ஒரு பயணமும், பெரிய பாடமும்

இரவுப் பயணங்கள் ஒரு போதும் எனக்கு சலிப்புத் தட்டாதவை. ஆனாலும் சில வருடங்களாக காரில் நீண்ட தூரம் பயணிப்பதை முழுக்கவே தவிர்த்து வந்தேன், அதுவும் இரவுகளில்...

ஆனால் இந்த முறை மனைவி, குழந்தை, தோழி மற்றும் குழந்தை என குடும்பத்தோடு சென்னை சென்று விட்டு, கிளம்பும் போதே மாலையாகி விட்டது.... சரி எப்படியாவது இரவு 11 மணிக்குள் ஈரோடு போய் சேர்ந்துவிடலாம் என்று கொஞ்சம் வேகமாகவே விரட்டினேன்...

உளுந்தூர் பேட்டையில் ஆரம்பித்தது சனி.... சாலை தாறுமாறாக கிழிந்து கிடந்தது... கள்ளக்குறிச்சி தாண்டிய போது பசிக்கிறது என குரல்கள் வர, ஆத்தூரில் இருக்கும் குடும்ப நண்பர் கனகராஜன் ஞாபகம் வந்தது. அவரிடம் பேசி பல மாதங்கள் இருக்கும், நல்ல வேளை பலமுறை போனை மாற்றிய பொழுதும் அவர் எண்ணை எப்படியோ பத்திரமாக வைத்திருந்திருக்கிறேன். அவரை அழைத்து எங்கு சாப்பிட வசதியாக இருக்கும் என கேட்க, தான் இராசிபுரத்தில் இருப்பதாகவும், சாப்பிடுவதற்கு ஆத்தூர்தான் நல்லது எனவும் சொன்னார். சாப்பிட்டுவிட்டு ஒரு வழியாக ஆத்தூரை கடக்கும் போது இரவு 10.30 மணி....

ஆத்தூரிலிருந்து இராசிபுரம், திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லலாம் என நினைத்தேன், காரணம் இரவில் வாகனமே இருக்காது. அதேபோல் வாகனம் எதுவும் எதிரில் வரவில்லை.... சரி என்று வேகத்தைக் கூட்ட, சில கிலோமீட்டர் கடந்திருப்போம், திடீரென கார் தானாக வேகம் குறைந்தது... அடுத்த கனம் நடு சாலையில் அப்படியே உயிர் விட்டது... மனதிற்குள் ‘திக்’கென்றது. ஏழெட்டு முறை திரும்ப திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தும்... ம்ஹூம் ஒன்றும் பலனில்லை... சுற்றிலும் மிகக் கடுமையான இருள். கண்ணிற்கெட்டிய தூரம் வரையில் வெளிச்சம் இல்லை.
காரில் இருந்த அனைவர் முகத்திலும் மிகப்பெரிய அதிர்ச்சி... கலக்கத்தோடு கதவை திறக்கும் போது, மனதில் இருக்கும் நம்பிக்கை முழுதும் இருள் அப்பிக்கிடந்தது. இரண்டு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.... ஒரு லாரி கடந்து போனது... உடனே நண்பர் கனகராஜனுக்கு அழைத்தேன்... நல்ல தூக்கத்தில் இருந்தார். ”கார் நின்னுடுச்சுங்க... ஆத்தூர்ல இருந்து ஐந்தாறு கிலோமீட்டர்ல இருக்கேன்... ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணி அனுப்புங்க, ஆத்தூர்ல தங்கிட்டு காலையில கிளம்பிக்கிறோம்” என்றேன். ”மாப்ள பத்தே நிமிசத்துல யாரையாவது அங்க வரச்சொல்றேன்.... ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் இருந்தா என்ன செய்வேனோ அதைவிட அதிகமா அக்கறை எடுத்துக்குற ஆள அனுப்பறேன்” தூக்கத்திலும் மிகத் தெளிவாகச் சொன்னார்...

