முண்டாசுப்பட்டிஏற்கனவே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாகப் பார்த்த படம்தான். திரைப்படமாக மாறுவதால் குறும்படம் Youtubeல் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஆனாலும் தேடியபோது வேறு எதோ ஒரு பெயரில் 8 நிமிடங்களுக்குக் காணக்கிடைக்கிறது. அப்படித்தேடி பார்த்தபோதும் குபுக்கென சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதை எப்படி இரண்டு மணி நேரத்திற்குமேல் இழுக்கமுடியும் என்ற யோசனையோடுதான் இன்று படம் பார்க்க ஆரம்பித்தேன். 

 

நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்கத்திற்குச் செல்கிறேன். இந்தப் படம் குறித்து எதுவுமே தெரியாத என் மகளை, மதியம் பள்ளியிலிருந்து வந்திருந்தவளை, திடீரென உடனே புறப்படு எனச்சொல்லி படத்திற்கு அழைத்துச் சென்றேன். சமீபத்தில் நான் கொடுத்த ஒரு மிக நல்ல, மிக மகிழ்வான பரிசாக அந்த இரண்டரை மணி நேரம் இருக்குமென்றே சொல்ல வேண்டும். இன்னும் சில வாரங்களுக்கு அவளின் நட்புகள், அவள் சிரித்து சிரித்து கதை சொல்வதை சகித்தேயாக வேண்டும் அல்லது அவர்களும் அப்பா அம்மாவோடு உடனே ஓடிப்போய் படம் பார்த்தேயாக வேண்டும்.

கதையென்று ஒன்றுமேயில்லை அல்லது நீங்கள் பல விமர்சனங்களில் அதை வரிக்குவரி திரைக்கதையாகவே வாசித்தும் இருக்கலாம். போட்டோ பிடித்தால் கெடுதல் வந்துவிடுமென நம்பும் ஒரு கிராமம், ’வானமுனி’யாக மாறிய ஒரு விண்கல், அந்த கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் இதுதான் கதை. ஆனால் இந்த விசயங்களை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரத்தில் இரண்டு மணி வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கும் இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே நேரத்தில் காதல் காட்சிகள் வரும்போதெல்லாம் எப்படா காமெடி சீன் வரும் என்றும் ஏங்க வைத்துவிடுகிறார்.

என்னைப் பொறுத்த வரையில் படத்தை முழுக்க முழுக்க தூக்கி நிறுத்துவது முனீஷ்காந்த் (ராம்தாஸ்) பாத்திரம்தான். எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனிமனிதனாக தொய்வாகும் இடங்களிலெல்லாம் சொடுக்கி படத்தை நகர்த்தும் பாத்திரம். வட்டார வழக்கிலும், குரலிலும், நடிப்பிலும், முக பாவனைகளிலும் கலக்கி எடுத்திருக்கிறார். சித்தப்பா(!) படத்தின் இருக்கும் ரத்தப் பொறியலை சாப்பிட்டுக்கட்டுமா எனக் கேட்கும் காட்சியிலும், சிலையைத் தேடி வடக்கே செல்லவேண்டிய நிர்பந்தம் உருவாகும் காட்சியிலும் அவரின் நடிப்பைக் கண்டு சிரித்து சிரித்து வெடித்துவிடுவமோ என பயம் வருகிறது. சின்ன சின்ன நறுக் வசனங்களின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அழகுமணி (காளி) பாத்திரம் படத்தின் மிகப்பெரிய பலம்.

காதல் காட்சிகள் சற்றே இழுத்தாலும், நெருடலின்றி படம் முழுக்க சிரித்து மகிழ உத்திரவாதமுண்டு.

இயக்குனர் திருப்பூர்காரர், களம் சத்தியமங்களம் என்பதால், இந்த மண்ணின் வாசனை அழுந்தப் பதித்திருப்பார் எனும் விருப்பத்தில் படத்தைக் கூர்ந்து கவனிக்க விரும்பியதால் சில இடங்களில் படத்தை ரசிக்கச் சிரமப்பட்டேன். நாயகியின் அம்மா பாத்திரம் அப்பா கூப்டறது காதுல ’விழுகலையா’ எனக்கேட்பதில் தொடங்கி, 80களில் இந்தப் பகுதியின் ஒரு கிராமத்து அம்மா மகளை ’டி’ போட்டு அழைப்பது. நாயகியின் அப்பாவின் அப்பாவான தாத்தா/பாட்டன்/அப்பாருக்கு, அம்மா ’அப்புச்சிக்கு பால் ஊத்து’ எனச் சொல்லும் உறவுக் குழப்பம் என சில நெருடல்களுண்டு.

குறும்படமாக எடுத்தபோது 1980ல் கதை நடப்பதால் கிராமத்து பாத்திரங்களுக்கு சிகை அலங்காரம் செய்வது சிரமமென தலைப்பாகை கட்டிவிட்டதால் அது முண்டாசுப்பட்டியானது என இயக்குனர் ஏற்கனவே சொல்லியிருக்க, முண்டாசுப்பட்டி எனப் பெயர் வைத்துவிட்டதற்காகவே திரைப்படம் முழுமைக்கும் ஊர்மக்கள் எப்போதும் முண்டாசு கட்டியபடியே இருப்பதும் என்னவோ போல் இருக்கிறது.

நாயகியின் தாத்தாவான ஊர்த்தலைவர் செத்துப்போகும் காட்சியில், இந்த மண்ணில் 80ல் நிகழும் சாவை அச்சு அசலாகக் காட்டும் வகையில் (குறைந்த பட்சம் மதயானைக் கூட்டத்தில் அந்த சாவுப்பாடல் மூலம் ஆவணப்படுத்தியது போல்) இந்தப் பகுதி ஒப்பாரி மூலம் அதனை கொண்டாட்டமாக ஆவணப்படுத்தியிருக்கலாம்.

இப்படியான சின்னச்சின்ன குறைகள் தவிர்த்து, கொடுத்த காசிற்கு 101% திருப்தியே.

தவறவிடாமல் பார்த்து சிரிக்க வேண்டிய தகுதியான படமே!

-2 comments:

'பரிவை' சே.குமார் said...

முண்டாசுப்பட்டி சிரிக்க வைக்கும் ஒரு படம்...

Unknown said...

நகைசுவை என்ற பெயரில் அடுத்தவர்களை காயப்படுத்தி பார்க்காமல்,வசனத்தில் இயல்பாய் காட்சிப்படுத்தியதற்கு இயக்குனர்க்கு சபாஷ் போடலாம்....