப்பு,
பணி என அயர்லாந்துக்கு போய்விடுகிறார்கள்.
அவளோடான வாழ்க்கை போரடிப்பதாக கணவன் சொல்வது, தன்னை மிக எளிதாகத்
துண்டித்துவிட்டு வெளிநாடு செல்லும் மகள், அலுவலகத்திலிருக்கும் சுழலும் வழக்கமான அரசியல்கள்,
திருமணத்திற்கு முன்-பின் என முற்றிலும் மாற்றம்பெற்ற வாழ்க்கை, நாற்பதை நெருங்கும்
நிலையில் ”இந்த வயசுக்குமேல என்ன செய்ய முடியும்” என சுற்றிலும் இருப்போர் சொல்வதையொட்டி
வரும் அயர்ச்சி என விரக்தியின் உச்சத்தில் அவர் நகர்த்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை
நிறையப் பேரை நமக்கு நினைவூட்டுகிறது.
ஃபேஸ்புக்கில் அவரோடு கல்லூரியில் பயின்ற கனிகா அவரை இனம்கண்டு
கொள்கிறார். அவமானங்களிலிருந்து மீள அதே ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கி, தான் விழுந்த
சூழலை தைரியமாக ஒளிபரப்புகிறார். துரத்திய அலுவலகம் ஆச்சரியத்தில் வியந்து நிற்கிறது.
கிண்டல் செய்த பாட்டியை அவர் வீட்டுக்கே சென்று தைரியமாக சந்திக்கிறார். தன் மொட்டிமாடித்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அந்தப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு வருகிறார்.
சரியான காரியத்தைச் செய்பவர்களுக்கு எந்தச் சூழலில், யார்
மூலம் மிகப்பெரிய வாய்ப்பு வரும் என்பதை யாரும் அறியமுடியாது என்பது போல், அந்த பாட்டி
மூலமாக மிகப்பெரிய வாய்ப்பொன்று வருகிறது. சவால்களும் வருகின்றன. மற்றபடி அனைவரும்
எதிர்பார்க்கும் சுபம் முடிவுதான்.
மூன்று விசயங்களுக்காக இந்த ”ஹவ் ஓல்டு ஆர் யூ” கொண்டாடலாம்
- திருமண வாழ்க்கைக்காக பதினைந்து ஆண்டுகள் திரையுலகத்தை தியாகம் செய்துவிட்டு திரும்பியிருக்கும் ஒரு முன்னாள் நாயகியை மிகச்சிறப்பாக மிகப்பொருத்தமாக பயன்படுத்திக் கொள்ளும் துணிவிற்காக
- ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, அந்த எளிமை சற்றும் சிதையாமல் பெரிய சமரசங்கள் இல்லாமல் அப்படியே தந்தற்கு…
- சமூகத்திற்கான கருத்தை பிரச்சார நெடியின்றி, திணிப்பின்றி, செயற்கைத்தனமான புரட்சிப் போராட்டம் ஏதுமின்றி, சாம்பாரில் நெய் ஊற்றிப் பிசைந்து தருவதுபோலே கதையோடு இயைந்து கொடுப்பதற்காக
தோழியின் வாயிலாக மாநில அமைச்சர் வருகை தந்திருக்கும் கூட்டத்தில்
உரையாற்ற மேடையேறுகிறார். மேடையில் தான் கொண்டுவந்த காய்கறி, பழங்கள் அடக்கிய பை தவறி
விழுகிறது. அருகிலிருப்போர் ஓடிவந்து அதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைக்க, அவர்களைப்
பார்த்து கைகளைக் கழுவுங்கள், உங்கள் கைகளில் ஒட்டியிருக்கும் பூச்சிக்கொல்லிகள் எனப்பட்டியலிட்டு
உரை துவங்கும் விதம்…. நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது.
பதினான்கு ஆண்டுகள் மணவாசத்திற்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும்
மஞ்சு வாரியாரின் நடிப்பில் லயித்துப் போகும் அதே நேரத்தில், மனசில் நிற்கும் எண்டோசல்பானுக்கு
எதிரான குரலும், வீட்டுத்தோட்டத்திற்கு ஆதரவான முன்னெடுப்புமே படத்தின் நிஜமான வெற்றியென
நான் நினைக்கிறேன்.
4 comments:
Now I have seen the movie, in your writing! :-)
இது எல்லா பெண்களும் ஒருக்கட்டத்தில் எதிர்க்கொள்ளும் கேள்வியில்லையா?
இப்போ எல்லாம் கல்யாணம் ஆனா உடனே கனவுக்களை தூக்கிப்போட்டுட்டு குடும்பத்தை பார் என பராக்டிகல்(!?!) அட்வைஸ் கொடுக்க நிறைய இருக்காங்க, அவர்களை தாண்டி, தயக்கம் தாண்டி இயங்க நினைக்கும் என் போன்றோர் இந்த படத்தை தவறவிடக்கூடாது என உணர்த்துகிறீர்கள்!நன்றி கதிர்அண்ணா!
Well Said Mythily.
எளிமையான திரைப்படங்கள் மிகச் சிறந்த கருத்துக்களை எளிமையாகவே கூறிவிட்டு நகர்ந்து போகின்றன..
Post a Comment