சுற்றிலும் கடும் இருட்டு.. இடது பக்கம் நெல் வயல், வலது பக்கம் குச்சிக் கிழங்கு காடு அடர்த்தியாகத் தெரிந்தது. எல்லோரையும் காருக்குள்ளேயே ஒடுங்கி கிடந்தார்கள். மீளாத அதிர்ச்சியோடு நின்றுகொண்டிருக்கும் போது எதிரில் லாரி ஒன்று வரவும், அதற்கு இடம் விட்டு எங்களுக்கு பின்பக்கமாக வந்தகார் சற்று ஒதுங்கி நின்று மெதுவாக எங்களைக் கடக்கும் போது, எங்கள் கார் பானெட் திறந்திருப்பதைப் பார்த்து ”என்னாச்சு” என ஒருவர் கேட்க, பிரேக்டவுன் என்று சொல்ல.... அந்த கார் சுமார் இருபதடி தூரம் தள்ளிநின்றது....

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த காரில் யாராவது பெண்கள் இருந்தால் பரவாயில்லையே என மனம் நினைக்க, அந்த காரிலிருந்து நான்கு ஆண்கள் இறங்கினர். இருவர் அங்கேயே நிற்க, இருவர் மட்டும் காரை நோக்கி வருவது அந்தக் காரின் பின்பக்க விளக்கொளியில் தெரிந்தது...

பக்கத்தில் நெருங்கி என்ன பிரச்சனை என்று கேட்க... வந்து கொண்டிருக்கும் போது கார் நின்று விட்டதாகச் சொன்னேன், அதில் ஒருவர் காரின் சாவியைக் கொடுங்கள் நான் முயற்சிக்கிறேன் எனக் கேட்ட போது அடர்த்தியான மது வாசனை அவரிடமிருந்து அடித்தது.

குழப்பம், பயம், அவநம்பிக்கை, கையறு நிலை என எல்லாவற்றையும் அந்த இரவும், இருட்டும் என்மேல் சுமத்தியது...

”இல்லீங்க பராவாயில்லை... ஆத்தூர்ல சொல்லியிருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்கனு சொல்ல”

சாவியக் கொடுங்க நான் முயற்சிக்கிறேன் என வற்புறுத்தி கேட்க, ஒரு கட்டத்தில் வழியில்லாமல் கொடுத்தேன்...சட்டென ஓட்டுனர் இருக்கையில் அமர, இடது பக்கம் அமர்ந்திருந்த என் மனைவி பயத்தில் சட்டென இடது பக்க கதவை திறந்து இறங்க முயற்சிக்க... ”மேடம்... ஸாரி மேடம்... பயப்படாதீங்க, ஜஸ்ட் டிரை பண்ணிப் பார்க்கிறேன்” என்று கூறி நான்கைந்து முறை முயற்சித்து வண்டி இயங்கவில்லை...

எங்கே போறிங்கனு கேட்க, ஈரோடு என்று சொல்ல, அட நாங்களும் ஈரோடுதானு சொன்னார்.... என்ன சொல்லியும் அந்த பாழாய்ப்போன இருட்டு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை...

அதற்குள் ஒரு அழைப்பு என் போனுக்கு வர.... ”நான் ராஜன் பாபுங்க, கனகராஜ் பிரண்ட், அங்கேதான் வந்துக்கிட்டிருக்கேன், 10 நிமிசத்துல வந்துடுவேன்” என்று சொல்ல அடி மனதில் லேசான நிம்மதி படர்ந்தது.

அடுத்து ஈரோடில் தன் நண்பர் பெயர் சொல்லித் தெரியுமா எனக் கேட்க, அவர் எனக்கும் நண்பர் என்றேன். உடனே இருங்க போன் பண்ணி பேசலாம் என்று தன் போனில் இருந்து அழைத்து, அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பி என்னிடம் போனைக் கொடுக்க, நம்பிக்கை சுகமாய் பிறக்க கொஞ்சம் வெட்கத்தில் நெளிந்தேன்...

அடுத்த சில நிமிடங்களில் திரு.ராஜன் பாபு அவர்கள் வந்து சேர, முழுத் தெம்பும் வந்தது... குடும்பத்தினரை அவருடைய காருக்கு மாற்றி விட்டு, மீண்டும் சில முயற்சிகள் செய்து, பல மீட்டர் தூரம் தள்ளிவிட்டுப்பார்த்தும் கூட ஒன்றும் நடக்கவில்லை....

