Showing posts with label நேர்மை. Show all posts
Showing posts with label நேர்மை. Show all posts

Apr 5, 2011

எனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே!


சகாயம் குறித்த எழுத்தாளர் பெருமாள்முருகனின் இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர்” என்ற வரிகளோடு தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறப்பானதொரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த போதுதான் ஊடகங்களின் பார்வை சகாயம் அவர்கள் மேல் விழத்தொடங்கியது. அதன்பின்னரே அதுவரை அவர்கடந்து வந்த பாதையில் அவருடைய நேர்மையும், அதற்காக அவர் தாண்டி வந்த இடர்களும் தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் அவர் ஆட்சித்தலைவராக இருந்த காலத்தில் அரசு பள்ளிகள் மேல் செலுத்திய கவனம், சுற்றுச்சூழல் காக்க நட்ட பல லட்சம் மரக்கன்றுகள், விவசாயிகளை நோக்கி கிராமம் கிராமமாக ஒவ்வொரு இரவுகளில் தன் பரிவாரங்களோடு புயலாய் புறப்பட்டு நல்ல ஆட்சியை வழங்கிய விதம், நள்ளிரவுகளில் நெடுஞ்சாலைகள் மேற்கொண்ட சோதனைகள், கிராமங்களில் கணினி நிறுவி இணையத்தில் புகார்களைப் பெற்று உடனே தீர்வுகண்ட வேகம் என, இப்படித்தான் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார்.

கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் கிராம எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் இட்ட கட்டளைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டுமொத்த கிராம நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ய, அதுகண்டு மக்கள் வெகுண்டெழுந்து கிராம நிர்வாக அதிகாரிகளை விரட்டியடித்த வரலாறும் உண்டு.

நேர்மை எப்போதும் ஆள்வோருக்கு பிடிப்பதில்லை என்பதற்கிணங்க ஆட்சித்தலைவர் பதவியிலிருந்து சகாயம் விலக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக பணிக்கு அனுப்பப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அதுவரை காணாத ஒரு கொந்தளிப்பை மக்கள் மூலம் கண்டது, ஆனாலும் எல்லாக்கொந்தளிப்பு போல அதுவும் கரைந்து போனது கூடவே சகாயம் ஆற்றிவந்த மக்கள் சார் நற்பணிகளும் கரையத் தொடங்கியது.

காலங்கள் கரைந்ததில், இதுவரை இந்தியா காணாத புரட்சியாக தமிழகத் தேர்தல் ஆணையம் தேர்தலைச் செம்மையாக நடத்த புதிய புதிய யுக்திகளை வகுத்து வந்தநிலையில், தேர்தலை நேர்மையாக நடத்த சரிவராது என நினைத்த அதிகாரிகளை (மாநில காவல்துறைத் தலைவர் உட்பட) ஒரே இரவில் மாற்றியமைத்ததில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தூக்கப்பட்டார், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் நியமிக்கப்பட்டார்.

திருமங்கலம் சூத்திரத்தை பயன்படுத்த நினைத்த மதுரையை மையம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு சகாயத்தின் நேர்மை சிம்ம சொப்பனமாக அமைந்தது. அதிர்ந்த ஆளும்கட்சி தேர்தல் ஆணையத்தை எதிரியாக பாவிக்கத் துவங்கியது, மக்கள் நேசிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை  ”நெருக்கடி நிலை” என பிரகடனப்படுத்தச் செய்தது. ”சகாயம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று” பேசுகிறார் என பொய்யாக அலறியது. ”சகாயம் மிரட்டுகிறார்” என கீழே பணிபுரியும் அதிகாரியைவிட்டு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கச் சொன்னது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பாரபட்சமின்றி தனக்கு கிடைத்த வாய்ப்பை நேர்மையாக செயல்படுத்த நினைக்கும் ஒரு மிகச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவரை நாளொரு புகார் பொழுதொரு புலம்பல் என தங்கள் சொந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை தோற்கடிக்க முயற்சி செய்கிறது ஆளும்கட்சி!

இதுவரை சகாயம் குறித்த புகார்களை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அவர்கள் தள்ளுபடி செய்திருக்கிறார். கூடுதலாக சகாயம் மீது பொய்ப் புகார் கூறிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டிருக்கிறது.

இதோ இப்போது மதுரையில் இருக்கும் பல பொதுநல அமைப்புகள் ஒட்டுமொத்தமாக சகாயத்தின் நேர்மையான செயல்பாடுகளை ஆதரித்து குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன.

எந்தக்கட்சியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், நல்ல வேட்பாளர் என மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கட்டும், தகுதியான நபர் வெற்றியடையட்டும். 



ஆனால்
எதிர்க்கட்சிகளைவிட தங்களுக்கு இடையூறாக இருக்கும் நேர்மையான ஆட்சியர் சகாயம் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்தத் தேர்தலில்…….. தேர்தல் என்பதை விட இந்தப் போரில் சகாயம் வெல்ல வேண்டும்.

நேர்மைக்கு மரியாதை செலுத்த, நேர்மையின் கரங்களை வலுப்படுத்த நான் சகாயம் அவர்களை ஆதரிக்கிறேன்

-0-
-0-


Aug 9, 2010

புத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை


               கொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

அகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன்

முதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே). 

புத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். 

எல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.
 
உரை நிகழ்த்தும் திரு. சகாயம்



நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை

நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.

அரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.

பெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.

தேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.

குவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.





Jun 10, 2010

மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்

மக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.

”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா?

மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்

பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.

அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.

வெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.

கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.

எல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகளவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.

கிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.

தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்

வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.

_______________________________________

இந்தத் தளத்தையும் வாசித்துப் பாருங்கள். நன்றி  ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ

_______________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...