4000 வடைகள்

எங்கள் டீ கடைக்காரர் ஒரு கட்சியின் தீவிரத் தொண்டர். தேர்தலுக்கு முன்பிருந்தே தம் கட்சி குறித்து தீவிரமாக கருத்துச் சொல்வார். தேர்தல் முடிந்ததிலிருந்து வாக்கு எண்ணிக்கை வரைக்கும் தினமும் தம் கட்சி கூட்டணி இருபது இடங்கள் பிடிக்கும் என்பார். வழக்கமாக டீ கடைக்கு வந்து போகும் மக்கள் பேசும் அரசியலே சூடாய் சுவாரசியமாய் இருக்கும். இந்த லட்சணத்தில் டீ கடை முதலாளி பேசும் அரசியல் கூடுதல் சுவாரசியம் தரத்தானே செய்யும்.

காலையும் மாலையும் நாங்கள் அந்த இருபது என்பதை சீண்டிக் கொண்டேயிருப்போம். ஒரு கட்டத்தில்இருபது சட்டமன்றத்திலாச்சும் அதிக ஓட்டு வாங்குவாங்களா!?” எனச் சீண்டியதில், தம் கட்சிக் கூட்டணிஇருபது இடங்கள் வந்தால் பத்தாயிரம் தர்றீங்ளா!? எனப் பந்தயம் கட்டினார்.  எப்படியும் இருபது வராது என்று தெரிந்தாலும் பந்தயம் என்பது பேச்சிற்கும், பொழுது போக்கிற்கும் மட்டுமே இருக்கட்டுமென பேச்சளவில் மட்டுமே வைத்துக் கொண்டோம்.

வாக்கு எண்ணிக்கையன்று காலை 9.30க்கு அவரைப் பார்த்து சிரித்தேன். மத்யானம் பாருங்க தெரியும் என்றார். 12 மணிக்கு டீ குடிக்கப் போன போது மனம் சுருங்கி உணர்வுகளற்று நின்றிருந்தார். பத்தாயிரம் லாபம்னு சந்தோசப்படுங்க என்றோம். மதியம் லீவு விட்டவர் அதை அடுத்த இரண்டு நாட்களுக்கும் நீட்டித்துவிட்டார்.

இன்று நான்கு நண்பர்களாக கடைக்குச் சென்றிருந்தோம். அதில் இந்த அரசியல் பஞ்சாயத்து, பந்தயம் என்பதெல்லாம் தெரியாத நண்பரும் வந்திருந்தார். பாதி டீ  குடித்துக் கொண்டிருக்கும்போது சுடச்சுட வந்த மசால் வடையை நாங்கள் வேணாம் என மறுத்தாலும் பிடிங்க... பிடிங்க” எனக் கட்டாயப்படுத்தியதில் மூன்று பேரிடம் திணித்து விட்டார்



புதிதாய் வந்த நண்பர் ஆச்சரியப்பட்டார் அடேங்கப்பா.... கடக்காரண்ணன்  யேவாரம் பண்றதுல தீயா வேலை செய்றாரே!, வேணாங்க வேணாங்க வடையைத் துணிக்கிறாரே... பொழைக்கத் தெரிஞ்ச மனுசரப்பா!” என்றார்.

ஆமாமாம்… பயங்கரமாப் பொழைக்கத் தெரிஞ்சவர்ங்க….. ஏற்கனவே அவரு ஒரு பத்தாயிரம் லாபத்தில்தான் இருக்கார்” என்றேன்

கடைக்காரர் அடிக்கண்ணில் எங்களைப் பார்த்து புன்னகைத்தார். மனதிற்குள் அந்தப் பத்தாயிரம்அப்படிப்போடு…. போடு… போடு!” என ஒரு குத்தாட்டம் போட்டிருக்க வேண்டும். பத்தாயிரம் லாபம் சம்பாதிக்க சுமார் 4000 வடைகளாவது விற்றிருக்க வேண்டுமில்லையா!?

அவர் மனதிற்குள் குத்தாட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது எங்கள் மனதிற்குள் ஒலித்த வடிவேலுவின் ”வட போச்சே!” குரல் டீ கடைக்காரருக்கு கேட்டிருக்க நியாயமில்லை!

-

3 comments:

வால்பையன் said...

சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு பொழுது போயிறும் :)

வால்பையன் said...

அப்ப 200 தொகுதி வரும்னு சொல்வார் பாருங்க :)

Pandiaraj Jebarathinam said...

டீக்கட அண்ணன், ரொம்ப சந்தோசம் போல...