இதுவரை சுகமாக பயணத்திற்கு உதவியாக இருந்த கார் இப்போது சுமையாகத் தெரிந்தது. காரை எங்காவது பத்திரப்படுத்த வேண்டும் என்பது அடுத்த வேலையானது, ஒருவழியாக... கொஞ்சம் தள்ளியிருந்த வீடு வரை காரை தள்ளிவந்து நிறுத்தி, அந்த வீட்டுக்காரரை எழுப்பி விபரம் சொல்லிவிட்டு...

அதன் பின்னரே அந்த ஈரோடு நண்பர்கள்(!!!) கிளம்ப, திரு. ராஜன் பாபு எங்களை அழைத்துக்கொண்டு ஒரு நல்ல விடுதிக்கு சென்று அறை எடுக்கும் வரை உடன் இருந்து, பணம் தேவைப்படாதுங்க, கையில் இருக்கிறது என்று சொல்லியும் கூடுதல் பாதுகாப்புக்காக இருக்கட்டும் என என் கையில் இரண்டாயிரம் ரூபாயைத் திணித்து விட்டு, அப்புறமாக கொடுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

காலை 7 மணிக்கு அனுபவம் வாய்ந்த ஒரு மெக்கானிக்கொடு வந்து என்னை அழைத்துச்சென்று வெறும் 10 நிமிடங்களில் காரை சரி செய்துகொடுக்க மனசு முழுதும் நன்றிகளோடு விடைபெற்றேன்..

மனதில் அறைந்த சில உண்மைகள்...
* இரவில் தனி ஒரு காரில் குடும்பத்தோடு செல்வது மிக மிக மோசமான முட்டாள்தனம்.

* பயணிக்கும் வழியில் நண்பர்கள் இருந்தால் அவர்களின் தொடர்பு எண்களை கட்டாயம் வைத்திருப்பது நலம்....

* இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது, ஏனெனில் நண்பர் கனகராஜ் மாம்ஸ் அப்படி செய்திருந்தால் எங்கள் நிலைமை மிக மோசமனாதாக இருந்திருக்கும். (வேறு யாரையாவது முயற்சி செய்திருக்கலாம், ஆனால் இவ்வளவு விரைவாக உதவி கிடைக்க வாய்ப்பு குறைவு)

* மனிதர்களில் இன்னும் உதவும் குணம் நிறையப் பேருக்கு இருக்கிறது என்பதை, நாங்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்லும் வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உடனிருந்த போது நிரூபித்தார்கள். உதவிசெய்ய வந்தவர்கள் மேல் கொண்ட அபரிதமான பயம் மற்றும் அவநம்பிக்கைக்கு மானசீகமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.

* உதவி வேண்டும் என உறக்கத்தில் இருந்தவரை அழைத்த போது, சட்டென தன் நண்பரை உரிமையோடு அனுப்பிய பாசமிகு கனகராஜ், தன் நண்பர் சொன்னார் என்பதற்காக 11 மணிக்கு மேல், உடனே கிளம்பி வந்து, (பேசியதிலிருந்து அடுத்த 10வது நிமிடத்தில்) பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தயங்காமல் பணம் கொடுத்து, காலையில் காரை சரிசெய்ய உதவி செய்த திரு. ராஜன் பாபு அவர்களுக்கு எந்த வார்த்தைகளில் நன்றி சொல்வது... இதுபோல் சிக்கலில் யாராவது உதவிக்கு அழைத்தால், இனி எக்காரணத்தைக் கொண்டும் முகம் சுழிக்கக்கூடாது என்பதை பாடமாக ஏற்றுக்கொள்கிறேன்.

மிக இக்கட்டான சூழலில் இருக்கும் போது எதிர்பாராத திசைகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க கைகள் நீளும் போது, அந்த கைகளை பிடிக்க படபடப்பதும், மீண்டு வந்ததும் நிம்மதியில், மகிழ்ச்சியில் உணர்வுகளோடு போராடுவதையும் வடிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.

சூழ்நிலைகளின் பொருட்டு, சமூகம் திணித்ததின் பொருட்டு, எத்தனையோ அவ நம்பிக்கைகள் சூழ்ந்து கிடந்த மனதில், இந்த சம்பவம் மிகப் பெரிய நம்பிக்கையை முன்பின் அறிந்திடதா, முகம் கூட பார்த்திடாத நண்பர்கள் மூலம் அளித்திருக்கிறது... மிகப் பெரிய நம்பிக்கை விதை ஆழ மனதில் வேரூன்றுகிறது.
_____________________________________________

51 comments:

பழமைபேசி said...

மாப்புகள் இருக்கும் வரையிலும், ஒரு பிரச்சினையும் இல்லைங்க்றது தெளிவாகுது...இல்லீங்க மாப்பு? இஃகி!

பிரபாகர் said...

நம்ம ஏரியாவுல மாட்டிட்டு தூரமா இருக்கிறேன் என்று அழைக்காம விட்டுட்டீங்க... இருக்கட்டும் இருக்கட்டும்...

எல்லாம் நல்லபடியா நடந்ததால ரொம்ப சந்தோஷம், அனுபவப் பாடம்.

பி.கு.

எனக்கு ஈரோடு பார்டர்ல பிரச்சினைன்னாலும் உங்களத்தான் கூப்பிடுவேன்.

பின்னோக்கி said...

திகிலான பயணம் உங்கள் எழுத்துக்களில் மேலும் திகிலானது. உங்கள் அனுபவம் எங்களுக்கு நல்ல பாடம். பகிர்ந்தமைக்கு நன்றி.

vasu balaji said...

/இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது,/

இனிமே அடிக்கடி செக் பண்ணுவோம்ல. தூங்கினா மாதரத்தான்:))

Jokes apart முக்கியமான பாடம்.

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

/////சுற்றிலும் கடும் இருட்டு.. இடது பக்கம் நெல் வயல், வலது பக்கம் குச்சிக் கிழங்கு காடு அடர்த்தியாகத் தெரிந்தது. எல்லோரையும் காருக்குள்ளேயே ஒடுங்கி கிடந்தார்கள். மீளாத அதிர்ச்சியோடு //////

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!

கவுசல்யா said...

கதிர்....
எத்தனையோ பிரச்சனைகள் இதுவரைக்கும் வாழ்க்கையில நடந்திருக்குப்பா... ஆனால் இதுபோல ஒரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை. உலகில் எத்தனை கடவுள்கள் எங்களுக்குத் தெரியும் என்பதே அப்போது தான் தெரிந்தது. ஈரோடு வந்த பின்னும் கூட, அந்த சூழ்நிலையை இப்பொழுது நினைத்தாலும் உடல் தானாக நடுங்குகிறது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உங்கள் அனுபவம் எல்லோருக்கும் பாடம்.

Anonymous said...

கதிர்,

இரவில் 11 மணிக்கு மேல் குடும்பத்தினருடன் காரில் வெளியூர் செல்வதைத் தவிர்ப்பது, கூடியவரை, நல்லது.

உங்கள் பதிவில்

//மிக இக்கட்டான சூழலில் இருக்கும் போது எதிர்பாராத திசைகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க கைகள் நீளும் போது, அந்த கைகளை பிடிக்க படபடப்பதும், மீண்டு வந்ததும் நிம்மதியில், மகிழ்ச்சியில் உணர்வுகளோடு போராடுவதையும் வடிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.//

மிகச் சிறப்பான வரிகள்

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல வாழ்க்கைப்பாடம் ஒன்றை நீங்களும் கற்று பகிர்ந்ததன் வாயிலாக எங்களுக்கும் கற்றுத்தந்திருக்கிறீர்கள்..

அகல்விளக்கு said...

அனுபவம் உணர்த்திய பாடம் நன்று.

பகிர்வுக்கு நன்றி அண்ணா !!

செ.சரவணக்குமார் said...

நல்ல அனுபவப் பகிர்வு. நல்ல கருத்துக்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், நன்றி.

Romeoboy said...

எங்களுக்கு எச்சரிக்கை குடுக்கும் பதிவு தலைவரே .

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல நண்பர்கள், உதவியுடன் நலமாய் வந்து சேர்ந்தீர்களே.....

இனி நானும் கவனமாய் இருப்பேன்

Anonymous said...

மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை நினைவு கூர்கிறது பதிவு...

மனதில் அறைந்த சில உண்மைகள்
அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றே.....

Kodees said...

ரொம்ப தூரம் போனா டிரெயின்ல போங்க கதிர். ஸேஃப். ரொம்ப தூரம் - கார் - ஸெல்ப் டிரைவிங் - என்ன நினைச்சிருக்கீங்க? பார்த்து!!

அன்புடன்

butterfly Surya said...

பாடம் - நன்றி..

நடையும் உங்கள் எழுத்தும் அருமை.

S.A. நவாஸுதீன் said...

இந்த மாதிரி அனுபவங்கள் தான் வாழ்க்கையில் நிறைய கற்றுத் தருகின்றன. அருமையான நடையில் அவசியமான பகிர்வு கதிர்.

க.பாலாசி said...

படிக்கும்போது.... இவருக்கு ஏன் இந்த வேண்டாதவேலையென்று தோன்றியது. குடும்பத்துடன் செல்லும்போது முடிந்தளவு இரவுப்பயணத்தினை தவிர்க்கவேண்டும். அந்த நால்வரும் நல்லவர்களாக அமைந்தார்கள் என்பதுதான் மகிழ்ச்சியே தவிர... வேறோன்றுமில்லை.

உதவிய நண்பர்களை இரண்டாவதாகத்தான் பார்க்கிறேன். அவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்தான்.

☼ வெயிலான் said...

உங்கள் அனுபவம் எங்களுக்குமோர் பாடம் கதிர்!

Balakumar Vijayaraman said...

விழிப்புணர்வூட்டியது.
பகிர்வுக்கு நன்றி.

கலகலப்ரியா said...

வழக்கம் போல... தேவையான பதிவு..! அனுபவப் பாடம் அருமை..!

Vasanth said...

நல்ல பதிவு.. படிக்கும் போது நம்மளே சிக்கல்ல மாட்டிகிட்ட மாதிரி ஒரு படபடப்பு!!

Sanjai Gandhi said...

அடடே.. இனி பயணம் இனிதே அமையட்டும்..

//உளுந்தூர் பேட்டையில் ஆரம்பித்தது சனி..//

உங்கள யார் வெள்ளி நடு இரவில் கிளம்ப சொன்னது?

Kumky said...

குறைந்த பட்ச மெக்கானிக் திறமையும் கூடவே வளர்த்துக்கொள்ள வேண்டும் தோழரே...

நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி திடீரென நிற்குமானால் சின்ன குறையாகத்தானிருக்கும்...

ஒர்க்‌ஷாப்பில் வண்டியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வதைக்காட்டிலும் அருகிருந்து பார்த்தால் மிக உபயோகமாக இருக்கும்.சின்ன சின்ன குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து சந்தேகங்களை கேட்டு அதாவது தொல்லை செய்தாகிலும் தெரிந்து கொள்வது உசிதம்


மேலும் பயணங்களின் போது மது அருந்துவது எழுதப்படாத விதிபோலாகிவிட்டது...

அதிலும் மது அருந்திய பின்பு வரும் உதவி செய்யும் மனப்பாங்கானது உங்கள் வீடு வரை கூட காரை தள்ளிக்கொண்டு போக வைத்துவிடும்.

பெண்களை உடன் அழைத்து செல்கையில் பயண நேரங்களை முன் கூட்டியே கணித்து பாதுகாப்பாக தங்க திட்டமிடுவதும் முக்கியம்..

நானெல்லாம் அமெரிக்கா போனால் கூட செல்ப் ட்ரைவிங்தான்...என்ன காக்பிட்டுக்குள் விடமாட்டோம் என ஒருதடவை தகறாறு ஆகிவிட்டது போங்கள்..

வால்பையன் said...

//மனதில் அறைந்த சில உண்மைகள்...//

நீங்க அடிக்கடி நிறைய உண்மைகளை கண்டுபிடிக்கிறிங்க, பகிர்ந்தமைக்கு நன்றி!

இராகவன் நைஜிரியா said...

அனுபவம் என்பது மிகச் சிறந்த ஆசான். இப்படிக் கற்றுக் கொள்ளும் போது, அது என்றென்றும் மனதில் நிற்கின்றது.

நிகழ்காலத்தில்... said...

\\குழப்பம், பயம், அவநம்பிக்கை, கையறு நிலை என எல்லாவற்றையும் அந்த இரவும், இருட்டும் என்மேல் சுமத்தியது.\\

குடும்பத்தோடு செல்லும்போது அந்த சூழ்நிலையில் இந்த மனநிலைதான் யாருக்கும் வரும்

\\உதவிசெய்ய வந்தவர்கள் மேல் கொண்ட அபரிதமான பயம் மற்றும் அவநம்பிக்கைக்கு மானசீகமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.\\

அவசியமில்லை கதிர், அவர்கள் மீதான புரிதலே போதுமானது..

வருவது எங்கிருந்தாலும் வரும், நம் வழியில் நாம் உற்சாகமாய் பயணிப்போம்

இன்னொரு லாஜிக்..

நாம நல்ல எண்ணத்தோட இருக்கும்போது நமக்கு நல்லதுதான் நடக்கும்.

செயல் விளைவு த்தத்துவம் கதிர்.

உங்களின் முயற்சியால் எத்தனை பேர் கண்ணொளி பெற்றிருப்பர், அவர்கள் வாழ்த்தெல்லாம் வீணாகி விடுமா என்ன

முன்னைவிட தீவிரமாய் இயங்குங்கள்

Paleo God said...

கும்க்கி December 29, 2009 6:57 PM
குறைந்த பட்ச மெக்கானிக் திறமையும் கூடவே வளர்த்துக்கொள்ள வேண்டும் தோழரே...

நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி திடீரென நிற்குமானால் சின்ன குறையாகத்தானிருக்கும்...

ஒர்க்‌ஷாப்பில் வண்டியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வதைக்காட்டிலும் அருகிருந்து பார்த்தால் மிக உபயோகமாக இருக்கும்.சின்ன சின்ன குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து சந்தேகங்களை கேட்டு அதாவது தொல்லை செய்தாகிலும் தெரிந்து கொள்வது உசிதம்//

நான் கூறவந்ததும் இதேதான்... மேலும் நல்ல மெக்கானிக் ஒருவரை நண்பராக ஆக்கிக்கொள்வதன் மூலமும் இந்த மாதிரி இக்கட்டான நேரங்களில் அவருடன் செல்பேசி சிறிய குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். ஆனாலும் இது ஒரு திக் அனுபவம்தான்.

*இயற்கை ராஜி* said...

உங்களை........ம்ம்ம்...


எப்டியோ பத்திரமாய் வந்து சேர்ந்த்தே போதும்.. மிகத்தேவையான பாடம் பலருக்கும்

நிலாமதி said...

அனுபவ பாடம் சிறந்த ஆசான்.....அழகான பகிர்வு.

ப்ரியமுடன் வசந்த் said...

கதிர் சார் மிக அருமையாக ஒரு இக்கட்டான நிகழ்வில் ஏற்பட்ட அனுபவத்தையும் அதிலிருந்து கிடைத்த பாடங்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள்...!

hariharan said...

Thanks for sharing..

Your lessons we too learnt...

Unknown said...

அமெரிக்காவில் இருக்கும் AAA போல தமிழ்நாட்டில் யாராவது ஏன் முயற்சிக்கக் கூடாது? இம்மாதிரி சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்குமே? தொழிலதிபர் ஆக ஆசைப்படும் நண்பர்களே பிடியுங்க ஐடியாவ.

Anonymous said...

வேலூர் , க்ருஷ்ணகிரி வழி அருமையல்லவா ?

சீமான்கனி said...

திகிலான அனுபவமும், பகிர்ந்த விதமும் அருமை அண்ணே...நிறைய பாடம் நானும் கற்று கொண்டேன்...நன்றி
புத்தாண்டு வாழ்த்துகள்....

V.N.Thangamani said...

///மிக இக்கட்டான சூழலில் இருக்கும் போது எதிர்பாராத திசைகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க கைகள் நீளும் போது, அந்த கைகளை பிடிக்க படபடப்பதும், மீண்டு வந்ததும் நிம்மதியில், மகிழ்ச்சியில் உணர்வுகளோடு போராடுவதையும் வடிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.////

இப்படித்தான் வாழ்க்கையில் எப்போதாவது
மிகவும் இக்கட்டில் இயற்க்கை என்ற
இறையாற்றல் தன் கைகளை
சில நண்பர்கள் மூலம் நீட்டுவதுண்டு
அதை அனுபவித்து பார்த்தவர்களுக்குத்தான்
தெரியும் இறைவனின் உதவி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் அதிர்ச்சியானது. நானும் பல முறை இதைப்போல யோசித்துள்ளேன். இரவில் பயணம் செய்யவேண்டுமென்றால் வாகன நெருக்கமுள்ள சாலைகளில் செல்வது நல்லது.

நல்ல இடுகை.

மகா said...

உங்கள் அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஒரு பாடம் ........

ரோஸ்விக் said...

//இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது, //

இந்த மாதிரி சமயங்களுக்காகத் தான் அண்ணே, என் தொலைபேசியின் ஒளியை நிறுத்தாமல் வைத்திருப்பேன். ஆனா, பக்கிக நம்ம ஊர்ல இருந்து, மாப்புள தூங்கிட்டியான்னு 12 AM-க்கு கேட்டு டரியல் ஆக்குராய்ங்க.... இப்ப கடுப்புல தான்.


//இதுபோல் சிக்கலில் யாராவது உதவிக்கு அழைத்தால், இனி எக்காரணத்தைக் கொண்டும் முகம் சுழிக்கக்கூடாது //

எனக்கு இது போன்ற உதவி யாராவது கோரினால், எந்நேரத்திலும் நான் முகம் சுழிப்பதில்லை. என்னவகையான நம்பிக்கை நம் மீது வைத்திருந்தால்... நம்மிடம் அந்த உதவி கோருவர். எனவே உதவுவதில் நான் எப்போதும் மகிழ்வேன். :-)

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

படிக்கும் போது திக் திக்கென்றது. இருப்பினும் அந்த நால்வரும் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஐயமும் வந்தது.

கடைசியில் எல்லாம் நல்ல படியாக முடிந்த வுடன் அப்பாடா என்ற நிம்மடிப் பெருமூச்சு

நல்ல அனுபவம் -நல்ல படிப்பினை

நல்வாழ்த்துகள் கதிர்

Jerry Eshananda said...

படிக்க படிக்க,திகிலாய் மனசு,எல்லோருக்கும் பாடம் தான்.குல சாமிக்கு கடா வெட்டுனா,சொல்லிவிடுங்க,கறிக்கஞ்சி அடிக்க வந்துர்றோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

அனுபவம் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.. பத்திரம் கதிர்..

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

குறும்பன் said...

இது போன்ற அனுபவம் ஆத்தூர்-பேளுக்குறிச்சி சாலையில் இரவில் நடந்தது (எனக்கில்லை, நான் நன்கு அறிந்தவர்களுக்கு). அது பற்றி தனி இடுகை போடனும்.

இது பெரிய பாடம் தான்.

Venkat said...

Yesterday I received a mail about our great man Mr Sagayam IAS… Was eager to know more about him… hence I copied the tamil content and searched in google…. How lucky am I… I got your blog and the mail text was picked from your blog… So.. Curious to read your other posts… so peeped into 2009 posts and I read the last one about new year and "ஒரு பயணமும், பெரிய பாடமும்"

Hats off to Mr Kanagaraj & Mr Rajan Babu… & our great man Sagayam.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\* இனி இரவில் செல்போனை அணைத்து விட்டு, ஒலியை நிறுத்திவிட்டு நான் தூங்கக்கூடாது, //
அந்த பயணத்துக்கு பிறகு நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவனும்ன்னு நினைக்கிறீங்களே..இது தான் அந்த உதவியின் சரியான அடுத்த நிலை.. பே இட் பார்வேர்ட் போல.. க்ரேட்..

DHANS said...

very good post... my suggestions

you can have 24 hour service numbers from various service providers.

based on my experiance mytvs 24 hour service is best.


try to know the basics of the car. in your case may be some sensor or fuse might have gone. its easily recoverable or repairable.


all other suggestion you have given is very good. i will follow.

DHANS said...

ini entha areala prachananaalum ennaiyum koopidungal ennalaana uthaviyai seigiren.

niraya thadavai car adiyil sendru velai paartha anupavam thaan :)

anaal en car naduvaliyil ennai nirutthiyathu illai...

dhans

goma said...

தான் பள்ளத்தில் விழுந்து எழுந்து போகும் பொழுது ,ஜாக்கிரதை பள்ளம் இருக்கிறது “என்று அறிவிப்புப் பலகை மாட்டிச் செல்லும் உங்களுக்கு ஒரு சபாஷ்!ஒரு ஓ .

தாராபுரத்தான் said...

ஓ..........

Unknown said...

உண்மையில் பெரிய பாடம்தான்....சரியான நேரத்தில் கிடைத்த உதவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்...நல்ல நண்பர்கள் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியவாங்கள்